நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 11 September 2014

ஊடகத் தமிழ்

தொலைக்காட்சி - ஊடகங்களில் தமிழின் நிலை

தொலைக்காட்சி ஊடகங்களில் இன்று பெரும்பாலும் கையாளப்படும் மொழி கலப்பு மொழியாகும்.ஆங்கிலம் கலந்து பேசினால் தான் படித்தவர் என பிறர் நினைப்பார் என்ற தவறான எண்ணவோட்டம் தான் இதற்குக் காரணம். பெரும்பாலான அறிவியல், வர்த்தக,தொழில்நுட்பம் சார்ந்த செய்திகள் தகவல்கள் ஆங்கிலத்தில் வந்து தான் பின்னர் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. இவற்றை உடனடியாகத் தமிழ் மொழிக்கு மாற்றி நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை என்றாலும் இது தமிழ் மொழிக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் பொருந்துகிற ஒன்றுதான். 


தமிழ் இதற்கு முன் சமஸ்கிருதம் கலந்து எழுதப்பட்டு வந்த நிலையில் அதைப் பேசிப் பழகியவர்கள் தமிழால் தனித்தியங்க முடியாது என்றார்கள். ஆனால் தனித்தமிழ் இயக்கம்,திராவிட இயக்கங்கள் தனித்தமிழால் சாதிக்க முடியும் என்று செயல்படுத்திக் காட்டிய பின்னர் தமிழ் தனித்தியங்கியது. சில காலம்தான். இன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகையால் மீண்டும தமிழ் மொழியானது கலப்பு மொழியாக மாற்றப்பட்டு விட்டது. இன்றைக்குத் தகவல் தொழில் நுட்பம் பெற்றிருக்கும் அசுர வளர்ச்சியைப் பார்க்கும் பொழுது, தமிழைக் கலப்பில்லாமல் பேச முடியும் என்பது சாத்தியமில்லாததது போல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது சாத்தியம்தான். தமிழால் பிழைத்துக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் நின்னத்தால் இதைச் சாத்தியமாக்கலாம். ஏனெனில் இவைதான் பாமரமக்களிடம் கூட கலப்பு மொழியைக் கொண்டு சென்றவை. பாலில் தண்ணீர் கலந்தால் கலப்படம்,மிளகில்  பப்பாளி விதை கலந்தால் கலப்படம்,உயிர் காக்கும் மருந்தில் பிற சேர்மம் சேர்ந்தால் கலப்படம் என்றால் தமிழரின் உரிமைக் காக்கும் மொழியில் மட்டும் பிற மொழி கலப்பது கலப்படம் இல்லையா? கலப்படம் சமூக விரோதச் செயலென்றால் அதை மொழியில் செய்து கொண்டிருக்கும் நிலை மட்டும் வளர்ச்சியா?இதை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மலேசிய எழுத்தாள ர்ரெ.கார்த்திகேசு தனது வலைத்தளத்தில் மலேசிய வானொலி, தொலைக் காட்சி ஊடகங்களில் தொடக்கத்தில் இருந்த மொழிக்கலப்பு தற்போது முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது என்றும் இதற்குக் காரணம் திரு. இரா.பாலகிருட்டின்ன் என்றும் பகழாரம் சூட்டியுள்ளார். மலேசிய நாட்டில் ஒரு தனி நபர் செய்யும் பொழுது, தாய் தமிழ் நாட்டில் ஒரு நிறுவனம் அதைச் செய்ய இயலாதா? பத்திரிகையோ, வானொலியோ,தொலைக்காட்சியோ மொத்தத்தில் ஊடகங்களை நடத்தும் நிறுவனத் தலைவர்கள் நினைத்தால் இதைச் சாதிக்கமுடியும் என்பது உண்மை.இன்று சமூக வலைத்தளங்களான முகநூலில் கூட முற்றிலும் ஆங்கிலக் கலப்பற்ற உரையாடல்களைப் பார்க்க முடிகிறது.நம் மக்களிடம் குறையில்லை. ஊடகங்கள்தான் அவர்களைப் பாதிக்கின்றன.

உலக அளவில் தமிழர் விழாக்களின் நிலை

தமிழர்களின் விழாக்களாக தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த பொங்கல், தைப்பூசம் போன்ற பண்டிகைகள், புலம் பெயர்ந்த தமிழர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலை உருவாகி, இன்று உலக விழாக்களாக மாறி வருகின்றன. புதிய தலைமுறை இதழ்தமிழப் புத்தாண்டையும்,பொங்கல்விழாவையும்,தைப்பூசத் திருநாளையும் உலகத் தமிழர்கள் கொண்டாடுகின்ற நிலையைக் குறித்து ஒரு சிறப்பிதழ் வெளியிட்டிந்தது(20.01.2011).லண்டன்,கனடா,சிங்கப்பூர்,மலேசியா நாடுகளிலுள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவைப் பற்றி அங்கு வாழும் தமிழர்களைக் கொண்டு பல கட்டுரைகள் வெளியிட்டிருந்தது.லண்டனிலிருந்து பிபிசி தமிழேரசையின் ஆசிரியர் தி.மணிவண்ணன் மக்களின் இடப்பெயர்வு.பொருளாதாரம்உலகமயமாதல் மற்றும் இணையத்தின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி போன்றவை உலகில் எந்ந மூலையில் வசிக்க நேர்ந்தாலும், கலாச்சார ரீதியான தனிமைப்படுத்தலை மட்டுப்படுத்தியிருக்கின்றன.பண்டிகைக்கு வேண்டிய பொருட்கள் இலங்கைத் தமிழர்களின் கடைகளிலும்,இந்தியர்கள் நடத்தும் கடைகளிலும் தாராளமாய்க் கிடைக்கின்றன.பானையைத் தவிர என்கிறார்(ப-13) (அதுவரையில் குக்கரில் பொங்கல் வைத்து கொண்டிருந்த நான் புதுப்பானை வாங்கி,மாக்கோலம் போட்டு வாசலில் பொங்கல் வைத்துக் கொண்டாடிவருகிறேன்.) சிங்கப்பூரிலிருந்து தங்கமீன் இணையஇதழின் ஆசிரியர் பாலு. மணிமாறன் சிங்கப்பூரில் சீனராக இருக்கும் மேயர் பொங்கல் விழா நடத்த முழு ஆதரவும் தந்து விழா நடத்த சிறப்பான ஏற்பாடுகளையும் செய்து தருவதாகத் தெரிவிக்கிறார். இதில்பொங்கல் வைப்பவர்கள் 60 சதவீதம்தான் தமிழ்ப்பெண்கள். மீதி சீனப்பெண்கள், மலாய்ப்பெண்கள், மியான்மர், அர்ஜண்டைனா பெண்கள் புடவை உடுத்தி பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்கிறார்.விடுமுறை இல்லாதபோதும் அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு இது போன்ற விழாக்களைக் கொண்டாடுவதுதான் சிறப்பு என்கிறார்.(ப-17) மலேசியாவில் ரெ.கார்த்திகேசு மலேசியாவில் பொங்கல் கோயில் சார்ந்தும், பொதுவிழா சார்ந்தும்,பெரும் சமுதாய விழாவாகக் கொண்டாடப்பட்டு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் பதிவாகி வரும் விழாவாக உள்ளது என்கிறார்.(ப-19)மலேசியாவில் தைப்பூசத்திற்கு அரசே விடுமுறை விடும் அளிற்கு மலேயாக்காரர்களும்,சீனர்களும் தமிழர்களோடு சேர்ந்து அவ்விழாவைக் கொண்டாடி வருகின்றனர். கனடா பேராசிரியர் சேரன் தமிழ் இனி ஈழத்தமிழ் மட்டுமல்ல,தமிழகத்தமிழும் அல்ல, கனடாத் தமிழும் அல்ல,இனித் தமிழ் எல்லை கடந்த தமிழ், நாடு கடந்த தமிழ் என்கிறார்.(ப-15)உண்மைதான் உலகமெல்லாம் தேமதுர தமிழோசை முழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கருத்தரங்குகளில் தமிழ் 
தனிநாயக அடிகளால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தும் உலகத் தமிழ் மாநாடுகள் இன்று பல்வேறு இடங்களில் பல்வேறுபெயர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் இன்று நடைபெறும் கருத்தரங்குகள் பலவும் பன்னாட்டு கருத்தரங்குகளாகவே உள்ளன.ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் சங்க இலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. லண்டனில் உலகத் தமிழியல் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கனடாவில் தொறன்றோவில் ஆண்டுதேறும் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுவருகிறது. ஜெர்மனியில் நடத்தப்படும் தற்போதைய மாநாடு 40வது மாநாடாகும். கனடாவில் நடத்தப்பட்ட மாநாட்டின்  போது கலந்து கொண்ட ஜப்பானியப் பேராசிரியர் ஒருவர்,இந்திய சாசனங்கள் மூலம் தமிழர் வரலாறு,தமிழ்ச் சமூகங்களின் அமைப்பாக்கம் பற்றிய அரிய தகவல்களைப் பெற முடியும்  என்று தெரிவித்ததாகத் தமிழர்களின் தொன்மையை அறிவதற்கு தமிழறிஞர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள பலதுறைப் பேரறிஞர்களும் முன் வருவதை கருத்தரங்க அமைப்பாளர் கூறுவதிலிருந்து அறியலாம். (globaltamilnews.net)  ஊடகங்கள் இது போன்ற அரிய தகவல்களை மிக எளிதாக மக்களைச் சென்றடைய துணை புரிகின்றன.


இணையம் என்னும் ஊடகம்

ஊடகம் சமூகத்தின் மிக முக்கியமான தூணாக விளங்குகிறது. அதிலும் இணையம் இன்றைய தினத்தில் மிகச் சிறப்பானதொரு பன்மொழி ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது. பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சி நிலையங்களையும் விட மிக அதிகமாக புதிய உறவுகளை இணைக்கிறது. உலகில் பல பகுதிகளில் சிதறிக் கிடக்கும் ஓரினத்தவரை ஒன்றிணைக்க மிகச் சிறந்த சாதனமாக இணையம் விளங்குகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பார்வையை, தாய்த்தமிழ் நாட்டினர்க்கும், பல நூற்றாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தாய்நாட்டைப் பற்றிய தகவல்களையும் இணையமே இன்று வழங்கிக் கொண்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளை தமிழ்நாட்டைச் சார்ந்த யாரும் விரும்பிச் சென்று வாங்கிப் படிப்பதில்லை. இணையம் அவற்றை இன்று அவரவர்களின் விரல்நுனிக்கே கொண்டு வந்து தமிழர்களைப் பற்றிய விசாலமான பார்வையைத் தந்துள்ளது. தாய்நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இன்று இணையம் வழி அனைத்தும் எளிதில் கிடைக்கின்றன. இணையத்தின் வழி இயங்கும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், ஓரின மக்களுக்குள் தம் மொழியிலேயே கருத்துப் பரிமாற்றம் நடத்திக் கொள்ள உதவியாக உள்ளன. மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் தமிழில் பெருகுவதற்கும், புதிய இலக்கியங்களை உருவாக்குவதற்கும் பெரிய ஏற்பாடுகளை யாரும் செய்யாமலேயே மிக எளிதாக அவையெல்லாம் நடந்து வருவதற்கு இணையமே முக்கிய காரணமாகும்.

தமிழ்மொழியானது இன்று கணினித்தமிழ் என்று புதிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. எந்த மொழி கருத்துப் பரிமாற்றத்திற்கு எக்காலத்திலும், எவ்வடிவத்திலும் எளிதாகக் கையாளப்படுகிறதோ அம்மொழியே வாழும் மொழிஎனப்படும். அவ்வகையில் தமிழ் மொழியானது ஒருங்குறியின் மூலம் உலகம் முழுவதும் கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னைப் பழமைக்கும் பழமையான இம்மொழிதான் இன்று கணினிக்கேற்ற வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டு பின்னை புதுமைக்கும் புதுமையான மொழியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இன்று தமிழகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மட்டும் தெரிந்த ஒரு இல்லத்தரசி கூட தனக்குத் தெரிந்த சமையல் கலையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வலைப்பூவை உருவாக்கி உலகமெங்கும் பாராட்டப்படுகிறார் எனில் அது இணையத்தின் சாதனைதான்.

ஒரு மொழியானது அதைப் பயன்படுத்தப்படுபவரின் எண்ணிக்கையைப் பொறுத்தே வாழ்கிறது. இதற்கு ஊடகங்கள் உதவி புரிகின்றன. அந்தந்த மொழிக்குரியவர்கள் தங்களுக்கென பாதையை ஊடகங்களில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழ்மொழிக்கான பாதை பல்வேறு கணிப்பொறியாளர்களாலும், தமிழறிஞர்களாலும் வலுவாக போடப்பட்டு விட்டது. இந்தப் பாதையில் தமிழ் மிகச் சிறப்பாகவே தன் பயணத்தை தொடங்கி வருகிறது. 1994ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தமிழும் கணிப்பொறியும்என்ற கருத்தரங்கு தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கணினித் தமிழ் மாநாடுகள் தமிழின் சிறப்பான எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிவிக்கின்றன. இம்மாநாடுகளின் விளைவாகவே தமிழ் மென்பொருள்கள் பெருகின. கணினித் தமிழ்ச் சங்கம்தோற்றுவிக்கப்பட்டது.
தொடரும்......

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?