முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Saturday, 13 September 2014

சேலம் - இயற்கையமைப்பு

கொங்கு நாட்டில் சேலம்

   
   
  கொங்குநாடு என்பது மிகப் பழங்காலந் தொட்டு இருந்து வந்துள்ள ஒரு நாடாகும். இதிலுள்ள ஒரு பகுதி சேலம் மாவட்டம் ஆகும்.  காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தெய்வத் திருவருள் மணக்கும் திருக்கோயில்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்று சேலம் மாவட்டம் ஆகும்.  தமிழ்நாட்டின் பெருமைக்கும், வளத்திற்கும் காரணமாக அமைந்து விளங்குவது, பொன்னி நதி என்று புகழ் பெற்று விளங்கும் காவிரி நதி. அந்தக் காவிரி வௌ்ளம் சேலம் மாவட்டம் வழியாக தஞ்சை செல்கிறது.    இதனுடைய சிறப்பினை விளக்கக் ””கொங்குமண்டல சதகம்”” என்னும் நுhல் தோன்றியுள்ளது.

    சேலம் என்னும் பெயர் ஆங்கிலத்தில் ””salem”” என்னும் ஐந்தெழுத்தொரு மொழியாக வழங்கப் பெறுகின்றது.

ஐந்தெழுத்துச் சிறப்புகளாவன

s -steel - எஃகு
a - aluminium - அலுமினியம்
l - luminite - சுண்ணாம்புக்கல்
e - electricity - மின்சாரம்
m - mango - மாம்பழம். (தமிழக மாவட்ட நுhல்வரிசை, ப-6)

சேலம் மாவட்டம் பெயருக்கேற்ப, எஃகு, அலுமினியம், சுண்ணாம்புக்கல், மின்சாரம், மாம்பழம் என்னும் ஐந்தாலும் தனிச்சிறப்புற்று விளங்குகிறது.

 சேலம் மாவட்ட எல்லைகள்


    சேலம் மாவட்டம் நான்கு பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள உள்நாட்டு மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் வடக்கில் தருமபுரி மாவட்டமும், கிழக்கில் தென்ஆர்க்காடு மாவட்டமும், தெற்கில் நாமக்கல் மாவட்டமும், மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளன. நான்கு பக்கங்களிலும் இம்மாவட்டங்களின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டு, நடுநாயக மாவட்டமாக சேலம் மாவட்டம் அமைந்துள்ளது.

சேலம் மாவட்ட பூகோள அமைப்பு


    சேலம் மாவட்டத்தின் அமைப்பு பூகோள அடிப்படையில் மூன்று பிரிவுகளில் அடங்குகிறது. மலைப்பிரதேசத்திற்கு அப்பாலுள்ள பிரதேசம் அவற்றுள் ஒன்று. இது சாதாரணமாகக் கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயர்ந்திருக்கும். இரண்டாவது, கடல் மட்டத்தினின்றும் உயராத பகுதிக்கும் வடக்கே அமைந்துள்ள மைசூரின் பரந்த நிலத்திற்கும் நடுவே உள்ளதாக அமைந்துள்ளது. மூன்றாவது, மலைத்தொடர் பிரதேசத்திற்குக் கீழ் அமைந்துள்ள பிரதேசமாகும். இரண்டாவது மூன்றாவது பிரிவுகள் முறையே 1300 அடி, 1200 அடி கடல் மட்டத்தைக் காட்டிலும் உயர்ந்துள்ளன. முதல் பார்வைக்கு மலைகளால் சூழப்பட்டதாகத் தென்படும் சேலம் நகரம் ஒரு பள்ளத்தாக்கைப் போல் காட்சியளித்தாலும், உண்மையில் சேலம் கடல்மட்டத்தை விட 900 அடி உயர்ந்து இருக்கின்றது.

சேலம் மாவட்ட ஆறுகள்


சேலம் மாவட்டத்தில் மூன்று நதிகள் கிளைகளுடன் பாய்கின்றன. (1) காவிரியும் அதன் கிளைகளும், (2) வௌ;ளாறும் அதன் கிளைகளும், (3) பெண்ணையாறும் அதன் கிளைகளும், காவிரியின் உபநதிகளான சரபாங்க நதியும், திருமணிமுத்தாறும், சேலம், ஓமலூர், திருச்செங்கோடு வட்டங்களிலும் பாய்கின்றன. ஆத்தூர் வட்டத்தில் வௌ;ளாற்றின் உபநதிகளான வசிஷ்ட நதியும், ஸ்வேட நதியும் பாய்கின்றன. பெண்ணையாற்றின் துணை ஆறுகளான மார்க்கண்ட நதி, கம்பை நல்லூர் நதி, பம்பாறு, வண்ணியாறு ஆகியவை மலைத்தொடருக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் பாய்கின்றன.

சேலம் மாவட்ட மலைகள்


 
  மலைகள் சேலத்திற்கு கவர்ச்சி தருவது மட்டுமின்றி கனிவளத்தையும் பெற்றுத் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றியமைக்கத் தயாராக நிற்கும் கருவூலமாக அமைந்துள்ளன. தமிழருக்கும், தமிழர் வாழ்வுக்கும் தனிப் பெருமையைத் தேடித் தர, பெருமிதத்துடன் நிற்கும் இம் மலைத்தொடர்கள் ஒன்றுக்கொன்று சமமான இடைவெளியுடன் அமைந்துள்ளன. இம்மலைத் தொடர்கள் யாவும் கிழக்கிலிருந்து தென்மேற்காக ஓடுகின்றன. இம்மலைத் தொடர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
 
1. பாலமலைத் தொடர்
2. மேல்மலைத்தொடர்
3. கீழ்மலைத்தொடர் 
4. சேர்வராயன் மலை
5.  தாளமலைத் தொடர்
6. கஞ்சமலை

 (i) பாலமலைத் தொடர்

    பாலமலைத்தொடர் தேவாரப் பெட்டா, கோயில் மலை, தியாக துர்க்கம், அன்செட்டி துர்க்கம், முனேசுவர் கொண்டா, ஊடேதுர்க்கம், இரத்தினகிரி போன்ற மலைகளைக் கொண்டு விளங்குகின்றது.

 (2) மேல்மலைத்தொடர்
   
    இம்மலைத்தொடர் ””குட்டிராயன் என்ற 4779 அடி உயரம் கொண்ட மலையாகும்.””  (சேலத்து இரும்பு, ப - 16)

அவற்றிலிருந்து பிரியும் மலைத்தொடர்கள், காகல்மலை, உச்சிக்கல், எரிமலை போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

 (3) கீழ்மலைத்தொடர்

    கீழ்மலைத்தொடரில் ஒன்று மல்லபுரம் மலை ஆகும். இதன் வழியாகச் சென்னை-கள்ளிக்கோட்டை இரயில் பாதை அமைந்திருக்கின்றது. இப்பாதையின் உயர்ந்த இடம் 1508 அடி கடல்மட்டத்திற்கு மேல் இருக்கின்றது. இம்மலைத்தொடரில் இருக்கும் மஞ்சவாடிக் கணவாய் மூலம், சென்னை - சேலம் பாதை அமைந்துள்ளது. இப்பாதையில் அதிக உயரமான இடம் கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயர்ந்துள்ளது.

 (4) சேர்வராயன் மலை


    மல்லபுரம் மலைத்தொடருக்கும், மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில்தான் சேலத்தின் செழுமையான சேர்வராயன் மலை உள்ளது. சேலத்திற்குப் பெருமை அளிக்கும் இம்மலைத் தொடரின் நீளம் 17 மைலும், அகலம்  12 மைலுமாகும். 100 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டு விளங்குகிறது. உலகத்திலேயே உயர்ந்த ரக அலுமினியக் கனிமப் பொருட்களைப் புகலிடமாகக் கொண்டதும் இம்மலைத்தொடரே ஆகும். இக்கனிமப் பொருட்கள் பெருமளவில் வெட்டியெடுக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கனி வளத்தைக் கொடுப்பதுடன் நிற்காமல், சென்னை மாநகரத்தின் கோடை வெப்பத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுகின்றது.

””சேர்வராயன் தொடரின் தென்மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ள சிறு மலைத்தொடரான நகரமலை, உலகத்தில் சிறந்த மக்னீசியக் கனிமப்பொருளான ‘மாக்னசைட்’ மூலம் பாரத நாட்டுக்குச் சிறப்பைத் தேடித் தந்துள்ளது. ‘மாக்னசைட்’ கனிமப் பொருளால் நிறம் மாறியுள்ள இம்மலைத்தொடருக்குச் ‘சுண்ணாம்புக் கரடு’ என்ற சிறப்புப் பெயரையும் கொண்டு விளங்குகின்றன”” (சே.இ, ப - 17)
சேர்வராயன் மலைத்தொடரில் வளமிகு கரும்பொன் என அழைக்கும் இரும்பு விளைந்து கிடக்கின்றது. தமிழரின் வாழ்வு, என்று சிறந்தோங்கும் என ஏங்கும் எண்ணிறந்தோரின் கனவை நனவாக்குவதைப் போல பல மலைகளின் உள்ளே மண்டிக் கிடக்கும் இரும்புக் கனிச் செல்வங்கள், இம்மலைத் தொடரில்தான் உள்ளன.

(5) தாளமலைத் தொடர்

தாளமலைத்தொடரின் மற்றொரு பகுதியில் சேலம் மாவட்டத்தின் தனி மலைகள் சில சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சீத (ளுவைய) மலையும், சரித்திரம் கண்ட கஞ்ச மலையும், கோரு மலையும் குறிப்பிடத்தக்கனவாகும்.

திருச்செங்கோடு, ஓமலூர் வட்டங்களின் மேல்பகுதியில் அமைந்துள்ளது சீத மலையாகும். இம்மலைத்தொடர் அங்கு பாயும் காவிரிக்கு இணையாக அமைந்து, தெற்கே 2479 அடியும், வடக்கே 2751 அடியும் உயர்ந்துள்ளது. தென்கோடியில் சூரிய மலை, சங்ககிரி, போடூர்மலை, திருச்செங்கோடு மலை ஆகியவை அமைந்துள்ளன.

(6) கஞ்சமலை


    கஞ்சமலை ஒரு தெய்வீக மலை. சுமார் 4 1ஃ2 மைல் நீளமும், 2 மைல் அகலமும் கொண்டு கிழக்கு, மேற்காக அமைந்துள்ள மலை. சேலம் நகரத்திற்குத் தென்மேற்கே 5 மைல் தொலைவில் இருக்கிறது. கடல் மட்டத்திற்கு மேல் 3236 அடி உயர்ந்த மலைத்தொடர். கரடுமுரடாக ஏறக்குறைய செங்குத்தான பாறைகளாக அமைந்திருப்பதால், இது போர் ஏற்பட்டுப் பாழடைந்த கோட்டை மதில்களைப் போல் காணப்படுகின்றது. சேர்வராயன் மலையில் இருந்து பார்ப்பதற்கு இம்மலைத் தொடர் பழங்காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் ஜீவராசிகளிலேயே பெரியதான ‘டைனோசர்’ படுத்திருப்பது போல் காட்சியளிக்கின்றது.

இரும்புக் கனிகளில் காந்த சக்தி இருப்பதால் இம்மலைக்கு ‘காந்த மலை’ என்ற பெயர் இருந்ததாகவும், அது திரிந்து கஞ்சமலையாகி விட்டது என்றும் கூறுவர்.  இம்மலையில் சித்தர்கள் வந்து தங்கியிருந்ததால் மக்கள் அனைவரும் கஞ்சமலையை ‘சித்தர் மலை’ என்றும் ‘சித்தர் கோயில் மலை’ என்று அழைக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் மூதாட்டி ஔவையின் ஆயுளை வளர்க்க, அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை இம்மலையில் தான் பெற்றதாக கூறப்படுகிறது.

இம்மலையின் ஒரு பகுதி கருங்காடு என அழைக்கப்படுகிறது. இந்தப் பாகத்தில் சித்து செய்யத் தகுந்த மூலிகைகளும் காயசித்தி மூலிகைகளும் முக்காலமும் உணர்த்தும் மூலிகைகளும் பரகாய பிரவேசம் செய்யத் தகுந்த மூலிகைகளும் இன்றும் இருக்கின்றனவாம். இமாலயத்திலும் கிடைக்கப் பெறாத மூலிகைகள் இங்கு கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அம்மூலிகைகளைத் தேடி பல திசைகளிலிருந்தும் கஞ்சமலைக்கு வந்து அங்கு கோயில் கொண்டிருக்கும் சித்தேசரை வணங்கி அருள்பெற்று மூலிகைகளை எடுத்துச் சென்றதாகப் பழந்தமிழ் நுhல்கள் குறிப்பிடுகின்றன.

சேலம் மாவட்டத்தின் இயற்கை வளம்


நிலவளம் என்பது மண்வளத்தைக் குறிப்பதாகும். சேலம் மாவட்டத்து நீர்வளம் குறைந்த அளவுடையதாகும். குறைந்த அளவே இம்மாவட்டத்திற்கு மழை பொழிகின்றது. தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் இருவகைக் கனிவகைகள் காணப்படுகின்றன. ஒன்று உணவாகப் பயன்படுகின்ற கனி வகைகள், மற்றொன்று உலோகக் கனி வகைகள் ஆகும். உண்பதற்குரிய கனி வகைகள் ஏற்காடு மலையில் கிடைக்கின்றது.உலோகக் கனி கஞ்சமலை பகுதியில் இரும்புத் தாதுக்கள் அதிகமாக வெட்டி எடுக்கப்படுகின்றன. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத்தாது உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் இரும்புத்தாதுவின் மதிப்பு 304 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் இயற்கை வளத்தை நிலவளம், நீர்வளம், மலைவளம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

தட்பவெப்பம்


           ஓர் இடத்தின் தட்பவெப்பநிலை, அந்த இடம் அமைந்துள்ள நிலை, கடல் மட்டத்திற்கு மேல் அந்த இட உயரம், கடலுக்கும் அந்த இடத்திற்கும் உள்ள தூரம், அந்த இடத்தில் வீசும் காற்று, அந்த இடத்தில் பெய்யும் மழை ஆகியவற்றை பொருத்து அமைவதாகும். டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் இம்மாவட்டத்தில் பனிக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இங்கு பகலில் வெப்பமாக இருந்தாலும், இரவில் குளிர்ச்சியாக இருக்கும். சேலம் மாவட்டம் உள்நாட்டுப் பிரதேசமாக இருப்பதால், வெப்ப நிலைகளில் வேறுபாடுகள் அதிகமாக உள்ளன.    மார்ச்சு மாதம் முதல் கோடைகாலம் தொடங்குகின்றது. ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. ஜீன் மாதம் வரையிலும், தென்மேற்குப் பருவக்காற்று இம்மாவட்டத்திற்கு சிறிது மழையைக் கொடுக்கின்றது. அதன் பின்னர், வடகிழக்குப் பருவக்காற்றால் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மழை பொழிகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?