நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday, 8 July 2020

நாளும் நாளும்.....



                               
நாளும் நாளும் ...
                டீரிங் டிரிங் ..... தெலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருந்தது. இந்த அர்த்த ராத்திரியில் தொலைபேசி சத்தம் கேட்டவுடன் பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. யாருக்காவது ஏதாவது ஆகியிருக்குமா? பக்கத்திலிருந்த கணவருக்குக காது கேட்கவில்லையா? வெளியே ஹாலில் மாமியார் எழுந்து ஹலோ யாருஎன்று கேட்பது கேட்டது. குழந்தை இடையில் கவிழ்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் வலது கை அவளுடைய நைட்டியினை இறுக்கிப் பிடித்திருக்கிறதா எனக் கையைத் தொட்டுப் பார்த்தாள். தூக்கத்தில் துணியை விட்டு விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.
                அறைக் கதவை மாமியார் தட்டி பவானிஎன மெதுவாக அழைப்பது கேட்டது. சட்டென எழுந்தாள். அடுத்த முறை தட்டினால் குழந்தை எழுந்துவிடும். அப்புறம் அன்னிக்குச் சிவராத்திரி தான். கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
                அவளைப் பார்த்தவுடன், ‘காலேஜீல இருந்து யாரோ பன்றாங்கம்மாஎன்று தொலைபேசியைக் காண்பித்தாள்.
ரிசீவர்     தள்ளி வைத்திருந்தது.
 சரிங்கம்மா நீங்க போயி படுங்க. இன்னேரத்தில யாருஎன்றபடி போனருகில் சென்றாள்.
                காலேஜீல இருந்து போன் என்றதும் கொஞ்சம் படபடப்பு குறைந்து இருந்தது. நல்ல வேளை உறவினர்களிடமிருந்து எதுவும் போன் வரவில்லை என நிம்மதியாக இருந்தது.
நேரம் இரவு பதினொன்று எனக் கடிகாரம் காட்டியது. ரிசீவரை எடுத்தாள். ஹலோ யாருங்கஎன்றாள்.
அம்மா, நான் பியூன் முனியப்பன் பேசறம்மா. நீங்க பவானி அம்மா தானேஎன்றது எதிர்த்தரப்புக் குரல்.
"ஆமா, சொல்லுங்க என்ன இன்னேரத்துக்கு’’ என்றாள்.
"அம்மா இங்க சாயந்திரத்திலிருந்து கரண்டு இல்லம்மா. இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னால வந்தது. மேலே லேப்ல ஒரே கடமுடன்னு சத்தம். எதையோ அமிக்காமப் போயிட்டாங்க போல. காலேஜ் சாவி உங்ககிட்டத் தான இருக்குது. இன்னிக்கு உங்க முறை தான்னு போன் பண்ணம்மா’’ என்றாள்.
"என்ன லேப்ல கடமுடன்னு சத்தமா. மேலே ஹோம் சயின்ஸ் லேப் தான் இருக்குது. கிரைண்டரையோ எதையோ ஆஃப் பண்ணாம விட்டுருப்பாங்கன்னு நினைக்கறேன். இன்னிக்கு என் முறை தான். ஆனா சாவி எங்கிட்ட இல்லையே’’ என்றாள். பதட்டம் அவளைத் தொற்றிக் கொண்டது.
கல்லூரியில் உள்ள அனைத்து அறைகளின் சாவிகளையும் முதல்வர் அறையிலுள்ள சாவிப் பெட்டியில் வைத்து அதைப் பூட்டி அதன் சாவியை முதல்வர்அவர்களின் இழுவை மேஜையில் வைப்பது வழக்கம். முதல்வர் அறையின் சாவியை துறைத் தலைவர்கள் கல்லூரிக்கருகில் இருப்பின் அவர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.
அது ஒரு முதல்வரின் தொகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரி ஊருக்குத் தள்ளி வெகு தொலைவில் இருந்தது. முறையான போக்குவரத்து வசதிகள் கிடையாது. அக்கம் பக்கத்தில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் எந்தக் கடைகளும், வீடுகளும் கிடையாது. அத்துவானக் காட்டில் கட்டி வைத்திருந்தார்கள். காலை 8.30 மணியளவில் ஒரு டவுன் பஸ் அந்தக் கல்லூரியைக் கடக்கும். திரும்ப ஒன்பது மணிக்குத் திரும்பப் போகும். மீண்டும் மாலை ஜந்து மணிக்குக் கல்லூரியைக் கடக்கும் திரும்ப ஆறரைக்குத் திரும்பிப் போகும். இந்த இரண்டு நேரங்களுமே கல்லூரியில் உள்ள யாருக்கும் ஒத்து வரவில்லை. கல்லூரி பத்து மணிக்குத் தொடங்கும். 8.30 மணிக்கு யார் வந்து கேட்டின் வெளியே காத்திருப்பது. பியூன் முனியப்பன் அரை மணி நேரத் தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில் இருந்தான். சரியாக ஒன்பதரை மணிக்குத் தான் கடகடவென ஓசையெழுப்பும் சைக்கிளில் உடலெங்கும் வேர்வை வழிய வருவான். கிட்டத்தட்ட ஜம்பத்தைந்து வயதிற்கு மேலே இருக்கும்.
மாலை நான்கு மணிக்குக் கல்லூரி முடிந்து விடும். ஐந்து மணிக் கெல்லாம் முனியப்பன் கேட்டை இழுத்து மூடி விட்டு, மீண்டும் சரியாக இரவு பத்து மணிக்கு இரவுக் காவலுக்கு வருவதுண்டு.
புதிதாக ஆரம்பித்த அந்தக் கல்லூரியில் இரவுக் காவலர் நியமிக்கப்பட்டிருந்தும், இரவுக் காவலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனதால், முதல்வர் கெஞ்சிக் கேட்டதினால் தற்காலிகமாக முனியப்பனே வந்து கொண்டிருந்தார்.
இரவுக் காவலர் ஓடிப் போனதற்கானக் காரணத்தைக் கல்லூரியில் ஓரிருவரே அறிவர். பவானிக்குக் கூட, தாமதமாகத் தான் முனியப்பன் மூலம் தெரிந்தது.
 இரவுக் காவலன் மாரிமுத்துக்கு ஒரு வாரம் ஒரு சிக்கலுமில்லை. தன் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து அங்கேயே மூன்று கல் வைத்து. சோறு பொங்கிக் சமைத்துச் சாப்பிட்டு, இரவுக் காவலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மிலிட்டரியில் ரிட்டயர் ஆகி பத்து வருடத்திற்கு மேலாகி விட்டது. என்றாலும், மிடுக்குக் குறையாமல் இருந்தான். பெரிய மீசை, இராணுத்தினர் உடுத்தும் பச்சைக் கலர் சட்டை, சிவந்த கண்கள், மிடுக்கான நடை, முதல்வருக்கு மட்டும் சல்யூட் எனத் தன் உலகில் வாழ்ந்து வந்தான்.
அவன் ஊர் முனியப்பன் ஊரைப் போல இல்லாமல், மூன்று மணி நேரத் தொலைவில் இருந்தது. மாலை நேரத்தில் அத்துவானக் காட்டில் அவ்வளவு தொலைவு வருவது சிரமமாக இருந்தது. திரும்பக் காலை எழுந்து செல்வதும் சிரமமாக இருந்தது. அதிலும் ஒரு டீத் தண்ணி கூட கிடைக்காத அந்த இடத்தில் வெயில் காலத்தில் அதிக வெயிலும், பனிக் காலத்தில் அதிக பனியும் இருந்த ஆள் அரவமற்ற அந்தக் கல்லூரியில் அவனுடைய பேச்சுத் துணைக்காக மனைவியை அழைத்து வர அனுமதி கேட்ட போது முதல்வர் அனுமதிக்கவில்லை. பின் அவன் அதிகமாக நச்சரித்ததால், வேறு வழியில்லாமல், மனிதாபிமானத்தோடு ஒத்தக் கொண்டதினால் குழந்தைகளில்லாத மாரிமுத்து மனைவியையும் உடன் அழைத்து வந்து விட்டான்.
மாரிமுத்தவின் மனைவி பகல் நேரத்தில் கல்லூரிக்கு வெளியே இருக்கும் இடத்தைத் தூய்மைப் படுத்திச் சுத்தமாக வைத்திருந்தாள். பாம்பு புத்து ஏராளமாக இருப்பதை அவள் தான் கண்டு பிடித்துச் சொன்னாள். எங்கிருந்தோ மாங்கன்னு, நாக்பபழச் செடிகளையெல்லாம் கொண்டு வந்து நட்டு வைத்து, சலிக்காமல் நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
டீ கூட கிடைக்காத அந்த இடத்தில் டீ வைத்து விற்பதற்கு அனுமதி கேட்டாள். ஆபிசில் ஆறுபேர். ஆசிரியர்கள் பதினைந்து பேர். மாணவர்கள் ஒரு இரு நூற்றி சொச்சம் உள்ள அந்தக் கல்லூரியில், காலை பத்துமணி முதல் மாலை நாலரை வரை எதுவுமே கிடைக்காத நிலையில். வேறு வழியில்லாமல் முதல்வர் சம்மதித்தார்.
ஒரு வழியாக கல்லூரி கட்டிட வலது பக்கத்தில் தென்னங் சீற்றால் ஒரு மூன்று பக்கமும் மேலே கூரையுமாக கேன்டீன் உருவாயிற்று. ஒரு வாரம் எல்லாம் சரியாகத் தான் போய் கொண்டிருந்தது.
கல்லூரிக்கு வெளியே எதிரே உள்ள பொட்டல் காட்டில் இரவு நேரத்தில் யாரோ ஓடுவது போலச் சத்தம். யாரோ கத்துவது போல பெரும் அலறல். சிறிது நேரத்தில் எந்த ஓசையும் இல்லை. காலையில் மாரிமுத்து போய்ப் பார்த்த போது, அங்கே தலை தனியாகவும் உடல் தனியாகவும் இருந்திருக்கிறது. அன்று முதல்வர் வரும் வரை பேயறைந்தவன் போல இருந்தவன், சொல்லிவிட்டு மனைவியுடன் ஊருக்குப் போனவன் போனவன் தான்.
அவன் இருந்ததற்குச் சான்றாக அந்தத் தென்னந் தடுக்குக் கூரை தான் இருந்தது.
அவன் தொலைபேசி எண், என்று எதுவும் இல்லை. வீட்டு முகவரிக்குக் கடிதம் போட்டுத் திரும்பி வந்து விட்டது.
அவன் இருக்கும் ஊரோ மிகத் தொலைவு. யார் மெனக் கெட்டுச் சென்று பார்ப்பது?
ஒரு மாதம் காத்திருந்து மேலிடத்திற்கு எழுதிப் போட்டு விட்டார் முதல்வர். வேறு என்ன செய்ய முடியும்?
இப்போது முனியப்பனை விட்டால் வேறு கதியில்லை. முனியப்பனுக்கு மரியாதை கூடி விட்டது. அவனும் ஒரு அதிகாரி போலவே தன்னை நினைத்துக் கொண்டான். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். என்றாலும் இந்த நான்கு வருடங்களில் நான்கு முதல்வர்களைப் பார்த்து விட்டான். பல ஆசிரியர்கள் மாறுதலாகிக் கொண்டிருந்தார்கள். எனவே, அக் கல்லூரியில் எல்லாம் தெரிந்த சீனியராக முனியப்பன் ஆகி விட்டார். புதிதாக வருகிற முதல்வர்களுக்கு அவன் தயவில்லையேல், அங்கு ஒன்றும் நடக்காது. ஆட்டோவை வர வழைப்பதிலிருந்து, வீடு பார்த்துக் கொடுப்பதிலிருந்து, முதல்வர் அறை தூய்மை செய்வது வரை முனியப்பனை விட்டால் ஆளில்லை. சில சமயம் அவன் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தால் தான் கல்லூரியையே இயக்க  முடியும் என்ற நிலைமைக்குக் கொண்டு வந்து விடுவான்.
ஆண்டு விழாவின் போது கிழக்கு பக்கம் மேடை போட வேண்டாம். வடக்கு பக்கம், கல்லூரியின் பின்புறம் மேடை போடலாம் என்றான். கல்லூரிக்கு முன்பு போட வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்க, முதல்வரும் இந்த விசயத்தில் ஆசிரியர்கள் சொல்வது தான் சரி என முடிவெடுத்து விட்டார்.
ஆசிரியர்கள், பணியாளர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஆதலால், அந்தக் கல்லூரி அமைந்துள்ள ஊருக்குள் பந்தல் காரனை, போட்டோ காரனை, மேடை போடுபவனை ஏற்பாடு செய்ய முனியப்பனின் உதவி தான் தேவைப்பட்டது.
அவனோ ஏனோ தானோ வென்று தான் பதில் சொன்னான். உரிய நேரத்தில் அவன் உதவாத்தால், ஆசிரியர்கள் நிலை திண்டாட்டமாகப் போய் விட்டது. மாணவிகள் மூலமாக ஏற்பாடு செய்யலாம் என முடிவெடுத்து சில மாணவிகளை அழைத்துப் பேசினார்கள். ஒரு சிலர் தங்கள் வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார்கள்.
கலைச் செல்வி என்ற மாணவியின் தந்தை அந்தப் பகுதி வார்டு கவுன்சிலர் என்பதால், அவரைப் பார்த்துக் கேட்டால் உதவி செய்வார்கள் என முடிவெடுத்து, அந்த மாணவியிடம் அவள் தந்தையைச் சந்திக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டார்கள்.
மாலை ஆறு மணிக்கு வந்து சந்திக்கும்படி அந்த மாணவி சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போனார்கள்.
"காலையில இல்லைனா மதியானம் உங்கப்பாவை பார்க்க முடியதா’’ என்று அந்த மாணவிடம் கேட்ட பொழுது,”ஞாயிற்றுக் கிழமை தான் எங்கப்பாவை அந்த நேரங்களில் வீட்டில் பார்க்கலாம் மேடம். மற்ற நாட்கள்ல கட்சிக் கட்டிடத்துக்கும், எங்க அரிசி மில்லுக்கும் போயிடுவாரு’’ என்று பதில் வந்தது.
சரி, கொஞ்சம் பக்கத்திலிருக்கும் ஆசிரியர்களை (ஒரு மணி நேரம் பயணம் செய்யும்) ஞாயிற்றுக் கிழமை பார்க்கச் சொல்லி முதல்வர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பேரில், இரு ஆசிரியைகளும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்கள்.
திங்கட் கிழமை சென்னையிலிருந்து வந்ததும் வராததுமாக முதல்வர் அந்த இரு ஆசிரியைகளையும் தான் அழைத்தார். கவுன்சிலர் ஒத்துக் கொண்டிருந்தால், தேதி குறித்து விடலாம் என்ற எண்ணம் அவருக்கு, இன்னும் நான்கு மாதத்தில் ரிட்டயர்மென்ட் ஆகப் போகிறவர். பாவம் சென்னைக்கும் இந்தக் கல்லூரிக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். பல் தூக்கலாக இருந்ததால் அவரை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை எனச் சென்னையிலிருந்து வந்து பணியாற்றும் வரலட்சுமி ஆசிரியைச் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையா, பொய்யா என யாருக்கும் தெரியாது. ஆனால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஒரு பேப்பர் கூட ஆசிரியர்களுக்கு அலுவலகத்திலிருந்து தர விட மாட்டார். யாரையும் நம்பவும் மாட்டார். இருக்கிற மெடிக்கல்லீவை, நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் கல்லூரி என்றும் வியாழன், வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்கள் சென்னை என்றும் தீர்மானித்து. அதன்படி செயல்பட்டு வந்தார். ஆறு துறைத் தலைவர்களையும் அடுத்தடுத்து பொறுப்பு முதல்வராக்கி விட்டு. அவர்களைக் கண்காணிக்க முனியப்பனையே நம்பி வந்தார்.
முதல்வர் அறைக்கு முனியப்பனின் அனுமதி இல்லாமல் யாரும் சென்று விட முடியாது. வியாழன், வெள்ளி நாட்களில் முதல்வர் அறை பெரும் பாலும் பூட்டியே இருக்கும். வருகிற தபாலை உரிய பொறுப்பு முதல்வரின் இடத்திற்கே வந்து முனிப்பன் தந்து விடுவார். அது தொடர்பாக போன் பேச மட்டும் முதல்வர் அறையைத் திறந்து விடுவார். போன் ரிசீவரைக் கீழே வைக்கும் வரை அங்கேயே நின்று கொண்டிருப்பார். அறையை விட்டு வெளியேறியவுடன் முதல்வர் அறை பூட்டப்பட்டு விடும்.
தபால்கள் முதல்வர் டேபிளில் வைக்கப்பட வேண்டியதையும், அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியதையும், சுற்றறிக்கை விடப்பட வேண்டியதையும் செய்து விட்டால் போதும். முதல்வர் பொறுப்பு வேலை முடிந்தது.
இந்தச் சாவி விசயம் தான் கொஞ்சம் சிக்கலானது. பொறுப்பு முதல்வர்கள் அவரவர் பொறுப்பில் சாவியை வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்கள். சிலர் வீடு எடுத்துக் குடும்பத்தினரோடு டவுன் பக்கமாகப் பார்த்து தங்கியிருந்தார்கள். சாவி கல்லூரிக்கு அருகாமையில் இருப்பவர்களிடம் தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் இல்லை. அதிலும் பவானி தினமும் காலை மூன்று மணி நேரம், மாலை மூன்று மணி நேர மேன்று பயணித்துத் தான் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். கல்லூரி செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது. இந்தச் சூழலில் கல்லூரிச் சாவியை இவ்வளவு தூரம் கொண்டு வருவது சரியாகப் படவில்லை.
இதில் கவுன்சிலர் வேறு பிரச்சனையாகி விட்டார். அன்று திங்கட் கிழமை முதல்வரைப் போலவே, எல்லா ஆசிரியர்களும் சுபலட்சுமி, மஞ்சுளா ஆசிரியைகளை எதிர்பார்த்திருந்தார்கள்.
முதல்வர் அறைக்குள் சுபலட்சுமி, மஞ்சுளா நுழைந்த போதே முதல்வர் கணித்து விட்டார். ஏதோ நடந்திருக்கிறதென்று இருவரையும் உட்காரச் சொன்னார்.
சுப லட்சுமிதான் ஆரம்பித்தார். மேடம் நாங்க நேத்து கவுன்சிலரை அவர் வீட்டில் பார்க்கப் போனம். அவரு இருந்தாரு. பெரிய காம்பவுண்ட் போட்ட வீடு. வாட்ச் மேன் எங்கள் வெளியவே நிக்க வைச்சிட்டு போயி, பத்து நிமிடம் கழித்து உள்ளே வரும் படி சொன்னான். நாங்களும் பதினொரு மணி வாக்கில உள்ளே நுழைஞ்சோம். சிட் அவுட்ல கன்னங் கருப்பா, பனியன் போட்டு, கரை வேட்டி கட்டின ஒரு ஆளு, மேலே ஒரு பக்கமா துண்டு தான் போட்டிருந்தாரு. எங்களுக்கு அவரு தான் கவுன்சிலரானு சந்தேகம் இருந்தாலும், கையைக் குவிச்சி வணக்கம் சொன்னோம்.
"ம். அப்புறம் நம்ப விசயத்தைச் சொன்னீங்களா’’ என்றார் முதல்வர் இடைமறித்து.
"மேடம், அந்த ஆளு எங்களை உட்காரக் கூடச் சொல்லலை. என்ன விசயம்னு எங்களை மேலையும் கீழையும் எகத்தாளமாப் பாத்துக்கிட்டுக் கேக்கறாரு.’’
"நாங்க அவருக்கிட்ட கலைச் செல்வியோட ஆசிரியைனு சொல்லி, அவரு மக சொல்லித் தான் வந்தம்னு சொன்னோம்.’’
"ம். ம். கலைச் செல்வி சொல்லிச்சி அதெல்லாம் பாத்துக்கலாம். ஆனா எனக்கு என்ன கிடைக்கும்னு கேட்டாரு.’’
நாங்க தலை கால் புரியாம முழிக்கறதப் பார்த்து,”உங்க காலேஜில அடுத்த வருசம் நான் சொல்ற பத்து பசங்கள நீங்க சேர்த்துக்கறதா இருந்தா, எல்லா ஏற்பாடும் பண்றேன். நானே கூட சீப் கெஸ்ட்டா வரேன் என்ன சொல்றீங்கன்னு பேரம் பேசறாரு.’’
மஞ்சுளா தொடர்ந்தார்.மேடம் நான் ஒரு பி.எச்.டி, சுபலஷ்மியும் 
ஒரு பி. எச்.டி.  ஆனா அந்தக் கவுன்சிலரு பத்தாவது கூட படிச்சிருக்க மாட்டாரு.. எங்கள ஏதோ பிச்சையெடுக்க வந்த வங்க மாதிரி பார்த்தா. அந்தக் கலைச் செல்வி பொண்ணு வெளிய வரவேயில்லை. அவரு பெத்த பொண்ணு வேற எப்படி இருக்கும். இதுக்கெல்லாம் பாடம் எடுக்கறதுக்கா, இவ்வளவு படிச்சம்னு ராத்திரியெல்லாம் தூக்கமே வரலை. ஒரு வாய் தண்ணி கூட குடுக்கலை. நிக்க வைச்சே பேசி அனுப்பிட்டாரு. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை’’ என்று பட படவென பொறுமித் தள்ளினார்.
முதல்வர் கையமர்த்தி, இரும்மா என்ன இருந்தாலும் வார்டு கவுன்சிலரு. நாம பொறுத்தான் போக வேண்டியிருக்கு. அப்புறம் என்ன தான் சொன்னீங்க’’ என்றார். அவர்கள் பட்ட அவமானத்தை அவர் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை எனத் தோன்றியது.
"முதல்வர் கிட்ட கேட்டுட்டுச் சொல்றம்னு வந்துட்டம்’’ என்று சுப லட்சுமி கூறினார். முதல்வர் சிந்தனையிலாழ்ந்தார். நிலைமை சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.
"சரி நீங்க போங்க. இதைப் பத்தி யாருகிட்டயும் பேச வேண்டாம்’’ என்று எச்சரித்து அனுப்பினார்.
முதல்வர் ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லாதது அவர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.
வராண்டாவில் நடக்கும் போது,”மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கறது சரியாத்தான் இருக்குது’’ என்று மஞ்சுளா கூற, சுபலஷ்மி’’ சரி இதை நாம் இத்தோடு விட்டுவோம். இது முதல்வர் பிரச்சனை நமக்கென்ன’’ என்று கூறவே, சரி தான்’’ என்றார் மஞ்சுளா.
முதல்வர் அலுவலகப் பணியாளரிடம் கேட்ட போது, ‘சசிகலா உள்ளூர் தான் என தெரிந்தது. தட்டச்சராக சசிகலா வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் பெண். முழுகாமல் இருக்கிறாள் போலும். வயிறு பெரிதாக இருந்தது.
முதல்வர் அழைப்பதைக் கேட்டவுடன், சசிகலா முதல்வர் அறைக்குள் நுழைந்தார். முதல்வரும் பெண் தான் என்றாலும், அவருக்குத் திருமணமாகாததால், பல விசயங்களைக் கேட்பதை அவர் தவிர்த்து விடுவார். திருமணம், குழந்தைப் பேறு, காது குத்து இதெல்லாம் அவர் வாயிலே வரவே வார்த்தைகள். சசிகலா மூச்சு வாங்கிய படி, முந்தானையில் கழுத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்த படி வந்தார்.
அவளை உட்காரச் சொல்வதோ வேண்டாமா என ஒரு நிமிடம் முதல்வர் தயங்கினார். பின்னர் அலுவலகப் பணியாளர் தானே, எதற்கு உட்கார வைத்துப் பேச வேண்டும் என நினைத்து,  ஆண்டு விழா தேதி குறிப்பிடுவது தள்ளிப் போடும் காரணங்களைச் சொன்னார். அவள் ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.
சசிகலா சிறிது நேரம் யோசித்தாள்.மேடம் நீங்க கவுன்சிலரு பார்க்கறதுக்கு முன்னாலயே இதைச் சொல்லிருந்தீங்கன்னா, எங்க வூட்டுக் காரரு கிட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருப்பேன். அடார்ன்ர்ஸ், மைக், பந்தல் இதையெல்லாம் எங்க பங்காளிங்க தான். வாடகை விட்டிட்டிருக்காங்க. எல்லாம் கச்சிதமா பண்ணிப் போடுவாங்க. ஆனா பாருங்க, வார்டு கவுன்சிலருக்கு எதிர் கட்சியில நாங்க இருக்கிறம். எங்களுக்குள்ள தீராப் பகைனு ஊருக்கேத் தெரியும். சாரி மேடம்’’ என்றாள். அவள் முகத்தில் வருத்தம் இருந்தது.
முதல்வர் அவளை அனுப்பி விட்டு யோசனையிலாழந்தார். செவ்வாய், புதன் கிழமைக்குள் தேதியை முடிவு செய்து விட்டு, வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விட்டு புதன் கிழமை மாலை ஊருக்குப் போக வேண்டும். பென்சன் தொடர்பான பேப்பர்ஸ்லாம் ரைடக்ரேட்ல எந்த நிலையிலிருக்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கிறது. அங்கு பணிபுரியும் நரசிம்மன் வியாழக்கிழமை வரச் சொல்லியிருக்கிறார்.
பேசாம வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விட்டு, ஆசிரியர்கள் பொறுப்பு என விட்டு விடலாமா என யோசித்தார். நகரத்திலிருக்கும் கல்லூரியாக இருந்தால் ஒரு பிரச்சனையுமில்லை. இங்கே கிராமத்தில் பங்காளிச் சண்டை, கட்சிச் சண்டைனு எல்லாம் தினுசா இருக்குது. சொல்லிக் கொள்ளும் படி கடைகளும் இல்லை. ஓரிரண்டு கடைகள் தான். அதிலும் பல எதிர்பார்த்த வசதிகள் கிடையாது. எல்லாம் பழைய உருப்படிகள் தான். அதை ஏற்பாடு செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.
நகரத்து கல்லூரிகளில் நாளைக் குறித்து விட்டு, சிறப்பு விருந்தினர் ஏற்பாடு செய்துவிட்டால் போதும். எல்லாம் தன்னாலே நடந்திடும். இங்க ஒரு டீத் தண்ணிக்குக் கூட வழியில்லை. எல்லா ஏற்பாடும் செய்த பின் தான் நாளையே குறிக்க முடியும்.
முனியப்பன் போய் பிளாஸ்கில் வாங்கி வருவதற்குள் இரண்டு மணி நேரமாகி விடும். பிளாஸ்கில் ஆறின காபியைக் குடிப்பதற்குப் பேசாமலிருக்கலாம். அந்த வாடையே குமட்டிக் கொண்டு வரும்.
கடைசியில் புதன் கிழமை காலை முனியப்பன் சொற்படியே கிழக்கில் பந்தல் போடுவதென தீர்மானித்த பின் தான், பிரச்சனைக்கு முடிவிற்கு வந்தது. என்ன மாயமோ என்ன மந்தரமோ, மதியமே அடார்னர்ஸ்காரன் வந்து முதல்வரைப் பார்த்தான். சுப லட்சுமியும் , மஞ்சுளாவும் ஒவ்வொருவராக முதல்வர் அறைக்கு வருவதும் போவதுமாக இருப்பதைக் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
முனியப்பன் இல்லையென்றால், ஆண்டு விழா நடந்தே இருக்காது. ஆண்டு விழா அன்று முனியப்பன் தன் மகள், மருமகள் எல்லோரையும் கூட்டி வந்து விட்டான். மாரிமுத்து போட்ட தென்னந்தடுக்கில் பஜ்ஜி சுட்டார்கள். டீத் தண்ணி கிடைத்தது. வந்த விருந்தினருக்கு ஹோட்டலில் வரவழைத்த பிரியாணி முதலான சமாச்சாரங்களை அவருடைய மருமகன் தான் எடுத்து வந்தான். எல்லா இடத்திலும் கமிசன் கை மாறிக் கொண்டே இருந்தது.
 பல டூ வீலர்கள் வருவதும் போவதுமாக இருந்தன. சுப லட்சுமி ஆசிரியர் தான் சொன்னார். எனக்குக் கூட டூ விலர் ஓட்டத் தெரியும். ஆனா அது ஊரில இருக்குது. நாம தங்கியிருக்கிற ஹோஸ்டலுக்கும் கல்லூரிக்கும் ஒரு மணி நேரம் பாதுகாப்பில்லாத ரோடா இருக்குதேனு நான் எடுத்திட்டு வரலை’’ என ஆதங்கப்பட்டாள்.
முனியப்பன்,’‘அம்மா கேக்குதுங்களா, நான் முனியப்பன் பேசறம்மா. சாவி உங்க கிட்டத் தான் இருக்குதா’’ என்றான்.
வானி நிதானத்திற்கு வந்தாள். “இல்லியே கனகா மேடத்துக்கிட்ட இருக்கு. நேத்து அவங்க தான் முதல்வர் பொறுப்பு. ஆனா இன்னிக்கு நான் கிளம்பி வர வரைக்கும் அவங்க சாவி எங்கிட்டத் தரலியே. அவங்கக் கிட்ட கேட்டுப் பாருங்க’’ என்றாள்.
‘‘இன்னிக்கு உங்க முறை தானே, நீங்க ஏன் வாங்காம வந்தீங்க’’ என்றான் முனியப்பன்.
‘‘தந்தா தான வாங்க முடியும். தராம எப்பிடி அவங்க பையிலிருந்து எடுக்கவா முடியும்? போன முறையும் இப்பிடித் தான் தரவேயில்லை. நல்லதாப் போச்சினு நானும் கேக்கலை. அதுவுமில்லாம அவங்களாவது ஒரு மணி தூரத்தில இருக்காங்க நான் மூணு மணி தூரத்தில இருக்கேனே, நீங்க அவங்க கிட்ட கேட்டுப் பாருங்க’’ என்றாள் பவானி.
‘‘சரி சரி’’ என்ற படி ரிசீ வரை வைத்த சத்தம் கேட்டது. தானும் கனகா மேடத்திற்கு போன் பண்ணலாமா என யோசித்தாள். அரை மணி நேரம் கழித்து போன் செய்து பார்க்கலாம் என நினைத்து அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள். நேரம் 11.30 காட்டியது.
எந்த போனும் வரவில்லை. சரி தானே செய்யலாம் என நினைத்து போன் செய்தாள். மணிமேகலை மேடத்தின் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை.
ஒரு வேளை கணவரை அழைத்துக் கொண்டு சாவியுடன் கல்லூரி சென்றிருப்பார்களோ?’’
சரி கல்லூரிக்குச் செய்து பார்க்கலாம் என போன் பண்ணினாள். மஞ்சுளா மேடம் எடுத்தார்.
மஞ்சுளா மேடம் நீங்களா, நீங்க எப்படி’’ என்றாள் ஆச்சரியத்துடன்.
‘‘மேடம் லேப் சாவியை நான் பையில கொண்டு மதியம் பிராக்டிகல் செய்யும் போது, மாணவிகளிடம் எல்லாவற்றையும் ஆப் பண்ணச் சொல்லிட்டு, வீட்டுக்குப் போகும் போது மறுபடியும் ஒரு முறை, எல்லாத்தையும் செக் பண்ணிட்டு அப்புறம் சாவியை ஒப்படைக்கலாம்னு நினைச்சி, பையில போட்டேன். அப்புறம் தொடர்ச்சியா வகுப்புகள் இருந்ததில மறந்து போயிட்டான். நாலு மணிக்கு வர்ற வேலூர் பஸ்ஸை விட்டுட்டா அப்புறம் ஆறரைக்குத் தான்னு உங்களுக்குத் தான் தெரியுமே. இன்னிக்குப் பாடம் நடத்தற விசயத்தில கவனமா இருந்ததினால, வகுப்பு அறைச் சாவியை ஒப்படைத்த போது, லேப் சாவியையும் ஒப்படைச்சிட்டேனு நினைச்சிக்கிட்டேன் மேடம்’’ எனப் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்.
‘‘கனகா மேடம் கூட இருக்காங்களா?’’
“இல்லை மேடம். அவங்க கணவரோட டூ விலர்ல வந்துட்டு, லேப் சாவி இல்லன்ன உடனே எனக்கு போன் பண்ணாங்க. அவங்க போன் பண்ணப்ப, மணி ஒரு மணி இருக்கும். ஹாஸ்டலே முழிச்சிக்கிச்சி. அந்நேரத்துக்கு எப்பிடி காலேஜீக்கு வர்றதுன்ன உடனே அவங்க போன்லயே கத்த ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் முனியப்பன் அண்ணங்கிட்ட காலேஜ் சாவியை ஒப்படைச்சிட்டுப் போறதா போன் பண்ணிச் சொன்னாங்க’’
‘‘அப்புறம் எப்பிடி வந்தீங்க?’‘
ஹாஸ்டல் வாட்ச்மேன் கிட்ட கெஞ்சி கூத்தாடி, ஒரு ஆட்டோவப் பேசி, அவரையும் கூட்டிட்டு, சுப லட்சுமி மிஸ்ஸோட வந்திருக்கேன்”””””“.
பவானிக்கு மூச்சடைப்பது போல இருந்தது. கனகா மேடத்தை நினைத்து கோபம் கொள்வதா,  நன்றி சொல்வதா எனத் தடுமாறினாள். சாவியைத் தன்னிடம் ஒப்படைத்திருந்தால் என்னவாகியிருக்கும்? அதுவும் அந்த அத்துவானக் காட்டுக்கு எப்படிச் சென்றிருக்க முடியும்?
‘‘சரி அங்க என்ன பிரச்சனை’’ என்றாள்.
கிரைண்டர் சுவிட்சை ஆப் பண்ணலை மேடம். கலைச் செல்வியும் மீனாட்சியும் தான் கிரைண்டர் பொறுப்பு இன்னிக்கு, அவங்க தான் இதை முறையா செஞ்சிருக்கணும். நாங்க வர்றதுக்குள்ளே, உள்ளே ஒரே புகை மண்டலமா இருந்தது. எல்லா சுவிட்சும் ஆப் பண்ணிட்டிருந்தது. கிரைண்டர் மட்டும் ஆப் பண்ணல. ஒரு வழியா அணைச்சிட்டோம். ஆனா கிரைண்டர் காயில் போயிருக்கும்னு நினைக்கிறேன்’’.
‘‘சரி சரி இப்பவே மணி நாலு ஆயிடுச்சி. நீங்க முனியப்பன் கிட்ட கொஞ்சம் பேசிப் பாருங்க. இது முதல்வருக்குத் தெரிஞ்சா. எல்லாம் அவ்வளவு தான்.’’
‘‘ஆமா மேடம் நீங்க சொல்ற மாதிரி தான். சுப லஷ்மியும் நானும் யோசிச்சோம். முனியப்பன் கையில ஆயிரத்தைக் குடுத்திட்டு வாயடைச்சுடலாம்னு. ஆட்டோவுக்கு ஆயிரம் குடுக்க வேண்டியதாப் போயிடுச்சி. பணத்தைப் பார்த்தா முனியப்பன் எதும் சொல்ல மாட்டாரு. ஆனா, கனகா மேடத்தை எப்படிச் சமாளிக்கறதுன்னு தான்....’’ என இழுத்தாள்.
‘‘எப்படிச் சமாளிக்கிறதா? எங்கிட்ட ஒவ்வொரு முறையும்  சாவியை ஒப்படைக்காம அவங்களே எடுத்துட்டுப் போனாங்களே. அதை நான் போட்டு ஒடைச்சா அவங்க கதி என்னாகும்னு நினைச்சிப் பார்ப்பாங்கல்ல’’
‘‘சரி அதைக் கூட சமாளிச்சிடலாம். இந்த கிரைண்டர என்ன பண்றது?
‘‘நாளைக்குச் சனிக்கிழழை தானே. முனியப்பன் கிட்டச் சொல்லி ஆள் ஏற்பாடுப் பண்ணிச் சரி பண்ணச் சொல்ல வேண்டியது தான். செலவைப் பார்த்தா ஆகுமா?’’
‘‘ஆமா. மேடம். செலவைப் பார்த்தா ஆகாது தான். இந்த மாதிரி அர்த்த ராத்திரியில எல்லோரும் மீட்டிங் போட்டு பேசற மாதிரி செஞ்சிட்டாளே அந்த கனலச்செல்வி அத நினைச்சாத்தான்.’’
‘‘சரி சரி பவானி விடுங்க. அவ தெரிஞ்சி செஞ்சாளோ, தெரியாம செஞ்சாளோ, நமக்குத் தெரியாது. நாம தான் அவங்க கிட்ட பாடங் கத்துக்க வந்திருக்கிறம்து மட்டும் உண்மை. நீங்க படிச்ச பி.எச்.டி யும் நான் படிச்ச பி.எச். டியையும் பரண் மேல மூட்டைக் கட்டிப் போட்டுட வேண்டியது தான். இந்த மட்டில காயிலோட போச்சே. எல்லா ஒயரும் பத்திக் கல்லுரியில இருக்கிற எல்லா லைனும் எரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருக்க முடியும்? நான் இந்த வருசம் டிரான்ஸ்பருக்கு அப்ளை பண்ணலாமா வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தேன். இந்த நல்ல விசயத்தால அந்தக் குழப்பம் தீர்ந்தது. நீங்களும் அப்ளை பண்ற வேலையைப் பாருங்க. சரி பத்திரமா ஹாஸ்டல் போய்ச் சேருங்க. போன உடனே மறக்காம போன் பண்ணித் தகவல் சொல்லுங்க. நான் காத்துக் கிட்டிருப்பேன்’’ என்றபடி பவானி ரிசீவரை வைத்த போது கடிகாரம் ஐந்து எனக் காட்டியது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?