முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Sunday, 21 December 2014

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால்வள்ளுவர் முப்பால் அறத்துப்பால் உரையும்உரைவும்-2012  பேரா.தி.முருகரத்தனம்.
 திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் பத்துப் பேர் என்பது மரபு. அவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், மல்லர், திருமலையர், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் என்போர். இவர்களுள் மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் என்னும் ஐவரின் உரைகளே முழுமையாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் முதன்முதலில் அச்சேறிய உரை பரிமேலழகர் உரையாகும்.வைதிக சமயம் சார்ந்தும், இலக்கண நுட்பங்கள் நிறைந்தும் இருந்ததால் திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையேசிறந்தது என்ற எண்ணப்போக்கு நிலவியது.
சமணர்களான மணக்குடவர், காளிங்கர் உரைகளும், சைவரான பரிதியார் உரையும் புறக்கணிக்கப்பட்டு, ஒருவகையில் மறைக்கப்பட்ட நிலை இருந்தது.
இதனால் பரிமேலழகர் உரையை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் என்னும் நிலையிலிருந்து மாறித்  திருக்குறளுக்கு உண்மையான உரை காண வேண்டும் என்ற உந்துதல் தமிழருக்கு ஏற்பட்டது. இதனால் எழுச்சி உருவாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 1917ம் ஆண்டு மணக்குடவர் உரையில் அறத்துப்பாலை வெளியிட்டார். தனித்தமிழ் உணர்வு மேலோங்கியது.  

பேரா.தி.முருகரத்தனம் அவர்கள் வ.உ.சி யின் வழி நின்று வள்ளுவரின் அறத்துப்பால் குறட்பாக்களைக் கொண்டு அவர் காலச்சூழலை, சமயச்சூழலை நுண்ணிதின் ஆராய்ந்து தமிழரின் ஒப்பற்ற நூலான திருக்குறளின் உண்மைப் பொருளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்கிற உந்துதுலோடு ள்ளுவர் முப்பாலின் அறத்துப்பால் 34 அதிகாரங்களுக்கு மட்டும்   உரை வகுத்துள்ளார்.

வள்ளுவர் முப்பாலையும் வாழ்க்கையின் முதற்பாலாகக் கருதியவர். அறம், பொருள்,  இன்பம் இதை மூன்றையும் சமமாகக் கருதியவர். இம்மூன்றும் ஒருவருடைய வாழ்விற்கு இன்றியமையாதவை என்பதே அவர் கருத்து. இந்த வையக வாழ்விற்கு அறம், பொருள், இன்பம் என்ற மூன்று மட்டும் ஏற்புடையது. ஆனால், சமயச்சார்புடைய உரையாசிரியர்கள் தன் சமயக் கருத்துக்களை முப்பாலின் கருத்துக்களாகக் கூறிவிட்டனர். இதைப்பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர்குறட்பாக்களின் அனைத்துச் சொற்களுக்கும் உரை அமைதல் வேண்டும்என்கிறார். (முன்னுரை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளதைப் பிறர்க்கென்னாது தானும் முன்னின்று செயல்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வள்ளுவரின் முப்பால் மீது ஏற்றப்பட்ட சமயக்களிம்புகளை நீக்கி, தமிழர்களுக்கு அவர்களின் அடையாளத்தைக் காட்டி, வள்ளுவரை, வள்ளுவராகவே வெளிப்படுத்தியிருக்கிறார். உயர்வு தாழ்வு வைதிகத்தார் நோக்கு; நடுநிலை நோக்கு வள்ளுவர் நோக்கு; வள்ளுவர் வமியில் நின்று நடுநிலை நின்றே உரைத்துள்ளார் பேரா. தி.முருகரத்தனம். இல்வாழ்க்கை, ஊழ் அதிகாரங்களுக்கு மட்டும் பேராசிரியரின் கருத்து இங்கு சுட்டப்படுகிறது.இல்வாழ்க்கை  : மனைவி, மக்கட் செல்வங்களுடன் இனிதாக இல்லத்தில் வாழும் அற வாழ்க்கையே இல்வாழ்க்கை. இது பலவகையான வாழ்க்கையினும் மேன்மையுடையது என்பதாலேயே, இவ் வாழ்வானிற்குரிய கடமைகளை வள்ளுவர் குறிப்பிடுவதாகப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். இப்பகுதியில் மாறான பிற வாழ்க்கை முறைகளில் முயல்வார் அனைவரினும் தலைமை சான்றவன் இல்வாழ்வானே என்பதே வள்ளுவர் கருத்து எனக் கூறி வீடுபேற்றை நோக்கிய தவமுனிவரை மேலானவர்களாகக் கருதும் போக்கு வள்ளுவரிடம் இல்லைஎனத் தெளிவாகக் கூறுகிறார். அறநெறியில் நின்று இல்வாழ்க்கை நடத்தி வையக வாழ்வின் பயனைப் பெறுதலல்லாமல், துறவறத்தில் என்ன பயன் இருக்கிறது. தவத்தைவிட இல்வாழ்வே வலிமையானது, அறவழியில் ஈட்டலும் ஈதலும் உடைய இல்வாழ்வான், இயல்புடையவர்க்கும், ஐம்புலத்தார்க்கும் உதவுவதால் வானுறையும் தெய்வமாகக் கருதப்படுவான் என்பதே வள்ளுவரின் கருத்து என உறுதிபடத் பேரா.தி.முருகரத்தனம்  கூறுகிறார்.


ஊழ்  : ஊழ் என்பது முறை; ஊழ் என்பது பழந்தமிழில் முதிர்தல், வளர்தல், முறைப்படுதல் என்னும் பொருண்மையுடையதாக உள்ளது. பேரா.திமுருகரத்தனம் இதை அறக்கருத்தியலாக வள்ளுவர் வகுத்துக் கொண்டார் என்கிறார். சோம்பலும்,முயற்சியும், அறிவும்,அறியாமையும் போன்று இருவேறு முரண்பட்ட ஊழ்ப் பிறழ்ச்சிகளை என் செய்யலாம் என வினா எழுப்பி விடை தேடும் வகையில் உள்ள இப்பத்தினை ஆள்வினையுடைமைப்‘ பத்தோடு வைத்துப் பாத்தலே தக்கது என்கிறார். ஊழை வினை, கர்மம் எனப் பரிமேலழகர் கருத, ஆகிற காலம், அழிகிற காலம் எனப் பரிதியார் கருத, பால் பகுதி அல்லாதவை என்பர் மணக்குடவர். இவர்களுடைய உரைகள் சமயச் சார்புடையன; கடவுட்கொள்கை உடையன; ஆனால் வள்ளுவர்க்குக் கடவுட்கொள்கை இல்லை; பரிமேலழகர் எத்தனையோ கருத்தியல்களைத் தம் உரையில் கொண்டு வந்து குறட்பாக்களின் கருத்துக்கள் என உரைக்கிறார். இவற்றை நீக்கி பழந்தமிழர் கொள்கை வழி வள்ளுவரின் முப்பாலை ஆராய வேண்டும் என்கிறார் பேரா. தி.முருகரத்தனம்.

  முப்பாலை இனித் தமிழர் திணிப்பும் சிதைப்பும் நீக்கிக் குறட்பாக்களை மட்டும் கருத்தில் கொண்டு ஆராய்தல் வேண்டும். அதுவே தமிழரைத் தமிழர்என்று சொல்வதற்கான அடையாளம் ஆகும் என்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?