நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 26 March 2022

குருசாமிபாளையத்துக்காரி

குருசாமிபாளையத்துக்காரி இராகவி அன்று வந்திருந்தாள். வீடே கலகலப்பாக இருந்தது. திருமணம் முடிந்து இப்போது மூன்றாவது முறையாக வந்திருக்கிறாள். முதல் முறையிலான இரண்டு அழைப்பின் போதும் வீடு நிறையச் சொந்தங்கள் நிறைந்திருந்தனர். திருமணத்திற்கு வராதவர்கள், நெருங்கிய சொந்தங்கள் புதுச் பெண் மாப்பிள்ளையைப் பார்க்க தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், இராசம்மாவால் அவளிடம் சரிவரப் பேச முடியவில்லை.
வந்தவர்களைக் கவனிக்கவும், அடுப்படியில் அல்லாடவுமே சரியாக இருந்தது. மகளிடம் அவள் புகுந்த வீட்டைப் பற்றியும், அவளுக்கான அங்கு இருத்தல் பற்றிய புரிதலும் குறித்துத் தெரிந்து கொள்ள இராசம்மாவின் மனம் தவியாய் தவித்துக் கிடந்தது. முதல் முறை வந்திருந்தபோது திருமணமாகி மூன்று நாள் தான் ஆகியிருந்தது. திங்கட் கிழமை கல்யாணம். புதன் கிழமை மறு வீடு. ஒரு நாளில் இராகவிக்குப் புகுந்த வீடு பற்றி என்ன புரிந்திருக்கும் என எதையும் கேட்கவில்லை. இரண்டாம் முறை ஒரு வாரம் கழித்து அழைத்து வந்த போது, மாப்பிள்ளைக்குப் பிடித்ததை, வேண்டியதை அவளிடம் கேட்டுக் கேட்டு செய்யவே சரியாய் போய் விட்டது. மூன்று நாள் இருந்தார்கள் என்று தான் பேர். ஆனால், அதற்குள் மூன்று வீட்டின் மதிய விருந்துக்கு அழைப்பு வந்து விட்டதால், உடன் செல்ல வேண்டி வந்து விட்டது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாலை காப்பி வேலை முடிந்து கிளம்பி வந்து இரவு சமைக்கவே சரியாய் போய் விட்டது. இந்த முறையாவது கேட்டுவிட வேண்டுமென முடிவு செய்து கொண்டாள். நல்ல இடம் தான். இராகவியின் படிப்பிற்கேற்ற மாப்பிள்ளை தான். இராகவியின் அப்பாவின் நண்பர் பிள்ளை தான். சிறிய குடும்பம் தான். சொந்த வீடு, பண்ணையம், கார் என வசதிகளுக்கு ஒரு குறைவும் இல்லை. ஆனால்.... ? இராகவி ஈரோட்டில் வளர்ந்தவள். சென்னையில் படித்தவள். புனேயில் வேலை பார்த்தவள் சென்னைக்குப் படிக்க அனுப்பும் போதே இராசம்மாள் மிகவும் பயந்து போனாள். ‘‘புள்ளைய அம்புட்டுத் தெலைவு அனுப்பனுமா, கொஞ்சம் யோசிச்சி செய்யுங்க’ என்றாள் கணவனிடம். ஆனால் முருகேசனோ, ‘‘உன்னை மாதிரி பட்டிக் காடா புள்ளய ஆக்கலாம்னு பார்க்கறியா. ஆவ நல்லா படிச்சி பாரின்லாம் போகணும்னு நான் நினைக்கறேன். மோகனோட புள்ள இப்ப சிங்கப் பூர்ல இருக்குதாம். கை நிறையச் சம்பளம். கம்யூட்டர் தான் படிச்சதாம். அப்பாவுக்கு ஒரு கார் வாங்கிக் குடுத்திருக்கிறா போதடவ வந்தப்ப. அவளைக் கைல பிடிக்க முடியல. சும்மாவே அலப்பற பண்ணுவான். இப்பக் கேக்கவா வேணும்’’ என்றாள். ‘‘அப்ப அவள நீங்க படிக்க அனுப்பறது அவ உங்களுக்குக் காரு வாங்கிக் குடுப்பானுதான? இப்ப புரிஞ்சிடுச்சி’’ என்றாள் இராசம்மாள் நக்கலாக, ‘‘இவ ஒருத்தி நக்கல் புடிச்சல. கடையாம்பட்டிக் காரிக்கு இந்த குசும்புதான வேணாங்கறது. நானு இந்த வயசுக்கு மேல கார கத்துக்கிட்டு ஓட்டப் போறனா? நான் சொல்ல வந்ததே வேற. அவ புள்ள மாதிரி நம்ம புள்ளையும் வெளிநாடு போகணும்ல்ல இம்புட்டு பாடுபடறேன்’’ என்றான். ‘‘வெளிநாடு போனா, எங்க மாப்பிள்ளை பாப்பீங்க. அமெரிக்காலாயா? இலண்டன்லயா?’’ ‘‘எங்கயோ பாக்குறன். அதுக்கென்ன வந்தது இப்ப. அதெல்லாம் பெறகு பாத்துக்கலாம். இப்ப புள்ளைக்கு என்னென்ன வேணும்னு பாரு முதல்ல’’ முருகேசன் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான். இராசம்மாளுக்கு மகளை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைப்பதில் துளியும் விருப்பமில்லை. போகும் போது போற புள்ள வரும் போதும் அப்படியே வந்தா சரிதான். ஆனால் பட்டணம் அப்படி இருக்க விடாதுல்ல. அதுவும் பெரிய காலேஜ். ஆம்புள பொம்பள சேர்ந்து படிக்கற காலேஜ் வேற. அப்பனும் மகளும் முடிவு பண்ணிட்டாங்க. சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. ஒரு பெருமூச்சு விட்டபடி மகளுக்கு வேண்டியதை எடுத்து வைப்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் வேறு வழி? இராசம்மாள் பயந்ததைப் போலத் தான் நடந்தது. கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் கழித்து. மகள் வந்த போது அது இராகவியா என்று சந்தேகமாக இருந்தது. முடிவைப் பாதியாக வெட்டியிருந்தாள். பின் பக்கம் பாதிக்கு மேல் தூக்கி கட்டியிருந்தாள். நதியா ஸ்டைல் என்றாள். சடைக்கு டாட்டா காட்டி விட்டதாகக் கூறினாள். மெட்ராஸ்ல எல்லாப் பொண்ணுங்களும் தன்னைப் பட்டிக்காட என்று சாடை பேசுவதாகக் கூறினாள். இராசம்மாள் எதுவும் சொல்லவில்லை. முருகேசனுக்குத் தான் முகம் செத்து விட்டது. சுரத்தில்லாமல் வளைய வந்தான். அவளைக் கல்லூரிக்குச் சென்று அழைத்து வந்தது முதலே அவன் சரியாக இல்லை. இராசம்மாள் தான் அவனைத் தேற்ற வேண்டி வந்தது. ‘‘எதுக்கு இப்ப மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு இருக்கீங்க. அவ படிக்கிற இடம் அப்படி நாளு பேர் கூடச் சமமா இருந்தா தான சரியா பழக முடியும். ஊரோடு ஒத்து வாழ்னு பெரியவங்க சும்மாவா சொல்லுவாங்க . அவ நம்ம புள்ளங்க. நாம அப்படி அவள வளக்கல. முடிய கொஞ்சமா குறைச்சிருக்கா அவ்வளவு தான். முதல்ல இருந்ததை விடப் புள்ள இப்பத்தான் பாக்க அழகா இருக்கா. பக்குவமா எடுத்துச் சொல்லலாம். போகப் போச் சரியயிடும் விடுங்க என்றாள். முருகேசனோ கமுறலான குரலில் சொன்னான். ‘‘இல்ல எங்க தாத்தா சொல்வாங்க. அந்தக் காலத்துல குடும்பத்துக்குக் கேட வந்த பொம்புளங்கல தண்டிக்கறதுக்காகத் தலை முடிய பாதியா வெட்டி தண்டனை குடுப்பாங்கன்னு’’ அதற்கு மேல் அவனால பேச முடியல. இராசம்மாள் அவனையே மௌனமாகப் பார்த்தாள். இந்த விசயத்தை அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள். கள்ளப் புருசன வைச்சிருக்கிற பொம்புளகளுக்கு அந்தக் காலத்துல தலை முடியைப் பாதியாக வெட்டி அவமானப் படுத்தித் தண்டனைக் குடுப்பாங்கன்னு அவளுடைய பாட்டியும் எப்போதோ சொல்லியிருக்கிறாள். ஆனால், இந்தக் காலம் வேற. நாகரிகம்னு பேரைச் சொல்லி தலை முடிய பட்டணத்துப் புள்ளங்க வெட்டிக்கிறது ஒரு பேசனாய் போச்சி. இந்த ஈரோட்டுல, அதுவும் சூரம்பட்டி வலசுல இந்த மாதிரி திரிந்தா பாக்கறவங்க என்ன நினைப்பாங்க என்று தான் முருகேசன் அலமலந்து போகிறான். ஈரோட்டுல இருக்கிற ஏதோ ஒண்ணு, ரெண்டு காலேஜ் சேர்த்து, வீட்ல இருந்தே படிக்கச் சொன்ன இராம்மாளிடம் எடுத்தெறிந்து பேசியதை இப்போது நினைத்துப் பார்க்கிறான். இராகவி ஒரு வாரம் இருந்ததில், வேற எந்த மாற்றமும் தெரியவில்லை. காலையில எழுந்து வாசல் தெளிப்பதிலிருந்து பெரிய பெரிய கோலம் போட்டு இரசிப்பதிலிருந்து, தோட்டத்திலிருந்து மல்லிகைப் பூவைப் பறித்துக் கதை பேசிய படியே அழகாக்க் கட்டுவதிலிருந்து அவள் பழையதை மறக்கவில்லை என்றே தோன்றியது. சுக்கு காபியை இரசித்தே குடித்தாள். ஹாஸ்டலில் பெரிய பெரிய பீப்பாயில் டீயும், பாலும் சர்க்கரையும் தனித் தனியாக வைப்பதைப் பற்றிச் சொன்னாள். தோசைக்கு வரிசையில் நிற்பதையும், மிகப் பெரிய சப்பாதியை ஒன்று தான் சாப்பிட முடிந்ததையும், தயிர் சாதத்தில் திராட்சைப் பழம் போட்டுக் கொடுப்பதையும் கதை கதையாகச் சொன்னாள். முருகேசனுக்குக் கூடத் தான் கவலைப்பட்டது வீனோ என்று தோன்றியது. இராசம்மாளும் அவள் முடி குறித்து எதுவும் அவள் கிளம்பும் வரை பேசவில்லை. இராகவியும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஓவ்வொருமுறை வரும் போதும் இதுபோல ஏதாவது சிறு சிறு மாற்றங்களை இருந்து கொண்டே தான் இருந்தன. என்றாலும் ஒரு பேப்பர் கூட பெயிலாகாமல் ஒரு வழியாகப் படிப்பை முடித்தாள். அவள் முடித்த கையோடு அவளுக்கு அவளுடன் படித்த சில பெண்களுக்கும் புனேயில் வேலை கிடைத்தது. கல்லூரி மூலமாகக் கிடைத்தால் அதை இராகவி மிகப் பெரிய பெரிதாகப் பேசினாள். ஐநூறு பேர்ல முப்பது பேருக்குத் தான். இந்த வாய்ப்பு என்று அவளுடைய பேராசிரியர்களும் அவளை வேலைக்கு அனுப்பிச் சொல்லி, முருகேசனிடம் சொன்னார்கள். முருகேசனா எதுவும் சொல்லாமல் தலையை ஆட்டி மட்டும் வைத்தான். ஊருக்கு வரும் வரை எதுவும் பேகவில்லை மகளிடம். ஆனால் இராகவி வந்தவுடன் ஒரு வாரம் கழித்து மீண்டும் பெட்டியில் துணியை அடுக்க ஆரம்பித்தாள். ‘‘எதுக்கு அம்மிணி இப்ப துணிய அடுக்கற நீ வேலைக்கெல்லாம் ஒண்ணும் போக வேண்டாம். வீட்டியே இரு தாயி’’ என்றான். இராகவி ‘‘இந்த வேலைய கிடைக்கலனு எத்தனை பேரு கிடந்து தவிக்கிறாகன்னு தெரியுமா? நீங்க பாட்டுக்கு போக வேணாம்னு சொல்லிட்டிங்க. அப்ப எதுக்கு இம்புட்டுக் கஷ்டப்பட்டுப் படிச்சது. அண்ணக்கு எங்க புரொபசரு சொன்னப்பவே நீங்க மறுத்துச் சொல்லியிருக்கோணும்ல. ஏன் என்மேல நம்பிக்கையில்லயா? நான் எங்ஙன போனாலும் உங்க புள்ள தான். நான் சிங்கப்பூரு போயி வேலையைப் பாக்கணும்னு எத்தன தடவ சொல்லி இருக்கீங்க. இப்ப இங்க இந்தியாவுல இருக்கிற புனேக்கு வேணாம்கறீங்க? நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க அப்பு. எங்ககூட படிச்ச பத்து பொம்பள புள்ளக கூடத்தான போறேன். இப்ப காலேஜ் படிச்சப்ப மாசம் ஒரு தடவ வந்த மாதிரி வந்திட்டுப் போறேன். அவ்வளவுதான். நீங்க அப்ப கம்னு இருந்ததைச் சம்மதம்னு நினைச்சி எங்க புரொபசரு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாக. நானும் வந்திடுவேனு கையெழுத்துப் போட்டுட்டேன். இப்ப வர்லனா நல்ல இருக்குமா? நினைச்சுப் பாருங்க"" என்றாள்."" ‘‘அதெல்லாம் கிடக்கட்டும் அம்மணி. நான் பாத்துக்கறேன். இப்ப உனக்கு எதுக்கு வேலை? நான் சாதகத்தை எடுக்கலாம்னு இருக்கிறேன்"" என்றான். அப்பாவின் முகத்தை இராகவி பார்த்தாள். பின் ஏதோ நினைத்தவளாய் உறுதி சொன்னாள். ‘‘அப்பா, நீங்க சாதகத்தை எடுக்க வேணாம்னு சொல்லலை. நீங்க சொல்ற மாப்பிளய நான் கட்டிக்கிறான். ஆனா அமைய வரைக்கும் நான் வேலைக்குப் போறேன். அமைஞ்சதுன்னா நான் வேலையை விட்டுர்றேன். சரியா?"" என்றாள். ‘‘இல்ல அம்மிணி. அது சரிவராது. நாளைக்குச் சாதகம் ஏதாவது ஒத்து வந்திச்சின்னா, புள்ளைய பாக்க வர்றம்னா எங்க வச்சி காட்டறது? போதும். நீ வேணும்னா தையலு, எம்பிராய்டரினு ஏதாவது கத்துக்க"" ‘‘தையலு, எம்பிராய்டரினு கத்துக்கறதுக்குத்தான் பி.இ. படிக்க வெச்சீங்களா. அதுக்கு மெட்ராசுக்கு அனுப்பாமயே இருந்துருக்கலாமே"" இராகவி உதட்டைக் கடித்துக கொண்டு அழுகையினூடே கேட்டாள். முருகேசன் எதுவும் சொல்லவில்லை. மகள் அழுவதைப் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. ஆனாலும் தன் முடிவே சரி என்பது போலத் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு தோலி இருப்பதைப் போல வெளியே கிளம்பி விட்டான். இராகவி உள்ளறைக்குள் சென்று விட்டாள். அதிலிருந்து யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. சிரிப்பது இல்லை. சாப்பாடு கூட ஏதாவது பேருக்குத்தான் சாப்பிட்டாள். ஒரு வாரத்தில் அவளுடைய தோழியரெல்லாம் அவள் வராதது கேட்டு, துக்கம் விசாரிப்பது போல விசாரித்து அவள் துயரத்தை அதிகப்படுத்தி விட்டார்கள். அப்பனுக்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டத்தை இராசாம்பாள் பார்த்துக கொண்டுதான் இருந்தாள். இராகவி குலதெய்வ கோவில் பூசைக்குக் வட வர மறுத்துவிட்டாள். போருக்குச் சென்று புறமுதுகு பட்டு தோற்றவன் போல் இருந்தது இராகவியின் நிலை. கோவிலுக்கு வந்தால் சொந்தங்களெல்லாம் விசாரிக்கத் தொடங்கி விடுவார்கள். பி.இ. முடித்து பல பெண்கள் அக்கிராமத்திலிருந்து ஏதாவது வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தார்கள். அப்படி போகாதவர்கள் ஒன்று பி.இ. படிப்பில் பெயிலாகி இருப்பார்கள். தகுதி இல்லை என வேலை கிடைக்காமலிருப்பார்கள். ஆனால், இராகவி கிடைத்தும் போகவில்லை என்பதை யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவள் பெயிலாகி இருப்பாள், இல்லையென்றால் தகுதி இல்லாததினால் நிராகரிக்கப்பட்டு இருப்பாள் என்று தான் பேசிக் கொள்வார்கள். இராகவி அதை நினைத்தே வர மறுத்துவிட்டாள். யார் கேள்விக்கும் பதில் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. முருகேசனோ இராகவி ஓரிரு நாட்களில் சரியாகி விடுவாள் என நினைத்தான். ஆனால், அதற்கு ஒரு வாரம் கழித்து நடந்த அவன் அண்ணன் மகளான மஞ்சுளாவின் திருமணத்திற்குக் கூட வர மறுத்து, பிடிவாதம் பிடிக்கத் தொடங்கி விட்டதை அறிந்து பெருமூச்சு விட்டான். மஞ்சுளா, பள்ளி இறுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் உள்ளூரில் டைலரிங் கற்றுக் கொண்டாள் அதுவுமில்லாமல் படிக்கப் பிடிக்கவில்லை என்று உள்ளூர் கல்லூரியில் சேருவதற்கும் மறுத்துவிட்டாள். இராகவியை விட ஒரு வயது மூத்தவள். இந்த ஐந்து வருட காலத்திற்குள் டைலரிங்கில் நல்ல பெயர் பெற்று விட்டாள். வீட்டிலேயே இருந்தபடி சம்பாரிக்கவும் தொடங்கி விட்டாள். சிறுகச் சிறுகச் சேமித்து தனக்கானத் திருமணச் செலவிற்கான தொகையையும் சேர்த்து விட்டாள். ஆனால் அவள் தொகையையும் சேர்த்து விட்டாள். ஆனால் அவள் அப்பா அதைப் பெற மறுத்ததால், எங்குக கட்டிக் கொடுக்கிறார்களோ, அங்கு அந்த ஊரில் டைலரிங் கடை வைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். மஞ்சுளாவையும் இராகவியையும் நினைக்கும் போது முருகேசனுக்குத் தன் மகளை நினைத்து மிகப் பெருமையாக இருக்கும். ஐந்து வருடத்தில் மஞ்சுளா சம்பாதிச்சத தன் மகள் ஆறு மாதத்திலேயே சம்பாதித்து விடுவாள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது தானே அதற்குத் தடையாக இருக்கிறோமோ என்று தோன்றியது. பி.இ. படித்த புள்ளய டைலரிங் போன்னு சொல்ற மாதிரி ஆயிடுச்சேனு அவனம் மறுகிப் போனான். இராகவியின் தோழியரில் பல பேர் முன்பே புனே சென்று விட்டார்கள். ஒரு சிலர் தான் இறுதி தேதியில் போய் சேர்ந்து கொள்ளலாம் எனக் காத்திருந்தார்கள். சவரக் கடையில மோகனைத் தற்செயலாகச் சந்தித்தான் முருகேசன். ‘‘ஆளப் பாத்து ரொம்ப நாளாச்சே. என்னப்பா முருகேசா உள்ளூர்ல தான் இருக்கியா?"" ‘‘ஆமாம்பா உன்னயத்தான் பாக்க முடியல. அப்புறம் உன் பண்ணையமெல்லாம் எப்படியிருக்குது?"" ‘‘ஏதோ இருக்குதுங்க. உங்க புள்ள படிப்ப முடிச்சிருக்கா? இல்ல இன்னும் இருக்குதா?"" ‘‘முடிச்சிடுச்சிங்க. புனேல வேலை கிடைச்சிருக்கு. நாந்தான் போக வேண்டாம்னு சொல்லிட்டனுங்க"" ‘‘அட ஏம்பா. புனே நல்ல ஊருதான. நம்ம ஊரு மாதிரிதான். எம்மவ முதல்ல அங்கதான வேலை பார்த்தா. நல்ல பாதுகாப்பான ஊருதான். கம்பெனி பக்கத்திலேயே தங்கற இடம். மருத்துவ வசதி, கட கண்ணி எல்லாமிருக்குதப்பா. நானு சேர போனப்ப கூடப் போனன். நீ ஏம்பா வேணாம்னுட்ட புள்ளக்கு ஏதாவது அமைஞ்சிருக்கதா? எப்ப கல்யாணம்"" ‘‘அட அதெல்லாமில்லீங்க. நான்தான் எதுக்கு வேலன்னு வேண்டாமினட்டேன்."" ‘‘அதுக்கு நீ படிக்க வைக்காமயே இருந்திருக்கலாமில்ல. அந்த புள்ள எம்புட்டு குஷ்டப்பட்டிருக்கும் படிக்கறதுக்கு. எதுக்கும் ஒருக்கா நல்லா நீ யோசனைப் பண்ணிப்பாரு. அதான நான் சொல்றது சரி வரட்டா"" என்ற படி அவர் கிளம்பிப் போனார். மோகனை நினைத்து முருகேசனுக்கு வியப்பாக இருந்தது. அவருடைய தைரியத்தை நினைத்து வியந்தான். சென்ற முறை வந்திருந்த அவர் மகள் நினைவுக்கு வந்தாள். ஜீன்ஸ் பேண்ட்டும், பாப் தலைமுடியும், கூலிங் கிளாஸ் கண்ணாடியும் ஆளே மாறிப் போயிருந்தாள். படிக்கிற காலத்திலேயே அவள் அப்படித்தான் மாறிப் போயிருந்தது போல நினைவுக்கு வந்தது. ஆனால், மோகனோ அதையெல்லாம் பெரிது படுத்தாதது போலத் தெரிந்தது. பெண்ணை முழுமையாக நம்பியிருந்ததால்தான் அவளைச் சிங்கப்பூர் வரை அனுப்பியிருக்கிறான். அவனுக்கும் உள்ளுக்குள் பயமிருந்திருக்கும். அவன் அதை எப்படி எதிர்கொண்டிருக்கிறான் என நினைத்துப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவன் மீதிருந்த மதிப்பு இன்னும் கூடியது. இராகவியிடம் அவ்வளவு பெரிய மாற்றங்கள் இல்லை. ஏதோ முடியைக் கொஞ்சம் போல வெட்டிக் கொண்டாள். மருதாணிக்குப் பதில் நெயில் பாலிஷ் பூசிக் கொண்டாள். பாவாடை தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறினாள். அவ்வளவு தானே. மற்றபடி வேறெதுவும் மாறலயே. மகளைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பேன்னு பெருமை பேசிய தானே தான் அவளைப் புனேக்குக் கூட அனுப்ப மாட்டேனு பிடிவாதம் பிடிச்சிகிட்டு இருக்கறது. தான் ஏன் இப்படி மாறிப்போனேன். எது என்னை தயங்க வைச்சது. இராகவி மேல நம்பிக்கையில்லாத மாதிரி தான இப்ப ஆயிப் போச்சு. நான் வெளிப்படையா சொல்லலனாலும் இராகவி அப்படிதான நினைச்சிகிட்டு இருப்பா. சவரக்காரன் கூட்டம் கடையில கம்மியாக இருந்ததால், நிதானமாகத் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார். டி.வி.யில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. டி.வி.யைப் பார்த்தபடியே வெட்டிக் கொண்டிருந்தார். சண்டைக் காட்சிகள் வரும் போது மட்டும், ‘‘அப்படித்தான் அடி அவனை, குத்து"" என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். சலூனில் இருந்த பெரிய கண்ணாடியில் தன்னைப் பார்த்தார் முருகேசன். கழுத்து வரைக்கும் இழுத்துப் போர்த்திய வெள்ளைத்துணி. தாடை முழுவதும் வெள்ளை நுரை. சலூன்காரர் சிங்காரம் தலை முடியில் வீரத்தைக் காண்பித்து விட்டு, தாடிக்கு வந்திருந்தார். அவர் கண்கள் எதிர் கண்ணாடி வழியாக டி.வியைப் பார்த்துக் கொண்டிருந்தன. எந்தப்புறமிருந்தாலும் டி.வி. தெரியும்படி ரெண்டு பக்கமும் பெரிய பெரிய கண்ணாடிகள். அவன் டி.வி. பார்ப்பதும், அவர் மீசையைச் சரி பண்ணுவதுமாக மாறி மாறி கண்களை மேலும் கீழும் நகர்த்திக் கொண்டிருந்தான். ‘‘பாத்துப்பா, பாத்துப் பண்ணுப்பா. டி.வி.யை அப்புறம் பாக்கலாம்"" ‘‘அதெல்லாம் ஒண்ணும் ஆவாது சாரே. ஏத்தன வருசமா பழகறிங்க. ஒரு நாளாவது கை மாறியிருக்குதா. எல்லாம் ஒரு நம்பிக்கதான. தொழில் சுத்தமா இருக்கும்"" என்றபடி சோலியை முடித்தான். அவன் சொன்னது சரிதான். முகத்தில இருந்த முடியெல்லாம் கச்சிதமாக நீக்கியிருந்தான். ஒரு குறை சொல்ல முடியாது. எப்போதும் போல் நம்பிக்கையை காப்பாற்றி விட்டான். முருகேசனுக்கோ எங்கோ பொறித் தட்டியது. வீடு வரும் வரை சிந்தனையில் ஆழ்ந்தபடி வந்தார். எப்போதும் முடி வெட்டிக் கொண்டு வரும்போது கறியோ, கோழியோ, மீனோ பிடித்து வருவது முருகேசனின் வழக்கம். அவன் முடி வெட்ட கிளம்பும் போதே, அதற்குரிய செலவையெல்லாம் செய்து வைத்து விடுவாள். அன்றும் நிறைய பூண்டும், இஞ்சியும் வெங்காயமும் உளித்து வைத்திருந்தாள். அவன் வெறுங்கையோடு வந்ததும், வந்ததும் பின்பக்கம் செல்லாமல், முன் திண்ணையில் உட்கார்ந்ததும் யோசனையில் ஆழ்ந்திருப்பதையும் இராசாம்பாள் கவலையோடு பார்த்திருந்தாள். என்னங்க. . . . . . ஏனுங்க . . . . . எனப் பல தடைவ கூப்பிட்ட பிறகுதான் முருகேசன் நிதானத்திற்கு வந்தான். ‘‘என்னங்க அப்படி ஒரு யோசனை. பின்பக்கம் போயிட்டு வாங்க. கறி எடுத்துட்டு வர மறந்துட்டீங்களா"" என்றாள். ‘‘அட ஆமா. சரி சரி எற்பாடு பண்ணு. நான் போயி எடுத்திட்டு வாரேன்"" என்றபடி பின்பக்கம் கிளம்பினான். குழம்பினைத் தட்டத்தில் ஊற்றியபடி, ‘‘அப்படியென்ன யோசனைங்க"" என்றாள். ‘‘எல்லாம் நம்ம அம்மிணி பத்திதான். வேறென்ன?"" நன்றாக இரும்பு வட சட்டியில் அளவாக உப்பும் மிளகும் போட்டு, சாந்தினைப் போட்டு கருகருவென வறுத்த கறியை கொத்துமல்லி தூவி மணக்க மணக்க சூடாக அரைக் கிலோவிற்கு மேலே அவன் தனித் தட்டத்தில் வைத்தாள். அவிச்ச முட்டையை நாலாக்கி வெங்காயம், தக்காளி போட்டு வணக்கிய பொரியலை இன்னொரு தட்டத்தில் வைத்தாள். ‘‘அம்மிணி எங்கே"" என்றான். ‘‘அவ சின்னவ கூடத் தோட்டத்துக்கு மருதாணி பறிச்சிட்டு வாரேனு போயிருக்கா. மஞ்சுளா கல்யாணத்துக்க வச்சிக்க. இப்ப வந்திருவாக. நீங்க சாப்பிக"" என்றாள். ‘இராசாம்பாள் கறிக் குழம்பும், வறுத்த கறியும் வைத்தால் அம்புட்டு ருசியாயிருக்கும். வடசட்டியில் கறி தீர்ந்த பின் அதில சுடுசோற்றைப் போட்டு பிசைந்து தந்தா, அத திங்க நானு நீயின்னு புள்ளைக போட்டி போடும். இன்னிக்கி ரெண்டும் மருதாணி பறிக்க என்ன அவசரம்னு’ நினைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான். வாசலில் நிழலாடியது. ரெண்டு புள்ளைகளும் வந்திட்டாக போல. பழனியப்பன் சாலைக்குச் சென்றான். அங்க வேலயாளுக வந்திருப்பாக. சாளையிலருந்து திரும்பி வந்ததும், ‘என்ன புள்ளக எல்லாம் சாப்பிட்டாச்சா’ என்றான் எப்போதும் போல ‘‘பெரியவளுக்கு வேணாமாமா"" என்றாள். ‘‘சரி, சரி அவள கூப்பிடு. ஒரு சேதி சொல்லணும்"" இராகவி வந்து முன்னே நின்றாள். வாரத்தில் இளைத்திருந்தாள். சடை பின்னியிருந்தாள். பாவாடை சட்டை போட்டு சின்னவளைப் போலவே மாறியிருந்தாள். முகம் களையிழந்திருந்தது. மருதாணியை அம்மியில் வைத்து அரைத்துக் கொண்டிருந்தாள் போல. அவள் மீதெல்லாம் மருதாணி சாறு தெறிந்திருந்தது. கூப்பிட்டவுடன் கைவேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள். ‘‘சரி அம்மிணி. புனேக்கு போக எல்லாம் எடுத்து வை. நான் மோகன் மாமா கிட்ட காரை கேட்டுட்டு வாரேன்"" என்றான். இராகவிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. புரிந்தபோது அவள் கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்து விட்டது. சந்தோசமாகச் சிரித்தபடி உள்ளுக்குள் ஓடி தங்கையைக் கட்டிக் கொண்டாள்.` அங்குச் சுவரில் சாய்ந்து தயிரைச்சிலுப்பிக் கொண்டிருந்த இராசாம்மாள், ‘‘என்னங்க இது திடுதிப்புனு"" என்றாள் திடுக்கிட்டு. ‘‘இப்ப சாளைக்குப் போனைல்ல அங்கு மாரியப்ப மாமா வந்திருந்தாரு. அவருதான் சோலி போட்டுப் பாப்பாருல்ல. இவ விசயத்தைச் சொல்லி கேட்டேன். சோலியப் போட்டு இராகவிக்கு இன்னும் குரு பலன் வரலன்னு சொன்னாரு. சரி பி.இ. படிச்சிட்டு வேலை கிடைச்சும் போகாம இருக்கறது நல்லாவா இருக்கும்னு தோணுச்சி. அதான் போகச் சொல்லிட்டன்"" என்றார். அப்படியும் இப்படியும் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இராகவியும் பொறுப்பாக வேலைக்குப் போய் வந்தாள். சாதகமும் ஒரு பக்கம் பாக்க ஆரம்பிச்சதுல குருசாமிப்பாளையத்துல கம்யூட்டர் சென்டர் வைத்திருக்கிற குமரேசனின் நண்பர் இராமநாதனின் மகன் வெங்கடேசனின் சாதகம் பொருந்தி வந்தது. குருசாமிப்பாளையமா என்று இராசம்மாளுக்கு முதலில் திகைப்பாக இருந்தது. ‘‘குருசாமிப்பாளையம் பட்டிக்காடாயிற்றே. சென்னை, புனேனு பழகன புள்ளய பட்டிக்காட்டிலயா கட்டிக் குடுக்கறது"" குமரேசனுக்கும் தயக்கம்தான். இருந்தாலும் மாப்பிள்ளை பையனை ரொம்ப பிடிச்சிருச்சி. இராமநாதனின் மனைவியும் சொந்த தங்கச்சி போல. காலம் பூரா பிள்ளை சந்தோசமா வாழணும்னா பட்டிக்காடு பட்டணம்னெல்லாம் பாக்கக் கூடாது என்று முடிவெடுத்தான். இராகவியை வரவழைத்தான். பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னு, தெரிஞ்சப்புறம் ஒரு மாதத்திற்குள் மளமளன்னு திருமணம் நடந்து விட்டது. முருகேசனுக்கும் மன ஓரத்தில் நின்று பயம் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இராசம்மாளிடம் கேட்கவும் தயக்கம். மறுவீடு முடிந்து இருமுறை வந்தாயிற்று. இராகவியின் முகத்தில் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. மாப்பிள்ளை பிள்ளை ரொம்பச் சகசமாய்ப் பழகி வந்தான். அதே தெம்பை ஏற்படுத்தி தந்திருந்தது. எனினும், இராகவியின் உள் மனத்திற்கும் வெளி முகத்திற்குமான முரண்பாடு ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய மனம் தவியாய்த் தவித்தது. ஆனால் அதற்குள் இராகவி கிளம்பிவிட்டாள். இந்த முறையும் கேட்க முடியவில்லை. ஒருவாரம் கழித்து, அன்று இராசிபுரத்துக்காரி மீனாட்சி வந்திருந்தாள். முருகேசனின் பெரியப்பா பேத்தி. இராசிபுரத்தில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். இராகவி கல்யாணத்தின்போது அவளுடைய நாத்தனாருக்குத் திருமணம். அதனால் அவள் வர முடியாமல் போயிற்று. அதற்குப் பிறகு இப்போது தான் அவளுக்கு நேரம் கிடைத்திருக்கிறது. அவள் வந்தால் வீடு கலகலப்பாய் மாறி விடும். வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். மனதில் கள்ளமில்லாத பாசக்காரி. இரண்டு நாளுக்கு முன்னால், குருசாமிபாளையம் போய், இராகவிக்குப் பட்டுப் புடவையும் மாப்பிள்ளை பையனுக்குப் பட்டு வேட்டி சட்டையும் கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள். இப்போது வந்திருந்தாள். அவள் கணவனும் அவளும் இராகவியை வாழ்த்திக் கொடுத்ததாகவும். இராகவியும் மாப்பிள்ளையும் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்கள் என்றும் சொன்னாள். மாப்பிள்ளை வீட்டார் அவர்களை நன்றாக உபசரித்தையும் பெருமையாகச் சொன்னார்கள். இராகவியை விட பதினைந்து வயது மூத்தவள். ஆனால் இராகவிக்கு இணையாக வாயாடுவாள். குருசாமிப்பாளையத்தில், அன்று இராகவிதான் மீனாட்சிக்கு விருந்து சமைத்திருக்கிறாள். “அட அட இராகவி சமைக்கறதைப் பாக்கணுமே. கண் கொள்ளா காட்சிதான். கல்யாணத்துக்குப் பின்னால தான புடவை கட்ட கத்துக்கிட்டா? கொஞ்சம் கூட கசங்காம, அதெ அப்படியே அள்ளி சொருவி, கோடாரிக் கொண்டைய போட்டுக்கிட்டு, அப்படியே இராசம்மாக்கா மாதிரியே மாறிப் போயிருந்தா. அவ வச்ச மோர்க்குழம்புக்கெல்லாம் யாரும் பக்கத்துலய வர முடியாது. வெண்டக்காய போட்டு வைச்சிருந்தா பாருங்க. மாப்பிள்ளை இரண்டு தடவை வாங்கிச் சாப்பிட்டாருன்னா பாரு. அவ மாப்பிள்ளைக்குப் பரிமாறுவதை பார்த்துக்கிட்டே இருக்கலாம்” என்றவளைக் குறிக்கிட்டு அவள் கணவன் “ இரு மீனாட்சி. மோர்க்குழம்பைவிட அந்த இளநீர் பாயசம் இன்னும் அருமை. பாதாம்பாலை விட அம்புட்டு ருசி. நீ இளநீர் பாயசத்தைப் பத்தி கேள்வியாவது பட்டிருக்கியா” என்றான் நக்கலாக. “நான்தான் நீங்க இரசத்தை டம்ளர்ல வாங்கிக் குடிச்சதைப் பார்த்தேனே” “சரி சரி சாப்பிட்டுட்டு உங்க சண்டைய வச்சிக்கலாம் வாங்க” என்றாள் இராசம்மாள். அவர்கள் கடைக்குப் போனதைப் பற்றியும், அவர்களின் வீட்டுப் பெரிய முற்றம் பற்றியும், அவர்களின் மாமியார் பார்த்துக் பார்த்துக் கவனித்ததையும் பற்றிச் சொன்னாள். அவர்களை வாசல் வரை வந்து அவர்களின் மாமனார் மரியாதையாக வழியனுப்பி வைத்தது பற்றியும், இன்னமும் அவர்கள், ஆட்டுரலில் அரைத்துத் தான் குழம்பு வைப்பதையும் சொன்னாள். இராகவியின் தங்கை சந்திரா மீனாட்சியைச் சாப்பிட்டவுடன் தாயம் விளையாட அழைத்தாள். சமையல் கட்டுக்கிடையிலிருந்த முற்றத்து திண்ணையில் அமர்ந்து தாயக் கட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள் மீனாட்சியும், சந்திராவும். ஆட்டம் களை கட்டிக் கொண்டிருந்தது. இராசம்மாளும் மீனாட்சியின் கணவனும் உள்ளுக்குள் ஊர் கதையை, அளந்து கொண்டிருந்தார்கள். முருகேசன் முற்றத்துத் திண்ணையில், தலையில் துண்டை சுருட்டி மேடாக்கி படுத்துக் கொண்டிருந்தான். இரவு கோழி அடிக்கணும், எந்த கோழியை அடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தான். மீனாட்சி தான் தாயக்கட்டையோடு சேர்த்து சந்திராவையும் உருட்ட ஆரம்பித்திருந்தாள். ‘‘என்ன சந்திரா படிப்பெல்லாம் ஆரம்பிச்சாச்சா. இன்னும் ரெண்டு மாசத்துல பரிச்சை வரப் போவுதே.” என்றாள். “அது வருசா வருசம்தான் வருது“ என்றாள் சலிப்பாக. “அது வருதுதான். நீயும் இராகவிபோல நல்லா படிச்சாதான. புனே எல்லாம் போகலாம்? “என்ன பெரிய புனே? அப்புறம் குருசாமிப்பாளையமோ, குருவிபாளையமோ தானே?” ‘‘அப்படியா சொல்றே. அதுவும் சரிதான். ஆனா உங்கக்கா படிச்சது வீணாகலே. அவ உங்க மாமாவோட கணினி மையத்துக்குப் போறா, ஒரு வருசம் கழிச்சி நீ போலாமில்ல. இப்பவே என்ன அவசரம்னு நான் கேட்டேன்? அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? எங்க மாமியாரு நாலு மணிக்கே எழுந்து பரபரன்னு வேலைய ஆரம்பிச்சிடறாங்க. அவங்க சுறுசுறுப்புக்கு யாரும் ஈடு குடுக்க முடியாது. நான் ஆறு மணிக்குத்தான் சமையல் கட்டுக்கு வருவேன். அதுக்குள்ள பாதி சமைய முடிச்சிருவாங்க. சட்னி மட்டும் ஆட்டச் சொல்வாங்க. ஏழு மணிக்கே சாப்பிட்டாயிரும். அப்புறம் என்ன வேலையிருக்குதுன்னு நானும் கிளம்பிடுவேன். அப்படிங்கறா" ‘‘அதுசரி அங்க தண்ணிலாம் எப்படி கிணத்துத் தண்ணிதான் குடிக்கணுமாமே. ஒரே உப்பா இருக்கும்னு கேள்விப்பட்டேன். அங்க இருந்தவங்கலாம் நல்ல தண்ணிக்காக டவுனுப் பக்கம் குடி போறாங்கலாம். போர் போட்டுத்தான் தண்ணி எடுக்கறீங்களாமாம். நாம அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போனப்ப கேன் தண்ணில வைச்சாங்க. அதனால அவங்க தண்ணி குடிக்க முடியல. அவ எப்படி குடிக்கிறாளாம்"" மீனாட்சி சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. “இத நானும் கேட்டேன். அதுக்கு அவ, அக்கா, உங்க ஊரு தண்ணிக்கு எங்க ஊரு தண்ணி எவ்வளவோ மேல. சுத்தமான தண்ணி. சுத்தமான பால் மாதிரி. கொஞ்சம் உப்பு தான். கலங்கலாத்தான் இருக்கும். ஆனால் உங்க ஊரு தண்ணி போல கெமிக்கல் போட்ட தண்ணியில்ல. எங்க ஊரு தண்ணிக்கு மிஞ்சின தண்ணி எங்கயுமில்ல பாத்துக்க. அப்படிங்கறாளே” என்றாள் . கேட்டுக் கொண்டிருந்த முருகேசனுக்கு, உச்சி குளிர்ந்து போனது. குறுந்தொகை 167, கூடலூர் கிழார் முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக், குவளை உண்கண் குய் புகை கழுமத் தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர், இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?