முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Tuesday, 11 November 2014

‘பாழ் செய்யும் உட்பகை’


 ‘பாழ் செய்யும் உட்பகை

இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்என்பார் தமிழ்விடு தூதுநூலின் ஆசிரியர்.
 ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்என்று முழங்கினார் பாரதிதாசன்.
ஆனால், இன்றைக்கோ தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. பேசும் தமிழிலும் வளமில்லை. பேருந்து நிலையம் என்றால் புரியாது தமிழனுக்கு. பஸ் ஸ்டேண்ட் என்றால் தான் புரியும். இன்றைக்கு காலைவேளை டூத்பேஸ்டில்தொடங்கி இரவில் படுக்கும்பெட்வரை தமிழன் வாழ்வில் எல்லாம் ஆங்கிலமயம்தான். பேச்சுத் தமிழோதமிங்கிலீசாகவலம் வருகிறது. ஒரு மொழி அழிவதற்கு முதன்மைக் காரணம் மொழிக்கலப்பு தான். இன்றைக்கு அன்றாட சிற்றூர் மக்கள் பேசும் மொழியில் கூடப் பிரிக்க முடியாத அளவிற்குப் பிறமொழி கலப்பு நிறைந்திருக்கிறது. தமிழிலுள்ள எண்ணற்ற சொற்கள் அவை தமிழ்ச்சொற்கள் தானா என்று குழப்பம் தரும் வகையில் விரவியுள்ளன. பாலிலே நீர் கலந்தால் கலப்படம்; மிளகாய் பொடியில் செங்கல்தூள் கலந்தால் கலப்படம்; டீத்தூளில் புளியங்கொட்டையைக் கலந்தால் கலப்படம்; மிளகுடன் பப்பாளி விதை கலந்தால் கலப்படம், ஆனால், மொழியில் மட்டும் பிறமொழி கலந்து பேசுவதைத் தமிழரின் வளர்ச்சி என்று கருதுகிற அளவிற்கு ஆங்கில மொழி மோகம் விசக் காய்ச்சலாகப் பரவியிருக்கிறது. தமிழ் மொழியில் ஆங்கில மொழி கலந்துப் பேசுவதை மொழிக் கலப்படம்என்பதை என்றைக்கு மக்கள் உணர்கிறார்ளோ அன்றுதான் கலப்படமில்லாத தமிழ் -  தமிழருக்கு வாழ்வளிக்கும்.
 இந்திய நாடு விடுதலையடைந்தவுடன் தாய்மொழி வழிக்கல்வியின் அருமை கருதி, பள்ளி முதல் கல்லூரி வரை தாய்மொழிவழியாகவே பாடங்களைக் கற்பிக்க வேண்டுமென்று அன்றைய கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல்கழகம்தொடங்கி சுமார் 600 நூல்களை வெளியிட்டார்.
                    
  பிறகு ஆங்கிலத்தின் தேவை உணர்ந்து பதின்ம (மெட்ரிகுலேசன்)பள்ளிகள் காளான்கள் போல முளைத்தன. எங்கும் தமிழ், எதிலும் தமிழ்என்று பேசும் அரசியல்கட்சிகள் தொடர்ந்து பதின்மபள்ளிகள் பெருக காரணமாயின. மக்களும் பிள்ளைகளின் எதிர்காலம் இனி ஆங்கில வழிக்கல்வியில்தான் என நினைத்து அரசு பள்ளிகளைப் புறக்கணித்தனர். இதனால் இனறு அரசு பள்ளிகளை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைய கல்வியமைச்சர் அரசு பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ளார். அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க ஒப்புதல் அளித்து 3000 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டு 25000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகள் காப்பாற்றப்பட்டு விட்டன. 
 ஆனால் தமிழ் மொழியின் நிலைமை? இதைப் பற்றி மக்களும், மந்திரிகளும் கவலைப்படும் நிலையில் இல்லை.
           

         இன்றைக்கு தமிழைப் பேசுபவர்கள் ஆறுகோடி பேர் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் எதிர்காலத்தில் தமிழின் நிலை என்னவாக இருக்கும்?  
 புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளில் முதல் இரு தலைமுறையினர் தமிழில் பேசுகின்றனர். ஆனால், படிக்கத் தெரியாது; எழுதத் தெரியாது என்ற நிலையில் உள்ளனர்.
          
           இரண்டாம் தலைமுறையினரின் நிலை என்னவாக இருக்கும்? பேசவும் தெரியாது; எழுதவும் தெரியாது; படிக்கவும் தெரியாது என்பதாகத்தான் இருக்கும். 


 தமிழ் என்பது தாத்தா பேசிய ஒரு மொழிஎன்றளவில் புரிந்து கொள்ளப்படும். உச்சரிப்பு கூட அவர்கள் மொழியில் டமில்ஆக இருக்கலாம். புலம் பெயர்ந்தவர்களின் சந்ததியினரின் நிலை இப்படியென்றால், தமிழகத்தில் உள்ளேர் நிலை என்னவாக இருக்கும்? முன்பு அனைத்துப் பாடங்களும் தமிழில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் மட்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டது. இன்றைக்கு அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது. தமிழ் மட்டும் தமிழில் கற்பிக்கப்படுகிறது. நாளை தமிழ்மொழி கூட ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் நிலை வரலாம்.
20,000 வருட உலகின் முதல் இனம் தமிழ் இனம் வரலாற்று தேடல்http://www.akkininews.com/2012/10/20000.html

         ‘தமிழ் இனி மெல்லச் சாகும்இப்போதைக்கு இல்லை என ஆறுதலடையலாம். ஆனால் நாளை? தமிழோடு தமிழ் இனமும் அழிந்து விடும் என்ற உண்மை புரியும் வரை தமிழின் நிலை கேள்விக்குறிதான். பாரதிதாசன் தமிழைப்பார்த்து, ‘நன்னிலை உமக்கெனில் எமக்கும்தானே? நைந்தாயெனில் நைந்துபோகும் தமிழர் வாழ்வுஎன்று வருத்தத்தோடு கூறுவார். 

      அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் மரியா ஸ்மித் ஜோனெஸ்என்ற மூதாட்டியோடு ஏயக்என்ற மொழியும் புதைக்கப்பட்டு விட்டது. அவரது இனத்தாரும், பிள்ளைகளும் ஏயக்மொழியைப் பேசவோ, தெரிந்துகொள்ளவோ விரும்பவில்லை. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள். 

            அமெரிக்காவிலுள்ள அரிசோனாவில் வாழ்கின்ற நண்பர் தொலைபேசியில் பேசிய போதுஅமெரிக்காவில் பிறந்த தன் மகனுக்குத் தமிழ்ப் பேசத் தெரியும். ஆனால் படிக்கத் தெரியாது. இதே நிலைதான் சென்னையில் வசிக்கும் தன் தம்பியின் மகனுக்கும்என்று கூறினார். தாய்மொழிச்சூழல் நிலவுகின்ற தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒரு இளைஞனுக்கு தமிழ் பேசத் தெரியுமாம். ஆனால்  தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதாம்.தமிழ் நாட்டினர், தமிழில் கற்பதை இழிவாகக் கருதுவதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார். தமிழ்ச்சங்கம் வளர்த்து பல தமிழ் புலவர்களால் காப்பியங்கள் இதிகாசங்கள் அகநானூறு  புறநானூறு போன்றவைகள் போற்றி வளர்க்கப்பட்ட நாட்டில் தமிழ்ப் படிக்கத் தெரியாது என்பதை மிகப் பெருமையோடு அவன் சொன்னதாகக் கூறினார். தமிழ் பிறந்த தமிழ்நாட்டில் தற்போது தமிழைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்’.

 உலகிலுள்ள கல்வியாளர்களும் சமூக ஆய்வாளர்களும், உளவியல் நிபுணர்களும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்கின்றனர். 

           ‘குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்ததுஎன காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. ஆங்கிலம் உலகப் பொதுமொழிஎன்ற வலுவான எண்ணம்தான் அதற்குக் காரணம். சீனத்திற்கும், ஸ்பானிஷிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகிலுள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை.

        பனிரெண்டாம் நுhற்றாண்டு வரை ஆங்கிலம் கேட்பாரற்று ஒரு வட்டாரமொழிஎன்ற அளவில்தான் அறியப்பட்டு வந்தது. இலத்தீன்தான் சிறந்த மொழி; அறிவு மொழி என்று போற்றப்பட்டது. ஒரு வட்டார மொழியாகக் குறுகிக் கிடந்த ஆங்கிலத்தைத்தாய்மொழியாகக் கொண்ட ஜெஃப்ரி சாசர்தான் பள்ளி முதல் கல்லூரி வரை திணிக்கப்பட்ட இலத்தீன் மொழிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார்.
  

                ஆங்கிலம் வட்டார மொழியாக இருந்தாலும், அது ஒரு பகுதி மக்களின் தாய்மொழியானால், தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதால், ஆங்கிலத்தின் வழியே கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று போராடினார். இத்தனைக்கும் ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு இடத்தில் தோன்றிய தனித்த மொழி அல்ல. 

       சில ஜெர்மானிய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்ச், செல்டிக் மொழி உள்ளிட்ட பல மொழிகளின் கலவையினால் உருவான கலப்பட மொழிதான் ஆங்கிலம். 

         இக்கலப்பட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜான் வைக்லிப், ஜான் ஹஸ், தாமஸ் லினேகர், வில்லியம் டிண்டேல் போன்ற பலரும் போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் குதித்தனர். இதில் ஜான் ஹஸ், ஜான் ரோஜர்ஸ், தாமஸ் கிரான்மெர் பலரும் இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டனர். எனினும், இப்போராட்டம் தொடர்ந்து நடந்ததால் அன்றைய முதலாம் எலிசபெத் ஆங்கில தாய்மொழியாளர்கள், ‘தம் தாய்மொழியாலேயே கல்வி பயிலலாம்என 1563ல் அனுமதியளித்தார். 1320ல் தொடங்கிய ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் தாய்மொழிவழிக்கல்வியின் போராட்டம் 1563ல் முடிவுக்கு வந்தது. 

            இலத்தீன் ஆதிகக்கத்தில் கட்டுண்டு கிடந்த ஆங்கிலம், விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியதும், மைக்கேல் பாரடே (மின்னியல்), ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் (புகைவண்டி), ஜான் டால்டன் (அணு) ஜோசப் வில்சன் ஸ்வான் (கார்பனிழை மின்விளக்கு) போன்ற அறிவியலாளர்களை உலகிற்கு தந்தது. அறிவியலுக்குத் தகுதியில்லாத மொழி எனக் கருதப்பட்ட ஆங்கிலம் “தாய்மொழிப் பற்றாளர்களால்” இன்று உலகின் அறிவியல் மொழியாக உயர்ந்துள்ளது. இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏழைகளின் பிள்ளைகள். 

           தாய்மொழியான ஆங்கிலத்தில் படித்து சிந்தித்ததன் விளைவே இவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணம். ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்று தமிழரிடம் இருந்தால், தமிழன் பல கண்டுபிடிப்புகளில் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்வான். ஏனெனில் பண்டைத் தமிழில் உள்ள அறிவியல் நுட்பங்கள் தமிழரின் அரும்பெரும் சொத்துக்கள். ஏற்கனவே அறிவியல் துறைகளில் கால்பதித்துவிட்ட தமிழன், தாய்மொழிப் பற்றில்லாமையினால் ஆங்கில மறதி நோய் பற்றி அனைத்தையும் மறந்து அறிவியல் கண்டுபிடிப்பை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  

ஆங்கிலத்தைப் பின்பற்றுபவர்கள், ஆங்கிலேயரின் தாய்மொழிப் பற்றையும் பின்பற்றினால் தமிழ் வாழும். தமிழரும் வாழ்வர். தமிழ் தமிழரை நம்புகிறது. தமிழர்தான் தமிழை நம்பவில்லை. தமிழக அரசு இப்போதுதான் தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் எவரும் பட்டம் பெற்றுவிட முடியாது எனச் சட்டம் இயற்றியுள்ளது. அதாவது ஒரு பாடமாவது தமிழில் படிக்க வேண்டும். அதாவது தமிழர் ஒரு பாடமாவது தமிழைப் படிக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இனி ஒரு தாள் தமிழாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. எனவே மாணவர்கள் இனி தமிழ்மொழி பாடத்தைத் தமிழில் படிப்பார்கள். மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பார்கள். பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம் என மதிப்பெண்ணுக்காகத் தமிழைப் புறக்கணித்தவர்கள் இனித் தமிழைப் படிப்பார்கள் என நம்பலாம்.

        மக்கள் தாய்மொழியைத் தமிழைப் புறக்கணிப்பதற்கு ஊடகங்கள் பேருதவி (?) புரிகின்றன. தமிழைக் கொச்சையாகப் பிறமொழி கலந்து பேசுவது மிகச்சிறந்த நாகரிகமாகப் பரவுவதற்கு தொலைக்காட்சியின் பங்கு மிகப் பெரியது. பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடுருவி, சிற்றுhர் மக்களின் தமிழையும் கலப்படமாக்கி வருகின்றன. இதில் வரும் விளம்பரங்களில் மிகத் தாராளமாக ஆங்கிலக் கலப்பு. (ஒரு ஐஸ்கிரீம் விளம்பரம்-லிக்க வைக்கும் லிக்க வைக்கும். . . .) இன்றைய ஊடகங்கள் நல்ல தமிழ் என்பதைப் புறக்கணித்து, ‘புரியும் தமிழ்என்ற ஆங்கிலத் தமிழைஉருவாக்கி வருகின்றன.
        வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வரும் கண்டுபிடிப்புகளை உடனடியாக தமிழாக்குவது சாத்தியமில்லை என்பதால், அப்பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் ஆங்கிலக்கலப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இன்றைக்கு இணையம் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. கத்தியைப் போல இந்த இணையத்தைத் தமிழை ஆக்கவும் பயன்படுத்தலாம். அழிக்கவும் பயன்படுத்தலாம். இது ஒரு பன்மொழி ஊடகம் என்பது இதன் சிறப்பு. ஊர்கூடி தேர் இழுத்த கதையாக இன்றுவிக்கிபீடியாபலதுறைக் கட்டுரைகளைத் தமிழிலும் உருவாக்கியுள்ளது. பலதுறை அறிஞர்கள் ஒன்றிணையும் இடமாக இணையம் உள்ளது.
இதன் வழியே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழை வளப்படுத்த முடியும். அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டே இதைச் செய்ய முடியும். எத்தனையோ இணைய குழுக்கள் இருக்கின்றன. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் அவ்வத்துறை சார்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து மொழிபெயர்த்துத் தர ஒரு குழு அமைக்கலாம். மொழிபெயர்ப்புகளை வெளியிடலாம். தொழில்நுட்ப தகவல்களைத் தாய்மொழியில் தரலாம் ; விவாதிக்கலாம் ; நுட்பப் பொருளை உணர்ந்து பல கருத்துக்களுக்குப் பின், அனைவரும் ஏற்கும் மொழி பெயர்ப்பு சொல்லை ஒத்த கருத்துடன் ஏற்கலாம் ; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லையே ஒருமனதாகப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம் ; மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் சார்ந்த மொழிபெயர்ப்பு குழுக்கள் இணையத்தின் வழி உருவாக்கப்படலாம். இணையம் என்ற ஒரு கூரை உலகத்தமிழரை ஒருங்கிணைப்பதுபோல தமிழன்என்ற உணர்வு தமிழை மீட்டெடுக்க உதவும். அதற்குத் தமிழர் தமிழை நம்ப வேண்டும். எந்தமொழி கருத்துப் பரிமாற்றத்திற்கு எக்காலத்திலும் எவ்வடிவத்திலும் எளிதாகக் கையாளப்படுகிறதோ அம்மொழியே வாழும் மொழிஎனப்படும். அவ்வகையில் ஒருங்கு குறிகண்டுபிடிப்பு, முன்னைப்பழமைக்கும் பழமையான பின்னைப் புதுமைக்கும் புதுமையான மொழியாக தமிழை மீண்டும் அடையாளப்படுத்தியுள்ளது.
           
            இன்று தமிழகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மட்டும் தெரிந்த ஒரு இல்லத்தரசி கூட, தனக்குத் தெரிந்த சமையல் கலையையோ, குழந்தை வளர்ப்புக் கலையையோகோலக் கலையையோ கணினி வழி உலகெங்கும் உள்ள மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு பெற்றிருக்கிறாள். தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துக்களும், ஆங்கில எழுத்துக்களும் உள்ள தமிழாங்கில தட்டச்சுப் பொறிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அரசு ஆணையிட்டு, செயல்படுத்தினால் இணைய வழி தமிழைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கூடும்.
அரசு, தாய்மொழியை மட்டுமே பயிற்றுவிக்கும் ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பல துறை நிபுணர்களை அனுப்பி, அங்கு அறிவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பங்கள் எவ்வாறு அவர்கள் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன என்று அறிந்து வரச்செய்து இங்கு தமிழ்நாட்டில் அம்முறைகளைப் பின்பற்றலாம். https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcR59B-vlD09in-Mo2OgBHDkIEirKpNsszGZYWFc9Z0qJt0EL7DT
            பல்கலைக்கழக, கல்லூரிகளில் உள்ள உயர்துறை ஆராய்ச்சிகளெல்லாம், ஒரு ஐந்தாண்டிற்கு தமிழ்வழிக்கல்வியை எவ்வாறு மீட்டெடுக்கலாம்என்கிற கருத்து அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டம் இயற்றலாம். மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை இலவச கட்டாயத் தமிழ்வழிக் கல்வி என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தமிழ் மொழியிலேயே தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என  சட்டம் இயற்றலாம். பொதுமக்களோடு தொடர்புடைய வங்கி, காப்பீட்டு நிறுவனம், மருத்துவம், பொறியியல், சட்டம், ஊடகம் (தொலைக்காட்சி, சினிமா) உள்ளிட்டவை மக்களின் தாய்மொழியிலேயே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTb8KXke7o8zQJk5VfuU2i64-9DZJ5PBuMPSZyXAksNT79oW6bkPQ

தமிழில் பயில வேண்டும்
இன்றைய நிலையில் முதலில் பொறியியல், மருத்துவம், சட்டம், அறிவியல் பயிலும் மாணவர்கள் கட்டாயம் ஒரு தாள்  தமிழைப் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இன்று தமிழ் முடக்கப்பட்டதற்குக் காரணம் வெளியிலிருந்து வந்த பகையல்ல ; உட்பகை நமக்குள்ளேயே இருக்கும். தாய்மொழிப் பற்றற்ற தமிழர்கள் தான் இதற்குக் காரணம். இந்தியைத் தேசிய மொழியாக்க முனையும் மத்திய அரசோ, ஆங்கிலமோ தமிழர்க்கு எதிரியல்ல. தமிழர்தான் தமிழுக்குப் பகைவர்களாக உள்ளனர். இவனா தமிழன் இருக்காது. யானைக்குப் பூனை பிறக்காதுஎன மலேசியக் கவிஞர் சீனி நைனா முகம்மது இன்றைய தாய்மொழிப் பற்றற்ற தமிழனைப் பார்த்து சீறுகிறார்.Image result for சீனி நைனா ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நடத்திய போராட்டத்தை, ஆங்கிலத்தைப் பின்பற்றியவர்கள் ஆங்கிலத்தை நம்புபவர்கள் தமிழுக்கும் செய்தால் தமிழ் வாழும். குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடுஎன்கிறார் வள்ளுவர். இது தமிழுக்கும் பொருந்தும். இதன் பொருள் மன்னர் மீது நம்பிக்கையில்லாமல், அவரோடு மாறுபட்டு உடன் இருந்தே அரசுக்கு எதிராகச் செயல்படும் உட்பகைவர்கள் இல்லாததே சிறந்த நாடு என்பதாகும். இது தமிழுக்கும் பொருந்தும். 

            தமிழை நம்பாமல் தமிழோடு மாறுபட்டு, தமிழனாக இருந்துகொண்டே தமிழுக்கு எதிராகச் செயல்படும் தமிழ்ப் பற்றற்ற உட்பகைவர்கள் தான் இன்று தமிழுக்குக் கேடாய், கோடரிக் காம்பாய் முளைத்திருக்கிறார்கள்.
            ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். தன்மான உணர்வு அடிப்படையில் மக்கள் தாய்மொழியாம் தமிழினை வளர்க்க முன்வரவேண்டும். அரசும், கல்வி நிலையங்களும், ஊடகங்களும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழால் சாதிக்க முடியும் என்ற மக்கள் நம்பினால், தமிழனும் சாதிக்க முடியும். இன்றைக்கு தமிழ் மொழி குறித்த கவிதைகள் மிகுதியாக வருகின்றன. படைப்பாளர்கள் தாங்கள் உணர்வதைச் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உணர்த்த முயல்கின்ற போக்குத்தான் படைப்புகளாகத் தோற்றம் கொள்கின்றன.
ஒரு காலத்தில் பெண்ணடிமை குறித்த படைப்புகள் மிகுதியாக வெளிவந்தன. அதன் விளைவு இன்று பெண்கள் படித்து வெளிநாடுகளுக்குத் தனித்துச்சென்று பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை தமிழும் ...............?

7 comments:

 1. தங்கள் சிறந்த ஆய்வுப் பதிவை
  எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்!
  இதோ இணைப்பு:
  http://wp.me/pTOfc-bG
  மிக்க நன்றி.

  ReplyDelete
 2. தமிழ் என்பது
  வெறும் மொழியல்ல
  நமது அடையாளம்
  நமது பெருமை
  நமது முகவரி
  அருமை நண்பரே நன்றி

  ReplyDelete
 3. நன்று. பாராட்டுகள். ஒற்றுப்பிழைகளையும் கிரந்த எழுத்துகளையும் தவிர்த்தலே கட்டுரைக்கு ஏற்றதாக அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

  ReplyDelete
 4. தங்கள் அனைவருக்கும் நன்றி. திருவள்ளுவனாரின் கோரிக்கை ஏற்கப்பட்டு கட்டுரையில் அவை நீக்கபட்டுவிட்டன.

  ReplyDelete
 5. இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக என்னுடைய நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  தமிழ் நாட்டில் தமிழ் பிறந்ததாக குறிப்பிட்டீர்கள்.அதனை நான் ஏற்க மாட்டேன்.குமரிக் கண்டமே தமிழின் பிறப்பிடம் . அந்த நிலப்பரப்பை தமிழன் இழந்து விட்டான். யாழ்ப்பாணம் கந்தரோடையில் இப்பொழுதும் தமிழின் பிறப்பிடம் தொடர்பான பல ஆதாரங்களை பார்க்கலாம்.
  அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இயக்குனர் பாரதிராஜா ஒரு விடயத்தை குறிப்பிட்டார்.அதாவது 50 வீதமான தமிழர்களே தமிழ் நாட்டில் வாழ்வதாக கூறினார்.அதற்கு காரணம் மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்றவர்கள் தமிழ் நாட்டில் பெருகி விட்டதாக குறிப்பிடார்.

  ReplyDelete
 6. தகவலுக்கு நன்றி. ஆம். குமரிக்கண்டம்தான் தமிழ் தோன்றிய மண். அது கடல் கொண்டுவிட்டது. கடற்கோள்களால் தமிழ் நிலத்தின் பரப்பு சுருங்கி வருகிறது. யாழ்ப்பாணம் மட்டுமல்ல தமிழின் பழைய பெயர்களில் பல ஊர்கள் இலங்கையில்தான் உள்ளன.கந்தரோடையில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால் நல்லதுதான். ஆப்ரிக்காவிலிருந்துதான் மாந்த இனம் இடம் பெயர்ந்து தமிழகத்திற்கு வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அதேசமயம் தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்திலும் தமிழரின் தொன்மை தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டும். இதுபோன்ற தகவல்களை ஆய்வுகள்தான் தீர்மானிக்கவேண்டும். தங்கள் தளத்தைப் பா்வையிட்டேன். கண்ணுக்கு குளிர்ச்சி. காதுக்கும்........ தமிழின் மீதான பாடலைக் கேட்டதில் மகிழ்ச்சி.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?