முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Saturday, 20 February 2016

மணிமேகலை காப்பியப் பௌத்தச் சான்றோர்கள் 

 
Image result for திரிபிடகம் 
மணிமேகலை காப்பியப்  பௌத்தச் சான்றோர்கள்


            பெளத்தமதக் கொள்கைகளைப் பரப்பவும், பௌத்தர் பெருமைகளைப் பேசவும் தமில் எழுந்த காப்பியங்கள் இரண்டு. அவை மணிமேகலை, குண்டலகேசி. இக்காப்பியங்கள் பெண்ணை மையப்படுத்தி எழுந்த காப்பியங்கள். பெண்களுக்கான முதல் சமய மரபை நிறுவியர்- அடிமை முறையை முதன் முறையாக அகற்றுவதற்கு முயற்சித்தவர் பகவான் பௌத்தர் . ஒரு பெண் உண்மையை அறிய முயன்று, பல மதக் கொள்கையினையும் அறிந்து இறுதியில் பௌத்த சமயமே உயர்ந்தது எனக் கடைப்பிடிப்பது போல இக்காப்பியங்கள்  இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் காலத்தால் முற்பட்டது மணிமேகலை. இவள் சமயக் கருத்துக்களை அறிகிறாள். வாது செய்வதில்லை. ஆனால் பின்னர் வந்த நீலகேசி, குண்டலகேசி காப்பியங்கள் ஒரு பெண் வாதம் செய்து, தான் கொண்ட உண்மையினை நிலை நாட்டுவதனைக் கூறுகின்றன. இதில் நீலகேசி சமணம். குண்டலகேசி என்பது பெளத்தக் கொள்கையைக் குண்டலகேசி என்ற பெண் நிலைநாட்டிப் பிற மதங்களை மறுப்பதைக் கூறுகிறது. சில பாடல்கள் அன்றி இந்தக் காப்பிய முழுவதும் இன்றுவரை (1960) கிடைக்கவில்லை. இதனைப் பாடியவர் நாதகுத்தர் என நீலகேசி கூறுகின்றது. மணிமேகலை காப்பியம் பாடியவர் சீத்தலைச்சாத்தனார். மணிமேகலை காப்பியம், பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்த பல பௌத்தர்களைப் பற்றிக் கூறுகிறது. பௌத்தத்தில் தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் என்ற இருபிரிவு உள்ளது.


மணிமேலையில் கூறப்பட்டுள்ள பௌத்தம்
Image result for திரிபிடகம் 
மணிமேலையில் கூறப்பட்டுள்ள பௌத்தம் ஹீனயான பௌத்தம் (தேரவாதம்) என்றும், பௌத்தத்தின் பெரும் பிரிவான மகாயான கொள்கைகள் பரவுவதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்றும் மயிலை சீனி வேங்கடசாமிபௌத்தமும் தமிழும்என்ற நூலில் சான்றுகளோடு நிறுவுகிறார். இதே கருத்தோடு உ.வே.சாமிநாதய்யர் அவர்களும் உடன்பட்டு மணிமேகலையின் பௌத்தம் தேரவாதமே என்கிறார். மகாயான பெளத்தம் எழுவதற்கு முன்னர்ப் பௌத்தருக்குக் கோயில் கட்டி வழிபடாமல் அவருடைய திருவடி நிலைகளை மட்டும் வணங்கிய காலத்தில் எழுந்தது மணிமேகலை. அதில் காணும் மந்திர தந்திரங்கள் மகாயான பெளத்தம் தோன்றுவதற்கு வழி கோலுகின்றன எனக்கூறலாம் என்கிறார். இதில் மாறுபடுபவர் வையாபுரிப் பிள்ளையாவார். மணி மேகலையில் மகாயான கருத்துக்கள் சில உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி மணிமேகலை எடுத்துரைப்பது மகாயான பௌத்தமே என்கிறார் அவர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப்பட்டது என்பது மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் கருத்து. முனைவர் சோ.ந.கந்தசாமி 6ம் நூற்றாண்டிற்குரியது என்கிறார்.

பௌத்த சமயத்தின் சிறப்பு


Image result for திரிபிடகம் சமயச் சார்பற்ற பரந்த மனப்பான்மை என்பது தான் பௌத்த சமயத்தின் சிறப்பாகும். "பௌத்த சமயம் கொள்கைப் பிடிவாதம் கொண்டதில்லை. அதைப் பின்பற்றுவோர்களிடம் அது அதன் போதனைகளை விமர்சன நோக்குடன் பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் அதை எப்போதும் தங்கள் சொந்த அனுபவத்தின் துணையுடன் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அதைப் பின்பற்றுவோரிடம் தொடக்கக் காலக் கட்டங்களில் சில அடிப்படையான போதனைகளை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக் கொள்ளுமாறும், ஆக்கபூர்வமான, திறந்த மன மனோபாவத்தைக் கைக்கொள்ளுமாறும் அது கேட்டுக்கொள்கிறது; என்றாலும்கூட அதன் அக்கறை கோட்பாடுகளை வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில் இருப்பதை விடப் புரிந்து கொள்வதை வளர்ப்பதில் இருப்பது அதிகமானது. பௌத்த சமயம் அதைப் பின்பற்றுவோர் மீது பாவ மன்னிப்பு சார்ந்த நிபந்தனைகளைச் சுமத்துவதில்லை. சிறுபான்மைக் குழுக்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டு மரபுகளைப் பராமரிக்கும் சமூகச் சூழ்நிலையில் ஒரு பௌத்தனாக வாழ்வது எளிதாகிறது."என்கிறார் தாமியென் கோவ்ன்.(பௌத்தம் ப.172-173 )

எது பௌத்தம்?

பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மையும் கொண்டவர்களான பௌத்தர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மதக் கொள்கைகளைப் பெண்கள் உட்பட அனைவருக்கும் போதித்தனர். இதனடிப்படையில் பௌத்ததருமத்தை ஏற்று ஞானம் பெற்றவர்களை, அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களைப் பௌத்தர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.எதுவானாலும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பயமில்லாமல் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் பௌத்தன். அதுதான் பவுத்தம்.என்கிறார் பெரியார். (பௌத்தநெறி ப.13) அவ்வகையில் மணிமேகலை பௌத்ததருமத்தை ஏற்றுக் கடைப்பிடித்த சில பௌத்தர்களைப் பற்றிக் கூறி எல்லோரும் ஞானம் பெற்று பௌத்தராக உயர்நிலையடையலாம் என்கிறது.


மணிமேகலை காப்பியம் குறிப்பிடும் பௌத்தர்கள்

மணிமேகலை
Image result for மணிமேகலை 

மணிமேகலை பொது மகள் குலத்தில் பிறந்தும், பெளத்தத் துறவியாகிப் பெளத்த மதஅறவுரைகளைப் வழங்கி, அறம் வளர்த்து உயர்நிலை அடைகிறாள். பல மதங்களின் கொள்கைகளையும் மணிமேகலை அறிய முயல்கின்றாள். மணிமேகலை காப்பியத்தில் மாதவி, சுதமதி, ஆபுத்திரன், மாசாத்துவான், இராசமாதேவி, விசாகை, தருமத்தன் ஆகியவர்கள் சூழ்நிலையால் வாழ்க்கையை வெறுத்துத் துறவு பூண்டவர்கள். ஆனால் தாய் மாதவியால், மணிமேகலை துறவியாக்கப்பட்டாள். அனைவரிலும் இளமையில் துறவை ஏற்றவள் மணிமேகலை. மற்றவர்கள் இல்லறத்தில் இன்பம் அனுபவித்தவர்கள். ஆனால் மணிமேகலை வாழ்க்கை பற்றி எதையும் அறியாதவள். தந்தை உறவு குறித்து வெளியில் சொல்ல இயலாதவள். மற்றவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சந்தித்தபின் அதிருந்து விடுபடுவதற்காகத் துறவை மேற்கொண்டு, பின்னர்த் துறவு வாழ்க்கையில் அமைதியாக வாழ்ந்தார்கள். ஆனால் மணிமேகலை சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் பல. தந்தை இறந்தபின் தாய் மாதவி துறவு கோலம் பூண்டது எதிர்பாராதது. இன்ப வாழ்க்கையிலிருந்து திடீரென்று ஒரு பெரும் மாற்றம். பக்குவப்படாத நிலையில் உதயகுமாரனைக் கண்டு ஒரு தடுமாற்றம். அவள் வாழ்க்கையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே உதயகுமாரன் அவளைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்.

கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி” ( ம.மே.தெ.தோ.காதை.86-87)

 இதைக் கேட்ட நிலையில் அவன் பால் விருப்பம் கொண்ட தன் மனதை, அது விரும்பும் காமத்தை நோக்கியே பழிச் சொற்களைக் கூறுகிறாள்.இதுவோ, அன்னாய் காமத்து இயற்கை. இதுவே ஆயின் கெடுக தன் திறம்”. என்கிறாள். உதயகுமாரனைப் பழிக்காத தன் உள்ளத்தையும் சேர்த்தேதான் இவ்வாறு கூறுகிறாள். பருவ வயதில் தன் மனதில் தோன்றும் எண்ணங்களை மட்டுமே அறிந்து ஆராயும் இயல்புடையவளாகிய மணிமேகலை, துறவு குறித்துச் சிறிதும் நினைத்தறியாதவள். ஆனால் அவ்வாறு அவன்பால் சென்ற தன் மனதின் காரணத்திற்குரிய விடையைப் பழம்பிறப்பு மூலம் அறிகிறாள். முப்பிறவியில் அவள் ஒரு மன்னனின் மகள். அவனும் ஒரு மன்னனின் மகன். இருவரும் முறைப்படி மணமுடித்துக்கொள்ளும் நிலையிருந்தது. கணவன்மனைவியாக வாழ்ந்தனர். ஆனால் இப்பிறவி வாழ்க்கை வேறு. அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள நினைக்காமல் பொருள் விலையாட்டியாகவே கருதி உதயகுமரன் அவளைத் துரத்துகிறான்.

அவனுடையவருணக் காப்பு இலள்.... கற்புத் தான் இலள்என்ற சொற்கள் அவளைப் பெரிதும் பாதித்திருக்கக்கூடும். தன் தந்தையிருந்திருந்தால் இப்பழிச் சொல்லைத் தான் கேட்க நேரிட்டிருக்குமா என்றெண்ணுகிறாள். இதனால்தான் மணி பல்லவத் தீவிலிருந்த போது, தனிமையில் அவள் தன் தந்தையை நினைத்து அழுகிறாள். தன் எதிர்காலத்தைக் குறித்து அவள் சிந்திப்பதற்கு அந்தத் தனிமை அவளுக்கு உதவியிருக்கிறது. உதயகுமரன் தன்னைப் பழித்தற்குக் காரணமான தன் குலம் குறித்துச் சிந்தித்திருப்பாள். தான் பொருள் விலையாட்டியாக வாழக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் வேரூன்றியிருக்கும். ஒரு கணிகை மகள் பிறர் மதிக்க வாழ்வதெப்படி என்ற அவளுடைய சிந்தனைக்குப் பௌத்தபீடிகை தன் மௌனத்தின் மூலமாகப் பதில் சொல்லியிருக்கும்.கற்புத் தான் இலள் வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டிஎன்று கணிகை மகளை ஒருவன் கூறலாம். ஆனால்நல் தவ உணர்வு இலள்என்ற எவ்வாறு கூறலாம்? உதயகுமரனின் இச்சொற்கள் அவளைப் புரட்டிப் போட்டுவிட்டன என்றே கூறலாம். அந்தக் கணத்திலேயே அவளுடைய மனதில் வைராக்கியம் ஊற்றெடுத்திருக்கக்கூடும்.

கணிகைக் குலத்துப் பெண்ணும் தவ உணர்வு உடையவள்தான், அவளால் சமூகத்தில் பிறருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் தலை நிமிர்ந்து வாழவும் முடியும் என்று நிரூபித்துக் காட்டவேண்டுமென்று தோன்றிய எண்ணங்களின் விளைவுதான் அவள் துறவுக்குத் தன்னை அர்ப்பணிக்கக் காரணங்களாயிற்று.  மற்றவர்கள் துறவு தன்னல நோக்கம் கொண்டது. பிறருக்கு பயன்படாதது. ஆனால் மணிமேகலையின் துறவு மண்ணுலக நல்வாழ்விற்கே உரியது. சமூகத்தில் தேவையற்ற பழக்கங்களினால் ஏற்பட்ட சாதி,சமய, இனம்,இழிகுலம் முதலான வாழ்க்கைப் போக்குகளை, பெளத்த சமயம் பெரிதுபடுத்துவதில்லை. மாறாக இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள், சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படக்கூடிய துறவு வாழ்க்கையை மேற்கொண்டால் பொதுவுடைச் சமுதாயம் மலர்ந்துவிடும் என்பதே மணிமேகலையின் துறவு வாழ்க்கை கூறும் அறம் ஆகும். இதுபோற்றுவதற்குரியது. பௌத்தத் துறவியின் வாழ்க்கையானது ஆண், பெண் வேறுபாடின்றி விநயப் பிடகக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் முதல் பௌத்த துறவி மாதவியாக இருப்பினும், மணிமேகலையே முழுமையான முதல் துறவியாக மதிக்கப்படவேண்டியவள். அவ்வகையில் பௌத்தரைப்போல் வாழ்ந்த மணிமேகலையும் ஞானம் பெற்ற ஒரு பௌத்தரே. காஞ்சி மாநகரில் அறவணடிகளிடம் முறையாகப் பௌத்த தருமங்களைக் கேட்டு கடைப்பிடித்த காரணத்தினால் தான் இன்றும் காஞ்சியில் மணிமேகலைக் கோயில் இருப்பதாகவும் மணிமேகலை என்ற அறச்சொல்லை நினைவுகூரும் வகையில், தற்போது, அங்குள்ள ஒரு தெருஅறம்பெருஞ்செல்விஎன அழைக்கப்படுகிறது என்றும் ஆய்வுகள கூறுகின்றன என்கிறார் மு. நீலகண்டன்..( http://keetru.com)

தருமசாவகர்


Image result for திரிபிடகம் 
சாவகத் தீவில் வாழும் பௌத்த துறவி. மணிமேகலை முதன்முதலில் இவரிடமே பௌத்தரின் கொள்கைகளைக் கேட்டறிகிறாள். ஆபுத்திரனாகிய புண்ணியராசனைச் சந்திக்கச் சென்ற அடத்தில் இவரைச் சந்திக்கிறாள். இவரே மணிமேகலைக்கு அறத்தின் பெருமையையும், பாவத்தின் இழிவையும், வாழ்வின் நிலையற்ற தன்மையையும் எடுத்துரைக்கிறார். மேலும் நிலைத்த மெய்ப்பொருளின் இயல்பையும், துக்கத்தின் தன்மையையும், உடலிலிருந்து பிரியும் உயிர்கள் சென்று சேரும் இடத்தையும், முக்தி பெறும் வழியையும், பௌத்தரின் அமைதியைப் பெறும் வழியையும் போதிக்கிறார்.


 
அறவணடிகள்Image result for அறவணஅடிகள் 

புகார் நகரில் வாழ்ந்த பௌத்த துறவியான இவர் பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்து வந்தவர். புகார் நகரில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்ந்திருக்கிறார். மணிமேகலை சிறைப்பட்டிருப்பதையறிந்து சோழன் அவைக்குச் சென்று அரசமாமேவியைச் சந்திக்கிறார். அரசமாதேவி தக்க மரியாதையோடு இவரை வரவேற்கிறார் என்பதிலிருந்தே இவரது சிறப்பறியலாம். புகார் நகர் கடலுக்கிரையாகும் என்பதால் காஞ்சிக்குச் சென்று தன் போதனையைத் தொடர்கிறார். அங்கே மணிமேகலை, இவரைச் சந்தித்துப் பௌத்த தருமத்தைக் கேட்கிறாள். மாதவி சுதமதி உள்ளிட்ட பலரும் இவரிட்மே பௌத்த தருமத்தைக் கேட்டு கடைப்பிடிக்கின்றனர்.இப்போது காஞ்சிபுரத்தில், 'அறப்பணஞ்சேரி' என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அஃது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி (சேரி - தெரு) என்று வழங்கப்பட்டதென்றும் கூறுவார் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள்.”(தமிழ்ப் பௌத்தம் இணையதளம்.) மணிமேகலைக்குப் பௌத்தருடைய முழுக் கொள்கையையும் எடுத்துரைத்து அவளுடைய ஐயங்களை நீக்கி முழுமைத் துறவை மேற்கொள்ளத் துணையாக இருந்தவர் இவரே. இவரும் பௌத்தராகவே கருதப்படுகிறார்.


மாசாத்துவான் - பௌத்த சமயத்தின் பரந்த மனப்பான்மை


Image result for திரிபிடகம் 
பௌத்த சமயக் கருத்துக்கள் பரந்த மனப்பான்மையும் முற்போக்கும் உடையதாகத் திகழ்கின்றன என்பதை மாசாத்துவன் வாழ்க்கை மாற்றத்திலிருந்து இதை அறியலாம். பௌத்த சமயத்தின் ஒழுக்கவியல் போதனைகள் யாருக்கும் கட்டளையிடுவதில்லை. இதைக் கடைப்பிடித்தால், தன்னுடைய நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் மட்டுமல்லாது மற்றவர்களின் நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் வழி காட்டுபவர்களாக மாறிவிடலாம் என்ற பகுத்தறிவு சார்ந்த தத்துவங்களாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. மாசாத்துவான், கோவலன் கண்ணகி துயர நிலையைக் கேட்டளவில் வாழ்வின் நிலையாமை உணர்ந்து பௌத்த தருமத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார் என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. அதுவரை வணிகம் மேற்கொண்டு பொருள் செல்வம் ஈட்டி, மன்னர்களுக்கு நிகராக வாழ்ந்து கொண்டிருந்த மாசாத்துவான் தன் முன்னோர்களை நினைத்துப் பார்க்கிறார். அவரின் முன்னோரில் ஒருவர் பௌத்ததருமத்தைக் கடைப்பிடித்தவர்.  தன் சொத்துக்களை மக்களுக்குக் கொடுத்த வரலாறு நினைவிற்கு வருகிறது. அதுபோலவே இல்வாழ்க்கை, செல்வம், யாக்கை முதலியவை நிலையில்லாதவை என உணர்ந்து தன் சொத்துக்களை மக்களுக்குக் கொடுத்துப் பௌத்த தருமத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார். இதை மணிமேகலையிடம் வஞ்சி நகரில் அவரே கூறுகிறார்.

அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் (96-100)

எனக் கச்சி மாநகர் புக்கக் காதையில் குறிப்பிடுகிறார். மேலும், தான் வஞ்சிக்கு வந்த காரணத்தையும் தெரிவிக்கிறார். வஞ்சியில் கோவலனின் ஒன்பது தலைமுறை முன்னோன் கோவலன் என்று பெயருடையவன் கட்டிய வானளாவிய பௌத்தர் கோயிலைக் காண்பதற்காக வஞ்சிக்கு வந்ததாகத் தெரிவிக்கும் மாசாத்துவான் மணிமேகலையை ""தூயோய்!"" என்கிறார். மேலும்நின்னை என் நல்வினைப் பயன் கொல் நான் கண்டது’ (க.மா.பு.கா.91-92) என்று அவளைக் கண்டது தனது நல்வினைப்பயன் என்று தெரிவிக்கிறார். புகார் நகரத்தில் வாழ்ந்திருந்த காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை என்பது இங்கு உணர்த்தப்படுகிறது. மணிமேகலை கோவலனின் மகளாக இருப்பினும் அவள் கண்ணகிக்குப் பிறந்திருந்தால் மாசாத்துவானே அவளைப் பார்க்கச் சென்றிருப்பார். அவள் மழலையைக் கேட்டிருப்பார். அவள் வளர்ச்சியைக் கொண்டாடியிருப்பார். ஆனால் மணிமேகலை கணிகை மாதவிக்குப் பிறந்து விட்டதால், மணிமேகலையையும் குல மகளாக ஏற்க இயலா சூழலில் அவளைக் காணச் செல்லவில்லை என்பதும் கோவலனும் மணிமேகலையை மாசாத்துவானிடம் அழைத்துச் செல்லவில்லை என்பதும் புரிந்து கொள்ளற்குரியதே. உறவுமுறை இருந்தாலும் உரிமையோடு உறவை கூறிக் கொள்ள அக்காலச்சூழல் தடையாக இருந்து இருவரையும் பார்க்கவிடாமலே செய்திருக்கிறது. கணிகை குலத்துப் பெண்தானே என்று இகழ்வோடு உதயகுமாரன் மணிமேகலை குறித்துச் சுதமதியிடம் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறான்.

""
கற்புத்தான் இலள் நல்தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி""(86-87)

அக்காலக் கணிகையரைக் குறித்த இப்பார்வை சமூகத்தில் உயர் நிலையிலிருந்தவர்களிடம் இருந்திருக்கிறது. மாசாத்துவானும் இதற்கு விதிவிலக்கல்ல. பௌத்த தருமத்தைக் கடைப்பிடிக்கும் வரையில் மணிமேகலையைக் குலமகளாகவோ, தன் பேத்தியாகவோ நினைத்தறியாத மாசாத்துவான் பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்த நிலையில், வஞ்சியில்தூயோய்என்கிறார்என் நல்வினைப் பயன்அவளைக் கண்டது என்கிறார். எவ்வளவு பெரிய மாற்றம். இது மிகப்பெரிய சமூகச் புரட்சி. பௌத்த சமயம் பரந்த மனப்பான்மையை, உறவுகளின் உன்னதத்தை அறியும் அறிவை, மனித நேய மேன்மையை, அன்பின் வலிமையை அதைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வழங்கியிருக்கிறது. சமூகப் பொருளாதார, குடும்ப முரண்களைக் களைந்து இங்கு மனிதர்களை ஒன்று சேர்த்திருப்பது பௌத்த சமயமே.


கோவலனோடு மணிமேகலை, மாசாத்துவானைச் சந்தித்திருப்பின் கணிகையின் மகள் என்றளவிலேயே நோக்கப்பட்டிருப்பாள். ஆனால் மாதவி, மணிமேகலை இருவரும் பௌத்த சமயத்திற்கு மாறிய நிலையில் மணிமேகலையைச் சந்திக்கும் மாசாத்துவான் பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்து வருவதால் பரந்த மனம் பெற்று தன் பேத்தியைத் துறவியாகக் கண்டு மகிழ்ச்சியடைகிறார். மணிமேகலையிடம் கோவலன் குறித்துக் கூறும் பொழுது, ‘நின் பெருந் தாதைஎன்கிறார். கோவலனின் ஒன்பது வழிமுறை முன்னோன் குறித்தும் அவளிடம் உரிமையோடு கூறுகிறார். மாதவியும் சுதமதியும் அறவண அடிகளுடன் கச்சி நகர் சென்றிருக்கும் செய்தியையும் தெரிவிக்கிறார்.

பௌத்த ஞானம் பெறுவதற்கு முன் மாதவி, சுதமதி இருவரின் பெயர்களைக் கூட உச்சரிப்பதைக் கேவலமாகக் கருதியிருப்பார். மணிமேகலை, மாதவி, சுதமதி குறித்து உயர்ந்த எண்ணத்தைப் பெறுவதற்கு அவரின் பௌத்த ஞானமே காரணமாகும். பௌத்த சமயத்தைப் பொருத்த வரை பௌத்த சமயத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு எதிரான சமூக, பொருளாதார வாழ்வியல் முரண்பாடுகள் பெரிதுபடுத்தப்படுவது இல்லை. ஒரு தத்துவார்த்த முறையில் சமநிலை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மரபார்ந்த கருத்துடைய ஒரு சமூகத்தில் உயர் நிலையில் வாழும் மாசாத்துவான் போன்றவர்களின் மனதில் ஏற்பட்ட இம்மாற்றமே மாபெரும் புரட்சியாகும். அவ்வகையில் மகன் இறந்த விரக்தியில் பௌத்தத்தில் சேர்ந்திருந்தாலும், பெயரளவில் பௌத்த தருமத்தைக் கடைப்பிடிக்காமல், உண்மையாகவே அதன் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, அதில் முழுமையாக ஈடுபட்டு தன் சொத்துக்களை மக்களுக்குக் கொடுத்துவிட்டு முழுமனதோடு மணிமேகலையை ஏற்றுதூயோய்என்றும்அவளைக் கண்டது தன் நல்வினைப் பயன்என்றும் நெகிழ்ந்து கூறியதோடு அறவண அடிகளிடம் சென்று துறவியாகவும் வாழ்கின்ற மாசாத்துவான் ஒரு உண்மையான பௌத்தரே. பௌத்தத்தில் உணர்வு சார்ந்த பரிமாணம் என்பது வாழ்ந்து கிட்டிய பட்டறிவு என்ற முறையில் மிக முக்கியத்துவம் உடையது. அந்தப் பட்டறிவை மாசாத்துவான் பெற்றிருப்பதையே அவருடைய உரைகளில் காண்கிறோம்.


கோவலன் ஒரு பௌத்தனேImage result for திரிபிடகம் 

இவன் குடக்கோச்சேரலாதனின் நண்பன். இவன் மணிமேகலையின் தந்தை கோவலனின் ஒன்பது தலைமுறை முன்னோன். மாசாத்துவான் இவனது வரலாற்றை மணிமேகலையிடம் கூறுகிறார். பண்டு குடக்கோச்சேரலாதன் இலங்கைத்தீவிலுள்ளசமளொளிபகுதியிலிருந்து சேரநாடு வந்த பௌத்தர் மரபைப் பின்பற்றும் தரும சாரணர் கூட்டத்தை வரவேற்று உபசரிக்கிறான். அவர்கள் பௌத்த தேவனின் அருளறத்தையும், நால்வகை வாய்மையையும் சேரலாதனுக்குப் போதிக்கின்றனர். அப்போது கோவலனும் உடனிருந்து பௌத்த தருமத்தின் கொள்கையைக் கேட்டு ஈர்க்கப்படுகிறான். தன் முன்னோர் திரட்டிய செல்வத்தையும், தான் திரட்டிய செல்வத்தையும் ஏழு நாட்களுக்குள் இரவலர்க்களித்துத் தவம் மேற்கொள்கிறான். மேலும் சேர நாட்டில் பௌத்தருக்கு வானளாவிய கோவிலை அமைத்துப் பௌத்த தருமத்தினைக் கடைப்பிடித்துத் தானும் ஒரு பௌத்தனாகிறான். அவ்வகையில் இக்கோவலனும் ஒரு பௌத்தனே.


மணிமேகலையின்முன்னோன்-பீலிவளைகாலத்தவன்

Image result for திரிபிடகம் 
நாகநாட்டரசனின் மகளாகிய பீலிவளை, சோழன் நெடுமுடிக்கிள்ளிக்கும் தனக்கும் பிறந்த குழந்தையைச் சோழனிடம் ஒப்படைக்க, கம்பளச் செட்டியிடம் அடைக்கலம் கொடுக்கிறாள். கடல் பொங்கி, கலம் மூழ்கிய நிலையில் குழந்தையைக் காணாத கம்பளச் செட்டி சோழனிடம் தெரிவிக்கிறான். மகனை இழந்த துயரத்தில் இந்திரவிழா எடுக்காததால் கோபமுற்ற இந்திரன் இட்ட சாபம் மீண்டுமொருமுறை கடல் பொங்கக் காரணமாகிறது. அப்போது கடலில் பயணம் மேற்கொண்டிருந்த கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் தத்தளிக்கிறான். அவன் ஐவகைச் சீலமும், நால்வகை வாய்மையும் வழுவாமல் மேற்கொள்ளும் இயல்பினன் ஆதலால், இந்திரன் அவனைக் காப்பாற்றக் கருதி, மணிமேகலா தெய்வத்தை அழைக்கிறான். அத்தெய்வத்திடம்இவ்வணிகன் போதிசத்வன் ஆகும் தகுதியுடையவன் என்பதால் இவனைக் காப்பாற்றுவாயாகஎனக் கூற அத்தெய்வமும் காப்பாற்றியது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. இவன் பெயர் பற்றிய குறிப்பில்லை என்றாலும் இவனும் தெய்வங்களால் பௌத்தனாகவே மதிக்கப்பட்டிருக்கிறான் என்பதால் இவனும் ஒரு பௌத்தனே.


சங்கதருமன்


Image result for திரிபிடகம் 
உயர்ந்தோர், இழிந்தோர் என்று பிறர் கருதுவது போலக் கருதாமல் சமுதாயத் தொண்டினைப் பெளத்தப் பெருமக்கள் உள்ளன்போடு செய்து வந்ததை மணிமேகலை பெருங்காப்பியம் பரக்கப் பேசுகிறது. மயிலை.சீனி-வேங்கடசாமி கி.மு.358க்கு முன்னரே பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டில் சேவைப்பணிகளிலும், மருத்துவப் பணிகளிலும் ஈடுபட்டதை ஆதாரங்களோடு விளக்குகிறார்.
சுதமதி உதயகுமாரனிடம் தன் வரலாற்றைக் கூறுமிடத்து இப்பௌத்தரைக் குறித்துக் கூறுகிறாள். விஞ்ஞையனாகிய மருதவேகனால் கைவிடப்பட்டு நிராதரவாகப் புகார் தெருக்களில் சுதமதி அலைந்து திரிகிறாள். அவளைத் தேடி அலையும் அவளுடைய தந்தை பார்ப்பன முதியோன் புகாரில் கண்டுபிடிக்கிறான். அவன் பின்பற்றும் சமயத்திலுள்ள மறை ஓதும் அந்தணர்கள் இவ்வாறு கைவிடப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே சுதமதியுடன் இரந்துண்டு வாழும் வாழ்வை மேற்கொள்கிறான். அப்போது ஒரு பசு அவனுடைய வயிற்றைக் கிழித்து விட்டது. சரிந்த குடலை கையில் ஏந்தியபடி இறப்பதற்குள் மகளுக்கு அடைக்கலம் தேடிக் கொடுத்துவிட வேண்டுமென்று தெருக்கள்தோறும் அலைகிறான். அவன் குலம் அவனுக்கு உதவ முன்வரவில்லை. தகுந்த சிகிச்சையும் தரவில்லை. புகார் நகரிலுள்ள வானளாவிய மாடங்களில் வசிக்கும் இல்லறத்தாரும், தெருக்களில் செல்லும் பல சமய மக்களும் உதவ முன் வராத நிலையில் ஒரு சமணப் பள்ளிக்குள் நுழைகிறான். ஆனால் சமணர்கள் வெளியே செல்லுமாறு கையசைவில் தெரிவிக்கத் தெருக்கள் தோறும் சரிந்த குடலைப் பிடித்தபடி, மகளுடன் அலைந்து திரிகிறான்.

அப்போது பிச்சை பெற வந்த சங்க தருமன் என்ற பௌத்த துறவி, சுதமதியும் அவள் தந்தையும் படும் துயரறிந்து தானே உதவ முன் வந்தான். உதவி கேட்பதற்கு முன்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவியைச் செய்ய வேண்டும் என்ற பௌத்த தருமக் கொள்கையைக் கடைப்பிடிப்பவனாதலால் தானே உதவ ஓடோடி வந்தான். சுதமதியும் அவள் தந்தையும் உதவி கேட்பதற்கு முன்னரே, அவர்கள் நிலையைத் தானே அறிந்து, உமக்கு நேர்ந்த துன்பம் யாது? எனத் தானே முன் வந்து வினவினான். அவனுடைய அன்பு கலந்த அருள்மிகுந்த இன் சொற்களைக் கேட்டளவில் சுதமதியின் நெஞ்சம் குளிர்ந்தது. சுதமதியின் தந்தை நிலையறிந்து தன் கையிலிருந்த பாத்திரத்தைச் சுதமதியிடம் தந்துவிட்டு, அவளுடைய தந்தையை விரைந்து எடுத்து, தன் தோளில் சுமந்து சென்று, பௌத்த முனிவர்கள் உறைவிடத்தை அடைந்தான். அங்கு அவர்களை அறிமுகப்படுத்தி உரிய முறையில் சிசிச்சை ஏற்பாடு செய்து, சாகுந் தருவாயிலிருந்த தந்தையைக் காப்பாற்றித் தருகிறான். சுதமதிக்கும் அடைக்கலம் ஏற்பாடு செய்கிறான். மேலும் சுதமதிக்குக் குருவாக இருந்து பௌத்த தருமத்தையும் போதிக்கிறான். இவ்வாறு மனிதநேயத்துடன் முன்வந்து உதவவும், அவர்களுக்கு உரிய முறையில் மருத்துவச் சிகிச்சையும், அடைக்கலமும் தருவதற்குக் காரணமானது பௌத்த சமயமே. எனவே பௌத்தரையும் அவர் வழி வந்த சங்க தருமனின் சிறப்பையும் போற்றுகிறாள் சுதமதி.
பல சமயவாதிகள் வாழும் அவ்வூரில் பௌத்த நெறி சார்ந்த ஒருவரே தமக்குரிய துன்பம் அறந்து அதைத் தீர்த்து வாழ்வளித்தார் என்கிறாள். "பௌத்த தருமமே மிக உயர்ந்தது. பௌத்த தேவனே எம்முடைய இறைவன். குற்றமில்லாத குணங்களின் மெய்ப்பொருளானவன். தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்-அருளாகிய அறத்தைப் பூண்ட பெரிய இலட்சியவாதி. அறமாகிய கதிர்களைத் திறம்பட உலகில் உருட்டியவன். தரும சக்கரத்தை உலகெங்கும் பரப்பியவன். காமனை வென்ற வாமன்."என்கிறாள். பௌத்த நெறியைப் பின்பற்றியதாலேயே சங்க தருமன் எங்களுடைய துன்பமறிந்து அதை நீக்கி உதவினான். பிற சமயங்கள் புறக்கணித்த நிலையில் எங்களை அடைக்கலப் பொருளாய் விரும்பி ஏற்றதோடு, சாகும் தருவாயிலிருந்த தந்தைக்கு உரிய சிகிச்சையளித்துக் காப்பாற்றினான். மேலும் உரிய வழியில் எனக்கு அடைக்கலமளித்துப் பௌத்த தருமத்தைப் போதித்து ஞானம் தந்தான் என்று சங்க தருமனைப் போற்றுகிறாள். பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்து அதன் வழி வாழ்ந்த சங்க தருமனும் பௌத்தனாகவே சுதமதியால் போற்றப்படுகிறான்.

பிரமதருமன்

Image result for திரிபிடகம் 

மணிகேலையின் பழம்பிறப்பில் அவள் லட்சுமியாக இருந்தபோது அவளுக்கு அவளுடைய எதிர்கால நிலையுரைத்துப் போதித்தவர். அத்திபதி அரசனிடம் அவனுடைய இடவயம் நாடு பூகம்பத்தால் அழியப் போவதாக எச்சரித்தவர். முக்காலமும் அறிந்தவர். பௌத்தபீடிகை கண்டு பழம்பிறப்பையறிந்த மணிமேகலை பௌத்தபீடிகைக்குரியவர் பிரமதருமனே என நினைத்து அதனோடு பேசுகிறாள். அவ்வகையில் பௌத்தருமத்தைக் கடைப்பிடித்த்தால் முக்காலமும் அறிந்த இவரும் பௌத்தராகவே கருதப்பட்டுக் காப்பிய மாந்தர்களால் வணங்கப்படுகிறார்.

முடிவுரை

மேற்குறிப்பிட்ட காப்பிய மாந்தர்கள் அனைவரும் பௌத்த தருமத்தை கடைப் பிடித்தவர்கள். விரும்பி துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். தூய தொண்டில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்கள். இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர்கள். சுய பரிசோதனை மேற்கொண்டு ஞானம் பெற்றவர்கள். தன்னுடைய நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் மட்டுமல்லாது, மற்றவர்கள் நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் வழி காட்டிச் செல்கிற பகுத்தறிவு சார்ந்தவர்களாக மேற்கூறப்பட்ட மாந்தர்கள் காணப்படுகின்றனர். இவர்களிடம் சமயச் சார்பற்ற பரந்த மனப்பான்மை தென்படுகிறது. இவையே பௌத்தனாவதற்கான பண்புகள். இப்பண்புகளைப் பெற்றிருப்பதாலேதான் இவர்கள் தொழப்படுகின்றனர். போற்றப்படுகின்றனர். மணிமேகலை காப்பியம் இவர்களைப் பௌத்தராகவே இனங்காட்டுகிறது.


துணைநின்ற நூல்கள்

1.
ஸ்ரீ.சந்திரன் உரை.. மணிமேகலை தமிழ் நிலையம், 40, சரோஜினி தெரு,தியாகராய நகர், சென்னை-17. ஆண்டு 2013
2.
தாமியென் கோவ்ன், தமிழில் சி.மணி. பௌத்தம்,அடையாளம் வெளியீடு,பௌத்தநாதம். ஆண்டு 2005
3.
தந்தைபெரியார், பௌத்த நெறி,திராவிடர் கழக வெளியீடு,சென்னை- 7 ஆண்டு 1957

(15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை)
4.
மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், கழக வெளியீடு,சென்னை. ஆண்டு 1964
5.
சோ.ந. கந்தசாமி, மணிமேகலையின் காலம், தொல்காப்பியர் நூலகம்,சென்னை-14 ஆண்டு 1961

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?