ஒளியை நோக்கிய ஒரு பயணம்.
கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம். இன்றைக்குக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகிப் போயிருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? கற்றவர்களின் அறியாமை முற்றிலும் விலகியிருக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். அவர்களின் மகன் நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்குக் கோள்கள் குறித்து ஒரு பாடம். பாடப்புத்தகத்தில் அதை ஒட்டி ஒரு படம். ஆங்காங்கே தொலைவில் நட்சத்திரங்கள் இருக்க , சில கிரகங்கள் மட்டும் இருப்பதைப் போன்ற படம். அவனுடைய வகுப்பு ஆசிரியை பெரிய பேப்பரில் பெரிதாக அதைப் போல வரைந்து வரும் படி வீட்டுப் பயிற்சி கொடுத்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் பென்10, ஏலியன் போர்ஸ், மார்ஸ் உள்ளிட்ட சிறுவர் நிகழ்ச்சிகளைப் பார்த்து ‘ஏலியன்’ குறித்துக் கற்பனையை வளர்த்துக் கொண்டிருந்த சிறுவன், தன் கற்பனைச் சிறகை விரித்து வரைந்திருக்கிறான். பெரிய நீலவண்ண தாளில் சில கிரகங்கள், செயற்கைக்கோள், பறக்கும் தட்டு, தலையில் ஆன்டனா உள்ள பெரிய கண்களுடைய வினோத ஏலியன், பூமி, செவ்வாய், சனிக்கிரகம், இரண்டு நிலவுள்ள புதுக்கிரகம் இப்படியாக இரவு முழுவதும் வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறான். அவனுடைய பெற்றோர் அவனை மிகவும் பாராட்டி ஆசிரியரின் பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். மாலையில் வந்த பையன் முகத்தில் மிகுந்த அவமான உணர்வு. எதையும் சொல்லவில்லை. எதைக் கேட்டாலும் பதிலில்லை. கவலை தோய்ந்த முகத்துடன் உண்ணாமல் உறங்கி விட்டான்.
வீட்டினர் என்ன முயற்சித்தும் பதிலில்லை. அவனே ஒருவழியாக வந்து சொன்ன பதிலைக் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். விசயம் இதுதான். அவனுடைய கற்பனையில் உருவான படத்தை, அவனுடைய வகுப்பாசிரியர் ‘அதிகப்பிரசிங்கித்தனம்’ என்று திட்டியிருக்கிறார். புத்தகத்தில் உள்ளதைப் பார்த்து அப்படியே வரையாததற்காகக் கடுமையாகத் திட்டி, அவன் வரைந்திருந்த கற்பனை ஓவியத்தாளைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசியதோடு, மற்ற மாணவர்களையும் ‘இவனைப் போல் வரைந்து வரக்கூடாது’ என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, ஆசிரியையிடம் தொலைபேசி அழைப்பில் விளக்கம் கேட்டபோது, ‘மாணவர்கள் சிரியர் சொன்னதைச் சரியாக அப்படியே செய்ய வேண்டும் என்பதுதான் கல்வியின் அடிப்படை கீழ்ப்படிதல், சொன்னதைச் சரியாகப் புலிந்து கொள்ளல்என்பதுதான் ஒழுக்கம் ’ என்பது போலத் தத்துவம் பேசியிருக்கிறார் அந்தக் கிளிப்பிள்ளை ஆசிரியர்.
அந்தச் சிறுவனை என்ன செய்தும் தேற்ற முடியவில்லை என்பது ஒருபக்கம் என்றாலும், மற்ற மாணவர்களின் நிலை என்பது என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குள் வினா எழுந்தது. முளைக்கத் தொடங்கும் பருவத்திலேயே சிந்தனைச் சிறகுகளை வெட்டிவிடும் நாம் தான் அவனைப் பத்து, பனிரெண்டு வகுப்புகள் வரும்போது கூண்டுக்கிளியாகவே மாற்றி, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக்கி விடுகிறோம். ஆனால் பாடங்களை உருப்போட்டு அவன் நிறைய மதிப்பெண்களை மட்டும் பெற்றுவிட்டால் போதும் டாக்டராகவோ, என்ஜினியராகவோ உருவாக்கிவிடலாம் என“று கனவு காண்கிறோம். முன்பு ஆசிரியர்
சொன்னதை நாமும் பின்னாளயில் கடைப்பிடிக்கத் தொடங்கி விடுகிறோம். அதற்குப் பிறகு வேலை என்று வரும் பொழுது என்னாகும்? சிறிய சிக்கலைக்கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒரு கம்பெனியிலிருந்து மற்றொரு கம்பெனிக்குத் தாவி இறுதியில் தன்னம்பிக்கை குறைந்து எல்லாம் இருந்தும் எல்லாம் இழந்தது போன்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் மாணவர்கள்.
பெற்றோரும் எவ்வளவு படித்தவர்களாக இருப்பினும் கல்வியில் பெரிய மாற்றங்களைச் செய்ய முடிவதில்லை. மாணவர் பெரும்பாலான நேரங்களில் பள்ளிச் சூழலிலேயே இருப்பதால் அச்சூழலின் அழுத்தமே அவர்களை உருவாக்குகிறது. பள்ளிகளை விட்டு மற்றொரு பள்ளிக்கு மாற்றினாலும் அங்கும் இதே சூழல்தான் நிலவுகிறது. எனவே பெற்றோரும், மாணவரும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொண்டு சிந்தனைகளற்ற பெருவெளியில் கரைந்து போகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள் தனியார் மயமாகி வருகிற சூழலில் பெற்றோர், மாணவர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்றைய கல்வி முறை சுதந்திரமான சிந்தனையைத் தூண்டுகின்ற, சிந்தனைகளை ஊக்குவிக்கின்ற சூழலை ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் கல்விமுறை நெருக்கடியில் சிக்கியுள்ளது எனலாம்.
நமது கல்விக்கும் வாழ்க்கை நடைமுறைக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு உள்ளது. எனினும் இதைக் களைய யாரும் குரல் கொடுப்பதில்லை. குரல் கொடுக்க வேண்டியவர்கள் யார்? ஆசிரியரா, மாணவரா, பெற்றோரா? எல்லாரும்தான். ஆனால் யாரும் எதுவும் செய்யாத காரணத்தினால் தான் பல இளைஞர்கள் வாழ்க்கையை வெறுத்துப் போய்ப் பேசுவதும், வீணாய் திரிவதும், நாட்டிற்கே கேடாய் மாறுவதும், தவறான பாதைக்குச் செல்வதும் நடக்கிறது. கல்வி முறையில் நிறையப் போதனைகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் நடைமுறை முற்றிலும் மாறாய் உள்ளது. எனவேதான் மாணவர்கள் அனைவரிடமிருந்தும் அந்நியப்பட்டுச்
சிந்தனைத் தடுமாறி நிற்கின்றனர். மாணவர்களை உருவாக்கிவதில் வகுப்பறைகளின் பங்கு என்ன? ஆங்கிலேயக் கல்வி கொடுக்கப்பட்டதில் இருந்தே நிறையத் தவறுகள் நடந்திருக்கின்றன.புரியாமல்
படிப்பது, மதிப்பெண் நோக்கில் படிப்பது, அரைகுறையாகப் படித்து கிடைத்த வேலையில்
அமருவது. இது போதாதென்று...... தாய்மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பண்பாடு அறியாத பரம்பரை உருவாகியிருக்கிறது. தேசபக்தி மறக்கப்பட்டிருக்கிறது. சாதி ஒழிப்பு, நேர்மை, சிந்தனைகள் காணாமல் போயிருக்கின்றன.
ரௌத்திரம் கூடப் புதியதாய்த் தெரிகிறது.
இந்தியச் சமூகத்தில் பிரபலங்கள் அந்நியப் பொருளுக்குஅதிமகாய் விளம்பரம் கொடுக்கிறார்கள். இதனால் மக்களிடம் உள்நாட்டு உற்பத்தி பற்றித் தாழ்வு மனப்பான்மை உள்ளது. தாய்மொழி புறக்கணிப்பு, முளைக்கும் பருவத்திலேயே விரித்த சிறகுகள் வெட்டப்படல், மேற்கத்திய கலாச்சார மோகம் இவைகளினால் வெளிநாடுதான் சொர்க்க பூமியாகத் தோன்றுகிறது. சுயமாகச் சிந்தித்துச் செயல்பட்டுப் பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த முன்னோர்கள் பற்றி யாருக்கும் எதுவும் தெரிவதில்லை. நாமும் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதே யாருக்கும் தெரிவதில்லை. எங்காவது யாராவது கண்டுபிடித்துவிட்டால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் செய்கின்ற போக்குப் படித்தவர்களிடம் நிலவுகிறது. இன்றைய கல்விமுறை தன்னம்பிக்கையும் தாய்நாட்டுப் பற்றையும் தரவில்லை. தாய்நாட்டுக் கண்டுபிடிப்பின் மீது எந்த ஒரு நம்பிக்கையும் ஏற்படுத்துவதில்லை.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?