முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Monday, 11 March 2013

மாண்பமை துணைவேந்தர் கி. முத்துச்செழியன் அவர்கள் ஆற்றிய உரை

முனைவர்கி.முத்துச்செழியன்,                துணைவேந்தர்,                                                பெரியார் பல்கலைக்கழகம்,                           சேலம் - 11.

(பண்பாட்டியல், சமூகவியல், வரலாற்றியல் நோக்கில் புறநானூறு என்னும் தலைப்பிலான பத்து நாள் பயிலரங்கின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பெரியார் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் கி. முத்துச்செழியன் அவர்கள் ஆற்றிய உரை)

தமிழ்மொழி இப்பொழுது உயர்தனிச் செம்மொழியாக இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை எண்ணித் தமிழர்களாகிய நாம் பெருமிதம் அடைகின்றோம்; நம்மை நாமே பாராட்டிக் கொள்கின்றோம். ஆனால் அதே நேரத்தில் நமது மொழிக்குச் செம்மொழித் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களை நாம் முற்றிலும் அறிந்து கொண்டுள்ளோமா?
அவ்விலக்கியங்களின் பல்வேறு பரிமாணங்களையும் அவை இயங்கும் மாறுபட்ட தளங்களையும் நாம் விளங்கிக் கொண்டுள்ளோமா? என்னைப் போன்ற அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; கலை இலக்கியத் துறைகளைச் சார்ந்தவர் கூட பழந்தமிழ் இலக்கியங்களாம் சங்க இலக்கியங்களைச் சரியாக அறிந்து கொண்டுள்ளோமா? என்னும் வினாவிற்கு நேர்மையாகப் பதில் கூறுவதென்றால் ‘இல்லை’ என்றுதான் கூற வேண்டும். புதிது புதிதாக உருவாகிவரும் அறிவியல் அணுகுமுறைகளைப் (ளுஉநைவேகைiஉ யயீயீசடியஉh) பயன்படுத்தி, சங்க இலக்கியங்களை மக்கள் மயமாக்க வேண்டும் என்பதற்காகவும், இலக்கியங்களைப் பயில்வோரும், பயிற்றுவிப்போரும், ஆராய்ச்சி செய்வோரும் பழந்தமிழ் இலக்கியங்களில் முற்றிய புலமையாளர்களாக மாற வேண்டும் என்னும் வற்றாத தாகத்தோடும் கடந்த 10 நாட்களாக, பண்பாட்டியல், சமூகவியல், வரலாற்றியல் நோக்கில் புறநானூறு என்னும் பொருண்மையில் நடைபெற்ற பயிலரங்கின் நிறைவு விழாச் சிறப்புரையாற்ற வாய்ப்புக் கிடைத்தற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பயிலரங்கின் கருத்துருவைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு அனுப்பி, பயிலரங்கம் நடத்த மிகுதியான நிதிநல்கையைப் பெற்றுள்ள இக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.சுதந்திரம், ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.முத்துசாமி ஆகியோரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
     பாட்டும் தொகையுமாக விளங்கும் சங்க இலக்கியங்கள் தமிழ்ப்பண்பாட்டின் கருவூலங்களாக விளங்குவனவாகும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் தெரிந்து கொள்வதற்குரிய ஆவணமாக விளங்குகிறது. பண்டைத் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வீரர்கள், வீரவழிபாட்டு முறைகள், சமூகப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்ற பாடல்களைப் புறநானூற்றில் மிகுதியாகப் பார்க்க முடிகின்றது. அருளும் -ஆண்மையும், பண்பும் - பாசமும், பாவும் - பாவலரும், இசையும் - ஈகையில் சிறந்தோரும், அரசும் - நாடும், ஆட்சியும் - மாட்சியும், வீரமும் - தீரமும், கல்வியும் - கலைகளும் சிறந்து விளங்கிய தமிழகத்தைப் படம் பிடித்துக் காட்டும் ஒப்பற்ற வரலாற்று நூல் புறநானூறு ஆகும். புறநானூற்றின் பாடுபொருள், பாடியோர், பாடப்பெற்றோர், அமைப்பு முறை போன்ற புறநானூற்றுக் கவிதையியல் குறித்துப் பேசுவதற்கு ஏராளமான குறிப்புகள் உள்ளன. எனினும், புறநானூறு குறித்து சில மதிப்பீடுகளை ஒன்றிரண்டு பாடல்கள் மூலம் நான் எடுத்துக்காட்டி எனது உரையை நிறைவு செய்யலாம் என்று கருதுகிறேன்.
    பாண்டிய நாட்டு மன்னன் இளம்பெருவழுதி என்பவன் நீண்ட நாட்களாக, இவ்வுலகம் அழியாமல் நிலை பெற்றிருப்பதற்குரிய காரணத்தைத் தெரிந்து கொள்ள விரும்பி, ஆய்வு செய்து, சிந்தித்து அதற்குரிய விடையைக் கண்டுபிடித்தான். அவன் நாடாளும் காவலனாக மட்டுமல்லாமல் நல்லதமிழ்ப் பாவலனாகவும் விளங்கியவன். எனவே, அவன் கண்டுபிடித்த உண்மைகளை ஒரு கவிதையாக்கினான். புறநானூற்றில் 182-ஆவது பாடலாக இடம் பெற்றுள்ள அவனது கவிதைக்குச் சற்றே உங்கள் செவிகளைக் கடன் கொடுங்களேன்.

        """"உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்

        அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
        தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
        துஞ்சலும் இவர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
 புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே""

என்ற இளம்பெருவழுதியின் பாடல் சான்றாண்மைப் பண்புகளைப் பட்டியல் இடுகின்றது.

    இந்திரர்க்கு உரியது என்று கூறப்படும் தேவாமிர்தம், அதனை உண்பவரைச் சாவில் இருந்து காப்பற்றக் கூடிய பண்புடையது ஆகும். அத்தகைய தேவாமிர்தமே தமக்குக் கிடைத்தாலும், ‘அது உண்பதற்கு இனிமையானது; நமக்குச் சாவே வராமல் தடுக்கக் கூடியது’ என்று கருதித் தாம் மட்டும் தனித்து உண்ணமாட்டார்கள். பிறரிடம் சிறிதும் சினமடையமாட்டார்கள்; எடுத்த காரியத்தை இனிதாக நிறைவேற்றி முடிக்காமல் சோம்பி இருக்கமாட்டார்கள். ‘இந்தச் செயலைச் செய்தால் தமக்குப் பழிவந்து சேரும்’ என்று உலகத்தவர் செய்யத் தயங்குகின்ற செயலைச் செய்யத் தாமும் தயங்குவார்கள். ஒரு செயலைச் செய்து முடிப்பதனால் தமக்குப் புகழ் கிடைக்கு மென்றால், அச்செயலைச் செய்து முடிக்கத் தம் இன்னுயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அதே நேரத்தில் குற்றமுடைய ஒரு செயலைச் செய்வதால் உலகமே பரிசாகக் கிடைத்தாலும் தமக்கு வந்து சேரும் இழிவைக் கருதி, அக்குற்றமுடைய செயலைச் செய்யமாட்டார்கள். மனக்கவலையும் சோர்வும் அடையமாட்டார்கள். இத்தகைய பண்புகளோடு வாழ்கின்றவர்களே சான்றோர் எனப்படுபவர் ஆவார்கள். அவர்கள் தமக்கென எதுவும் செய்து கொள்ளாமல், பிறர்க்கென உழைக்கும் உண்மையான இயல்புடையவர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட சான்றோர்களால்தான் இந்த உலகம் சிறப்புடன் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது"" என்பதுதான் இளம்பெருவழுதி முயன்று கண்டுபிடித்த உண்மைகளாகும். சான்றோர்களின் இயல்புகள் எவை? என்பதை இப்பாடலில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளான் பாண்டிய மன்னன் இளம்பெருவழுதி.


    இந்தப் பாடலைப் போலவே என்னைக் கவர்ந்த இன்னொரு பாடல் உலகப் புகழ்பெற்றதாகும். ஐக்கிய நாட்டுச் சபையின் தலைமை அலுவலகத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் புகழார்ந்த அந்த வரிகளை முதலடியாகக் கொண்ட பாடலே அந்தப்பாடலாகும். ஆம் கணியன் பூங்குன்றனாரின் அந்தப்பாடல்.


        """"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;
முனிவிலர், இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே""
என்பதாகும்.

    மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகப் பொதுமையை – அதாவது உலகிலுள்ள எந்த ஊராக இருந்தாலும் அது நமது ஊரே; உலகில் உள்ள நமது உறவினர்களே என்ற உயர்ந்த மனிதநேயச் சிந்தனையை இந்தப் பாடலின் தொடக்கத்தில் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற அடியின் மூலம் முன்வைக்கும் கணியன் பூங்குன்றனார், தொடர்ந்து அந்தப் பாடலில் குறிப்பிடும் கருத்துகள் கவனிக்கத் தக்கவை. ‘நம்மை வந்தடையும் நன்மைகளுக்கும் , தீமைகளுக்கும் நமது செயல்களே காரணங்களாகும். அவை, பிறரால் நமக்கு வருபவை அல்ல; அது போலவே நமக்கு வரும் துன்பங்களுக்கும், அவற்றிலிருந்து விடுபடுதலுக்கும் நாமே காரணராவோம். இவ்வுலகில் ‘சாவு’ என்பது புதிய செய்தி அல்ல, வாழ்க்கை ‘இனிமையானது’ எனக்கருதி மகிழ்தலும், வாழ்க்கை ‘துன்பமுடையது’ எனக்கருதி அதனை வெறுத்தலும் ஆகிய இரண்டு செயல்களையும் செய்ய வேண்டாம். நம்முடைய செயலுக்கேற்ப நமது உயிர் சென்று அடையவேண்டிய இடத்தைச் சேரும். எனவே, பெரியோர்களை வியந்து பாராட்டுதலும், சிறியோர்களை இகழ்தலும் ஆகிய செயல்களைச் செய்ய வேண்டாம்’ என்ற இந்த வாழ்வியல் நெறிகளை நாம் உணர்ந்து, அவற்றைக் கைக்கொண்டால் நாம் நம்முடைய வாழ்க்கையை அமைதியாக நடத்தலாம்.


    இன்னும் வறுமையிலும் பிறர்க்குக் கொடுத்து  மகிழ்ந்த பெருஞ்சித்தரனார் பாடல்கள், முல்லைக்குத் தேர் ஈந்த பாரி, முத்தமிழுக்காகத் தன் தலையையே கொடுக்க முன் வந்த குமணன், குளிரால் நடுங்கிய மயிலை தான் அணிந்திருந்த ஆடையால் போர்த்திய பேகன் போன்றோரின் ஈகையைக் காட்டும் பாடல்கள் எனப் பல பாடல்களை என்னால் காட்ட முடியும். காலத்தின் அருமை கருதி, பானை சோற்றுக்குப் பதச் சோறாக இரண்டு பாடல்களை மட்டும் விளக்கினேன்.


    புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகம், அசாம் கௌகாத்திப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் போன்ற அயல்நாட்டுப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்களும், பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுர் பல்கலைக்கழகம், அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் போன்ற தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக தமிழ்த்துறைகளில் பணியாற்றும் நுண்மான் நுழைபுலம் மிக்க தமிழ்ப் பேராசிரியர்களும், சேலம் - 7 அரசு கலைக்கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி, தருமபுரம் ஆதினக் கல்லூரி போன்ற பெருமைக்குரிய கல்லூரிகளின் தமிழ்ப் பேராசிரியர்களுமாகிய 30 துறை வல்லுநர்கள் 38 தலைப்புகளில் புறநானூறு குறித்த சிந்தனை வளமிக்க ஆய்வுரைகளை இந்தப் பயிலரங்கில் வழங்கி இருக்கிறார்கள். பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்ட ஆய்வாளர்களுக்கு நல்லதொரு அறிவு விருந்து சேலம்-7 அரசு கல்லூரி தமிழ்த் துறையின் மூலம் படைக்கப்பட்டுள்ளது.


    இந்தப் பயிலரங்கைத் திட்டமிட்டு உழைத்துச் சிறப்பாக நடத்தி முடித்த தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுவதோடு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வரையும் பாராட்டுகிறேன்.


    இந்தப் பயிலரங்கிற்கு நிதிநல்கை வழங்கிய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கும் நமது பாராட்டுகள் உரியதாகுக. பங்கேற்பாளர்களாகிய மாணவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இது போன்ற அறிவுத் தேடல்கள்  தமிழிலக்கியங்களை, குறிப்பாக சங்க இலக்கியங்களைப் புதிய பரிமாணங்களில் ஆராய்வதற்குப் பெருந்துணை செய்யக் கூடியன என்பதால் இத்தகைய பல நிகழ்ச்சிகளை நம் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற ஒவ்வொரு கல்லூரியும் நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கெண்டு, அனைவருக்கும் நன்றி கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.


                நன்றி.வணக்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?