முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Sunday, 23 August 2015

புத்தக வாசிப்பு பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம்பதில்கள் சந்திரசேகரன் சுப்பிரமணியம்'s photo.

பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம்பதில்கள் 
prof.Dr.Chandrasekaran subramaniam M.E.,Ph.D., MIEEE, MACM, MSEI, MASQ, MIET, MCSI, MWSEAS, 
Dean & professor of Academic & Research,
Departments of CSE & I.T & ECE
Sri Ranganathar Institute of Engineering and Technology,coimbatore -641010
பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம் கணினி மற்றும் தமிழை இரு கண்களாகக் கொண்டவர். சங்கப் பா  சொல்லடுக்கில்  மரபுப் பா புனைபவர். தமிழறிஞர்கள் பொறாமைப்படும் அளிவிற்கு சங்கப்பாக்களில் தோய்ந்தவர். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்ற பாரதியின் கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் துடிப்பவர். செயலாக்கம் உடைய இளைஞர். தமிழ் மொழியே உலக பொது மொழி எனவும், கணினி பகுப்பாய்வு தொடங்கி, வடிவாக்கம் முதல் நிரலாக்கம் முதல் ஒப்பாய்வு முடிய தமிழே என நாம் தான் ஒன்று சேர்ந்து ஒலிக்க வேண்டும் எனத் தமிழ் வாழ முழக்கம் செய்பவர்.
 
 ஸ்டான்ஃபொர்ட் பல்கலையில் இசைத்துறையில் கணினியும் தமிழிசையும் அழகாக நடத்துகிறார்கள். நாலாம் தமிழ் சங்கம் மேக கணிப்பியலில் 100000 மேற்பட்ட கணினிகள் ஒன்று சேர்ந்து மென் மெய்னிகர் கவிஞர்கள் பாடல் இயற்றகணினி இயல் தமிழ் , கணினி இசைதமிழ், கணினி கூத்துத் தமிழ்என இக்கால தமிழை தொழில்நுட்பத்துடன் ஏற்றி வைத்து மகிழ்கிறார்கள் என்று கூறும் இவர், தமிழில் இது போல் ஆய்வுகள் இல்லையே என்று ஏங்குபவர். இவருடைய 200 க்கும் மேற்பட்டகணினித் துறை மாணவர்கள் உலக நாடுகளில் பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்குபன்னாட்டு கருத்தரங்கங்கம், மா நாடுகள் ஆகியவற்றில் ஆய்வுக்கடுரை சமர்ப்பிக்க வழிகாட்டுபவர்.

என்னுடைய புத்தக வாசிப்பு தொடர்பான நேர்க்காணலுக்கு பல வேளைகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி மின்னல் வேகத்தில் விடைகள் அனுப்பி உதவியவர்.   அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.என் நேர்க்காணலும் அவர் விடைகளும்.

                          
1. நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தங்களின் வழிகாட்டுதல் என்ன?
பழக்கம் என்பதே தொடக்கமும் தொடர்ச்சியும் சேர்ந்தது தான். தொடக்கம் என்பது துவங்க  சொல்லும் ஊக்கம். அது பெரியோர் இடத்தில் இருந்து தான் வர வேண்டும். பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் நூல்கள் பல படித்துக் கற்பதை வலியுறுத்தாமல் ஆசிரியர் கொடுப்பதை மட்டும் கற்கும் வழக்கம் பழக்கமாகி விட்டபடியால், நூல் என்றாலே ஒரு கடினமான ஒரு வேலை என்ற எண்ணம் மேலோங்கி விட்டது. நூல்கள் ஆசிரியரின் பார்வையில் அந்தப் பாடம் சார்ந்த கருத்துகள் என்றில்லாமல், படிப்பவர் எண்ண ஓட்டத்துடன் சாதாரணமான மேற்கோள்கள் இசைந்த வெளிப்பாடாக இருப்பின் நல்லது. நூல்கள் எத்தன்மையுடையது என்பது பொருத்துத்தான் படிப்பவர் மனஓட்டம் அதன் வேகம் காண முடியும். பிற ஆசிரியர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டு விடை அளிக்கச் சொல்லின் பல நூல்கள் படிக்கும் பழக்கம் பெருகும். தேர்வுகளில் நூல் பார்த்து விடை அளிக்கும் யுக்தியும் வளர்க்கப்படலாம். ஆனால் அதற்கேற்றவாறு வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
கிடைக்கணும் தம் கைபேசியில் கிடைக்கணும் 
   கிடைத்திடினும் எளிதில் படிக்க  புரிந்திடணும் 
   புரிந்திடினும் அவரவர்கருத்தைப் பதிந்திடணும் 
   பதிந்தாலும் சரியானப்பதில்களைத் தந்திடணும் 
   தந்திடினும் சரியான விலையை வைத்திடணும் 
   வைத்திடினும் எழுதும்பணியை தொடர்ந்திடனும் 
   தொடர்ந்தால் அலமாரி போகும் காகித நூல்களும்
   வன்தட்டில் ஏறும் மின்நூல்களும் வரலாறுஏறுமே 2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனர். இணையத்தில் கூட நல்ல நூல்களை அவர்கள் வாசிப்பதில்லை. அவர்களை எவ்வாறு வாசிக்க வைப்பது?
திசை மாறத்தான் கல்லூரிகளே என்பது என் கருத்து. பருவம் மாறின் எண்ணம் மாறும். மாறிய அத்திசை எத்திசையாய் இருப்பினும் அதில் வல்லவராய் வர நூல்கள் பயன் தருகிறதா இல்லை நல்லவராய் வலம் வர நல்ல நூல்கள் உள்ளனவா எனபதில் தான் ஐயப்பாடு. திசை மாறும் பறவைகள் கூட்டுக்குள் சேரும் நேரம் அவர்தம் பாட்டுக்கு ஏடுகள் இல்லை என்பதே என் கருத்து. நூல்கள் எல்லாம் இருப்பன போதித்து இல்லாதன சாதிக்க எனில் எழுத்தாளர்கள் ஏன் சாதிக்கவில்லை? அவரவர் பணிக்குக் கலைக்கு, ரசனைக்கு ஏற்ப நூல்கள் எழுத ஒரு சில எழுத்தாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மாணவர்கள் படிப்பதில்லை எனில் எங்ஙனம் ஏற்றுக் கொள்ளமுடியும், அத்துனை மாணவர்களும் வாசிக்க ஆரம்பித்தால் அந்த அளவு நூல்கள் எழுத ஆசிரியர்கள் போதவே போதாது. நல்ல நூல்கள் என்பது அவரவர் தொழில் அல்லது பணியின் தொடர்பு, ஈடுபாடு மற்றும் புதுமை அல்லது பழமையின் மறுபக்கம் அல்லது புதுமையின் குறை என்பது போல் பலப்பல துறைகளை அடக்கி வெளியாகும்.

3. துறை சார்ந்த நூலகள் மாணவர்களுக்கு அந்நியமாகிப் போவதன் காரணம் பரந்த புத்தக வாசிப்பின்மையே எனக் கூறலாமா?
 

துறை என்பதை யாராலும் வரையரை செய்ய இயலாது. எது துறை சார்ந்த நூல்கள்?
எவை துறை சாராது ? என துல்லிய நெடும்கோடு போட வேண்டிய கட்டாயம் இல்லை.
ஏன் எனில் அனைத்தும் ஒன்றே; அனைத்தும் கணினியே என நான் என் பார்வையில் காண, சங்கத்தமிழிலும் உயர் மென் கணினித்துவ சமன்பாடுகள் கொணர முடியும் எனில் வேதியியல், மண்ணியல், மின்னணுவியல், படையியல்,  நாட்டியயியல், பூச்சியியல்,கணிப்பியல், வானவியல் என எல்லா இயலும் சேர்ந்த துறையும் உள்ளது.
படிப்பவர் கருத்துக்கு விருந்து படைக்கும் வண்ணம் ஆசிரியர் பார்வையும் படிப்பவர் பார்வையும் ஒற்று நோக்கின் நூல்கள் தேடுமே இருவரின் கைகளும்.

4. துறை சார்ந்த நூலகள் தவிர பிற இதழ்களை தாங்கள் வாசிப்பதுண்டா? எனில் அவை குறித்த தங்களின் கருத்து என்ன?
அனைத்து நூல்களிலும் அனைத்துத் துறை சார்ந்த பொருளும் கருத்தும் விளக்கமும் இருக்கும் இல்லையெனில் படிப்பவருக்கு எண்ணம் சற்று கிட்டப்பார்வை எனத்தான் கூற முடியும். பிற இதழ்கள் படித்துத் தானே ஒரு ஆசிரியர் உருவாக முடியும்.
     துறை இது இறை இது எனத்திரை போட மனம்என்ன சிறுசிறையா ?
     குறை இது நிறை இது எனவரையோடுக் கருத்துக்கூற பெருஅறையா?
     உரை இது இரை இது எனப்பறையாடிப் பாடல்பேச திருமறையா?
     நிரை இது விரை இது எனஅசைகாட்டிச் சீர்போட இது நறுமுறையா?

5. இணைய வழி படிப்பென்பது தகவல் திரட்ட உதவும். வாழ்க்கையில் மனிதமனங்கள் பண்பட உதவுமா?
 

இணையவழி படிப்பென எப்படி பாகுபாடு செய்கிறீர்கள்? நூல்களின் ஆசிரியரால் எழுதப்பட்ட காகித நூல்களின் மறுஅவதாரம் தான் இணையத்தில் வலைய வருவது.
அச்சுவழிவந்த நல்ல நூல்களால் மனிதமனங்கள் பண்பட்டிருந்தால் சிறைச்சாலைகள் தேவை இல்லை. சட்டங்கள் தேவை இல்லை. மனித மனம் ஒரு கண்ணுக்குத் தெரியா எழுத்துக் கோர்வை கொட்டிக் கிடக்கும் ஓர் உணர்வுக் கிடங்கு. அதில் வெளிக்கிளம்பும் சொற்கள், ஒலிகள், படங்கள் தான் மனித செயல்கள். அவை நேரம், இடம், சூழல்
தாண்டி, பட்டறிவு என்னும் வேதியல் படலத்தைத் தாண்டி வரும் வேடிக்கைகள் தான்.
மனிதமனங்கள் பண்படவும் புண்படவும் கண்படவும் இணையவழி படிப்பாலும் முடியும். பண்படுத்தல் என்ற சொல்லின் பண் என்பது ஒழுங்கு அல்லது நெறிபடுத்தலாயின் அதுவும் சாத்தியமே. பற்பல செய்யத்தகாதனவற்றை, அதன் தீங்குகளை துடிப்பான பல பேசும் புத்தகங்களால் ஆடும் படங்களால் உணர்த்தி பண்படுத்தி செழிப்பாக்க முடியும்

6. நூல் படிப்பதற்கும்  இணைய வாசிப்பிற்கும் உள்ள வித்தியாசம்?
படிப்பிற்கும் வாசிப்பிற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். ஏதும் இல்லை.
இணைய வாசிப்பில் படிக்கும் போது படிக்கும் அத்தகவல் தொடர்பான விடயங்களை தேர்ந்தெடுக்கவோ, அல்லது நகல் எடுக்கவோ அல்லது பிற நூல்களில் தேடவோ முடியும். தேர்ந்தெடுத்த மின் சேமிப்புக் கிடங்கில் வாசித்ததை பகிர முடியும். இணைய வாசிப்பு என்பது ஒரு உடல் அறிவு மற்றும் உணர்வு பூர்வமான உயிரோட்டமான செயல்பாடு. ஆனால் நூல் படிப்பு உடல் மற்றும் அறிவு பாத்தியமானது. அடுத்த வெளியீடுகள் உங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும். இணைய வாசிப்பாளர்களின்
கருத்துகள் தெரிந்து கொள்ளவும் ஆசிரியரின் பதிலும் உடனுக்குடன் தெரியவரும். நூல் படித்தால் இருப்பதைத் தெரிந்து சிறப்புடன் வாழ வழி சொல்லப்பட்டிருக்கும்.7. பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்கஅறிவு (Creativity) மிகும். இணையத் தரவுகள் இதைச் செய்யுமா?
ஆக்கஅறிவுக்குத் தன்னம்பிக்கை ஆதாரம்; தன்னம்பிக்கைக்குப் படிப்பறிவு ஆதாரம்;
படிப்பறிவுக்குப் பலநூல்கள் ஆதாரம்; பலநூல்களுக்கு இணையம் ஆதாரம்; இணையத்துக்கு பல அறிஞர்கள் கருத்துகள் தொகுப்பு ஆதாரம். முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா?  இணையம் என்பது பல  நூல்களின் கருத்துகள்  வளைய வரும் ஒரு தள மேடையென உருவகிக்க தரவுகள் அங்கே கொட்டிக் கிடக்கும் சிப்பிகள். அவைகள் கோர்த்ததாலோ இல்லை கோர்த்ததை பிரித்ததாலோ? உங்கள் தகவல் முழுமை அடையும். தகவல் அறிவு முழுமையுடன் தன் பயிற்சி ஊக்கமுடன்  சேர ஆக்க அறிவு முளைவிட்த் துவங்கும்.


8. நூல் படிப்பு. கண்களுக்கு பயிற்சி. இணைய வாசிப்பு கண்களுக்கு கேடு.இணையத்தை நீண்ட நேரம் படிக்க பயன்படுத்த முடியுமா?
அதிக நேரம் எது படித்தாலும் வாசித்தாலும் கண்கள், மூளை சோர்வடையத்தான் செய்யும். இணையத்தில் நீண்ட நேரம் படிக்கக் கேடும் உண்டு. நூலை நீண்ட நேரம்
படித்தால் தீங்கும் உண்டு. அளவுக்கு மீறினால் அமுதமும் விடமே ஆகும். இதில்
காகித அச்சு நூல் என்ன? இணியத்தின் வழி கணினி திரை மின் நூல் என்ன?

9. பல விஷயங்களை இணையத்தில் படித்தாலும்
   புத்தக வாசிப்பு போல் சிந்தனையைத் தூண்டுமா?

 

இணையத்தில் படித்துச் சிந்தனையைத் தூண்டாமலா இக்காலத்தில் இத்துனை அகல ஆழமான அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள். புத்தகமே தேவையிலா மெய்னிகர் கருத்துச் சேவைகளும், மேக மென் புலவர்களும் மாய அறிஞர்களும் பாவலர்களும்நேரம் பார்த்து சிந்தனை தூண்ட வரும் இலவச மென் சேவைகள் வர ஆயத்தமாகும் நிலையில் நீங்கள் புத்தக வாசிப்பு என்பதை ஏதோ ஒரு நிலையில் இருந்து மட்டும் நோக்குகிறீர்கள். சுவடி வாசிப்புக்கும் நூல் வாசிப்புக்கும் என்ன வேறுபாடு? கரு ஒன்றுதான், பாத்திர உருவம் மட்டுமே வேறு. வாசித்தால் போதும் சிந்தனை என்பது
புறப்பொருளாம் புத்தக அட்டையில் வண்ணத்தில் உருவத்தில் அளவில் அல்ல. அது தாங்கி நிற்கும் எழுத்துக்களின் இடையே மறைந்து நிற்கும் தகவல் தொகுப்பும் அத்தகவல் தொகுப்பினை சூழல் பார்த்து கையாளும் நெறியும் தான் முக்கியமே தவிர
மருந்து திட மாத்திரையாய் இருந்தால் என்ன ? மருந்துக் குப்பியில் திரவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் போதுமல்லவா.

10.தொலைகாட்சி நிகழ்ச்சிகள் , விளையாட்டு நிகழ்வுகள் காண 
            நேரம் இருக்கும் போது, நூல்கள் படிப்பதுண்டா ?

    நூல்கள் படிக்கா நாங்கள் முகநூல் வாசித்து எழுதுகிறோம் 
    கால்கள் இல்லா நாங்கள் மின்நூல் வாசித்தே உலவுகிறோம் 
    காகிதம் இல்லையெனில் அந்நூலை வாசித்தே மகிழ்வோம் 
    மொழி பேசும் துடிப்பு நூல்கள் எனில் கட்டாயம் வாசிப்போம் 

11.மக்கள் படிப்பதற்கேற்ற தரமான நூல்கள் அதிக அளவில் வெளிவர என்ன செய்யவேண்டும்?
 

படிப்பதற்கேற்ற நூல்கள் தரமானதாய் அதிகம் வெளிவர அந்தந்த ஆசிரியர்களின்
அறிவு, அர்ப்பணிப்பு, அனுபவம், மூன்றும் அத்தியாயத்துக்கு அத்தியாயம் அவசியம் வெளிப்பட வேண்டும். பழங்கதைகள், புராணங்கள், கவிதைகள், கட்டுரைகள் காவியங்கள் என்றாலும் கற்பனை எல்லை வகுத்து பொய்யை மெய்யாக்க முயற்சி கைக்கொள்ளப் படவேண்டும். இதனைப் படிப்பதால் யார் யாருக்கு என்ன என்ன பலன்?
என்பதைப் பட்டியலிட்டு வண்ணப்படங்கள் சேர்த்து வாழ்வியலை மையமாக்கி பணி, உடல் நலம் பேணும் நூல்கள் வெளிவர இளம் ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

12.நல்ல விமரிசகர்கள் உருவாகவேண்டுமானால் நல்ல பல படைப்புகள் வேண்டும். அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு அவசியம். வட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும்.தங்களின் கருத்து என்ன?
( நல்ல விமர்சனங்கள் ==è நல்லபடைப்புகள் ==è நல்ல ரசனை ==è நல்ல வாசிப்பு )
இதில் பொதுவான நல்ல என்ற அடைமொழியைத்தான் மையப்புள்ளியாகக் கொண்ட
இந்த சுருள் வட்டத்தில் விட்டத்தின் வரைந்து மேல் பரப்பு முழுமையும் எழுத்தாளர் எனவும்,கீழ்ப்பரப்பு முழுமையும் கருத்துரு எனவும் கொள்ளமுடியும். அடுத்த படைப்பு அடுத்த பெரிய சுருளாக அடுத்து வரும் படைப்புகள் அடுத்தடுத்த சுருள்களாக பெருகும்.
ஒவ்வொரு ஆரமும் அதன் பரப்பும் விமர்சனங்கள், நூல் அமைப்பு, விலை, புதுயுக்தி, கையாளும் திறன் என பல்வேறு பகுதிகளாக நூல்களின் தரத்தையும் அதன் ஆசிரியர் போக்கையும் குறிக்கும்.


13.நீங்கள் காணும் தற்கால நூல்கள், இதழ்களில் உள்ள குறைகள், குற்றங்கள் என்ன? அவற்றை எப்படிக் களையலாம்?
தற்கால நூல்கள், இதழ்களில் குறைகள் குற்றங்கள் காணும் அளவு எனக்கு நூலறிவு,
பணிஅனுபவ அறிவு, ஆய்வுக் கல்வி அறிவு இல்லை என முதலில் சொல்லிக் கொண்டு குறை ஏதும் இல்லை குற்றங்கள் யாதும் இல்லை; அவை இருப்பின் அவை படிப்பவர் குற்றமே என கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
குறை இல்லா நூல் இல்லை., கரை இல்லாக் ஆல் இல்லை;
குற்றம் இல்லா ஏடு இல்லை; சுற்றம் இல்லாக் காடு இல்லை.

14.நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த நூல்கள் என்ன? உங்களுக்குப் பிடித்த படைப்பாளர் யார்?
 

புத்தகங்கள்: சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தும்
படைப்பாளர்கள்: கல்கி, சாண்டில்யன், பாலசுப்பிரமனியம், புலியூர் கேசிகன், கலைஞர்

 15.பல நேரம் நூல்கள் இதழ்கள் புத்தகங்கள் படிப்பதுண்டோ ?
    
     பாட நூல்கள் படித்துப் படித்து பாதி இளமை கழித்ததும்  
      துணை நூல்கள் பார்த்துப் பார்த்து மீதி நேரம் கழியவும்  
      வினா விடை எனமதிப்பெண் நோக்க குறுந்தொகையும்
      அதிமுக்கிய  நாற்பது,வரும் நாற்பது,வந்த நாற்பது என 
      நாற்பது நாற்பதாய் என்னை நாறு நாறாய் கிழி நாற்பதும் 
      சேர்க்க மகாமதிப்பெண் போர் முடித்த எமக்குத் தேவையோ?

16. தற்போது வரும் இதழ்கள் தரமுடையனவாக உள்ளனவா? 
ஆம்.  உள்ளனவே.
                             இதழோடு இதழ் சேர்த்து இனிமை கூட
                            இன்பம் பெருகி இளமை வகுத்து  இரு
                            இனமும் இன்பப் பாலால் ஏக்கம் தீர்க்க
                            இனித் தின வார,மாத,இதழ்கள் விரித்து
                                          இரைதேடு அறிவுப்பசி தீரத்துயில் நீங்க
17.புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் லெனின்.தற்போது இணையம் தகவல்களை விரைவாகத் தரலாம். ஆனால் உள்ஆற்றலை வளர்க்குமா?
புத்தகங்கள் பெரிய ஆயுதங்கள் பீரங்கிகளைப் போல் எனில் இணையம் வேதியியல்
குண்டுகளைப் போல் என நினைக்கலாம். ஆசிரியரின் அல்லது எழுத்தாளரின் எண்ணமே எழுத்துக்களாய், தரவுகளின் தொகுப்பாய், தகவலாய், தகவல்களின் தொகுப்பான சேதிக் கிடங்காய் இருக்க பல்வேறு கிடங்குகளே ஒரு நூலாக வரமுடியும். இதில் இரண்டும் ஒன்றுதான். உள் ஆற்றலைத் தராமலா ஆயிரம் ஆயிரம் அறிவியல் மின் நூல்கள் அன்றாடம் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.இதில் மின் நூலகம், மின் புத்தகம், மின் ஆளுமை என்றாகி தற்போது கைபேசி நூலகம் பூத்து மேகமென் நூலகத் திரட்டுகளாய் மலர்ந்து விரிவடைய உள்ஆற்றல் வளராமல் போகுமா?தேவையான மின்னூல்களைத் தேவையான நேரத்தில் விரைவாக தேவையான ஊடகத்தில் தேவையான படிவத்தில் தேவையானவர்களுக்கு வழங்கும் இணையம் .உள் ஆற்றலை வளர்க்கும் செயற்கைப் பாத்திரத்தில் நல்ல இயற்கை உணவு தானே தவிர இயற்கை ஓலைச்சுவடியில் செயற்கை மருந்தென இருக்க இயலாது. இது என் கருத்து.

      

  18. தின இதழ் , வார இதழ் எப்படி இருக்க எதிர்பார்க்கிறீர்கள் ?

    எவ்விதழிலும் தினம் வாரம் மாதம் எனப் பாகுபாடு இல்லை 
    அவ்விதழில் பழங்கதைகள் பேசிப் பயனில்லை எனத் தெரிய 
    செவ்விதழில் தேனூறுவதுபோல் அவ்விதழில் நற்செய்திஊற
    இவ்விதழில் இலக்கண வரம்புடன் இசை நூலாயின் இனிதே  

19. கொஞ்சம் விளக்கமாக உரைப்பீர்

   நித்தம்படிக்கு வித்தை தருநூல் பணியில் கத்தைப்பணம் தருமா?
   அத்துப்படியான விடயம் சொத்தைக் காயன்னம் நற்சுவை தருமா?
   வித்தக ஆசிரியர் தப்பானநோக்கில் கருத்துத்தர சுயஅறிவு ஒப்புமா?
   புத்தகப் பதிப்பாளர் புத்திதன் சொல்வாரேயன்றி புக்ககம் செய்வரோ?

20. நூல்கள் தரம்,மதிப்பு,விலை ,உருவ அளவு  பற்றி சொல்லுங்கள் ?

   மின்நூல் வந்தபின் அனைத்தும் மின்னுரு தாங்க தன்னுரு ஏதடா?
   தன்நூல் முந்தஎன் எண்ணம் எல்லாம் வண்ண பேசும் சித்திரமாக 
   மென்நூல் வந்தஇன் சுருக்க தருக்கம் பெற்றுமெய்நிகர் பொருளாக 
   நன்நூல் தந்த எழுத்து, சொல், பொருள்நோக்கம், சூழல்,அணியுடன் 
  அந்நூல் தரும் வெளிப்பாடு, திசை, ஓட்டம், ஒப்பாய்வு அணியுமாமே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?