முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Saturday, 1 October 2016

அரசியல் நோக்கில் வள்ளுவரும் சாணக்கியரும்


Image result for sanakyaஅரசியல் நோக்கில் வள்ளுவரும் சாணக்கியரும்Image result for valluvar
பொருட்சுருக்கம் வள்ளுவர்-சாணக்கியர்-அரசியல்-அரசன்-கல்வி-அமைச்சர்-ஒற்றன்-வார்த்தை-கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்தல்.
முன்னுரை
மக்கள் ஒத்து வாழ அரசமைப்பு, அதன் செயல்பாடுகள், கடமைகள், சட்டங்கள், தண்டனைகள் போன்றவை இன்றியமையாதன. முடியாட்சி, குடியாட்சி எவ்வகை ஆட்சியாயினும் அதை நடத்தக்கூடிய மன்னனை அல்ல தலைவனைப் பொருத்தே அரசு அமைகின்றது. வள்ளுவரும் சாணக்கியரும் முடியாட்சி காலத்து அரச நிலவரங்களை, நீதிகளைச் சொல்லிச் சென்றாலும், தற்காலத்திற்கும் அவை பொருந்துகின்றன. வள்ளுவர் வகுத்த வள்ளுவமும், சாணக்கியர் வகுத்த அர்த்த சாத்திரமும் பல கருத்துக்களில் ஒத்துப்போகின்றன. வள்ளுவர் காலத்தை விட பிற்காலத்தவரான சாணக்கியர் (கி.பி.நான்காம் நூற்றாண்டு) வள்ளுவத்தையே முதனூலாகக் கொண்டு பல கருத்துகளைக் கூறிச் சென்றுள்ளார் என்று கூறக்கூடிய அளவிற்கு ஒற்றுமைகள் உள்ளன.
வள்ளுவரின் பொருட்பால் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்ற பகுதிகளையும் 70 அதிகாரங்களையும் உடையது.இக்கட்டுரை வள்ளுவரின் பொருட்பாலோடு சாணக்கியரின் பொருணூலின் முதல் அதிகரணங்களை மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கிறது. பேராசியர் ப.மருதநாயகம் அவர்கள் ‘‘வடமொழி மூலங்கள் என்று கருதப்பட்டவை தமிழ் நூல்களை தழுவல்களாகவும் மொழி பெயர்ப்புகளாகவும் வழி நூல்களாகவும் தோன்றியவை.....மனு முதலான வடநூலார் பலர் உழவுத் தொழிலை இழிதொழில் என்னும் பிராமணரால் செய்யத் தக்க தன்றென்றும் கூறியிருக்கக் கௌடலியம் உழவக்குச் சிறப்பிடம் அளிக்கும். இது குறளின் தாக்கத்தால் விளைந்தாகும்"" (ப-174-175) என்கிறார்.
இக்கருத்தினடிப்படையில் வள்ளுவர்-சாணக்கியம் இவற்றில் தன்மைகளை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை ஆராய்கிறது.
அரசியல்
ஒரு நாட்டின் அரசியல் குறித்த இவருடைய கருத்தை ஆராயும் நோக்கில் பொருட்பாலில் அரசியல் பகுதி மட்டும் ஆராயப்படுகிறது. பொருட்பாலில் மக்கள் வாழும் நிலம், அந்நிலத்தை ஆளும் அரசரின் குணம், திறமைகள், அரசருக்கு உதவும் குழுக்கள்,அவருடைய திறமைகள், நாட்டிற்குரிய இலக்கணம், நட்பு, பகை, பொருள், வருவாய், சட்டம், தண்டனை போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
வள்ளுவரின் பொருட்பால் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்று பகுக்கப்பட்டுள்ளது போல், சாணக்கியரின் பொருணூலும் அதிகரணம், பிரகரணம், அத்தியாயம் எனப் பகுக்கப்பட்டுள்ளது.பொருட்பாலின் அரசியலில் 70 அதிகாரங்களும் 700 குறட்பாக்களும் உள்ளன. வடமொழி சாணக்கிய பொருணூல் பதினைந்து அதிகரணங்களையும் நூற்றம்பது உட்பிரிவுகளையும் கொண்டுள்ளது.
இறைமாட்சி
வள்ளுவரின் பொருட்பாலின் முதல் இயலாக இருப்பது இறைமாட்சி. இப்பகுதி அரசனின் தகுதி, குணங்கள், அரசாளத் தேவையான உறுப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
வள்ளுவர் கண்ட அரசியலில் நாடாளும் மன்னனே முதன்மையானவன். மன்னனுடைய  உடைமைகள் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று ஆறும் ஆகும். சாணக்கியரோஅரசியலின்  உடைமைகளில் மன்னனையும் ஒர் உறுப்பாக்குகின்றார். ஒரு குடும்பத்தின் தலைமை தந்தை என்பதற்கும் குடும்பத்தில் ஒருவன் தந்தை என்பதற்குமான வேறுபாடு இங்கு உள்ளது. வள்ளுவர் அரசனை உயர்த்தி மன்னன் உயிர்த்தே மலர்த்தலை  உலகம்என்கிறார். சாணக்கியார் அரசிற்குத் தேவையானவற்றில் மன்னனும் ஒருவன் என்கிறார்.
தமிழக அரசியலில் தலைமுறை தலைமுறையாக மூத்த மகனுக்கு அரசுரிமை வந்து கொண்டிருந்தது என்பதற்கு புறநானூற்றுப் பாடல்கள் சான்று தருகின்றது. “அரசுரிமையாகிய இச்சிறிய இடத்தில் என்மக்கள் நசுகுண்டு வளர்ச்சியற்று சாகாமால், பல புதிய இடங்களில் இவர்களைக் குடியேறச் செய்து,  இவர்களைச் செழிப்புற வாழ வைக்க வேண்டும். நிறைய நிலங்களைத் தர வேண்டும்’ (புறம்,75) என்கிறான் ஒரு மன்னன். வாரிசுரிமை பற்றி வள்ளுவர் குறிப்பிடவில்லையாயினும், தமிழக அரசியல் அமைப்பின்படியே தன் கருத்துக்களைக் கூறிச்செல்கிறார்.
சாணக்கியர் இக்கருத்தோடு உடன்படுகிறார். நாடு அமைத்தல்என்ற பிரகரணத்தில் ‘‘தன்னாட்டில் மக்கள் குறைவாக இருப்பரேல் வேற்று நாட்டிலிருந்து கொணர்தல் வேண்டும், மிகுதியான மக்களுக்கு இடனமைத்தற்குபாருட்டுப் புதிய நாட்டையும் அமைத்து கொள்ளலாம். இது நாட்டின் பொருள் வருவாயை மேம்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும்""(ப-171) என்கிறார்.
மக்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றி பின்னர் மன்னன் மக்களைத் தந்தையைப் போல காத்து அருள் புரிய வேண்டும் என்ற சாணக்கியர் (ப-174) கூற’‘ வேந்தலைக்கும் கொல் குறும்பு இல்லது நாடு"" (குறள்.735) என்று வள்ளுவர் கூறுகிறார். அரசனை வேந்தன், மன்னன், இறைவன், காவலன், எனப் பல பெயர்களில் வள்ளுவர் கூறுகிறார்.
முறை செய்து காப்பாற்றும் மன்னன் மக்கட்கு
இறை யென்று வைக்கப் படும் (388)
என்ற குறள் தந்தையை விட மேலான இறை நிலையில் அரசனை வைக்கிறது.
நாட்டை ஆள வேண்டிய மன்னரின் கடமைகளை செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரத்தில் கூறும் வள்ளுவர்,
குடிதழீஇக் கோல்லுச்சும் மாநில மன்னன்
அடிதழீஇக் நிற்கும் உலகு (544)
என்ற குறள் வழி மக்களை அணைத்துக் கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனை மக்கள் விரும்புவர் என்கிறார். மாறாக கொடுங்கோன்மை புரியும் அரசனை, இறைகடியன் (564) இன்னாமுகத்தன் (565), பெருவந்த செய் தொழுகும் வெங்கோலன் (563), அறிகொன்று அறியான் (638) என்று இகழ்கிறார். கண்ணகி அறிவரை போகிய பொறியறு நெஞ்சத்து இறைஎன்றும் தேரா மன்னாஎன்றும் மன்னனை நேரிடையாக அழைத்த கால நிலையது என்பதை கவனிக்க வேண்டும்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் (559)
மன்னன் முறைதவரின் வானமும் தவறும் என எச்சரிக்கை விடுக்கிறார். மன்னர்க்காகாதன பற்றிச் சிறுமை, சினம், இவறல், மான்பிழந்தமானம், செருக்கு, உவகை இவற்றை குற்றம் கடிதலில் வள்ளுவர் குறிப்பிட சாணக்கியர், காமம், வெகுளி, கடும்பற்று, மானமின்மை, மதம், உவகை என்று பட்டியலிடுகிறார். (ப-79)
மன்னர்க்காகாத குணங்களை இருவரும் இவ்வாறு பட்டியலிடுகின்றனர்.


வ.
திருவள்ளுவர்
சாணக்கியர்
1
செருக்கு
பிறர்மனை நயத்தல்
2
சினம்
பிறர்பொருள் கவர்தல்
3
காமம்
பிறர்க்குத் துன்பம் தருதல்
4
கருமித்தனம்
தகாத தூக்கம்
5
அளவற்ற மகிழ்ச்சி
மனக்கலக்கம்
6
குற்றம்
பொய்மை
7
பற்றுள்ளம்
ஆடம்பர வேடம்
8
தன்னை வியத்தல்
தீவழி பொருள் சேர்க்கை
9
மாட்சியில்லா மானம்
மறச் செயல்
10
குறை காணும் போக்கு
கேடு தரும் தீச்செயல்

சாணக்கியர் குறிப்பிடும் பிறர்மனை விழையாமை, தகாத தூக்கம் (64) போன்றவற்றையெல்லாம் வள்ளுவர் அனைத்து மனிதர்களுக்கும் ஆகாத பொதுக் குற்றங்களாகக் காணுகின்றார்.
சாணக்கியர் இக்குற்றங்களை மன்னன் நீக்க வேண்டுமெனில் பொறியடக்கம் தேவை (ப-82) என்று கூறி, பெரியோரைத் துணை கொண்டு, நல்ல அறவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டுமென்கிறார். வள்ளுவரும் பெரியோரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை அதிகாரங்களில் துணைவலியின் இன்றியாமையையும், பொறியடக்கத்தையும் கூறுகிறார். இருவரும், வண்டியுருள்கள் இரண்டில் ஒன்றின்றி மற்றொன்று சூழலாது. அதுபோல அரசியலும் துணை வலியின்றி நடைபெறாதென்கின்றனர்.
அரசர்க்குத் துணைவழியாகும் அமைச்சர்கள், ஒற்றர்கள் இயல்பு குறித்து வள்ளுவம்,
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந் தொழுகு வார் (691)
என்ற கூறச் சாணக்கியர் இதை வழிமொழிகிறார்.
‘‘அரசனைச் சார்ந்தவருடைய வாழ்க்கை அழலைச் சேர்ந்தொழுதல், ஓங்கின் உடல் முழுமையுமாதல் கொளுத்தும். அரசனோவெனின் மக்கள் மனைவியருடன் ஒருவனைச் சேர்த்து அழிக்கவோ ஆக்கவோ வல்லவனாவான்"" (ப-701)
மன்னன் செய்ய வேண்டிய செயலாகக் கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப்படும் (குறள் 525) எள்று வள்ளுவம் கூற, கௌடல்யமும், ‘‘மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியில்லாரை மகிழ்விக்கும் பொருட்டுப் பொருட் கொடையாலும் இன் சொற்களாலும் சிறப்பிக்க வேண்டும் (ப-76) என்கிறது.
வள்ளுவர், அரசன் வினை வல்லாரை அவர் செய்யவல்ல வினைகளையறிந்து அதற்கேற்ப வினைகளைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.
இதனை இதனான் இவன் முடிக்கும்  என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்(517)

சாணக்கியர், ‘‘அமைச்சர்க்குரிய நிறைந்த தொழில் தலைவன் எல்லோரும் அவரவர் ஆற்றற்கேற்பக் காரியங்களில் மன்னரால் நியமிக்கத் தக்கவராவர்“ (ப-190)
அறவழி, மறவழி, மானம் இவற்றை அடித்தளமாகக் கொண்டு கொடை, செங்கோன், அருள், குடி ஒம்பல் இவற்றை மேற்கொள்ளும் அரசனே இயற்றல், ஈட்டல், காத்தல் கடமைகளை நிறை வேற்ற வேண்டும். இவையின்றி பகையரசை நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், கூட்டல், பிரித்தல் முதலான கடமைகளும் மன்னர்க்குரியதே.
நாடு காவலை நோக்கமாகக் கொண்டே ஒரு மன்னன் அண்டை அரசர்களோடு நட்பு கொள்வதும், பகைப்பதும், போரில் ஈடுபடலும் கூட்டணி வைப்பதும் இருக்க வேண்டுமென இவரும் கூறினாலும், நட்பைப் பொறுத்தளவில் தன்காப்பு போல, பிறன் காப்பும் கவனிக்கப்படவேண்டிதென வள்ளுவர் கருதுகிறார்.
செயற்கரிய யாஉள நட்பின், அது போல
வினைக்குரிய யாஉள காப்பு (781)
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (788)

போன்ற குறட்பாக்கள் வழி தன்னுடைய காப்பிற்கு நட்பு கொள்வதும், நட்பு கொண்ட மன்னனுக்குத் தக்க சமயத்தில் உதவுதலும் நட்பின் சிறப்பு என்கிறார்.
போர் தவிர்க்க முடியாதெனினும், தவிர்க்க வேண்டுமென்பதே வள்ளுவர் கொள்கை. நாட்டின் பாதுகாப்பு கருதி தம்மின் வலியாரோடு பணிதலே நன்று என்கிறார்.
“எல்லாரும் நன்றாம் பணிதல்“  போன்ற குறட்பாக்கள் சமாதானக் கொள்கையை வலியுறுத்துகின்றன. போரில் ஈடுபடாமலே ஒரு நாடு சிறப்பான செங்கோலினாலும், பணிதலினாலும் வெற்றி பெற முடியும் என்கிறார். ஆனால், சாணக்கியர் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொள்கிறார். தந்திரஉத்தி, மறைவுச் செயல், பிடிபட்ட பகைவரை வதைத்தல் (ப-58) குறித்து விரிவாகப் பேசி பகையை மென்மேலும் வளர்க்க வழி கூறுகிறது சாணக்கியம். வள்ளுவர் மன்னர்க்கு அடிப்படைப் பண்புகளாக, தூங்காமை, கல்வி, துணிவுடைமை இவற்றோடு சொல் பொறுத்தல், அஞ்சாமை, ஈகை, அறிவூக்கம், காட்சிக்கு, எளியன், கடுஞ் சொல் இல்லாதவனாக இருக்க வேண்டும் என்கிறார்.
கல்வி
நாடாளும் மன்னனுக்கு பெற்றிருக்க வேண்டிய முதல் தகுதி கல்வி என்பதை இருவருமே வலியுறுத்துகின்றனர். எனவே தான் குறளில் இறைமாட்சிக்கு அடுத்ததாக கல்வி என்ற அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. சாணக்கியரும் கல்வியறிவை முதன்மைப்படுத்தும் விதத்தில் முதல் அதிகரணத்தின் தொடக்கத்திலேயே அமைத்துள்ளார். கல்வியறிவும் உலகியல் அறிவும்இல்லாத அரசன் தன்னாட்டைக் காத்தற்குத் தகுதியற்றவன். எனவே கல்விப் பயிற்சியின் இன்றியமையாமை நோக்கி வித்தை விளம்பல்என்ற பிரகரணம் கூறப்பட்டுள்ளது.
சாணக்கியர் ஆன்விட்சிக்கீ, திரையீ, வார்த்தை,தண்ட நீதி என்ற நான்கையும் மன்னன் கற்றிருக்க வேண்டுமென்கிறார். ஆன்விட்சி கீ என்பது தருக்க  நூல்களாகும். (சாங்கியம், யோகம், உலகாயதம்) திரையீ என்பவை வேதங்கள் (இருக்கு, எசர்,சாம) வார்த்தை என்பவை உழவு, பசுக்காவல், வாணிகம் முதலானவை, தண்டநீதி என்பது சட்டமும் தண்டைனையும் குறித்து நீதிநூல்.
வள்ளுவர் எண்என்ப ஏனை எழுத்தென்ப‘ என்கிறார். அறம், பொருள், இன்பம் குறித்த நூல்களோடு உலகியலறிவும் மன்ன்ன் பெற வேண்டும். “ஒற்றும் உரை சான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்“ (581) என்கிறார். உரை சான்ற நூல் என்பது நீதிநூல்கள் ஆகும். ஒற்று குறித்த நூல்களும் வள்ளுவர் காலத்தில் இருந்திருக்கலாம்.வள்ளுவர், கல்லாமையின் இழிவையும் விளக்கத் தவறவில்லை. கல்வி பெறுவதினால் எய்தும் பயன்களை எடுத்துரைத்து கல்வியில் ஈடுபாடில்லாதவனாயிருந்தாலும், நல்லவற்றைக் காது கொடுத்தும் கேட்டு அறியாமையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். கல்லாதவனை விலங்கோடும், மண் பொம்மையோடும் ஒப்பிடுகிறார். கற்றிலாயினும் கேட்க என்று நல்லவற்றை செவி மடுத்து கேட்டால் அவை சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் தக்க சமயத்தில் உதவும் (415) என்கிறார்.
கல்வி, கேள்வி அறிவோடு உண்மை அறிவையும் இணைத்துப் பயன்படுத்த வேண்டும். மனதை அதன் வழியில் செல்ல விடாது, நன்மை தீமைகளை ஆராய்ந்து, உலகம் ஏற்கும் வகையிலான செயல்களை, அஞ்வதற்கஞ்சி, அஞ்சாதவற்றிற்கு துணிந்து, முன்னுணர்வோடு செயல்படக்கூடியவர்களே உண்மையான அறிவுடையார் என்கிறார் வள்ளுவர். (அறிவுடைமை)
நிற்க அதற்குத்தக‘
வள்ளுவர், ‘நிற்க அதற்குத்தக‘ என்று கூறுவதைப்போல, சாணக்கியர் அடிப்படையான நான்கு நூல்களான மேற்கூறியவற்றைக் கற்பதோடு அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் கூறுகிறார். ஆன்வீட்சிகீ, திரையீ, வார்த்தை என்னும் இவற்றின் நிறைபேற்றிற்கும் பயனுக்கும் கருவியாவது தண்டம் (ப-61) என்கிறார் சாணக்கியர். ஆன் வீட்சிகீ, திரையீ, வார்த்தை இம்மூன்றும் அடிப்படை எனவும் தண்ட நீதி என்பது செய்முறை எனவும் கொள்ளலாம்.
ஆன்வீட்சிகீ என்பது தருக்கம், திரையீ என்பது வேதம். வார்த்தை என்பது உழவு, பசுக்காவல், வாணிகம். இம்மூன்றும் வருவாய் வரும் வாயில்களாகும். வள்ளுவர் இவ்வார்த்தையை பொருள் செயல்வகை, உழவு, நாடு முதலான அதிகாரங்களில் விளக்கிச்செல்கிறார்.
வள்ளுவர் உழவே அரசியலில் தலையாயது என்கிறார்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதானல்
உழந்தும் உழவே தலை (1031)

சாணக்கியர், உழவார் உலகத்தார்க்கு நான்கு வருணத்தாரில் உழவர்களை நான்காம் வருணத்தார்களைக் கருதி, உழவை இழி தொழிலாகக் கூறுகிறார்.
“வேட்பிப்போர், ஓதுவிப்போர், புரோகிதர்,வைதிகர், தொழிற்றலைவர், கணக்கர், ஓதுவோர், தானிகர், யானை பயிற்றுவோர், மருத்துவர், குதிரை பயிற்றுவோர், தூதர் போன்றோருக்கு நிலத்தைத் தர வேண்டும். இவர்கள், விற்பதற்கும், ஈடுவைப்பதற்கும் புதல்வர்க்கும் கொடுப்பதற்கும் உரிமை தர வேண்டும். இவர்கள் நிலத்தைப் பண்படுத்தி நெல் முதலியன மிகுதியாக விளைவித்தலைக் கண்காணிக்க வேண்டும். இவர்கள் நிலத்தைப் பயன்படுத்தாமலிருப்பாராயின் நிலங்களைக் கைப்பற்றி உழது பயிரிடுவோரிடம் ஒப்படைத்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் பொருளும் கொடுத்து நாட்டு வளர்ச்சிக்காக அருள் புரிய வேண்டும். அல்லது உழப்படாத நிலங்களை கிராம அதிகாரிகளோ, வணிகர்களோ உழ வேண்டும். உழவர்களுக்கும் கூலம், பசு, கருவிகள் கொடுத்து உழவுத் தொழிலை முதன்மையாகக் கண்காணித்து வர வேண்டும் என்று சாணக்கியர் (ப-173) கூறுவதிலிருந்து வருண அடிப்படையில் தாழ்த்திக் கூறினாலும், நாட்டின் வருவாய்க்கு உழவே தலை என்பதை உணர்த்துகின்றார்.
வள்ளுவர், வாணிகம் குறித்து,
உறுபொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்த்
தெறு பொருளும் வேந்தன் பொருள்(756)

என வாணிகத்தின் வழி வரும் பொருள் வகைகளைப் பட்டியலிடுகிறார். உழவு, வாணிகம் இரண்டின் பெருக்கமும் படைப்பெருக்கத்திற்கும், பொருட்பெருக்கத்திற்கும் உதவும் என்கிறது சீவகசிந்தாமணி.
பொன்னினாகும் பொருபடை அப்படை
நன்னினாகும் தரணி (சீவகசி.செ.1923)

இவற்றை,விற்றல்,விலை கொடுத்து வாங்கல் முதலிய விவகாரங்கள்’ (ப-71) என்கிறார் சாணக்கியர். ‘‘பொருட் பெருக்கம் படைபெருக்கங்களாக் தன் பக்கத்தையும், பிறர் பக்கத்தையும் அரசன் தன் வயப்படுத்துவான்"" (ப-72) என்பதால் வாணிகத்தின் மூலம் பெரும் வருவாயும் குறிப்பிடத்தக்கதென்கிறார். தண்டநீதி என்பது மன்னன் செங்கான்மை நடத்தினாலும் மக்களை முறைப்படுத்த தண்டம் மேற்கொள்ள வேண்டும். தண்டத்தில் அடக்கப்பட்ட மக்களின்றேல் தூய்மையானவர்களைக் காண முடியாது. தண்ட பயத்தாலே தான் உலகம் இன்பத்தில் வாழ்கிறது எனலாம். வள்ளுவர் மக்களின் மீது விதிக்கப்படும் தண்டம் மக்களை அச்சுறுத்தும் விதமாக இருக்கக் கூடாதென்கிறார்.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் (567)

தண்டம் எப்படியிருக்க வேண்டும் மென்பதை
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மட்டும்
தேர்ந்து செய்வதே முறை (541)

என்று குற்றத்திற்குரிய தண்டனையை உரிய நூலாரோடும் ஆராய்ந்து பின்னரே விதிக்க வேண்டும் என வலிறுத்துகிறார்.
தண்டம் என்பதை அரசு வேலிஎன்கிறது சிலம்பு.
அரைச வேலி யல்லது யாவதும்
புரைதீர் வேலி இல் (சிலம்-அழற்படு-23-45)
அரசவேலி இல்லையேல் நாட்டில் பாதுகாப்பாக மக்கள் வாழ முடியாதென்பது இதன் பொருள்.

சாணக்கியரும் மக்களைத் தன் வயப்படுத்தற்கு தண்டத்தை ஒத்த கருவி பிறிதில்லை என்கிறார். ‘‘தண்டத்தினால் அடையப் பொறாத பொருளை அடைதலும், பெற்றன காத்தலும், கூர்த்தவற்றை வளர்த்தலும், அவற்றை நல்வழியிற் பயன்படுத்துலும் முதாலய பயந்துகிட்டும் என்பதால் நாட்டை நிர்வகிக்க விரும்பும் மன்னன் எப்போதும் நாட்டை நிர்வகிக்க விரும்பும் மன்னன் எப்போதும் தண்டத்தைச் செலுத்துதலில் முயற்சியுடையவனாதல் வேண்டும். கொடுந்தண்டம் மக்களை நடுக்க முறுத்தும். குறைந்த தண்டம் அவமதிக்கப்படும். தகுதியான தண்டம் நன்கு மதிக்கப்படும். நூற்பயிற்சியைப் பற்றுக்கோடகவுடைய அத்தண்டம் உயிர்களுக்கு நாற்பேறளித்துக் காக்கும்""(ப-73-75) என்று தண்டத்தின் இன்றியமையாமையை கூறுகிறார்.
நாடு
வள்ளுவர்,
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு(737)
என்றும்
தள்ளா விளையுள் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்த்து நாடு (731)
என்று நாட்டிற்குரிய அடிப்படைத் தேவைகளைக் கூறுகிறார். நாட்டிற்கும் கேடு தருவன வளமின்மையேயாகும். ஆற்ற விளைந்து நாடு’‘விளைவு அணிஎன்றும் வளம் குன்றா நாடு’‘நாடாவளம் என்று நாட்டின் வளத்தின் இன்றியமையை வள்ளுவர் வலியுறுத்தி, உறுபசி, ஒவாப்பிணி, செருபகை, பல்குழு, உட்பகை, வேந்து அலைக்கும் கொல் குறும்பு போன்றவை நாட்டிற்குக் கேடு தருவன என்கிறார்.
கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா நாடு என்ப நாட்டின் தலை (736)என்பது வள்ளுவர் வாக்கு, பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் போன்றவை உடைய நாடே நல்ல நாடு என்றும், இயற்கை சீற்றத்தினால் ஒரு வேளை நாடு சீர்கெட்டால் தன் வளம் குன்றாமல் தன்னை உடனே சீர்ப்படுத்திக் கொள்ளும் நாடே சிறந்த நாடு என்கிறார் சாணக்கியர்.

உட்பகை
அரசன் தன் மனைவியிடத்தும், புதல்வர்களிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அரண் தன் புதல்வர் பலர் அரசுரிமைக்குத் தக்காராக இருக்க, அவருள் ஒருவனை தேர்ந்தெடுத்தவழி, மற்றவர் அரசனுக்குத் தீங்கு தரலாம். (ப-42) என்பது சாணக்கியர் கருத்து வள்ளுவரும் உட்பகை பற்றிக் கூறுகிறார். ஆனால், குடும்பத்திற்குள் காணப்படும் உட்பகை பற்றி கூறவில்லை.
முடிவுரை
வள்ளுவரும் சாணக்கியரும் அரசியல் தொடர்பான பல கருத்துக்களில் ஒன்று படுகின்றனர். ஒரு நாட்டில் ஆட்சி உறுதியாக அமைந்து நிலைபெற்று உயர அரசனே அடித்தளம். அவ்வரசன் நீதி, நிர்வாகம், தண்ட நீதி உள்ளிட்ட அடிப்படை நூல்களைக் கற்றிருப்பதோடு அதன் படி நடக்க வேண்டும். தக்க பெரியாரின் வழிகாட்டுதலோடு, தன்னறிவையும் பயன்படுத்தி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் வருவாய்க்கு அடிப்படையான உழவு, வாணிகம் குறித்து விழிப்புணர்வோடிருப்பதோடு, தண்ட நீதியிலும் நடுநிலைமை வகிக்க வேண்டும். நாட்டின் வளத்தை மேம்படுத்த வேண்டிய செயல்களில் ஈடுபடுவதோடு அயல் நாடுகளோடு இணைந்து கொண்டு பணிந்து தன் பாதுகாப்பிற்கும், பிறன் பாதுகாப்புற்கும் வழியேற்படுத்தி குழந்தையைத் தந்தை பாதுகாப்பதுபோல நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் வேண்டும் ஒன்று படுகின்றனர். தொழில்களை வருணாசிரமம் அடிப்படையில் பிரித்து உழவை இழிதொழிலாக சாணக்கியர் கருத, அரசின் வருவாய்க்கு அடித்தளம் உழவு என்பதால் உயர் தொழிலாய் வள்ளுவர் கருதுகிறார். மன்னரை ஓர் உறுப்பாக்கி நாட்டின் உடைமைகளுள் ஒன்றாகக் காண, வள்ளுவரோ மன்னனின் உடைமையே நாடு என்கிறார். வேந்துரிமை என்பது பிறப்புரிமை என்ற கருத்திற்கு திருக்குறளில் குறிப்பு இல்லை. நாட்டுக்கு ஓரரசு வேண்டும். அரசுக்கு ஒரு தலைவன் வேண்டும். அத்தலைவன் தலைக்குரிய அரசை எப்படி நல்லரசாக மாற்றுவது என்பது குறித்தே சிந்தித்துச் செயல் பட வேண்டும் என்ற நோக்கில் அரசியல்பகுதியை அமைத்துள்ளார்.
ஒரு மன்னன்,நாட்டிற்கு பகையை ஏற்படுத்தாமல் பணிந்துபோக வேண்டுமென்று கூற, சாணக்கியர் பகை நாட்டை தந்திரவழியிலாவது அழித்துவிட வேண்டும் என்று பகையை வளர்க்கும் வழி குறித்து கூறுகிறார். சாணக்கியர், இழிதொழிலாக உழவைக் கருதினாலும் நாட்டின் வருவாய்க்கு அடித்தளம்  உழவே என்பதால் மன்னன் சிறப்பாக அதைக் கண்காணித்து பொருள் வருவாய்க்கு வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று வருவாயடிப்படையில் உழவை முதன்மையாக்குகிறார். உழவிற்கும், உழுவோர்க்கும் முதன்மையில்லை. அதிலிருந்து வரும் வருவாய்க்கே முதன்மை என்றடிப்படையில் சாணக்கியர் பார்க்கிறார். வள்ளுவர் அன்பின் அடித்தளத்தில் அரசியலை அமைக்க, சாணக்கியர் அதிகார நோக்கில் அரசியலை அணுகுகிறார். அரசன், அமைச்சன், ஒற்றன் போன்றோர் பற்றிய கருத்துக்களில் திருக்குறள் கருத்துகளையே சாணக்கியர் கையாளுகிறார்.
பார்வை நூல்கள்
கதிரேசச் செட்டியார் மு. (மொ.பெ) கௌடலீயம் பொருணூல், செண்பகா பதிப்பகம், பாண்டிபஜார், தியாகராயநகர்,சென்னை-17முதற்பதிப்பு 2014.
புலியூர்கேசிகன் (பதி) திருக்குறள்பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம்,பிராட்வே, சென்னை -108ஆறாம் பதிப்பு 1995.
வேங்கடசாமி நாட்டார் ந.மு. (உரை), சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம். சென்னை -14, ஆண்டு 2008

மருதநாயகம்.ப (கட்டுரை) வடமொழிப் பொருள் இன்ப நூல்களில் வள்ளுத்தின் தாக்கம்,
தமிழ் ஞாலம், மதுரை-21 முதற்பதிப்பு 2006

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?