முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Monday, 28 July 2014

படி படி சங்கத் தமிழ் படி

அழியா மரபின் நம் மூதூர்

கண்டம் காக்கும் கண்டல் வேலி   
முனைவர் ஜ.பிரேமலதா,
தமிழ் இணைப் பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.
முன்னுரை
பூமி மூன்றில் இரு பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. நீர் நிலை மாறின், நிலப்பகுதி மிகப் பெரிய பேரழிவையடையும். கடல்சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவு எப்பேரழிவையும் விடக் கொடுமையானது. பூகம்பத்தினால் ஏற்படும் கடல்சீற்றம், புயல் போன்றவற்றினால் ஏற்படும் கடல் சீற்றம் எனக் கடல் சீற்றங்கள் பலவகைப்பட்டதாக இருந்தாலும் இவற்றிலிருந்து ஓரளவு நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். இயற்கை ஏற்படுத்தும் சீற்றத்திற்கு இயற்கை வழியிலேயே தீர்வைத் தேட முயன்றுள்ளனர்.

     
    இலக்கியத்தைக் காக்க இலக்கணத்தைப் போற்றி வளர்த்தது போல், சங்கத்தமிழர் உலகைக் காக்கவும்  சூழல் காப்பில் கவனம் செலுத்தியுள்ளனர். இதற்குச், சங்கப் பாடல்கள் சான்றாக உள்ளன.கடல் சீற்றத்திலிருந்துக் கண்டங்களைக் காக்கக் கூடிய ஆற்றல் தாழை மரங்கள் சூழ்ந்த கடற்கரைச் சோலைக்கு உண்டு என்பதை அறிந்திருந்ததால்தான் கடலும் கானலும் போலப் புல்லிய சொல்லும் பொருளும் (பரிபாடல்.15.11-12) என்று உவமை கூறியுள்ளனர்.
கடலும் கடற்கரைச் சோலைகளும், சொல்லும் பொருளும் போன்றனஎன்ற இத்தொடர்,   பொருளில்லாத சொல் பயனற்று, மொழியின் வளத்தைப் பாதித்து விடுவது போலக் கடற்கரைச் சோலைகளில்லாத கடலும் பயனற்று, ஊர்களின் வளத்திற்குப் பாதிப்பைத் தந்துவிடும் எனக் குறிப்பிடுகிறது. பழந்தமிழர்கள், கடற்கரைச் சோலைகளின் கண்டம் காக்கும் சிறப்புணர்ந்த காரணத்தினால்தான், அச்சோலைகளிலுள்ள மரங்களில் தெய்வம் உறைவதாகக் கருதி வணங்கி வழிபட்டுள்ளனர்.  தொன்று உறை கடவுள்” (அகம்.3-4)”
மன்ற மராஅத்த பேசும் முதிர்கடவுள் ”(குறுந்தொகை.87.1)
துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ”(கலித்தொகை.101.14-15) 
நல்அரை மராஅத்த கடவுள்” (மலைபடுகடாம்.395).
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கி மடற்குடம்பை”(நற்றிணை.303.3-5)

 
இப்பாடல்கள் பழந்தமிழர், கடற்கரைச் சோலைகளிலுள்ள மரங்களைக் கடவுளாக வழிபட்டுப் போற்றிப் பாதுகாத்தமையைக் கூறுகின்றன.
ஆழிப்பேரலைகள் தமிழகத்தை ஏழு முறைகள் தாக்கியுள்ளதாக மாத்தளை சோமு தன்வியக்கவைக்கும் தமிழகம்என்ற நூலில் சுட்டுகிறார். ஆழிப்ரேலையை ,‘உயர்திரை நெடுநீர், பெருநீர், வரம்பு இல் வெள்ளம் என்ற தொடர்களால் தமிழர் குறித்துள்ளனர்.
 பதிற்றுப்பத்து ஆழிப்பேரலையை,” வரம்பு இல் வெள்ளம்” (33)என்கிறது.

உயர்திரை நெடுநீர்ப் பனித்துறை (நற்.58.9) நற்றிணைப் பாடல் ஆழிப் பேரலையை ,“உயர்திரை நெடுநீர்என்ற தொடரால் குறிக்கிறது.
ஆழிப்பேரலைகள் மிகப் பெரிய அழிவை பலமுறை தமிழகத்திற்கு ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம், ஆழிப்பேரலையினால் சிறிதும் பாதிக்கப்படாத பல அழியா நல்ஊர்களும் இருந்துள்ளன. இதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளதோடு அதற்குரிய காரணத்தையும் கூறியுள்ளன..

  
கண்டல் வேலிய ஊர்
       தென்னிந்தியா அரபி,வங்க,பசுபிக் என்னும் மூன்று கடலும் சூழ்ந்துள்ள பகுதியாதலின் ஆழிப்பேரலையினால் இப்பகுதி பலமுறை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதிகளில் இயற்கைச் சீற்றங்களை மனித ஆற்றலால் தடுக்க இயலாத பொழுது, இயற்கையே மற்றொரு வடிவத்தில் நிலத்தைக் காக்கும் வலிவைப் பெற்றிருக்கிறது என்ற உண்மயைத் தமிழர் இயற்கையை உற்றுநோக்கி, தாழை,புன்னை,பனை முதலான மரங்களின் தன்மையறிந்து, அவற்றை வளர்த்து பேணிப் பாதுகாத்துள்ளனர். இவையே கடற்கரைச் சோலைகள் என்றும் கண்டல் வேலிகள் எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றன.

புதுமணற் கானல் புன்னை நுண்தாது

கொண்டல் அசைவளி தூக்கு தொறும் குருகின்

வெண்புறம் மொசிய வார்க்கும் தென்கடல்

கண்டல் வேலிய ஊர்”(நற்.74.7) .
பெருநீர் வேலி

  
கண்டவாயில் என்னும் ஊர் ஒன்று நற்றிணைப் பாடலொன்றில் வெகுவாகச் சிறப்பிக்கப்படுகிறது. இதன் சிறப்பே ஆழிப்பேரலையினால் பாதிக்கப்படாததுதான். இவ்வூர் உப்பங்கழி நிறைந்த கடற்கரைச் சோலைகளையுடையது. இதன் கடற்கரையில் முற்றிய பனைமரங்கள் வெளிறிய மணல்மேட்டில் முள்வேலி அமைத்தது போல் காணப்படும். இப்பனைமரங்களோடு இணைந்த ஞாழல், தாழை ,புன்னைமரங்களும் சேர்ந்து கரிய சோலையோ என்று எண்ணும்படி அடர்ந்திருக்கும். மணற்குன்றுகள் சூழ்ந்த இச்சோலைகளே கண்டல் வேலிகள் ஆகும். இவற்றுள் வணங்கும் தன்மையுடைய தாழையே சிறப்பாகப் பேரலைகளைத் தாக்குப் பிடிக்கும் வல்லமை உடையது. பெரு வெள்ளமாகிய ஆழிப் பேரலையைத் தாக்குப் பிடிப்பன கண்டல் வேலிகளே என்பதை நற்றிணைப் (74) பாடல் தெளிவாகக் கூறுகிறது.
எனவேதான், தாழை சூழ்ந்த சோலைகளை நாட்டுவேலி,  பெருநீர்வேலி, கண்டல்வேலி எனப் பல பெயர்களில் தமிழர் அழைத்துள்ளனர்.
வணங்கிய தாழை

புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்”(நற்றிணை.23.9-10) வளைந்த தாழையைக்கண்டல்என மற்றொரு நற்றிணைப் பாடலும் கூறுகிறது. தாழை மரங்களுடன் புன்னை,ஞாழல் மரங்களும் இணைந்து வளர்ந்து நெய்தல் சார்ந்த ஊர்களைக் காத்து நிற்பதால், இவற்றை வேலிகள் எனப் பழந்தமிழர் குறித்துள்ளனர்.
 
தாழையின் சிறப்பை உணர்ந்ததால்தான், சிலம்பு இவ்வேலியை, ”தாழைச் சிறை செய் வேலி”(166) என்கிறது.
தெண்திரை மணிப்புறம் தை வரும் கண்டல் வேலி நும்துறை”(நற்.54.9-11)     இப்பேரலைகளைத் தாக்குப் பிடிப்பனவாதலால், கண்டல் வேலிகள் பெருநீர் வேலிஎன்றழைக்கப்பட்ட செய்தியைக் குறுந்தொகையும்  (345.5-7)கூறுகிறது.

கடலுக்கு மதில்
   
கடற்கரைச் சோலைகளில்  தாழை, பனை, புன்னை மரங்கள் அடர்ந்து எழும்பி நிற்கும் காட்சி, மதில்கள் சூழ்ந்த அரண்மனைக் கோட்டையை ஒரு புலவருக்கு நினைவுபடுத்துகின்றது.

     ”
அயில்திணி நெடுங்கதவு அமைத்து,அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல் (கலி.135.3-5) என்ற பாடல் வரிகள், பேரலைகளைப் போர்க்களிறுகளோடு ஒப்பிட்டு, அக்களிறுகளைத் தடுக்கும் அரண்மனைக் கோட்டைகளாகக் கடற்கரைச் சோலைகளைக் காட்டுகிறது.   
ஆவேசத்துடன் பெருகிவரும் ஆழிப் பேரலை, இத்தகைய மரங்கள் சூழ்ந்த சோலைகளின் மீது  மோதியவிடத்து, சிறுநுரை என மாறி இறுதியில் இல்லாமல் போய்விடும் என்பதை, ”பெருநீர்க்கல் பொரு சிறுநுரை மெல்ல மெல்ல இல்லாகுமே”( குறுந்.290.4-6) என்ற வரிகள் காட்டுகின்றன.
இவ்வாறு,பேரலை சிறுநுரையாக மாறுவதற்குத் தாழையின் மடங்கிய தன்மையே காரணம் எனப் பல பாடல்கள் சான்று தருகின்றன.  
  "வணங்கிய தாழை (அகம்.128.1-2) என்ற பாடல் வரிகள் காக்கும் கடல் அருள் மறந்து அழிக்க முற்படும் போது, அதன் சினத்தைத் தணிக்கத் தாழையின் மடங்கிய தன்மையாலேயே இயலும் என்று கூறுகிறது.
கடற்கரைச் சோலைகளில் தாழை (கைதை, கண்டல்), நெய்தல், ஞாழல், புன்னை, பனை, அடப்பங்கொடிகள் போன்றவை ஒன்றோடொன்று இணைந்தே வளரக் கூடியன. இவை நெருங்கி வளர்வதால் அப்பகுதி கரிய சோலை போல் அடர்ந்திருக்கும்.

வெண்கோட்டு அருள் சிறைத்தா அய் கரைய

கருங் கோட்டுப் புன்னை (67.4-6)
என்ற பாடல் வெண்மையான மணல் குவிந்த கடற்கரை மேட்டில் கரிய அடிப்பகுதியையுடைய புன்னை மரங்கள் சிறை போல் எழும்பி இருக்கும் என்கிறது.

மணி ஏர் நெய்தல் மாமலர் நிறைய

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்

வீழ்தாழ் தாழைப் பூக்கமழ்,கானல்”(நற்றிணை.78.2-4)

அடும்புஅமல் அடைகரை” (பதிற்றுப்பத்து.51).

தயங்குதிரை பொருத தாழை”(குறுந்தொகை.226.5)

தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ

படப்பை நின்ற முடத்தாட் புன்னை(அகம்.180.12-13)

தெரிஇணர் ஞாழலும் தேம்கமழ் புன்னையும்

புரி அவிழ் பூவின கைதையும்(கலி.127.1-2)

இப்பாடல்கள்,கடற்கரைச் சோலைகளில்,புன்னை மரங்களோடு,

       
அடப்பங்கொடிகளும் தாழை மரங்களும் எப்பொழுதும் பிண்ணிப் பிணைந்து இணைந்தே வளர்ந்திருக்கும் என்கிறது. 

   
வையைக் கடல்

      
பரிபாடல் கூறும் வையை ஆற்று வருணனையில் வையைக் கடலோடு ஒப்பிடப்படுகிறது. வையை ஆறானது பெருகி, ஊருக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் ஆற்றங்கரைகளிலும் ஞாழல்,புன்னை,தாழை முதலான மரங்களை வளர்த்துள்ளனர்.இவை வளர்ந்து பெரிய சிறையின் சுவர் போல எழும்பி நிற்கும்.(பரிபாடல்.77) என்கிறது பரிபாடல்.

 
இம்மரங்களில் ஞாழல் மரம் வலுவானதல்ல. வெள்ள நீரின் வேகத்திற்குத் தாக்குப் பிடிக்க ஞாழல் மரங்களினால் இயலாது. ஆனால் புன்னை, தாழை இவையிரண்டும் உறுதியானவை, வலுவானவை. பேரலைகளைத் தாக்குப் பிடிக்கக் கூடியவை. கடற்கரைச் சார்ந்த பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் இத்தகைய மரங்களே வளர்க்கப்படவேண்டும். (பரிபாடல்.12-6) என்று மரங்களின் தன்மையைப் பரிபாடல் எடுத்துரைத்து அவற்றை மிகுதியாக வளர்க்கவேண்டும் என்கிறது.
பொதுவாக மரங்கள், மணல் அரிப்பைத் தடுக்கவல்லன. தாழையோ தன் வளையும் தன்மையால் பேரலையையும், பெருங்காற்றையும் தாக்குப் பிடிப்பதால் அப்பகுதியில் மணல் அரிப்பு ஏற்படாததோடு, பெரிய பாதிப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
இச்சோலைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டிருப்பதால், இவை நன்றாக  உயர்ந்து வளர்ந்து ஒரு மலை போல் காணப்பட்ட செய்தியை,

குன்று போல் எக்கர்” (கலி.127).

ஓங்கல் வெண்மணல்”(குறுந்.311)  என்று இப்பாடல்கள் கூறுகின்றன.
மேலும், கடல் மணலைக் கடலலைகள் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ப்பதினால் , மரங்களைச் சூழ்ந்துள்ள மணல்மேடு தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே சென்று, நெடிதுயர்ந்த  பனைமரங்களை மிகச் சிறியது போல் காட்டி நிற்கும், என

அடும்பு இவர் மணற்கோடு ஊர.நெடும்பனை
குறியஆகும்”(அகம்.248.4-6) அகப்பாடல் கூறுகிறது.
    “
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை”(குறுந்தொகை.311-5)
இப்பாடலில்,உயர்ந்து கொண்டே வரும் வெண்மணலினால் உயரம் குறைந்து கொண்டே வரும் புன்னை எனக் குறுந்தொகையும் கூறுகிறது.கடலின் அண்மையில் சோலைகளைப் பாதுகாத்தது போலச் சோலையடுத்த பகுதிகளில் நாவல் முதலான மரங்களையும் வளர்த்துள்ளனர்.

பொங்குதிரை பொருத வார் மணல் அடைகரைப்
அயில்திணி நெடுங்கதவு

புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி(நற்றிணை.35.1-2) கடற்கரைச் சார்ந்த பகுதியில் இதுபோன்ற ஏராளமான மர வகைகளை வளர்த்துள்ளனர்.

    
எனவேதான். கண்டல்வேலிகளை உடைய ஊரில் வாழ்வோர் தம் ஊரை , அழியாநல்ஊர் எனப் பெருமையோடு கூறிக் கொண்டுள்ளனர்.
  “அழியா மரபின் நம் மூதூர்”(அகம்.311.3-5)
கண்டல் வேலி கழி நல்ஊரே”(அகம்.372.13)
அழியாத புகழை உடையது கண்டல் வேலிகளை உடைய ஊரே என்ற புகழ்கிறது அகநானூறு.
தாழை தைஇய தயங்கு திரைக் கொடுங்கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம்சிறுநல்ஊரே”(குறுந்தொகை.345.5-7)
கடற்படப்பை நல் நாட்டுப் பொருந”(ப.ப.55.5-6)

கண்டல்வேலிகளை உடைய ஊர்களே நல்ல ஊர்கள் என்கின்றன குறுந்தொகை,பரிபாடல்  பாடல்களும். இவ்வாறு சிறப்பிக்கப்பட்ட ஊர்களின் பெயர்களே பிற்காலத்தில் மருவி கண்ட வாயில் என மாறிருக்கலாம். கண்டல் வேலி வாயில் என்பது மருவி “கண்ட வாயில் என ஆகியிருக்க வாய்ப்புண்டு.
ஆழிப்பேரலையும் பெண்மை நலனும்

        
கடற்கரைச் சோலைகளின் சிறப்பை உணர்த்த அகப்பாடல்களில் உவமையாகவும் பயன்படுத்தியுள்ளனர். கடலன்ன காமம் உழந்தும் மடல் ஏறா பெண்ணில் பெருந்தக்ககதில்என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்பவும், காதலையும் காமத்தையும் உரைத்தல் ஆடவர்க்கே உரியது என்ற பாரதியின் தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையிலும் வாழும் ஒரு தமிழ்ப்பெண் தன் தோழியிடம் தன் நிலையை உரைப்பதுபோல் ஒரு பாடல் உள்ளது .     கரையை உடைக்கப் பெருகிவரும் காம வெள்ளத்தின் ஆற்றலை தாங்காத நிலையில் அதை உரைக்கவும் இயலாத நிலையில்,“ முட்டுவென் கொல் தாக்குவென் கொல் என் காம நோயை அறியாது துஞ்சும் ஊரைஎன ஔவையின் தலைவி ஊரைச் சாடுகிறாள். அதுபோல் ஒரு நற்றிணைப் பாடல் காமத்தை ஆழிப்பேரலையோடு ஒப்பிட்டுப் பாடுகிறது. காமத்தினை வெளிப்படுத்த இயலாத நிலையில் ஒரு பெண் படும் பாட்டை, 

            “நோய் அலைக்கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
கைவல் கம்மியன் கவின் பெறக் கழாசு
மண்ணாப் பசுமுத்து ஏய்ப்ப குவிஅணர்ப்
பன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன் கொல்”(நற்றிணை.94.1-7)இப்பாடல் எடுத்துரைக்கிறது.
 இப்பாடலின் பொருளானது, ‘கைத்தொழிலில் சிறந்த கம்மியன் அழகு பெறக் கழுவி தூய்மை செய்யாத முத்து தன் ஒளியை வெளியே விடாமல், தனக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும். அதுபோலத் தமிழரின் பண்பாட்டின் காரணமாக என் காமநோயை என் மனதிற்குள் நான் மறைத்துக் கொண்டுள்ளேன். ஆனால், என் காமமோ ஆழிப் பேரலை போன்றது. அப்பேரலையைத் தடுத்து அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச்சோலைக்கு உள்ளது போல, என் காமத்தையும் அமைதியடையச் செய்யும் ஆற்றல் என் தலைவனுக்கு மட்டுமே உள்ளதுஎன்று தன் நெருங்கிய தோழியிடம் தலைவி தன் நிலையை உரைக்கிறாள். ஆழிப்பேரலைகளைத் தாக்குப் பிடித்து அவற்றை அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச் சோலைத்தான் உண்டு என்ற செய்தியைத் தமிழர் அறிந்திருந்ததை இப்பாடலும் உறுதி செய்கிறது. கண்டல் வேலி என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இச்சோலைகள், தற்காலத்தில் அலையாத்திக் காடுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக, ஆழிப்பேரலையின் வேகத்தை மரங்கள் பலமான வேர்களைக் கொண்டிருப்பதால், வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால், கட்டுப்படுத்துகின்றனஇதனால்தான்கடலோரங்களில்    .
 உள்ள கடற்கரைச் சோலைகளுக்கு  .அலையாத்திகாடுகள் எனப்  பெயர் ஏற்பட்டது
முடிவுரை
தாழைக்குக் குமரி என்ற பெயருமுண்டு. தாழை மரக் கண்டல் சோலைகள் சூழ்ந்திருந்ததால்தான் தென்னிந்தியப் பகுதிக்கு குமரி என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது. ஆழிப்பேரலையினால்,பெரும் பாதிப்பைப் பலமுறை சந்தித்துள்ள தமிழர் அதற்கான தீர்வையும் இயற்கையே வழங்கியிருப்பதை அறிந்து, கடற்கரைச்சோலைகளான கண்டம் காக்கும் கண்டல் வேலிகளைப் போற்றிப் பாதுகாத்துச் சுற்றுச்சூழலைக் காத்துள்ளனர்.
இதனால்தான்  உள்ள கடற்கரைச்சோலைகளுக்கு காணப் பெயர்  ்பட்டதுகாடுகள் அலையாத்தி  காடுகள் என்ற தாழைக்குக் குமரி என்ற பெயருமுண்டு. இத் தாழை மரக் கண்டல் சோலைகள் சூழ்ந்திருந்ததால்தான் தென்னிந்தியப் பகுதிக்கு குமரி என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது. எனவே,பெரும் பாதிப்பைப் பலமுறை சந்தித்துள்ள தமிழர் அதற்கான தீர்வும் இயற்கையே வழங்கியிருப்பதை அறிந்திருந்தனர்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?