நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 12 March 2013

புறநானூற்றில் கலைக்கூறுகள்




புறநானூற்றில் கலைக்கூறுகள்

முனைவர் சீ.குணசேகரன்,  தமிழ் இணைப்பேராசிரியர்,    அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
                                                                                                சேலம் - 636 007.
முன்னுரை
                விலங்குகளைப் போல நாடோடிகளாய் திரிந்த மனிதனை நாகரிக மனிதனாக மாற்றிய பெருமை கலையினையேச் சாரும். நாடோடிகளாய்த் திரிந்த மனிதன் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கற்களால் ஆன ஈட்டி, கத்தி முதலான கருவிகளைக் கண்டுபிடித்தான். பிறகு இயற்கையின் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்து கொள்வதற்காக தனக்கென ஒரு உறைவிடத்தை அமைத்துக் கொண்டான் இவையாவும் அவனது கலைத்தன்மையே ஆகும்.
ஏனேனில் கலை என்பது கல்லுதல். கல் என்றால் தோண்டுதல், வெளிக்கொணருதல் என்று பொருள் படுகிறது. எனவே மனிதன் தன் மனதில் இப்படி ஒரு கருவியைக் கண்டுபிடித்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற ஒரு கலை உணர்வுக்கு ஆட்படுத்தப்படுகிறான். இதன் விளைவே கருவிகளின் கண்டுபிடிப்பு . கற்கால மனிதனை கலையானது நாகரிகம் பெற்ற மனிதனாக உருவாக்கியது. அடுத்தகட்டமாகிய சங்க காலத்திலும் அக்கால மக்களை கலை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் தலைச் சிறந்தவனாகச் செய்து அவனது புகழை எங்கும் பரவச் செய்தது. இக்கலையானது வளர்ச்சி பெறும் பொழுது மனிதனது கலை உணர்வும் வளர்ச்சிப் பெற்றது. நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு புதிய கலையைப் படைக்கும் கலைஞனாகிறான். இக்கலைக் கூறுகள் புறநானூற்றில் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
புறநானூறு - நூல் குறிப்பு
                பழந்தமிழில் உள்ள தொகை நூல்களில் ஈடுஇணையற்ற நூல் புறநானூறு ஆகும். இந்நூல் பண்டைத் தமிழ் மக்களின் ஒழுகலாறுகளையும், பழக்க வழக்கங்களையும், பண்பாட்டுச் சிறப்புகளையும், நாகரிக மேம்பாட்டையும், தொழில்முறைகளையும், மக்களின் வாழ்க்கை நிலைகளையும் அறிய உதவும் அரிய களஞ்சியமாக விளங்குகிறது. அரசர்களே புலவராக விளங்கியமையும் அரசருக்கே புலவர்கள் அறிவுரைக் கூறுபவராக விளங்கியதைப் பற்றியும் குறிப்பிடுகிறது. மேலும் பெண்களுக்கு கல்வியில் சம உரிமை அளித்தமைப் பற்றி அறிவதற்கும் புறநானூறு ஒரு கருத்துச் சுரங்கமாகத் திகழ்கிறது. தனி ஒருவரின் சொந்த அனுபவம் பற்றிய இலக்கியம் தன்னுணர்ச்சிப்பாடல்கள். தனி மனிதர்க்கும் மற்றவர்க்கும் அல்லது சமுதாயத்திற்கும் உள்ள உறவின் அனுபவம் பற்றிய இலக்கியமாகவும் திகழ்கிறது. புறநானூறு  வாழ்வியல் நெறிக்களுக்கு இலக்கண நூலாகவும் திகழ்ந்துள்ளமையை அறியலாம்.
அரிய செய்திகள்
                இன்று பேருந்துகளில், தொடர்வண்டிகளில், வாடகை ஊர்திகளில், பொது இடங்களில் சிறுவர்க்கும் மூத்த குடிமக்களுக்கும் சூல் கொண்ட மகளிர்க்கும் சலுகைகள் காட்டப்படுகின்றன. இத்தகைய சலுகைகள் பழந்தமிழகத்திலேயே நம் முன்னோர்கள் காட்டியுள்ளனர் என்பது நமக்கு எத்துணைப் பெருமிதமும் பேருவகையும் தரக்கூடிய செய்தி ஆகும்.
                மூத்தவர்களையும் சிறுவர்களையும் இலவசமாக இக்கரையிலிரிந்து அக்கரை சேர்க்கும் ஓடம் போல என்று (புறம் - 381 : 23 - 24) நன்னாகனார்  எனும் புலவர் பாடுகிறார். எவ்வளவு புதுமையான செய்தி இது அறத்துறை அம்பி என்னும் தொடருக்கு உ.வே.சா. அவர்கள் தருமவோடம் என்றே பொருள் எழுதியுள்ளார். தமிழினம் மனிதாபிமானம் நிறைந்த இனம் என்பதற்கு வேறு சான்றும் வேண்டுங்கொல்!
                சங்ககாலம் இனக்குழு சமுதாயம் தளர்ந்து வர்க்க சமுதாயம் மேலோங்கிய காலம். அக்காலத்தில் வாழ்ந்த நல்ல மனிதன் ஒருவன் செல்வந்தருக்கு உண்டாகும் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஏழைபடும் இன்னல் தீர்க்கவே உதவினான் எனப் புறம் பேசும் செய்தி எத்துணை விழுமிய செய்தி ( புறம்- 329)
பதிப்பு வரலாறு
                இத்தகைய அருமையான நூலை வழிநடந்து இளைத்த பாதங்களோடும் ஊர் ஊராகச் சென்று ஏட்டுச் சுவடிகளை அரும்பாடுப்பட்டுத் திரட்டி அரிய குறிப்புகளோடும் பழைய உரையோடும் முதன்முதலில் வெளியிட்டவர் தமிழ்த் தாத்தா டாக்டர். உ.வே.சா. அவர்கள். அவர்களுக்குப் பிறகு பல புதிய சுவடிகளைக் கண்டும் கல்வெட்டுகளின் துணை கொண்டு ஆராய்ச்சி முன்னுரையோடு முன்னைய பதிப்பில் விளங்காத பல ஊர்கள், புலவர் பெயர்களை விளக்கிப் பாட பேதத்தையும் செப்பனிட்டு பெளிப்படுத்தியவர் ஔவை.சு. துரைசாமி அவர்கள் (1951).
                இவ்விரு உரைகளையும் அடிப்படையாகக் கொண்டு எளிமையான தெளிவுரை எழுதியும் பாடல்களைப் படிப்பார்க்கு எளிமையாக விளங்கப் பதம்பிரித்தும் திணைத்துறை விளக்கத்தோடு மக்கள் பதிப்பாகவும் மலிவு பதிப்பாகவும் வெளியிட்டவர் புலியூர்க்கேசிகன் அவர்கள் (1958). இவர்களுக்குப் பிறகு புறநானூறு இன்னும் பலரால் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளது. இனியும் வந்துக் கொண்டே இருக்கும்.
கலை விளக்கம்
                கலை என்னும் சொல் மனதை வசப்படுத்தக் கூடியதும், நிகழ்கின்றவனையும், பார்வையாளனையும் ஒரே உணர்வுக்குள் ஆட்படுத்தக் கூடியதும், பொழுதுபோக்குக் கூறுகளையுடையதுமாகும். இச்சொல் கல்என்னும் வேர்ச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதுமாகும்.
                கலை’, ‘கல்விஎனும் இருசொற்களும் கல் என்னும் வேர்ச் சொல்லிருந்து தோற்றியதாகும்.
                """"கலை    என்னும்    சொல்    கலா  என்னும்     வடசொல்லிருந்து     தோற்றம்
பெற்றது ""என்கிறார் கு.வே. பாலசுப்பிரமணியன்.
                கலை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் ஹசுகூ. ஹசுகூ என்றால் திறன் என்று பொருள். கலையினை மனத்திறத்தின் வெளிப்பாடு என்று சிலம்பு குறிக்கின்றது. மனதில் இருந்து புறப்படும் கலைகள் கண்கலால் கண்டும், காதால் கேட்டும் இன்பம் தரக்கூடியவை. """"கற்பனை, அழகு, இன்பம் தரல் ஆகியவை கலைகளின் அடிப்படைத் தன்மைகள்"" என்கிறார் முனைவர் மு.திலகவதி (சங்ககால மகளிர் வாழ்வியல்)
கலையின் வளர்ச்சி
                கலைகள் அந்தந்த நாட்டின் அமைப்பு, சுற்றுப்புறச் சூழல், மக்களின் சிந்தனைகள், பழக்கவழக்கங்கள், சமயங்கள் இவற்றின் தன்மைக்கு ஏற்ப வளர்ச்சி பெறும். நிகழ்த்துக் கலைகளாக இருந்த வரையில் அவற்றை எந்த ஒரு வரையறைகளுக்கும் உட்படுத்த முடியவில்லை. இவற்றுக்கென இலக்கணங்களும் வரையறைகளும் உருவாகத் தொடங்கிய பின் கலைகள் முழுமை பெற்றன. அவை தொடர்பான வடிவங்கள், செயல்பாடுகள், ஒழுங்குமுறைகள் முதலியன இலக்கியங்களிலும் படிவங்களிலும் இடம்பெறத் தொடங்கின. அவ்வாறு இடம் பெற்றுத் தலைமைத் தன்மை பெற்ற கலைகள் தத்தம் குழுவின் நாகரிக வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தன.
கலையின் வகைப்பாடு
                கலையின் உருவாக்க வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பவடிவில் செய்திறனாக வியப்பமைந்த கட்டிடமாகவும் தோற்றம் பெற்றன. இதனை,
காட்சிக் கேள்விக்கலைகள் (இயங்குக் கலைகள்)
                       
                          இசை                 கூத்து (அ) நாடகம்
காட்சிப் புலனுணர்வுக் கலைகள் (இயங்காக் கலைகள்)

சிற்பம்            ஓவியம்     கட்டிடம்      ஒப்பனை    தொழில் நு ட்பம்
என்று வகைப்படுத்தலாம். இக்கலைகளையே ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனையே, சிலம்பதிகார அடி ஒன்றில் """"எண்ணெண் கலையும் இயைந்துடன் போக"" என்று குறிப்பிட்டுள்ளார்.
புறநானூற்றில் இசைக்கலை
                இசை உள்ளத்தின் மிக ஆழமான உணர்வுகளை நேரடியாகவும் உடனடியாகவும் உணர்த்தும் வாயிலாகும். மனிதனுடைய இன்பம், துன்பம், கோபம், காதல், வியப்பு, அச்சம் ஆகிய இவை போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டால் தொன்மைக்கால இசையானது இயற்கையாக அமைந்தது எனலாம்.
                தமிழ் மக்களின் வாழ்வோடு இசை இரண்டறக் கலந்து இருந்தமையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. கருப்பொருளை குறிப்பிடும் பொழுது யாழினையும் பறையினையும் சுட்டுகிறார். யாழ் பற்றிய இலக்கண நூல் இருந்ததை,

                                """"அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
                                உளவென மொழிப இசையொடு சிவணிய
                                யாழின் மறைய என்மனார் புலவர்"" (தொல் : எழுத்து - 33)
எனும் எழுத்ததிகார நூற்பாவால் உணரலாம்.
                """"பண்ணென்றது நரம்படைவால் நிறத்தோன்றப் பண்ணப்படா நின்ற பண்ணும் பண்ணியாற்றிறமும் திறமும் நிறந்திறமும் என்பார்"" அடியார்க்கு நல்லார் (சிலம்பு : உரை : ப - 109).  """"பண்ணுதல் என்னும் வினையாகப் பிறந்தது பண்"" என்றும் (விபுலானந்தர் - யாழ்நூல் 1947, ப - 12) யாழின் வழிக் கொண்டு பண்ணப்படுதலால் கண் என்று வழங்கலாயிற்று என்றும் (கோமதி சங்கரய்யர்) கூறுகிறார்.
                பாக்களோடு இயைந்து உரைக்கப் பெற்ற இசையினை நெஞ்சு, மிடற்று, நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டு இடங்களில் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழிலால் ஒழுங்குறப் பண்ணிப் பாடப்படுவது பண்எனப்பெறும் என்று இசைப் புலவர்கள் கூறுகின்றனர். புறநானூற்றில் """"விளரிப் பண், படுமலைப் பண், செவ்வழிப் பண், மருதப்பண், நெய்தற்பண், காஞ்சிப்பண்"" முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன.
விளரிப்பண்
                பருந்தின் சுழற்சி போல வட்டமிட்டுப் பாடுவது விளரிப்பண் ஆகும். """"இது நெஞ்சில் இருந்து பிறப்பதாகும்"" என்று செந்துரைமுத்து கூறுகிறார் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், 1981, – 378). இது இரங்கற் பண்ணாகும். இப்பண்ணைப் பாடி நரிகளை ஓட்டிய நிகழ்ச்சியினை,
                                """"சிறா அர் துடியர் பாடுவன் மகா அ அர்
                                தூ வெள்ளறுவை மாயோற் குறுகி
                                இரும்பூட் பூச லோம்புமின் யானும்
                                விளரிக் கொட்டின் வெண்ணகி கடிகுவென்"" (புறம்-291 : 1 – 4)
குறிப்பிடுகிறது.
படுமலைப்பண்
                கைக்கிளை குரலாக நிறுத்தப்பாடுவது படுமலைப்பண் எனப்படும். இதனை,
                                """"பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்
                                வரி நடுவில் பனுவல் புலம் பெயர்ந்திசைப்ப
                                படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்"" (புறம்-135: 5-7)
என்று குறிப்பிடுகிறது.
காஞ்சிப்பண்
                விழுப்புண் பட்டவர்கள், பேயால் பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வருத்தம்
தீரக் காஞ்சிப்பண் பாடுவது சங்ககால வழக்கம். விழுப்புண் பட்ட வீரனைக் காக்க ஐயவி (வெண்கடுகு) அப்புதல், அகிற்புகைத்தல், மணி அடித்தல், வேம்பினை மனையில் செருகுதல் முதலான செயல்பாடுகளில் ஈடுபடுவர். அப்போது ஆம்பல் ஊதி காஞ்சிப்பண்ணை மகளிர் பாடியதாக,
                                """"வேம்பு சினையொடிப்பவும் காஞ்சிபாடவும்
                                நெய்யுடைக் கையரைவி புகைப்பவும்
                                எல்லா மனையுங் கல்லென்றனவே"" (புறம்-1: 296)
என்ற வரிகள் குறிப்பிடுகிறது.    மருதப்பண் மற்றும் செவ்வழிப்பண் குறித்த செய்தியை ,
                                """"நள்ளி வாழியோ நள்ளி நன்றென்
                                மாலை மருதம் பண்ணிக் காலைக்
                                கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
                                வரவெமர் மறந்தனர்"" (புறம்- 1:20)
என்று பகர்கிறது. இவற்றால் சங்ககால மக்கள் பண்ணை பேயினை விரட்டவும், நரிகளை விரட்டவும் பயன்படுத்திய செய்தியை அறிந்து கொள்ளமுடிகிறது.
புறநானூற்றில் இசை கருவிகள்
முழவு
                சங்க நூல்களிலும் காப்பியங்களிலும் முழவு மிகப் பரவலாக காணப்படுகிறது. இதனை,
                                """"விழுப்பிணிக் கொண்ட மண்கனை முழவிற்
                                பாடினி பாடும் வஞ்சிக்கு"" (புறம்-15: 24-25)
என்று குறிப்பிட்டுள்ளமையால் முழவு பாடினி பாடும் இசைப் பாடலுக்குத் துணையாக ஒலித்தமையை அறியலாம்.
முரசு
                முரசு என்பது பெரிய உருவில் அமைந்த கொட்டாகும். குடைந்த மரத்தாலும், பரந்த கண்ணை மூடியுள்ள இறுக்கிக் கட்டப்பெற்ற தோல்வாராலும் முரசு செய்யப்பட்டிருக்கும். முரசை குறுந்தடியால் முழங்கச் செய்வர். இதனை,
                                """"குணில் பாய்முரசின் இரங்கும் அருவி"" (புறம்-143: 9-14)
என்றும்,
                                """"குருதி வேட்கை யுருகெழு முரசம்"" (புறம்-50:5)
என்றும் குறிப்பிட்டுள்ளமை அறியலாம்.
பதலை
                இதுவும் ஒரு வகை இசைக் கருவியே. பதலை இருந்தமையை,
                                """"பதலை ஒருகண் பையென வியக்குமின்"" (புறம்-152:17)
என்கிறது.
தடாரி
                தடாரி என்பது கிணைப்பறை. இக்கருவி கிணை என்றப் பெயரிலும் வழங்கப்பட்டது. இது படம் விரிந்த பாம்பினது பொறியை ஒத்திருக்கும். இதற்குப் பொருந்த பொருநன் பாடியிருக்கலாம். இது யானையின் அடிச்சுவடு, முழுமதி, யாமை போன்றவற்றின் வடிவத்தை ஒத்து அமைந்திருக்கின்றது என்பதை,
                                """"அரிக்குரற் தடாரி"" (புறம்- 390:8)
                                """"அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரி"" (புறம்-249:4)
                                """"மதியத்தன்ன வென் னரிக்குரற் றடாரி"" (புறம்-398:12)
என்றும் குறிப்பிட்டுள்ளன.
சீறியாழ்
                சீறியாழின் உறுப்புகளுள் ஒன்றான வணர்எனும் வளைவான பகுதியை,
                                """"வாணர் கோட்டுச் சீறியாழ் வாடு புடைத்தழீஇ"" (புறம்-155:1)
என்கிறது.
                இச்சீறியாழ் பற்றிய செய்திகள் புறநானூற்றில் மட்டுமே பதினைந்து இடங்களில் பல்வேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது (புறம்-135,144,146,147,155,398) . சான்றாக,
                                """"சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்"" (புறம்- 144:2)
                                """"சீறியாழ் செவ்வழி பண்ணி நின்வன்புல"" (புறம்-146:3)
                                """"சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை"" (புறம்-1:147)
""""படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்"" (புறம்-135:7)
என்ற       குறிப்பினால்       சீறியாழில்     செவ்வழிப்     பண்ணும்      படுமலைப்பண்ணும்
இசைக்கப்பட்டதை உணரமுடிகிறது.
புறநானூற்றில் கூத்துக்கலை
                கூத்தினை குன்றக் கூத்து, குரவைக் கூத்து, பாவைக்கூத்து, வெறியாட்டு உள்ளிட்ட 11 வகைப்படுத்தப்படுள்ளது.
குரவையை 1) முன்தேர்க்குரவை   2)பின்தேர்க்குரவை  என 2வகையாகப் பிரிப்பர். பாவைக்கூத்தினை 1) அல்லிப்பாவை     2) தோற்பாவை என்று பிரிப்பர். இக்கூத்துக்களை நிதழ்த்துவோர் கூத்தர், விறலியர், வயிரியர், தோடியர் என்று குறிக்கப்பட்டனர்.
                பரதவர் வெம்மையுடைய மதுவை உண்டு மெல்லிய குரவைக் கூத்திற்கு ஏற்ற தாளத்தோடு ஆடியதை,
                                """"திண்டிமில் வன்பரதவர்
                                வெப்புடைய மட்டுண்டு
                                தன்குரவைச் சீர்தூங்குந்து"" (புறம்-3:6)
என்று குறிப்பிடுகிறது. மேலும்,
மிக்க ஆராவரத்தை உடைய அகன்ற இடத்தில் பொன்னால் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடன் பனந்தோட்டையும் ஒருகிச் சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொலி அலையையுடைய கடலினது ஒலியைப் போன்று ஆராவாரமிக்கதாயிற்று என்பதை,
                                """"மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரீ இச்
                                சின மாந்தர் வெறிக்குரவை"" (புறம்-22: 21-22)
என்று குறிப்பிட்டுள்ளதால் உணரலாம்.
அல்லிப்பாவை
                அல்லிப்பாவை     என்பது     ஆண்     பெண்ணின்     கோலத்தோடு      ஆடும் 
கூத்தெனலாம். சோழன் நலங்கிள்ளியின் போர்முனையாகிய இழுக்கை கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட அழகு பொருந்திய அல்லிப்பாவை என்னும் கூத்தாடும் அழகையொப்பதென,
                                """"செம்மற்று அம்மநின் வெம்முனை இழுக்கை
                                வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
                                அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப"" (புறம்-33: 15-18)
என்கிறது.
வயிரியர்
                இவர்களும் ஒருவகை ஆடல் மாக்கள், பண் அமைந்த நரம்புடைய தோலாற் போர்க்கப்பட்ட யாழையும், மார்ச்சனை நிறைந்த முழவினையுடைய வயிரியர் என புறநானூறு,
                                """"பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
                                மண்ணமை முழவின் வயிரியர்""18 (புறம்-164: 12) 
பகர்கிறது.
கோடியர்
                இவர்களும் ஒருவகை கூத்தராவார். இவர்கள் வெவ்வேறு கோலம் பூண்டு ஆடும் பான்மையினர். இவ்வுலகத்தின் நிலையாமையினை கோடியரின் வெவ்வேறு கோலம் முறையாகத் தோன்றி மறைவதை உவமையாக கூறுகிறார்.
                                """"ஊழியிற் றக நின் செய்கை விழவிள்
                                கோடியர் நீர்மை போல முறைமுறை
                                ஆடுநர் கழியுமிவ் வுலகத்து கூடிய"" (புறம்-29: 22-24)
கூத்தர் ஆடுகளத்தை,
                                """"கூத்தர் ஆடுகளம் கடுக்கும்"" (புறம்-28: 13-14)
என்று குறிப்பிடுகிறது. இதற்கு கண்ணுளர் குடிஞைப்பள்ளி என்ற பெயரும் இருந்திருக்கின்றது.
புறநானூற்றில் சிற்பக்கலை
                நடுகல் நடும் வழக்கம் தான் பிற்காலத்தில் கல்லில் உருவம் செதுக்கி  நிறுத்தும்    வழக்கமாக     வளர்ந்தது     எனலாம்.    எனவே   நடுகல் வழிபாடே சிற்பக்
கலையின் முதல் கட்டமாகும். இச்செய்தி புறநானூற்றில்,
                                """"பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்து
                                மரல் வழுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
                                அணி மயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
                                இனி நட்டனரே கல்லூம்"" (புறம்-264)
என்கிறது. மேலும்,
                                """"நடுகல் பீலி சூட்டு நாரரி
                                சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ
                                கோடுயர் பிறங்குமலை கழி இய
                                நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோனே"" (புறம்-232: 3-6)
இவ்வரிகளில் நடுகல் நட்டு அதனை பீலிசூட்டி வழிபட்ட செய்தியைக் காணமுடிகிறது.
கட்டிடக் கலை
                சங்க இலக்கியங்களில் பேசப்படும் குரம்பை (ழருகூ) எனப்படுவது சிறிய மனையாகும். குரம்பைகள் என்பது கூரை வேய்ந்த குடிசைகளாகும். குரம்பைகளின் கூரையமைப்பு கால்கள், அமைவிடம், கூரைக்குரிய கட்டுமானப் பொருட்கள் என்பன பற்றிப் பல செய்திகள் உள்ளன. எயிற்றியர், மறவர், வலைஞர், குறவர், பரதவர் போன்ற பண்டைய தமிழினத்தவரின் குடிசைகள் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன என்பதையும் சங்க இலக்கியங்களில் தெளிவாகவும்,  பண்பாடு  மற்றும் சுற்றுப்புறச் சூழல் விளக்கத்துடனும் குறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இக்காட்சிகளை  மீட்டுருவாக்கம் செய்து அக்கால கட்டிடக் கலையின் வளர்ச்சி, தொழில் நுட்பம், பண்பாடு போன்றவற்றைத் தெளிவாக காணலாம்.
தேறலைப் புல் வேய்ந்த குரம்பை கட்டப்பட்டிருந்ததை,
                """"நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
                புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து""  (புறம்-120: 12-13)
வெளிக்காட்டுகிறது. மேலும்,
                                """"அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
                                ஆய் கரும்பின் கொடிக் கூரை"" (புறம்-22: 14-15)
என்றதால் கரும்பாற் கட்டப்பட்டு செந்நெற்கதிர்களால் வேயப்பட்ட மாடி வீடுகள் அழகுடன் விளங்கும் என்ற செய்தி புலப்படுகிறது.
                கூவையிலையால் வேயப்பட்ட நாற்கால் பந்தலாலான சிறுமனை என்ற செய்தியால் அக்கால கட்டிடக் கலையின் தொழில் நுட்பத்தினை,
                                """"கூவை தூற்ற நாற்கால் பந்தர்ச்
                                சிறுமனை வாழ்க்கையின் ஓரி வருநர்க்கு"" (புறம்-29: 19-20)
என்பதன் மூலம் அறியலாம்.
                நிலை தளர்ந்து பாழ்பட்ட நிலையின் நின்று கொண்டிருக்கும் பல தூண்களையுடைய மன்றம் இருந்ததை,
                                """"அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி
                                நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல்காற்
                                பொதியில் ஒருசிறை பள்ளியாக"" (புறம்-375:1-3)
என்று குறிப்பிடுகிறது.
உடை
                உலகமெல்லாம் மனிதர்களின் முதல் தேவை உணவும், உடையும் இதனை புறநானூறு,
                                """"உண்பது நாழி, உடுப்பவையிரண்டே""  (புறம்-189:5)
என்கிறது.
                இனிய நீரையுடைய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப் பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குல் என்று கபிலர்,
                                """"அறிய தாமே சிறு வெள்ளாம்பல்
                                இளையமாகத் தழையாயினவே"" (புறம்-248)
மேலும், கொத்துக் கொத்தாய் அமைந்தாற் போன்ற கரிய கொத்துகளையுடைய நொச்சியே தொடியணிந்த இளமகளிர் அல்குலுடத்தே தழையுடையாகவுங் கிடப்பாய் என்று நொச்சியைக் கூறுவதாக,
                                """"மணி துணர்ந்தன்ன மாக்குரனொச்சி
                                தொடியுடை மகளிரல் குலுங்கிடத்தி"" (புறம்-272)
இவ்வரிகள் அமைந்துள்ளன.
                ஆடைகளின் நுண்மையும் மென்மையும் வைத்தே அவை நுண்பூங்கலிங்கம் எனப்பட்டன. கலிங்க நாட்டிலிருந்து ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டமையால் அவை கலிங்கம் எனப்பட்டன. பட்டு வீனத்திலிருந்தும் பருத்தி ஆடைகள் கலிங்கத்திலிருந்தும் தமிழகம் வந்தன. இச்செய்தியை,
                                """"பாம்புரியன்ன வடிவனி காம்பின்
                                கழைபடு சொலியின் இழையன்ன வாரா
                                ஒண்பூங்கலிங்கம்"" (புறம் - 383)
என்று குறிப்பிடுகிறது.
                பூ வேலை செய்யப்பட்ட உடைகளைத் தலைவன் தன் மேனியில் அணிந்த செய்தியினை,
                                """"புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்
                                உரைசெல வருளியோனே
                                பறையிசை யருப் பாயற் கோவே"" (புறம் - 398)
என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.
                இலையைத் தலையிலே உடைய கஞ்சங்குல்லையையும் இலையையுடைய நறிய பூங்கொத்துகளையும் செவ்விய காலினையுடைய மராத்தினது வெள்ளிய கொத்துகளையும் நடுநடுவே வைத்து வண்டகள் தேனையுண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை வடங்கள் திருந்தும் அல்குலிடத்தே அசையும்படி உடுத்தனர் என்று மகளிர் தழையுடையணிந்த செய்தியை,
                                """"தீ நீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
                                கூம்பவிழ் முழுநெறி புரள வரும் அல்குல்"" (புறம் - 248)
என்கிறது.
                குலக்கச்சை ஆடையினையும் பூந்தொழில் செய்யப்பட்ட ஆடையினையும் அணிந்தமையை,
                                """"நீலக் கச்சைப் பூவார் ஆடைப்"" (புறம் - 274)
என்றும் புலவனுக்குத் தலைவன் கந்தல் ஆடையை நீக்கி புத்தாடை அளித்தமையை,
                                """"என் அரை
                                முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து
                                திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ"" (புறம் - 390 : 13-15)
என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.
புறநானூற்றில் அணிகலன்கள்
                அணிகலன்கள் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசைக் கொண்டவன். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. ஆடைகளால் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் இருபாலருக்கும் பொதுவாக இயல்பாகும்.
                மகளீரைப் போல ஆடவரும் தன்னை பொன் அணிகளால் அலங்கரித்துக் கொண்டதை,
                                """"வரையுறழ் மார்பின் வையகம் விளங்கும்
                                விரவு மணியொளிர் வரும் அரவுறாழாரமொடு
                                புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்
                                உரைசெல அருளினோன்"" (புறம் - 398)
இவ்வரிகள் குறிப்பிடுகின்றன. மேலும்,
""""கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்த தோள் அரவுறழாரம்""(புறம் - 368)
என்று கூத்தரது முழவு போன்றதும் அழகிய மணியாற் செய்யப்பட்ட வாகுவலயம் அணிந்ததுமான தோளிற் கிடக்கும் பாம்பு போலும் என்று ஆடவர் அணிந்த அணிகலனைப் பற்றி கூறுகிறது.
                அழகி ஒருத்தி அணிகலன் பல அணிந்து மணலில் உலவிய செய்தியை,
                                """"ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
                                பொலஞ் செய்பல் காசணிந்த வல்கும்
                                ஈகைக் கண்ணி இலங்கத் தை இத்
                                தரு மணலியல் வோள்"" (புறம் - 253)
என்கிறது.
                காலில் சிலம்பும் கையில் வளையலையும் அணிந்த மகளிலை,
                                """"செறியச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்"" (புறம் - 36 : 1-3)
என்று குறிப்பிடுகிறது.
                கையில் சில வளையல்களை அணிந்த விறலியைப் பற்றி,
                                """"சில் வளை விறலியும்""  (புறம் - 60 : 1)
என்றும் ,
                                """"செல்ல மோதில் சில்வளை விறலி"" (புறம் - 64 : 2)
என்று குறிப்பிடுகின்றன.
                """"வாலிழைமகளிர்"" (புறம்-11), """"மாணிழை மகளிர்"" (புறம்-34), """"கணங்குழைமாதர்"" (புறம்-78), """"ஒண்டொடி மகளிர்"" (புறம்-24,56), """"செறியச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்"" (புறம்-36,97) என்று சுரண்டும் வர்க்கத்துப் பெண்கள் அம்மங்கையர் அணிந்திருந்த அணிகலன்கள் பற்றிய அடைமொழிகளோடு குறிப்பிட்டுள்ளனர்.
ஒப்பனை
                பண்டையத் தமிழ் மகளிரின் அழகியல் உணர்ச்சிகளையும் கலைத் திறனையும் புலப்படுத்துவது ஒப்பனைக்கலையாகும். ஒரு நாட்டின் செல்வ செழிப்பினையும் இக்கலை மூலம் அறியலாம். பண்டைய ஒப்பனைக் கலை இயற்கையோடு இயைந்து இயற்கையில் கிடைக்கும் பொருள்களே ஒப்பனைக்கு பயன்படுத்தப்பட்டன. அழகு, கவின், வனப்பு, கோலம், எழில் போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் அழகைக் குறிக்க வந்துள்ளன.
கூந்தல் ஒப்பனை
                சங்க கால மகளிர் கூந்தல் ஒப்பனையில் பல வகையான முறைகளைக் கையாண்டு அழகுபடுத்திக் கொண்டனர். இன்று காணப்படும் கூந்தல் ஒப்பனை முறைகளுக்கு சங்க கால மகளிரே முன்னோடியாக விளங்கியுள்ளனர். அவர்கள் அழகு நிலையங்களுக்குச் செல்லாமல் தம்மைத் தாமே ஒப்பனை செய்துக் கொண்டனர். மேலும் கூந்தலைப் பின்னாமல் கட்டித் தொங்கவிட்டும், பின்னியும், கொண்டையாக முடிந்தும் அழகுப்படுத்திக் கொண்டனர். சான்றாக,
                                """"கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்"" (புறம் - 61 : 1)
என்ற வரிகளில் கொண்டை முடித்து அதிலே தழையும் செறுகி அழகுபடுத்திக் கொண்டதை அறியமுடிகிறது. ஆண்களும் கூந்தலில் பூவைச் சூடி அழகு படுத்தியமையை,
                                """"பாணர் தாமரை மலையவும்"" (புறம் - 12 : 1)
இவ்வரிகள் மூலம் பாணர் பொற்றாமரை பூவைச் சூடினர் என்ற செய்தி அறியலாம். தலைவன்    தன்   கரிய   கூந்தலில் பொன்னால் செய்த தாமரைப் பூவை பொன்னிலே
கோத்து அணியாக்கி சூடியதை,
                                """"அழல் புரிந்த சுடர்தாமரை
                                ஐதடர்ந்த நூற்பெய்து
                                புனையினைப் பொலிந்த பொல நறுந் தெரியல்
                                பாதுமயிர் இருந்தலை பொலியச் சூடி"" (புறம் - 29 : 5-10)
என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வரிகள் மூலம் சங்க கால மக்களின் செல்வ செழிப்பினை அறியலாம். இன்றைய ஆடவர்கள் குடுமி இல்லாது முடிதிருத்தம் செய்வது போல புறநானூற்றுத் தலைவனும் காணப்பட்டான் என்பதை,
                                """"குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண்தளிர்"" (புறம் - 77 : 1-2)
என்று குறிப்பிடுகிறது. இதனால் ஒப்பனைக்கு கண்ணாடியும் மயிரைக் குறைப்பதற்காக கத்தரியும், மலர்களையும், மாலைகளையும் இட்டு வைப்பதற்குரிய பூஞ்செப்பையும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை புலப்படுத்துகிறது. சங்க காலமக்கள் தோலின் நலத்திற்கும் உடலின் ஒப்பனைக்கும் பலவகை நறுமணப் பொருட்களையும், வண்ண சாந்துகளையும் பயன்படுத்தி உடலை நலமுற அழகுபடப் பேணியதை,
                                """"நின் சாந்து புலர் அகலம் ஆங்க"" (புறம் - 47)
என்ற வரிகள் தலைவனின் சாந்து புலர்ந்த மார்பகம் பற்றியச் செய்தியைக் குறிப்பிடுவதன் மூலம் அறியலாம்.
முடிவுரை
                இவ்வாறு புறநானூற்றில் கலைகள் என்ற கட்டுரையின் மூலமாக புறநானூறு இலக்கியம் ஒரு கவின் கலை இலக்கியமாகவும் அதில் விளைந்த கலைகள் மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்து வாழ்க்கை செம்மையுற நடைப்பெறுவதற்கும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கும் நாகரிகமாக நடந்துக் கொள்வதற்கும் பெரும் துணையாக நின்றது.

பார்வை நூல்கள்
1. கௌமாரீஸ்ரி.எஸ் (ப.ஆ)      - அபிதானசிந்தாமணி,
                                                                சீதை பதிப்பகம், 6/16 தோப்பு வெங்கடாசலம் தெரு,
                                                                திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
                                                                முதற்பதிப்பு - 2004.
2. அங்கயற்கண்ணி        - இசையும் இலக்கியமும்,
                                                                கலையக வெளியீடு,
                                                                சுவாமி பிள்ளைத்தெரு,
                                                                திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
                                                                முதற்பதிப்பு - 1991.
3. பாக்கிய மேரி.எ         -காலந்தோறும் தமிழர் கலைகள்,
                                                                பூவேந்தர் வெளியீடு,
                                                                சென்னை - 4.
                                                                முதற்பதிப்பு -2005.
5. பெருமாள் சாமி.வெ           - சங்க கால தமிழகத்தின் சமூக நிலை -
மார்க்கஸிய நோக்கு,
பாரதி புத்தகாலயம்,
தேனாம் பேட்டை,
                                                                சென்னை - 18.
                                                                முதற்பதிப்பு -2007.
6. திலகவதி              - சங்க கால மகளிர் வாழ்வியல்,
                                                                இறையருள் பதிப்பகம்,
                                                                சக்தி நகர், காட்டூர்,
                                                                திருச்சி - 19.
7. இராசு பவுன் துரை            - தமிழக நாட்டுப்புற கட்டடக்கலை மரபு,
                                                                மெய்யப்பன் பதிப்பகம்.
8. செந்துறை முத்து       - தமிழர் நாகரிகமும் பண்பாடும்,
                                                                முதற்பதிப்பு - 1981.
9. தட்சணாமூர்த்தி.அ            - தமிழர் நாகரிகமும் பண்பாடும்,
                                                                யாழ் வெளியீடு,
                                                                மேற்கு அண்ணாநகர்,
                                                                சென்னை - 600 040.
10. வானமாமலை.நா      - தமிழர் பண்பாடும் தத்துவமும்,
                                                                நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்,
                                                                சென்னை - 600 098.
11. பாலையன்.அ.ப.        - சாரதா பதிப்பகம்,
                                                                ராய பேட்டை,
                                                                சென்னை - 14.
12. பழனிச்சாமி.செ.        - புறநாறூற்றில் தமிழர் பண்பாடு,
                                                                வாணி பதிப்பகம்,
                                                                சென்னை - 402.
                                                                முதற்பதிப்பு - 1989.

1 comment:

  1. மிக மிக நன்றாக இருக்கிறது

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?