நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 31 July 2017

மணிமேகலை 1919
கடற்கரையில் ஆர்ப்பரித்த கடல், இப்போது இந்த ஆழத்தில் தான் எவ்வளவு அமைதியாக இருக்கிறது. எப்படிக் கப்பலைத் தாலாட்டுகிறது. மனித மனமும் கரைகளை மோதி மோதி இறுதியில் பக்குவப்பட்டு நடுக்கடலைப் போல அமைதியாகி விடுகிறது.
குறைந்த கடலலை பேரிரைச்சலை ஏற்படுத்துவது போல, அனுபவமற்ற மனமும் தான் எத்தனை கேள்விகளை எழுப்புகிறது. அனுபவம் நிறைந்த நடுக்கடலோ, கேள்வியற்று அமைதியாக இருக்கிறது. தான் இந்நிலையை எவ்வாறு எப்போது பெறுவது?
கடலலைகளைப் பார்த்தபடியே மணிமேகலை சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் பட்டாடையும், அடர்ந்த கூந்தலும் அவள் மனதைப் போலவே அலைபாய்ந்தன.
சிறுவயதில் பாட்டி சித்திராபதியுடன் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறாள். மாதவி கோவலனுடன் மகிழ்ந்திருக்கும் நாள்களிளெல்லாம் சித்ராபதி அவளைக் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்கிறாள். தன்னொத்த தோழியருடன் விளையாடும் மணிமேகலை கடலில் தூரத்தில் தெரியும் படகுகளையும், நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கும் கப்பல்களையும் பார்த்திருக்கிறாள். அதில் பயணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டதை,காதில் வாங்காமல் பாட்டி மறுத்துவிட்டாள்.

மணிமேகலை 1818 
ஆபுத்திரனின் தாய் சாலி என்ன ஆனாள்? வயதான கிழவருக்கு வாழ்க்கைப்பட்டுக் குழந்தையில்லாத அவர்களுக்கு ஒரு குழந்தை கருவாகி உருவாகிய சமயத்தில் அவள்  களங்கப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டது மணிமேகலையின் மனதில் பெரும் பாரத்தை ஏற்படுத்தியது.
வயதான கிழவருக்கு ஏழ்மையின் காரணமாக மணமுடிக்கப்பட்டதே பெருங் கொடுமை. இதில் ஒழுக்கங் கெட்டவள் என்ற அவப்பெயர் வேறு. செய்யாத தவறுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை !அவளுக்கு மட்டுமல்ல. அவள் பெற்ற குழந்தைக்கும் இது தீராத் துயரத்தைத் தந்திருக்கிறது. இறுதிவரையில் சாலி மகனைப் பார்க்கவில்லை. மகனும் தாயைப் பார்க்கவில்லை.