நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 30 August 2014

கயிறு



              


கயிறு
          2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழர்கள் நூலிலிருந்தும் நாரிலிருந்தும் பல்வேறு கயிறுகளை  உருவாக்கியுள்ளனர்.  தொழிலுக்குஏற்ற வகையில் பல வகைகளில் அதைப் பயன்படுத்தியுள்ளனர். கயிறு திரித்தல் பற்றி பழமொழிகள் பல உள்ளன. ‘கயிறு திரிக்கிறான்‘ என ஏமாற்றுபவர்களைப் பற்றிக் கூறுகிறோம். ‘தூங்கினவன் தொடையிலே திரித்தவரை லாபம்‘ என்ற பழமொழி, கயிறு தொடையில் வைத்து திரிக்கப்படுவதையும்,அதனால் ஏற்படும் தொடை வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள தூங்கிக் கொண்டிருந்நதவனின் தொடையிலே திரித்து திரித்தவரை லாபம் எனச் செயல்பட்டவர்களைப் பற்றியும் கூறுகிறது.விடுகதைகளும் உள்ளன.இங்கு ஒன்று மட்டும்.  ‘கன்று நிற்க கயிறு மேயுதாம்‘ என்ற விடுகதைக்கு பதில் பூசணிக்கொடி என்பது. ஆனால் அத்தகைய கயிற்றைத் திரித்துத்தான் தமிழன் எப்படியெல்லாம் ஏற்றம் கண்டுள்ளான் என நினைத்தால்  வியப்பாக இருக்கும். சங்க இலக்கியத்தில் தமிழர்கள் பயன்படுத்திய கயிறுகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளன.


  1.பாசக்கயிறு

               தயிர் கடைவதற்கென்றே நிறுவப்பட்ட தூணில் பாசம்என்றும் கயிறைச் சுற்றி, அதை மத்தினோடு இணைத்து மாறிமாறி இழுப்பர். இதனால் மத்தனாது தேய்ந்துள்ளது என முல்லைக்கலி கூறுகிறது. மத்தோடு இணைக்கப்பட்ட கயிறை """"மத்தம் பிணித்த கயிறு"" (கலித். 110 : 10) என்கிறது முல்லைக்கலி. """" குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்தம்"" (நற். 12: 2) தயிர்ப்பானையில் மத்து பாசக்கயிறு கொண்டு கடையப்படுவதையும், இதனால் மத்தின் கால் தேய்ந்துள்ளதையும் இப்பாடல் சுட்டுகிறது.  பாசம் தின்ற தேய்கால் மத்தம்என்ற தொடரில் வரும் பாசம்என்பது கயிற்றைக் குறிக்கிறது. கயிறு திரித்து விற்போரைச் சிலம்பு பாசவர்என்கிறது (17)

2.தாம்புக்கயிறு

மாடு கட்டுவதற்காக முல்லைநில மக்கள் பயன்படுத்தும் கயிறு
                தாம்புஎனப்பட்டுள்ளது. """"தீம்பால் கறந்த கலம் மாற்றி ; கன்று எல்லாம் தாம்பின் பிணித்து"" (கலி. 111 : 1-2)என்ற பாடல் கன்று, மாடு முதலானவற்றை தாம்புக்கயிற்றால் தூணில் கட்டுவர் என்கிறது. மற்றொரு பாடல்,"""------ கன்றோடு செல்வேம்; எம்தாம்பின் ஒருதலை பற்றி"" (கலி.116: 2) மேய்ச்சலுக்காக கன்று, மாடு போன்றவை அழைத்துச் செல்லப்படும் பொழுது, அவை வழிமாறிப் போய் விடாமலிக்க அவற்றின் கழுத்தில் தாம்பு கயிற்றைக் கட்டி மறு பகுதியை கையில் பிடித்து இழுத்துச் சென்றிடுவர் ஆயர் என்கிறது.
3பெரிய வலைக்கயிறு
               பரதவர்கள் கடலில் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கேற்ற வகையில், முறுக்கிய நூலினால் செய்யப்பட்ட வலிமையான கயிற்றைக் கொண்டு வலை தயாரித்துள்ளனர். இத்தகைய  வலிமையான மெல்லிய கயிற்றை உருவாக்குவதற்கு வடிக்கதிர்என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.
""""வடிக்கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்"" (நற். 74) பண்என்பது பாய்மரக்கயிறு என அழைக்கப்பட்டுள்ளது.
               
4 சிமிலிக்கயிறு

                பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு புரிநூல்என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது.முனிவர்களால் கரண்டைஎனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். பலவடமுடையபுரிநூலால்ஆனஉறியானதுசிமிலிஎன அழைக்கப்பட்டுள்ளது."""" கரண்டைப்பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர"" (மதுரைக்காஞ்சி. 483-484) கரகம் என்பதுகரண்டையாகும் (சிறிய பானை).

5 காப்புக் கயிறு

               இறை வழிபாட்டிற்காகச் செல்பவர்கள் எடுத்துச் செல்லும் பூசைக்குரிய பொருட்களில் நூலும் இருந்தது.         """"கயிறும், மயிலும், குடாரியும்"" (பரி. 8 : 97-100)என பரிபாடல் வழிபடு பொருள்களில ஒன்றாக நூலும் இருந்துள்ளது எனக் கூறுகிறது.              """"கைந்நூல் யாவாம்"" (குறுந். 218. 2)

6. அணிக்கயிறு
               தேரில் குதிரை மற்றும் யானைகளைக் கட்டுவதற்காக பயன்படுத்திய கயிறு அணிக்கயிறுஎனப்பட்டது. """"யானை கயிற்று"" (அகம். 128) """"புரவி இழை அணி நெடுந்தேர்"" (அகம். 254 : 12)  இதைத் தற்காலத்தில் கடிவாளக் கயிறு என அழைக்கிறார்கள். .""""செல்க பாக! எல்லின்று பொழுதேவல்லோன் அடங்கு கயிறு அமைப்ப"" (அகம். 224 : 2)குதிரையை அடக்கக் கூடிய வகையில் அதற்குக் கட்டப்படும் கடிவாளக் கயிற்றை மத்திகைஎன்று பரிபாடல் கூறுகிறது

7. பூண்மணிக் கயிறு
ஆயர் தொழுவத்தில் வளர்க்கும் மாடுகளுக்குக் கழுத்தில் நூலினால் கோக்கப்பட்ட மணிகளை அணிவித்துள்ளனர். இதை                 பூண்மணிக்கயிறுஎன அழைத்துள்ளனர்.               """"புல்ஆர் கல்ஆன் பூண்மணி கொல்லோ?""(குறுந். 275: 4)கழுத்தில் பூட்டப்பட்ட மணி பூண்மணிஎன்றும் அதை கட்ட உதவும் கயிறு பூண்மணிக்கயிறுஎனவும் அழைக்கப்பட்டுள்ளது. ஒளிவீசக் கூடிய மணிகளைக் கொண்டு நூலினால் கோக்கப்பட்ட மாலைகளைக் கழுத்தில் தலைவன் அணிந்திருந்தான் என """"கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்"" (புறம். 88 : 4) என தலைவன் அணிந்த மாலையும் நுண்பூண்என குறிக்கப்பட்டுள்ளது.

8. ஊஞ்சல் கயிறு

               ஊஞ்சல் பலகையானது, முறுக்குண்ட உறுதியான கயிற்றினால், மரக் கிளைகளில் கட்டப்பட்டுள்ளது. இக்கயிறு புரிக்கயிறுஎனப்பட்டுள்ளது. புரி என்பது ‘முறுக்கப்பட்ட கயிறு‘ ஆகும். பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிறு ஊஞ்சல் கயிறாகப் பயன்பட்டுள்ளது. பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிற்றை முரற்சிஎன்ற சொல்லாலும்  குறித்துள்ளனர்..""""வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் கை புனை சிறுநெறி வாங்கி"" (நற். 270: 10) என்ற தொடர் கையால் முறுக்கப்பட்ட பலபுரிகளுடைய கயிறு பற்றிக் கூறுகிறது.
 9. பூங்கயிறு

               ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரே பொம்மை யானை, குதிரை, தேர் முதலானவற்றை இழுத்து விளையாடுவர். அவர்களின் மெல்லிய கைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுவதே பூங்கயிறுஆகும்.

""""கவழம் அறியா நின் கைபுனை வேழம் புரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி"" (கலி. 80 : 7-8)சிறுவர், கவளச் சோற்றை அறியாத கையால்  செய்யப்பட்ட  மரயானையை முறுக்கப்பட்ட மெல்லிய பூங்கயிற்றினால் கட்டி அதை இழுத்து விளையாடி மகிழ்ந்தனர் எனக் கலித்தொகை கூறுகிறது.

10. கோர்க்கும் நூல்

""""நெகிழ் நூல் முத்தின்"" (அகம். 289 : 11) என்றொருதொடர் அகநானூற்றில் வருகிறது.இப்பாடலில் நூலறுந்து விழும் முத்துகள் உவமையாக்க் கூறப்பட்டுள்ளன. எதற்கு?நூலறுந்து விழும் முத்துக்கள் போலத் தலைவியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வந்ததாம். மேலேயுள்ள படத்தைப் பாருங்கள் எவ்வளவு பொருத்தமான உவமையை புலவர் கூறியுள்ளார். மற்றொரு பாடலில் மூன்று வடத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை பற்றிக் கலித்தொகை கூறுகிறது. """"கயம் தலை மின்னும் கதிர்விடு முக்காழ்"" (கலி. 80 : 2) என்பது ஒளி வீசுகின்ற மூன்று சரத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை என்பது இதன் பொருள்.அக்காலத்தில் இவ்வாறு நூலைக் கொண்டு பல  வகைகளில் முத்துமாலைகளை உருவாக்கியிருக்கின்றனர்.முத்துமாலை, பொன்மாலை, பூமாலை போன்றவற்றைக் கோர்ப்பதற்கு நூலினாலாகிய சரடு பயன்பட்டுள்ளது. இச்சரடை அடர்ந்த நூல்என அழைத்துள்ளனர்.

11.கிணற்றுக்கயிறு

              கிணறுகளிலிருந்து நீர் இறைப்பதற்கு ஏற்றவகையில் கயிற்றினைப் பாத்திரத்தோடுக் கட்டி பயன்படுத்தியுள்ளனர். இதுவும் முறுக்குண்ட புரிநூலினால் ஆன கயிறு ஆகும்.""""சிரறு சில ஊறிய நீர் வாய்ப்பத்தல்கயிறு குறு முகவை"" (ப.ப. 22 : 13-14)

12. கூத்துக்கயிறு

               கயிறு கட்டி இரு மூங்கில் கழிகளுக்கு இடையே கட்டப்பட்ட அக்கயிற்றில் ஆடுமகள் நடந்து காட்டும் கூத்தே ஆரியர் கூத்து ஆகும். பொதுமக்கள் கூடுமிடங்களில் இக்கூத்தினை நிகழ்த்தி ஆடுமகள் பிழைப்பு நடத்தியதைக் குறுந்தொகை பதிவு செய்துள்ளது.""""ஆரியர் கயிறாடு பறையின்"" (குறுந். 7 : 4)என்ற பாடல் கயிற்றால் ஆடுமகள் நடக்கும் பொழுது பறைக் கருவியில் இசையெழுப்பி வேடிக்கைக் காட்டுவர் எனக் கூறுகிறது.""""------ ஆடுமகள் கயிறு ஊர் பாணியின்"" (குறி. பா : 193-194).

13. வில்ஞாண்

               வில்லின் இருபுறமும் கட்டுவதற்குரிய கயிறு வில்ஞாண்எனப்பட்டது.""""கைபுனை வல்வில் ஞாண் உளர் நீயே"" (கலி. 7 : 6)மெல்லிய வலிமையான ஞாணாகிய கயிற்றைக் கொண்டு தலைவன், தன் கையினால் வில்லின் இருபுறமும் இறுகக் கட்டினான் என இப்பாடல் கூறுகிறது..
18.இடைஞாண்
இடையில் கட்டுவதற்கான மெல்லிய உறுதியான கயிற்றை இடைஞாண் என்றழைத்துள்ளனர். சிறுவர் இடையிலும் காலிலும் ஒலி எழுப்பும் கிண்கிணியை ஞாண் கொண்டு அணிந்திருந்தனர் என """"கிண்கிணி ஆர்ப்போவாஅடி"" (குறுந். 148)என்ற அடிகள் மூலம் அறியலாம்.
                .
14. நுண்கயிறு


                கட்டடக்கலை தொழில்நுட்பத்திலும் கயிறு பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங் காலத்தில் அரசியின் அரண்மனையைக் கட்டும் கட்டடக் கலை நுணுக்கம் அறிந்த தச்சர்கள், மிக நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து அளவினைக் குறித்துக்கொண்டு பின்  கட்டிடம் கட்டியுள்ளனர்.    """"நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு..  .பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து"" (நெல்நடு : 76-78)எனப் பத்துப்பாட்டில் ஒன்றான  நெடுநல் வாடைக் குறிப்பிடுகிறது.

தமிழர்கள் பலவகையானக் கயிறுகளைக் கண்டுபிடித்து அதை பலவித பயன்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.இது போன்ற கயிறுகளை உருவாக்கும் தொழில் நுட்பத்தை அறிந்திருந்ததோடு. அவற்றை உருவாக்குவதற்குரிய கருவிகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள் என நினைத்துப் பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறதெல்லவா?
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?