ஒளியை நோக்கிய ஒரு பயணம்.
கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம். இன்றைக்குக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகிப் போயிருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? கற்றவர்களின் அறியாமை முற்றிலும் விலகியிருக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். அவர்களின் மகன் நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்குக் கோள்கள் குறித்து ஒரு பாடம். பாடப்புத்தகத்தில் அதை ஒட்டி ஒரு படம். ஆங்காங்கே தொலைவில் நட்சத்திரங்கள் இருக்க , சில கிரகங்கள் மட்டும் இருப்பதைப் போன்ற படம். அவனுடைய வகுப்பு ஆசிரியை பெரிய பேப்பரில் பெரிதாக அதைப் போல வரைந்து வரும் படி வீட்டுப் பயிற்சி கொடுத்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் பென்10, ஏலியன் போர்ஸ், மார்ஸ் உள்ளிட்ட சிறுவர் நிகழ்ச்சிகளைப் பார்த்து ‘ஏலியன்’ குறித்துக் கற்பனையை வளர்த்துக் கொண்டிருந்த சிறுவன், தன் கற்பனைச் சிறகை விரித்து வரைந்திருக்கிறான். பெரிய நீலவண்ண தாளில் சில கிரகங்கள், செயற்கைக்கோள், பறக்கும் தட்டு, தலையில் ஆன்டனா உள்ள பெரிய கண்களுடைய வினோத ஏலியன், பூமி, செவ்வாய், சனிக்கிரகம், இரண்டு நிலவுள்ள புதுக்கிரகம் இப்படியாக இரவு முழுவதும் வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறான். அவனுடைய பெற்றோர் அவனை மிகவும் பாராட்டி ஆசிரியரின் பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். மாலையில் வந்த பையன் முகத்தில் மிகுந்த அவமான உணர்வு. எதையும் சொல்லவில்லை. எதைக் கேட்டாலும் பதிலில்லை. கவலை தோய்ந்த முகத்துடன் உண்ணாமல் உறங்கி விட்டான்.