போரில் தோற்றாலும் பகை வென்றாலும் பகை
பக்குவப்பட்ட மனதிலிருந்து நல்ல எண்ணங்களே
வெளிப்படும்; இது நலம் தரக்கூடிய செயல்களாக மாற்றமடையும். மனதைப் பக்குவப்படுத்தலே புலவர்கள் இவ்வுலகிற்குச் செய்யும் மாபெரும்
தொண்டாகும். அரசுகளுக்கிடையே யார் பெரியவர், யார் வல்லவர் என்ற போட்டி மனப்பான்மையே ‘போர்‘ ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக
உள்ளது. இதனால்தான்,
உள்நாட்டுப் பிணக்குகளாலும், வெளிநாட்டு நெருக்கடிகளாலும் அரசர்களுக்கிடையே போர் தோன்றிக்கொண்டே இருக்கிறது. போர் சிறியதோ, பெரியதோ, போரில் தோற்றாலும், வென்றாலும், பகை மட்டும் என்றும்
மறைவதில்லை. இதனால் நாடுகளிடையே அமைதி என்பதும் என்றும் இருப்பதே இல்லை. நாடுகளிடையே அமைதி என்பது மிக அரிதாகவே
உள்ளது. மிகமிக
அரிதாக எப்போதாவது அமைதி தோன்றுமானால், பின்னர் ஏதாவாதொரு
பூசல் தோன்றி அமைதியைக்
கெடுத்து மீண்டும் போரை ஏற்படுத்தி விடுகிறது.
ஒவ்வொரு அரசும் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ளவே
விரும்புகிறது. தன் நாடு பெருநாடாக
வேண்டும், பேரரசாக வேண்டும்
என்பது ஒவ்வொரு அரசின்
குறிக்கோளாகவும் இருக்கிறது. ‘ஏகச் சக்கரவர்த்தியாக’ வாழவே ஒவ்வொரு
அரசனும் விரும்புகிறான்.
இந்தப் பேராசையாலேதான் அரசுகளிடையே அமைதி கெடுகிறது. இதனால்தான் போட்டி, பூசல்,பகை,போர் என்றும்
முடிவது இல்லை.