இரவில் பாய்விரிப்பதற்குப் பதிலியாக
ஊக்கத்தை விரித்து உறங்க வேண்டும்!
முளைவிட்ட உழைப்பை அரைத்து
அதிகாலையில் குவளை நிரப்பிக் குடி!
பத்துவிரல் ரேகைகளில் மின்சாரம் பாயும்!
விழுந்தபோது குற்றவாளி என்று நீ
விசாரிக்கப்பட மாட்டாய்!
எழுந்து நிற்கவில்லை என்றால் நீ
இருளின் சிறையில் தண்டிக்கப்படுவாய்!
முயற்சிப் பெட்டியின் உள்ளிருந்து
ஒரு தீக்குச்சி எடுத்துப் பற்றவை!
எரிந்துபோகும் சோம்பல் சருகுகள்!
துருப்பிடித்தும் பிசிர் ஏறியும்
பரண்மேல் கிடக்கின்றன உனது இலக்குகள்!
தரிசாய்க் காய்கிறது உனது நிலம்!
உழுவதால் விளையும்! விதி என்று
அழுவதால் என்ன ஆகப் போகிறது?
நெஞ்சில் எரியும் நெருப்புக் குண்டத்தில்
புடமிட்டு உன்னைப் புதிதுசெய்!
கூன்விழுந்துள்ளது முதுகெலும்பு!
குகையிலிருந்து விலங்கு கழற்றி வெளியில் வா!
தட்டுகிற சிரமம்கூட உனக்குத் தராமல்
திறந்து கிடக்கின்றன திசைக் கதவுகள்!
ஒற்றைச் சாலைகளும் நெடுஞ்சாலைகளும்
உனது வரவு நோக்கி நீள்கின்றன!
பதிவாகட்டும்! உனது பாதச் சுவடுகள்! என்ற