நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 16 November 2020

நீரலைகள்

 கற்பாறை மீது மோதி மோதி நீரலைகள்

நீரத்திவலைகளாக மாறி உடைந்து கொண்டே இருக்கும்

யுகயுகங்களாகத் தொடரும் நீரின் போராட்டம்

யுகங்கள் கடந்தும் கரையாத...

 மனப்பாறைகளின் சதிராட்டம்..

மறக்கவியலா நினைக்கவுமியலா சில பதிவுகள்

கடக்கவியலா தொடரவுமியலா சில நினைவுகள்

மீட்கவியலா நீட்சியாகும் சில கனவுகள்

சொல்லவியலா கொல்லவுமியலா சில உணர்வுகள்

நிழலா வெயிலா கேட்கவியலா நோகங்கள்....

தொண்டைக் குழிக்குள் விசம் போல

விழுங்கவோ உமிழவோ முடியாத சில ஆசைகள்

ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகுமா

 இந்தத் தருணங்கள்?

பதில்களற்ற கேள்விகள் ...

அறையெங்கும் நிரம்பி வழிகின்றன

Sunday, 15 November 2020

நம்பிக்கை

 பாசமாக நட்பாக அன்பாக வீரமாக நல்லவராக

தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதுதான் 

மனித வாழ்வின் குறிக்கோளா?

யாரோடாவதாது ஒப்பிட்டுப் பார்த்து 

 ஒரு படி மேலே இருக்க வேண்டுமென்பது கட்டாயமா?

அப்போதுதான்  மதிப்பு என ஏமாற்றிக் கொள்கிறோமா? 

நான் என்ற அடையாளம் எதுவரை?

நம் மரணம் வரை. அவ்வளவே.

ஒரு பூ, ஒரு காற்று, ஒரு மேகம், ஒருபுழு, ஒரு புல் 

அதனதன் போராட்டம் வேறு. 

வாழ்க்கைப் பாடு வேறு

மலர்வதற்குள் ஒரு பூவிற்கு எத்தனைப் போராட்டம்?

முளைப்பதற்குள் ஒரு புல்லுக்கு எத்தனை மிதிபடல்? 

சிலர்  வாழ்வில் தான் எத்தனை போலித்தனம்?

எல்லோருக்கும் எத்தனையோ போராட்டம்.

சிலருக்கு நாமே போராட்டம். 

மகிழ்வதற்கு எத்தனையோ காட்சிகள் 

இரசிப்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகள்

இயற்கைத்தரும் போலித்தனமில்லா வாழ்க்கை பெருவரம்

எவ்வளவு முயலுமோ அவ்வளவு முயலுவோம்

இயல்பு நிலை என்பதை நோக்கிய பயணம்பாதுகாப்பானது.

ஆனால் துயரம் நிறைந்தது.

நம்மைத் தெரிந்தவர்களிடம் நிரூபிக்கத் தேவையில்லை

நம்மைத் தெரியாதவர்களிடமும் நிரூபிக்கத் தேவையில்லை

எப்படியும் நம்பப் போவதில்லை என்பதால்...

நம்பிக்கை இருக்கிறதென்றால்

நிரூபிக்கத் தேவையில்லை.

நிரூபிக்கத்தான் வேண்டுமென்றால்

நம்புவதற்கு ஏதுமில்லை.



புத்தா...



 வழியில் ஒரு கடையில் புத்தா நீ...

உன்னை வாங்க தூண்டும் மனம்...

உன் சிலையின் மீதான ஆசை கூட 

உன் கொள்கைக்கு முரணானது...

நீயோ கனத்த மெனளம் காக்கிறாய்...

உன்னை உனக்கு அடையாளம் காட்டிய

போதி மரம் எங்கே தொலைந்தது? 

புடவைகளிலும், ஜாக்கெட்டுகளிலும்,

பைகளிலும்... அழகழகான வண்ணங்களி்ல் நீ.

அரண்மனை விடுத்து, 

அன்னையை விடுத்து, 

அன்பு மனைவியை விடுத்து,

அருமை குழந்தை விடுத்து

உன் தவத்தின் விளைவாய்

கடவுளே இல்லையென்றாய்...

உன்னையே கடவுளாக்கிவிட்டார்கள்

அப்போது கண்களை இழுத்து மூடினாயோ?

இப்போது விற்பனைப் பொருளானாய்...

இறுகிய உதடுகளின் இதழ்களில் 

தென்படும் குறுநகை....

இகழ்ச்சியா....ஞானச் சிரிப்பா?

ஊமையாகி உள்ளுக்குள் குமுறுகின்றன 

சொல்ல முடியா வார்த்தைகள்....

மௌனம் உடைக்கவே மொழிகள் முயல்கின்றன.

அதை மறைக்க சிரித்துப் பேசி நடித்தால்

வாழ்க்கை முழுதும் நடிக்க வேண்டி வரும்...

அது தேவையற்றது....

புத்தா உன் கண் மூடலிலும்

இறுகிய உதடுகளிலும்

நீ இன்னும் எதைப் போதிக்கின்றாய்?

மோன நிலையின் அற்புதத்தையா?

சிலையின் மௌனம் கலையாகும்

கடலின் மௌனம் முத்தாகும்

விதையின் மௌனம் மலராகும்

மௌனமே இங்குச் சிறையானால்?

உன் சிலை எனக்கு வேண்டாம்.

உன் மெளனச் சிறை போதும்.

எப்போதும் நீ போதிதான்.

 



பட்டாம்பூச்சி



 வானில் எத்தனையோ பட்டாம்பூச்சி

என்னைக்  கவர்ந்த ஒன்று

.பார்வை பறித்து மனதை இழுத்து வசமாக்கி,

நினைவு முளையில் என்னைக் கட்டிவிட்டு்ப் போனது. 

விடுபட்டுத் தேடினேன் அதுஅறியாமல்...

பூக்களின் மேல்....மரக்கிளையில்

தோட்டத்துச் சுவற்றில்

கண்ணில் பூச்சி காட்டி பறந்தது...

விண்ணில் மண்ணில் காட்டில்  நீரில்

என்னில்.....கைப்பிடிக்குள் வராமல்....

நானும் சிறகடித்தேன்....விழுந்தேன்..

அழுதேன்...மெல்ல....

பார்வையிலிருந்து மறைந்து போனது...

அமைதி தேடி ஓரிடம் அமர்ந்தேன்

 நினைவெங்கும்  பட்டாம்பூச்சி...

நிழலெல்லாம் பட்டாம்பூச்சி....

தோளில் மௌன சிறகடிப்பு

மனதில் ஒரு குறுகுறுப்பு...

பார்வை பாவை நகர்த்திப் பார்த்தேன்

பட்டாம்பூச்சி...அதே பட்டாம்பூச்சி...

மெல்ல கைவிரலில் எடுத்துப்பார்த்தேன்

அசைவின்றி இசைந்தது...

மெல்ல ஒரு கணம்...மனம்

அதை சொந்தமாக்க நினைத்தது...

அது வனதேவதைக்குச் சொந்தமானது...

விரல் விரித்தேன்....விடுபட்டுப் பறந்தது..

விரல் பார்த்தேன்.....

விரலில் அதன் வண்ணம் 

என்றும் நீங்காத வண்ணம்.