நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 26 March 2022

அமராவதி

மராவதி அலுவகத்திலிருந்து கிளம்பும் சமயத்தில் மோனிகா போன் செய்தாள். ‘‘அம்மா அக்கா உங்க ஆபிசுக்கு வந்தாங்களா?’’ ‘‘இல்லையே ஏன்’’ என்றாள்?’’ ‘
‘இன்னும் வரலை அதான்’’ 
‘‘சுமதி வீட்டிற்குப் போறேனுட்டு சொல்லிட்டிருந்தாள்’’ 
‘‘நான் சுமதி கிட்டயும் கேட்டுட்டேன். அவ வீட்டிற்கு வரலையாம். 
‘‘காலேஜீல ஸ்பெசல் கிளாசன்னு ஏதம் சொல்லலையே’’ 
‘‘ஆனா, டான்ஸ் பிராக்டிசுன்னு சொன்னதா ஞாபகம்’’ 

‘‘சரி சரி 70 ம் நெம்பர் பஸ் 6 மணிக்குத் தான் கிளம்பும் வந்திட்டிருப்பா’’ 

‘‘நான் அவளுக்குப் போன் பண்ணேம்மா. அவ எடுக்கல’’ 

‘‘சரி சரி நானும் பண்ணிப் பாக்கறேன். நீ அடுப்புல பால வைச்சிடு. நான் கிளம்பிட்டேன். அரை மணி நேரத்தில் வந்திடறேன்’’

 அமராவதி வீட்டிற்கு வந்த பின்னும், அபிராமி வீடு வரவில்லை. மணி 7 மணி ஆகப் போகிறது. வயிற்றில் பந்து சுருண்டது. வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்கவில்லை. உடனே கிளம்பி விட்டாள். தெருவிற்கு வந்த பிறகுதான், எங்கு செல்வது என்று தெரியாமல் முழித்தாள். 
தன் செல்போனை எடுத்து அபியின் தோழிகளுக்குப் போன் செய்தாள்.

 ‘‘இல்லியா ஆன்ட்டி, அபி மதியமே வயத்து வலின்னு கிளம்பிட்டாலே. வீட்டிற்குத் தான் போறேனு சொன்னா எதுக்கும் நான் காஞ்சனா கிட்ட கேட்டு சொல்றேன் ஆன்ட்டி” என்று சுபத்ரா, அபியின் நெருங்கிய தோழி சொன்னாள். அமராவதி, நெடு நாளாகப் பேசாதிருந்த தம்பியிடம் தொடர்பு கொண்டு கேட்கலாமா வேண்டாமா எனத் தடுமாறினாள். வேறு வழியில்லை. வேறு யாரும் உறவென்று சொல்லிக் கொள்ள இல்லை. இரத்த பாசம்னு ஒண்ணு இல்லாமலா போயிடும்? தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. ஆனால், எதிர் தரப்பில் எந்த விளைவும் இல்லை. தொடர்ந்து நான்கு முறை செய்தாள். ஒரு பயனும் இல்லை. திரும்ப வீட்டிற்கு வந்தாள்.

 அபியின் பொருட்களை கலைத்து ஏதாவது கிடைக்கிறதா என பார்த்தாள். அது அரசின் அலுவலக பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘சி’ பிரிவு வீடு. இரண்டே இரண்ட அறைகள். சமையலறை மற்றும் படுக்கையறை. அதில் தான் மூன்று பேருடைய பொருட்களும் இருந்தன. பெரிதாகத் தேடுவதற்கு எதுவுமில்லை. அபியின் புத்தகங்கள் இருக்கும் அலமாரி. துணிகள் வைக்கும் பொதுவான அலமாரி. அபியின் புத்தகப் பை அபியிடம் தான் இருக்கும்.

 ‘‘எங்கு போனாள்? ‘‘மண்டை குடைந்தது.

 ‘‘மோனிகா, வீட்டை உள் பக்கம் பூட்டிக் கொண்டு பத்திரமா இரு. இதோ வந்திடறேன்’’ என மறுபடி கிளம்பினாள். வீட்டை விட்டு வெளியே வரும் போது எதிர்வீடு கதவு திறந்திருந்தது. அதில் டி.வியில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்த விவாதம் நடந்து கொண்ட இருந்தது. அந்த வீட்டில் சாபிராவும் அவள் வயதான தாயாரும் தான் இருக்கிறார்கள். 

சாபிரா அரசு மருத்துமனையில் நர்சாக இருக்கிறாள். நைட் டூட்டியாக இருக்கும். அவள் தாயார் தான் டி.வி., பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குக் காது கேட்காததால், சத்தமாக வைத்துத்தான் டி.வி பார்ப்பாள்.

 பொள்ளாச்சி பெயரைக் கேட்டவுடன், அமராவதிக்கு வயிற்றில் சுருண்ட பந்து நெஞ்சிக்கு வந்தது போல இருந்தது. மதியம் சாப்பிட்டது. பசியா பயமா எனத் தெரியாத பதட்டம். கீழே படிக்கட்டுகளைப் பார்த்து இறங்கினாள். அவள் காதல் கணவன் முரளி இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவன் பார்த்த வேலையைத் தான் அவள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவனுடைய சொந்தங்கள் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதே ஊரில் தான் துடியலூரில் இருக்கிறார்கள். இவர்கள் இருப்பதோ கவுண்டம் பாளையம் அரசினர் குடியிருப்பு. ஒவ்வொரு வரிசை வீடுகளுக்கு இடையிலும் நீண்ட அகலமான சாலை. ஓவ்வொரு குடியிருப்பிலும் மூன்று மாடிகள் கொண்ட ஆறு வீடுகள். இவளுக்கு மூன்றாவது மாடிதான் கிடைத்திருந்தது. தண்ணீர் தட்டுப்பாடு வரும் காலத்தில் பெரிய சிக்கலாகிவிடும் கீழேயிருந்து குடத்தில் மூவரும் மாற்றி மாற்றி கொண்டு செல்வார்கள். ஊற்றி வைப்பதற்கு இரு பெரிய பிளாஸ்டிக் டிரம் வாங்கி வைத்திருந்தாள். சமையலறையில் ஒன்றும், பாத்ரூமில் ஒன்றுமாக அவையே வீட்டை அடைத்துக் கொண்டிருக்கும். இப்போது ஒரு மாதமாகத்தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. 

தண்ணீர் என்றவுடன் அவளுக்கு ஒரு சந்தேகம். அபிதான் தண்ணீர் பிடித்துத் தருவாள். இடையில் தானும், மூன்றாவதாக மோனிகாவுமாகத் தண்ணீரை மாற்றிக் கொள்வதுண்டு. அப்படி தண்ணீர் பிடிக்கிற சமயத்தில், யாருடனாவது பழக்கமாயிருக்குமா? அல்லது பஸ்ஸில் யாருடனாவது பழகியிருப்பாளா? அவள் தான் வீட்டிற்கு தேவையான பொருட்களைச் சில சமயம் தன் புத்தகப் பையில் வைத்து வாங்கி வருவாள். டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் யாரையாவது காதலித்திருப்பாளோ? 

‘‘என்னம்மா இந்த நேரத்தில’’ என்ற குரலைக் கேட்டு நின்றாள். ஓரளவு வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தாள். பெட்டிக் கடை இராமசாமி எதிரில் நின்று கேட்டுக் கொண்டிருந்தார். ‘‘இந்த அபிராமியத்தான் தேடிக்கிட்டிருக்கேன் நீங்க பாத்தீங்களா’’ அழ மாட்டாத குறையாகக் கேட்டாள். 

‘‘காலைல பாத்ததுதாம்மா. காலேஜீக்குப் போகும் போது பார்த்தேன். அப்புறம் பாக்கலியே. ஏம்மா என்ன விசயம்? ஏதாவது சண்டை போட்டியா’’ என்றாள். 

‘‘இல்லீங்கய்யா அப்படில்லாம் இல்ல. ஆனா சாயந்திரமா வீட்டுக்கு வரலியே. அதான் தேடிட்டுப் போறேன். எங்கத் தேடறதுன்னு தான் தெரியல’’என்றாள் கிட்டத்தட்ட அழுதே விட்டாள். அவர் மோவாயில் கை வைத்து இல்லாத தாடியைத் தடவிய படியே யோசித்தார்.’’ 

“அபிராமிய எங்கத் தேடறது....’’ என்ற படியே பேசாம போலீசுகிட்ட சொல்லிவைம்மா. இப்பத்திப் பிள்ளங்களே நாம என்னானுச் சொல்றது’’ என்றார். 

‘‘போலீசா.....’’ அதிர்ந்து போனாள்.

 ‘‘ஆமாமா ஆனா நீ தனி பொம்பள எப்படி போலீசு ஸ்டேசன் போவே.... காலம் கெட்டுக் கடக்குதே. சரி சரி என் மருமவ மாவு கேட்டா, லேட்டா போனா அவ்வளவு தான்’’ என்றபடி நழுவி விட்டார். 

அமராவதி தொடர்ந்து நடந்தாள். அங்கு ஆட்டோ ஸ்டேண்ட் தென்பட்டது. யாரும் அவளுக்குப் பரிச்சயமில்லை. என்றாலும் ஆட்டோக்களை நோக்கிப் போனாள். அங்கு வயதானவர் போலத் தோன்றிய ஒருவரை நாடினாள்.

 ‘‘அய்யா, என் பிள்ள அபிராமி காலேஜ்க்கு போயிட்டு வரல, மதியம் ஏதாவது இந்தப் பக்கம் வந்ததுங்களா’’ 

‘‘உன் புள்ளயா. தெரியலயே. எத்தனையோ புள்ளைக இதைத் தாண்டி போகுதங்க. ஏலே முருகேசா இங்க கொஞ்சம் வாடா’’ என்றார். கருத்த பெரிய உருவத்தோடு முருகேசன் வந்தான்.

 ‘‘என்னா வாத்தியாரே. சவாரியா’’ என்று அவளை மேலும் கீழும் பார்த்தான். அமராவதிக்கு அருவருப்பாக இருந்தது. அவசர அவசரமாக, ‘சரிங்கய்யா நானே பார்த்துக்கிறேன்’’ என்றபடி நழுவினாள். அவள்காதின் பின்னால, ‘‘அந்தம்மா புள்ளைய காணோமாம். எவங்கூட ஓடிப் போச்சோ, இல்ல எந்தப் புதர்ல கிடக்குதோ’’ என்ற குரல் கேட்டது. அமராவதி துவண்டு போனாள்.

 ‘சின்னது வேற வீட்ல தனியா இருக்குது’ என்ற பயம் அவளைச் செயலிழக்க வைத்துக் கொண்டிருந்தது. அங்கு பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த பாட்டியைச் சுற்றி பல பேர் நின்று கொண்டிருந்தார்கள் ‘அபிராமிக்குப் பணியாரம்னா ரொம்ப பிடிக்குமே’ எனத் தோன்றியது.

 ‘‘அடியே அபி எங்கடி போன? ஏண்டி இப்படிச் சோதிக்கிற. நான் என்னடி பண்ணுவேன்’’ என்று மனது குமைந்தது. பாட்டியைத் தான் கேட்டுப் பார்ப்பமே. எப்பயாவது இந்த பாட்டியிடம் தான் பணியாரம் வாங்கி இருக்கமே என நினைத்தபடி அருகே போனாள். பாட்டிக்கு பக்கத்தில் ஒரு பெண் அபிராமி வயதிருக்கும், பொட்டலம் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இருவமே வேலை மும்முரத்தில் இருந்தார்கள். விறகு அடுப்பு தணலை வாரி இறைத்துக் கொண்டு இருந்தது. பாட்டி ஒரு பக்கமாகச் சாய்ந்த படி பணியாரத்தைத் திருப்பிப் போடுவதில் கவனமாக இருந்தாள். அவளுக்கு ஒரு கால் ஊனம். விந்தி விந்தி தான் நடப்பாள். திருமணமே செய்து கொள்ளவில்லை. அல்லது யாருமே திருமணம் செய்து கொள்ளவில்லை. அவளைப் போல ஒரு அபலைப் பெண்ணை உதவியாளாகச் சேர்த்துக் கொண்டு தினமும் மாலை பணியாரக் கடை நடத்தி வந்தாள். அதைக் கடை என்று சொல்ல முடியாது காலையில் அந்த இடம் வெறிச்சோடியிருக்கும். எப்போதும் மாலைக் கடை தான். எதற்கும் அந்தப் பாட்டியைக் கேட்போம் என்று நினைத்த போது, தொலைபேசி ஒலித்தது. மோனிகா தான். பயந்திருப்பாள். 

‘‘மோனிகா. நான் இங்க தாம்மா, இருக்கேன். அபி ஏதாவது போன் செய்தாளா? ‘‘இல்லம்மா. எனக்கு பயமாயிருக்குமா. சீக்கிரம் வாம்மா. மேல மொட்டை மாடியில நாலஞ்சு பசங்க சுத்தமா சிரிச்சிப் பேசிட்டிருக்காங்க’’ என்றாள். 

கீழ் வீட்டு சக்திவேலுவும் அவனுடைய நண்பர்களுமாயிருக்கும். இப்படித் தான் அடிக்கடி மொட்டை மாடியில் மீட்டிங் போடுவார்கள். அமராவதி வீட்டுக் கதவையே அப்போதெல்லாம் திறப்பதில்லை. அமராவதிக்கு மயக்கமே வரும் போலிருந்தது. எந்தப் பக்கம் திரும்புவது? யாரைக் கேட்பது, அபியின் மீது பயங்கரமாகக் கோவம் வந்தது. தூரத்தில் அபி போலவே யாரோ வருவது போல இருந்தது. வேகமாக எட்டிப் போட்டாள். இரண்டு அறை கொடுக்க வேண்டும்’ என நினைத்தபடி. ஆனால் அது யாரோ வேறு ஒரு பெண். மறுபடி செல்பேசி சிணுங்கியது. அபியாக இருக்குமா? இல்லை. அவள் தம்பி சிங்காரம் தான். உடனே தொடர்பு கொண்டாள். எதிர்ப்பக்கம் சற்று அமைதி .அவள் தானே முதலில் தொடர்பு கொண்டாள். அவளே பேசட்டும் என நினைக்கிறானோ என்னவோ.

 ‘‘சிங்காரம்.....’’ கிட்டத்தட்ட அழுதே விட்டாள். எதிர்த்தரப்பில் சிறிது தடுமாற்றம். பதட்டம். ‘‘என்னக்கா என்ன ஆச்சு’’ ‘‘அபியக் காணலை’’ விசித்து விசித்து அழுதாள். ‘‘என்னது. எப்பருந்து? நீ இப்ப எங்க இருக்கிற?’’ என்றான். 

‘‘இங்க தான் கவுண்டம்பாளையத்துல யாரைக் கேட்கறது. எங்கத் தேடறது. ஓண்ணும் புரியல. ஓரே பயமாயிருக்குடா’’ என்றாள் அழுகையினூடே. 

‘‘சரி சரி நீ வீட்டுக்குப் போ, நா உடனே வரேன்’’ என்றபடி தொலைபேசியை அணைத்தான். வேறு வழியின்றி அமராவதி வீடு வந்தாள். கதவைத் தட்டினாள்.

 ‘‘யாரு? யாரு? யாரு கதவைத் தட்டறது’’

 மோனிகாவின் பயங்கலந்த குரல்.

 ‘‘நான் தான். கதவைத் திற’’ மோனிகா கதவைத் திறந்ததும், ஓடி வந்து கட்டிக் கொண்டாள். 

‘‘அம்மா என்னம்மா ஆச்சு. அக்கா எங்கம்மா’’ என்றாள்.

 ‘‘அவள எங்கணு தேடறது’’ அதற்கு மேல் குரல் வரவில்லை. கதவிற்குப் பக்கத்தில் வீட்டிலிருந்த ஒரே ஒரு மேசை இடை மறித்துக் கொண்டிருந்தது. ‘‘இது எங்க இங்க வந்தது’’

 ‘‘அம்மா. நீ போன கொஞ்ச நேரத்துல நான் கதவை பூட்டிட்டேன். ஆனால் யாரோ தட்டிட்டே இருந்தாங்கம்மா. கதவை நானு தொறக்கலேன்ன உடனே பலமா தட்ட ஆரம்பிச்சிட்டாங்க. யாரு யாருன்னு கேட்டாலும், பதிலே இல்ல. அதான் மேசையைத் தடுப்பாக வைச்சிட்டேன் என்றாள். வெளிறிப் போயிருந்தாள் பயத்தில், ‘‘ஐயோ, கடவுளே. அபிராமி உனக்கு என்னடி ஆச்சி. எல்லோரையும் இப்படிப் படுத்தறியே’’ எனப் புலம்பினாள்.

 கொஞ்ச நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார் ‘யாரு’ ‘‘நான்தான் சிங்காரம். கதவை திறக்கா’’ கதவைத் திறந்தாள்

 நான்கைந்து வருடமாகப் பார்க்காத சிங்காரத்தை இப்போது தான் பார்க்கிறாள். உடல் ஊதிப் பருத்திருந்தான். பின்னால அவன் மனைவி பர்வதம். ‘‘பர்வதமும் வந்திருக்கா’’ அமராவதி பரபரப்பானாள். 

’’ வா பர்வதம். வா சிங்காரம்’’ என்றாள். உள்ளே வந்தார்கள். ஒரே ஒரு நாற்காலி தான் இருந்தது. பர்வதம் கட்டிலின் ஓரத்தின் உட்கார்ந்து கொண்டாள். மோனிகா இருவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தாள். எப்போதோ கடை வீதியில் அம்மா, தூரத்தில் இருந்து சிங்காரத்தைக் காட்டியிருக்கிறாள். இப்போது தான் இவ்வளவு பக்கத்தில் பார்க்கிறாள். 

‘‘மோனிகா போ தண்ணி எடுத்திட்டு வா’’ அமராவதி சொல்ல மோனிகா நகர்ந்தாள். அப்படியே சுவரில் சாய்ந்து அமராவதி அமர்ந்து விட்டாள். கண்ணீர் பெருக்கெடுத்தது. முந்தானையில் துடைத்துக் கொண்டாள். சிங்காரம் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. பருவதமும் என்ன பேசுவது எனத் தெரியாமல் அமைதி காத்தாள். சிங்காரம் மெதுவாக செல்லத் தொடங்கினான்.

 ‘‘அக்கா நீ என்ன நினைச்சாலும் சரி. உன்ன மாதிரி தான் அபிராமியும்’’ என்றான். அமராவதி விழித்தாள். என்ன சொல்ல வருகிறான்? ‘‘நம்ம கதிரேசன் மாமா மவன் வெங்கடேசன் ஞாபகம் இருக்குதா’’ என்றான். ‘‘யாரு கதிரேசன் மாமா?’’ என இழுத்தாள்.

 ‘‘சரியாப் போச்சு போ. நம்ம அம்மாவோட ஒன்னுவிட்ட பெரியப்பா மவன் கதிரேசன் மாமா. பெரிசா மீச வெச்சிட்டு வெங்கல குரல்ல பேசுவாரே. கணீர் கணீருன்னு. பள்ளிக்கூட வாத்தியாரா கூட இருந்தாரே. அட இன்னமா உனக்கு ஞாபகத்துக்கு வரல’’ 

‘‘அட ஞாபகம் இருக்குது, சொல்லு சொல்லு. அவருக்கு இப்ப என்ன?’’ ‘‘அவருக்கு ரெண்டு மவனுங்க ரெண்டாவது புள்ள தான் வெங்கடேசன். அந்த வெங்கடேசன் கூட தான் நான் அபிராமிய சினிமா தியேட்டர்ல பார்த்தேன்’’

 ‘‘என்னது’’ அமராவதி நம்ப முடியாமல் பார்த்தாள்.

 ‘‘நீ நம்ப மாட்டேனு தான், உங்கிட்டச் சொல்லல.’’ என்றான்.

 அமராவதிக்கு உள்ளுக்குள் கோபம் குமைந்தது. சினிமா தியேட்டர்ல பாத்துட்டு நமக்கு ஒரு எச்சரிக்கை கூட இவன் பண்ணலயே’’ என உள்ளுக்குள் ஓடிய நினைவைத் தவிர்க்கப் பார்த்தாள். கதிரேசன் மாமா அந்தக் காலத்திலயே கூட வேல பார்த்த ஒரு வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவரைக் குடும்பத்தை விட்டு விலக்கி வைச்சிட்டாங்க... அவரு வேறு ஊருக்கு மாற்றலாகி சென்று விட்டார். அவர் குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கும் எந்த ஒட்டும் உறவுமில்லாமல் போய் விட்டது. பெரியப்பா, பெரியம்மா இறப்பிற்குக் கூட அவருக்குத் தகவல் தரப்படவில்லை. 

அமராவதியின் தாயார் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அவர்களின் மனம் மாறவில்லை. கதிரேசன் மாமாவும் ஒதுக்கப்படுவதை உணர்ந்து ஒதுங்கி விட்டார். கிட்டத்தட்ட அவரை அவர் குடும்பம் மறந்தே போய்விட்டது. அவர் தன் பங்கு குறித்து எதுவும் கேட்கவில்லையாதலால், அவரது தம்பியும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது அமராவதி எட்டாவது படிக்கும் போது நடந்தது. இப்போது அவளுடைய மகளே கல்லூரி படிக்கிறாள். ‘‘சரி உனக்கு எப்படி கதிரேசன் மாமாவையும் அவர் மகனையும் தெரியும்?’’ ஆச்சரியத்தோடு கேட்டாள். 

‘‘அத பர்வதம் கிட்டதான் கேக்கணும்’’ என்றான் . ‘‘மேரி டீச்சர் எங்க அம்மாவோட கூட படிச்சவங்க. அவங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவ வந்தப்ப, என்னை எந்த ஊர்ல கட்டிக் குடுத்திருக்குன்னு கேட்டாங்க. அப்ப இவரும் அங்கிருந்தாங்க. இவரு ஊரு, சொன்னவுடன் அவங்க துருவி துருவி கேட்டாங்க அப்பதான் தெரிஞ்சது உங்க கதிரேசன் மாமாவைப் பத்தி’’ என்றாள் பர்வதம். அமராவதி கனவா நனவா என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. பர்வதம் தொடர்ந்தாள்.

 ‘‘மேரி டீச்சருக்கு ரொம்ப நாள் கழிச்சி தான் புள்ளங்க பொறந்ததுங்க. இந்த வெங்கடேசனை நான் ஒரு தடைவ மேரி டீச்சரைக் கூப்பிட வரும் போது பாத்திருக்கேன் என்றாள்.

 ‘‘சரி அபி என்ன ஆனா’’ அமராவதி குறுக்கிட்டாள். 

‘‘அந்த வெங்கடேசன் கூட தான் அவ ஓடிப் போயிருக்கணும்’’ என்றான். ‘‘என்னது’’ ‘‘ஆமா நம்ப குடும்பத்துக்கும் கதிரேசன் மாமா குடும்பத்துக்கும் ஆகாதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதான் அப்படி முடிவெடுத்திருக்காங்க’’ என்றாள் பர்வதம். 

அப்போது யாரோ வாசலில் இருந்து அழைப்பது கேட்டது. ‘‘யாரு உள்ள வாங்க’’ என்றாள் அமராவதி. 

மோனிகா ஓரமாக நின்றிருந்தாள் யாரும் வராததால், ‘‘மோனிகா யாருன்னு பாரு’’ என்றவுடன் மோனிகா எட்டிப் பார்த்தாள். எதுவும் சொல்லாமல் மிரண்டு நின்ற மோனிகவைப் பார்த்து அமராவதி, ’’ மோனிகா யாரு அங்க’’ என்றாள்.

 இரண்டு இளைஞர்கள் முன்னால் வந்தார்கள். அவர்களை அமராவதி பார்த்திருக்கிறாள். கீழ் வீட்டு சக்திவேலுவோடு சேர்ந்து அரட்டை அடிக்கும் தோழர்கள். இவங்க இங்க எங்க’’ என்றபடி அமராவதி எழுந்தாள். அந்த சிறிய அறை மேலும் சிறியதாகி விட்டதைப் போல இருந்தது. 

‘‘என்னப்பா என்ன வேணும், உங்களுக்கு’’ என்ற படி அமராவதி முன்னே வர மோனிகா பின்னே சென்று விட்டாள். இருவரும் ஏதோ கம்யூட்டர் தொடர்பான வேலை பார்க்கிறவர்கள் போல தென்பட்டார்கள். நல்ல நேர்த்தியாக உடை உடுத்தியிருந்தார்கள். நீலக்கலரில் ஒருவன் முழுகை சட்டை போட்டிருந்தான் மற்றொருவன் கட்டம் போட்ட வெளிர் மஞ்சள் சட்டை. ஒருவன் முஸ்லீம் போல இருந்தான். 

‘‘சொல்லுங்கப்பா யாரு வேணும் உங்களுக்கு எதிர் வீட்ல சாபிரானு ஒருத்தர் இருக்காங்க அவங்கல பாக்க வந்தீங்கலா’’ என்றாள்.

 ஒருவன் வாய் திறந்தான். ‘‘இல்ல ஆண்டடி அபிராமியைப் பத்தி தான்’’ 

தன் மகளின் பெயரை உரிமையோட உச்சரிப்பதை அதிர்ச்சியோடு பார்த்தாள். எதையும் காட்டிக் கொள்ளாமல், உங்களுக்கு அவள எப்படித் தெரியும்’’ என்றாள். ஒருவன் மென்று விழுங்கினான். ‘

‘இரண்டு வருசமா கதிர்வேலு கூடத்தான் நாங்க அவங்கள பார்த்திருக்கோம். அப்பயிருந்து தெரியும்’’ என்றான் ஒருவன்.

 ‘‘கதிர்வேலுவா?’’ சிங்காரம் நாற்காலியிலிருந்து எழுந்து விட்டான். இது என்ன புது கரடி என்பதைப் போல. 

‘‘ஆமா ஆன்ட்டி. உங்க பொண்ணு அபிராமியும், கதிர்வேலுவும் ஒருத்தர ஒருத்தர் விரும்பறாங்க. ஆனா நீங்க வேற சாதி அவங்க சாதி. கதிர்வேலு அப்பா அவங்க சாதி சங்க தலைவருவேற. நிச்சயமா சம்மதிக்க மாட்டருன்னு தான்....’’ என இழுத்தான். சிங்காரம்.

 ‘‘என்னப்பா என்ன சொல்றீங்க, நான் எங்க மாமன் மவன் வெங்கடேசனோடல்ல ......’’ என்று தொடங்கியவன் அப்படியே நிறுத்தி விட்டான். ‘‘வெங்கடேசன எங்களுக்கு நல்லாத் தெரியுங்க. அவரு தான் அபிராமி கிட்ட தன் அப்பா அம்மா பத்தி சொல்லி, உங்களுக்கு உறவுன்னு சொல்லியிருக்கார்’’ அமராவதி இதை நம்புவதா வேண்டாமா என்பதைப் போலப் பார்த்தாள். தலை சுற்றுவது போல இருந்தது.

 அபிராமி கதிர்வேலுவுடனா... அவளால் நம்ப முடியவில்லை. ‘‘வெங்கடேசனுக்கு எப்படித் தெரியும் அபிராமி பத்தி’’ என்றான் சிங்காரம். 


‘‘நீங்க தான் அவங்க வேணாம்னு ஒதுக்கிட்டீங்க ஆனா அவங்க உங்க எல்லார் பத்தியும் தெரிஞ்சு தான் வைச்சிருக்காரு’’

 ‘‘வெங்கடேசன உங்களுக்கு எப்படி பழக்கம்’’ 

‘‘அவரு தான் கம்யூட்டர் சென்டர் சொந்தமா வைச்சிருக்காரு. அவங்க சென்டர்ல தான் நாங்க பழக்கமானோம்’’ அமராவதி அபி முதல் ஆண்டில் கம்யூட்டர் சென்டர் சென்று வந்தது நினைவிற்கு வந்தது. 

‘‘அடப்பாவி. இத்தன வருசமா உள்ளுக்குள்ள வைச்சிட்டு எப்படி நடிச்சிருக்கா’’ என்றாள் தன்னை அறியாமல், ‘‘இதைச்சொல்லத்தான் முதல்ல கதவைத் தட்டினோம் ஆனா யாரும் திறக்கல’’ என்றான் முதலாமவன். 

மோனிகா மலங்க மலங்க விழித்தாள். கதவைத் திறந்திருந்தால் மூன்று மணி நேரத்துக்கு முன்னரே உண்மை தெரிந்திருக்கும். யாருக்குத் தெரியும் என்னவெல்லாம் நடக்குமென்று? அமராவதி உள்ளுக்குள் கதிர்வேலு முகம் வந்து போனது. நல்ல பையன் தான் பொறுப்பானவன் தான். வீட்டிற்கு ஒரே பையன். அப்பா அம்மா இருவரும் வேலை பார்க்கிறார்கள். அபிராமிக்கு ஏற்றவன் தான். ஆனால் அவன் அப்பா இவர்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? 

அப்போது வாசலில், ‘‘அமராவதி அமராவதி’ என்ற குரல். எட்டிப் பார்த்தாள். சாபிராவின் தாய் சல்மா. சுவரைப் பிடித்தப்படி நின்றிருந்தாள். பாவம் சரியாக காது கேக்காது. சாபிரா இன்னும் வரவில்லை என போன் செய்யச் சொல்ல வந்திருக்கிறாளா? சைகையில் என்ன வேணும்னு கேட்டாள். அவள் கையில் வைத்திருந்த ஒரு தாளை நீட்டினாள். தொடர்ந்து அவளே பேசத் தொடங்கினாள். 

‘‘அமராவதி இது அபிராமி காலையில எங்கிட்ட கொடுத்திட்டுப் போனா. உங்கிட்ட கொடுக்கச் சொல்லி. ஆனா வந்ததில இருந்து நான் உன்னப் பாக்கல. உன் கதவை பல தடைவ தட்டினேன். நீ திறக்கல. அதனால என்னமோ ஏதோன்னு, இதப் படிச்சிப் பார்த்தேன். உன்மவ கீழ் வீட்டு சக்திவேலு கூடத்தான் மதுரைக்குப் போயி கல்யாணம் செய்துக்கப் போறதா கடிதம் எழுதியிருக்கா’’ அமராவதி கடிதம் முழுதும் படிக்க விடாமல், சல்மா பாட்டி தொடர்ந்தாள்.

 ‘‘பாரு எனக்குத் தெரிஞ்சி சக்திவேலு நல்ல புள்ள தான். நல்லா படிச்சிருக்கான். உத்தியோகமும் பரவாயில்லை. அபிராமிக்கு ஏத்தவன் தான். எப்படியும் நீ உம்மவள யாருக்காவது கட்டிக் குடுக்கத்தானே போற. தெரியதவங்களுக்குக் கட்டிக் குடுக்கறத விட, தெரிஞ்சவனுக்குக் கட்டிக் குடுக்கறது எவ்வளவோ பரவாயில்ல. ‘பெண்ணென்று பிறந்த போதே புருசன் பிறந்திருப்பான்னு சொல்லுவாங்க’ அபிக்குச் சக்திவேலு தான் பிறந்திருக்கானாட்டம் இருக்குது. சமைஞ்ச ரெண்டு குமரியை வச்சிட்டு புருசனில்லாமல் நீதான் என்ன பண்ணுவ? எப்பயிருந்தாலும் கட்டிக்கு குடுக்கத் தானே போற, வீட்டிலயா புள்ளய வைச்சிக்கப் போற, பொட்டப்புள்ள பொறப்பே அப்படித்தான். அவளா தேடினாத் தான் என்ன? நீயா தேடினாத்தான் என்ன? எப்படியும் வேற வீடு தான் போயி உம்மவ பொழைக்கப் போறா. அதனால சரி சரின்னு போயிரு. அதான் உனக்கு நல்லது. அவளுக்கும் நல்லது. கதிர்வேலு அப்பந்தான் கொஞ்சம் குதிப்பான். ரொம்ப சீக்கிரமே அபியோட குணத்தைக் கண்டு சமாதானமாயிடுவான். அவனோட அம்மாவும் ஒண்ணும் பிரச்சனையில்ல. இனுக்கு புனுக்குனு ஒரு வார்த்தை கூட பேசமாட்டா. நீ தான் மனச சமாதானப்படுத்திக்கணும். புள்ளங்க நால புன்ன வந்தா, கதிர்வேலு அப்பன் உள்ள விடலைனு குதிப்பான். ஆனாநீ அப்படிச் செய்யாத. பாரு சாபியும் நைட்டூட்டி போயிடறா. நான் ஒண்டிக் கட்டை. அவங்கள உங்க வீட்ல தங்க வச்சிட்டு, நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு வந்திடுங்க. அப்புறம் வேற வீடு பாத்துக்கலாம். என்ன நான் சொல்றது..... சல்மா பாட்டி அமராதியைப் பற்றி எதையும் யோசிக்காமல் படபடவென்று பேசிக் கொண்டே போனாள்

. ‘‘பாரு. சாபிரா படிக்கும் போது இப்படித் தான் ஒரு பையன விரும்பினா. ஆனா அவங்கப்பா சம்மதிக்கல, கட்டாயப்படுத்தி ஒருத்தன சொந்தத்தில் கட்டி வைச்சோம். ஒரு மாசம் கூட இல்ல காதலிச்சவன மறக்கமுடியாம திரும்ப வந்திட்டா. அவள காதலிச்ச பையனும் இன்னும் கல்யாணம் செஞ்சிக்கல. அவன் இவள கல்யாணத்துக்கு முன்னால ஓடி வந்திட சொல்லி இருக்கான். இவ அவங்கப்பாவுக்குப் பயந்திட்டு ஒத்துக்கல. சொன்னத கேக்காமல் வேற ஒருத்தன் கண்ணாலம் கட்டிக்கிட்டானு அவனுக்குக் கோவம். வாப்பாவை மீற முடியாம கழுத்தை நீட்டினாலும் வாழ முடியாத சோகம் இவளோடது. இவளுக்கு இப்ப நாப்பது வயசாகுது. இரண்டு பேரும் தனித்தனியா தான் வாழ்றாங்க. எல்லாம் என் தலையெழுத்து. தப்பு செஞ்சிட்டமுன்னு அவ வாப்பா மனசொடஞ்சி செத்துப் போயிட்டாரு. சாபிரா அன்னக்கு ஓடிப் போயிருந்தான்னா இன்னைக்கு மோனிகா மாதிரி ஒரு புள்ள இருந்திருக்கும். சந்தோசமா இருந்திருப்பா. நாந்தான் பாக்கக் கொடுத்து வக்கல. அபிராமி, தான் விரும்பின ஒருத்தனோட தான் வாழப் போறா. அது வரைக்கும் அவ எடுத்த முடிவு என்னயப் பொருத்த வரைக்கும் சரிதான்’’ என்றாள்.



( கலித்தொகை பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே; சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே; ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே! (கலித்தொகை -9 : 12-20))  --------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?