டால்ஸ்டாயின் அன்னா கரினினா,அன்னா என்னும் உயர்குல
பெண்ணின் ஆழ்ந்த தீவிரமான காதலை சித்தரிக்கும் கதை. எனினும், ரஷ்யாவின் செல்வச்
சீமான்கள் நடத்திக் கொண்டிருந்த சோம்பேறித்தனமான ஆடம்பர உல்லாச வாழ்க்கையை,
அவர்களது செயல்களை,
எண்ணங்களை, பொழுதுபோக்குவெட்டிப்பேச்சுகளை,
அவர்களது உள்ளத்தின் இயல்புகளை எல்லாம் உள்ளது உள்ளபடி கலைத் தன்மையோடு விவரிக்கும்
நாவலாகவும் அமைந்துள்ளது.
‘டால்ஸ்டாயின் அன்னா கரினினா வெறும் நாவல் மட்டும் அல்ல
பெரிய காவியம். தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம், மனித சமுதாயத்திற்கு அன்னா
கரினினா ஒரு வரப்பிரசாதம்" எனப் படித்தவர்களால் பாராட்டப்படுகிற அன்னா கரினினா நாவல், எல்லாஅம்சங்களிலும் பரிபூரணமான
ஒரு பெரும் படைப்பு.
நாவலைப் படிக்கும் போது பல வினாக்கள் உள்ளத்தில் எழுகின்றன. காதலுக்கும், குடும்பம் என்ற அமைப்புக்கும்
இடையேயான உறவென்ன? . காதல் இல்லாத திருமணத்தைக் கடமைக்காகச் சுமக்க
வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது
ஒருத்தி என்ற இல்லறஉறவை இழக்க முடியுமா? அல்லது இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது
ஒழுக்கக்கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே
முயங்குகின்றன. எங்கே பிரிகின்றன? இவ்வாறு விடுவிக்க முடியாத பல மையக் கேள்விகளை டால்ஸ்டாய் கதை செல்லும் போக்கில் வாசகர் மனதில் ஏற்படுத்திக்
கொண்டே செல்கிறார்.
டால்ஸ்டாயின்
நாவலில் ரயில் ஒரு குறியீடு. நவீன இயந்திர யுகத்தின் சின்னமாகவே அவர் கதைகளில் ரயில்
வருகிறது, டால்ஸ்டாய் அதை கொஞ்சம்
வெறுப்புடன், நிராகரிப்புடன்
தான் பார்க்கிறார். அது சென்ற யுகத்தின் அரிய மதிப்பீடுகளை, நுண்ணிய உணர்ச்சிகளை
சிதைத்துவிடுகிறது என்று அவர் நினைக்கிறார்.
டால்ஸ்டாய் பொறுத்தவரை அன்னாவின்
பிரச்சினைக்கு காரணமே, சென்ற
கிறித்தவ யுகம் முன்வைத்த (தியாகத்திற்குப் பதிலாக) போகத்தை முன் வைத்த நவீனக்
காலக்கட்ட வாழ்க்கைப் போக்கு தான். அவரது கட்டுரைகளில் கூட அவர் விரிவாக அதைப்
பற்றிப் பேசியிருக்கிறார். ஆடம்பரத்தை, வெட்கமில்லாத நுகர்வை அது முன் வைக்கிறது என்று அவர் நினைக்கிறார்..
அந்த யுகத்தின் பலியே அன்னா.
கதைச்சுருக்கம்
இக்கதையில் வரும் ஆப்ளான்ஸ்கி என்பவன், பல குழந்தைகளைப் பெற்ற
தன் மனைவியின் அழகு குறைந்து விட்டதாகக் கருதி, வேறு பெண்களுடன் உல்லாச வாழ்வு
வாழ்கிறான். அவன் போக்கை அறிந்த மனைவி டாலி, குழந்தைகளுடன் தனது கணவனைப்
பிரிந்து செல்ல முடிவு செய்கிறாள். இந்நிலையில், அவனுடைய சகோதரி அன்னா அங்கு வந்து அவளைச்
சமாதானப்படுத்துகிறாள்.
சகோதரன் குடும்பத்தில் சகநிலையை ஏற்படுத்திவிட்டு
திரும்புகிற அன்னாவின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. விரான்ஸ்கி என்கிறவன்
குறுக்கிடுகிறான். கிட்டி என்னும் பெண்ணை காதலிப்பது போல் நடந்து, அவளை மணந்து கொள்ளலாம்
என்ற நிலைமையை உண்டாக்கியிருந்த அவன், அழகி அன்னா பேரில் மோகம் கொள்கிறான்.
எட்டு வருடத் தாம்பத்திய வாழ்வில் அலுப்பும்,தன்னைவிட
இருபது வயது மூத்தவனான கணவன் கரீன் மீது
கொண்டிருந்த வெறுப்பும் அன்னாவினை இளைஞனான விரான்ஸ்கியைக் காதலிக்கச் செய்கிறது. கணவன் கரீன் ஒரு நிலையில் மாமனிதனாகக்
காணப்படுகிறான். தன்னை வஞ்சித்து அடுத்த ஆணுடன் வாழத் துணிகிற மனைவி அன்னாவை
மன்னித்து விடும் பெரிய மனசை அவன் வெளிப்படுத்துகிறான். ஆயினும், அவளுக்கு தண்டனை
கொடுத்தேயாக வேண்டும் என்று சாதாரண மனித இயல்புடையவனாகவும் தென்படுகிறான். அன்னா
அளவிலா ஆசை வைத்திருக்கும் மகனை அவளது பார்வையில் படாதபடி செய்கிறான். அவள் தேடி
வந்து பார்ப்பதையும் தடை செய்கிறான்.
விரான்ஸ்கி அன்னாவிடம் உண்மையான காதல் கொண்டு,
அவள் விரும்புகிற
படியெல்லாம் நடந்து கொள்கிறான். ஆனாலும் அவனிடமும் அவள் வெறுப்புக் கொள்ளும் நிலை
வந்து சேர்கிறது. அன்னாவின் மன உளைச்சல்களையும், விரான்ஸ்கியின் உணர்ச்சிப்
போராட்டங்களையும் இந்த நாவல் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.அன்னா-விரான்ஸ்கி இவர்களின்
தீவிரமான காதலை, காதல் உறவு வளர்ந்த விதத்தை, அதனால் ஏற்பட்ட விளைவுகளை, பாதிக்கப்பட்ட கணவன், அவர்களுடைய ஏழு வயது மகன் பிரான்ஸ்கி
ஆகியோரின் உணர்வுகளை இந்த நாவல் விரிவாகவும் நுட்பமாகவும் விளக்குகிறது.
விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு கிராமவாசியாக
வசிக்கிற பிரபு லெவின், கிட்டி என்ற பெண்ணை உளமாற நேசிக்கிறான். அவளை மணந்து கொள்ள
ஆசைப்படுகிறான். அவளோ, அவருடைய தாயாரின் வழிகாட்டலின்படி, விரான்ஸ்கியை விரும்புகிறாள். திருமணம் நிகழவிருந்த நிலையில்,
விரான்ஸ்கி அன்னாவுடன் சென்றுவிடுகிறான். கிட்டியை அடியோடு மறந்து போகிறான். இதனால்
கிட்டி வெகுவாகப் பாதிக்கப்படுகிறாள்.
கிட்டியிடம் உண்மையான அன்பு கொண்டிருந்த வெலினின் உணர்வுகளை,
கால ஓட்டத்தில்
கிட்டி புரிந்து கொண்டு,அவனிடம் மெய்யாகவே காதல் கொண்டு, அவனை மணம்புரிந்து
கொள்கிறாள். இருவரது
மண வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள் முதலியவற்றையும் இந்த நாவல் சுவாரசியமாகக் கூறுகிறது.
இதனூடே வாரெங்கா என்கிற அன்பும் மனித நேயமும் கொண்ட
ஒரு பெண்ணின் காதலும், அது நிறைவேறக் கூடும் என்ற தோற்றம் காட்டி நிறைவேறாமலே போகிற சோகமும் இடம்
பெற்றிருக்கிறது.
இறுதியில், அன்னா அமைதியிழந்து, விரக்தியும் வெறுப்பும் கொண்ட மனநிலையுடன், ஓடும் ரயிலின் முன்
விழுந்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறாள். உயர்ந்த காதல் கதை சோக காவியமாக
முடிகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?