நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 12 March 2013

புறநானூற்றுக் கபிலர் பாடல்களில் பண்பாட்டுப் பதிவுகள்



முனைவர் க.முருகேசன்,     தமிழ்த்துறைத்தலைவர்,      கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,கோயம்புத்தூர் - 641 029.

புறநானூற்றுக் கபிலர் பாடல்களில் பண்பாட்டுப் பதிவுகள்

                சங்க காலத்தில் கல்வியும் செல்வமும் பூத்திருந்த காரணத்தால் வருந்தி வந்தவர்க்கீதலும் வருவிருந்து போற்றுதலும், நாள்தோறும் குறைவின்றி நடைபெற்று வந்ததுடன், செழுமையான இலக்கியங்களும் தோன்றின. வினையை உயிரென மதிக்கும் ஆடவர், ஆடவரை உயிரென மதிக்கும்  ஆடவர், ஆடவரை உயிரெனப் போற்றும் மனையுறை மகளிர், காதல் நெஞ்சத்தால் கையற்றுத் தவிக்கும் தலைவியின் துன்பத்தைத் துடைக்க வழிவகுக்கும் தோழி. அன்பு மகளின் இல்வாழ்க்கை இன்பமாக ஏற்றம் பெறவேண்டுமே என எண்ணித் தவிக்கும் தாய் ஆகியோரின் எண்ணக் குவியல்களை மலர்களாக வைத்து நாகரிகம் என்ற நாரால் தொடுத்து அமைக்கப்பட்ட நறுமண மாலைகளாகிய அகப்பொருள் நூல்களும், தலைசிறந்த பண்பாடுகளான அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் சால்புகளையும் வாணிகம், நீதி, போர்முறை, கல்வி போன்ற சமூக இயல்புகளையும் விளக்கமாக உரைக்கும் புறப்பொருள் நூல்களும் தமிழரின் பண்பாட்டுப் பெட்டங்களாகத் திகழ்கின்றன.
                சங்க நூல்கள் பலவற்றிலும் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர்களில் முதலிடம் பெற்றவர் கபிலரின் பாடல்கள், அக்காலத் தமிழகத்தை உண்மையான இயல்புடன் விளக்கிக் கூறுவன.
                                """"விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது                          சொல்லுதல் வல்லோர்ப் பெறின்’’ (குறள்-648)
என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப, எதனைக் கூறும் போதும் அதனைத் திறம்படவும், இனிமையுறவும் நனிநாகரிகமாகக் கூறும் பண்பு கபிலரிடம் அமைந்திருந்தது. பாரியிடம் பழகுவதில் பண்பாடு, பறம்பினை முற்றுகையிட்ட காலத்தில் மூவேந்தர்களை நோக்கிக் கூறிய சொற்களில் நாகரிகம், கடுங்கோ வாழியாதனைப் பாடுமிடத்தும் எஞ்சிக் கூறேன் எனச் சுட்டியுரைக்கும் உண்மை உரை ஆகியவற்றில் தலைசிறந்து நிற்கின்றார் கபிலர். புறநானூற்றில் கபிலர் பாடியனவாக இடம்பெற்றுள்ள இருபத்தெட்டுப் பாடல்களில் பதிவாக்கப் பட்டுள்ள பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்திக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
                தமிழ்க் கவிதைகளில் பெரும்பான்மையானவை கற்றும்போது இன்பம் தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பையும் பெற்றிருப்பதால் அவை கற்போரின் வாழ்வைச் செம்மைப்படுத்துவனவாகத் திகழ்கின்றன.
                கபிலரின் கவிதைகளைப் பொறுத்தமட்டில் உயர்வு நவிற்சிக் கற்பனையை விட உண்மைதான் அவற்றின் உயிர்நாடியாய் நிற்கக் காண்கிறோம். புலவர்கள் கூறும் உண்மை நாம் புற உலகில் காணும் உண்மையைப் போன்றதன்று வாழ்க்கை அல்லது ஒரு பொருளின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறுவது, அவ்வாறு கூறும்போதும் நாகரிகமாகக் கூறுவது கவிதையின் உயர்ந்தநிலை.
பண்பாடு - விளக்கம்
                """"‘கல்சர்’ (ஊரடவரசந) என்ற ஆங்கிலச் சொல் நேர் பொருளைத் தரும் வகையில் பண்பாடு என்ற சொல் இக்காலத்து வழக்கில் வந்தது எனக் கொள்ளலாம். பண்பாடுஎன்ற பெயர்ச்சொல் பண்படுஎன்ற வினைச்சொல்லிருந்து உருவானதாகும். பண்படு என்பது திருத்தம் பெறு, பக்குவப்படுஎனப்பொருள்படும். பண்பாடு என்பதற்கு திருத்தம் பெறுதல், பக்குவப்படுதல் எனப் பொருள் கொள்ளலாம்’’ (முனைவர் செ.பழனிசாமி, புறநானூற்றில் தமிழர் பண்பாடு, பக்.11-12)
                பண்பாடு என்பது ஒருவருக்கொருவர் சமுதாயத்திடமிருந்து பெறும் செல்வாக்காகும். இது சடப்பொருள்கள், சடப்பொருள்கள் அல்லாதன என இருவகைப்படும். வீடுகள், கருவிகள், ஆடைகள், அணிகள் போன்றவை சடப்பொருள்கள். மொழி, தொழில், மனப்போக்கு, கொள்கைகள், பழக்கங்கள், அறநெறி போன்றவை சடப்பொருள்கள் அல்லாதன. மனிதனை விலங்கு இனத்திலிருந்து வேறுபடுத்துவது பண்பாடே.
                """"பண்பாடு என்பது பொருள் பற்றியன. ஆன்மா பற்றியன என இருவகைப்படும். பொருள் பற்றிய பண்பாடு என்பதைக் குறிப்பன கருவிகள், ஆயுதங்கள், அணிகள், ஆடைகள் போன்றவை. ஆன்மா பற்றிய பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள், கொள்கைகள், மனப்பான்மைகள், கலைகள் போன்றவை’’ (முனைவர் செ.பழனிசாமி, புறநானூற்றில் தமிழர் பண்பாடு, பக்.12-13)
                """"பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின் வெளிப்பாட்டையே பண்பாடு என்கிறோம்.. உடலைப் பற்றிய நன்னிலை, மனத்தைப் பற்றிய தூய்மை நிலை, பேச்சின் இனிமை இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும்’’ என்பார் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் (தமிழும் பிறபண்பாடும், பக்.9-10)
                """"நாம் சமுதாயத்தில் ஒரு உறுப்பினராக இருந்து வெளிப்படையாக ஒருவரால் கற்பிக்கப்படாமல் உள்ளார்ந்த நிலையில் பெரும் பகுதியைக் கற்றுக் கொள்ளும் மனித ஆறிதிறனும் செயல்பாடுகளும் ஆகும்’’ என்பது பண்பாட்டுக்குவிளக்கமாக அமைந்துள்ளதாக பக்தவச்சல பாரதி சுட்டிக்காட்டுகின்றார் (சமூக பண்பாட்டு மானிடவியல், (மொ.ப) ப.58)
பண்பாடு வரையறை
                """"பண்பாடு அல்லது நாகரிகன் என்பது (அதன் பரந்த ஒப்பீட்டு நிலையில்) இனவரைவியல் தன்மையில் நோக்கும்போது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறனைகளும் பழக்கவழங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்’’ என்று எட்வர்டு டைலர் (1871) குறிப்பிடுவதாக பக்தவச்சல பாரதி தெளிவாக்குகின்றார் (சமூக பண்பாட்டு மானிடவியல், ப.60)
                """"பண்பாடென்பது ஓர் ஒருங்கிணைந்த முழுமை. இதில் சமூகத்தின் பலதரப்பட்ட குழுக்களின் மரபுவழிப்பட்ட  கருவிகள். நுகர்வோர் பொருட்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கதைகள், கருத்துக்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. மிக எளிய அல்லது தொன்மையான பண்பாடாக இருந்தாலும் சரி, மிகவும் வளர்ச்சி பெற்ற கூட்டுப்(ஊடிஅயீடநஒ) பண்பாடாக இருந்தாலும் சரி இரண்டிலும் நாம் எதிர்கொள்ளும் வழிமுறைகளில் ஒரு பகுதி பொரும்களாகவும், மறுபகுதி மனிதர்களாகவும், இன்னொரு பகுதி ஆன்மீகமாகவும் உள்ளன. இவற்றைக் கொண்டே மனிதன் தனக்கு ஏற்படும் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு காண்கிறேன்’’(பக்தவச்சல பாரதி, சமூக பண்பாட்டு மானிடவியல், (மொ.ப.) ப.64) என்று பிரானிஸ்லா மலினோவ்ஸ்கி (1994) குறிப்பிடுகின்றார்.
                """"பண்பாடானது, அது என்ன என்பதை அறிவதற்கான தர நிர்ணயத்தையும், அது என்னவாக இருக்க முடியும் என்பதற்கான தர நிர்ணயத்தையும், ஒருவர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையறியும் தர நிர்ணத்தையும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்பதற்கான தர நிர்ணயத்தையும் கொண்டதாகும்’’என்று வார்டு எச்.குட்.இனஃப் (1963) குறிப்பிடுவதாகக் காட்டப்பட்டுள்ள குறிப்பு இங்கு நோக்கத்தக்கது.
                """"பண்பாடு என்பது... கற்கப்படுவது, கதகவமைவது, குறியீட்டு நடத்தை முறையாக அமைவது. இவையாவும் முழுமைபெற்ற மொழியாலும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாலும், பலதரப்பட்ட திறன்களாலும் உள்ளடக்கிய சமூகங்களுக்கிடையே பரிமாற்ற முறைகளை ஒழுங்கமைத்துச் செயல்படுவதாகும்’’ (பக்தவச்சல பாரதி, சமூக பண்பாட்டு மானிடவியல், ப.82) என்று ஆடம் கூப்பர் (1994) குறிப்பிடுகிறார்.
                """"எட்வர்ட் பர்னட் டைலர்’’ 1871-ல் வெளியிட்ட தொன்மைப் பண்பாடுஎன்னும் நூலில் மேற்கூறிய வரையறையைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். """"ஊரடவரசந டிச ஊiஎடைணையவiடிn. கூயமநn in வைள றனைந நவாnடிபசயயீhiஉ ளநnஉந, ளை வாயவ உடிஅயீடநஒ றாடிடந றாih inஉடரனநள மnடிறடநனபந, நெடகை, யசவ, அடிசயடள, டயற, உரளவடிஅ, யனே யலே டிவாநச உடியீயbடைவைநைள யனே hbவைள யஉளூரசைநன லெ அயn யள யஅ அநஅநெச டிக ளடிஉவைல’’ (எடுத்தாண்ட மேற்கோள் : பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், ப.152) என்னும் டைலரின் இவ்வரையறையே இன்று மிகவும் புகழ் பெற்றதாகவும், பெருவழக்காகவும், அனைவராலும் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. இத்தகைய பண்பாட்டுத்தளத்தில் நின்று கபிலரின் பாடல்களை நோக்க வேண்டியது அவசியமாகின்றது.
கபிலரும் கையறுநிலைப் பாடல்களும்
                ஒன்பான்     சுவைகளில்    மற்ற சுவைகளைக் காட்டிலும் படிப்போர் இதயத்தைத்
தொட்டு, உள்ளத்தை உருக்கும் வகையில் துன்பியற் கவிதைகளே சிறந்து நிற்கின்றன. உலகப் பெருங்கவிஞரான செகப்பிரியர் இயற்றிய நாடகங்களில் கூட இன்பியல் நாடகங்களைவிடத் துன்பியல் நாடகங்களே வெற்றியைத் தேடித் தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
                சங்க நூல்களில் துன்பியல் பற்றிக்கூறும் கவிதைகள் கையறுநிலைப் பாடல்கள் என வழங்கப்படுகின்றன. தலைமகன் இறப்ப அவன் பெருமை சொல்லி வருந்தி நிற்றலாகிய கையறுநிலையில் கபிலர் பாடிய பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மூவேந்தரோடு பொருத போரில் பாரி மடிந்த பின்னர்ப் பறம்பையை விடுத்து வெளியேறிய நிலையில் கபிலர் பாடிய கையறுநிலைப் பாடல்கள் பத்து (பாடல் எண்கள் : 112-120, 236). அவலச் சுவையை மையக் கருப்பொருளாகக் கொண்டு கபிலர் பாடிய பாடல்களில் அவர் உள்ளத்தில் பாரியை வைத்துப் போற்றிய அன்பின் மிளிர்வும், நட்பின் மேன்மையும் புலப்படுகின்றன.
                வஞ்சனைக்கு இடம் கொடாமல் போர் செய்து வெற்றி பெறுதல் இயலாதொன்பதால், மூவேந்தரும் வஞ்சனையால் பாரியைக் கொன்றனர். அன்று முழுநிலவு ஒளி பரப்பிய நாள்; அடுத்து வந்தது ஒரு முழுநிலா நாள். அற்றைத் திங்களை நினைவிலே நிறுத்து, இற்றைத் திங்களைக் காணுகின்றனர். தந்தையை இழந்த பாரி மகளிர் செயலற்றுப் போன அவர்களின் அவலத்தை, அவர்களின் கூற்றாகவே பாடுகிறார் கபிலர்.
                                """"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்                                   எந்தையும் உடையேம்; எம் குன்றம் பிறர் கொளார்;                                                                                 இற்றைத் திங்கள்  இவ் வெண் நிலவின்                                  வென்று ஏறி முரசின் வேந்தர், எம்                                          குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!’’ (புறம் - 112)
என்ற வரிகளில் மூவேந்தர்கள் முற்றுகையிட்டிருந்த அந்தத் திங்களின் அந்த வெண்ணிலவின் போது நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்; எங்கள் மலையையும் பிறர் கொள்ளவில்லை. இற்றைத் திங்களின் இந்த வெண்ணிலவின் போதோ, வெற்றி கொண்டு ஒலிக்கும் முரசினையுடைய வேந்தர்கள் எங்கள் மலையையும் கொண்டார்கள்; நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்துவிட்டோம் என்று கையற்றுப் புலம்புவதைக் கபிலர் பதிவுசெய்துள்ளார்.
                திங்கள் என்பதைச் சந்திரனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்; நிலவு என்பது நிலாவெளிச்சம். தனி ஒரு வீரனை மூவேந்தர்களும் ஒன்றி நின்று வஞ்சித்துக் கொன்றமையின் வென்றெறி முரசின் வேந்தர்என்றது அங்கதம் சான்ற இகழ்ச்சிக் குறிப்பு. எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் என்பதன் நிரல் மாறி குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே என்றமைந்தது அவலத்துக்குக் காரணம் மலை இழப்பன்று, தாதை இழப்பே என்பதைக் குறிக்கவே.
                மதியின் ஒளி அன்று இப்படித்தான்; இன்றும் அந்த மதியின் ஒளி அப்படித்தான். இயற்கையிலே ஒரு சில மாற்றம் கூட இல்லை. ஆனால், நேற்றுவரை அரசிளங்குமரிகள் இன்று, போக்கிடம் இல்லாக் கன்னியர்கள். இந்த ஏறுமாறு கருதியாவது இயற்கை தனி இயல்பிலே மாற்றம் காட்டக்கூடாதா என எண்ணத் தோன்றுகின்றது. வீரமும் சாரமும் நிறைந்த தந்தையை இழந்து நிற்கும் கன்னிப் பெண்களின்  உணர்ச்சிக் கொந்தளிப்பை அவலக் களஞ்சியமாகச் சித்தரிக்கும் இப்பாடல் உலக இலக்கிய அரங்குக்கு உரியது. தற்செயலாகப் பாரிமகளிர் உரைத்ததைக் கேட்ட கபிலர் தாமே அக்கன்னியராகி வரைந்தன என்னும் ம.ரா.போ.குருசாமியின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது (கபிலம், ப-493).
                பகைவர்க்கு இனிமை இல்லாதவன், மற்றோர்க்கு இனிமை உடையவனுமாகிய பாரியின் முன்னை வளத்தை நினைத்துப் பார்த்துப் பாடுகிறார் கபிலர். பாரி இல்லாமையால் இனி அந்த வளமெல்லாம் இல்லை என்றுதான் சொல்ல நினைத்துச் சொல்லாமல் நின்ற செய்தியை,
                                """"ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்                                       பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்                                       வாக்க உக்க தேக் கட் தேறல்                                                 கல் அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,                                                                                    அண்ணல் யானை, வேந்தர்க்கு                                       இன்னான் ஆகிய இனியோன் குன்றே’’ (புறம்.-115)
என்ற வரிகள் உணர்த்துகின்றன. ஒரு பக்கம், அருவி முழங்கு ஒழுகும்; இன்னொரு பக்கம், பாணர்களின் மொந்தை நிரம்புவதற்காக வார்க்கவேண்டி ஊற்றிய இனிய கள்ளின் தேறல் கல்லை உருட்டி ஒழுகும் எங்கே? பல்வேற்படையுடனும் தலைமை மிக்க யானைப் படையுடனும் எதிர்க்க நினைக்கும் வேந்தர்களுக்குக் கொடியவனாகிய இனியவன் குன்றிலே, அந்தப் பெருமையெல்லாம் கழிந்ததே, மன் என்ற சொல் கழிந்தது என்னும் கழிவிரக்கப் பொருள் உடையது. அவன் இல்லை; ஆதலால் கல்லை உருட்டி ஒழுகும் கள்ளின் வெள்ளம் இனி இல்லை என்ற கருத்தொடு ஒரு சார் அருவி ஆர்த்து ஒழுகுதலையும் இணைத்ததால் இனி அதுவும் இல்லை என்னும் பொருளில் கபிலர் பாடிய பாடல் மக்களை ஆளும் தலைவனாகிய மன்னன் இன்சொல் உடையவனாகவும், பண்பாட்டின் சிகரமாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகின்றார்.
பறம்பின் வளம்பாடிப் புலம்புதல்                                     பாரியின்     மறைவுக்குப்   பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுங்கால் கபிலர் உள்ளத்தில் நிலைத்து நின்றது பறம்பு மலையின் வளம்தான். தாம் வாழ்ந்த காலத்து உணவும் உறைவிடமும் தந்து பாதுகாத்த பறம்பின் சிறப்பினைத் தமது கையறுநிலைப் பாடல் ஒவ்வொன்றிலும் அவர் குறிப்பிடுகின்றார்.
                """"பெரும் பெயர்ப் பறம்பே மது நிறைந்த குடங்களை வாய் திறந்து வழங்கியும் ஆட்டுக் கடாக்களை அறுத்து அடப்பட்ட கொழுந்துவை ஊன் கலந்த உணவை நல்கியும் எம்மைப் பாதுகாத்தாய். வேண்டிய பொருள்களையெல்லாம் விரும்பியபடியே தந்து உதவினாய் நீ வாழ்க.
                ஒரு   புறத்தில்   அருவிகளின்   நீர்  ஆர்ப்பொலியோடு பாய்ந்தொழுகும், மறுபுறம்
பாணர்களுக்கு வார்க்கப்பட்ட பூப்பெய்தட்ட நாட்படு தேறல் கல்லளைத்துப் பாயும்! சிறிய பழங்கள் எங்கும் காட்சி நல்கும். இத்தகைய பெரு வளங்களைக் கொண்ட அரும்புகழ்ப் பறம்பே, நீ வாழ்க!’’ என்றவாறு பாரி வாழ்ந்த காலத்துச் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்த பறம்பு, பகைவரின் படையெடுப்பால் எத்தகைய சீர்கேட்டை அடையுமோ, என எண்ணியபோது கபிலரின் இதயம் பெருந்துயர் உற்றதைப் பாடல் உணர்த்துகின்றது.
                சனி என்னும் கோள் புகையினும், வானத்தில் வற்கடத்தைக் காட்டும் அறிகுறியான புகைக்கொடி (வால் நட்சத்திரம்) தோன்றினும், வெள்ளி என்னும் விண்மீன் தென்திசைப் படரினும் பறம்புநாடு பஞ்சத்தால் வாடுவதில்லை. வயலகங்கள் பசுமை குன்றுவதில்லை. செங்கோல் செம்மையுற நடப்பதால் நிறைந்து, அமைதியின் உருவமாய் அன்பின் நிலைக்களமாய் விளங்கும் இந்நாடு இனிமேல் எத்தகைய அலைக்கழிவால் அல்லல் உறுமோ? என எண்ணிக் கண்ணீர் வடித்தார்’.
                எட்டாம் நாள் தோன்றும் பிறைத்திங்கள் போன்று வளைந்த கரையினையுடைய நீர் நிறைந்த குளம் உடைவதைப் போன்று இவ்வள்ளியானது பறம்புமலை நாடு சிதையுங் கொல்லோ! நிழலில்லாத நீண்ட பாலை வழியில் தன்னிழல் விரித்துத் தழைத்து நிற்கும் குளிர்மரம் போலப் பாணர்க்குப் பற்றுக் கோடாய், புலவர்க்குப் புகலிடமாய் நின்று பொன்னும் பொருளும் அளித்துப் போற்றிய பாரியின் வளமைமிக்க நாடு பகைவரால் அழகிழந்து வாடுங்கொல்லோ! புதுப்புது வினைபொருளாகிய வருவாய்களை உடையது; பெய்யும் வானம் பொய்யாது பொழியும் மாரி நீரினால் பசுமை வளம் குன்றாத புன்செய் நிலங்களில் தினைப்பயிர்களின் புறத்தே, பாசிலை முல்லை மலர்கள் மணங்கமழ மலரப் பெற்றுள்ள நாடு மூவேந்தரின் முற்றுகையால் நந்துங்கொல்லோ! (பாடல் எண் : 117).
                இவ்வாறு எண்ணி எண்ணி நெஞ்சுருகிப் பாடிய கபிலரது பாடல்கள், கற்பார் உள்ளத்தைக் கனிவிக்கும் தன்மையன.
                                """"கார்ப்பெயல் தலைஇய காண்பின் காலை                                 களிற்றுமுக வரியிற் றெருழ்வீ பூப்பச்                                       செம்புற் றீயலின் இன்னளைப் புளித்து                                         மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லோ                                 நிழலில் நீளிடைத் தளிமரம் போலப்                                        பணைகெழு வேந்தரை இறந்தும்                                           இரவலர்க் கீயும் வள்ளியோன் நாடே’’(புறம் - 119)
என அவர் கூறிய சொற்கள் பொருள் நயம் உடையவை. பாரியைப் பற்றி இரங்கியதைக் காட்டிலும், தன் கண்முன் உயிருடன் நிற்கும் பாரி மகளிரின் இரங்கத்தக்க நிலை அவரது அன்புள்ளத்தை வாட்டியிருக்க வேண்டும். அந்நினைவுதான் ஆய்தொடி அரிவையர் தந்தை நாடுஎனவும் இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தைஎனவும் அவரைப் பாட வைத்தது.
                புலவர்களின் புகலிடமாய், தமிழ்ப் பயிர் வளர்க்கும் சான்றோர்க்குத் தண்ணிழல் தந்து கோடையிலே இளைப்பாற்றும் குளிர் மரமாய் விளங்கிய பாரியின்மீது படை எடுத்துவர எவரும் நினையார். அவனை அழிக்கவும் முனையார். அவ்வாறிருந்தும் பறன்பை முற்றுகை இட்ட மூவேந்தரின் வன்செயல் கண்டிக்கத்தக்கது. அருமை அறியாதவர் என்பதை,
                                """"பெரிய நறவிற் கூர்வேற் பாரியது                                       அருமை யறியார் போரெதிர்ந்து வந்த                                         வலம்படு தானை வேந்தர்’’ (புறம் - 116)
என நயம்பட அவர் கூறும் திறம் அறிந்து இன்புறத்தக்தது. பாரி மகளிரை அழைத்துச் சென்று எளிய அந்தணர் ஒருவரின் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர்கள் குப்பை மேட்டின்மேல் ஏறி நின்று உமணர்களின் உப்பு வண்டியை எண்ணிய காட்சி அவர் இதயத்தை உருக்கியது.
                                """"ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்                                 புல்முக கவலைய முகன்மிடை வேலிப்                                பஞ்சி மூன்றில் சிற்றில் ஆங்கண்                                           பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்                                          ஈத்தலைக் குப்பைஏ றிஉமணர்                                       உப்போய் ஒழுகை எண்ணுப மாதோ                                        நோகோ யானே தேய்கமா காலை’’ (புறம் - 116)
என்னும் கபிலரின் பாட்டு, கையறுநிலையின் உச்சநிலையாக அமைவது.
                எழில் நிறைந்த பாரி மகளிரின் கண்கள் இன்று ஒளியிழந்து வாடினவே என்பார். ஏந்தெழில் மழைக்கண்என்றும், தந்தையின் அரண்மனையில் மகிழ்வோடு வாழ்ந்த காலத்து எப்போதும் புன்னகையுடன் இருந்தவர்கள் இப்போது பொலிவிழந்த முகத்தினர் ஆயினர் என்பதை இன்னகை மகளிர்என்றும் சுட்டுகின்றார். பகைவர் நெருங்க அஞ்சும் அரணால் சூழப்பட்ட அரண்மனையில் வாழ்ந்தவர்கள் இன்று கால் வருந்தத் தைக்கும் முட்கள் நிறைந்த புதர்வேலி சூழ்ந்த பகுதியில் வாழ நேர்ந்ததே என்பதைச் சுட்ட புல்முக கவலைய முள்மிடைவேலிஎன்ற சொற்றொடரைக் கபிலர் பயன்படுத்துகின்றார்.
                வாழ்க்கை நிலையற்றது. அதிலும் குடை நிழலிருந்து குஞ்சரம் ஊரும் அரச வாழ்க்கை வானிடு வில்லின் வரவு போல்மறையத்தக்கது என்ற வேருண்மையை உலகிற்கு உணர்த்துவார் போன்று வானுற ஓங்கிய மதிலின் மீது அலங்கத்தில் ஏறி நின்று பெருமிதத்தோடு பகைவரின் படை வரிசையில் நிற்கும் குதிரைகளை எண்ணியவர்கள், இன்று தரையில் குவிந்து கிடக்கும் தாழ்ந்த குப்பைமேட்டின் மேல் ஏறி நின்று கவரை தோய்ந்த நெஞ்சினராய் உமணரின் உப்பு வண்டிகளை எண்ண நேரிட்டதைச் சுட்டிக் காட்டினார்.
                இக்காட்சியைக் காணநேர்ந்த தான் உயிர் விட்டிருக்க வேண்டும். அவ்வாறு உயிர் துறக்க இயலாத நிலையில் தன்னை நிறுத்திய பாரியின் வேண்டுகோள் எத்துணைக் கொடுமையானது என்பதைச் சுட்டுவார் போன்று நோகோ யானே, தேய்கமா காலைஎன்றார். இவ்வாறு கபிலரின் கையறுநிலைப் பாடல்களில் வரும் சொற்கள் பலவும் ஆழ்ந்த அவலத்தின் அடிநாதமாய் அமைவதாக ம.ரா.போ.குருசாமி குறிப்பிட்டுக் காட்டும் விளக்கம் கையறுநிலைப் பாடற்கருத்திற்கு மேலும் அரண்சேர்க்கின்றது.
கொடையைப் போற்றி பண்பாட்டை உணர்த்துதல்
                சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன், கபிலரின் கையைப் பற்றிக் கொண்டு, தன் கையைப் போலப் புலவர் கை இல்லாமல், பூப்போல மென்மையாக இருக்கிறதே என்று கேட்டிருக்கிறான். அதற்குக் கபிலர் விடைசொல்லும் பாங்கில்,
                                """"கடுங் கண்ண கொல் களிற்றால்                                         காப்பு உடைய எழு முருக்கி                                               பொன் இயல் புனை தோட்டியால்                                           முன்பு துரந்து, சமம் தாங்கவும்,                                                                                                       பார் உடைத்த குண்டு அகழி                                               நீர் அழுவ நிவப்புக் குறித்து,                                                                                                                              நிமிர் பரிய மா தாங்கவும்...                                               ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச்                                          சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும்...                               ------------------------------                                    ------------------------------                                    இரு நிலத்து அன்ன நோன்மை,                                                                                                       செரு மிகு சே எய்! நிற் பாடுநர் கையே’’ (புறம் - 14)
என்ற பாடல் அமைந்துள்ளது. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி மெல்லியவாமால் நும் கைஎனக் கபிலர் பாடிய பாடாண்திணையில் அமைந்தது இப்பாடல்.
                பகைவரின் மதிற்கதவின் உட்புறத்தே குறுக்காக இடப்பட்டிருக்கும் கணைய மரத்தை முறிப்பதற்கு, இரும்பால் அழகாகச் செய்யப்பட்ட அங்குசத்தால் வன்கண்மை கொண்ட கொலை யானையை முன் நோக்கிச் செலுத்துபவன் நீ; அப்படி முன்னேற்றப்படும் யானைகளின் போர்ச்செயலின் வேகத்தை வேண்டிய அளவில் தடுத்து நிறுத்தவும் வேண்டும். இதுவும் உன் யானைப்போர்த்திறமாகும். நிலத்தை அகழ்ந்து ஆழமாகத் தோண்டி வைக்கப்பட்டுள்ள அகழியில் உள்ள நீர் நிறுத்த ஆழத்தால் மிக்கது; விரைந்து செல்லுதலை இயல்பாகவுடைய குதிரையின் வேகத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அம்பறாத் தூணி பொருந்தியுள்ள முதுகு உடையவளாய்த் தேர்மேல் இருந்து பரிசிலர்களுக்குப் பெறுவதற்கு அரிய அணிகலன்களை வழங்க வேண்டும். இந்தச் செயல்களால், வலிமையாகி உன் முழந்தாள் வரையில் நீண்டு உன் கைகள் இருக்கின்றன. புலால் நாற்றத்தையுடைய செம்மையான தசைகளைப் பூ மணம் கொண்ட புகை உண்டாகுமாறு கொளுத்திப் பக்குவப்படுத்திய ஊனையும் துவையலையும் கறியையும் சோற்றையும் உண்டு வரும் செயலைத்தவிர, வேறு முரட்டுத் தனமான செயலை எண் கைகள் அறியாதவை.
                யானையை அஞ்குசங் கொண்டு அடக்குதல், குதிரையை விரைந்து ஓடாமல் தடுத்தல், இடைவிடாமல் பரிசிலர்க்கு வழங்குதல் போன்ற செயல்களால் சேரமானின் கைகள் திண்ணென்று உள்ளன. வளமான உணவை உண்பது எடுத்தெடுப்பது உண்பது தவிர வேறு (முரட்டுச்) செயல் பரிசிலர்க்கு இல்லையாதலால் மென்மையாக உள்ளன. நல்லவர், அவர்களுக்குச் சேரலாதன் பொறுத்தற்கரிய துன்பம் செய்யும் என்று குறிப்பிட்டது அவன் மார்பு தரும் கவர்ச்சியை அவர்களால் தவிர்க்க முடியவில்லை என்று குறித்தவாறு பாடுகின்றார் கபிலர்.
விறலி ஆற்றுப்படையும் கொடையும்                                 பறம்பு    மலையில் மழை பொழிந்தாலும் பொழியாவிட்டாலும், வளம் மிகுந்தாலும்
குறைந்தாலும், பாரியை நாடிச் சென்று பாடினால் பரிசில் பெறுதல் உறுதி என்று விறலியை ஆற்றுப்படுத்துவதாக அமைந்த பாடல் நயமானது:
                                """"சேயிழை பெறுகுவை"" வான் நுதல் விறலி!                                   நடவுவாய்க் கலித்த மா இதழ்க் குவளை                                    வண்டுபடு புது மலர்த் தண் சிதர் கலாவப்                                    பெய்யினும் பெய்யாதாயினும், அருவி                                          கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக                                   மால்புடை நெடுவரைக் கோடுதோறு இழிதரும்                               நீரினம் இனிய சாயற்                                                     பாரி வேள்பால் பாடினை செலினே’’ (புறம் - 105)
என்ற பாடலில் ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலியே! பெரிய இடங்கொண்ட சுனையில் கரிய இதழ் கொண்ட குவளை தழைத்திருக்கும்; அந்தக் குவளையில் வண்டு மொய்க்கின்ற புதுமலர்கள் பூத்திருக்கும் ; அந்த மலர் இதழ்கள் கலங்கும்படியாக மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் அருவிகள் உண்டு. அந்த அருவிகள் கொள்ளுக்காக உழப்பட்ட அகன்ற நிலத்தின் பக்கத்திலே வாய்க்காலாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த அருவிகள் கண் ஏணியுடைய நெடிய மலைச் சிகரந்தோறும் விழுந்து கொண்டிருக்கும். மழை பெய்யினும் பெய்யாவிடினும் அருவிகளின் வாய்க்கால்கள் பாய்ந்து கொள்ளுப் பயிர் விளையக்கூடிய வளம் உடையது பாரியின் பறம்புமலை, அந்த மலைத் தலைவனாகிய பாரி அந்த மலைவீழருவி நீரினை விட மிக இனிய மென்னை மிக்கவன். அவனைப் பாடிச் செல்வாயாயின் சிவந்த மணிகள் பதித்த அணிகளைப் பரிசிலாகப் பெறுவாய் என்று கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் பாரியின் கொடைநலச் சிறப்பும், பாரியின் பெருமையைப் புகழ்ந்து பாடும் கபிலரின் கற்பனைத் திறத்தையும் ஒருங்கே கணித்தறிய முடிகின்றது.
எவர்க்கும் அவன் வள்ளல்
                அறிவில்லாதவர்களும் அற்பர்களும் கூடப் பாரியை நாடிச்சென்றால், அவர்களுக்கும் உதவும் வளமையுடையவன் என்பதைக் கபிலர் புலப்படுத்திக் காட்டி பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்தும் பாடல்:
                                """"நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்                                  புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை                                      கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,                                                                                                                மடலர் மெல்லியர் செல்லினும்,                                                                                                                     கடவன் பாரி கை வண்மையே’’ (புறம் - 106)
என்பதாகும். சூடப்படும் மலர்களிலே நல்லனவும் உண்டு. தீயனவும் உண்டு. அந்த இரு வகையிலும் சேரமால் குவிந்த கொத்துக்கள் உடையதாய்ப் புல்லிய இலைகளை உடையது எருக்கம்பூ. அந்த எருக்கம் பூவைக்கூட ஒருவன் உடையவனாய்ச் சூட்டவானாயின் தெய்வங்கள் நாம் இதனை விரும்பமாட்டோம்என்று சொல்லா. அதுபோல, அறிவற்றவுரும் ஒழுக்கத்தால் மெல்லியராகிய கயவரும் சென்று எது சொன்னாலும், ‘அவர் சொல்லை விரும்பேன்என்று பாரி சொல்லமாட்டான். அவர்களுக்கும் தன் வள்ளன்மையால் வழங்குவதைக் கடமையாகக் கொண்டவன் எனச் சுட்டுமிடத்தில் மாரியன்ன வன்கை உடையவனைப் பாடுவதன் மூலமாக அவனையும், அவன் நாட்டு மக்களின் மேம்பட்ட வாழ்க்கையும் குறிப்பதாகின்றது.
                                """"குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி                                 ஆரம் ஆதலின், அம் புகை அயலாது                                        சாரல் வேங்கைப் பூஞ்சிலைத் தவழும்                                         பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு                                          பாரியும், பரிசிலர் இரப்பின்,                                                                                                                                 வாரேன் என்னான், அவர் வரையன்னே’’ (புறம் - 108)
என்ற வரிகளில் குறத்தி எரித்த வறண்ட கடைக்கொள்ளி சந்தன மரம்; ஆதலால் அதன் அழகிய புகை, அதற்கு அருகிலுள்ள சாலில் வளர்ந்துள்ள வேங்கை மரத்தின் பூங்கொம்பிலே பரவித் தவழும்; அத்தகைய பறம்பு மலை பாடுவார்க்கு  உரியது. பறம்பு மலை மட்டுமா? பரிசிலர் தமக்கு வேண்டும் என இரப்பாராயின், அறநெறியினை மேற்கொண்ட பாரியும் அவர் விருப்பப்படி வரமாட்டேன் என்று சொல்லமாட்டேன்; அவர்களின் சொல் எல்லையிலேயே நிற்பான் என்னும் செய்தி சுட்டப்பட்டுள்ளது.
                குறத்தி எரிப்பது கூடச் சந்தனக் கட்டைதான், சந்தனக் கட்டையே எரிக்கப்படுவது என்பதால் வேறு மரம் இல்லை என்பது கூறியவாறு, இப்புகை தவிர பகைவர் கடும் புகை இல்லை என்பதும் சுட்டப்பட்டது. அடு தீ யல்லது சுடு தீ அறியாதது பறம்பு மலை; பாரியின் வீரம் சுட்டியது இந்தக் காட்சி என்ற திறனாய்வாளரின் கருத்து மேற்கண்ட பாடற்கருத்திற்கு மேலும் அரண்சேர்க்கின்றது.
காலமறிதலும் காலம் தாழ்த்தாமையும்                               விறலியர் பின்வர ஆடினர் பாடினிர் செலின் நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்என்று கபிலர் கூறியதை வென்றெறி முரசங்கொண்ட வேந்தர்கள் பின்பற்றவில்லை. ஆனால் கலைஞர்கள் பாடிச் சென்று பறம்பு நாட்டின் முந்நூறு ஊர்களையும் பரிசிலாகப் பெற்றுவிட்டார்கள். பறம்பு மலையோடு நானும் பாரியும்தான் மிச்சம் - தாமதம் பண்ணிவிட்டீர்களே என இரங்குவது போலப் பாரியின் மேன்மையை,
                                """"கடந்து அடு தானை மூவிரும் கூடி                                      உடன்றனிர் ஆயினும், பறன்பு கொளற்கு அரிதே;                                                                              முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு;                                                                                        முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;                                                                                                                 யாமும் பாரியும் உளமே;                                                                                                                    குன்றும் உண்டு - நீர் பாடினிர் செலினே’’ (புறம் - 110)
என்ற பாடலில் கபிலர் பதிவுசெய்கின்றார். திணையும் துறையும் அவை மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது. வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையினையுடைய நீங்கள் மூவரும் கூடிப் போர் செய்தாலும் பறன்பு கொள்ளுதற்கு அரியது, குளிர்ச்சிமிக்க நல்ல பறம்பு நாடு முந்நூறு ஊர்களை உடையது; அந்த முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றுக் கொண்டனர். நீங்கள் பாடினராய் வந்தால், உங்களுக்கு நாமும் பாரியும் உள்ளோம்; மேலும் பறன்பு மலையும் இருக்கிறது. எஞ்சியிருக்கின்ற எம்மையும் பாரியையும் பறம்பு மலையும் விரும்புவீர்களாயின் ஆடினிர் பாடினிர் செல்லின் பயன் பெறுவீர். வஞ்சனை வழிகள் எதனையும் கையாளாமல், கொல்லுதல் வல்ல படைகளைப் பெற்றிருந்தாலும் முடியுடை வேந்தர் மூவரும் சேர்ந்து போரிட்டாலும் போர் வெற்றியோ அதன் பயனாகப் பறம்பு மலையோ அடைதல் இயலாது என்று கபிலர் பாடுமிடத்தில் பரிசில் பெறுவதும், கொடுப்பதுமான பண்பாட்டு விழுமியங்கள் பளிச்சிடுகின்றன.
                பாரி இல்லாத நாட்டின் அழிவைக் கற்பனையிலும் கபிலரால் தாங்க இயலவில்லை. அவன் வாழ்ந்தபோது நிலவிய வளத்தை நினைக்கிறார்; ஆற்றாமை மேலும் மேலும் பெருகுகிறது. அதைப் பாடலாக வடிகின்றார்:
                                """"வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்                                     கார்ப் பெயல் கலித்த பெரம் பாட்டு ஈரத்து,                                                                                           பூமி மயங்கப் பல உழுது, வித்தி,                                                                                                      பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக்                                         களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,                                                                                                மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி,                                                                                           கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து                                     கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,                                                                                   ------------------------------                                                                                        ஒரு கழல் கம்பலை கண்ட                                                செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே’’ (புறம் - 120)
என்ற வரிகளில், கருநிறம் கொண்டு நிரம்பிய கூந்தல் உடைய மகளிரின் தந்தை அசைகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் உயர்ந்த சிகரங்களுடைய நாட்டின் வீரம் சிறந்தவன் - புலவர்க்ள் எவ்வளவு பாடினாலும் புகழ் ஓயாத நற்பண்புகளை உடையவன். பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுகின்றனை கண்டு, அவர்பின் தொடர்வதற்கு வெட்கப்பட்டு அவர்களின் வீரக்கழலின் ஆரவாரத்தைக் கேட்டு நிற்கும் வீரம் - போரினை விரும்புகின்ற முருகனை ஒத்தவன் பெரு வெற்றிக்கு உரிமையாளனாகிய  பாரியின் நாடு கெட்டு அழிந்துவிடுமோ? வெம்மை முதிர்ந்த வேங்கை மரம் நிறைந்த மேட்டு நிலத்திலே கார் காலத்து மழையால் பெரிதும் பக்குவப்பட்ட ஈரத்தின் புழுதி கலக்கும்படி பல சால் பட உழுது, விதைப்பார்கள்; அப்படி விதைக்க வயலிலே பயிர் முளைத்தபோது தாளியடிப்பார்கள். பலவாகக் கிளைத்த பக்குவத்தில் களையை அடியிலிருந்து களைவார்கள்; களைகள் களையப்பட்டதால் பயிரின் இலைகள் தழைத்துப் பெருகியிருக்கும்.
                அப்போது அந்தப் பயிர்களைப் பார்த்தால் கரிய தண்டுகள் நீண்டு எல்லாப் பயிர்களும் ஒருங்கே சூல்விரிந்துள்ள அந்தக் காட்சியைப் பார்த்தால் அண்மையில் முட்டையிட்ட மென்மையான பெண்மயில் போலத் தெரியும். குதிரின் அடிப்பகுதியிரும் மேற்பகுதியிலும் இடைவிடாமல் புதிய வரகு காய்த்துச் சீரிதாக விளைந்திருக்கும். புது வரகு பக்குவப்பட்டிருக்க, தினை கொய்ப்படும் பருவமாகஇ எள்ளின் இளங்காய் கரிய நிறமுடையதாக, அவரையின் செழுமையான கொடியிலே வெள்ளை நிறக் காய் அறுக்கப்படும் பக்குவத்தில் இருக்கப் பல வகையிலும் விளைச்சல் வளமாக இருக்கும். நிலத்தில் புதைக்கப்பட்டு முற்றிய மதுவாகிய தேறலைப் புல்லால் வேயப்பட்ட சிறிய மனைகள் எல்லாவற்றிலும் குடிக்கக் கொடுப்பார்கள். நறுமணம் கொண்ட நெய்யிலே கடலை துள்ளும்படி பொரித்து, அதனோடு சோற்றைச் சமைப்பாள் மனையாட்டி. நெய்க் கடலையுடன் சமைத்த சோற்றை வழங்கியபின் பாத்திரங்களைக் கழுவவேண்டிய வேலை பெருந்தோள் உடைய அந்த மனையாட்டிக்கு இல்லை. வந்து கொண்டேயிருக்கும் புதியவர்களை உடையது அந்த வீடு. கழுவிக் கவிழ்க்க நேரம் இல்லாமல் தொடர்ந்து சமைக்க வேண்டும். இந்தக் காட்சியெல்லாம் பாரியின் பறம்பு நாட்டிலே முன்பு காண முடிந்தது. இனி அப்படி இல்லாமல் பறம்பு நாடு கெடும்போலும்.
                விசைப்பச் சோறு அட்டு மேவர; நெய்யிலே கடலை துள்ளச் சோறு சமைத்த, அந்தச் சமைத்தல் வேலையிலே விருப்பம் கொண்டு, எத்துணைப் பேர் அடுக்கடுக்காக வந்தாலும் சமைத்துப் பார்ப்பதில் அந்தப் பெருந்தோள் மனையாட்டி விருப்பம் உடையவளாகவே இருப்பாள். நாட்டில் வளம் இருக்கிறது. வருகிறவர்களுக்குக் கள்ளும் நெய்யிலே பொரித்த உலையோடு சோறும் படைக்கவேண்டியதுதானே! என்று திறனாய்வாளர் குறிப்பிடுகின்றார்.
காரியின் பெருமை
                மலையமான் திருமுடிக்காரி வீரத்தால் சிறந்தவன்; வள்ளன்மையால் மிக்கவன்; இல்லற மாண்பிலும் சீரியோன் என்பதைக் கூறும் பாடல்:
                                """"கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார்,                                                                                        கழல் புணை திருந்து அடிக்காரி! நின்நாடே                                  அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;                                                                                                            வீயாத் திருவின் விறல் கெழுதானை                                      மூவருள் ஒருவன், ‘துப்பு ஆகியர்என,                                                                                       ஏத்தினர் தருஉம் கூழே, நும் குடி                                           வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே;                                                                                                          வடமீன் புரையும்  கற்பின் மட மொழி
                                அரிவை தோள் அளவு அல்லதை                                          நினது என இலை நீ பெருமிதத்தையே’’ (புறம் - 122)
என்பதாகும். கழல் புனைந்த செம்மையான அடியினையுடைய காரி; உன் நாடு கடலினால் கொள்ளப்படாது; பகைத்துப் போர் செய்யப் பகைவர் ஊக்கம் கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட உன்நாடு யாகத்தில் அழல் ஓம்பும் வேதியர்க்கு உரியது. அழியாத செல்வமும் வெற்றி கொள்ளும் சேனையும் உடைய மூவேந்தர்களால் தனித்தனியே அனுப்பப் படுவோன் தத்தம் வேந்தருக்கு நீ வலிமையான துணையாக வேண்டுமென்று கேட்டு உன்னைப் புகழ்ந்து பெரும்பொருள் தருவான். அத்துணைப் பொருளும் உன்னை வாழ்த்து வருகின்ற இரவலர்க்கு உரியது; உன் துணை நாடி வருவோர் தரும் பொருள் இரவலர்க்கு உரியது. உனக்கு என்று ஏதேனும் உண்டா எனில், வட திசையில் தோன்றும் அருந்ததியைப் போன்ற கற்புடைய உன் மனைவியின் தோள் தவிர உனக்கென எதுவும் உடையாயல்லை; அத்தகைய பெருமிதத்தை நீ உடையை.
                நல்ல நாளாக இல்லையென்றாலும், நிமித்தம் சரியாக இல்லையென்றாலும், செவ்வி அறியாமல் புகுந்து கண்டபடி அறிவற்ற வாசங்களைச் சொன்னாலும் காரியின் அவைக் களத்திலிருந்து இரவலர் வெறுங்கையராய்த் திரும்பமாட்டார்கள் என்பதை கபிலர்,
                                """"நாள் அன்று போகி, புள்இடை தட்ப,                                                                                                     பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்                              வறிது பெயர்க்குநர் அல்லர் - நெறி கொளப்                                    பாடு ஆன்று, இயங்கும் அருவிப்                                      பீடு எழு மலையற் பாடியோரே’’ (புறம் - 124)
என்ற பாடலில் குறிப்பிடுகின்றார். நல்ல நாளல்லாத நாளில் போய், பறவைகள் தீய சகுனம் செய்து தடுத்திட குறித்துச் சென்ற வள்ளலைப் பார்ப்பதற்குரிய செவ்வி சரியாக இல்லாமல் புகுந்து, தகுதித் திறனல்லாத சொற்களைச் சொன்னாலும் பெருமை பொருந்திய மலையமானைப் பாடியவர்கள் வெறுங்கையராக மீள்வதில்லை. ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவிப் பெருமை பொருந்திய மலையனைப் பாடியவர் வறிதே திரும்புவாரல்லர். ஒழுகுதல் பெருகி ஓசை மிக்கது அருவி. அதுபோல வழங்குதல் பெருகிப் புகழ் பரவிய பெருமையுடைவன் காரி என்பதைக் கபிலர் நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளார்.
விதியும் மதியும்
                பாரியின் மகளிரைத் தக்காரிடம் ஒப்படைத்தார். கபிலர், அதன்மேலும் பாரியின் பிரிவைத் தாங்கும் மன வலிமை அவருக்கு இல்லை. இந்நிலையில் வடக்கிருக்க முடிவு செய்து, அவனை நினைந்து சொல்லிய பாடல்:
                                """"கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம்                          சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
                                முலை கெழுநாட மா வண் பாரி                                           கலந்த கேண்மைக்கு ஒவ்hய், நீ ; எற்                                         புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே                                   பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,                                                                                              ஒருங்கு வரல்விடாது, ஒழிக எனக் கூறி                                     ---------------------------                                 இடை இல் காட்சி நின்னோடு                                                 உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே’’ (புறம் - 236)
என்பதாகும். வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்படுத்து, வடக்கிருந்த கபிலர் உலகப்பற்று விடுத்து மறுவுலகம் விரும்பி விரதமிருந்து, உடலை மெலிவித்து, வடதிசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டார்.
                முகக்கலை உண்ணக் கிழித்ததும் முழவு போல் பெரியதுமாகிய பலாப்பழம், வில்லுடன் கூடிய குறவர்கள் பல நாள் வைத்து உண்ணுதற்கு ஏற்ற உணவாகும்; அத்தகைய மலை நாட்டுக்கு உடையவனான பெரு வண்மையுடைய பாரி (உளமும் உயிரும்) கலந்த நட்புக்குப் பொருந்தாதவனாய் நீ மன்னை வெறுத்தவனாகிவிட்டாய், என்னை ஏற்றுப் புரந்த நாட்களிலேயே பெருந்தகு சிறப்பினையுடைய நட்புக்குப் பொருந்தாத வகையில் நானும் உன்னோடு வருவதற்கு இசையாமல் தடுத்துவிட்டாய். நீ இங்கே இருஎனச் சொல்லி, இவ்வாறு என்னை நிறுத்தியவன் ஆயினாய். உனக்கு யான் பொருந்திய நட்பினன் அல்லேன் ஆதலின் இணையை ஆயினாய் ஆயினும், (இனிமேலாயினும்) இம்மையைப் போலவே காட்டி மறுமையிலும் இடைவிடாத காட்சியுடையோனாய் உன்னோடு கூடி வாழ்வதை உயர்ந்த ஊழ் கூட்டுவிப்பதாக்குக.
                இம்மை மாறி மறுமையாயினும் நீ ஆகியர் எம் கணவனையான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளேஎன்ற காதலர் கருத்தும் பிரிவின்றி அமைதலை மறுமையிலும் நாடும் நண்பர் கருத்தும் ஒன்றே. கபிலர் வடக்கிருந்த இடமே திருக்கோவலூர்ப் பெண்ணையாற்றிலுள்ள கபிலப் பாறை என்பர். இப்போது அவ்வூர் திருக்கோவிலூர் என வழங்கப்படுகிறது.
                                """"உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில                                     நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த                                          ஒளிறு ஒள் வாடக்குழைந்த பைந் தும்பை,                                                                                        எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்,                                                                                            மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை,                                                                                          குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன                                       குவை இருங்கூந்தல் வருமுலை சேய்ப்ப                                   ----------------------------                                   வினை நவில் யானை பிணிப்ப,                                                                                                   வேர் துளங்கின, நம் ஊருள் மரனே’’ (புறம் - 247)
என்ற வரிகளில், கள் அருந்துவோன் தான் இட்ட நறிய கள்ளின் மிகுதிக் கள் நாவினிடை வழியும் பல தேர்கள் வளைய வருதலால், சிவந்து ஒளிரும் ஒளி வாடுமாறு குழைந்த தும்பைப் பூச் சூடிய போரிலே பகைவரைக் குத்தியதால் இலைவடிவான பகுதி முறிந்து வேலினையும், நறுமணம் கமழும் மார்பினையும், வீரப் போர் உரிமையும் கொண்ட அகுதையின் ஆழமான நீர்நிலை மற்றும் கூடல் நகர் போலச் செறிந்த கூந்தலானாகியவளின் வளரும் மார்பகம் சிவக்கும்படியாக, விளக்கம் மிக்க பருமையான அடிப்பகுதியைக் கொண்டவையாயினும் வேந்தர்களின் யானைகள், போர்ச்செயலில் விருப்பம் உடைய யானைகள், கட்டப் பட்டிருப்பதால் நம் ஊரிலுள்ள மரங்களின் வேர்கள் அசைந்து பேபயின. என்ன ஆகுமோ, தெரியவில்லையே. முன்பகுதி வீரமரபினைச் சேர்ந்த பெண்ணின் செய்தியையும், பின் பகுதி அந்தப் பெண்ணின் பொருட்டுக் கலகம் விளைவிக்கும் வேந்தர் செய்தியையும் பதிவாக்கிக் காட்டி, மகட்பாற்காஞ்சி என்ற துறைக் குறிப்பினையும் மனங்கொள்ள வைக்கின்றார்.
நிறைவுரை
                கபிலரின் பாடல்களில் தமிழ்ச் சமுதாயத்தின் நாகரிகப் பண்பு இழையோடுவதை அறியமுடிகின்றது. கையறுநிலைப் பாடல்களில் புலம்பித் தவிக்கும் உள்ளங்கள்ன அவலச்சுவையை அறியும் போதே, புற வாழ்வியலின் பெருமைகளையும் ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்றது.
                பாரிமன்னனின் பறம்புமலை வளத்தைக் கபிலர் சிறப்பாகப் புகழ்ந்து பாடியுள்ளார். கடையெழு வள்ளல்களின் வீரமும், கொடையும், வள்ளல்தன்மையும் கபிலரின் பாடல்களில் பதிவாக்கப்பட்டுள்ள பாங்கு அவருடைய படைப்பாக்க நெறியை உணர்த்துகின்றன.
                ஒரு மன்னனிடம் பரிசு பெற்ற புலவன் ஒருவன், மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படைப் பாடல்களில் கபிலரின் சொல்லாட்சி முறைகள், கொடை வள்ளலின் சிறப்பினைத் தெளிவாக உணர்த்துகின்றன. மன்னன் காலம் தாழ்த்தாத கொடைக்குச் சொந்தக்காரனாகவும் காலமறிந்து செயலாற்றும் பண்புடையோனாகவும் வாழ்ந்த தன்மையைக் கபிலர் குறிப்பிட்டுப் பாடுகின்றார்.
                இல்லற பாழ்வில் மக்கள் கடைபிடித்தொழுக வேண்டிய விருந்தோம்பல் பண்பின் சிறப்பினை, புறம்பாடும் களத்தில் எடுத்துரைக்கும் பாங்கு கபிலரின் புலமைச் சிறப்பினைப் பறைசாற்றுகின்றது. இழப்பைப் பொருத்துக் கொள்ள முடியாக மென்மையான உள்ளம், உலக இன்பங்கள் அனைத்தையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு வடக்கிருந்து உயிர்நீக்கும் உயர்பண்பினைக் கபிலர் பாடுகின்றார். மன்னனைப் பாடும் புலவர்கள் அம்மன்னனுடைய பல்வேறு பண்புகளையும் ஒருங்கு கூறி வாழ்த்துகின்ற போக்கினைக் கபிலரின் பாடல்களில் காணமுடிகின்றது.
                களிற்றின் மீது தூக்கிப் பிடித்த வெற்றிக் கொடி வானளாவப் பறப்பது முதலாகப் பிணக்குவியல் விளங்கும்படியாகப் பகைவர்களை அழித்தது முடியத் தலைவனின் போர்க்கள வீரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
                புறமாகிய வாழ்வில் வீரத்தைக் களமாகக் கொண்ட பாசறை, போர்க்கருவிகள், படைக்களன்கள், வெற்றியை நோக்கிய வஞ்சினம், வெற்றியை நோக்கிய வஞ்சினம், வெற்றி கண்ட போது மகிழ்ந்து பாடுதல், வேள்வி செய்தல் போன்ற செய்திகள் கபிலரின் பாடல்களில் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
                தன்னைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்கும், அந்தணர்களுக்கும், கலைஞர்களுக்கு மன்னன் வரையாது வழங்கும் ஈகையால் சிறந்தோங்கி பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் தலைவாக விளங்கிய தன்மையைக் கபிலரின் புறப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?