நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 7 March 2013

மானுடர்க்கென்று...

சிறுகதை -1

மானுடர்க்கென்று........

கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருக்க, அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர்.

தந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த மலர் ஓடி வருவதைப்போல வந்த மகளிடம் சோகத்தை மறைக்க, புன்சிரிப்பை வலிய வரவழைக்க முயன்றார்.  ஏனோ அது வரவில்லை. கோதையின் முகம் சிறுத்தது. தன்னால் தான் தந்தை சிரிப்பையே தொலைத்துவிட்டார் என்ற எண்ணம் அவளை நிலைகுலைய வைத்தது.

அன்றொரு நாள் சிறுமியாயிருந்த போது கண்ணனுக்காகக் கட்டிய மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு நானே கண்ணன்` எனத் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டும் கூட கோபத்திலும் அவர் முகத்தில் புன்னகை மாறாமலிருந்ததே.  கண்டிப்பிலும்கூட அவரையும் மீறி சொற்களில் அன்பு கனிந்திருந்ததே. இப்போது அவை எங்குப் போய் ஒளிந்து கொண்டன? வலிய புன்னகைக்க முயன்று ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறார்? எனினும் முன்னை விட அவர் கண்களில் மிகுதியாய் அவளைப் பார்க்குந் தோறும் கனிவு பெருகிக்கொண்டிருக்கிறதே?

கோதை  தாயைப் பார்க்க உள்ளறைக்குச் சென்றாள். அவளின் தாய் தள்ளாத வயதிலும் உடல் சோர்வைப் பொருட்படுத்தாது அடுப்படியில் சுறுசுறுப்பாக இயங்கிகிக்கொண்டிருந்தாள். கோதையின் வரவறிந்து சொம்பு நீரை எடுத்து நீட்டினாள். தந்தையின் வருகையைத் தெரிவிக்குமுன்னரே எப்படி அவர் வருகையை அறிந்தாள்? நெருப்பின் சிவப்போடு போட்டிப் போடும் அவள் மேனியிலிருந்து பெருகி வழியும் வியர்வை தனலின் ஒளி பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.கண்கள் உள்ளடங்கிச் சிறுத்திருந்தன. அவளுடைய மை தீட்டிய பெரிய கண்கள்  இந்த இரண்டு வருடங்களுக்குள் யாரைக் காண விரும்பாமல் இப்படிச் சிறுத்தன? யாருமறியாமல் அழுது அழுது தன் குடும்பத்தைத் தவிர இனி எவரையும் பார்ப்பதில்லை என வைராக்கியம் கொண்டதனால் இப்படிச் சிறுத்து விட்டனவோஎல்லாம் தனக்காக.. தன் மீது கொண்ட பாசத்திற்காக...கோதை மறுகினாள்.


தந்தையும் தாயும் மாறி மாறி எதையும் சொல்லாமல், பேசிக் கொள்ளாமல் கோதைக்குத் தெரியாமல் பாதுகாத்தாலும்,அவர்கள் மனதில் மூண்டு எழுந்து உக்கிரமாகி கொண்டிருக்கும் அக்னியின் தகிப்பு அவளையும் சூழ்ந்து கொண்டுதான் இருந்தது. இதற்கு முன் தந்தை வெளியில் சென்று திரும்பும் பொழுது வீடு இப்படியா இருக்கும்? தந்தை உள்ளே நுழைவதை எங்கிருந்தாலும், எந்த வேலையிலிருந்தாலும் உண்ர்ந்து கொண்டு ஓடிவராத குறையாக நடந்து வந்து, நீராகாரம் கொடுத்து அவருடன் சிறிது நேரம் மலர்ந்த முகத்துடன் பேசி, கோதையின் அன்றைய குறும்புகளையோ, அவள்  கற்றுக் கொண்ட புதிய பாடத்தையோ  பற்றிப் பேசி, அவரைச் சிரிக்க வைத்த பின்னர் தானே விட்டு வந்த வேலையை நினைத்து ஓடுவாள்.இப்போதெல்லாம் தந்தை வந்ததை அறிந்த பின்னரும்,இல்லாத வேலையை இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டு அவள் வெளியே வர மறுக்கும் காரணம் கோதைக்குப் புரியாமலா இருக்கிறது? தந்தை சென்ற வேலையின் பலனை அவர் சொல்லாமலே அவர் முகத்தைப் பார்க்காமலே தெரிந்து கொண்டு விட்டதைத் போலத்தானே அவளுடைய இச்செயல் காட்டுகிறது?

தந்தையிடமிருந்து மட்டுமா, தன்னிடமிருந்தும்தான் தள்ளி நிற்கிறாள். இதைச்செய், இப்படிச்செய், புக்ககம் சென்றால் எல்லாரும் பாராட்டும்படி செய்யவேண்டும். அப்புறம் என்னைத்தான் தூற்றுவார்கள் என்று நொடிக்கொருதரம் கோதைக்கு வேலைகளைத் திருத்தமாகச் செய்யக் கற்றுக் கொடுக்கும் தாய் இப்போது ஏன் எதையும் கண்டு கொள்வதில்லை? கோதையின் தாய்க்கு தெரியாதது எதுவுமில்லை. எத்தனை விதமான கோலங்கள்? சமையல்கள்? கண்ணனுக்கு அவள் கட்டித்தரும் மாலைகள் தான் எத்தனை விதங்கள்? கண்ணன் நின்ற கோலத்திலிருக்கும் பொழுது அவன் கழுத்திலிருந்து கால் பெருவிரலைத் தொடும்வரை அணிவிக்கப்படும் நீண்ட மாலையைக் கட்டிஅதன் பெயர் தெரியல் என்பாள்.  கண்ணனின் தோளில் தொடங்கி இடுப்புவரை மட்டும் வரும் வகையில் பூக்களைக் கோர்த்து இரு பக்கத்தையும்  சேர்த்துக் கட்டி அதன் பெயர் மாலை என்பாள். அதன் கீழ்ப்பகுதியில் பந்து போலப் பூவை கட்டி தொங்க விட்டால் அதன் பெயர் தொங்கல் என்பாள்..கொண்டையில் சூட சிறிய அளவில் சிறு வளையம் போல வட்டமாகக் கட்டினால் அதன் பெயர் கோதை என்பாள்.

தலைஅலங்காரத்தில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் மகளுக்குப் போட்டுப் பார்த்து ஆனந்தம் அடைவாள். மகளின் அடர்ந்த கூந்தலைப் பாதியாக்கி தலை உச்சியின் இடதுபுறம் கொண்டை போட்டு அதைச்சுற்றி கோதை எனப்படும் சிறு வளையம் போன்ற மாலையைச் சூட்டி அழகு பார்ப்பாள்.அதுதான் மகளுக்கு அழகாக இருக்கிறது என்று அடிக்கடி போட்டு அழகு பார்த்ததால் தானே தோழியர் தன்னைக் கோதை என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். தனக்கும் அதுவே பெயராகிப் போனது. மழலை மாறா சிறிய வயதில் அவளைப் படுத்திய பாட்டையெல்லாம் வளர்நத நிலையில் சொல்லி பூரித்துப் போவாளே. ஓயாமல் பேசுபவளே பேசுவதை மறந்ததைப் போல மௌனமாகிப் போனதென்ன?

பதினைந்து வருடத்திற்கு முன் தோட்டத்தில் துளசி செடி அருகே தான் கண்டெடுக்கப்பட்டதாகத் தந்தை எப்போதோ கூறியது இப்போது ஏன் அடிக்கடி நினைவிற்கு வருகிறது.பிறந்த அன்றே தன்னைத் துளசிச் செடியருகில் போட்டது யாரோ?‘கண்ணனே துளசிச்செடியருகில் தனக்காகக் குழந்தையாக மாறிக் கிடந்ததாக நினைத்து மனமகிழ்ந்து வாரியணைத்துக் கொண்டதாகத் தந்தை கூறும் பொழுது அவர்தான் எப்படிக் கிறங்கி்ப் போவார்? குழந்தையற்ற தம்பதிகளுக்குக் கண்ணனையே குழந்தையாகப் பாவித்துப் பாவனையில் கொஞ்சி மகிழ்ந்தவர்களுக்கு, மோகினி வடிவம் எடுத்து சிவனையே மயக்கிய கண்ணன் அவ்வடிவெடுத்தே குழந்தையாகக் கிடைத்திருக்கிறான்.

தூணிலும் துரும்பிலும் இக்குழந்தையிலும் அவன்.சிரிக்கும் பூப்பந்து. அவர்கள் வீட்டில் துள்ளி விளையாட ஒரு சின்னக்குழந்தை.சிலைவடிவ கண்ணனுக்குச் செய்ததெல்லாம் நிஜத்தில் செய்திட வாய்ப்பு தந்திட்ட குட்டிப் பொக்கிசம் என்று  பூரித்தவர்கள் அல்லவோ அவர்கள்?

கோதை வளர வளர அவள் கேள்விகளும் அதிகமாயின. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் தம் உறவுகள் அளித்த பரிசுகளைப் பற்றிக் கூறும் பொழுது தன் உறவுகள் பற்றிக் கேள்விகளால் பெரியாழ்வாரைக் குடைவாள்.

பெரியாழ்வார் குறும்புச் சிரிப்புடன் கோதையை மடியிலமர்த்தி, அவள் பிறந்தபொழுது தேவர்களின் தலைவனான இந்திரன் வைரம் மற்றும்  மாணிக்கம் பதித்த தங்கத் தொட்டிலைப் பரிசளித்தாகவும், சிவன் தங்க மாதுளம்பூ தொங்கவிடப்பட்ட இடைஞாணும்,பிரமன் பொன் சலங்கையும் பரிசளித்ததாகவும்,  தேவாதிதேவரெல்லாம் வந்திருந்து விலைமதிப்பில்லா பல பரிசுகளை அளித்ததோடு பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்திச் சென்றதையும் மிகப் பெருமையுடன் கூறியது இன்றும் கோதையின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

பெரியாழ்வார் சொல்லச் சொல்ல விழிகள் விரிய அக்காட்சியை நினைத்துப் பார்த்துப் பூரித்துப் போவாள் கோதை.இப்போது ஏன் வருவதில்லை என்று அவள் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு உன் திருமணத்திற்கு வருவார்கள்எனக் கூறி அவள் வாயை அடைத்து விடுவார் பெரியாழ்வார்.தோழியரிடம் சென்று தந்தை சொல்லியதைச் சொல்லி திக்கு முக்காட வைப்பாள்.

அவளுடைய அழகும், அறிவும், பணிவும் அனைத்திற்கும் மேலாக அவள் கற்பனை கலந்து கூறும் கண்ணனின் கதைகளும், தோழியர் அனைவரையும் கட்டிப் போட்டிருந்தன. அவளோடு சேர்ந்திருக்க ஆசை கொள்ளாத பெண்களில்லை.தாயிடம் பூமாலையும் தந்தையிடம் பாமாலையும் கற்றதினால், எளிதில் உடன் ஒத்த தோழியரை வழி நடத்தும் தலைமை பெற்றாள்.

மார்கழி வந்து விட்டால் போதும். விடியற்காலமே தோழியரை எழுப்பிக் கையில் விளக்குடன் கண்ணனின் திருக்கோயிலுக்குச் செல்வதை ஒரு திருவிழா போலவே மாற்றிக் கொண்டிருந்தாள். முப்பது நாளும் சலிக்காமல் கோதையைத் தவிர யார் இப்படி வழி நடத்தியிருக்க முடியும்? கண்ணனின் கோயிலை கோயிலாகவா காட்டினாள்?

வாயிற்காப்போன், நந்தகோபன், பலதேவன், யசோதை, நப்பின்னை அனைவரும் குடியிருக்கும் கண்ணனின் வீடாக அல்லவா காட்டினாள். அதுமட்டுமா?நெய் பால் உண்ணக்கூடாது. கண்ணில் மை எழுதக்கூடாது. எளிய ஆடையில்தான் கோயிலுக்கு வரவேண்டும்.கோதையின் சொல்லுக்கு மாற்று உண்டோ?அதிகாலையில் எழாமல் அடம்பிடிப்பவர்கள் கூடக் கோதைக்காக, நோன்பு முடியம் நாளில் அவள் தரும் இனிப்பு பாற்சோற்றின் சுவைக்காக நோன்பிருந்தனர்.

இளம்பெண்களையெல்லாம் திரட்டி கண்ணனுக்காக நோன்பிருக்க வைத்து பெரும் புரட்சி செய்து கொண்டிருந்த கோதையை நினைத்து நெஞ்சு கொள்ளாத பெருமிதத்தில் பூரித்துப் போயிருந்தார் பெரியாழ்வார்.அதனால்தான் திருமாலுக்கு அணிய வைத்திருந்த மாலையைக் கோதை எடுத்து அணிந்து கொண்டபோது பெரியாழ்வாரால் வன்மையாகக் கண்டிக்கமுடியவில்லை.

அவர் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றதை அறிந்த கோதை அவர் வீடு திரும்பியதும், வாசலிலேயே எதிர்கொண்டு தூணிலும் துரும்பிலும் அவன் என்பது உண்மையானால் என்னில் அவன் இல்லையா? ஏன் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றீர்கள்? எனக் கேட்டு திகைக்க வைத்தாளே?அவளுடைய துடுக்குத்தனம் இப்போதெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டது?

 இப்போதெல்லாம் தன் வேலையைச் செய்துவிட்டுத் தோட்டத்திற்குச் சென்று விடுகிறாள்.ஒவ்வொரு செடியாகப் பார்த்துக் கொண்டு வந்தவள், வெள்ளிய ஒளிப் புள்ளிகளைக் கொண்டு அவளையே பார்ப்பது போலத் தோற்றமளித்த துளசி்ச்செடியருகே தன்னையறியாமல் நின்றுவிட்டாள்.இதுவரை இல்லாத ஏக்கம் அவளுள் சூழ்ந்தது. மற்ற செடிகளுடன் வளர்ந்திருந்த துளசிச்செடிக்கு மட்டும் மண்ணால் ஒரு மாடம் கட்டினாள்.

செடிகளுக்குக் கூடக் கிளை பரப்ப வழியிருக்க மானிட சாதியான தனக்கு அது ஏன் மறுக்கப்பட்டது? தன் சாதி .....அதுதானே தாய் தந்தையரின் பெருந்துயருக்குக் காரணம். தன்னோடொத்த தோழியரெல்லாம் மணமுடித்துச் சென்று விடத் தான் மட்டும் இன்னும்.....அழகும், அறிவும், பணிவும், ஆளுமையும் புறந்தள்ளப் பட்டு சாதியே முன் நிற்கிறது. கோதையின் திறமையின் பெருமையில் பூரித்து நின்றவர்களைச் சாதி சுழற்காற்றாய் மாறி சூறையாடிக் கொண்டிருக்கிறது..பெரியாழ்வார் இன்னும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இப்போதுகூட அயலூரிலிருக்கும் பால்யகால நண்பனை கோதையின் திருமணம் தொடர்பாகச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். சிங்கமெனப் பறப்பட்டுப் போனவர் சிறுபுல்லென மிதிபட்டு வந்திருக்கிறார்.

சாதிக்கச் சாதி தேவையில்லை.சாத்திரத்திற்குச் சாதி தேவை.எண்பது வயது கிழவனும் சாதியற்ற பெண்ணைக் கை பிடிக்கமாட்டான்என அவர் நாடியைப் பொடித்து அனுப்பியிருக்கிறார் அவர் நண்பர்..இவர்கள் வணங்கும் கண்ணனே இடைசாதி.கீழ்சாதி.இவர்கள் மட்டும் மேல் சாதியா? என்ன முரண்பாடு? இதை யாரிடம் சொல்வது? சாதியைக் கடந்த தாய் தந்தையரிடம் யார் சொல்வது அதன் விசுவரூபத்தை‘தாய்க்குப் புரிந்து விட்டது.அதனால்தான் உள்ளொடுங்கிப் போய்த் தன்னிடம் முன்பை விட உயிராயிருக்கிறாள்.நான் தூங்கும்பொழுது என் முகம் பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு உடல் சுருங்கிப் போய்விட்டாள்.நானறியாமல் எனக்காக அழும் இவளல்லவோ உண்மைத்தாய்‘.

பெரியாழ்வார் மனைவியின் உள்ளிருப்பை வேறுவிதமாகப் புரிந்து கொண்டார்.தன் சோகமுகத்தை அது தரும் துயரச் செய்தியை கேட்கப் பிடிக்காமல் உள்ளிருப்பதாகப் புரிந்து கொண்டார்.ஆனால்  கணவனிடம் பேசுவதைக் கண்டு வளர்ந்த பெண்ணாகிய கோதையின் மனம் ஏக்கம் கொண்டு விடக் கூடாதென்றே பெரியாழ்வாரிடம் பேசுவதை அவள் தவிர்க்கிறாள் என்ற  உண்மையை கோதை புரிந்து கொண்டாள்.

கண்ணா உன்னை வளர்த்த யசோதை போலத்தானே என் தாயும்? பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா? நீயும் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தாய். நானும் அப்படியே. உன்னை வதைத்த கம்சன் போல் என்னை வதைக்கச் சாதி என்னும் அரக்கன். கண்ணனுக்காகக் கம்சனை வெறுத்தவர்கள் சாதி எனும் கம்சர்களாக மாறி எங்களை வதைப்பது வேடிக்கைதான். தன் மகளாக என்னைக் கொண்டாடும் இவர்களுக்கு ஒரு மகளாக நான் செய்ய வேண்டியது என்ன? சாதியறியாத எனக்கு ஆதியறியாத நீயே கதி.. நீயே என் மணவாளன்.கோதை அன்றுமுதல் கண்ணனின் காதலியானாள்.அவனிடம் மனதிற்குள் பேசத்தொடங்கி விட்டாள். நீயே கதி எனக் கிடக்கும் என்னை வதைப்பதுதான் உனக்கு அழகா? உன் ஆடையை என் வீட்டில் ஒளித்து வைத்தாலென்ன? அப்போதாவது என்னைத் தேடி வருவாயல்லவா? இதோ கண்ணன் வந்து விட்டான்.சுருண்டகுழலும் அந்தக் கண்ணும்... செம்பவள வாயும்...அவனேதான். கோதைக்குள் மின்னல் ஓடியது.என் உறவு..என் வாழ்வு எல்லாம் அவன் அவனே. இன்றைக்கும் எழேழ்பிறவிக்கும்.....


கோதை...கோதை...தாயார் அழைப்பதைக் கேட்டதும் பதறியெழுந்தாள். கண்ணனை எங்கு ஒளித்து வைப்பது? நல்லவேளை கண்ணனே மாயமாகி விட்டான்.தாய்பூசைக்கு மலர் பறித்து வரச்சொன்னாள். சிட்டெனப் பறந்தாள்.பூக்களைப் பறிக்கும்பொழுது பச்சைக் கற்பூர வாசனை. கண்ணன் வந்துவிட்டான்.

.அவள் குடலையிலிருந்து மலர்கள் கீழே சிதறின. அதைப் பொறுக்கக் குனிந்தாள். அம்மலர்களின் உள்ளே கோவிந்தனாகக் கண்ணன். அம்மலர்களை வைத்தே அவன் பெயரெழுதினாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள். கண்ணன் மறைந்து விட்டான். மீண்டும் கண்ணன் ஏன் வரவில்லை? இப்போது கோவிந்தா கோவிந்தா என அவன் பெயரைத் தோட்டத்து மணலிலெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டாள். இதோ தையும் நெருங்கி வருகிறது. அவளுள் அச்சம் கண்ணனோடு தான் கொண்ட காதல் நிறைவேறுமா.....சிறுவயதில் தோழிகளோடு விளையாடிய கூடல் விளையாட்டு நினைவிற்கு வந்தது. கடைசி தோழிக்கும் திருமணம் முடிந்து விட்டது.தனித்தே அதை விளையாடத் தொடங்கினாள்.

கண்ணை மூடிக் கொண்டு மணலில் ஆட்காட்டி விரலால் வட்டம் அதைத் தொடர்ந்து விரலை எடுக்காமலே மற்றொரு வட்டம். இப்படி வட்டங்களின் தொடர் அணிவகுப்பு மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வட்டத்தை முடிக்க வேண்டும்.‘கண்ணன் எனக்குக் கிடைப்பானாகி்ல் கூடலே நீ கூடிடு‘. வட்டம் தொடங்கிய இடத்தில் முடியவில்லை.‘கண்ணன் கை என்னோடு பற்றுமாகில் கூடலே நீ கூடிடு.‘ வட்டமாக முடியாமல் எங்கோ முடிந்திருந்தது. ‘சாதியென்னும் காளியன் தலைமேல் நடனமாடிய கூத்தனை நான் சேர்ந்திடுமாகில் கூடலே நீ கூடிடு‘.கோணப்புளியங்காபோல் சேராமல் விரிந்திருந்தது.‘என்னைக் கொண்டு போக அக்கோபாலன் வருவானாகில் கூடலே நீ கூடிடு‘.அவள் எண்ணங்களின் தொடர்ச்சியும் முடிவும் அவனே.கூடலிழைத்தல் விளையாட்டை ஒரு தவம் போலத் தோட்டத்து மணல் முழுதும் விளையாடினாள்.

தனிமைத்துயர் அவளைத் தீண்டவேயில்லை. எனினும் இன்னும் கூடல் கூடவில்லை. ‘கோதை தோட்டத்தில் விளையாடியது  போதும் வா....‘ தாயின் குரல். .அவள் தன்னை நிழல் போல் தொடர்வதை நினைத்து உள்ளுக்குள் வேதனையோடு சிரித்தாள் கோதை...தாய் அளித்த உணவை உண்டபின் படிக்க அமர்ந்தாள். நாளை மார்கழி முடியப்போகிறது. தாய் வீட்டை தூய்மை செய்யத் தொடங்கிவிட்டாள்.தந்தை பூசைக்குரிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

வருகிற தை மாதத்திற்குள் கோதையின் திருமணத்தை முடித்துவிடவேண்டுமென்ற எண்ணம் அவரைச் சுறுசுறுப்பாக்கியிருந்தது.நாளை விடியலில் அயலூருக்கு கோதையின் வரன் தொடர்பாக அவர் புறப்படவேண்டும்.கோதை தாய் தந்தையர் இருவரையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இதயம் கசிந்தது. அன்றிரவு தலையணை நனைந்தது.

காலையில் கோதை எழாததைக் கண்ட தாய் பதறிப்போனாள். கோதையின் உடல் அனலாய் சுட்டது.நாளெல்லாம் தோட்டத்து வெயிலில் விளையாடிக் கொண்டிருந்தால் இப்படித்தான்...புலம்பியபடி மருந்தரைத்துத் தந்தாள். பெரியாழ்வார் கோதைக்கு மாப்பிள்ளைத் தேட அதிகாலையிலேயே கிளம்பிவிட்டிருந்தார். கோதை தாய் தந்த மருந்தை உட்கொண்டாள். அவள் மனம் சிந்தனையிலாழ்ந்தது.

பிருந்தாவனத்தில் கண்டெடுக்கப்படட இந்த விட்டுணு சித்தனின் மகளுக்குக் கண்ணனின் திருநாமமே மருந்து என்பதைத் தாய் அறியாதவளா? சிலருக்கு மருந்தில் உயிர் இருக்கிறது. எனக்கு அவன் தான் மருந்து. தாயிடம் எதுவும் சொல்லாமல் அவள் கொடுத்த மருந்தை உண்டு வந்தாள்.அப்படியே உறங்கிப்போனாள்.

கண்விழித்த போது தாய் அவளுடைய காலருகே பாதிச் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சிறிதுநேரம் தோட்டத்தில் உலவிட விரும்பினாள். தாயறியாமல் மெல்ல நடந்தாள். அங்குக் கண்ணில் பட்ட குயிலிடம் கண்ணனிடம் தூது சென்று வருமாறு மனதிற்குள் கெஞ்சினாள்.நடை தளர ஒரு மரத்தினடியில் அமர்ந்தாள்.அவள் விரல் அவளறியாமலே கூடலிழைத்தது.

கூடலே நீ கூடிடு. கூடலே நீ கூடிடு. . கூடலே நீ கூடிடு. இதோ கூடிவிட்டது.அதோ அங்கு வருவது யார்கண்ணன்தான். யானை மீதமர்ந்து ஒரு சிங்கம் போலல்லவா வருகிறான். அவனோடு தேவர்களும் அல்லவா வருகிறார்கள். ஐயோ எனக்குப் படபடப்பாக வருகிறதே. அதோ தந்தை யானையின் ஓசை கேட்டு வீட்டிலிருந்து வெளியே வருகிறாரே. எப்போது ஊரிலிருந்து அவர் வந்தார்? கண்ணன் யானையிலிருந்து இறங்கிச் சென்று தந்தையிடம் என்ன சொல்கிறான்?

‘கோவிந்தனாகிய எனக்கும் கோதையாகிய என்னை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டாளுக்கும் நாளை வதுவை என்று சொல்வது என் காதில் விழுகிறதே.... ‘ என்னை ஆள்பவள் ...என்னை ஆள்பவள்..அந்தச் சொல் என் நெஞ்சத்தில் பூ பூக்க வைக்கிறதே. நானா அவரை ஆண்டேன். நான் ஆண்டாளா? இது கனவா? இந்திரன் உள்ளிட்ட தேவரெல்லாம் பாளை கமுகை போன்ற மரங்களை என் வாசலில் நடத் தொடங்கி விட்டனரே.இது உண்மைதான்.

‘அம்மா அம்மா...‘கோதை தாயை அழைத்தாள். ‘எங்கே போனாள். அம்மா நீ எதிர்பார்த்த நன்னாளும் வந்து விட்டதம்மா‘.குரல் கேட்டதும் அதோ சின்னப்பிள்ளை போல ஓடி வந்து  வந்தவர்களை உபசரிக்கத் தொடங்கிவிட்டாள். இனி அவளுக்கு ஓய்வேது? என்னை யார் அலங்கரிப்பது? என் நிலையறிந்து எனக்கு நாத்தனாராகப் போகும் துர்க்கை கூறைப் புடவையை எனக்கு அணிய உதவிசெய்து மாலையைக் கழுத்தில் சூட்டுகிறாளே.மங்கல மகளிர் என் கையையையும் கண்ணன் கையையும் சேர்த்துக் காப்பு நாண் கட்டுவதை நிமிர்ந்து பார்க்க விடாமல் நாண் என்னைத் தடுக்கிறதே. ஊர்வலம் தொடங்கி, மத்தள மேகம் முழங்க, வரிசங்கம் நின்றூத, மந்திரம் ஒதுவதில் வல்லவர்கள் வேதம் ஓதுகின்றனரே. இதோ கண்ணன் உரிமையுடன் என் கையைப் பற்றுகிறானே.எவ்வளவு துரிதமாக செயல்கள் நடக்கின்றன.

அக்னியை வலம் வருவதற்குள் படபடப்பில் என் உடலிலிருந்த நீரெல்லாம் வியர்வையாகிப் போனதே. என் கால்விரல்களைப் பிடித்து அம்மி மீது வைத்து, எரிமுகம் காட்டி, அதில் பொரியைப் போட செய்து,ஊஞ்சலில் அமரவைத்து, ஓமநெருப்பின் சூடு தணிய சந்தனத்தைப் பூசிக, குளிப்பாட்டி, அலங்கரித்து யானை மீதமர்த்திக் கண்ணனின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் வரையில் தான்  எத்தனை சடங்குகள்.எத்தனை சடங்குகள்? அப்பப்பா.....அப்பா அப்பா எங்கே? அதோ தூரத்தில் நெஞ்சு கொள்ளாத பூரிப்புடன் தன் சொந்தங்களிடம் கண்களிலே பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

தாய் எங்கே.. இதோ அழைக்கிறாளே...கோதை...கோதை... ஐயோ தாயின் குரலில் ஏனிந்த பதற்றம். திகில்! என்னவாயிற்று .கண் இமைகள் ஏன் இப்படிக் கனக்கின்றன? தாய் தன்னைத் தூக்க முயற்சித்து நிற்க வைத்து நடத்திச் செல்கிறாளே. திருமணக் களைப்பில் யானையின் மீதிருந்து விழுந்து விட்டேனா...கண்ணனின் உறவுகளெல்லாம் என்ன நினைத்திருக்கும்....அந்த நினைப்பே அவளின் பதட்டத்தை மிகுதிப்படுத்தி அவளை மீண்டும் மயங்கச் செய்துவிட்டது.

 கண் விழித்துப் பார்த்த போது தாயும் தந்தையும் அவளருகே கவலையோடு அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர்கள்தான் எப்படி மெலிந்து போய் விட்டார்கள். கண்ணன் எங்கே ..எப்படி தாயிடம் கேட்பது? எல்லாம் கனவா...கண்ணனுக்காக நோன்பு நோற்றதும் கண்ணனே
 
அவளை மணமுடித்ததும் உண்மையில்லையா? தந்தை வைத்தியரை அழைத்து வரச் சென்றுவிட்டார். தாய் தானறிந்த மருந்தை தயாரித்துக் கொண்டிருந்தாள்.எத்தனை நாட்கள் கழிந்தன? இது என்ன மாதம் ? யாரறிவார்? மெல்ல எழுந்து மாடத்திலிருந்த பெரியாழ்வாரின் ஓலைச் சுவடிகளை எடுத்தாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்று விட ஆண்டாளுக்கு உற்சாகம் பிறந்தது.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்......தன் உயிரையே உருக்கி உருக்கி கண்ணனையே நினைந்து நினைந்து பாவனையில் நனைந்து நனைந்து அவள் எழுதி வைத்த  ஓலைச் சுவடிகள்.. கண்ணனையே நான் மணமுடித்துக் கொண்டேன் என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?அவள் உடல் தேறியதாகக் கருதிய பெரியாழ்வார் மீண்டும் வரன் தேடத் தொடங்கியிருந்தார்.

தனக்காகப் பெரியாழ்வாரையும் உத்தமியான தாயையும் புறக்கணித்த இம் மானுடக் கூட்டத்திடமா இவர்கள் மன்றாடுவது? தன் இருப்பே இவர்களுக்குப் பெருந்துயரம் என்பதை உணர்ந்தளவில் சிறகு விரித்த உயிர்ப்பறவை ஆண்டாள் அவனன்றி எதுவும் வேண்டாள் என்பதை எழுத்தில் வெளிப்படுத்திப் பறந்து போனது.


கோதை மறைந்த எட்டாம் நாள்.பெரியாழ்வார் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தோட்டத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தார்.துளசிச் செடிக்கென்று தனிமாடம் கட்டி வைத்திருக்கிறாளே. அவள் மனம் எதையெல்லாம் நினைத்து ஏங்கியதோ. எங்கும் கோதை நடந்து வந்து செடிகளை வருடிக் கொடுத்தபடி நிற்பது போலவே இருக்கிறது. போதும்மா கோதை உச்சி வெயிலில் நிற்காதே உள்ளே வா..என்று குரல் கொடுத்தார்.

கோதையின் தாய், ‘யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க? உள்ள வாங்க உங்க தலைதான் வெயிலில் பொளக்கப்போறதுஎன்றாள். எப்போதும் போல அவள் வேலைகளில் மூழ்கி விட்டிருந்தாள். கோதை இறந்ததை உணராததுபோலவே அவளின் செய்கைகள் இருந்தன. தன்னைப் போல அவளும் எங்கும் கோதையே நிறைந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறாளோ?

ஆனால் இப்போது யாரிடம் பேகசிக்கிட்டிருக்கீங்க என்றாளே. அப்படியானால் தான் காட்டிய பாசம் அவளிடம் இல்லையோ? அதனால்தான் கோதைக்காக வரன் தேடியலைந்த போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாளா? கோதையின்பால் உண்மையான அன்பில்லாமல் எனக்காகத்தான் வளர்த்தாளா? அந்தக் குழந்தை அதைப் புரிந்துதான் உயிரை விட்டதோ? ஆத்திரம் அவர் அறிவை மறைத்தது. நேரே சமையல் கட்டிற்குச் சென்றார். அவள் மோர் கடைந்து கொண்டிருந்தாள். கோதைக்கு மோர் கடையும் ஓசை பிடிக்குமே. அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதை விட்டு வி்ட்டு இந்த மத்தின் ஓசைகேட்க ஓடிவிடுவாளே? கண்ணில் நீர் வழிய அப்படியே நிலைப்படியில் நின்றுவிட்டார். ஏதோ உணர்வில் திரும்பியவள் இதோ ஆச்சு உட்காருங்கோ வந்திடறேன் என்றாள்.


கூடத்துத் திண்ணையில் கோதை வழக்கமாகப் பூ கட்டும் இடத்தில் சென்று அமர்ந்து விட்டார். அங்கிருந்த மாடத்தில்தான் கோதையின் சுவடிகளை அவள் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.அதைப் பற்றி அவரிடம் சொல்ல மறந்து விட்டாள். அவரின் கண்ணில் அது தற்செயலாய்ப் படச் சுவடிகளைப் படிக்கத் தொடங்கினார். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்.....‘ அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.முப்பது முத்துகள். திருமொழியைப் படிக்கும்போது ஒருவித நடுக்கத்தை அவர் உணர்ந்தார். படிக்கப் படிக்க நா உலர்ந்தது.

திருப்பாவையில் சிறுமியாய் இருந்த கோதை திருமொழியில் வேறு பரிணாமம் எடுத்திருந்தாள். அதில் அவள் குழந்தையல்ல. பருவப் பெண். பருவக் கனவுகள். இளமைத்தாகங்கள்...பெரியாழ்வார் விதிர்த்துப் போனார். கோதையை நினைத்து நினைத்து அவர் மனம் உருகியது. தன் செல்ல மகளின் அவலநிலை அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. அவளின் நிலையறிந்ததால்தான் அவள் தாய் அவளின் மறைவை இயல்பாய் ஏற்றுக்கொண்டாளோ?

‘மானுடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்‘. சாட்டையாய் மனித குலத்தின் மீது விழுந்த அவ்வரிகள்...கோதை எப்பேர்பட்ட பெண்.அந்த வைராக்கியம். துணிச்சல். தன் கூரிய அறிவினால் மனித குலத்தை மிகுந்த உயரத்திலிருந்து பார்த்திருக்கிறாள்.ஹஇவளுடைய சிந்தனைக்கு நிகரான ஒருவரை மனித குலத்தில் தேடமுடியமா? இவளைப் போய்க் கேவலம் மனிதகுலத்திற்கு மணமுடிக்கப் பார்த்தேனே.அவர் நெஞ்சு குற்ற உணர்வினால் தவித்தது.


கோதையின் தாய் சாப்பிட அழைத்தாள். உன்னால் எப்படி முடிகிறது? தெரிந்துதான் இதைப் பத்திரப்படுத்தினாயா? நம் கோதை மகா கவி. .அவளின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லையே. உன்னால் எப்படி முடிகிறது. உனக்குப் பாசமே இல்லையா? கோதை அழைப்பது போலவே இருக்கிறதே? இந்த சின்ன வயதில் எத்தனை துயரங்கள்? எத்தனை புரிதல்கள்? அதை அறியாத பாவியாகிப் போனேனே? புலம்பித் தவித்தார்.

நாம எதுக்கு அழணும். நம் மகள் கண்ணனை விரும்பினாள்.அவனோடு வாழச் சென்றிருக்கிறாள்.அவள் விரும்பிய வாழ்வு அவளுக்குக் கிடைத்திருக்கிறது.நல்ல இடத்தில் மகளை வாழ அனுப்பியபின் நாம் வாடுவது அழகா? கண்ணன் அவளை நம் மகளாக வளர அனுப்பி வைத்தான். நம் மீது அவன் வைத்த நம்பிக்கை, அவன் நம் மகளைச் சிறப்பாகப் பார்த்துக் கொள்வான் என்று நமக்கும் இருக்க வேண்டுமல்லவா?‘ அத் தாய் நிதானமாகக் கேட்டாள். பெரியாழ்வார் திகைத்துப் போய்விட்டார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?