5.மணிமேகலை
மணிமேகலைக்குள் ஏனோ விசாகை நினைவு வந்தது
விசாகை தன் கற்பை நிருபிக்க போராடிய ஒருத்தி
தன் மாளிகைக்கு வந்ததும்,
தன்
நெருங்கிய தோழி கனகையை அழைத்தாள்.
‘கனகை, நாம் வரும் வழியில் பொன்னக்கா யாரோடோ என்னைக் காட்டி பேசிக் கொண்டிருந்தாளே. என்னவென்று உனக்குத் தெரியுமா?’
கனகை திடுக்கிட்டாள். ‘அது ஒண்ணுமில்லைம்மா. பொன்னக்காவுக்கு என்ன வேலை. ஊர் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டிருப்பாள்.’
‘சரி
ஊர்
வம்பை விலைக்கு வாங்கட்டும். விற்கட்டும். என்னைச் சாடை காட்டி பேசினாளே. அதைச் சொல்’
‘ஊருக்கு என்ன வேலைம்மா. வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால் போதாதா’
‘என்ன அவல். அதை முதலில் சொல்’
தன்
வாயால் தானே மாட்டிக் கொண்ட கனகை திகைத்தாள்.
விசாகை மகா பிடிவாதக்காரி. தன்னிடமில்லையென்றால் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்வாள். ஊரார் பேசுவது என்றைக்காவது அவளுக்குத் தெரிந்துதானே ஆக வேண்டும். தானே பக்குவமாகச் சொல்வதெனத் தீர்மானித்தாள்.
‘அது
வந்து ஒண்ணுமில்லம்மா. நம்ம சங்க தருமன் ஐயா அருவி பக்கம் வந்திருந்தாரு’
‘சங்க தருமனா நான் பார்க்கவில்லையே’
‘நீங்க பாக்கலர. ஆனா இந்த ஊராருக்கு என்ன வேலை’
‘அப்புறம் பூப்பறிக்கச் சோலைக்குப் போயிருந்தமில்ல. அதற்குப் பக்கத்திலுள்ள வணிக மன்றத்துக்கு வந்திருந்தார்.’
‘ஏதாவது வணிகத் தொடர்பாக வந்திருப்பார்.’
‘ஆமாம்மா. நீங்க வந்ததை அவர் பாக்கலை. அவரு வந்ததை நீங்க பாக்கலை. ஆனா வம்பு பேசுபவர்களுக்குக் கம்பு கிடைச்சிருச்சே.’
‘என்ன’
‘அதுதான் சுத்தி சுத்தி வாயால் விளையாடறாங்க’
‘சங்க தருமன் என் அத்தை மகன். நாளை என்னைக் கரம் பிடிக்கப் போறவர். இதில வம்பு பேசறதுக்கு என்ன இருக்கு’
‘அம்மா. நீங்க கள்ளங்கபடமில்லாதவங்க. அதனால புரியாம கேக்கறீங்க. எனக்குத்தான் சொல்ல நா கூசுது.’
விசாகை திகைத்தாள். ‘எதுவாயிருந்தாலும் சொல்லு கனகை’
‘அதாம்மா. நீங்களும் அவரும் காந்தர்வ மணம் செஞ்சிக்கிட்டு,
ஊரறியாம குடும்பம் நடத்தறீங்கன்னு.. . .. ’
விசாகையின் தீப்பொறி விழியைத் தாங்க முடியாமல்,
கனகை நிறுத்திவிட்டாள்.
விசாகைக்குக் கோபத்தினால் முகம் சிவந்து விட்டது. மூச்சு விடவும் மறந்து போனாள். பொன்னக்கா எதிரிலிருந்தால் மன்மதனைச் சுட்டெரித்த சிவனைப் போல, அவளைச் சுட்டெரித்திருப்பாள்.
‘பொன்னாவை இங்கு வரச்சொல்’
‘அம்மா அவசரப் படாதீங்க. பொன்னா மட்டுமில்ல, ஊரே இப்படித்தான் பேசுகிறது.’
தன்
ஆவியே போனதுபோல் வெளிறிப் போனாள்.
என்
மீதா இப்படிப்பட்ட களங்கம்?
. அத்தை மகனானாலும், நாளை மணமுடிக்கப் போகின்றவனென்றாலும் அவனை நான் பார்த்தே பல மாதங்களாயிற்றே. தாய் அனுமதிக்காமல் நான் அவரைப் பார்த்ததே இல்லையே.
அவரும் கண்ணியமானவர்தான். எங்களைப் போய் இப்படிக் களங்கப்படுத்திவிட்டார்களே.
யாரிடம் முறையிடுவது. இந்தக் களங்கத்தை எப்படிப் போக்குவது? வம்பு பேசுபவர்களைத் தண்டிக்கும் சதுக்கக் காவல் பூதத்திடம் சென்று முறையிட்டாள். விசாகையை நன்கு அறிந்திருந்த அந்தப் பூதம், ஊரை அழைத்து விசாகை குற்றமற்றவள் என்றது. ஊர் எதுவும் பேசாமல் கலைந்து போனது. ஆனால், விசாகையின் மனவருத்தம் நீங்கவில்லை.
‘என்னைப் போல் களங்கப் படுத்திவிட்டார்களே. நானா அப்படிச் செய்வேன். திருமணப் பேச்சு எடுத்த நாளிலிலிருந்து அவரை நான் பார்க்கவேயில்லை. ஏன் இப்படி ஊரார் பேசினார்கள். நான் செல்லுமிடங்களுக்கு அவர் வேறு வேலைக்காக வந்திருக்கிறார். என்னைப் பார்த்திருந்தாலும் பாராதது போலத்தான் சென்றிருப்பார். எங்களைப் போல ஊரார் களங்கப் படுத்தி விட்டார்களே’
மனம் புழுங்கினான்.
தன்
கற்பை நிருபிக்க என்ன வழி? களங்கம் போக்க என்ன வழி? பகலிரவெல்லாம் அழுதழுது கண்கள் நீரற்றுப் போயின. சதுக்கபூதம் சொன்னாலும், ஊரார் பேசியதும், இனி பேசுவதும் யார் தடுப்பது? அவரோடு திருமணமாகி இல்லறம் நடத்தும் போதும் இப்பழிச்சொல் முள்ளாய் உறுத்துமே,
‘ஊராரின் வதந்தியால் தன் குடும்பமே தலைகுனிந்த நிற்கிறதே. பெற்றோர் முகத்தில் எப்படி விழிப்பேன்’.
காவியுடை உடுத்தி நின்ற விசாகையின் கண்டு அவள் பெற்றோர் திடுக்கிட்டனர்.
‘விசாகை என்னம்மா இது’
‘என்
களங்கம் போக்க இதுவே வழி. கன்னிமாடம் சென்று துறவு மேற்கொள்ளப் போகிறோன்’.
‘வேண்டாம்மா, ஊரார் சொன்னாலும் எங்களுக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த விபரீத முடிவை விட்டு விடு. எங்களையும் சங்கனையும் நினைத்துப்பார்.
விசாகை எதுவும் சொல்லாமல் கன்னிமாடம் சேர்ந்தாள். சங்கன் விசாகையைத் தவிர யாரையும் மணப்பதில்லை என்று சபதமெடுத்து மதுரை சென்று விட்டான். காலங்கள் உருண்டன. விசாகை தன் முடிவிலிருந்து மாறவில்லை. தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டுக் கன்னிமாடம் விட்டு, துறவுக் கோலத்துடன் தோழிர் உடன் வந்து கொண்டிருந்தாள்.
இருபது வருடங்களாகக் கன்னிமாடத்தில் துறவு மேற்கொண்டிருந்தாலும்,
விசாகையின் பொலிவு குறையவில்லை. மாறாக, மேலும் பொலிவு பெற்றிருந்தாள்.
அவ்வழியே வந்த ககந்தனின் காமுகனான மூத்த மகன், விசாகை மீது மோகம் கொண்டு தன் கழுத்திலிருந்த மாலையை எடுத்து எதிர்பாராமல், தீடீரென விசாகை முன் தோன்றி அவள் கழுத்தில் போட்டான்.
விசாகை துடிதுடித்து, அம்மாலையைக் கழட்டி வீசி எறிந்தாள்.
அவளுக்கு உடல் வெடவெடவென்று
நடுங்கத் தொடங்கியது.
என்ன இது? சீ யாரிவன்?
கன்னிமாடத்தில் வசிக்கும் பெண் என்பதை என் துறவாடைக் காட்டிக் கொண்டிருக்கிறதே?
பின் எப்படி இப்படி நடந்து கொள்கிறான்?
அவனோ அவள் தன்னுடன் வரவேண்டுமெனக் கலகம் செய்தான். அவளை நகரவிடாமல் முன்னால் வழிமறிக்கத் தொடங்கினான். விசாகை
எப்பக்கம் செல்வதென்று தெரியாமல் தடுமாறி நின்று விட்டாள்.
விசாகையின் தோழி ஒருத்தி அவன் தந்தையிடம் சேதி செல்ல ஓடினாள். விசாகை மேற்கொண்டு நகர முடியாவண்ணம் அவன் கைகளைப் பரக்க விரித்தபடி அவளை அணைக்க வந்தான். உடன் நின்று கொண்டிருந்த தோழியர் அவனிடம் வழி
விடச் சொல்லி மன்றாடினார்கள். ஆனால், அவனோ பற்கள் தெரிய அசிங்கமாக கண் சாடைக்
காட்டி, நீங்களும் என்னுடன் வர விரும்பினால் வரலாம்‘ என்றான். அதைக் கேட்ட
அப்பெண்கள் காதுகளை இரு கைகளாலும் மூடிக் கொண்டனர். அவனிடம் பேசுவதற்கே பயந்து
நின்றனர்.
ககந்தன் ஓடோடி வந்தான். துறவு மேற்கொண்ட பெண்ணிடம், முறைகேடாக நடந்து கொண்டிருந்த மகனைத் தன்
இடையிலிருந்த உடை வாளால் சிறிதும் யோசிக்காமல், வெட்டிக் கொன்றான். விசாகை, கண்முன் நடந்த படு கொலையைக் கண்டு
பைத்தியம் பிடித்தவள் போலானாள். அவளுடைய மெல்லிய இதயம் சிதறுண்டு போனது.[தொடரும்]
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?