நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 30 April 2016

மனமே நீ யார்?



மனமே நீ யார்?

Image result for மனம் 

நாம் நினைத்தால் நம் எண்ணம் மூலம் எந்த ஒரு
செயலையும் நம் பக்கம் ஈர்க்க முடியும்.  நாம் விரும்பும் வண்ணம் வாழமுடியும். இது உண்மையா? இப்படி நம் மனமே நம்மிடம் கேள்விகள் கேட்கும்.


நாம் நல்லதை நினைக்கிறோமோ அல்லது கெட்டதை நினைக்கிறோமோ என்பது நமது மனதுக்கு தெரியாது. ஆனால் எதை நினைத்தாலும் அந்த நினைப்பையே நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் மனதுக்கு உண்டு.
 நாம் உடலால் வளர்ந்து விட்டாலும் நம் மனம் என்றுமே ஓர் குழந்தைதான். எப்படி ஒரு குழந்தை சாக்லெட் தந்தால் சிரிக்கின்றது….ஊசி போட்டால் அழுகின்றதோ….அதுபோலவே நம் மனமும், அது மகிழும்படியான இனிய தகவல்களையும், நிகழ்வுகளையும் அதனிடம் பதிவுசெய்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றது. வருத்தம் தரத்தக்கத் துயர நிகழ்வுகளையும், நேர்ந்த அவமானங்களையும் பதிவு செய்யும்போது, ஒன்று கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றது; அதனால் பழிவாங்கும் உணர்ச்சி மேலிடுகின்றது….அல்லது தன் இயலாமையை நினைந்து வருந்தி அழுகின்றது. ஆகவே, நல்லவற்றையே நம் மனத்திற்குத் தீனியாகக் கொடுத்து அதனை எப்போதும் உற்சாகமாகவும், இன்பமாகவும் வைத்திருப்போம்.
விருப்பு-வெறுப்புக்குக் கூடவா, மனம் காரணமாக அமைகிறது? ஆமாம்! ஓர் உதாரணம் - பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறோம். கூட்டம் அதிகமில்லையே தவிர, பலர் நின்று கொண்டிருக்கிறோம். யாரோ ஒருவர் நம்மீது சாய்ந்து கொண்டே இருக்கிறார். பொறுக்க முடியாமல் அந்த மனிதரை ஒரு காய்ச்சு காய்ச்சலாம் என்று கோபத்தோடு திரும்பிப் பார்த்தால், அவர் நமக்கு மிகவும் வேண்டியவர்! அதன் பிறகு கோபம் இருக்குமா என்ன? கோபம் போய், பாசம் வந்து விடாதா?

கோபம் கொள்ளத் தூண்டியதும் மனம்தான்; பிறகு பாசம் காட்டச் செய்ததும் அதே மனம்தான். ஆகையால் மனம்தான் அனைத்திற்கும் மூல காரணம். அந்த மனம் நம்மைப் பலவாறாகப் பேசச் சொல்லித் தூண்டுகிறது. மனம் என்பது என்ன? இந்த மனம் எங்கிருக்கிறது? இது ஏன் இவ்வாறெல்லாம் ஆளுக்குத் தக்கபடி சிந்திக்கிறது? எதனால் ஆனது இம்மனம்? இந்த கேள்விக்கு மெய்ஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும் விடை தேடி ஆராய்ந்திருக்கிறார்கள்.
மெய்ஞ்ஞானிகள் பதில் இவ்வாறிருக்கிறது. மனித மனத்தால், இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப் பெற்று கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனம். உடலில் உயிர் இல்லாத போது, உணர்ச்சிகளும் இல்லை. உயிரே உணர்வாக மாற்றம் பெறுகிறது. உயிர் உணர்ச்சியாக மலரும் கட்டத்தில்தான் மனம் பிறக்கிறது. எனவே உயிர்தான் மனம்.

விஞ்ஞானிகள் மனம் என்பது சுய உணர்வு அல்லது விழிப்புணர்வு என்கிறார்கள்.

Image result for மனம் 

புத்த மதம், 'மனம்' என்பது தனிப்பட்ட பொருள் அல்ல. ஆனால் எண்ணங்கள், புலனறிவு, பொதுக் கருத்துக்கள் மற்றும் நொடிக்கு நொடி மாறும் உணர்வுகள் இவைகளின் கூட்டமைப்பே   மனமாக மாறுகிறது என்கிறது.

இந்த மனதைத் தேடியலைந்த ஒரு கவிஞரின் கவிதை இதோ.

நான்யார் என்பது தெரியவில்லை-நிற்கும்
  நீயார் என்பதும் புரியவில்லை
நான்யார்? நீயார்? நடப்பவர்யார்?-இங்கே
  நெருக்கிடும் உறவினர் யார்யார்யார்?

நான்நா னென்பதென் உடல்தானா?-அதை
  நடத்திடும் இயக்க உயிர்தானா?
நானெனச் சொல்வ தென்னவென-நான்
  நாளெலாம் நினைக்கிறேன் தெரியவில்லை

நாள்தொறும் உடற்சுவை தேடுகின்றேன்-என்றன்
  நாக்கிற் கோர்சுவை தேடுகின்றேன்
வாளெனத் துயரெனை அறுக்குங்கால்-அந்த
  வாலறி வன்தாள் நாடுகின்றேன்

தேடித் துய்ப்பவன் தான்நானா?-இல்லை
  துன்பில் நைந்தே இறைவன்தாள்
தேடி எய்ப்பவன் தான்நானா?-அந்தத்
  தேட லென்பதே நான்தானா?
இந்தக் கவிஞர் மனம் என்பதை ‘நான்‘ என்ற ஒன்று தோன்றுமிடமாகக் கற்பனை செய்திருக்கிறார்.

 ரமண மகரிஷியும் ‘நான் என்ற எண்ணம்‘ தோன்றுமிடமாகவே மனதைக் காண்கின்றார்.'நான் யார்?' என்னும் விசாரணையின் பொருள் 'அகந்தையாகிற நான் எனும் எண்ணத்தின் தோற்றுவாய் எது?' என்பதை அறிவதற்கான முயற்சியே ஆகும். நான் இருக்கிறேன் (I am) என்கிற இருப்புணர்வாக (I know) ஆனந்தமாக இருப்பது எதுவோ அதுவே மனம் என்பது உறுதிப்படும்என்பது ரமணரின் வாக்கு. '

நான் என்பது என் உடலா ? என் உள்ளமா ? என் நினைவுகளா ? என் அறிவா ? என் மனமா ? இவை அன்றி கண்ணுக்கு காணாத உயிரா ? ஆத்மாவா ? எது நான் ? இதே கேள்வியை மாணிக்கவாசகரும் கேட்டு தனக்குள்ளாகவே விடையைத் தேடியலைந்திருக்கிறார்.
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
Image result for தும்பி
இறைவா நீ என்னை ஆட்கொள்ளாவிட்டால்,  நானும்,என் அறிவும், என்ன ஆகியிருப்போம் ? என்னை இந்த உலகில் யார் அறிந்து இருப்பார்கள்?. உன் கருணையினால் என்னை ஆண்டு கொண்டதால் நான் பிழைத்தேன். அப்படிப் பட்ட சிவனின் தாமரை போன்ற பாதங்களில் சென்று நீ வணங்குவாய் என்று தேனியிடம் (தும்பி)  கூறுகிறார் அடிகள். காலம் காலமாக இந்த கேள்வி பெரிய பெரிய ஞானிகளை வாட்டி வதைத்து இருக்கிறது. அவருக்கு குரு வடிவில் வந்து இறைவன் அருள் உபதேசம் செய்து ஆட் கொண்டார் என்றாலும், தொடர் தியானத்தினாலேதான் அவர் தன் மனதைக் கண்டறிந்திருக்கிறார்.
ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள்
ஆர்வத்தோடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

"
பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக்கேட்டார்.

அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று
இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.
அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.
பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.
ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான்.

இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

மனம் பழகிய தடத்திலேயே செல்லும் அதனை உயர்வான வழியில் செலுத்த முயற்சி வேண்டும். எண்ணங்களின்படியே மனம் செயல்படுகிது. மனம் நமது எண்ணங்களைப் பரப்பும் கருவி. ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை  ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம்.

1 comment:

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?