நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 26 March 2022

திருவிழா

 திருவிழா 

 கண்மணி ஊரில் திருவிழா களை கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஊர்க்கட்டுப்பாடு, கோவில் கட்டுப்பாடுகள் பற்றி தண்டோகாரன் தண்டோரா போட்ட படி சொல்லிக் கொண்டு போய்க் கொண்டே இருந்தான். திருவிழா ஆரம்பமாகு முன்பே வெளியூருக்குப் பிழைக்கச் சென்ற அத்தனை பேரும் ஊருக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது கண்மணியின் கணவனுக்குப் பொருந்தாது. அவன் இந்திய இராணுவத்தில் சென்று சேர்ந்திருக்கிறான். உள்ளூர் கட்டுப்பாடும், கோவில் கட்டுப்பாடும் இராணுவக் கட்டுப்பாட்டை என்ன செய்ய முடியும்? ஆறுமாதமாகி விட்டது. எல்லையில் கார்கில் தொடர்பான போர்ச்சூழல் முகாந்திரமிடத் தொடங்கி விட்டது .
உள்ளூரில் காப்பு கட்டியது முதல் திருவிழா முடிந்து கொடியிறங்கும் வரை யாரும் ஊரை விட்டு வெளியே செல்லக் கூடாது.

 ஒரு வேளை கண்மணியின் கணவன் முத்து கருப்பன் வந்தால் கூட திரும்பி அவன் விருப்பத்திற்கோ, இராணுவ அழைப்பிற்கு செவி சாய்த்தோ உடனடியாகப் போக முடியாது. அப்புறம் ஊரில் ஏதாவது நடந்து விட்டால், இதனால் தான் வந்தது. அதனால் தான் வந்தது என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கி விடுவார்கள். பத்து வருடத்திற்கு முன் நடந்த இராமாயி கதையைத் தான் சொல்லிச் சொல்லி மாய்வார்கள். 

அந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்த இராமாயி கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு, எதையும் மதிக்காமல், யாரையும் கேட்காமல் வெங்கனூருக்குப் போய் விட்டாள். பாவம் அவளுக்கு ஊர்க்கட்டுப்பாடு தெரியாது. அவள் குடும்பம் ஊர் தள்ளி சாளையில் வசித்தது. இனுக்கு புனுக்குனு யாருகிட்டயும் பேசமாட்டாள். சந்தைக்குக் கூட வரமாட்டாள். வீட்டைச் சுத்தி காய்கறியும், கீரையும் போட்டுக் கொண்டு இரண்டு காவல் நாயை வைத்துக் கொண்டு தோட்டமே கதியென்று கிடப்பாள். எப்போதும் மண்ணைக் கிளறிய படியே இருப்பாள். அவளுடைய கணவன் குப்பன் சிறு வயதிலேயே தாயை இழந்தவன். அவளுடைய அப்பா பக்கவாதம் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்து பல வருடங்கள் ஆயிற்று. அவனுக்கு அப்பாவைக் கவனிக்கவும், அடுப்படி பார்க்கவும், தோட்டத்தைச் சுற்றி வரவுமே சரியாக இருந்தது. இராமாயி தாய் தந்தை இருவரையும் காலராவில் பறி கொடுத்து, தாய் மாமன் வீட்டில் எடுபிடியாக வாழ்ந்து வந்தாள். ஊர் பேச்சுக்குப் பயந்து போனால் போடுதென்று ஏப்பையோ, சாப்பையோ என குப்பனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். 

இராமாயா கணவனோடு இந்த ஊருக்கு வந்த போது, தாய் மாமன் மட்டும் தான் கூட வந்தார். அதற்குப் பிறகு யாரும் வரவில்லை. வா என்றும் கூப்பிடவில்லை. இராமாயிக்கு வேலை ஒன்றும் பெரிதில்லை. ஆனால், குப்பன் தான் எப்போதாவது அவன் தந்தையைக் கவனிக்கத் தாமதமாகி விட்டால் சிடுக் புடுக் கென பேசுவான். சுள்ளென எரிந்து விழுவான். இராமாயிக்கு வசவு ஒன்று புதிதில்லை. அவளும் சோர்ந்திருப்பவளில்லை. ஆனால், குப்பனின் தந்தைக்கு மரண பயம் வந்து விட்டது. யாராவது பக்கத்தில் இருக்க வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டே இருப்பார். போனா வந்தான் கதையெல்லாம் பேசுவார். கேள்வி மேல் கேள்வி கேட்பார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார். 

 இராமாயிக்கு பெரியவரின் இந்த நச்சரிப்புக்கு ஈடு கொடுக்கத் தெரியவில்லை. பாவம் அவள் மட்டும் என்ன செய்வாள். அவளும் மனுசி தானே. ஒரு ஒதுக்குப் புறமாக ஒதுங்குவதற்குக் கூட அவரிடம் சொல்லிக் கொண்டு தான் போக வேண்டும் என்றாள் அவள் தான் என்ன செய்வாள்?

 அடுப்பு வேலை செய்யும் போது கூட பலமுறை இராமாயி இராமாயி எனக் கத்திக் கொண்டே இருப்பார். அப்போது தான் உலை கொதித்து மேலே வரும் நிலையில் இருக்கும். பக்கத்தில் இல்லை என்றால். அடுப்பு விறகில் நனைந்து விடும். மாடு இன்னொரு பக்கம் ‘அம்மா’ என்று எதற்கோ கத்தும். நாயும் சேர்ந்து குலைக்கும். இராமாயி பாவம் ஒண்டிக் கட்டையாக, அடுப்புக்கும், மாட்டுக்கும், மாமானாருக்குமாக அல்லாடுவாள். 

குப்பனோ தொலை தூர மரத்தில் எங்காவது ஏறிக் கொண்டு எதையாவது பறித்துக் கொண்டு இருப்பான். இல்லையென்றால் தூரமாக தோட்டத்து மண்ணைக் கிளறிக் கொண்டிருப்பான். காது கேட்கும் தூரத்தில் இருந்தால் ஓடி வந்து விடுவான். ஆயி இல்லாத அவனை வளர்த்த அப்பன்தான் அவனுக்கான ஒரே உறவு. இராமாயி கூட அப்புறம் தான். அன்று பார்த்து இராமாயி தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காயைப் பறித்து புளி சேர்த்து நாக்குக்கு ருசியாக ஒரு குழம்பு வைக்கலாம் என நினைத்தபடி தோட்டத்துப் பக்கம் போயிருந்தாள். அங்கு கத்திரிக்காய் செடியோடு சில களைக் செடிகளும் கலந்திருந்ததைப் பார்த்து அதை களைந்து தூய்மைப் படுத்துவதில் வீட்டை மறந்து விட்டாள். கத்திரிக்காய் பக்கத்தில் மிளகாய் செடி இருந்தது. அதையும் பறித்து மடியில் போட்டுக் கொண்டாள்.

 ஒரு சில வாரங்களாகவே மாமனார் நடத்திய தர்பாரில் தோட்டத்திற்கு வராததால், புதிதாக வேறு ஏதாவது முளைத்திருக்கிறதா என போட்ட விதைகளையெல்லாம் நினைத்து தேடத் தொடங்கி விதைகளையெல்லாம் நினைத்து தேடத் தொடங்கி விட்டாள். ‘இராமாயி....’ குப்பன் போட்ட கூச்சலில் திடுக்கிட்ட, இராமாயியின் மடியில் இருந்த காய்களெல்லாம் சிதறி கீழே விழுந்தன என்னமோ ஏதோவென ஓடினாள். அங்கு குப்பன் கண்கள் சிவக்க முனியப்பன் போல ஆவேசமாக நின்றிருந்தான். பதறிப் போய், ‘என்னங்க’ என்றாள். நாலு எட்டு வைத்து வேகமாக வந்தவன், இராமாயியின் கன்னத்தில் பளீரென்று ஒன்று விட்டான். அவளுக்குப் பொறி பறந்தது. ஒன்றுமே புரியவில்லை. விசயம் ஒன்றுமில்லை. தூக்கம் கலைந்து குப்பனின் தந்தை பலமுறை இராமாயியைக் கூப்பிட்டிருக்கிறார். இராமாயி தோட்டத்தில் இருந்ததால் காதில் அவர் கூப்பிட்டது விழவில்லை. அவர் கூப்பிட்டு கூப்பிட்டுப் பார்த்து, யாரும் வராததால், படுக்கையிலே மலம் கழித்துவிட்டார். கை காலெல்லாம் உழப்பிக் கொண்டு, கடவுளே என்னைய சீக்கிரம் கொண்டு போயிடேன்’ என்று புலம்பிக் கொண்டு இருந்திக்கிறார். அவ்வளவு தான். இராமாயி திரும்பிப் பார்க்காமல் தன் மாமன் வீட்டை நோக்கி விட்டாள். 

ஊர் கட்டுப்பாடாவது ஒண்ணாவது? ஏத்தன செஞ்சும் ஒரு புண்ணியமில்லையே. ஒரு அஞ்சு நிமிசம் கூட விலகாமல் பார்த்துக் கொண்டதன் பலன் இது தானா? குப்பனின் தந்தை பாசம் அறிந்து எத்தனை பொறுமை காத்திருக்கிறாள். கொஞ்சம் கூட அவள் மீது நம்பிக்கையில்லையே. இதற்கு முன்பு கூட திருமணத்திற்கு முன்பு இப்படி அசிங்கப் படுத்திக் கொண்டு அவன் தந்தை படுக்கையில் கிடந்ததை அவன் சொல்லி இருக்கிறான். அது போல நடக்கக் கூடாது என எச்சரித்து இருக்கிறான். கூடவே இருக்கணும்னு சொல்லிக் இருக்கிறான். எல்லாம் சரி தான். ஆனால் அவளும் எல்லாம் உள்ள சாதாரண மனுசி தானே? ஒதுக்குப்புறமாக அவள் போயிருக்கும் போது இப்படி நடந்திருந்தால்? அவளுக்கென இருப்பதும் மனித உடல் தானே. ‘ சீ சீ நன்றி கெட்ட மனுசன்’ தாய் மாமா வீட்டில் எல்லா வேலையும் அவள் தான் செய்வாள். ஆனால் யாரும் கை நீட்டி ஒரு முறை அடித்ததில்லை. மாமனின் மனைவி சத்தம் போடுவாள் அவ்வளவு தான். அவளே தேவலாம் போல இருக்குதே என்று தான் கிளம்பி விட்டாள். 

அந்த ஊரின் கெட்ட நேரமோ என்னவோ அந்த வருடம் வான வேடிக்கையில், வான பட்டாசு வெடித்து அந்த ஊர் காரியக் காரரின் மகன் மீது விழுந்து இருந்த இடத்திலேயே கருகி விட்டான். இராமாயியைக் குப்பன் கூப்பிடவுமில்லை. ஊராரின் பேச்சு இன்று வரை நிற்கவுமில்லை. இராமாயி பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பத்து வருடம் கழித்து இப்பத்தான் சாமிகிட்ட குறி கேட்டு திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது.

 இராணுவத்தில் பணிபுரிவது அந்த ஊரிலேயே கண்மணியின் புருசன் தான். அவனைப் பற்றி அவள் தான் கவலைப் பட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வாக ஊர்களை கட்டிக் கொண்டிருந்தது. புதிது புதிதாகக் கடைகள். ஜீதவிதமான கலர் சர்க்கரை மிட்டாய் கடைகள், பல வண்ணத்தில் வெள்ளை மினுக்குகளோடு கூடிய அல்வா கடைகள். இரும்பு அரிவாள், வெட்டரி வாள் கடைகள், வடசட்டி உள்ளிட்ட சமையல் சாமான்கள், பொரி கடைகள், பஞ்சு மிட்டாய் கடைகள், சவ்வு மிட்டாய் கடைகள், சாமி படம் விற்கும் கடைகள், கரும்புச் சாறு கடைகள், கரும்பு கடைகள், போண்டா, பஜ்ஜி கடைகள், இரப்பர் வளையல் தள்ளு வண்டி கடைகள், துணி கடைகள், வாழைப் பழக் கடைகள், பிள்ளைகளுக்குப் பிளாஸ்டிக் பொம்மை, மண் பொம்மை கடைகள், சட்டி பானை கடைகள், அக்கம் பக்கம் பெண்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து அது பற்றி பேசும் போது, கண்மணி ஏங்கிப் போவாள். ஆனால் அவளுக்குப் போகப் பிடிக்காது. போகவும் ஆசையாக இருக்கும். கணவன் வந்திருந்தால் இந்த திருவிழாவே அவளுக்காக என்பது போல இருக்கும். அவளும் தான் விதவிதமான புடவைகள் வைத்திருக்கிறாள். ஆனால் கட்டிக் கொள்ளத் தோன்றவில்லை. அலங்காரம் செய்து கொள்ளத்தோன்றவில்லை.

 காஞ்சனா திருவிழா கொண்டாடுவதற்காக வந்திருந்தாள். அவள் கணவன் சென்னை என்பதால் சென்னைவாசியாகி விட்டாள். என்றாலும் கிராமத்து திருவிழாவில் கிடைக்கும் பல பொருட்கள் நகரத்தில் கிடைக்காது. மத்து, பிரமனை, தேங்காய் துருவி என்பது போன்ற பல பொருட்களை வாங்க வேண்டுமென வந்திருந்தாள். அவள் கணவன் கண்மணியை அழைத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டான். 

கண்மணி பிடிவாதமாக எவ்வளவு மறுத்தும், காஞ்சனா விடுவதாக இல்லை. ஒரு வழியாக கண்மணி உடன் வரவும், பேரம் பேசி பொருட்கள் வாங்கித் தரவும் ஒப்புக் கொண்டாள். காளிப்பட்டி திருவிழா கடைகளுக்கு என்று பல ஊர் கூட்டமே திரண்டு விரும். எள்ளு விழுந்தால் கூட எடுக்க முடியாது. கூட்டமே தள்ளிக் கொண்டு போய் விடும். எல்லா கடைகளிலும் கூட்டம் நிறைந்திருக்கும். பத்து நாளும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி விடுவார்ககள். பொருட்களை வாங்கக் கூடாது என வைராக்கியத்தோடு வந்தவர்கள் கூட வைராக்கியம் மறந்து பை நிறைய எடுத்துச் செல்வார்கள். 

கண்மணி எல்லாவற்றையும் காஞ்சனாவோடு பார்வையிட்டுக் கொண்டு தான் வந்தாள். பேரம் பேசி வாங்கிய பொருட்கள் இரண்டு பை நிறைய நிரப்பியாகி விட்டது. இரண்டு வரிசை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். இன்னும் பல வரிசைக் கடைகள் காத்திருக்கின்றன. கண்மணிக்கு காஞ்சனாவிற்கும் நேரம் போனதே தெரியவில்லை. கால் வலிக்கும் போது எங்காவது கடையில் அமர்ந்து பஜ்ஜியோ, பக்கடாவோ சாப்பிட்டதில் வயிறு நிறைந்திருந்தது. இன்னும் ஒரு நாள் தான் திருவிழா நடக்கும் என்பதால், கூட்டம் மிகுதியாக இருந்தது. கோயிலிலிருந்த கூட்டத்தை விட கடைகளில் இருந்த கூட்டம் தான் மிகுதியாக இருந்தது. கண்மணிக்குப் பொருட்கள் வைத்திருந்த பைகளின் எண்ணிக்கை கூடியதால் தூக்கிக் கொண்டு நடக்க சிரமமாக இருந்தது.

 காஞ்சனாவோ, இரவு பனிரெண்டு மணியானாலும் வாங்கி விடுவது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள். கண்மணிக்கும் சேர்ந்து தான் சில பொருட்களை வாங்கியிருந்தாள். புடவை, அழகான கண்ணாடி வளையல்கள், பல வண்ண சாந்து பொட்டு டப்பா, விதவிதமான வடிவத்தில் பொட்டு குச்சிகள், குழந்தை படம் போட்ட தலையணை உறைகள் என காஞ்சனா இரண்டு பை நிறைய கண்மணிக்கு வாங்கிக் குவித்திருந்தாள். கூடவே அறிவுரையும் கொடுத்தாள். 

“இப்பிடியா திருவிழாவிற்கு வருவே. இந்த கூட்டத்தைப் பாரு. எப்படியெல்லாம் மினுக்கிட்டு வராங்க. மினுக்க வேணாம். நல்ல புடவையாவது கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்ல. ஒத்த இரப்பர் வளவி தானா உங்கிட்ட இருக்குது? முகத்தில கூட பவுடர் பூசியும் பூசாத மாதிரி. ஒன்னைக் கிளப்பறதுக்குல நான் பட்டபாடு இருக்குதே. அப்பப்பா. உன் புருசன் இப்ப வரலன்னா என்ன? அடுத்த மாசம் வந்திருவாருல்ல. வர்ற நாளை நினைச்சி சந்தோசப்பட்டுட்டு இருக்கலாம்ல. இப்படி சோக மயமா இருந்தா எப்படி?”

 காஞ்சனா மனக் குமுறலைக் கொட்டி விட்டாள். நேரம் கடந்திருக்கும். பாதி கூட்டம் குறைந்திருக்கிறது. கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று கோயிலையொட்டியிருந்த, அன்னதான சாலையில் இருந்த கல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். கண்மணியும் காஞ்சனாவும் தான் எப்போதும் இதற்கு முன் திருவிழாக்களுக்குச் சேர்ந்து வருவார்கள். கண்மணிதான் காஞ்சனாவை இழுத்துக் கொண்டு வருவாள். வாய் ஓயாமல் பேசித் தீர்ப்பார்கள். வாங்குகிறார்களோ இல்லையோ, எல்லா கடைகளிலும் புகுந்து பார்வையிட்டு விடுவார்கள். பத்து வருட இடைவெளி தான் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டுவிட்டது. பேசிச் சலிக்கும் கண்மணி இந்த முறை பேசவேயில்லை. அவள் தான் பொருட்களை எப்போதும் வாங்கிக் குவிப்பாள். இந்த முறை வெறுமனே பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவள் அமைதி காஞ்சனாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதால் தான் பொரிந்து தள்ளி விட்டாள். திருவிழா கூட்டத்தைப் பார்த்து மனம் மாறி விடுவாள், பொருட்களை வாங்கியதைக் கண்டு மனம் மகிழ்ந்து கொஞ்சமாவது கலகலப்பாகி விடுவாள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 கண்மணி சிறுது நேரம் எதுவும் பேசவில்லை. மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தாலும், முன்பிருந்த கூட்டம் இப்போதில்லை. நாளையும் இப்படித்தான் இருக்கும். நாளை மறுநாள்? ‘‘காஞ்சனா, நாளான்னிக்கு இந்த திருவிழா எப்படியிருக்கும்’’ 

‘‘நாளான்னிக்கா? திருவிழா முடிஞ்சப்புறமா? கடையெல்லாம் நாளைக்கே இரவு காலியாயிரும். கடை எடுக்கல்லன்னா ஒரு நாள் கூலி சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த வரிசையெல்லாம் இங்க இருந்ததான்னு கூட தெரியாம ஒரே குப்பையும் கூளமுமாக நிறைஞ்சு கிடக்கும் மக்கள் கூட்டம் இல்லாம வெறிச் சோடியிருக்கும். இது தெரியாதா?’’ 

‘‘அப்படித்தான் என் மனசும் இப்ப இருக்கு’’ 

‘‘என்னது’’ 

 ( குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார், பாலை திணை – தலைவி சொன்னது காதலர் உழைய ராகப் பெரிது உவந்து சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலம்பில் போலப் புல்லென்று அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?