நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 30 August 2014

கயிறு              


கயிறு
          2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழர்கள் நூலிலிருந்தும் நாரிலிருந்தும் பல்வேறு கயிறுகளை  உருவாக்கியுள்ளனர்.  தொழிலுக்குஏற்ற வகையில் பல வகைகளில் அதைப் பயன்படுத்தியுள்ளனர். கயிறு திரித்தல் பற்றி பழமொழிகள் பல உள்ளன. ‘கயிறு திரிக்கிறான்‘ என ஏமாற்றுபவர்களைப் பற்றிக் கூறுகிறோம். ‘தூங்கினவன் தொடையிலே திரித்தவரை லாபம்‘ என்ற பழமொழி, கயிறு தொடையில் வைத்து திரிக்கப்படுவதையும்,அதனால் ஏற்படும் தொடை வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள தூங்கிக் கொண்டிருந்நதவனின் தொடையிலே திரித்து திரித்தவரை லாபம் எனச் செயல்பட்டவர்களைப் பற்றியும் கூறுகிறது.விடுகதைகளும் உள்ளன.இங்கு ஒன்று மட்டும்.  ‘கன்று நிற்க கயிறு மேயுதாம்‘ என்ற விடுகதைக்கு பதில் பூசணிக்கொடி என்பது. ஆனால் அத்தகைய கயிற்றைத் திரித்துத்தான் தமிழன் எப்படியெல்லாம் ஏற்றம் கண்டுள்ளான் என நினைத்தால்  வியப்பாக இருக்கும். சங்க இலக்கியத்தில் தமிழர்கள் பயன்படுத்திய கயிறுகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளன.