நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 21 December 2014

இன்றைய வாழ்வியலும் தமிழ்க் கவிதைகளும்


 

இன்றைய வாழ்வியலும் தமிழ்க் கவிதைகளும்

இருபதாம் நூ ற்றாண்டில் தொடங்கி வைக்கப்பட்ட புதுக்கவிதையானது, இன்று அனைத்துத் துறைகளிலும் கிளை பரப்பி விரிந்து வளர்ந்திருக்கிறது. சங்க காலத்தில் காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்தன. ஆனால் இன்று இந்த அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு பாதிப்பும் பாடு பொருளாகி இருக்கின்றன.

            
             பண்டிதர்களின் கையிலிருந்த தமிழ் பாமரர்களின் கைகளுக்கு வந்த பின்னர், புற்றீசலைப் போலப் புதுக்கவிதைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய சூழலும், சமூக மாற்றமும் புதுக்கவிதைகள் பல்கிப் பெருகக் காரணமாகிவிட்டன.
 
            இன்றைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கின்ற பலரும் தாம் உணர்ந்ததை ஏதோ ஒன்றின் வாயிலாகச் சொல்ல நினைக்கின்றனர். சமூக வாழ்வில் நிகழும் அவலங்களே ஒருவனை எழுதத் தூண்டுகின்றன. சமூக அக்கறை கொண்ட கலைஞன், வாழ்வின் முரண்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கும் போது அவனுள் ஏற்படுகின்றன உந்துதல்களே படைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. படிக்கும் வாசகர் மனதையும் அப் படைப்புத் தாக்கத்தை ஏற்படுத்திச் சிந்தனையைத் துண்டிவிடுகிறது. மக்களைச் சிந்திக்கச் செய்தலே சீர்திருத்தத்தின் முதற்படி என்பதால் தான் பாரதி எழுத்தை ஆயுதமாகவும் தெய்வமாகவும் போற்றினான்.

‘பாட்டுத்திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திட முடியும்' என்று நம்பினான். இந்த உலகத்தைப் புரட்டக்கூடிய நெம்புகோல்கள் கவிதைகளே என்பது மு. மேத்தாவின் கருத்து.
புதுக்கவிதையின் எளிய கட்டுப்பாடற்ற வடிவம் இன்றைய கவிஞர்களுக்குக் கைக்கொடுத்திருக்கிறது. கவிதை வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இவையெல்லாம் கவிதை தானா என்று கேள்விகள் எழுப்பாமல் பாடுபொருளுக்கு மட்டும் முதன்மை கொடுக்கப்பட்டதில், இன்றைய வாழ்வியல் குறித்த புதுக்கவிஞர்களின் பார்வைகள் இவ்வாறு இருக்கிறது.

1. இன்றைய கல்விச்சூழல் - தமிழ்க்கல்வி
2. சுற்றுப்புறச் சீர்கேடு
3. உலகமயமாதலின் விளைவுகள்
4. விளிம்பு நிலை மனிதர்களை மையப்படுத்துதல்
5. ஊழல், இலஞ்சம், சாதி
6. காதல், குடும்ப உறவுகள்
7. அந்நிய மோகம், கலாச்சாரச் சீரழிவு
8. ஊடகச் செல்வாக்கு
9. அரசியல் விளையாட்டில் மக்களின் நிலை
10. உலகத்தமிழர் நிலை

விரிவுக்கு அஞ்சி பட்டியலை இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன். சங்கப்பலகை போல இந்தப் புதுக்கவிதைப் பலகையும் இன்னும் நீள்கிறது.

இந்தக் கவிதைகளில் எளிய நேரடியான கவிதைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு இவை என்னதான் சொல்கின்றன? என ஆராய்ந்ததில். . .

நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் கூறுகிறோம் அல்லவா? உலகம் மாறிவிட்டது, மனிதன் மாறிவிட்டான், மதிப்புகள் மாறிவிட்டன என்று....... இந்தப் புதுக்கவிதைகளும் வாழ்வியல் மாற்றத்தையே பேசுகின்றன.

இந்த மாற்றம் சரியா? இது நன்மையா? தீமையா?
தவறு எனில் நாம் மரபை நோக்கித் திரும்ப வேண்டுமா?
சரி எனில் நவீனத்துவத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதா?
ஏதாவது தீர்வு கூறப்பட்டுள்ளதா இக்கவிதைகளின் வழியே. . .

     இன்றைய கல்வி நிலை



கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புதினும் கற்கை நன்றே என்றது அந்தக்காலம்.
இன்று வீடு, வாசல், சொத்து எல்லாவற்றையும் விற்றுத்தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது. உயர்தரப் பள்ளிகள் என்று கூறிக்கொள்பவை எல்.கே.ஜி. படிப்பிற்கு 1 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றன.

""அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னையாவிஇம் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்""

என்ற பாரதியின் வாக்கைக் காரணமாக்கிக் கொண்டு, ‘ஆங்கோர் ஏழையை எப்படியாவது கடனாளியாக்குவது’ என்று கல்வி நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன.

‘அறிவு பணிவைத் தருகிறது. செல்வம் பகட்டைத் தருகிறது’ என்பது ஆன்றோர் மொழி. ஆனால், இன்று கல்வி கற்றவன் தன்னை உயர்வாகக் கருதி தன் பழைய மரபுகளை, மரபு சார்ந்தவர்களைத் தாழ்வாகக் கருதி அந்நிய பகட்டு வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறான். இன்றைய கல்வி முறை ‘சுயத்தை’ தேட கற்றுக் கொடுப்பதில்லை. சுயத்தைத் தொலைக்கவே கற்றுக்கொடுக்கிறது.

அரசு பள்ளிகளில் சீருடைகளின் வண்ணங்கள் பெரும்பாலும் மாற்றப்படுவதில்லை. ஆனால், தனியார் பள்ளி நிறுவனங்கள் துணிக்கடை நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு, வருடந்தோறும் புது வண்ணங்களை அறிமுகப்படுத்துகின்றன. ஓராண்டு பயன்படுத்திய சீருடையை அடுத்த வருடம் உடுத்த முடியாது. அண்ணன் உடுத்தியதை, தம்பி அடுத்த வருடம் உடுத்த முடியாது. அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை சீருடை, விளையாட்டுச் சீருடை, பொதுச் சீருடை என மூன்றுவித காலணி, காலுறைகள் எனச் சீருடைகளின் எண்ணிக்கையும் மிகுதி. பள்ளிகளில் தருவதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற கட்டாயமும் உண்டு. படித்த பின் வேலை கொடு வேலை கொடு என்று பிள்ளைகள் பிச்சை எடுக்கின்றார்கள்.
இலட்சக்கணக்கில் செலவழித்துப் படிக்கவைக்கும் பிள்ளைகளுக்குக் கல்வி முறையாகக் கொடுக்கப்படுகிறதா?

‘இன்றைய கல்வி முறை கையெழுத்துப்போடத்தெரியாத மரங்களைத்தானே உருவாக்குகிறது. விதைகளைப்போல் தூவப்படவேண்டிய அறிவு ஆணியைப்போல் அறையப்படுகிறது‘என்கிறார் கவிஞர் வைரமுத்து. கவிஞர் மு. மேத்தாவோ, ‘கல்வி இங்கே இதயத்தில் சுமக்கும் இனிமையாய் இல்லாமல் முதுகில் சுமக்கும் மூட்டையாகி விட்டதால், குழந்தைகளெல்லாம் கூனிகளாகிவிட்டனர்‘என்கிறார்.

சென்னை பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட நிரம்பாத ஒரு மாணவன், படிக்கச் சொன்னதற்காக ஒரு ஆசிரியையைக் கொலை செய்திருக்கிறான். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவையும் வணங்கிய பரம்பரை எப்படிக் குருவைக் கொலை செய்தது? இந்தக் கலாச்சாரம் எப்படி வந்தது? இதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? ஏன் இப்படி நடந்தது? இது தனிநபர் சிக்கலா இல்லை ஒட்டுமொத்த கல்விச் சூழலையும் கேள்விக்கு உள்ளாக்கிற சிக்கல். ஒவ்வொரு முறை +2 தேர்வு ரிசல்ட் வருகிற போதும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது வழக்கமாக நடக்கும் நிகழ்வு போல் நாமும் மெத்தனமாய் அடுத்தத் தகவலுக்குத் தாவிப்போய் விடுகிறோம். இதிலே பெரிய கொடுமை ஒரே பிள்ளை போதுமென்று நிறுத்திக் கொண்டவர்களின் நிலைமை தான் பரிதாபம். இப்படித் தொடரும் மரணங்களுக்கு யார் காரணம்?
1. பெற்றோர் தாம் அடையாத ஒன்றை தன் மகனோ, மகளோ பெற வேண்டுமென்று நிலையங்களை நாடுகின்றனர்,
2. கல்வி நிறுவனங்கள் பெருந்தொகையை வாங்கிக்கொண்டு, நூ று விழுக்காடு தேர்ச்சி, முதல் மதிப்பெண், இலாபநோக்கு இவற்றைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்களை நெருக்குகின்றனர்.
3. ஆசிரியர்களோ மாணவர்களை நெருக்குகின்றனர்.
4. பாடத்திட்டம் தயாரிப்பவர்களோ கல்வித்தரத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு, கூடுதலான பாடச்சுமைகளைத் தருகின்றனர்.
5. இயல்பாகவே நன்றாகப் படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறனோடும், மதிப்பெண்ணோடும் மாணவர்கள் ஒப்பிடப்படுகிறார்கள்.
அபிமன்யு எதிரிகளின் படையில் மாட்டிக் கொண்டதைப்போல, மாணவர்களும் கல்வி என்னும் பெயரால், சக்கரவியூகத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகி மன அழுத்தம் ஏற்படுகிறது. மாணவன், மன அழுத்தம் தாங்காமல் ஒன்று தற்கொலை செய்து கொள்கிறான். இல்லையேல் கொலை செய்துவிடுகிறான்.

எனவே தான் தமிழன்பன், ""கரியை பூமி வைரமாக மாற்றுகிறது/ எமது கல்வி நிலையங்களோ வைரங்களைக் கரிகளாக்கித் தருகின்றன/ தேர்வுகளை விட/ இந்தத் தேசத்தில் வன்முறை சம்பவம் எதுவும் கிடையாது/ தேர்வு நாள்களில் இரவு முழுவதும் எரிவது விளக்குகள் மட்டுமல்ல/ எங்கள் மாணவர்களும் தான்"" என்று வேதனைப்படுகிறார். (தமிழன்பன் கவிதைகள், பூம்புகார்ப்பதிப்பகம்)


                                 ஆசிரியர் மாணவர் உறவு சென்ற தலைமுறையைப்போல, இந்தத் தலைமுறையினரிடம் காண முடிவதில்லை. கவிஞர் கு. கணேசன் ‘அகர’ விதை ஆலமரமாய்க் கிளைக்க அப்பு வாத்தியார் எனது எழுத்து வடிவில் நானெழுதும் தமிழுக்குள் என்கிறார்"".கு.கணேசன் கவிதைகள்,காவ்யா பதிப்பகம்) மாதா, பிதா, தெய்வத்தைப் போற்றிப் பார்த்திருக்கிறோம். ஆனால், குருவைப் போற்றும் பண்பு, பல ஆண்டுகள் கடந்தும் இவரிடம் காணப்படுகிறது. சேலம் குருசாமிப்பாளையத்தில் அரசு பள்ளியில் படித்து நல்ல நிலையிலுள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியருக்கு வீட்டு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். சென்ற தலைமுறையினர் ஆசிரியர் மீது வைத்திருந்த பாசம், நம்பகத்தன்மை இந்தத் தலைமுறை மாணவர்களிடம் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? புரியாத கல்வியைத் திணிக்க வைக்கும் முயற்சியில் ஆசிரியரும் தான் நொந்துபோய் இருக்கிறார். புரியாததைப் படிக்கச் சொல்லி நெருக்கும் மாணவருக்கு, ஆசிரியர் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அப்படிச் சிரமப்பட்டுப் படித்தாலும் வேலை கிடைப்பது இல்லை.

‘மம்மர் அறுக்கும் மருந்தாக இருக்க வேண்டிய கல்வி’ இன்று பிணியாக மாறிப்போய் இருக்கிறது. தன் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் பெற்ற கல்வி, வேலையில்லா பட்டதாரிகளை, கடனாளிகளை மட்டுமே உருவாக்கி உள்ளது.
எனவேதான், வைரமுத்து ‘பல்கலைக்கழகங்கள் வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்’ என்றும் மூக்குக்கண்ணாடியில் முதலீடு போட்டதால் இலாபம் பெற்றவர்கள் தான் அதிகம் இக்கல்வியால் அதிகம் என்றும் கூ றுகிறார். வேலையற்ற பட்டதாரிகள் பாதை மாறிச் செல்லும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
புதுக்கவிஞர்கள் தற்காலக்கல்விச் சூழலுக்கான காரணத்தையும் தீர்வையும் முன்வைக்கின்றனர்.

1. வேலைக்காகக் கல்வி என்ற குறுகிய மனப்பான்மை - கல்வி உள் ஆற்றலை, மனதை மேம்படுத்துவதற்காகத் தான் என்பதை உணராதது.

2. தாய்மொழி வழிக்கல்வி புறக்கணிப்பு - புரியாத மொழியில் படிப்பதால் மதிப்பெண் கிடைக்கும். ஆனால், வேலை கிடைக்காது என்பதை உணராதது.

3, ‘குருவி தலையில் பனங்காய்’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். பனங்காய் அல்ல பனைமரங்களே ஏற்றப்பட்டிருக்கின்றன என்பதை உணராதது. யாருக்கும் பயனில்லாத பார்க்க மட்டுமே கவர்ச்சியாகத் தோன்றி கண நேரத்தில் மறைந்து விடும் நீர்க்குமிழி தற்காலக் கல்விமுறைக்குச் சிறந்த உதாரணம் ஆகும்.

‘படிப்பறிவோடு உலக ஞானத்தையும் கையில் தரும் படிப்பே சிறந்த படிப்பு’ என்கிறார் கவிஞர் கு. கணேசன். அப்படியில்லாததால் திரும்பி வரும் வழியை மறந்துவிட்ட மாலுமியைப்போல மாணவர் தென்படுகின்றனர். ஒரு மாணவன் சொல்கிறான், ‘எங்களை என்ன படிக்கிறோம் எனச் சிந்திக்க வையுங்கள் ஏன் படிக்கிறோம் என வேதனைப்பட வைக்காதீர்கள்’. உங்கள் சுயநலத்திற்காக எங்கள் வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள் என்று ஒருபுறம் கல்வியைச் சுமையாகக் கருதும் கூட்டம் மறுபுறம் வறுமையினால், கல்வி கிடைக்காதா என ஏங்கும் கூட்டம். கல் உடைக்கும் தொழிலாளியைப்பார்த்து ஒரு கவிஞன் கேட்கிறார்.

""சின்னச்சிறுசெண்டுகளா/ செவ்வந்திச் செண்டுகளா
கால் மொளைக்கு முன்னாலே/ கல்லொடைக்க வந்தீர்களா?
இளமையில் கல்லென்று சொன்னது யார் கூப்பிடுங்க""

பஞ்சு, தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் குழந்தைகளைக் கேட்கிறார் மற்றொரு கவிஞர்.

""தலைவாரி பூச்சூடி நீதான்
தொழிற்சாலைக்குச் செல்வாயோ கண்ணே
பிஞ்சு விரல் பஞ்சதனைப் பிரிக்கும்
தளிர்க்கைகள் தீக்குச்சி அடுக்கும்
என்று அது எழுதுகோலைப்பிடிக்கும்""

கல்விச் சூழல் தனியார் மயமாகிவிட்டதால், படிப்பதற்குச் செலவிட்டு, வேலை கிடைக்காமல் கடனாளியாகி, படித்துப் பயனில்லை எனக் குழந்தைகளை வேலைக்கனுப்பும் இன்றைய சூழலை புதுக்கவிஞர்கள் நன்றாகவே படம் பிடித்துள்ளார்கள்.

   சூழல் சார்ந்த சிந்தனைகள்

 
இன்று பற்பசையிலிருந்து காலில் அணியும் செருப்பு வரை எல்லாமே செயற்கைப் பொருட்கள்தான். கடலில் குப்பை மலைகளை எழுப்பி விட்டு, கரைகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். ஏரிகளையெல்லாம் பேருந்து நிலையங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் தினத்தந்தி நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. ‘பிளாஸ்டிக் மீன்’ என்பது தலைப்பு. ஏதோ அலங்கார மீன்களைப் பற்றிய கட்டுரை என நினைத்துப் படித்தால், நிஜ மீன்களைப் பற்றிய அதிர்ச்சி தகவல். கடலில் கொண்டு சென்று கொட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மீன்களின் உடல் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி விடுகிறதாம். பிளாஸடிக் எளிதில் செரிக்காததால், மீன்கள் உடலிலேயே தங்கி விடுகிறதாம், கழிவு வெளியேறுவதும் இல்லையாம். இதனால் கடலிலுள்ள பெரும்பாலான மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த மீன்களாகவே கடலில் உயிர் வாழ்கின்றனவாம். இந்த மீனைத்தான் மனிதர்கள் உண்கின்றனர்.

தொழிற்சாலை, வாகனப்புகைகளினால் வானத்தையும் ஓட்டை போட்டு விட்டோம். புவி வெப்பம் அதிகரித்துப் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கும் நிலை வந்துவிட்டது. நெதர்லாந்து, பங்களாதேஷ், அமெரிக்கா போன்றவை மூழ்கிவிடக்கூடிய நிலையில் உள்ளன. அடுத்த மூன்றாம் உலகப்போர் குடிநீருக்காகத்தான் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இன்குலாப்,

‘வருகிற வழியில் நின்ற மலைகளைக் காணோம்
ஊர்ந்த தடத்தில் நிறைய ஊர்களைக் காணோம்
நெளியும் வளைவில் வற்றாத நதிகளைக் காணோம்
வெண்தலை நாணல்களில் மணல்களைக் காணோம்
கடலையும் கரை மணலையும் குடித்தபடி
படுத்துக்கிடக்கிறது நாகரிகம்’ என்கிறார்

‘வெட்ட இனி மரமில்லை
வெட்டியாய்க் கிடக்கும்
கோடாரி முனையில்
முதுகு சொறிந்து கொள்கிறது
எருமை மாடு’ (கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், )


இந்தக் கவிதை எருமை மாடு சொறிந்து கொள்வதற்குக் கூட மரங்கள் இல்லாத சூழலின் வெறுமையைச் சுட்டுகிறது. ‘மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள் ஏதப்பா ஏரி’ என்கிறார் மு. மேத்தா. மரம் வளர்ப்போம் என இயக்கம் அமைத்து, மரங்களை நட்டாலும் அவற்றை வளரவிடாமல் பிளாஸ்டிக் குப்பைகள் தடுத்து விடுகின்றன.
மண்ணை மாசுபடுத்தும் நவீட்ன எதிரிகளில் பிளாஞ்டிக் முதன்மையானது.

1. மழைநீரை மண் உறிஞ்சாமல் தடுக்கிறது.
2. வேர்கள் மண்ணில் ஊன்ற முடியாமல் தடுக்கிறது.

""பிளாஸ்டிக் படலத்தை
நெடுநேரம் துளைத்து
இணைப்புக் குழாய்களுடன்
இறுதிவரை போராடித்
தரையிறங்கித்
தண்ணீர் உறிஞ்சுகையில்
வீரியமிழந்து விடுகின்றன வேர்கள்""

(கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், பறையொலி,காந்தள் இலக்கிய அமைப்பு,சேலம்)

நம் கண்முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தைப்போலவே, இயற்கையும் நம்மைவிட்டு நீங்கியபடி இருக்கிறது. இந்நிலை நீடித்தால் என்ன ஆகும்? தேவதச்சன் விடை தருகிறார்.

""கடைசி டினோசர்
ஒற்றையாய் நின்று கொண்டிருக்கிறது
விஷக் கற்றாழையைக் குனியும்
அதைப் பார்த்துப் பறவைகள் கத்தின
எங்களுக்கு உணவு வேண்டும்
சீக்கிரம் செத்துப்போ சீக்கிரம் செத்துப்போ"" (கடைசி டினோஸர்,உயிர்மை பதிப்பகம்)

இந்தநிலை மனிதர்களுக்கு நேர வெகு நாட்கள் இல்லை. ஏனெனில் இந்தப் பூமிப்பந்து இதுவரை கண்டிராத பேரழிவை மனிதன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். ‘நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் வழங்கவேண்டிய ஒரே சொத்து வளமான பூமியாக இருக்கட்டும்’ என்பார் அணுவிஞ்ஞானி ஜெயபாரதன். சுற்றுச் சூழல் சீரழிவிற்கு முதன்மைக் காரணம் அந்நிய கலாச்சார மோகம். குழந்தைகள் உண்ணும் உணவிலிருந்து இன்று நாம் பயன்படுத்திவரும் அத்துணைப் பொருட்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள்தான்.

மான்சான்டோ கண்டுபிடித்த மரபணுமாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தி ஆயிரக்கணக்கில் விவசாயிகளைக் கொன்றது. பி.டி. கத்தரிக்காயும் இந்திய விவசாயத்தைக் கொல்வதற்குக் காத்திருக்கிறது. ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்த விதைகளை மீண்டும் அந்நிய நிறுவனங்களிடமிருந்து தான் வாங்க வேண்டும்.

 
வெள்ளரிக்காய் /
வெள்ளைப் பூண்டு
வெங்காயம் /
விளைவிப்பது எப்படிகேட்கிறான்
இந்திய விவசாயி பதில் கிடைக்கிறது
இந்திய மண்ணிலுள்ள
அந்நிய நிறுவனத்தில் பெற்றுக்கொள் என.

பன்னாட்டு நிறுவனங்கள் கைத்தொழில்களையும், சிறு தொழில்களையும் விட்டுவைக்கவில்லை. ஒரு தோழி சொல்கிறாள்,

“அன்றன்று மலர்கின்ற
வெளிநாட்டு மலர்கள்
எல்லாம் என் வரவேற்பறை வந்தாச்சு /
அல்லியும் தாமரையும்
எங்கே போச்சு /
அட அவை என்னதான் ஆச்சு?

பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல மதிப்பு. திருமணச் சந்தையில் நல்ல வரவேற்பு. ஆனால், சேதுபதி இதை வேறுவிதமாகப் பார்க்கிறார்.

“சீதை வேலைக்குப் போகிறாள்
மாருதி வந்து தூக்கிப்போகிறது
சம்பளம் கொடுப்பது இராவணக் கம்பெனி.”( சொ. சேதுபதி, சீதாயணம் (2005))

சீதை - இந்தியப்பெண், மாருதி - மாருதி 800 , இராவணன் - அந்நிய நிறுவனம்.

அன்று சீதை இராமன் வந்தால்தான் வருவேன், மாருதியுடன் செல்லமாட்டேன் என்றாள். ஆனால், இன்றைய சீதை மாருதியில் ஏறி இராவணக் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறாள். பெற்றோரும் இச் சமூகமும் இதைப் பெருமையாக நினைக்கின்றனர். அந்நியக் காலாச்சார மோகத்தால் நாம் நம் சுயத்தை இழந்ததோடு அல்லாமல், அதைப் பெருமையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இந்தக் கவிதைகள் காட்டி நிற்கின்றன.

முடிவுரை

இன்றைய புதுக்கவிஞன் புற உலகை மிக நுட்பமாகக் கவனிக்கிறான். கேள்விகள் கேட்கிறான். விசாரணை செய்கிறான். தன் வாழ்க்கையில் தவிர்க்கவியலா மாற்றங்களை விளைவிக்கும் காரணிகள் மீது கவனத்தைக் குவிக்கிறான். இந்த மாற்றங்களால் ஏற்படும் நன்மை தீமைகளை அலசுகிறான். சமூகத்தின் கவனத்தைத் தன் கவிதைகள் மூலம் அம்மாற்றங்களின் மீது குவிக்கிறான். சிந்திக்க வைத்து சீர்திருத்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும் எனச் சிந்திக்க வைக்கிறான். சீரழிந்து வரும் நமது பண்பாட்டுச் சூழலை மறுபரிசீலனைச் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்துகிறான். இவை புற்றீசல்கள் போல் பெருகினாலும், இன்னும் பெருக வேண்டும் என்பதே தமிழ் உலகின் அவா.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?