நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday, 30 July 2017

மணிமேகலை 15


15
தன் தந்தையால் கைவிடப்பட்ட ஆபுத்திரன் அயலூர் சென்றான். அவ்வூரில் மழைபொய்த்துப் பல ஆண்டுகள் ஆகியிருந்தால், எங்கும் வெப்பம். அனல் வீசிக் கொண்டிருந்தது. பாதி மக்கள் ஊரைவிட்டு பிழைப்பதற்காக வழி தேடி வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
உழவை நம்பியவர்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் வானத்தை எதிர்பார்த்துக் கிடந்தனர். எலும்பும் தோலுமாய் இருந்தவர்களைப் பார்த்து ஆபுத்திரனுக்குக் கண்ணீர் பெருகியது. பசிப்பிணிக் கொடுமை அங்குக் கோரத் தாண்டவமாடியது. ஆபுத்திரனும் அம்மக்களோடு மக்களாய் உண்ண உணவின்றிப் பல நாள்கள் பட்டினி கிடந்தான். பட்டுப்போன மரங்களில் ஏதாவது காய்த்திருக்காதா எனத் தேடியலைந்தான்.
பசி பசி என்ன கொடிய சாபம் இஃது! இதற்கு ஏதோ ஒரு வடிவில் விமோசனம் கிடையாதா? பசியோடு உயிர்வாழ்வதை விட மாண்டுபோவது மேல். இந்தத் துன்பத்துடிப்பிற்கிடையே, ஏதோ எப்போதோ கொஞ்சம் உணவு கிடைத்தது உண்ண ஏதாவது கிடைத்தபோது ஏழை எளியவர்க்குக் கொடுத்துத் தானும் உண்டான். சில நாள்கள் பிறருக்குக் கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடந்தான்.

அவ்வூர் தெய்வம் சிந்தாதேவி. சிந்தாதேவியின் கோவிலில்தான் ஆபுத்திரன் தங்கியிருந்தான். வறுமை தாண்டவமாடியதால் கேட்பாரற்று பாழடைந்து கிடந்த அக் கோயிலைப் பராமரித்தான். அந்தத் தெய்வத்தின் முன் விழுந்து அம்மக்களின் துயர் நீக்க வேண்டிக் கதறினான். மாய்ந்தான்.
தன் வறுமையைப் பொருட்படுத்தாது பிறரின் நலனிற்காகக் கண்ணீர் விட்டு மாயும் அவனின் நிலை கண்டு, சிந்தாதேவிதெய்வமே நெஞ்சம் கசிந்தது. விதியையும், இந்திரன் இட்ட அவ்வூர் சாபத்தையும் புறந்தள்ளி அவனுக்காக உதவ முன் வந்தது. எதிரில் தோன்றியது.
திடீரென்று தன் கண் எதிரில் தோன்றிய பெண்ணைக் கண்டதும் ஆபுத்திரன் திடுக்கிட்டுப் போனான்.
தாயே தாங்கள் யார்?” என்று வினவினான்.
நான்தான் நீ நாள்தோறும் தொழும் இக்கோயில் தெய்வம் சிந்தாதேவி
ஆபுத்திரன் தான் காண்பது கனவா நனவா என்று தெரியாமல் விழித்தான்.
கருணைக்கண்களால் அவனை நோக்கிய அத்தெய்வம்,”உன் கருணைக்குப் பரிசளிக்கவே நான் இங்கு வந்தேன்.என்றது.
பல ஆண்டுகளாய் உன்னைத் தொழும் இம்மக்களின் நிலை கண்டு இரங்காமல் இவ்வூரைச் சாராத எனக்காக இரங்கியது ஏன் தாயே?”என்று சிந்தாதேவியைக்கேட்டான்.
அதற்கு அவள்இவ்வூர் மக்கள் செல்வச் செழிப்பின் மிகுதியால் தெய்வத்தை மறந்தனர். தன் உழைப்பினால்தான் தாங்கள் பெருவாழ்வு வாழ்வதாக எண்ணி கோயில்களைப் புறக்கணித்தனர். இவர்களின் செருக்கடக்கவே இந்திரன் மழையைப் பொய்க்க வைத்தான்.என்று பதில் அளித்தாள் .
அந்தச் சீற்றத்தின் நியாயம் அவனுக்கு விளங்கவில்லை.
அதிலென்ன தவறு இருக்கிறது? உழைப்பதற்குரிய பலனைப் பெறுவது இயல்புதானே? இதில் இந்திரனின் கோபம் எதற்காக? மக்களைக் காக்க வேணடிய தெய்வமே அவர்களை வருத்துவதா? தன்னை வணங்கினால்தான் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று ஒரு கடவுள் நினைக்கலாமா? தன்னை வணங்கவில்லை என்பதற்காக மழையைப் பொய்க்கவைக்கலாமா?” என்று கேட்டான்.
ஆபுத்திரா நீ கேட்பது சரிதான். ஓர் உண்மையை நீ அறிய வேண்டும்.செல்வம் பெருகும்போது பணிவு வேண்டும். சக மனிதர்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். ஆணவம் கொண்டு தவறான வழிகளில் ஈடுபட்டு நாட்டிற்கே கேடு விளைவிப்பது எப்படிச் சரியாகும்? மன்னனும் போகங்களில் ஈடுபட்டு மக்களை மறந்தான். மக்களும் அவன் வழியைப் பின்பற்றினர். செல்வத்தை யாரும் நல்வழிக்குப் பயன்படுத்தவில்லை. விளைநிலங்களைச் சீரழித்து ஆடம்பரமான கேளிக்கைக் கூடங்களையும், உயர்ந்த மாட மாளிகைகளையும் கட்டினர். நடனத்திற்கும் இசைக்கும் கொடுத்த மரியாதையை உடல் உழைப்பிற்குக் கொடுக்க மறந்தனர். மன்னனே இலவச மதுசாலைகளைத் ஊரெங்கும் திறந்தான். செல்வச் செழிப்பினால் மக்கள் ஒழுக்கத்தை மீறினர். மழை பொய்த்தபோது, உழைப்பை மறந்த மக்கள் எங்கோ சொர்க்கம் இருப்பதாக எண்ணி அதைத் தேடிச் சென்று, சொந்த ஊரைவிட்டு ஓடி ஒளிந்தனர். எஞ்சியிருப்பது உடல் உழைப்பை நம்பிய மக்கள் தான்.
ஓடி ஒளிந்தவர் போக மீதி இருந்த உழைப்பாளிகள் மீது அவன் பரிவு திரும்பிற்று.அதற்காக இந்திரன் மழையைப் பொய்ப்பித்தானா? எஞ்சிய இந்த மக்களுக்காகவாவது மழையைப் பெய்வித்திருக்கலாமேஎன்று கேட்டான்.
இந்திரனின் சாபம் சரியென்று நான் சொல்ல வரவில்லை. செல்வம் பெருகும் போது அதை நல்வழியில் செலவிடுவதற்காகவும், மக்களை ஒன்றுபடுத்துவதற்காகவுமே ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டதே, தான் என்ற ஆணவத்தை மறந்து எல்லா மக்களும் ஒன்று பட்டு ஊர் கூடி தங்களின் உழைப்பின் பலனைப் பகிர்ந்து கொள்வதற்காகவே.என்று சிந்தாதேவி பதில் அளித்தாள்
அந்தப் பதிலை அவன் மனம் ஏற்கவில்லை.
அம்மா தாங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்திரன் மக்களைத் தண்டிக்கட்டும். வேணாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் தண்டிப்பதற்கும் ஓர் எல்லை வேண்டுமல்லவா? பனிரெண்டு ஆண்டுகளாய் இந்த மண்ணில் மழையைப் பெய்விக்காமல் இருப்பது அந்த இந்திரனின் ஆணவத்தையல்லவா காட்டுகிறது?” என்று மீண்டும் கேட்டான்
சிந்தாதேவி அமைதியாக இருந்தது.
தாங்கள் கூட இந்திரனின் சாபத்திற்குப் பயந்து தான் இம்மக்களுக்குக் கருணை காட்டவில்லை. அப்படித்தானே தாயே? ?” என்று கேட்டான்
அப்படியல்ல ஆபுத்திரா. இந்த வறுமை சூழலிலும் இம்மக்கள் மாறவில்லை. யாரும் யாருக்காகவும் மனம் கசியவில்லை. இவர்களின் வறுமை இவர்களைச் செம்மைப்படுத்தவில்லை. தாங்கள் செய்த தவறுகளைக் கண்டு இவர்கள் மனம் திருந்தவில்லை. நீ ஒருவன்தான் இவர்களுக்காக மனம் கசிந்தாய். பிறருக்காக வருந்திய உன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மண்ணில் முதல் துளியாக விழுந்திருக்கிறது.
உன் கருணைக்காகவாவது இம்மக்களுக்கு உதவலாம் என்று நினைத்தேன். உன்னால் இந்த நாடு செழிக்கும் நாள் விரைவில் வரும். இந்த மக்கள் உன் வாழ்விலிருந்து பாடம் கற்பார்கள். உன் மனதில் பெருகும் வற்றாத கருணையைப் போல, வற்றாது உணவு வழங்கியபடி இருக்கும் அட்சயப்பாத்திரமான அமுதசுரபி இதோ! பெற்றுக் கொள். இதைக் கொண்டு அம்மக்களின் பசியாற்று. இம்மக்களின் மீதான இந்திரனின் சாபம் ஏன் என்பதை நீயே விரைவில் புரிந்து கொள்வாய்என மனமுவந்து அளித்தது.
ஆபுத்திரன் கையில் அப்பாத்திரத்தைப்பெற்ற போது அளவிலா மகிழ்ச்சியடைந்தான். புண்ணித்திருவுருவே தன் கையில் பாத்திரமாக வந்ததைப் போல அகம் மகிழ்ந்தான். சிந்தாதேவியைத் விழுந்து விழுந்து வணங்கினான். சுற்றி வந்து ஆனந்த கூத்தாடினான். ஆனந்தக் கண்ணீர் பெருக அளவிலா நெகிழ்ச்சியோடு பாத்திரத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். [தொடரும்]


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?