முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Monday, 31 July 2017

மணிமேகலை 1919
கடற்கரையில் ஆர்ப்பரித்த கடல், இப்போது இந்த ஆழத்தில் தான் எவ்வளவு அமைதியாக இருக்கிறது. எப்படிக் கப்பலைத் தாலாட்டுகிறது. மனித மனமும் கரைகளை மோதி மோதி இறுதியில் பக்குவப்பட்டு நடுக்கடலைப் போல அமைதியாகி விடுகிறது.
குறைந்த கடலலை பேரிரைச்சலை ஏற்படுத்துவது போல, அனுபவமற்ற மனமும் தான் எத்தனை கேள்விகளை எழுப்புகிறது. அனுபவம் நிறைந்த நடுக்கடலோ, கேள்வியற்று அமைதியாக இருக்கிறது. தான் இந்நிலையை எவ்வாறு எப்போது பெறுவது?
கடலலைகளைப் பார்த்தபடியே மணிமேகலை சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் பட்டாடையும், அடர்ந்த கூந்தலும் அவள் மனதைப் போலவே அலைபாய்ந்தன.
சிறுவயதில் பாட்டி சித்திராபதியுடன் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறாள். மாதவி கோவலனுடன் மகிழ்ந்திருக்கும் நாள்களிளெல்லாம் சித்ராபதி அவளைக் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்கிறாள். தன்னொத்த தோழியருடன் விளையாடும் மணிமேகலை கடலில் தூரத்தில் தெரியும் படகுகளையும், நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கும் கப்பல்களையும் பார்த்திருக்கிறாள். அதில் பயணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டதை,காதில் வாங்காமல் பாட்டி மறுத்துவிட்டாள்.

மீனவப் பெண்களின் கழுத்து மணி மாலைகளும், அவர்கள் மீது வீசும் புலால் வாசமும், கொச்சையான அவர்களின் பேச்சும் அவளுக்கு வேடிக்கையாக இருக்கும். படகுகளிலிருந்து மீன்களை அள்ளிக் கொண்டு வரும் மீனவர்களின் வியர்வை வடியும் உடலையும், உறுதியான பயமுறுத்தும் தோற்றத்தையும் கண்டு பாட்டியின் பின் ஒளிந்து கொள்வாள்.
மாதவியைப் போலவே மணிமேகலையும் பல கலைகளைக் கற்றிருந்தாள். மாதவியை விட அக் கலைகளில் மணிமேகலை சிறந்திருப்பதாகப் பலர் கூறக் கட்டிருக்கிறாள்.தலைக்கோலிபட்டத்தைப் பெற மணிமேகலையைத் தயார்ப்படுத்த சித்ராபதி அவளைப் படாதபாடு படுத்தியிருக்கிறாள். ஆனால் கோவலன் உறுதியாக அவளை அரங்கேற்றம் செய்யக் கூடாது எனத் தடுத்து விட்டான்.
சித்ராபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கணிகையர் வீதிக்கு அவள் ஒரு முடிசூடா ராணி. அவள் அனுமதியின்றி யாரும் எந்தக் கணிகையையும் நாட முடியாது. தொகையையும் அவளே தீர்மானிப்பாள். எப்போதும் அவள் மாளிகையில் அகிலின் நறுமணமும், குங்கிலியத்தின் நறும் புகையும், அத்தரின் மணமும் வீசிக் கொண்டிருக்கும். கடும்தேறல் ஜாடிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். பட்டாடை உடுத்தி கழுத்து நிறைய நகைகள், கைகளில் ஒலிக்கும் வளையல்கள், அள்ளிச் செருகிய கொண்டையில் முத்தாபரணங்கள் என எப்போதும் அலங்காரத்துடனே இருப்பாள். கணிகையர் குலப் பெண்களையும் அலங்கரித்துக் கொள்ளும்படி விரட்டியபடியே இருப்பாள். எப்போதும் அலங்கரித்துக் கொண்டு நறுமணத்துடனிருக்கும் கணிகையர் குலப் பெண்களுக்கும், வியர்வையையே அணிகலனாக நினைத்து உழைக்கும் மீனவப் பெண்களுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு.
மணிமேகலையை மிகவும் கவர்ந்தது அவர்களின் படகுப் பாட்டுதான்.
ஏலேலோ . . . . என்று ஆரம்பித்துக் கடலின் ஏற்ற இறக்கத்துக்குத் தக்கபடி, துடுப்பை போட்டு படகு விடும் அவர்களின் பாட்டைக் கேட்பதற்காகவே கடற்கரைக்குச் செல்ல ஆசைப்படுவாள்.
"
பாட்டி நாமும் படகில் போகலாமா?"
போலாம். போலாம்
"
எப்போ பாட்டி?" மணிமேகலை அவள் புடவைத் தலைப்பை இழுத்தபோதுதான் சுயநினைவிற்கு வந்தாள். கோவலன் நடன அரங்கேற்றத்திற்கு மணிமேகலையை அனுப்ப மறுத்ததிலிருந்தே அவள் சிந்தனை வயப்பட்டு விட்டாள்.
ஒவ்வொரு கணிகையின் திறமைக்கு ஏற்ப, அவள் நடனத்திற்கும், அவளுக்கும் விலையை நிர்ணயிப்பது அவள்தான். ஆணாகக் கணிகைக் குலத்தில் பிறந்தவனுக்கு யாழிசைப் பயிற்றுவித்து, செல்வந்தர்களை எப்படி அணுக வேண்டுமென்று கற்றுக் கொடுத்து, அவர்களைக் கணிகை வீதிக்குக் கூட்டிவரும் வேலையை ஒப்படைப்பாள்.
பெண்ணாகப் பிறந்துவிட்டால், தக்க வயதில் நடன அரங்கேற்றம் நிகழ்த்தி மன்னன் மற்றும் செல்வந்தர்முன் ஆட விடுவாள். பெண்களின் இளமை உள்ளவரை தான் ஆடியும் பாடியும் பொருளீட்ட முடியும். ஆடவரை மகிழ்விக்கும் கலையைப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களை மகிழ்விப்பதைத் தவிர வேறு நினைவே அவர்களுக்கு எழாதவாறு செய்து விடுவாள். செருக்கும் செல்வாக்கும் உடைய சித்ராபதிக்குக் கோவலன் போக்குப் புரிபடாமலிருந்தது.
இனிமேல் சித்ராபதியுடன் கடற்கரைக்குக் கூடக் கோவலன் மணிமேகலையை அனுப்புவது சந்தேகம் தான். கணிகை குலப் பெண்கள் உரிய காலத்தில் மணிமேகலைக்கு அரங்கேற்றம் நடத்தாததைப் பற்றி இப்போதே சாடை பேச ஆரம்பித்து விட்டார்கள்.
கோவலன் இறப்பும், மாதவியின் துறவும் அவளை இடிபோல் தாக்கி விட்டன.
கணிகைத் தொழில் செய்ய முடியாது என்று செங்கல் சுமக்கச் சென்ற பெண்களை எப்படியெல்லாம் செல்வந்தர்களை ஏவி விட்டு மீண்டும் குலத் தொழிலுகே வரச் செய்தவள். இதனால், மாதவியின் அழுகை அவளுக்கு எரிச்சலையூட்டியது. ஒருவனுக்காக அழுவதை விடப் பலருக்காகச் சிரித்து வாழலாமேஎன்பது தான் அவள் எண்ணம்.
கணிகைகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள்.
'
சித்ராபதி ஆட்டம் அவ்வளவுதான்
சித்ராபதியின் மகள் துறவியாவதா?’
அவளுக்குள் கோபம் கனன்றது. பல முறை வசந்த மாலையை அனுப்பி விட்டாள். மாதவியின் உறுதியைக் குலைத்து விடுவதென வைராக்கியம் கொண்டாள். முடியாதெனத் தெரிந்த கணத்தில் அவள் மனம் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. மணிமேகலைதான் ஓர் ஒளிக் கீற்றாய் தெரிந்தாள்.
மணிமேகலையும் இப்போது கடல் தாண்டி அவள் கையைவிட்டு எங்கோ சென்று விட்டதை அவள் உள்ளம் ஏற்றுக் கொண்டிருக்குமா? [தொடரும்]
]


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?