நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 31 October 2020

மழை

  

 சிப்பியின் வயிற்றில் நீ முத்துத் துளி

உழவனின் பார்வையில் நீ வைரத்துளி , 

இலையின் நுனியில் நீ ஒளியின் துளி, 

கவிஞனின் பார்வையில் நீ அமுதத்துளி.  

மலர்களில் பூகம்பம் உன்னால்.  

விண்ணில் இருந்து வந்த நீ கண்ணீர் துளியா,

 பூமிக்கு வானம் கொடுத்த முத்தத்துளியா?

 விண்ணிலிருந்து மண்ணில் வந்த தேவதை நீயோ?

 வானுக்கும் மண்ணுக்கும் பாலம் நீயோ? 

உன் கரங்களைப் பற்ற கைநீட்டுகிறேன்.

 நீயோ ஏன் துளியாய்ச் சிதறிப் போகிறாய்? 

கைக்குள் பிடிக்கப் போகிறேன் காணாமல் போகிறாய். 

நான் பாராதிருக்கும் போது வந்து போகிறாய். 

பார்த்திருக்கும் போதோ...

 மேகத்திற்குள் நீ ஒளிந்து கொள்கிறாய்.  

கவிழ்ந்து கிடந்து நகர்ந்து போகிறாய்.

மழைத்துளியோ நினைவுத்துளியோ

சிறு பூகம்பத்தை ஏற்படுத்தி மனதில் 

நீங்காத பள்ளத்தை ஏற்படுத்தி விடுகிறது

 -------------------------------------

 

 வாசம்

மழையின் போது மண் வாசம்

முத்தமிடும் போது மழலை வாசம்

மலரும் போது பூ வாசம்

அரைக்கும் போது சந்தனம் வாசம். 

சிலரை நினைக்கும் போது நேரமே வாசம்

 

-------------------------------------------------------

 

பார்வை பார்த்துப் பூத்திருக்க

சொல்லாமலே வந்து விட்டுப் போய்விடுகிறது.

குழந்தை போல் செல்லச் சிணுங்கல்

சில்லென்று வீசும் சாரல்...

இலைகளின் நுனியிலும் மரங்களின் கிளைகளிலும்

மட்டுமா சாலம் காட்டுகிறாய்?

புவியின் உள்ளடுக்குகளில் உள் நுழைந்து

வற்றாத ஜீவநதியாகி....

சிலரின் நினைவுகளைப் போல்...

ஓடிக் கொண்டேயிருக்கிறாய். 

மழையின் ஓசையும் புவியின் வைரங்களும்

பேசிக் கொள்கின்றன

 சிலர்....

என்னோடு பேசாத வார்த்தைகளையும் சேர்த்து.....

--------------------------


எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் 

மழை மழையாகவே இருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்

ஈர்ப்பும் அப்படியே இருக்கிறது.

கொஞ்சம் அக்கறையும் நிறைய அன்பும்

விண்ணிலிருந்து மழை இறங்கி வர காரணங்கள் 

சிலருக்கு மழையும் தனிமையும் போதும் 

மழை காட்டும் ஜாலம் போதும்

மண்ணைச் சுத்தப்படுத்தும்  மழை

ஏனோ மனதைச் சுத்தப்படுத்தத் தவறிவிடுகிறது.

மழை தனக்குள் கவிதையை ஒளித்து வைத்திருக்கிறது

அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் 

மழை எங்கிருந்து வருகிறது? 

மேகமாவதற்கு முன் என்னவாக இருந்தது?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இது போடும் கோடுகள்

வரிசை மாறாமல்...

இடைவெளி மாறாமல்...

இசையோடு தன் வருகையை வெளிப்படுத்தும் ஆரவாரங்கள்..

காற்றுக் காதலனோடு இது நடத்தும் நடனங்கள்...

இலைகளின் மீது மழை வைக்கும் செல்லக் குட்டுகள் 

மண்ணில்மழை வைக்கும் தொடர் புள்ளிக் கோலங்கள்

மழை விட்டாலும் விடாத தூவாணம் போல 

சிலரது நினைவுகள்....

நாணேற்றிய வானவில்லில் அம்பாக உன்னை

சரம் சரமாக விட்டது யாரோ?

 மழை வரைவது நெடிய கோடுகள்

வானவில் வரைவது வளைந்த கோடுகள்

நீர்த்தாரைகள் வரைவது நீண்ட கோடுகள்

பெண்களுக்கும் கோடுகளுக்கும் கூட

நெருங்கிய தொடர்புண்டு....

பெண்களைச் சுற்றும் லட்சுமணக் கோடுகள்...

உணர்ச்சிப் பிரவாகத்தில் சில சமயம் 

மழையைப் போல கொட்டித் தீர்த்துவிடுகிறோம்... 

சிலசமயம் மேகம் போல் ...

கலைந்து காணாமல் போய் விடுகிறோம்.

சிலசமயம் சொல்லாமல் வரும் மழையைப் போல 

யாரும் காணாமல் அழுது தீர்த்துவிடுகிறோம்

இறுகிய பனிக்கட்டியாக முயற்சித்து ...

முடியாமல் கரைந்து கொண்டே இருக்கிறோம் 

ஆவியாகி காற்றில் கலந்தாலும் மீண்டும்

மேகமாகி மழையாகி விடுகிறோம்

மழையின் வருகை சிலருக்கு இதமாகவும்

சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கிறது

மழையே உள்னோடு பழகுவதால் உள்ளுக்குள் குளிரெடுத்து

நரம்புகள் சிலிர்ப்தென்னவோ உண்மைதான்

ஆனால் மழையே உன்னோடு பழகுவதில்

ஆபத்தும் இருக்கிறது....

-----------------------------------------------

 






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?