நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 28 March 2020

திருவாசக யாப்பமைதி

           திருவாசக யாப்பமைதி


                கவிஞர்கள் தன் உள்ளத்தெழும் உணர்வுகளை, வெளிப்படுத்தக்கூடிய மொழி வடிவங்களே இலக்கியங்களாகும். கவிஞர்கள் ஓர் அனுபவத்தை என்பது போது, அவ்வனுபவத்தில் ஆழ்ந்து தோய்கின்ற நிலையில் அவர்களது உணர்வுகள் ஊற்றெடுத்துப் பாட்டாக வெளிப்படுகிறது. அந்த உணர்வு சொல் வடிவம் பெறும்பொழுது அது யாப்பு  எனப் பெயர் பெறுகிறது. ‘‘காலத்திற்கு ஏற்ற கருத்துகளையும் சிந்தனைகளையும் கவிஞர்கள் ஆற்றல் மிக்க மொழிநடையில் வெளியிடுவதற்குக் கருவியாகப் பயன்படும் செய்யுள் வடிவங்களே யாப்பு எனப் பெயர் பெறும்’’ என்கிறார் அகத்தியயலங்கம் (1983-3) கருத்துக்களுக்கு ஏற்பவும் ணர்ச்சிகளுக்கு ஏற்பவும் கவிஞர்கள், பலவகையான யாப்புகளை இலக்கியத்தில் கையாண்டுள்ளனர்.
 
                சங்க காலம் முதல் இன்று வரை பலவகையான யாப்புகள் தோன்றி உள்ளன. காலந்தோறும் யாப்பியல் விதிகளை யாப்பிலக்கணத்தார் வரையறை செய்திருந்தாலும், பாவலர்கள் அவ்விதிகளை மீறிச் சென்று புதிய இலக்கியங்களைப் படைக்கின்றனர். சங்க காலத்தில் வழங்கி வந்த யாப்பினை யாப்புகள்என்றும், பின்னர் தோன்றியவற்றை அவற்றின் இனங்கள்என்று வரைறை செய்தனர்.
                தமிழில் உள்ள பாவகையை வகுத்துரைக்குமிடத்து, தொல்காப்பியர் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா என்றும் நால்வகை யாப்புக்களைக் குறிப்பிடுகிறார். சங்க கால நூல்களும் இந்நால்வகை யாப்புகளாலேயே இயற்றப்பட்டுள்ளன. பின்னர்த் தோன்றிய சிலப்பதிகாரத்தில், தொல்காப்பியத்தில் குறிக்கப்பெறாத வரிப் பாடல்களை இயற்றினார் இளங்கோவடிகள்.
                தொல்காப்பியர் குறிப்பிட்ட நால்வகைப் பாக்களும் பல நிலைகளில் மாற்றமும் வளர்ச்சியும் பெற்று, பல்வேறு வடிவங்களையடைந்தன. சான்றாக ஆசிரியப்பாவினின்று இணைக்குறளாசிரியம், நேரிசை ஆசிரியம், நிலைமண்டிலம், அடிமறிமண்டிலம் போன்ற பாக்கள் வெவ்வேறு காலச் சூழலில். தோன்றின. இதைப்போலவே மற்ற முதன்மைப் பாக்களினின்றும் புது வடிவங்கள் தோன்றின.
திருவாசகப் பாக்கள்
                திருவாசகத்தில் பத்துப் பாவகைகள் அமைந்துள்ளள. அவை நேரிசை வெண்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, ஆசிரியவிருத்தம், கலிவெண்பாh தரவு கொச்சக் கலிப்பாh தரவினைக் கலிப்பா, கலித்துறை, கலித்தாழிசை, கலிலிருத்தம் போன்றவையாகும்.
                மரபு பிறழாமல் பழைய யாப்பு வடிவங்களில் கவிதை இயற்றிருந்தாலும், தம் கற்பளை வளத்திற்கும் சிந்தனைச் செழுமைக்கும் ஏற்பப் புதிய வடிவங்களைப் படைத்துப் புதிய வரவுகளைத் தமிழிலக்கியத்திற்குக் கொடுத்துள்ளார் ஆசிரியர். இசையுணர்ச்சியே வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்துள்ளது. புதுமைகளையும், மாற்றங்களையும் புகுத்திச் சோதனை முயற்சிகள் செய்துள்ளார் மணிவாசகர்.
அவையாவன,
1.             நாட்டுப்புற மக்களின் இசையமைதியைப் புதிய முயற்சியாகப் பயன்படுத்தியுள்ளமை
2.             பாடுபொருளுக்குத் தகுந்தாற்போலப் பாடலின் வடிவத்தை நீட்டியும் குறுக்கியும் பயன்படுத்தியுள்ளமை
3.             பாடல் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளமை.
இவ்வாறு, மணிவாசகர் திருவாசகத்தில் பல்வேறு இலக்கிய வகைகளைப் புகுத்தியுள்ளார்,
 யாப்பு எண்ணிக்கை
                ஆசிரியப் பாடல்கள் மூன்று பிரிவுகளிலும், வெண்பாக்கள் நான்கு பிரிவுகளிலும், கலிப்பாக்கள் முப்பத்து நான்கு பிரிவுகளிலும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளன.
                திருவாசகத்தில் அதிகம் பயின்றுள்ள யாப்பானது விருத்தப்பபாவாகும். இக்காரணம் குறித்தே, ‘‘தேவாரப் பதிகங்களும், திருவாசகப் பாடல்களும் இனிமையான திருவிருத்தங்களோகும்’’ என்பார் நாச்சியப்பன் (1983-65)
யாப்பு பயன்பாடு
                எப்பொருளை எந்த யாப்பில் பாடினால் சிறக்கும் என்பதைக் கண்டறிந்த கவிஞர்கள் அவ்வடிப்படையில் இலக்கிய வடிவங்களை வகுக்கலாயினர். அதற்கேற்ப யாப்புகளை வரையறுத்தனர். காலத்திற்கேற்ப யாப்பு வடிவங்களில் மாற்றம் செய்து புதுமையைப் புகுத்தினர். காலந்தோறும் பாடுபொருளுக்குத் தக்கவாறு யாப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினர். அவ்வகையில் மணிவாசகர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியுளள்ள யாப்புகளைக் கீழே காணலாம்.
ஆசிரியப்பா
                திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதி, கீர்த்தித்திருவகவல், போற்றித் திருவகவல் ஆகிய மூன்று பகுதிகளும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றுள் திருவண்டப்பகுதி இணைக்குறளாசிரியத்தாலும், கீர்த்தித்திருவகவல், போற்றித்திருவகவல் இரண்டும் நிலைமண்டில ஆசிரியப்பாவாலும் பாடப்பட்டுள்ளன. இவ்விரண்டும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளதினால் அகவல்கள் என அழைக்கப்பெறுகின்றன.
                ‘‘ஆசிரியப்பாவில் ஒர கருத்தை வெளியிடுவது எளிது, புலவர்கள் உள்ளக் கருத்தை அப்படியே உணர்த்தவல்லது ஆசிரியப்பா. குற்பனை, அணி ஆகிய இவை அதிகம் வேண்டாத நிலையில் தங்கள் உள்ளத்துணர்ச்சியை வெளிப்படுத்த ஆசிரியமே புலவர்க்குத் துணை நின்றது’’ என்கிறார் குருநாதன் (1983-26). ஆவசரத்திற்குக் காரணம் குறித்தே சங்க இலக்கியத்தில் ஆசிரியப்பா தலைமைச் சிறப்பைப் பெற்றதோ என எண்ணத்தோன்றுகிறது.
                சிவபெருமான் பற்பல வேடங்களையெடுத்து, அடியவர்களின் குறைகளை நீக்கிகி அவர்கள் வேண்டியவற்றை அளித்து, அருள் புரிந்த கதைகளைக் கீர்த்தித் திருவகலிலும், இறைவனே முத்தொழிலுக்கும் உரியவன் என்பதை உணர்த்தும்வகையில் அமைந்த இறை செயல்களைத் திருவண்டப்பகுதியிலும் கூறுகிறார். போற்றித் திருவகலில் இறைவனுடைய அருட்குணங்களையும், தனக்குக் குருவாகி அருளிய வரலாற்றையும் கூறுகிறார். இவ்வாறு பல கதைகளைக் கூறுவதற்கு ஆசிரிய யாப்பினை மணிவாசகர் கையாண்டுள்ளதை அறியமுடிகிறது. ‘‘கதைப்பொருண்மையைப் பாடுதற்குரிய யாப்பு வகையாக இதுவே சிறந்து விளங்கியது என்பதை இவ்வியாப்பு வகையால் சிலப்பதிகாரத்தில் அமைந்த பதினெட்டுக் காதைகளும், மணிமேகலையில் உள்ள இருபத்தேழு காதைகளும் இனிதுற உணர்த்துவ’’ என்கிறார் செயராமன் (1981-375) இவ்விளக்கத்தின் வழியாக இளங்கோவடிகளும் கதைப்பகுதிகளைக் கூறுவதற்கு ஆசிரியப்பாவைக் கையாண்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
வெண்பா
                திருவாசகத்தில் இருபத்தியெட்டு நேரிசை வெண்பாக்கள் பயின்று வந்தள்ளன. திருத்தசாங்கத்தில் பத்துப் பாடல்களும், திருவெண்பாவில் பதினோரு பாடல்களும், பண்டாய நான்மறையில் ஏழு பாடல்களும் உள்ளன. ‘‘வெண்பா நூல்களில், பாட்டுடைத் தலைவன், தலைவி, தெய்வம், சிறப்புக்குரிய ஊர் அல்லது இடம், சிறப்புடைய காவியத்தைச் சுருக்கிக்கூறல், சமயக் கொள்கையைப் பரப்புதல், தெய்வத்தோடு தொடர்புடையவற்றைக் கூறுதல் முதலிய பல்வேறு பாடுபொருள்களைக் காண்கிறோம்’’ என்கிறார் குருநாதன் (1983-31) தான் எண்ணிய கருத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வெண்பா யாப்பைக் கையாண்டுள்ளார் மணிவாசகர். எல்லா மக்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் அறக்கருத்துக்களைக் கூறுவதற்கு இந்த யாப்பினைக் கையாண்டுள்ளார்.
                வெண்பா யாப்பு மிகக் கட்டுப்பாடானது. தூய்மையான பா என்று அழைக்கப்படும் இப்பா அடிவரையறையுடையது. இறைவனுடைய உறுப்புக்களைக் கூறுவதற்கு வர்ணிப்பதற்கு மட்டுமே வெண்பாவைக் கையாண்டுள்ளார் மணிவாசகர். ஆனால், சங்கம் மருவிய காலலததில் எழுந்த இலக்கியங்களில் வெண்பா யாப்பே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இதற்கான காரணத்தை, ‘‘அறத்தையும் விழுமிய செயல்களையும் ஒருவருக்கு எடுத்து மொழிவதில் வெண்பாவில் பங்கு குறிப்பிடத்தக்கது. ஏனவே வெண்பாவிற்குரிய ஓசையாகக் செப்பலோசையைக் கருதினர். ஒரு கருத்தைப் பிறரிடம் எடுத்துச் சொல்வதற்கு இவ்வோசை பயன்பட்டது. எனவே, தான் வெண்பாவை அறமுரைக்கும் யாப்பாகத் தேர்ந்தனர்’’ என்பார் குருநாதன் (1983-30-31). மணிவாசகரும் திருவெண்பா, பண்டாய நான்மறை பகுதிகளில் சிவபெருமான் பிறவிப் பிணிக்கு மருந்தாவான், இறைவனை வாழ்த்துவதால் பெரும் பயன் உண்டாகும் என்ற தத்துவக் கருத்துக்களைக் கூறுவதற்கு வெண்பா யாப்பினைப் பயன்படுத்தியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.
கலிப்பா
                வெண்பா நடையில் ஒத்த நடையுடைய யா கலிப்பாவாகும். திருவாசகத்தில் விருத்தப்பாவிற்கு அடுத்த நிலையில் அதிகமாகப் பயின்று வருவது கலிப்பாவாகும். கலிப்பாவில் வகைகளான கொச்சக் கலிப்பா, கலிவெண்பா போன்ற பாவினங்கள் திருவாசகத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன.
கொச்சக் கலி
                திருச்சதகத்தில் அறிவுறுத்தல் என்னும் பதிகம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேனம், திருச்சாழல் திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், கண்டபத்து, திருவேசறவு, திருப்புலம்பல், குலாப்பத்து இவையனைத்தும் நாலடித்தரவு கொச்சக் கலியிலும், திருவம்மானை, திருப்பொன்னூசல் முதலானவை ஆறடித்தரவு கொச்சக் கலியிலும், திருவெம்பாவை எட்டடித் தரவு கொச்சக் கலியிலும் இயற்றப்பட்டுள்ளன.
                மகிழ்ச்சியோடு ஆடிப்பாடும் நிலையில் மணிவாசகர் கொச்சக் கலிப்பாவினைத் தேர்வு செய்துள்ளார். நாட்டுப்புறப் பாடல் வடிவங்களில் பெரும்பாலும் கையாண்டுள்ள யாப்பு கொச்சக் கலியேயாகும். நாட்டுப்புற வடிவங்களான விளையாட்டுப் பாடல்களில் இசையுடன் பாடவேண்டி, ,தற்கு இசைவான யாப்பான கலிப்பாவைக் கையாண்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. திருவேசறவு, திருப்புலம்பல் போன்ற பாடல்களில் கொச்சக் கலியினைப் பயன்படுத்தியுள்ளார். இறைவனை நினைத்து புலம்பி அழும் அழுகைக் குரல் இவற்றில் ஒலிக்கின்றது.
கலிவெண்பா
திருவாசகத்திற்குப் பாயிரமாக அமைந்த சிவபுராணம் கலிவெண்பாட்டால் இயற்றப்பட்டுள்ளது.
கலிவெண்பா, கலிப்பா, வெண்பா இரண்டிற்கும் உரியதாகத் தோன்றும். வெண்பா, கலிப்பா இரண்டு யாப்பு வடிவங்களையும் தீர்மானிப்பது அவற்றில் பொதிந்திருக்கும் பொருளேயாகும். இதனை, ‘‘வெண்பாவாயின் குறித்த பொருளை மறைத்துக்கூறாது கூறுதல் வேண்டும். கலிவெண்பாட்டாயின் ஒரு பொருள் நுதலி வருவதுடன் துள்ளலோசை பெற்று வருதல் வேண்டும்’’ என்கிறார் கந்தசாமி (1984-445). சிவபுராணம் கலிவெண்பாவிற்குரிய இலக்கணத்திற்கு ஏற்றவகையில் சிவபொருமானுடைய பழமையான வரலாற்றைக்கூறி, செய்யுளிசை அவபெடை பெற்றுத்துள்ளலோசையுயுன் பயின்று வருகிறது. கலிவெண்பாட்டிற்கு அடிவரையறை கிடையாது. ஏனவே, தான் இறைவனுடைய முடிவற்ற ஞான வரலாற்றைக்கூற மணிவாசகர் இந்த யாப்பினைக் கையாண்டுள்ளார்.
                இதன் பாடுபொருளாக, ‘‘அகத்திணை ஏழுனுள் யாதாலும் ஒரு பொருளைக் குறித்து வருவது கலிவெண்பா’’ என்கிறார் கந்தசாமி (1984-445). குhதலைப் பாடும் யாப்பு வடிவமாகிய கலிவெண்பாட்டில் இறைவனைப் பாடிப் புதுமை செய்துள்ளார் மணிவாசகர்.
                வஞ்சிப்பாவில் எவ்வகைப் பாடலையும் மணிவாசகர் புனையவில்லை.
விருத்தப்பா
                யாப்பு வகைகளிலேயே மிக எளிமையானதும் இனிமையுடையதுமான பா விருத்தப்பாவாகும். விருத்தப்பா நெகிழ்ச்சியுடையது. அதாவது, இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைக்கும் தன்மையுடையது. விருப்பாவின் நெகிழ்ச்சியும் ஒலிநயம் தழைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் பாடல்களைப் பாடியவர். ஏல்லாத் திறத்தாரையும் கவர வல்ல விருத்தப்பாவை தன் உணர்ச்சிகளையும், இலட்சியங்களையும் வெளிப்படுத்தக் கிடைத்த ஒப்புயர்வற்ற கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார். விருத்த வகையில் ஆசிரிய விருத்த யாப்பே திருவாசகத்தில் பெருமளவு பயின்று வருகிறது. கலிலிருத்தம் சிறுபான்மையளவிலே பயின்று வருகிறது. இசைப் பாக்களுக்குரிய பாவினங்களாக இவ்விரு யாப்பினங்களையே குறிப்பர். திருவாசகத்தில் அறுசீர் முதலாகப் பன்னிருசீர்கள் வரை அமைந்த பாடல்கள் உள்ளன.
                விருத்தப்பாவின் இலக்கணத்தைப், ‘‘பாடுபவன் கருத்துக்கும் திறமைக்கும் தகுந்தபடி இரண்டு சீர் முதல் முப்பத்திரண்டு சீர்வரை அமைத்துக்கொண்டு எப்படிப்பட்ட விருத்தத்தையும் பாடலாம். இதில் தளைத்தட்டுப்பாடு கிடையாது’’ என்று விளக்குவார் நாச்சியப்பன் (1983-68). இவ்வாறு தளைத்தட்டுப்பாடு இல்லாத காரணத்தினால்தான் மணிவாசகர் விருத்தப்பாவினை பெருமளவு விரும்பிப் பாடியுள்ளார் என அறியமுடிகிறது. திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தில் எழுபது பாடல்களும், அன்னைப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து முதலான பாடல்கள் விருத்தப்பாவில் இயற்றப்ப.டுள்ளன. விருத்தப்பாக்களில் பொதுவாகக் கவிஞர்கள் எண்சீர் வரையே பாடியுள்ளனர். ஆனால் மணிவாசகர் பத்து, பன்னிரண்டு, சீர்கள் வரை பாடியுள்ளார். எடுத்துக்காட்டாகத் திருப்படையாசி என்னும் பதிகமானது பன்னிரு சீர்களால் பாடப்பட்டுள்ளது. திரப்படையாட்சிப் பதிகத்தில் மூன்றாம் பாடல் பத்துச் சீர்கள் ஓரடியில் அமையும் வண்ணமும், முதல் பாடல் பன்னிரு சீர்கள் ஓரடியில் அமையும் வண்ணமும் பாடப்பட்டுள்ளன. இவ்வாறு சீர்களில் எண்ணிக்கையைக் கட்டிப் புதுமை செய்துள்ளார்.
பதிகத்தில் மாற்றம்
                சீர்களில் எண்ணிக்கையைக் கட்டிப் புதுமை செய்ததுபோல் பதிகத்திலும் புதுமை செய்துள்ளளர். ஒரு பதிகத்தில் பாடப்பாடும் பத்துப் பாடல்களும் ஒரே வகை யாப்பில் அமைவதே மரபு. மணிவாசகர் ஒரே பதிக.தில் ஒரே வகை யாப்பில் பத்துப் பாடல்கள் அமைப் பாடியிருந்தாலும், சோதனை முயற்சியாக ஒரே பதிகத்தில் பலவகையான பாக்களை அமைத்தும் பாடியுள்ளார். எடுத்துக்காட்டாக, அடைக்கலப்த்து என்னும் பதிககமானது பலவகைப் பாக்களால் பாடப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடல்கள் கட்டளை கலித்துறையில் அமைக்கப்பட்டுள்ளன. அடைக்கலப்பத்தின் முதற் பாடலில் முதலடியும், நான்காமடியும் நால்சீர் bற்றுவர, இடையடிகள் இரண்டும் ஐவகைச் சீரினைப் பெற்றுவருகின்றன. இதைப்போலவே பிற பாடல்களிலும், சீர்மிக்கும் குறைந்தும் வருகிறது. சான்றாக,
                                ‘‘செழுக்கமலத் திரளனநின்
                                                சேவடிசேர்ந் தமைந்த
                                  புழுத்தமனத் தடியருடன்
                                                போயினர் யான் பாவியேன்
                                  புழுக்கணுடைப் புன்குரம்பைப்
                                                பொல்லாக் கல்வி ஞானமிலா
                                  வழுக்குமனத் தடியே
                                                னுடையாயுன் னடைக்கலமே’’
அடைக்கலப்பத்தின் இரண்டாம் பாடலில், முதலடியும் மூன்றாம் அடியும் ஐஞ்சீர் பெற்று வர, இரண்டாம் அடியும் நான்காம் அடியும் நான்குசீர் பெற்றுவருகின்றன. மூன்றாம் பாடலின் அனைத்து அடிகளும் நான்குசீர் பெற்றுவருகின்றன. இவ்வாறு சீர்களை மிகுதியாக்கியும் குறைத்தும் ஆக்கப்படுவதால் அடைக்கலப்பத்தின் பாடல்கள் கலவைப்பாட்டுகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?