நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday, 16 September 2015

சங்ககாலத்தில் போரும் வாழ்வும்



என்னுரை

சங்க காலத்தில்  போரும் வாழ்வும்  என்ற இந்த நூல் பண்டைத் தமிழரின் வாழ்க்கையில்போர்செலுத்தியிருந்த ஆதிக்கத்தைத் தொட்டுக் காட்டியுள்ளது.
நிலவுடமைச் சமுதாயத்தில் நிலத்தைக் கையகப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளில்போர்முக்கியப் பங்காற்றியுள்ளது. இனக்குழு சமுதாய நிலையிலிருந்து பேரரது என்னும் முடியாட்சிக்கு மக்களையும் நிலத்தையும் கொண்டு வருவதற்குப் போரையே உலகம் முழுவதும் உள்ள அதிகார வெறி பிடித்தவர்கள் கருவியாகக் கையாண்டிருக்கிறார்கள். இன்றும் இந்நிலை தொடர்கிறது. இனக்குழுவாயினும் பேரரசாயினும் பொதுச் செயல் ஒன்று செய்வதற்குத் தலைவன் தேவைப்படுகிறான். அவ்வகையில் அரசன் அரசு உருவாக்கத்தில் முக்கியத்துவம் பெறுகிறான்.
அரசு உருவாக்கமோ, அரசன் என்ற தலைவனோ இல்லாமலிருந்தால் மக்கள் தங்களுக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் ஒழுங்குமின்றி விலங்குகளைப் போல் அநாகரிகமாகத் தங்களுக்குள் வீணே சண்டையிட்டு மடிவர். எனவே மக்களை ஒன்றுபடுத்தவும், முறையான வாழ்க்கைக்குள் அவர்களைக் கொண்டு வருவதற்கும் அரசு உருவாக்கம் என்பது தேவை தான். அதே சமயம் இப்படி ஒன்றுபடுத்தப்பட்ட மக்களையும், முறையான வாழ்க்கையையும் பிற நாடுகளிலிருந்தும் பகையினின்றும் பாதுகாக்க அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதும் தேவையாகிறது.


ஓரரசு உருவாக்கத்தில் படைகள் உருவாக்கப்படுவது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும், வெளிநாட்டுப் பாதுகாப்பிற்கும் என இருமுனை நன்மைகளை உள்ளடக்கியது ஆகும். ஆனால், தன் அரசை நன்முறையில் பாதுகாப்பது என்ற நிலையிலிருந்து நழுவி, பிற நாட்டைத் தன் நாட்டோடு இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழும்போது அங்குப் பகையும் போரும் ஏற்பட்டு, இருநில மக்களும் துன்பமடையும் சூழல் உருவாகிறது. மன்னர்களின் ஆசை பேராசையாக நீளும்போது ஏற்படும் தொடர்ந்த போர்களில் அரசு உருவாக்கத்தின் அடிப்படைகளான, மக்களை ஒன்றுபடுத்தல், முறையான பாதுகாப்பான வாழ்க்கை நல்குதல் என்ற பண்புகள் அடிபட்டுப் போகின்றன. அப்போது அரசு உருவாக்கத்தின் மீது கேள்விகள் எழுகின்றன. தலைமைப் பண்பிலுள்ளவனின் பேராசையினால் பெருமளவில் மக்கள் கூட்டம் மடியும்போதும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் துன்புறும்போதும் களிறெதிர்ந்து பெயர்தல் காளைக்குக் கடனேஎன்ற வீர உணர்வு சிலரின் சுயநலத்திற்காகப் பலியாக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
மக்களைக் கொண்டே மக்களைக் கொல்வதுதான் அரசோ? அதுதான் அரசியலா? ஆளும் பிரிவினர் எப்போதும் தங்களின் நிலை மாறாமல் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும், இந்த அரசு என்ற அமைப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சங்க கால இலக்கியங்கள் இதை அழகாகப் பதிவு செய்துள்ளனர். பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோக்களிடம் அரசு என்ற அமைப்பு இல்லை. எனினும் ஒற்றுமையுணர்வோடு வாழ்கின்றனர். இவர்கள் இன்னும் வேட்டைச் சமூக அமைப்பில் வாழ்பவர்களாக இருப்பதற்கு இவர்கள் வாழும் நில அமைப்பு ஒரு காரணம். சிறு புல் கூட முளைக்காத கடும்குளிர் வீசும் பிரதேசத்தில் வாழும் இம்மக்கள் மண் சார்ந்த நிலப்பகுதிக்கு வந்தால் இவர்களிடமும் போர்க்குணம் ஏற்பட்டு இவர்களுக்கென்று அரசு உருவாகியிருக்கும்.

 
எனவே, போருக்கான அடிப்படைக் காரணம் நிலமே என்பதால் இந்நூல் சற்று விரிவாகவே மண் மன்னர்களையும், மக்களையும் ஆட்டிப் படைப்பது குறித்துப் பேசுகிறது. வளமான நிலப்பகுதிகளுக்காக நடந்த போர்கள் ஏராளம். அன்று தொடங்கி இன்று வரை இது நீடித்து வருகிறது. மண்ணாசையை மறைத்து எத்தனையோ காரணங்களைக் காட்டி போர்கள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. வருகின்றன. சரி போருக்கு மாற்று? இன்னொரு போர் என்றேதான் சங்கப் பாடல்களும் பதில் தருகின்றன. சங்கப் பாடல்கள் வழி பழந்தமிழரின் போர்களுக்கு இடையிலான வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவே இந்நூல்.
                                                                                            ஜ.பிரேமலதா