நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 26 March 2022

ஐசுகிரீம்

காயத்ரி காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கவே, அடுப்பை அணைத்து விட்டு கதவை நோக்கி விரைந்தாள். குழந்தைகள் எங்கே விழித்துக் கொண்டு விடுமோ என்று. ‘‘யாரது இருங்க வர்றேன்’’ என்று குரல் கொடுத்த படி சென்றாள். கதவு திறந்ததும் பார்த்தால் இஸ்திரி கடைக்காரர் மனைவி சுத்த பட்டிக்காடு காலிங் பெல்லை அழுத்திக் கொண்டே நின்றிருந்தாள். கதவு திறந்த ஓசை கேட்ட பின்தான் நிறுத்தினாள். காய்த்ரிக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அவள் மற்றொரு கையில் மடக்காமல் இஸ்திரி போட்ட துணிகளை வைத்திருந்தாள். நாலு சட்டை காலு பேண்ட் அவ்வளவு தான். காயத்ரியைப் பார்த்தவுடன், கள்ளமில்லாமல் பல் தெரிய சிரித்தாள். பல் பளிச் சென்றிருந்தது. கண்கள் அதை விட பளிச்சென்றிருந்தது. வழிய வழிய எண்ணெய் தடவி நுனி வரைரிப்பனில் இறுக்கிக் கட்டிய சடையை, பந்து போல சுற்றித் தலை உச்சிக்குக் கொஞ்சம் கீழே பிச்சாடை போட்டிருந்தாள். கருத்த ஒல்லியான எலும்பு துருத்திய தேகம். ருவிக்கை சிவப்புக் கலரில் தோளிலிலிருந்து சற்று தொள தொளத்து இறங்கியிருந்தது. வளையமும் பூக்களும் என்ன டிசைன் என்று கண்டு பிடிக்க முடியாத எல்லா டிசைன்களும் இருந்த மெல்லி வாடாமல்லி வண்ணத் துணிச் சீலையைச் சுற்றியிருந்தாள். அவள் உயரம் குறைவாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தால் உயரமாகத் தெரிந்தாள். நாற்பது வயதுக்கு மேலே இருக்கும் ஆனால் முப்பது வயதிற்குள் தான் என நினைக்கும் படி இருந்தாள். ‘‘என்ன வெங்கம்மா ஊரிலிருந்து இப்பத்தான் வந்தியா. எத்தன தடவ சொல்றது. காலிங் பெல்லைத் தொட்டு அழுத்திக்கிட்டே இருக்காதுன்னு. அழுத்திட்டு கையை எடுத்திடணும் சொல்லி இருக்கனில்லை’’ என்றாள் காயத்ரி கொஞ்சம் கோபம் தணிந்து. ‘‘அட நீங்க ஒண்ணுமா தா அந்த அஞ்சாம் நெம்பர் ஊட்ல அந்தச் சுட்சியை அழுத்திட்டு எடுத்தா வரவே மாட்டங்கறாங்க. எம்புட்டு நேரமா நிக்கறது. இப்படி அழுத்தினா தான் காதே கேட்கறது, அவிங்க போலப் பல ஊட்ல இப்படித்தாம்மா. அதனால தான்........ இழுத்தாள். ‘‘சரி, சரி கொண்டா..... நானே கொண்டாந்து பணத்தைத் தாரேன். நீ மறுபடி வராதே’’ என்று அனுப்பி வைத்தாள். எல்லாச் சட்டையும் பல நீல வண்ணத்தில் கட்டம் போட்டு இருந்தது. சில நேர்க்கோடு, சில குறுக்குக் கோடு, சில சதுர கட்டங்கள் என..... சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தாள். ‘தம்பி இந்தப் புளு கலர்ல இருந்து என்றைக்குத் தான் மாறுவானோ’ என்று நினைத்தபடி, தம்பியின் சூட்கேஸில் அடுக்கி வைத்தாள். வெண்ணந்தூரிலிருந்து பாஸ்போர்ட் எடுக்கும் விசயமாக அவள் தம்பி மூர்த்தி சேலம் வந்திருந்தான். துபாயில் அவள் கண்வன் ரகுநாதன் பணிபுரிகிறான். பி.இ., முடித்த கையோடு மூர்த்திக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியிருந்ததால், அது தொடர்பான வேலையைச் சென்றியிருக்கிறான். கணவனை நினைத்ததும் பெருமூச்சு அவளையறியாமல் வந்தது. நந்தினி பிறந்து ஆறு மாதத்தில் துபாய் சென்றவன் தான் இப்போது நந்தினிக்கு இரண்டு வயது. மகன் சந்தனுவிற்கு நான்கு வயது. நடுவில் ஒரே ஒரு முறை நந்தினிக்கும் சந்தனுவிற்கும் முடி எடுப்பதற்காக வந்திருந்தான். அந்த ஒரு வாரம் கடைகளுக்கும், அழைப்பிற்கும், கோவில் சார்ந்த சடங்குகளுக்குமே அலைய வேண்டியதாகி விட்டது. காது குத்திய குழந்தையை இரவு முழுவதும் சமாதானப் படுத்துவதற்கே சரியாகப் போய் விட்டது. அழுதழுது நந்தினி மடியிலேயே சேலை முந்தானையைப் பிடித்த படி உறங்கி விட்டாள். சிறிது அசைந்தாலும், திடுக்கிட்டு பயந்து அழ ஆரம் பித்துவிடுவாள் என்பதால் அப்படியே சுவரில் சாய்ந்து உறங்கியது நினைவிற்கு வந்தது. இரகுநாதனும் மகன் அருகில் படுத்து அலுப்பில் உறங்கி விட்டான். அடுத்த இரண்டாவது நாளே கிளம்ப வேண்டி இருந்ததால், அடுத்தடுத்து அவனுக்குரிய பொருட்களை வாங்குவதற்கும், அடுக்குவதற்குமே சரியாகப் போய்விட்டது. ஆசையாக ஒரு வார்த்தை சுடப் பேசாததும், கையைப் பற்றிச் சிறிது நேரம் உட்காராததும் நினைவிற்கு வந்து கண்களில் நீர் தளும்பியது. இதோ இப்போது தம்பி மூர்த்தியும் கிளம்பப் போகிறான். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது ஒரு வகையில் ஆறுதல் என்றாலும், இன்னொரு வகையில் பெற்றோரையும், மாமியார் மாமனார்களையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு அவள் தலையில் விழுந்திருந்தது. ‘கையைப் பர்ஸில் விட்டால் பணம் இருக்கு. ஆனால் சமயத்திற்குக் கை கொடுக்க யாரிருக்கா’ நினைவலைகளில் சிக்கித் தவித்தாள். காயத்ரி வீட்டைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டாள். அந்த வீடு ரகு அனுப்பித் தந்த பணத்தில் வாங்கியது. ஒரு அரசு அதிகாரி இடமாறுதலாகி சேலம் வந்திருந்த போது கட்டியது. ழுத்து வருடத்திற்குப்பிறகு இப்போது ஓய்வு காலத்தில் சொந்த கிராமத்திற்குச் சென்ற போது, அந்த வீட்டை விற்று விட்டுச் சென்று விட்டார். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு என்பதால், அருமையாகப் பராமரித்திருந்தார்கள். புது வீடு போலவே இருந்தது. காயத்ரிக்கு அந்த வீட்டைப் பார்த்தவுடன் பிடித்துப் போய் விட்டது. பத்து வருடத்திற்கு முன் கட்டிய வீடு போலவே இல்லை. முன் பக்கம் நிறைய இடம் விட்டு மையத்தில் இருபது அடிக்கும் பாதை விட்டு, இருபக்கம் பல வித மரம் செடிகளை வளர்த்திருந்தார்கள். வெளியே கேட் தற்ற முடியாத அளவிற்குக் கனமாக அமைத்து இருந்தார்கள். கீழே மூன்று படுக்கையறை கொண்ட வீடாக இருந்தது தான் காயத்ரியைக் கவர்ந்தது. ஒவ்வொரு அறையிலும் கழிவறை இருந்தது. சமையலறை தான் சிறியது போல தோன்றியது. மீதி இடத்தில் டைனிங் டேபிள் அடைத்துக் கொண்டது. ரகுவை வீட்டைப் பார்க்கச் சொல்லி பலமுறை அழைத்தும் அவனால் வர இயலவில்லை. அவள் பெற்றோரை முன் வைத்து வாங்கச் சொல்லி விட்பின் மூர்த்திதான் அந்தச் சமயத்தில் அலையாய் அலைந்து காயத்ரி பெயரில் வீடு பதிவு செய்ய உதவிகளை வீட்டின் பின்புறமும் பத்தடி விட்டு சுற்றுச்சுசூழல் இருந்தது. வசதியான வீடுதான். ஆனால் கணவன் வறாமலே, ஊரிலிருந்து மாமனார் மாமியாரை அழைத்து வந்து வீடு புண்ணியத் தனம் செய்தாள். கணவனுக்குப் போட்டோ அனுப்பி வைத்தாள். பின்னால் நட்டு வைத்து வேப்பங்கன்று தளதளன்னு ஓங்கி உயர்ந்திருந்தது. மருதாணி மரமும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. மருதாணியைப் பார்க்கும் போதெல்லாம் ஆசையாய் வரும். மருதாணி வைத்துக் கொண்ட நாள்களெல்லாம் நினைவிற்கு வந்து பாடாய் படுத்தும். மருதாணிதான் அவளும் இரகுவும் சந்திப்பதற்குக் காரணமாக இருந்தது. வலசையூரில் இருந்த பெரியம்மா வீட்டுக்கு அக்கா திருமணத்திற்காகப் போயிருந்தது போது, காயத்ரி கல்லூரியின் இறுதி ஆண்டுப் படித்துக் கொண்டு இருந்தாள். ஒரு வாரம் முன்னதாகவே சென்று விட்டாள். பெரியம்மா பெண் ரமணிக்கு எல்லா உதவிகளையும் செய்தாள். பலமுறை வலசையூர் சென்றிருப்பதால், அந்த ஊர் அவளுக்கு அத்துபடி. டைலர் கடைக்கு, பொட்டு கடைக்கு, பூக் கடைக்கு, துணிக் கடைக்கு என எல்லா கடைகளுக்கும் பெரியம்மாவும் காயத்ரியுமே சென்று வந்தார்கள். பெரிய பெரிய பைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு வருவதும், அதைப் பிரித்து உரிய இடத்தில் வைப்பதுமாக பொழுது போனதே தெரியவில்லை. வலசையூர் பிள்ளையார் கோவில் தெரு மையப் பகுதி என்பதால், சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும். பழைய காலத்து ஓட்டு வீடு. நடுவில் படிக்கட்டு இருபுறமும் சன்னல் கம்பிகள் பதித்த வீடு சன்னல் வழியாக, ஓரத்தில் கட்டப்பட்டிருந்த நீண்ட திண்டில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது காயத்திற்கு மிகவும் பிடித்த விசயம். ஆங்கிருந்த படியே நாலு முழ பூவையும் கட்டி விடுவாள். நுல்ல காற்று வீசும் சன நடமாட்டத்தைப் பார்த்த படி வேலை செய்வது களைப்பைத் தராது. ஒரு கிலோ பூண்டைக் கூட முறத்தில் எடுத்து வந்து திண்டில் அமர்ந்து உறித்து விடுவாள். அப்படி அமர்ந்து முருங்கைக் கீரை உறித்த போது தான் மருதாணி நினைவிற்கு வந்தது. அடடா, கல்யாணப் பெண்ணுக்கு மருதாணி வைக்கணுமே. ‘பெரியம்மா பெரியம்மா’ என்று அழைத்த படி உள்ளே சென்றாள். உரலில் எதையோ ஆட்டிக் கொண்டிருந்த பெரியம்மா நிமிர்ந்து பார்த்தாள். பல நாள் தூக்கமிழந்த கண்கள், ஓட்டிப் போன கன்னங்கள், வாடிப் போயிருந்த முகம் வார மறந்த தலை என மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். ‘‘என்ன காயத்ரி. ஏன் இப்படி அரக்க பரக்க வர்றே’’ என்றாள். ‘‘பெரியம்மா முக்கியமான ஒண்ணை மறந்துட்டம்’’ என்ன? ‘‘அக்காவுக்கு மருதாணி வைக்கணும்ல. அப்புறம் நாளைக்கு மருதாணி கூட வைக்கலியான்னு மாப்பிளை வீட்ல நினைக்கமாட்டாங்க’’ என்றாள். ‘‘அட ஆமா எப்படி மறந்தோம். நல்ல வேளை காயத்ரி. அப்புறம் பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கல, அதனால தான் மருதாணி கூட வைக்கலன்னு பெரிய பிரச்சனையாய் போயிடும். நீ என்ன பண்ணு இந்தா நம்ம தெருவுக்குப் பின்னால தெருவுல வடக்கால மஞ்சள் பெயிண்ட் அடிச்ச வீட்டுல பின் தோட்டத்தில் மருதாணி மரமிருக்குது. ஒரு மஞ்சப் பையை எடுத்துட்டுப் போயி கொஞ்சம் பறிச்சிட்டு வரயா’’ ‘‘நானா? தனியாவா? ‘‘காயத்ரி மிரண்டாள். ‘‘ஒண்ணும் பயமில்லை. அது நம்ம பங்காளிங்க வீடு தான். உங்கன பெரியப்பாவுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம். உங்க அம்மால யெல்லாம் நல்லாத் தெரியும். அந்த வீட்டில அம்மாக்கண்ணுனு ஒரு வயசான அம்மா இருக்குது. அவிங்க கிட்டச் சொல்லிட்டு கொஞ்சம் பறிச்சிட்டு வந்திடுமா’ என்றாள் கெஞ்சலாக. காயத்ரி வேறு வழியின்றி மஞ்சப் பையை எடுத்துக் கொண்டு இளம்பினாள். பெரியம்மா வீட்டுப் பின் பக்க தெருவிற்கெல்லாம் அவள் போனதேயில்லை. ஒரு வழியாக மஞ்சள் பெயிண்ட் அடித்த வீட்டைக் கண்ட பிடித்து விட்டாள். இரண்டு மூன்று வீடுகள் இருந்தாலும், நல்ல அகலமான வீடு தான் பெரியம்மா சொன்ன வீடுன்னு முடிவு செய்து, வெளியே நின்று கூப்பிட்டாள். கால் தான் கடுத்ததே தவிர, யாரும் வரவில்லை. காலிங் பெல் அடித்தாள். எந்தப் குரலும் ஆளும் வரவில்லை. திரும்பப் போய் விடலாமா என யோசித்தாள். சிறிது நேரம் பொறுத்தம் பார்த்தாள். அந்த வீட்டின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நடந்து பார்த்தாள். எதிர் வீட்டிலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள். ‘‘யாரது’’ காயத்ரி பயந்து போனாள். பெரியம்மா பெயரைச் சொன்னாள். மருதாணி தேவை பற்றிச் சொன்னாள். ‘‘ஓ கல்யாணக்காரங்க வீடா, உள்ள வயசான அம்மா தான் படுத்திருப்பாங்க. சரியா காது கேக்காது நீ பக்க வாட்ல இருக்கிற சந்து வழியா, பின் தோட்டத்துக்குப் போலாம். வேணுங்கறத பறிச்சிக்க. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க’’ எதிர் வீட்டு பருத்த வயதான பெண்மணி வழி காட்டினாள். ‘‘அம்மா நீங்களும் கொஞ்சம் கூட வாங்கலேன். எனக்கு பயமா இருக்கு’’ என்றாள். ‘‘ஒரு பயமும் இல்ல. வாசலை அப்படியே விட்டுட்டு வர முடியாது. நான் இங்கையே இருக்கறேன். நீ போயி பறிச்சிட்டு வா. எல்லாம் நம்ம வீடு தான்.’’ என்றாள். காயத்ரி வேறு வழியின்றி பக்கத்து சந்து வழியாக உள் நுழைந்தாள். கீழே இருந்த இளைகளை எல்லாம் வெட்டி விட்டிருந்தார்கள். காயத்ரி வேறு வழியின்றி எக்கி எக்கி பறிக்க ஆரம்பித்தாள். இரண்டு கிளை தான் பறித்திருப்பாள். கீழான கிளைகள் வெட்டப்பட்டிருந்ததால் உயரமாக இருந்த்தில் பறிக்க, அங்கிருந்த பித்தளைக் குடத்தைக் கவிழ்த்து வைத்து அதன் மேல் ஏறிப் பறிக்கலாம் என அதைக் கையில் எடுக்கப் போனாள். ‘‘யாரும்மா நீ’’ என்று ஒரு அதிகாரக் குரல். காயத்ரி வெல வெலத்துப் போனாள். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. பேந்த பேந்த முழித்தாள். சத்தம் வந்த இடத்தில் ஒரு இளைஞன் நின்றிருந்தான். கை வைத்த பனியன் போட்டிருந்தான். நகரத்து இளைஞன் போல தோற்றம். முகம் சாந்தமாகத் தான் இருந்தது. குரல் தான் கடு கடு வென்று, அவள் முழிப்பதையும், கையிலிருந்த மஞ்சள் பையையும் பார்த்தான். ‘‘மருதாணி வேணுமா’’ என்றான். காயத்ரிக்குக் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். ‘‘சரி சரி நேத்து தான் கீழயிருக்கிற கிளையெல்லாம் வெட்டினேன். நேத்து வந்திருந்தா பாதி மரமே கிடைச்சிருக்கும்’’ என்றபடி கையை நீட்டினான். காயத்ரி ஊமையாகி விட்டதால், பையை நீட்டினாள். அவன் அவளைச் சட்டை செய்யாமல் மரக்கிளையை வளைத்து, சடசட வென பல கிளைகளை முறித்தான். பக்கத்திலிருந்த தேங்காய் நார் கயிற்றில் கட்டிக் கீரைக் கட்டு போல அவளிடம் கொடுத்தான்.` அவ்வளவு தான். காயத்ரி அதை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்து விட்டாள். அவளுக்கு, அக்கா கல்யாணத்தில் மொய் எழுதும் வேலை. பெரும்பாலும் எழுதியாயிற்று இன்னும் ஓரிருவர் தான். ‘‘என்ன மருதாணி நல்லா சிவந்துச்சா’’ குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தாள். நேற்று மருதாணி ஒடித்துக் கொடுத்தவன் தான் புன்னகையோடு நின்றிருந்தான். தன்னையறியாமல் கைகளை வரித்துக் காட்டினாள். செக்குச் செவேலேன்று சிவந்து, அவள் விரல்கள் மிக அழகாகி இருந்தன. உள்ளங்கையில் வட்ட வடிவ பொட்டு போன்று சிவந்திருந்த பகுதியில், ஒரு சிவப்பு ரோஜோவை வைத்தான். அவள் சுதாரிக்கும் முன்பே, வெற்றிலையில் மொய் பணம் வைத்து, ரோஜா பூ பக்கத்தில் வைத்தான். அந்தக் கணம் அவள் தன்னை மறந்தாள். இதழ்களின் புன்னகை மலர அவன் அங்கிருந்து அகன்று விட்டான். அதற்குப் பிறகு, அவர்கள் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. பெரியம்மாவுடன் தான் பெரும்பாலும் வெளியே கிளம்பினாள். என்றாலும் வழியில் எப்படியாவது அவன் எதேச்சையாகத் தட்டுப் பட்டுக் கொண்டிருந்தான். பதினைந்து நாள் போனதே தெரியவில்லை. ஊருக்குப் போக வேண்டும் என்று அம்மா தொண தொணக்க ஆரம்பித்து விட்டாள். ‘இன்று கிளம்பலாம்’ அம்மா சொன்னதிலிருந்தே மனம் நைய ஆரம்பித்து விட்டது. வேறு வழியில்லை. கல்லூரிக்குப் போக வேண்டும். வந்த வேலை முடிந்தது. பெரியம்மா வீடு பழைய நிலைக்கு வந்து விட்டது. உறவினர்கள் வருகை, விருந்து எல்லாம் முடிந்து விட்டது. கையிலிட்ட மருதாணி கூட மறைய ஆரம்பித்து விட்டது. ‘‘காயத்ரி மேல படிக்கிறியா’’ என்றார் அப்பா. உடனடியாக தலையாட்டினாள். அதே கல்லூரியில் எம்.ஏ., இரண்டு வருடம் சேர்ந்த நாள் தான் நினைவிற்கு வருகிறது. அதற்குள் டிகிரி வாங்கியாகி விட்டது. அவன் நினைவுகள் எப்போதாவது வந்து இம்சை செய்யும். அன்று பெரியப்பா வந்திருந்தார். என்னம்மா படிப்பெல்லாம் முடிஞ்சுதா. இல்ல அவ்வைப் பாட்டி மாதிரி படிச்சிக்கிட்டே இருக்கப் போறியா’’ என்றார். அவள் அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள். ‘‘நீ போயி பெரியப்பாவிற்கு டீ போட்டு எடுத்திட்டு வாம்மா’’ என்றார். உள்ளே போகும் போது, ‘‘அந்த சாதகம் பொருந்தி வருதுங்க. பையனைப் பத்தி விசாரிச்சீங்களா’’ என்ற குரல் தொடர்ந்தது. ‘‘அட அது நம்ம இராமனோட புள்ளைங்க சென்னையில போயி பி.இ., படிச்சிருக்கானாமா. அங்கியே வேலை. உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு நல்லா தெரியும். ரமணி கல்யாணத்துல புள்ளைய பார்த்துருக்கான். புடிச்சி போச்சி. அப்பத்தான் வேலைக்குப் போக ஆரம்பிச்சதினால, ரெண்டு வருசம் போகட்டுமின்னு, இப்ப பொண்ணு கேட்டு வந்திருக்காங்க, என்றார். காயத்ரிக்கு நிலை கொள்ளவில்லை. அவனாக இருக்குமா? இல்ல வேற யாராவதா? அவன் பேரு கூட தெரியாதே. ஐயோ கடவுளே இது அவனாகத் தான் இருக்கணும் என்று வேண்டிக் கொண்டாள். அவள் குரலைக் கடவுள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார். அவனே தான். அவளைப் பற்றி விசாரித்த படியே தான் இருந்திருக்கிறான். அவள் படிப்பு முடியட்டும்னு காத்திருந்திருக்கிறான். சென்னையில் நல்ல வேலை. இரண்டு பேரில் இவன் இளையவன். அவன் அப்பா புகையிலை வியாபாரம் செல்கிறார். வலசையூரிலிருந்து குடிபெயர்ந்து சென்னைக்குப் போய் ஆறு வருடங்கள் ஆகிறது. மூத்தவனுக்குத் திருமணம் வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. மூத்தவன் பள்ளிக் கூட ஆசிரியராக சென்னையில் வேலை பார்க்கிறான். இளையவனுக்குப் படிப்பிற்கு மூத்தவன் தான் உதவி வருகிறான். அப்பா எல்லாவற்றையும் விசாரித்துவிட்டார். பின் பெண் பார்க்கச் சம்மதித்தார். காயத்ரிக்கு அவனைத் தன் வீட்டில் மீண்டும் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பும், அவன் தான் மாப்பிள்ளை என்பதும் சிறகடிக்க வைத்துக் கொண்டிருந்தது. அதே புன்னகை மாறாத கண்கள். இன்னும் தோள் பட்டை அகலமாகி கம்பீரமாக இருந்தான். காயத்ரியைப் பார்த்து அவள் கண்களில் எதையோ தேடினான். ஒரு கணம் தான் காயத்ரி அவனை நிமிர்ந்து பார்த்தது. அதற்குள் வேர்த்து விறுவிறுத்து விட்டது. தொடர்ந்து விருந்து, சடங்கு நலுங்கு என நாட்கள் நகர்ந்தன. ஒரு நல்ல நாளில் ரகு காயத்ரியின் கையைப் பிடித்தான். நான்கு வருடங்கள். அவள் வாழ்வில் மறக்கவே முடியாத அற்புதமான நாட்கள். ரகு அதிகமாகப் பேச மாட்டான். ஆனால் அவனுடைய ஆழமான காதலை காயத்ரி உணரும் தருணங்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்தன. ஒவ்வொரு நாளும் இனிமையும் கலகலப்புமாகக் கழிந்தது. படிப்புக் கடனும், கல்யாணக் கடனும் ஒரு புறம் இருந்தே வந்தன. அவனுடைய அண்ணன் லோன் போட்டு வீடு வாங்கியதிலிருந்து, அதைப் போய் பார்த்து விட்டு வந்த நாளிலிலிருந்து, ரகுவிற்கு பணப்பித்து பிடித்துவிட்டது. அவனுடைய துபாய் நண்பன் வழிகாட்ட, பார்த்த வேலையை விட்டு விட்டு, சேலத்திலிருந்துத் துபாய் சென்று விட்டான். காயத்ரியின் நிலை தான் சொல்லும் நிலையிலில்லை. அவளுக்குத் துளி கூட விருப்பமில்லை. ஆனால், எதிர் கால குழந்தைகளின் நலனைக் காரணம் காட்டி கிளம்பி விட்டான். தனித்து கொடும் வெயிலில், பாலை நிலத்தில் விட்ட மான் குட்டி போல மாறிப் போனாள். பணம் அனுப்பிக் கொண்டு தான் இருந்தான். ஒரு குறையும் அவனைச் சொல்ல முடியாது. ஆனால் வாங்கிய வீட்டைப் பார்க்கவும், வசிக்கவும் இல்லாமல் அடுத்த இலக்குகளை காரணங்கள் காட்டி, துபாயில் தங்க ஆரம்பித்திருந்தான். இரண்டு வருடம் தான் என்றவன் இப்போதும் இன்னும் இரண்டு வருடங்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். போதாததற்கு மூர்த்திக்கும் ஆசை காட்டி அவனையும் அழைத்துக் கொண்டிருக்கிறான். ‘‘என்னக்கா வேப்பமரத்து கீழயே ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கிற. இன்னொரு புத்தராகணும்னு ஆசையா’’ என்றபடி தோட்டத்திற்கு வந்தான் மூர்த்தி. ‘‘எனக்கு ஞானம் வந்து என்ன பிரயோசனம் வர வேண்டியவங்களுக்கு வரணுமே’’ ‘‘என்னக்கா நீ இப்ப பணம் இல்லன்னா எதுவுமில்லை. இந்த வீடு, பிள்ளைங்க படிப்பு, சோபா, பிரிட்ஜ் இதெல்லாம் அத்தான் இங்கிருந்திருந்தா வாங்க முடியுமா? கடனைக் தான் அடைச்சிருக்க முடியுமா?’’ என்றான். ‘‘ஆனா சந்தோசமா இருந்திருப்பமுல்ல’’ என்றான். ‘‘என்னது. அக்கா இதெல்லாம் இல்லாம இருந்து அத்தான் கடனோட உன்கூட இருந்திருந்தா தினமும் சந்தோசம் வந்திருக்காது. சண்டை தான் வந்திருக்கும்.’’ ‘‘உன் மண்டை. உனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்’’ ‘‘இப்ப உனக்கு என்ன குறை? ரமணியாக்காவ பாரு. இன்னும் வாடகை வீடு. வாய்க்கும் வயித்துக்கும் போதாத வாழ்க்கை.’’ ‘‘ஆமா, ஆனா அத்தான் அக்காவ நல்லா வச்சிருக்காருல்ல இதுவரைக்கும் இனுக்குப் புனுக்குனு ஒரு சங்கதி வந்திருக்குமா’’ ‘‘ஆமா நீ தான் மெச்சிக்கணும் அங்க மீனாட்சி ஆட்சியில்ல நடக்குது’’ ‘‘போடா. ஆனா அத்தானுக்கு அந்த ஊருல நல்ல மதிப்பிருக்குது. அவரு சொன்னா தான் கோயில் விழாவுல கூட எடுபடுது. என்ன சுயநலமில்லாத மனுசன். பொது விசயத்தை எத்தனை எடுத்துச் செய்யறாரு. லட்சக்கணக்குல பணம் கைல புரளுது. ஆனா, தனக்குன்னு அஞ்சு காசு எடுத்துக்காத நல்ல மனசு. ஆனா அவரு கடையில பெருசா வருமானமில்ல. ‘‘மீனாட்சி அக்கா அத குறையாவே எடுத்துக்கறது இல்ல. அவரோட நல்ல மனசே அவளோட மனச நிறைச்சிருச்சி,’’ ‘‘இப்ப என்னங்கற பணம் தேவையில்லங்கறயா’’ ‘‘உனக்கும் உன் அத்தானுக்கும் ஒண்ணும் புரியாது. பேசி என்ன பிரயோசனம். சரி வா சப்பாத்தி எடுத்து வைக்கறேன்’’ என்றபடி உள்ளே சென்றாள். ‘‘ஒண்ணுமே புரியல, உலகத்துல. என்னமோ நினைக்றே..... எதுக்கு என்ன திட்டறே’’ என்று பாட்டு பாடிய படியே மூர்த்தி பின் தொடர்ந்தான். காயத்ரி சிரித்து விட்டாள். ‘‘சரி பாரு. உன் சூட்கேசுல அயர்ன் பண்ண துணியெல்லாம் வைச்சிருக்கிறேன். நானு சாப்பாடு எடுத்து வச்சிட்டுக் கடை வீதி வரை போயிட்டு, வரேன்” எனக் கிளம்பினாள். ஏதோ நினைத்தவளாய், “மூர்த்தி .... பிள்ளக ரெண்டும் நல்லா தூங்குதுங்க முழிச்சா கொஞ்ச நேரங்கழிச்சி சப்பாத்தி எடுத்துக் குடுத்திடு. கார்டூன் படம் போட்டுவிடு. நான் சீக்கிரம் வந்திடறேன்’’ என்றாள். ‘‘சரிக்கா. சீக்கிரம் வந்திடு சின்னத சமாளிக்க முடியாது என்னை மாட்டி விட்டுடாதே’’ என்றான் கெஞ்சலாக. ‘‘பார்க்கலாம், பார்க்கலாம். தனியா இருந்து பாத்தா தான தெரியும்’’ என்றபடி கிளம்பினாள். தெருவே வெறிச் சோடியிருந்தது. முழுவதும் அரசு ஊழியர்கள், வேலைக்குச் செல்பவர்கள் இருக்கும் பகுதி அது. சில வீடுகளுக்கு முன் கூர்க்காக்கள் இருந்தார்கள். சுற்றுச் சுவரைத் தாண்டி அதுவும் தெரியாதளவிற்கு உயரமான மரங்கள். அசோக மரங்கள், மே பிளவர் மரங்கள், புங்க மரங்கள், வேப்ப மரங்கள் நிறைந்த வீடுகள். வீட்டுக்குள் குளுமையை அவை தருகின்றனவோ இல்லையோ வீதிக்குள் சருகுகளைத் தந்து கொண்டிருந்தன. நெடுக இரு பக்கம் சுற்றுச் சுவர்கள் இருந்ததால், காற்று தெருவிற்குள் மண்ணைச் சுருள வைத்துக் கொண்டிருந்தது. புடவை படபடக்கத் தெருவிற்குள், கடைசியிலிருந்த இஸ்திரி கடை நோக்கிப் போனாள். அங்கு வழக்கமான தாத்தா இல்லை. புதிய ஆள் இருந்தான். இருபத்தைந்து வயதிற்குள் இருக்கும். பக்கத்தில் காலையில் துணி கொடுத்த பெண் நின்று கொண்டிருந்தாள். ஓரமாகப் பல மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, இஸ்திரி வண்டியில் ஓரமாக இடதுபுறம் துணிகள் இஸ்திரி போடப்பட்டு மடித்து வைக்கப்பட்டிருந்தன. வலது புறம் மிகக் கனமான இரும்பு இஸ்திரி பெட்டி, ஒரு பிரமனை மீது வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கங்குகள் பக்க ஓட்டைகள் வழியே தெரிந்தன. இப்போது தான் கரியை மாற்றியிருப்பான் போல. அந்த ஆள் வியர்வையில் நனைந்திருந்தான். ‘‘அம்மா இந்தாங்க காலையில் கொண்டு வந்தீங்கல்ல’’ அதுக்கான பணம் என்று அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். ‘‘அவளோ தயங்கிய படியே எவ்வளவுன்னு தெரியலயேம்மா. ஐயா புது வண்டி வாங்கப் போயிருக்காரு. நுhளக்கு வாங்கிடறேனே’’ என்றாள். ‘‘புது வண்டியா ..... ஸ்கூட்டரா’’ ‘‘அவள் வெட்கத்துடன் இல்லீங்கம்மா. இஸ்திரி பெட்டி வண்டி தான். இதோ இந்தத் தம்பியும் எங்க தொழிலுக்கு வந்திடுச்சி அதான் அதுக்கும் அந்தக் கடைசியில ஒரு கடையப் போட்டுக் கொடுக்கலாம்னு’’ ‘‘உங்களுக்குப் பேட்டியா நீங்கலே ஒரு கடை வைக்கப் போறீங்களா’’ ‘‘போட்டி இல்லீங்கம்மா. இப்ப முதல்ல மாதிரி இல்லம்மா. துணிக ரொம்ப வருது. எங்க ஓட்டுக் காரரால தேக்க முடியல. தம்பியும் பிகாமோ, பிரவோ என்னவோ படிச்சிட்டு பல வேலைக்குப் போச்சி எதுவும் சரி வரல. ஜயா தான் இங்க வந்திடு. நான் கடை வச்சுத் தாறேனு இட்டாந்திருக்காரு’’ ‘‘அப்படியா இன்னொரு கடை போடற அளவுக்கு துணி சேருதா. பரவாயில்லையே. தம்பி யாரு’’ என்றாள். அந்த இளைஞனே குறுக்கிட்டு, ‘‘அக்கா இந்தக் கடைகார்ருக்கு நான் சித்தப்ப மவனுங்க எம். ஏ., படிச்சிருக்கேன். நிலையான வேலை கிடைக்கல. இங்க வந்திடுனு சொன்னத வேதவாக்கா எடுத்திட்டு வந்திட்டனுங்க’’ என்றான். ‘‘இந்த வேலய முதல்லயே நீ செஞ்சிருக்கியாப்பா’’ என்றாள் வியப்போடு. ‘‘கையி பார்த்தா கண்ணு செய்யுதுங்க. எங்க ஐயா கூட முதல்ல விவசாயந்தான் செஞ்சாரு. மழைத் தண்ணி இல்ல. இந்தத் தொழிலுக்கு வந்தாரு. வீட்டுலயே அவரு சட்டையவே நாலஞ்சு தடைவ இஸ்திரி போட்டுப் போட்டுப் பாப்பாராம். தானா கத்துக்கிட்டு இத்தன வருசத்த ஓட்டிட்டாரு’’ என்றான். ‘அப்படியா’ என்றாள் ஆச்சரியத்தோடு. ‘‘இவ்வளவு படிச்சிட்டு இந்த வேலை செய்யுறியேப்பா’’ என்றாள். ‘‘தொழில்ல எனக்கா பெரிசு சிறிசு. சொந்த ஊர்ல வேலை செய்யற தெல்லாம் கௌரதைப் பார்க்கக் கூடாதுல்ல’’ என்றாள். அவள் கை லாகவமாக அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது. சட்டையைத் திருப்பிப் போட்டான். தண்ணீர் தெளித்தான். பின்னர் இஸ்திரி பெட்டி மேல் தண்ணீர் தெளித்தான். அது ஸ்ஸ்ஸ் என்று ஓசை யெழுப்பியது. மிகக் கனமான பெட்டியைத் தூக்கும் போது, அதன் கைப்பிடி சத்தம் எழுப்பியது. அந்த இடமே சூடாக இருந்தது. அவளுக்கு வேடிக்கையாக இருந்தது அவன் பேச்சு. அவன் சொல்வதும் நியாயம் தானே. பெருமூச்சு விட்டாள். அங்கிருந்த அம்மா, ஒரு இரகசியத்தைத் தன் போக்கில் போட்டு உடைத்தாள். ‘‘அம்மா ஐயா வந்த புதிதில தம்பி சொல்ற மாதிரி தான், இந்தத் தொழில பத்தி ஒண்ணும் தெரியாது. அங்க ஊருல இருந்து இங்க ஒருத்தரு வந்து வேல பாத்தாரு. ஒரு கையெழுத்து விசயமா அவர பாக்க இவரு அப்பல்லாம் வருவாரு. ஆனா வந்தா சட்டுனு பாக்க முடியாது. நாள் கணக்கா காத்துக்கிடக்கணும். எங்க வீட்டு திண்ணை மாதிரி இங்க ஏது. சாலையில நிக்க வேண்டியது தான். அப்பத்தான் இஸ்திரி பெட்டிக் காரருகிட்ட பேச்சு கொடுத்துக்கிட்டே காத்துக் கிடந்திருக்காரு. அந்த இஸ்திரி பெட்டிக்காரருக்கு பசங்க எல்லாம் படிச்சி வாத்தாயாரா போகவே, எங்க ஐயா கிட்ட சொல்லிருக்காரு. ஏம்பா விவசாயமில்லன்னு நாய் படாதபாடு படறியே. இத தான் செய்யலாமில்லனு கேட்டிருக்காரு. இவருக்கும் சரின்னு தோணிருக்கு. உடனே இதா இந்த வண்டிய விலைக்கு வாங்கி கடை போட்டுட்டாரு. ஆனா புதிசா வந்த இவர யாரும் நம்பி துணியத் தரல. இவரு சட்டையவே தினமும் எடுத்துட்ட வந்து இஸ்திரி போடுவாரு. நாலஞ்சு நாளைக்கப்புறம் யாரோ துணிய தர்றாங்கன்னு சனங்க கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப இப்பிடி இன்னொரு கட வைக்கிற மாதிரி இருக்குது’’ என்றாள் பெருமையோடு . சரி சரி எங்கிட்ட சொல்ற மாதிரி யாருகிட்டயும் சொல்லிடாதீங்க’’ ‘‘இல்லம்மா. உங்கள இன்னைக்கு நேத்தா பழக்கம். நாலஞ்சு வருசமா பழக்கமில்ல’’ ‘‘சரி சரி இந்தா இந்த ஐம்பது ரூபாவ வை. ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு மீதிய வீட்டுக்கு வரும் போது தந்திடு’’ என நீட்டினாள். அந்த அம்மாவும் வாங்கி அந்த இளைஞனிடம் தர அவன் இழுப்பறையில் வைத்தான். ‘‘சரிப்பா. நல்லா உன் கடையிலயும் நிறைய துணிங்க சேர்ந்து இன்னொரு கடை வைக்க என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றாள். ஆவன் கூச்சத்தோடு ‘சரி’ என்றான். காயத்ரி சிறிது தூரம் நடந்து, அங்கிருந்த பேருந்தில் ஏறி சூப்பர் மார்க்கெட் சென்றாள். பில் போடும் கவுண்டர் அருகில் ஐஸ்கிரீம் பெட்டி அவளுக்கே ஆசையாக வந்தது. வீட்டுக்கு வாங்கிப் போவதற்குள் உருகி விடுமே. சரி ஆட்டோவில் சீக்கிரமாகப் போய் விடலாம் என்று நினைத்து வாங்கிக் கொண்டாள். சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே ஆட்டோ நின்றிருந்த ஏறிக் கொண்டாள். பைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். ஐஸ்கிரீம் பையை மட்டும் தனியாக மடியில் வைத்துக் கொண்டாள். ‘‘ஆட்டோ, கொஞ்சம் சங்கர் நகர் நாலாவது குறுக்குத் தெரு, சீக்கிரம் போப்பா’’ என்றாள். அவனும் சீக்கிரமாகவே வேகமாகக் கிளம்பினாள் ‘ஐஸ்கிரீம் உருகி விடக் கூடாதே’ என்று காயத்ரி பதைப்பாக இருந்தது. இதோ மெயின் ரோடு வந்துவிட்டது. இன்னும் இந்த வேகத்தில் போனால் பதினைந்து நிமிடத்தில் வீடு வந்து விடும். ஐசுகீரீமைப் பார்த்துக் குழந்தைகள் துள்ளிக் குதிப்பதை நினைத்து இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது. மூர்த்திக்கும் பிடித்த ஐஸ்கிரீம் தான் வாங்கியிருந்தாள். சட்டென்று ஆட்டோ டிரைவர் பிரேக் போட்டு நின்றார். ஒரு வண்டி உரசிய படிச் சென்றது வேகமாக, அந்த அதிர்ச்சியில் காயத்ரி முன்னாலே தள்ளப்பட்டு விட்டாள். சீட்டில் வைத்திருந்த பைகள் கீழே உருண்டு பொருட்கள் விழுந்தன. நல்ல வேலை ஐஸ்கிரீம் மடியில் இருந்ததால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். ‘என்னப்பா என்ன ஆச்சு’ என்றாள். கலவரத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே ‘டமார்’ என்று ஒரு சத்தம். டிரைவர் இறங்கிப் பின்பக்கம் ஓடினார். பின்பக்க சன்னல் வழியாகப் பார்த்தாள். அங்குப் பைக்கில் வேகமாக வந்து உரசிய ஒரு இளைஞன் எதிரில் வந்த இன்னொரு வண்டியில் மோதி கீழே கிடந்தான். ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. கீழே சிதறிய பொருட்களைப் பொருட்படுத்தாமல், ஐசுகிரீம் பையைச் சீட்டில் வைத்துவிட்டு இறங்கி பின்பக்கமாக வேகமாகச் சென்றாள். ஒரு ஆட்டோ கவிழ்ந்து கிடந்தது. இன்னொரு பக்கம் கொஞ்சம் தள்ளி பைக் கீழே கிடந்தது. சக்கரம் மேலே தூக்கியபடி இருந்ததால் படுவேகமாகச் சுழன்று கொண்டு இருந்தது. இளைஞன் சாம்பவுண்ட் சுவரில் மோதி சாக்கடைக் கருகில் விழுந்து கிடந்தான். இவள் ஆட்டோவில் வந்த டிரைவர், கவிழ்ந்து கிடந்த ஆட்டோ டிரைவரை மேலே தூக்கி விட முயற்சித்துக் கொண்டிருந்தார். அதற்குள் கூட்டம் கூடி விட்டது. இளைஞனுக்குக் காலில் பேண்ட் கிழிந்து, இரத்தம் பரவிக் கிடந்தது. எழு முயற்சித்துக் கொண்டிருந்தான். யாரோ பைக்கை அணைத்து நிறுத்தினார்கள். சிலர் ஆட்டோவை நிமிர்த்தினார்கள். காயத்ரிக்குக் கண் முன் நடந்த விபத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இருந்தாள். தூரத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்று ஜக்கில் தண்ணீர் வாங்கி வந்தாள். தகவல் தெரிந்து டீக்கடையிலிருந்து சில பேர் அவள் பின் ஓடி வந்தார்கள். ஒரு வழியாக இளைஞனைத் திட்டித்தீர்த்தார்கள். அவனோ பரிதாபமாக, ‘பிரேக் ஒயர் கட் ஆயிடுச்சிங்க. வண்டி என் கட்டுப்பாட்டில இல்ல’ என்றான் அழாக் குறையாது. உண்மையில் அடி அவனுக்குத் தான் அதிகம் கசமுசாவென்று ஆளாளுக்குக் கத்தினார்கள். காயத்ரிக்கு தலை வழிப்பது போல இருந்தது. கூட்டி இருந்து விலகி வந்தாள். நேரம் போனதே தெரியவில்லை குழந்தைகளும் மூர்த்தியும் நினைவிற்கு வந்தார்கள். கூடவே ஐசுகிரீம் ஐயய்யோ. தன் ஆட்டோவை நோக்கி ஓடினாள். அங்கு ஐசுகிரீம் வைத்திருந்த கவரிலிருந்து வழிந்து சீட்டெல்லாம் பரவி கீழே சிதறிக் கிடந்த பொருட்களையெல்லாம் நனைத்து மண்ணோடு கலந்திருந்தது. தன் ஆட்டோ டிரைவரைத் தேடினாள். அவன் தன் சக தொழிலாளிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தான். இப்போதைக்கு வர மாட்டான். காயத்ரி ஐசுகிரீமையும், கூட்டத்தையும் மாறிமாறிப் பார்த்தாள். தானும் ஐசுகிரீமும் ஒன்று தான் என்று ஏனோ அவளுக்குத் தோன்றியது. ‘கையில் ஊமன்....’ என்று எப்போதோ படித்த பாடல் நினைவிற்கு வந்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த போது, மூர்த்தி மிகவும் களைத்துப் போயிருந்தான். அவனைப் பார்த்தவுடன் கோபித்துக் கொண்டான். நடந்ததைச் சொன்னவுடன் தான் சமாதானமானான். ‘‘நந்தினி ஒண்ணுமே சாப்பிடலை. ஹார்லிக்ஸ் தான் போட்டுக் கொடுத்தேன். சந்தனுவுக்கு நீ வச்ச குழம்பு புடிக்கலை. சப்பாத்தியில தேனைத் தடவி ரோல் பண்ணிக் குடுத்தேன். சமத்தா ரெண்டு சப்பாத்தி சாப்டுட்டான். ஒரு போனைப் பண்ணியிருந்தா நான் வந்து கூப்டிட்டு வந்திருப்பனுல்ல’’ ‘‘எப்பவும் தனியாவே சமாளிச்சிப் பழக்கமாயிருச்சா. அதான் தோணலை அதுவுமில்லா ரெண்டு குழந்தைகளையும் சமாளிச்சி எப்படி நீ வர முடியும். அதான் எதுவும் சொல்லல’’ என்றாள். ‘‘சரி சரி. நீ மதியம் எதுவும் செய்யாத. நான் ஹோட்டல்ல எதையாவது வாங்கிட்டு வந்திடறேன். மதியமாவது நல்ல சாப்பாடு சப்பிடலாம்’’ என்றான். அவன் கிண்டலாகச் சொன்னாலும், ஆறுதலாக இருந்தது. ‘‘நந்தினிக்குச் சப்பாத்தி ஊட்டுகிற வேலைய பாடு. வாயவே தொறக்க மாட்டேங்கறா. அழற போது பாரு ஊருக்கே கேட்கும்” என்றபடி குழந்தையைக் குறும்பாகப் பார்த்துச் சிரித்தான். நந்தினி ஒன்றும் புரியாமல், பதிலுக்குச் சிரித்து வைத்தது. சந்தனு சமத்தாக்க் குட்டி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தான். ‘ஊரில் போய் மத்த வேலையெல்லாம் பாக்கணும்’ என்றபடி மூர்த்தி அன்று மாலை கிளம்பி விட்டான். சந்தனு டிவி பார்த்த படியே சோபாவில் அப்படியே தூங்கி விட்டான். அவனை எடுத்து பெட்ரூமில் போட்டு விட்டு வந்தாள். நந்தினியைச் சந்தனுவின் சைக்கிளில் அமர வைத்திருந்தாள். சந்தனுவைப் போல சைக்கிள் ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஹேண்டில் பாரை இப்படியும் அப்படியுமாக திருப்பிக் கொண்டிருந்தாள். பெடலில் காலை அழுத்த இன்னும் தெரியவில்லை. நந்தினியருகிலேயே சப்பணமிட்டு காயத்ரி அமர்ந்து கொண்டாள். மணி இரவு பத்து ஆகிறது. இன்னும் நந்தினிக்குத் தூக்கம் வர வில்லை. ஆனால் காயத்ரிக்குத் தூக்கமாக வந்தது. வேறு வழியில்லை. உட்கார்ந்தபடியே சைக்கிள் சக்கரத்தை முன்னும் பின்னும் நகர்த்தி மகளுக்கு ஓட்டக் கத்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக நந்தினி ஓய்ந்து, சைக்கிளில் இருந்து இறங்கி மடியில் அமர்ந்து விட்டாள். அப்பாடா. நந்தினியை தூக்கிக் கொண்டு படுக்கறை சென்றாள். அவளைப் படுக்க வைத்துவிட்டு போர்வையைப் போர்த்துவிட்டு, சந்தனுவைப் பார்த்தாள். எப்போதும் ஒரு களித்தப் படுத்து தூங்குபவன், இன்று கவிழ்ந்து படுத்து, தலையணைக்குள் வலதுகையை விட்டபடி, வலது காலை சற்று வளைய வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். இப்படித்தான் ரகுநாதன் உறங்குவான் அப்படியே அச்சு அசலாக அவனைப் போலவே அவன் மகன் உறங்கிக் கொண்டிருக்கிறான். காயத்ரிக்குத் தூக்கம் தொலைந்து போனது. ரகுநாதனின் நினைவுகள் அலை கழித்தன. போனில் சாயந்திரம் பேசிய போது கூட, எப்போதும் வழக்கமான விசாரிப்புகள்தான். மனதைத் திசை திருப்ப சன்னலருகில் வந்து நின்றாள். ஞாயிற்றுக் கிழமையாதலால் அனைத்து வீடுகளும் உறக்கத்தில் இருந்தன. ஒரு நாயின் ஓசை கூட எங்கும் இல்லை. தொலைபேசி இரைச்சலும் இல்லை. அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அவளுக்குள் இருந்த அமைதிதான் தொலைந்து போயிருந்தது. மதியம் ஆட்டோவில் வீணாக உருகி வழிந்த ஐசுகிரீமின் பிசுபிசுப்பு ஏனோ நினைவிற்கு வந்தது. ரகுராம் வாங்கிக் கொடுத்திருந்த விலை உயர்ந்த டி.வி, பிரிட்ஜ், அடுப்பு, ஓவன், ஜன்னல் கண்ணாடிகள் எல்லாவற்றையும் உடைத்தும் போட வேண்டுமென்று ஆவேசம் வந்தது. குறுந்தொகை 28, ஔவையார் முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல், அலமரல் அசை வளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே? 5

குருசாமிபாளையத்துக்காரி

குருசாமிபாளையத்துக்காரி இராகவி அன்று வந்திருந்தாள். வீடே கலகலப்பாக இருந்தது. திருமணம் முடிந்து இப்போது மூன்றாவது முறையாக வந்திருக்கிறாள். முதல் முறையிலான இரண்டு அழைப்பின் போதும் வீடு நிறையச் சொந்தங்கள் நிறைந்திருந்தனர். திருமணத்திற்கு வராதவர்கள், நெருங்கிய சொந்தங்கள் புதுச் பெண் மாப்பிள்ளையைப் பார்க்க தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், இராசம்மாவால் அவளிடம் சரிவரப் பேச முடியவில்லை.
வந்தவர்களைக் கவனிக்கவும், அடுப்படியில் அல்லாடவுமே சரியாக இருந்தது. மகளிடம் அவள் புகுந்த வீட்டைப் பற்றியும், அவளுக்கான அங்கு இருத்தல் பற்றிய புரிதலும் குறித்துத் தெரிந்து கொள்ள இராசம்மாவின் மனம் தவியாய் தவித்துக் கிடந்தது. முதல் முறை வந்திருந்தபோது திருமணமாகி மூன்று நாள் தான் ஆகியிருந்தது. திங்கட் கிழமை கல்யாணம். புதன் கிழமை மறு வீடு. ஒரு நாளில் இராகவிக்குப் புகுந்த வீடு பற்றி என்ன புரிந்திருக்கும் என எதையும் கேட்கவில்லை. இரண்டாம் முறை ஒரு வாரம் கழித்து அழைத்து வந்த போது, மாப்பிள்ளைக்குப் பிடித்ததை, வேண்டியதை அவளிடம் கேட்டுக் கேட்டு செய்யவே சரியாய் போய் விட்டது. மூன்று நாள் இருந்தார்கள் என்று தான் பேர். ஆனால், அதற்குள் மூன்று வீட்டின் மதிய விருந்துக்கு அழைப்பு வந்து விட்டதால், உடன் செல்ல வேண்டி வந்து விட்டது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாலை காப்பி வேலை முடிந்து கிளம்பி வந்து இரவு சமைக்கவே சரியாய் போய் விட்டது. இந்த முறையாவது கேட்டுவிட வேண்டுமென முடிவு செய்து கொண்டாள். நல்ல இடம் தான். இராகவியின் படிப்பிற்கேற்ற மாப்பிள்ளை தான். இராகவியின் அப்பாவின் நண்பர் பிள்ளை தான். சிறிய குடும்பம் தான். சொந்த வீடு, பண்ணையம், கார் என வசதிகளுக்கு ஒரு குறைவும் இல்லை. ஆனால்.... ? இராகவி ஈரோட்டில் வளர்ந்தவள். சென்னையில் படித்தவள். புனேயில் வேலை பார்த்தவள் சென்னைக்குப் படிக்க அனுப்பும் போதே இராசம்மாள் மிகவும் பயந்து போனாள். ‘‘புள்ளைய அம்புட்டுத் தெலைவு அனுப்பனுமா, கொஞ்சம் யோசிச்சி செய்யுங்க’ என்றாள் கணவனிடம். ஆனால் முருகேசனோ, ‘‘உன்னை மாதிரி பட்டிக் காடா புள்ளய ஆக்கலாம்னு பார்க்கறியா. ஆவ நல்லா படிச்சி பாரின்லாம் போகணும்னு நான் நினைக்கறேன். மோகனோட புள்ள இப்ப சிங்கப் பூர்ல இருக்குதாம். கை நிறையச் சம்பளம். கம்யூட்டர் தான் படிச்சதாம். அப்பாவுக்கு ஒரு கார் வாங்கிக் குடுத்திருக்கிறா போதடவ வந்தப்ப. அவளைக் கைல பிடிக்க முடியல. சும்மாவே அலப்பற பண்ணுவான். இப்பக் கேக்கவா வேணும்’’ என்றாள். ‘‘அப்ப அவள நீங்க படிக்க அனுப்பறது அவ உங்களுக்குக் காரு வாங்கிக் குடுப்பானுதான? இப்ப புரிஞ்சிடுச்சி’’ என்றாள் இராசம்மாள் நக்கலாக, ‘‘இவ ஒருத்தி நக்கல் புடிச்சல. கடையாம்பட்டிக் காரிக்கு இந்த குசும்புதான வேணாங்கறது. நானு இந்த வயசுக்கு மேல கார கத்துக்கிட்டு ஓட்டப் போறனா? நான் சொல்ல வந்ததே வேற. அவ புள்ள மாதிரி நம்ம புள்ளையும் வெளிநாடு போகணும்ல்ல இம்புட்டு பாடுபடறேன்’’ என்றான். ‘‘வெளிநாடு போனா, எங்க மாப்பிள்ளை பாப்பீங்க. அமெரிக்காலாயா? இலண்டன்லயா?’’ ‘‘எங்கயோ பாக்குறன். அதுக்கென்ன வந்தது இப்ப. அதெல்லாம் பெறகு பாத்துக்கலாம். இப்ப புள்ளைக்கு என்னென்ன வேணும்னு பாரு முதல்ல’’ முருகேசன் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான். இராசம்மாளுக்கு மகளை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைப்பதில் துளியும் விருப்பமில்லை. போகும் போது போற புள்ள வரும் போதும் அப்படியே வந்தா சரிதான். ஆனால் பட்டணம் அப்படி இருக்க விடாதுல்ல. அதுவும் பெரிய காலேஜ். ஆம்புள பொம்பள சேர்ந்து படிக்கற காலேஜ் வேற. அப்பனும் மகளும் முடிவு பண்ணிட்டாங்க. சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. ஒரு பெருமூச்சு விட்டபடி மகளுக்கு வேண்டியதை எடுத்து வைப்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் வேறு வழி? இராசம்மாள் பயந்ததைப் போலத் தான் நடந்தது. கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் கழித்து. மகள் வந்த போது அது இராகவியா என்று சந்தேகமாக இருந்தது. முடிவைப் பாதியாக வெட்டியிருந்தாள். பின் பக்கம் பாதிக்கு மேல் தூக்கி கட்டியிருந்தாள். நதியா ஸ்டைல் என்றாள். சடைக்கு டாட்டா காட்டி விட்டதாகக் கூறினாள். மெட்ராஸ்ல எல்லாப் பொண்ணுங்களும் தன்னைப் பட்டிக்காட என்று சாடை பேசுவதாகக் கூறினாள். இராசம்மாள் எதுவும் சொல்லவில்லை. முருகேசனுக்குத் தான் முகம் செத்து விட்டது. சுரத்தில்லாமல் வளைய வந்தான். அவளைக் கல்லூரிக்குச் சென்று அழைத்து வந்தது முதலே அவன் சரியாக இல்லை. இராசம்மாள் தான் அவனைத் தேற்ற வேண்டி வந்தது. ‘‘எதுக்கு இப்ப மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு இருக்கீங்க. அவ படிக்கிற இடம் அப்படி நாளு பேர் கூடச் சமமா இருந்தா தான சரியா பழக முடியும். ஊரோடு ஒத்து வாழ்னு பெரியவங்க சும்மாவா சொல்லுவாங்க . அவ நம்ம புள்ளங்க. நாம அப்படி அவள வளக்கல. முடிய கொஞ்சமா குறைச்சிருக்கா அவ்வளவு தான். முதல்ல இருந்ததை விடப் புள்ள இப்பத்தான் பாக்க அழகா இருக்கா. பக்குவமா எடுத்துச் சொல்லலாம். போகப் போச் சரியயிடும் விடுங்க என்றாள். முருகேசனோ கமுறலான குரலில் சொன்னான். ‘‘இல்ல எங்க தாத்தா சொல்வாங்க. அந்தக் காலத்துல குடும்பத்துக்குக் கேட வந்த பொம்புளங்கல தண்டிக்கறதுக்காகத் தலை முடிய பாதியா வெட்டி தண்டனை குடுப்பாங்கன்னு’’ அதற்கு மேல் அவனால பேச முடியல. இராசம்மாள் அவனையே மௌனமாகப் பார்த்தாள். இந்த விசயத்தை அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள். கள்ளப் புருசன வைச்சிருக்கிற பொம்புளகளுக்கு அந்தக் காலத்துல தலை முடியைப் பாதியாக வெட்டி அவமானப் படுத்தித் தண்டனைக் குடுப்பாங்கன்னு அவளுடைய பாட்டியும் எப்போதோ சொல்லியிருக்கிறாள். ஆனால், இந்தக் காலம் வேற. நாகரிகம்னு பேரைச் சொல்லி தலை முடிய பட்டணத்துப் புள்ளங்க வெட்டிக்கிறது ஒரு பேசனாய் போச்சி. இந்த ஈரோட்டுல, அதுவும் சூரம்பட்டி வலசுல இந்த மாதிரி திரிந்தா பாக்கறவங்க என்ன நினைப்பாங்க என்று தான் முருகேசன் அலமலந்து போகிறான். ஈரோட்டுல இருக்கிற ஏதோ ஒண்ணு, ரெண்டு காலேஜ் சேர்த்து, வீட்ல இருந்தே படிக்கச் சொன்ன இராம்மாளிடம் எடுத்தெறிந்து பேசியதை இப்போது நினைத்துப் பார்க்கிறான். இராகவி ஒரு வாரம் இருந்ததில், வேற எந்த மாற்றமும் தெரியவில்லை. காலையில எழுந்து வாசல் தெளிப்பதிலிருந்து பெரிய பெரிய கோலம் போட்டு இரசிப்பதிலிருந்து, தோட்டத்திலிருந்து மல்லிகைப் பூவைப் பறித்துக் கதை பேசிய படியே அழகாக்க் கட்டுவதிலிருந்து அவள் பழையதை மறக்கவில்லை என்றே தோன்றியது. சுக்கு காபியை இரசித்தே குடித்தாள். ஹாஸ்டலில் பெரிய பெரிய பீப்பாயில் டீயும், பாலும் சர்க்கரையும் தனித் தனியாக வைப்பதைப் பற்றிச் சொன்னாள். தோசைக்கு வரிசையில் நிற்பதையும், மிகப் பெரிய சப்பாதியை ஒன்று தான் சாப்பிட முடிந்ததையும், தயிர் சாதத்தில் திராட்சைப் பழம் போட்டுக் கொடுப்பதையும் கதை கதையாகச் சொன்னாள். முருகேசனுக்குக் கூடத் தான் கவலைப்பட்டது வீனோ என்று தோன்றியது. இராசம்மாளும் அவள் முடி குறித்து எதுவும் அவள் கிளம்பும் வரை பேசவில்லை. இராகவியும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஓவ்வொருமுறை வரும் போதும் இதுபோல ஏதாவது சிறு சிறு மாற்றங்களை இருந்து கொண்டே தான் இருந்தன. என்றாலும் ஒரு பேப்பர் கூட பெயிலாகாமல் ஒரு வழியாகப் படிப்பை முடித்தாள். அவள் முடித்த கையோடு அவளுக்கு அவளுடன் படித்த சில பெண்களுக்கும் புனேயில் வேலை கிடைத்தது. கல்லூரி மூலமாகக் கிடைத்தால் அதை இராகவி மிகப் பெரிய பெரிதாகப் பேசினாள். ஐநூறு பேர்ல முப்பது பேருக்குத் தான். இந்த வாய்ப்பு என்று அவளுடைய பேராசிரியர்களும் அவளை வேலைக்கு அனுப்பிச் சொல்லி, முருகேசனிடம் சொன்னார்கள். முருகேசனா எதுவும் சொல்லாமல் தலையை ஆட்டி மட்டும் வைத்தான். ஊருக்கு வரும் வரை எதுவும் பேகவில்லை மகளிடம். ஆனால் இராகவி வந்தவுடன் ஒரு வாரம் கழித்து மீண்டும் பெட்டியில் துணியை அடுக்க ஆரம்பித்தாள். ‘‘எதுக்கு அம்மிணி இப்ப துணிய அடுக்கற நீ வேலைக்கெல்லாம் ஒண்ணும் போக வேண்டாம். வீட்டியே இரு தாயி’’ என்றான். இராகவி ‘‘இந்த வேலைய கிடைக்கலனு எத்தனை பேரு கிடந்து தவிக்கிறாகன்னு தெரியுமா? நீங்க பாட்டுக்கு போக வேணாம்னு சொல்லிட்டிங்க. அப்ப எதுக்கு இம்புட்டுக் கஷ்டப்பட்டுப் படிச்சது. அண்ணக்கு எங்க புரொபசரு சொன்னப்பவே நீங்க மறுத்துச் சொல்லியிருக்கோணும்ல. ஏன் என்மேல நம்பிக்கையில்லயா? நான் எங்ஙன போனாலும் உங்க புள்ள தான். நான் சிங்கப்பூரு போயி வேலையைப் பாக்கணும்னு எத்தன தடவ சொல்லி இருக்கீங்க. இப்ப இங்க இந்தியாவுல இருக்கிற புனேக்கு வேணாம்கறீங்க? நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க அப்பு. எங்ககூட படிச்ச பத்து பொம்பள புள்ளக கூடத்தான போறேன். இப்ப காலேஜ் படிச்சப்ப மாசம் ஒரு தடவ வந்த மாதிரி வந்திட்டுப் போறேன். அவ்வளவுதான். நீங்க அப்ப கம்னு இருந்ததைச் சம்மதம்னு நினைச்சி எங்க புரொபசரு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாக. நானும் வந்திடுவேனு கையெழுத்துப் போட்டுட்டேன். இப்ப வர்லனா நல்ல இருக்குமா? நினைச்சுப் பாருங்க"" என்றாள்."" ‘‘அதெல்லாம் கிடக்கட்டும் அம்மணி. நான் பாத்துக்கறேன். இப்ப உனக்கு எதுக்கு வேலை? நான் சாதகத்தை எடுக்கலாம்னு இருக்கிறேன்"" என்றான். அப்பாவின் முகத்தை இராகவி பார்த்தாள். பின் ஏதோ நினைத்தவளாய் உறுதி சொன்னாள். ‘‘அப்பா, நீங்க சாதகத்தை எடுக்க வேணாம்னு சொல்லலை. நீங்க சொல்ற மாப்பிளய நான் கட்டிக்கிறான். ஆனா அமைய வரைக்கும் நான் வேலைக்குப் போறேன். அமைஞ்சதுன்னா நான் வேலையை விட்டுர்றேன். சரியா?"" என்றாள். ‘‘இல்ல அம்மிணி. அது சரிவராது. நாளைக்குச் சாதகம் ஏதாவது ஒத்து வந்திச்சின்னா, புள்ளைய பாக்க வர்றம்னா எங்க வச்சி காட்டறது? போதும். நீ வேணும்னா தையலு, எம்பிராய்டரினு ஏதாவது கத்துக்க"" ‘‘தையலு, எம்பிராய்டரினு கத்துக்கறதுக்குத்தான் பி.இ. படிக்க வெச்சீங்களா. அதுக்கு மெட்ராசுக்கு அனுப்பாமயே இருந்துருக்கலாமே"" இராகவி உதட்டைக் கடித்துக கொண்டு அழுகையினூடே கேட்டாள். முருகேசன் எதுவும் சொல்லவில்லை. மகள் அழுவதைப் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. ஆனாலும் தன் முடிவே சரி என்பது போலத் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு தோலி இருப்பதைப் போல வெளியே கிளம்பி விட்டான். இராகவி உள்ளறைக்குள் சென்று விட்டாள். அதிலிருந்து யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. சிரிப்பது இல்லை. சாப்பாடு கூட ஏதாவது பேருக்குத்தான் சாப்பிட்டாள். ஒரு வாரத்தில் அவளுடைய தோழியரெல்லாம் அவள் வராதது கேட்டு, துக்கம் விசாரிப்பது போல விசாரித்து அவள் துயரத்தை அதிகப்படுத்தி விட்டார்கள். அப்பனுக்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டத்தை இராசாம்பாள் பார்த்துக கொண்டுதான் இருந்தாள். இராகவி குலதெய்வ கோவில் பூசைக்குக் வட வர மறுத்துவிட்டாள். போருக்குச் சென்று புறமுதுகு பட்டு தோற்றவன் போல் இருந்தது இராகவியின் நிலை. கோவிலுக்கு வந்தால் சொந்தங்களெல்லாம் விசாரிக்கத் தொடங்கி விடுவார்கள். பி.இ. முடித்து பல பெண்கள் அக்கிராமத்திலிருந்து ஏதாவது வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தார்கள். அப்படி போகாதவர்கள் ஒன்று பி.இ. படிப்பில் பெயிலாகி இருப்பார்கள். தகுதி இல்லை என வேலை கிடைக்காமலிருப்பார்கள். ஆனால், இராகவி கிடைத்தும் போகவில்லை என்பதை யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவள் பெயிலாகி இருப்பாள், இல்லையென்றால் தகுதி இல்லாததினால் நிராகரிக்கப்பட்டு இருப்பாள் என்று தான் பேசிக் கொள்வார்கள். இராகவி அதை நினைத்தே வர மறுத்துவிட்டாள். யார் கேள்விக்கும் பதில் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. முருகேசனோ இராகவி ஓரிரு நாட்களில் சரியாகி விடுவாள் என நினைத்தான். ஆனால், அதற்கு ஒரு வாரம் கழித்து நடந்த அவன் அண்ணன் மகளான மஞ்சுளாவின் திருமணத்திற்குக் கூட வர மறுத்து, பிடிவாதம் பிடிக்கத் தொடங்கி விட்டதை அறிந்து பெருமூச்சு விட்டான். மஞ்சுளா, பள்ளி இறுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் உள்ளூரில் டைலரிங் கற்றுக் கொண்டாள் அதுவுமில்லாமல் படிக்கப் பிடிக்கவில்லை என்று உள்ளூர் கல்லூரியில் சேருவதற்கும் மறுத்துவிட்டாள். இராகவியை விட ஒரு வயது மூத்தவள். இந்த ஐந்து வருட காலத்திற்குள் டைலரிங்கில் நல்ல பெயர் பெற்று விட்டாள். வீட்டிலேயே இருந்தபடி சம்பாரிக்கவும் தொடங்கி விட்டாள். சிறுகச் சிறுகச் சேமித்து தனக்கானத் திருமணச் செலவிற்கான தொகையையும் சேர்த்து விட்டாள். ஆனால் அவள் தொகையையும் சேர்த்து விட்டாள். ஆனால் அவள் அப்பா அதைப் பெற மறுத்ததால், எங்குக கட்டிக் கொடுக்கிறார்களோ, அங்கு அந்த ஊரில் டைலரிங் கடை வைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். மஞ்சுளாவையும் இராகவியையும் நினைக்கும் போது முருகேசனுக்குத் தன் மகளை நினைத்து மிகப் பெருமையாக இருக்கும். ஐந்து வருடத்தில் மஞ்சுளா சம்பாதிச்சத தன் மகள் ஆறு மாதத்திலேயே சம்பாதித்து விடுவாள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது தானே அதற்குத் தடையாக இருக்கிறோமோ என்று தோன்றியது. பி.இ. படித்த புள்ளய டைலரிங் போன்னு சொல்ற மாதிரி ஆயிடுச்சேனு அவனம் மறுகிப் போனான். இராகவியின் தோழியரில் பல பேர் முன்பே புனே சென்று விட்டார்கள். ஒரு சிலர் தான் இறுதி தேதியில் போய் சேர்ந்து கொள்ளலாம் எனக் காத்திருந்தார்கள். சவரக் கடையில மோகனைத் தற்செயலாகச் சந்தித்தான் முருகேசன். ‘‘ஆளப் பாத்து ரொம்ப நாளாச்சே. என்னப்பா முருகேசா உள்ளூர்ல தான் இருக்கியா?"" ‘‘ஆமாம்பா உன்னயத்தான் பாக்க முடியல. அப்புறம் உன் பண்ணையமெல்லாம் எப்படியிருக்குது?"" ‘‘ஏதோ இருக்குதுங்க. உங்க புள்ள படிப்ப முடிச்சிருக்கா? இல்ல இன்னும் இருக்குதா?"" ‘‘முடிச்சிடுச்சிங்க. புனேல வேலை கிடைச்சிருக்கு. நாந்தான் போக வேண்டாம்னு சொல்லிட்டனுங்க"" ‘‘அட ஏம்பா. புனே நல்ல ஊருதான. நம்ம ஊரு மாதிரிதான். எம்மவ முதல்ல அங்கதான வேலை பார்த்தா. நல்ல பாதுகாப்பான ஊருதான். கம்பெனி பக்கத்திலேயே தங்கற இடம். மருத்துவ வசதி, கட கண்ணி எல்லாமிருக்குதப்பா. நானு சேர போனப்ப கூடப் போனன். நீ ஏம்பா வேணாம்னுட்ட புள்ளக்கு ஏதாவது அமைஞ்சிருக்கதா? எப்ப கல்யாணம்"" ‘‘அட அதெல்லாமில்லீங்க. நான்தான் எதுக்கு வேலன்னு வேண்டாமினட்டேன்."" ‘‘அதுக்கு நீ படிக்க வைக்காமயே இருந்திருக்கலாமில்ல. அந்த புள்ள எம்புட்டு குஷ்டப்பட்டிருக்கும் படிக்கறதுக்கு. எதுக்கும் ஒருக்கா நல்லா நீ யோசனைப் பண்ணிப்பாரு. அதான நான் சொல்றது சரி வரட்டா"" என்ற படி அவர் கிளம்பிப் போனார். மோகனை நினைத்து முருகேசனுக்கு வியப்பாக இருந்தது. அவருடைய தைரியத்தை நினைத்து வியந்தான். சென்ற முறை வந்திருந்த அவர் மகள் நினைவுக்கு வந்தாள். ஜீன்ஸ் பேண்ட்டும், பாப் தலைமுடியும், கூலிங் கிளாஸ் கண்ணாடியும் ஆளே மாறிப் போயிருந்தாள். படிக்கிற காலத்திலேயே அவள் அப்படித்தான் மாறிப் போயிருந்தது போல நினைவுக்கு வந்தது. ஆனால், மோகனோ அதையெல்லாம் பெரிது படுத்தாதது போலத் தெரிந்தது. பெண்ணை முழுமையாக நம்பியிருந்ததால்தான் அவளைச் சிங்கப்பூர் வரை அனுப்பியிருக்கிறான். அவனுக்கும் உள்ளுக்குள் பயமிருந்திருக்கும். அவன் அதை எப்படி எதிர்கொண்டிருக்கிறான் என நினைத்துப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவன் மீதிருந்த மதிப்பு இன்னும் கூடியது. இராகவியிடம் அவ்வளவு பெரிய மாற்றங்கள் இல்லை. ஏதோ முடியைக் கொஞ்சம் போல வெட்டிக் கொண்டாள். மருதாணிக்குப் பதில் நெயில் பாலிஷ் பூசிக் கொண்டாள். பாவாடை தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறினாள். அவ்வளவு தானே. மற்றபடி வேறெதுவும் மாறலயே. மகளைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பேன்னு பெருமை பேசிய தானே தான் அவளைப் புனேக்குக் கூட அனுப்ப மாட்டேனு பிடிவாதம் பிடிச்சிகிட்டு இருக்கறது. தான் ஏன் இப்படி மாறிப்போனேன். எது என்னை தயங்க வைச்சது. இராகவி மேல நம்பிக்கையில்லாத மாதிரி தான இப்ப ஆயிப் போச்சு. நான் வெளிப்படையா சொல்லலனாலும் இராகவி அப்படிதான நினைச்சிகிட்டு இருப்பா. சவரக்காரன் கூட்டம் கடையில கம்மியாக இருந்ததால், நிதானமாகத் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார். டி.வி.யில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. டி.வி.யைப் பார்த்தபடியே வெட்டிக் கொண்டிருந்தார். சண்டைக் காட்சிகள் வரும் போது மட்டும், ‘‘அப்படித்தான் அடி அவனை, குத்து"" என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். சலூனில் இருந்த பெரிய கண்ணாடியில் தன்னைப் பார்த்தார் முருகேசன். கழுத்து வரைக்கும் இழுத்துப் போர்த்திய வெள்ளைத்துணி. தாடை முழுவதும் வெள்ளை நுரை. சலூன்காரர் சிங்காரம் தலை முடியில் வீரத்தைக் காண்பித்து விட்டு, தாடிக்கு வந்திருந்தார். அவர் கண்கள் எதிர் கண்ணாடி வழியாக டி.வியைப் பார்த்துக் கொண்டிருந்தன. எந்தப்புறமிருந்தாலும் டி.வி. தெரியும்படி ரெண்டு பக்கமும் பெரிய பெரிய கண்ணாடிகள். அவன் டி.வி. பார்ப்பதும், அவர் மீசையைச் சரி பண்ணுவதுமாக மாறி மாறி கண்களை மேலும் கீழும் நகர்த்திக் கொண்டிருந்தான். ‘‘பாத்துப்பா, பாத்துப் பண்ணுப்பா. டி.வி.யை அப்புறம் பாக்கலாம்"" ‘‘அதெல்லாம் ஒண்ணும் ஆவாது சாரே. ஏத்தன வருசமா பழகறிங்க. ஒரு நாளாவது கை மாறியிருக்குதா. எல்லாம் ஒரு நம்பிக்கதான. தொழில் சுத்தமா இருக்கும்"" என்றபடி சோலியை முடித்தான். அவன் சொன்னது சரிதான். முகத்தில இருந்த முடியெல்லாம் கச்சிதமாக நீக்கியிருந்தான். ஒரு குறை சொல்ல முடியாது. எப்போதும் போல் நம்பிக்கையை காப்பாற்றி விட்டான். முருகேசனுக்கோ எங்கோ பொறித் தட்டியது. வீடு வரும் வரை சிந்தனையில் ஆழ்ந்தபடி வந்தார். எப்போதும் முடி வெட்டிக் கொண்டு வரும்போது கறியோ, கோழியோ, மீனோ பிடித்து வருவது முருகேசனின் வழக்கம். அவன் முடி வெட்ட கிளம்பும் போதே, அதற்குரிய செலவையெல்லாம் செய்து வைத்து விடுவாள். அன்றும் நிறைய பூண்டும், இஞ்சியும் வெங்காயமும் உளித்து வைத்திருந்தாள். அவன் வெறுங்கையோடு வந்ததும், வந்ததும் பின்பக்கம் செல்லாமல், முன் திண்ணையில் உட்கார்ந்ததும் யோசனையில் ஆழ்ந்திருப்பதையும் இராசாம்பாள் கவலையோடு பார்த்திருந்தாள். என்னங்க. . . . . . ஏனுங்க . . . . . எனப் பல தடைவ கூப்பிட்ட பிறகுதான் முருகேசன் நிதானத்திற்கு வந்தான். ‘‘என்னங்க அப்படி ஒரு யோசனை. பின்பக்கம் போயிட்டு வாங்க. கறி எடுத்துட்டு வர மறந்துட்டீங்களா"" என்றாள். ‘‘அட ஆமா. சரி சரி எற்பாடு பண்ணு. நான் போயி எடுத்திட்டு வாரேன்"" என்றபடி பின்பக்கம் கிளம்பினான். குழம்பினைத் தட்டத்தில் ஊற்றியபடி, ‘‘அப்படியென்ன யோசனைங்க"" என்றாள். ‘‘எல்லாம் நம்ம அம்மிணி பத்திதான். வேறென்ன?"" நன்றாக இரும்பு வட சட்டியில் அளவாக உப்பும் மிளகும் போட்டு, சாந்தினைப் போட்டு கருகருவென வறுத்த கறியை கொத்துமல்லி தூவி மணக்க மணக்க சூடாக அரைக் கிலோவிற்கு மேலே அவன் தனித் தட்டத்தில் வைத்தாள். அவிச்ச முட்டையை நாலாக்கி வெங்காயம், தக்காளி போட்டு வணக்கிய பொரியலை இன்னொரு தட்டத்தில் வைத்தாள். ‘‘அம்மிணி எங்கே"" என்றான். ‘‘அவ சின்னவ கூடத் தோட்டத்துக்கு மருதாணி பறிச்சிட்டு வாரேனு போயிருக்கா. மஞ்சுளா கல்யாணத்துக்க வச்சிக்க. இப்ப வந்திருவாக. நீங்க சாப்பிக"" என்றாள். ‘இராசாம்பாள் கறிக் குழம்பும், வறுத்த கறியும் வைத்தால் அம்புட்டு ருசியாயிருக்கும். வடசட்டியில் கறி தீர்ந்த பின் அதில சுடுசோற்றைப் போட்டு பிசைந்து தந்தா, அத திங்க நானு நீயின்னு புள்ளைக போட்டி போடும். இன்னிக்கி ரெண்டும் மருதாணி பறிக்க என்ன அவசரம்னு’ நினைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான். வாசலில் நிழலாடியது. ரெண்டு புள்ளைகளும் வந்திட்டாக போல. பழனியப்பன் சாலைக்குச் சென்றான். அங்க வேலயாளுக வந்திருப்பாக. சாளையிலருந்து திரும்பி வந்ததும், ‘என்ன புள்ளக எல்லாம் சாப்பிட்டாச்சா’ என்றான் எப்போதும் போல ‘‘பெரியவளுக்கு வேணாமாமா"" என்றாள். ‘‘சரி, சரி அவள கூப்பிடு. ஒரு சேதி சொல்லணும்"" இராகவி வந்து முன்னே நின்றாள். வாரத்தில் இளைத்திருந்தாள். சடை பின்னியிருந்தாள். பாவாடை சட்டை போட்டு சின்னவளைப் போலவே மாறியிருந்தாள். முகம் களையிழந்திருந்தது. மருதாணியை அம்மியில் வைத்து அரைத்துக் கொண்டிருந்தாள் போல. அவள் மீதெல்லாம் மருதாணி சாறு தெறிந்திருந்தது. கூப்பிட்டவுடன் கைவேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள். ‘‘சரி அம்மிணி. புனேக்கு போக எல்லாம் எடுத்து வை. நான் மோகன் மாமா கிட்ட காரை கேட்டுட்டு வாரேன்"" என்றான். இராகவிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. புரிந்தபோது அவள் கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்து விட்டது. சந்தோசமாகச் சிரித்தபடி உள்ளுக்குள் ஓடி தங்கையைக் கட்டிக் கொண்டாள்.` அங்குச் சுவரில் சாய்ந்து தயிரைச்சிலுப்பிக் கொண்டிருந்த இராசாம்மாள், ‘‘என்னங்க இது திடுதிப்புனு"" என்றாள் திடுக்கிட்டு. ‘‘இப்ப சாளைக்குப் போனைல்ல அங்கு மாரியப்ப மாமா வந்திருந்தாரு. அவருதான் சோலி போட்டுப் பாப்பாருல்ல. இவ விசயத்தைச் சொல்லி கேட்டேன். சோலியப் போட்டு இராகவிக்கு இன்னும் குரு பலன் வரலன்னு சொன்னாரு. சரி பி.இ. படிச்சிட்டு வேலை கிடைச்சும் போகாம இருக்கறது நல்லாவா இருக்கும்னு தோணுச்சி. அதான் போகச் சொல்லிட்டன்"" என்றார். அப்படியும் இப்படியும் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இராகவியும் பொறுப்பாக வேலைக்குப் போய் வந்தாள். சாதகமும் ஒரு பக்கம் பாக்க ஆரம்பிச்சதுல குருசாமிப்பாளையத்துல கம்யூட்டர் சென்டர் வைத்திருக்கிற குமரேசனின் நண்பர் இராமநாதனின் மகன் வெங்கடேசனின் சாதகம் பொருந்தி வந்தது. குருசாமிப்பாளையமா என்று இராசம்மாளுக்கு முதலில் திகைப்பாக இருந்தது. ‘‘குருசாமிப்பாளையம் பட்டிக்காடாயிற்றே. சென்னை, புனேனு பழகன புள்ளய பட்டிக்காட்டிலயா கட்டிக் குடுக்கறது"" குமரேசனுக்கும் தயக்கம்தான். இருந்தாலும் மாப்பிள்ளை பையனை ரொம்ப பிடிச்சிருச்சி. இராமநாதனின் மனைவியும் சொந்த தங்கச்சி போல. காலம் பூரா பிள்ளை சந்தோசமா வாழணும்னா பட்டிக்காடு பட்டணம்னெல்லாம் பாக்கக் கூடாது என்று முடிவெடுத்தான். இராகவியை வரவழைத்தான். பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னு, தெரிஞ்சப்புறம் ஒரு மாதத்திற்குள் மளமளன்னு திருமணம் நடந்து விட்டது. முருகேசனுக்கும் மன ஓரத்தில் நின்று பயம் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இராசம்மாளிடம் கேட்கவும் தயக்கம். மறுவீடு முடிந்து இருமுறை வந்தாயிற்று. இராகவியின் முகத்தில் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. மாப்பிள்ளை பிள்ளை ரொம்பச் சகசமாய்ப் பழகி வந்தான். அதே தெம்பை ஏற்படுத்தி தந்திருந்தது. எனினும், இராகவியின் உள் மனத்திற்கும் வெளி முகத்திற்குமான முரண்பாடு ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய மனம் தவியாய்த் தவித்தது. ஆனால் அதற்குள் இராகவி கிளம்பிவிட்டாள். இந்த முறையும் கேட்க முடியவில்லை. ஒருவாரம் கழித்து, அன்று இராசிபுரத்துக்காரி மீனாட்சி வந்திருந்தாள். முருகேசனின் பெரியப்பா பேத்தி. இராசிபுரத்தில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். இராகவி கல்யாணத்தின்போது அவளுடைய நாத்தனாருக்குத் திருமணம். அதனால் அவள் வர முடியாமல் போயிற்று. அதற்குப் பிறகு இப்போது தான் அவளுக்கு நேரம் கிடைத்திருக்கிறது. அவள் வந்தால் வீடு கலகலப்பாய் மாறி விடும். வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். மனதில் கள்ளமில்லாத பாசக்காரி. இரண்டு நாளுக்கு முன்னால், குருசாமிபாளையம் போய், இராகவிக்குப் பட்டுப் புடவையும் மாப்பிள்ளை பையனுக்குப் பட்டு வேட்டி சட்டையும் கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள். இப்போது வந்திருந்தாள். அவள் கணவனும் அவளும் இராகவியை வாழ்த்திக் கொடுத்ததாகவும். இராகவியும் மாப்பிள்ளையும் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்கள் என்றும் சொன்னாள். மாப்பிள்ளை வீட்டார் அவர்களை நன்றாக உபசரித்தையும் பெருமையாகச் சொன்னார்கள். இராகவியை விட பதினைந்து வயது மூத்தவள். ஆனால் இராகவிக்கு இணையாக வாயாடுவாள். குருசாமிப்பாளையத்தில், அன்று இராகவிதான் மீனாட்சிக்கு விருந்து சமைத்திருக்கிறாள். “அட அட இராகவி சமைக்கறதைப் பாக்கணுமே. கண் கொள்ளா காட்சிதான். கல்யாணத்துக்குப் பின்னால தான புடவை கட்ட கத்துக்கிட்டா? கொஞ்சம் கூட கசங்காம, அதெ அப்படியே அள்ளி சொருவி, கோடாரிக் கொண்டைய போட்டுக்கிட்டு, அப்படியே இராசம்மாக்கா மாதிரியே மாறிப் போயிருந்தா. அவ வச்ச மோர்க்குழம்புக்கெல்லாம் யாரும் பக்கத்துலய வர முடியாது. வெண்டக்காய போட்டு வைச்சிருந்தா பாருங்க. மாப்பிள்ளை இரண்டு தடவை வாங்கிச் சாப்பிட்டாருன்னா பாரு. அவ மாப்பிள்ளைக்குப் பரிமாறுவதை பார்த்துக்கிட்டே இருக்கலாம்” என்றவளைக் குறிக்கிட்டு அவள் கணவன் “ இரு மீனாட்சி. மோர்க்குழம்பைவிட அந்த இளநீர் பாயசம் இன்னும் அருமை. பாதாம்பாலை விட அம்புட்டு ருசி. நீ இளநீர் பாயசத்தைப் பத்தி கேள்வியாவது பட்டிருக்கியா” என்றான் நக்கலாக. “நான்தான் நீங்க இரசத்தை டம்ளர்ல வாங்கிக் குடிச்சதைப் பார்த்தேனே” “சரி சரி சாப்பிட்டுட்டு உங்க சண்டைய வச்சிக்கலாம் வாங்க” என்றாள் இராசம்மாள். அவர்கள் கடைக்குப் போனதைப் பற்றியும், அவர்களின் வீட்டுப் பெரிய முற்றம் பற்றியும், அவர்களின் மாமியார் பார்த்துக் பார்த்துக் கவனித்ததையும் பற்றிச் சொன்னாள். அவர்களை வாசல் வரை வந்து அவர்களின் மாமனார் மரியாதையாக வழியனுப்பி வைத்தது பற்றியும், இன்னமும் அவர்கள், ஆட்டுரலில் அரைத்துத் தான் குழம்பு வைப்பதையும் சொன்னாள். இராகவியின் தங்கை சந்திரா மீனாட்சியைச் சாப்பிட்டவுடன் தாயம் விளையாட அழைத்தாள். சமையல் கட்டுக்கிடையிலிருந்த முற்றத்து திண்ணையில் அமர்ந்து தாயக் கட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள் மீனாட்சியும், சந்திராவும். ஆட்டம் களை கட்டிக் கொண்டிருந்தது. இராசம்மாளும் மீனாட்சியின் கணவனும் உள்ளுக்குள் ஊர் கதையை, அளந்து கொண்டிருந்தார்கள். முருகேசன் முற்றத்துத் திண்ணையில், தலையில் துண்டை சுருட்டி மேடாக்கி படுத்துக் கொண்டிருந்தான். இரவு கோழி அடிக்கணும், எந்த கோழியை அடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தான். மீனாட்சி தான் தாயக்கட்டையோடு சேர்த்து சந்திராவையும் உருட்ட ஆரம்பித்திருந்தாள். ‘‘என்ன சந்திரா படிப்பெல்லாம் ஆரம்பிச்சாச்சா. இன்னும் ரெண்டு மாசத்துல பரிச்சை வரப் போவுதே.” என்றாள். “அது வருசா வருசம்தான் வருது“ என்றாள் சலிப்பாக. “அது வருதுதான். நீயும் இராகவிபோல நல்லா படிச்சாதான. புனே எல்லாம் போகலாம்? “என்ன பெரிய புனே? அப்புறம் குருசாமிப்பாளையமோ, குருவிபாளையமோ தானே?” ‘‘அப்படியா சொல்றே. அதுவும் சரிதான். ஆனா உங்கக்கா படிச்சது வீணாகலே. அவ உங்க மாமாவோட கணினி மையத்துக்குப் போறா, ஒரு வருசம் கழிச்சி நீ போலாமில்ல. இப்பவே என்ன அவசரம்னு நான் கேட்டேன்? அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? எங்க மாமியாரு நாலு மணிக்கே எழுந்து பரபரன்னு வேலைய ஆரம்பிச்சிடறாங்க. அவங்க சுறுசுறுப்புக்கு யாரும் ஈடு குடுக்க முடியாது. நான் ஆறு மணிக்குத்தான் சமையல் கட்டுக்கு வருவேன். அதுக்குள்ள பாதி சமைய முடிச்சிருவாங்க. சட்னி மட்டும் ஆட்டச் சொல்வாங்க. ஏழு மணிக்கே சாப்பிட்டாயிரும். அப்புறம் என்ன வேலையிருக்குதுன்னு நானும் கிளம்பிடுவேன். அப்படிங்கறா" ‘‘அதுசரி அங்க தண்ணிலாம் எப்படி கிணத்துத் தண்ணிதான் குடிக்கணுமாமே. ஒரே உப்பா இருக்கும்னு கேள்விப்பட்டேன். அங்க இருந்தவங்கலாம் நல்ல தண்ணிக்காக டவுனுப் பக்கம் குடி போறாங்கலாம். போர் போட்டுத்தான் தண்ணி எடுக்கறீங்களாமாம். நாம அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போனப்ப கேன் தண்ணில வைச்சாங்க. அதனால அவங்க தண்ணி குடிக்க முடியல. அவ எப்படி குடிக்கிறாளாம்"" மீனாட்சி சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. “இத நானும் கேட்டேன். அதுக்கு அவ, அக்கா, உங்க ஊரு தண்ணிக்கு எங்க ஊரு தண்ணி எவ்வளவோ மேல. சுத்தமான தண்ணி. சுத்தமான பால் மாதிரி. கொஞ்சம் உப்பு தான். கலங்கலாத்தான் இருக்கும். ஆனால் உங்க ஊரு தண்ணி போல கெமிக்கல் போட்ட தண்ணியில்ல. எங்க ஊரு தண்ணிக்கு மிஞ்சின தண்ணி எங்கயுமில்ல பாத்துக்க. அப்படிங்கறாளே” என்றாள் . கேட்டுக் கொண்டிருந்த முருகேசனுக்கு, உச்சி குளிர்ந்து போனது. குறுந்தொகை 167, கூடலூர் கிழார் முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக், குவளை உண்கண் குய் புகை கழுமத் தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர், இனிதெனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.

வெளிநாட்டு மோகம்

வெளிநாட்டு மோகம் கண்மணி ஊரில் திருவிழா களை கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஊர்க்கட்டுப்பாடு, கோவில் கட்டுப்பாடுகள் பற்றி தண்டோகாரன் தண்டோரா போட்ட படி சொல்லிக் கொண்டு போய்க் கொண்டே இருந்தான். திருவிழா ஆரம்பமாகு முன்பே வெளியூருக்குப் பிழைக்கச் சென்ற அத்தனை பேரும் ஊருக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது கண்மணியின் கணவனுக்குப் பொருந்தாது. அவன் இந்திய இராணுவத்தில் சென்று சேர்ந்திருக்கிறான். உள்ளூர் கட்டுப்பாடும், கோவில் கட்டுப்பாடும் இராணுவக் கட்டுப்பாட்டை என்ன செய்ய முடியும்? ஆறுமாதமாகி விட்டது. எல்லையில் கார்கில் தொடர்பான போர்ச்சூழல் முகாந்திரமிடத் தொடங்கி விட்டது .
உள்ளூரில் காப்பு கட்டியது முதல் திருவிழா முடிந்து கொடியிறங்கும் வரை யாரும் ஊரை விட்டு வெளியே செல்லக் கூடாது. ஒரு வேளை கண்மணியின் கணவன் முத்து கருப்பன் வந்தால் கூட திரும்பி அவன் விருப்பத்திற்கோ, இராணுவ அழைப்பிற்கு செவி சாய்த்தோ உடனடியாகப் போக முடியாது. அப்புறம் ஊரில் ஏதாவது நடந்து விட்டால், இதனால் தான் வந்தது. அதனால் தான் வந்தது என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கி விடுவார்கள். பத்து வருடத்திற்கு முன் நடந்த இராமாயி கதையைத் தான் சொல்லிச் சொல்லி மாய்வார்கள். அந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்த இராமாயி கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு, எதையும் மதிக்காமல், யாரையும் கேட்காமல் வெங்கனூருக்குப் போய் விட்டாள். பாவம் அவளுக்கு ஊர்க்கட்டுப்பாடு தெரியாது. அவள் குடும்பம் ஊர் தள்ளி சாளையில் வசித்தது. இனுக்கு புனுக்குனு யாருகிட்டயும் பேசமாட்டாள். சந்தைக்குக் கூட வரமாட்டாள். வீட்டைச் சுத்தி காய்கறியும், கீரையும் போட்டுக் கொண்டு இரண்டு காவல் நாயை வைத்துக் கொண்டு தோட்டமே கதியென்று கிடப்பாள். எப்போதும் மண்ணைக் கிளறிய படியே இருப்பாள். அவளுடைய கணவன் குப்பன் சிறு வயதிலேயே தாயை இழந்தவன். அவளுடைய அப்பா பக்கவாதம் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்து பல வருடங்கள் ஆயிற்று. அவனுக்கு அப்பாவைக் கவனிக்கவும், அடுப்படி பார்க்கவும், தோட்டத்தைச் சுற்றி வரவுமே சரியாக இருந்தது. இராமாயி தாய் தந்தை இருவரையும் காலராவில் பறி கொடுத்து, தாய் மாமன் வீட்டில் எடுபிடியாக வாழ்ந்து வந்தாள். ஊர் பேச்சுக்குப் பயந்து போனால் போடுதென்று ஏப்பையோ, சாப்பையோ என குப்பனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். இராமாயா கணவனோடு இந்த ஊருக்கு வந்த போது, தாய் மாமன் மட்டும் தான் கூட வந்தார். அதற்குப் பிறகு யாரும் வரவில்லை. வா என்றும் கூப்பிடவில்லை. இராமாயிக்கு வேலை ஒன்றும் பெரிதில்லை. ஆனால், குப்பன் தான் எப்போதாவது அவன் தந்தையைக் கவனிக்கத் தாமதமாகி விட்டால் சிடுக் புடுக் கென பேசுவான். சுள்ளென எரிந்து விழுவான். இராமாயிக்கு வசவு ஒன்று புதிதில்லை. அவளும் சோர்ந்திருப்பவளில்லை. ஆனால், குப்பனின் தந்தைக்கு மரண பயம் வந்து விட்டது. யாராவது பக்கத்தில் இருக்க வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டே இருப்பார். போனா வந்தான் கதையெல்லாம் பேசுவார். கேள்வி மேல் கேள்வி கேட்பார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார். இராமாயிக்கு பெரியவரின் இந்த நச்சரிப்புக்கு ஈடு கொடுக்கத் தெரியவில்லை. பாவம் அவள் மட்டும் என்ன செய்வாள். அவளும் மனுசி தானே. ஒரு ஒதுக்குப் புறமாக ஒதுங்குவதற்குக் கூட அவரிடம் சொல்லிக் கொண்டு தான் போக வேண்டும் என்றாள் அவள் தான் என்ன செய்வாள்? அடுப்பு வேலை செய்யும் போது கூட பலமுறை இராமாயி இராமாயி எனக் கத்திக் கொண்டே இருப்பார். அப்போது தான் உலை கொதித்து மேலே வரும் நிலையில் இருக்கும். பக்கத்தில் இல்லை என்றால். அடுப்பு விறகில் நனைந்து விடும். மாடு இன்னொரு பக்கம் ‘அம்மா’ என்று எதற்கோ கத்தும். நாயும் சேர்ந்து குலைக்கும். இராமாயி பாவம் ஒண்டிக் கட்டையாக, அடுப்புக்கும், மாட்டுக்கும், மாமானாருக்குமாக அல்லாடுவாள். குப்பனோ தொலை தூர மரத்தில் எங்காவது ஏறிக் கொண்டு எதையாவது பறித்துக் கொண்டு இருப்பான். இல்லையென்றால் தூரமாக தோட்டத்து மண்ணைக் கிளறிக் கொண்டிருப்பான். காது கேட்கும் தூரத்தில் இருந்தால் ஓடி வந்து விடுவான். ஆயி இல்லாத அவனை வளர்த்த அப்பன்தான் அவனுக்கான ஒரே உறவு. இராமாயி கூட அப்புறம் தான். அன்று பார்த்து இராமாயி தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காயைப் பறித்து புளி சேர்த்து நாக்குக்கு ருசியாக ஒரு குழம்பு வைக்கலாம் என நினைத்தபடி தோட்டத்துப் பக்கம் போயிருந்தாள். அங்கு கத்திரிக்காய் செடியோடு சில களைக் செடிகளும் கலந்திருந்ததைப் பார்த்து அதை களைந்து தூய்மைப் படுத்துவதில் வீட்டை மறந்து விட்டாள். கத்திரிக்காய் பக்கத்தில் மிளகாய் செடி இருந்தது. அதையும் பறித்து மடியில் போட்டுக் கொண்டாள். ஒரு சில வாரங்களாகவே மாமனார் நடத்திய தர்பாரில் தோட்டத்திற்கு வராததால், புதிதாக வேறு ஏதாவது முளைத்திருக்கிறதா என போட்ட விதைகளையெல்லாம் நினைத்து தேடத் தொடங்கி விதைகளையெல்லாம் நினைத்து தேடத் தொடங்கி விட்டாள். ‘இராமாயி....’ குப்பன் போட்ட கூச்சலில் திடுக்கிட்ட, இராமாயியின் மடியில் இருந்த காய்களெல்லாம் சிதறி கீழே விழுந்தன என்னமோ ஏதோவென ஓடினாள். அங்கு குப்பன் கண்கள் சிவக்க முனியப்பன் போல ஆவேசமாக நின்றிருந்தான். பதறிப் போய், ‘என்னங்க’ என்றாள். நாலு எட்டு வைத்து வேகமாக வந்தவன், இராமாயியின் கன்னத்தில் பளீரென்று ஒன்று விட்டான். அவளுக்குப் பொறி பறந்தது. ஒன்றுமே புரியவில்லை. விசயம் ஒன்றுமில்லை. தூக்கம் கலைந்து குப்பனின் தந்தை பலமுறை இராமாயியைக் கூப்பிட்டிருக்கிறார். இராமாயி தோட்டத்தில் இருந்ததால் காதில் அவர் கூப்பிட்டது விழவில்லை. அவர் கூப்பிட்டு கூப்பிட்டுப் பார்த்து, யாரும் வராததால், படுக்கையிலே மலம் கழித்துவிட்டார். கை காலெல்லாம் உழப்பிக் கொண்டு, கடவுளே என்னைய சீக்கிரம் கொண்டு போயிடேன்’ என்று புலம்பிக் கொண்டு இருந்திக்கிறார். அவ்வளவு தான். இராமாயி திரும்பிப் பார்க்காமல் தன் மாமன் வீட்டை நோக்கி விட்டாள். ஊர் கட்டுப்பாடாவது ஒண்ணாவது? ஏத்தன செஞ்சும் ஒரு புண்ணியமில்லையே. ஒரு அஞ்சு நிமிசம் கூட விலகாமல் பார்த்துக் கொண்டதன் பலன் இது தானா? குப்பனின் தந்தை பாசம் அறிந்து எத்தனை பொறுமை காத்திருக்கிறாள். கொஞ்சம் கூட அவள் மீது நம்பிக்கையில்லையே. இதற்கு முன்பு கூட திருமணத்திற்கு முன்பு இப்படி அசிங்கப் படுத்திக் கொண்டு அவன் தந்தை படுக்கையில் கிடந்ததை அவன் சொல்லி இருக்கிறான். அது போல நடக்கக் கூடாது என எச்சரித்து இருக்கிறான். கூடவே இருக்கணும்னு சொல்லிக் இருக்கிறான். எல்லாம் சரி தான். ஆனால் அவளும் எல்லாம் உள்ள சாதாரண மனுசி தானே? ஒதுக்குப்புறமாக அவள் போயிருக்கும் போது இப்படி நடந்திருந்தால்? அவளுக்கென இருப்பதும் மனித உடல் தானே. ‘ சீ சீ நன்றி கெட்ட மனுசன்’ தாய் மாமா வீட்டில் எல்லா வேலையும் அவள் தான் செய்வாள். ஆனால் யாரும் கை நீட்டி ஒரு முறை அடித்ததில்லை. மாமனின் மனைவி சத்தம் போடுவாள் அவ்வளவு தான். அவளே தேவலாம் போல இருக்குதே என்று தான் கிளம்பி விட்டாள். அந்த ஊரின் கெட்ட நேரமோ என்னவோ அந்த வருடம் வான வேடிக்கையில், வான பட்டாசு வெடித்து அந்த ஊர் காரியக் காரரின் மகன் மீது விழுந்து இருந்த இடத்திலேயே கருகி விட்டான். இராமாயியைக் குப்பன் கூப்பிடவுமில்லை. ஊராரின் பேச்சு இன்று வரை நிற்கவுமில்லை. இராமாயி பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பத்து வருடம் கழித்து இப்பத்தான் சாமிகிட்ட குறி கேட்டு திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது. இராணுவத்தில் பணிபுரிவது அந்த ஊரிலேயே கண்மணியின் புருசன் தான். அவனைப் பற்றி அவள் தான் கவலைப் பட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வாக ஊர்களை கட்டிக் கொண்டிருந்தது. புதிது புதிதாகக் கடைகள். ஜீதவிதமான கலர் சர்க்கரை மிட்டாய் கடைகள், பல வண்ணத்தில் வெள்ளை மினுக்குகளோடு கூடிய அல்வா கடைகள். இரும்பு அரிவாள், வெட்டரி வாள் கடைகள், வடசட்டி உள்ளிட்ட சமையல் சாமான்கள், பொரி கடைகள், பஞ்சு மிட்டாய் கடைகள், சவ்வு மிட்டாய் கடைகள், சாமி படம் விற்கும் கடைகள், கரும்புச் சாறு கடைகள், கரும்பு கடைகள், போண்டா, பஜ்ஜி கடைகள், இரப்பர் வளையல் தள்ளு வண்டி கடைகள், துணி கடைகள், வாழைப் பழக் கடைகள், பிள்ளைகளுக்குப் பிளாஸ்டிக் பொம்மை, மண் பொம்மை கடைகள், சட்டி பானை கடைகள், அக்கம் பக்கம் பெண்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து அது பற்றி பேசும் போது, கண்மணி ஏங்கிப் போவாள். ஆனால் அவளுக்குப் போகப் பிடிக்காது. போகவும் ஆசையாக இருக்கும். கணவன் வந்திருந்தால் இந்த திருவிழாவே அவளுக்காக என்பது போல இருக்கும். அவளும் தான் விதவிதமான புடவைகள் வைத்திருக்கிறாள். ஆனால் கட்டிக் கொள்ளத் தோன்றவில்லை. அலங்காரம் செய்து கொள்ளத்தோன்றவில்லை. காஞ்சனா திருவிழா கொண்டாடுவதற்காக வந்திருந்தாள். அவள் கணவன் சென்னை என்பதால் சென்னைவாசியாகி விட்டாள். என்றாலும் கிராமத்து திருவிழாவில் கிடைக்கும் பல பொருட்கள் நகரத்தில் கிடைக்காது. மத்து, பிரமனை, தேங்காய் துருவி என்பது போன்ற பல பொருட்களை வாங்க வேண்டுமென வந்திருந்தாள். அவள் கணவன் கண்மணியை அழைத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டான். கண்மணி பிடிவாதமாக எவ்வளவு மறுத்தும், காஞ்சனா விடுவதாக இல்லை. ஒரு வழியாக கண்மணி உடன் வரவும், பேரம் பேசி பொருட்கள் வாங்கித் தரவும் ஒப்புக் கொண்டாள். காளிப்பட்டி திருவிழா கடைகளுக்கு என்று பல ஊர் கூட்டமே திரண்டு விரும். எள்ளு விழுந்தால் கூட எடுக்க முடியாது. கூட்டமே தள்ளிக் கொண்டு போய் விடும். எல்லா கடைகளிலும் கூட்டம் நிறைந்திருக்கும். பத்து நாளும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி விடுவார்ககள். பொருட்களை வாங்கக் கூடாது என வைராக்கியத்தோடு வந்தவர்கள் கூட வைராக்கியம் மறந்து பை நிறைய எடுத்துச் செல்வார்கள். கண்மணி எல்லாவற்றையும் காஞ்சனாவோடு பார்வையிட்டுக் கொண்டு தான் வந்தாள். பேரம் பேசி வாங்கிய பொருட்கள் இரண்டு பை நிறைய நிரப்பியாகி விட்டது. இரண்டு வரிசை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். இன்னும் பல வரிசைக் கடைகள் காத்திருக்கின்றன. கண்மணிக்கு காஞ்சனாவிற்கும் நேரம் போனதே தெரியவில்லை. கால் வலிக்கும் போது எங்காவது கடையில் அமர்ந்து பஜ்ஜியோ, பக்கடாவோ சாப்பிட்டதில் வயிறு நிறைந்திருந்தது. இன்னும் ஒரு நாள் தான் திருவிழா நடக்கும் என்பதால், கூட்டம் மிகுதியாக இருந்தது. கோயிலிலிருந்த கூட்டத்தை விட கடைகளில் இருந்த கூட்டம் தான் மிகுதியாக இருந்தது. கண்மணிக்குப் பொருட்கள் வைத்திருந்த பைகளின் எண்ணிக்கை கூடியதால் தூக்கிக் கொண்டு நடக்க சிரமமாக இருந்தது. காஞ்சனாவோ, இரவு பனிரெண்டு மணியானாலும் வாங்கி விடுவது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள். கண்மணிக்கும் சேர்ந்து தான் சில பொருட்களை வாங்கியிருந்தாள். புடவை, அழகான கண்ணாடி வளையல்கள், பல வண்ண சாந்து பொட்டு டப்பா, விதவிதமான வடிவத்தில் பொட்டு குச்சிகள், குழந்தை படம் போட்ட தலையணை உறைகள் என காஞ்சனா இரண்டு பை நிறைய கண்மணிக்கு வாங்கிக் குவித்திருந்தாள். கூடவே அறிவுரையும் கொடுத்தாள். இப்பிடியா திருவிழாவிற்கு வருவே. இந்த கூட்டத்தைப் பாரு. எப்படியெல்லாம் மினுக்கிட்டு வராங்க. மினுக்க வேணாம். நல்ல புடவையாவது கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்ல. ஒத்த இரப்பர் வளவி தானா உங்கிட்ட இருக்குது? முகத்தில கூட பவுடர் பூசியும் பூசாத மாதிரி. ஒன்னைக் கிளப்பறதுக்குல நான் பட்டபாடு இருக்குதே. அப்பப்பா. உன் புருசன் இப்ப வரலன்னா என்ன? அடுத்த மாசம் வந்திருவாருல்ல. வர்ற நாளை நினைச்சி சந்தோசப்பட்டுட்டு இருக்கலாம்ல. இப்படி சோக மயமா இருந்தா எப்படி? காஞ்சனா மனக் குமுறலைக் கொட்டி விட்டாள். நேரம் கடந்திருக்கும். பாதி கூட்டம் குறைந்திருக்கிறது. கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று கோயிலையொட்டியிருந்த, அன்னதான சாலையில் இருந்த கல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். கண்மணியும் காஞ்சனாவும் தான் எப்போதும் இதற்கு முன் திருவிழாக்களுக்குச் சேர்ந்து வருவார்கள். கண்மணிதான் காஞ்சனாவை இழுத்துக் கொண்டு வருவாள். வாய் ஓயாமல் பேசித் தீர்ப்பார்கள். வாங்குகிறார்களோ இல்லையோ, எல்லா கடைகளிலும் புகுந்து பார்வையிட்டு விடுவார்கள். பத்து வருட இடைவெளி தான் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டுவிட்டது. பேசிச் சலிக்கும் கண்மணி இந்த முறை பேசவேயில்லை. அவள் தான் பொருட்களை எப்போதும் வாங்கிக் குவிப்பாள். இந்த முறை வெறுமனே பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவள் அமைதி காஞ்சனாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதால் தான் பொரிந்து தள்ளி விட்டாள். திருவிழா கூட்டத்தைப் பார்த்து மனம் மாறி விடுவாள், பொருட்களை வாங்கியதைக் கண்டு மனம் மகிழ்ந்து கொஞ்சமாவது கலகலப்பாகி விடுவாள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கண்மணி சிறுது நேரம் எதுவும் பேசவில்லை. மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தாலும், முன்பிருந்த கூட்டம் இப்போதில்லை. நாளையும் இப்படித்தான் இருக்கும். நாளை மறுநாள்? ‘‘காஞ்சனா, நாளான்னிக்கு இந்த திருவிழா எப்படியிருக்கும்’’ ‘‘நாளான்னிக்கா? திருவிழா முடிஞ்சப்புறமா? கடையெல்லாம் நாளைக்கே இரவு காலியாயிரும். கடை எடுக்கல்லன்னா ஒரு நாள் கூலி சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த வரிசையெல்லாம் இங்க இருந்ததான்னு கூட தெரியாம ஒரே குப்பையும் கூளமுமாக நிறைஞ்சு கிடக்கும் மக்கள் கூட்டம் இல்லாம வெறிச் சோடியிருக்கும். இது தெரியாதா?’’ ‘‘அப்படித்தான் என் மனசும் இப்ப இருக்கு’’ ‘‘என்னது’’ ----------------------------------------------------------------- குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார், பாலை திணை – தலைவி சொன்னது காதலர் உழைய ராகப் பெரிது உவந்து சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலம்பில் போலப் புல்லென்று அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. --------------------------------------

அமராவதி

அமராவதி அலுவகத்திலிருந்து கிளம்பும் சமயத்தில் மோனிகா போன் செய்தாள். ‘‘அம்மா அக்கா உங்க ஆபிசுக்கு வந்தாங்களா?’’ ‘‘இல்லையே ஏன்’’ என்றாள்?’’ ‘‘இன்னும் வரலை அதான்’’ ‘‘சுமதி வீட்டிற்குப் போறேனுட்டு சொல்லிட்டிருந்தாள்’’ ‘‘நான் சுமதி கிட்டயும் கேட்டுட்டேன். அவ வீட்டிற்கு வரலையாம். ‘‘காலேஜீல ஸ்பெசல் கிளாசன்னு ஏதம் சொல்லலையே’’ ‘‘ஆனா, டான்ஸ் பிராக்டிசுன்னு சொன்னதா ஞாபகம்’’ ‘‘சரி சரி 70 ம் நெம்பர் பஸ் 6 மணிக்குத் தான் கிளம்பும் வந்திட்டிருப்பா’’ ‘‘நான் அவளுக்குப் போன் பண்ணேம்மா. அவ எடுக்கல’’ ‘‘சரி சரி நானும் பண்ணிப் பாக்கறேன். நீ அடுப்புல பால வைச்சிடு. நான் கிளம்பிட்டேன். அரை மணி நேரத்தில் வந்திடறேன்’’ அமராவதி வீட்டிற்கு வந்த பின்னும், அபிராமி வீடு வரவில்லை. மணி 7 மணி ஆகப் போகிறது. வயிற்றில் பந்து சுருண்டது. வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்கவில்லை. உடனே கிளம்பி விட்டாள். தெருவிற்கு வந்த பிறகுதான், எங்கு செல்வது என்று தெரியாமல் முழித்தாள். தன் செல்போனை எடுத்து அபியின் தோழிகளுக்குப் போன் செய்தாள். ‘‘இல்லியா ஆன்ட்டி, அபி மதியமே வயத்து வலின்னு கிளம்பிட்டாலே. வீட்டிற்குத் தான் போறேனு சொன்னா எதுக்கும் நான் காஞ்சனா கிட்ட கேட்டு சொல்றேன் ஆன்ட்டி” என்று சுபத்ரா, அபியின் நெருங்கிய தோழி சொன்னாள். அமராவதி, நெடு நாளாகப் பேசாதிருந்த தம்பியிடம் தொடர்பு கொண்டு கேட்கலாமா வேண்டாமா எனத் தடுமாறினாள். வேறு வழியில்லை. வேறு யாரும் உறவென்று சொல்லிக் கொள்ள இல்லை. இரத்த பாசம்னு ஒண்ணு இல்லாமலா போயிடும்? தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. ஆனால், எதிர் தரப்பில் எந்த விளைவும் இல்லை. தொடர்ந்து நான்கு முறை செய்தாள். ஒரு பயனும் இல்லை. திரும்ப வீட்டிற்கு வந்தாள். அபியின் பொருட்களை கலைத்து ஏதாவது கிடைக்கிறதா என பார்த்தாள். அது அரசின் அலுவலக பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘சி’ பிரிவு வீடு. இரண்டே இரண்ட அறைகள். சமையலறை மற்றும் படுக்கையறை. அதில் தான் மூன்று பேருடைய பொருட்களும் இருந்தன. பெரிதாகத் தேடுவதற்கு எதுவுமில்லை. அபியின் புத்தகங்கள் இருக்கும் அலமாரி. துணிகள் வைக்கும் பொதுவான அலமாரி. அபியின் புத்தகப் பை அபியிடம் தான் இருக்கும். ‘‘எங்கு போனாள்? ‘‘மண்டை குடைந்தது. ‘‘மோனிகா, வீட்டை உள் பக்கம் பூட்டிக் கொண்டு பத்திரமா இரு. இதோ வந்திடறேன்’’ என மறுபடி கிளம்பினாள். வீட்டை விட்டு வெளியே வரும் போது எதிர்வீடு கதவு திறந்திருந்தது. அதில் டி.வியில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்த விவாதம் நடந்து கொண்ட இருந்தது. அந்த வீட்டில் சாபிராவும் அவள் வயதான தாயாரும் தான் இருக்கிறார்கள். சாபிரா அரசு மருத்துமனையில் நர்சாக இருக்கிறாள். நைட் டூட்டியாக இருக்கும். அவள் தாயார் தான் டி.வி., பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குக் காது கேட்காததால், சத்தமாக வைத்துத்தான் டி.வி பார்ப்பாள். பொள்ளாச்சி பெயரைக் கேட்டவுடன், அமராவதிக்கு வயிற்றில் சுருண்ட பந்து நெஞ்சிக்கு வந்தது போல இருந்தது. மதியம் சாப்பிட்டது. பசியா பயமா எனத் தெரியாத பதட்டம். கீழே படிக்கட்டுகளைப் பார்த்து இறங்கினாள். அவள் காதல் கணவன் முரளி இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவன் பார்த்த வேலையைத் தான் அவள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவனுடைய சொந்தங்கள் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதே ஊரில் தான் துடியலூரில் இருக்கிறார்கள். இவர்கள் இருப்பதோ கவுண்டம் பாளையம் அரசினர் குடியிருப்பு. ஒவ்வொரு வரிசை வீடுகளுக்கு இடையிலும் நீண்ட அகலமான சாலை. ஓவ்வொரு குடியிருப்பிலும் மூன்று மாடிகள் கொண்ட ஆறு வீடுகள். இவளுக்கு மூன்றாவது மாடிதான் கிடைத்திருந்தது. தண்ணீர் தட்டுப்பாடு வரும் காலத்தில் பெரிய சிக்கலாகிவிடும் கீழேயிருந்து குடத்தில் மூவரும் மாற்றி மாற்றி கொண்டு செல்வார்கள். ஊற்றி வைப்பதற்கு இரு பெரிய பிளாஸ்டிக் டிரம் வாங்கி வைத்திருந்தாள். சமையலறையில் ஒன்றும், பாத்ரூமில் ஒன்றுமாக அவையே வீட்டை அடைத்துக் கொண்டிருக்கும். இப்போது ஒரு மாதமாகத்தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. தண்ணீர் என்றவுடன் அவளுக்கு ஒரு சந்தேகம். அபிதான் தண்ணீர் பிடித்துத் தருவாள். இடையில் தானும், மூன்றாவதாக மோனிகாவுமாகத் தண்ணீரை மாற்றிக் கொள்வதுண்டு. அப்படி தண்ணீர் பிடிக்கிற சமயத்தில், யாருடனாவது பழக்கமாயிருக்குமா? அல்லது பஸ்ஸில் யாருடனாவது பழகியிருப்பாளா? அவள் தான் வீட்டிற்கு தேவையான பொருட்களைச் சில சமயம் தன் புத்தகப் பையில் வைத்து வாங்கி வருவாள். டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் யாரையாவது காதலித்திருப்பாளோ? ‘‘என்னம்மா இந்த நேரத்தில’’ என்ற குரலைக் கேட்டு நின்றாள். ஓரளவு வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தாள். பெட்டிக் கடை இராமசாமி எதிரில் நின்று கேட்டுக் கொண்டிருந்தார். ‘‘இந்த அபிராமியத்தான் தேடிக்கிட்டிருக்கேன் நீங்க பாத்தீங்களா’’ அழ மாட்டாத குறையாகக் கேட்டாள். ‘‘காலைல பாத்ததுதாம்மா. காலேஜீக்குப் போகும் போது பார்த்தேன். அப்புறம் பாக்கலியே. ஏம்மா என்ன விசயம்? ஏதாவது சண்டை போட்டியா’’ என்றாள். ‘‘இல்லீங்கய்யா அப்படில்லாம் இல்ல. ஆனா சாயந்திரமா வீட்டுக்கு வரலியே. அதான் தேடிட்டுப் போறேன். எங்கத் தேடறதுன்னு தான் தெரியல’’என்றாள் கிட்டத்தட்ட அழுதே விட்டாள். அவர் மோவாயில் கை வைத்து இல்லாத தாடியைத் தடவிய படியே யோசித்தார்.’’ அபிராமிய எங்கத் தேடறது....’’ என்ற படியே பேசாம போலீசுகிட்ட சொல்லிவைம்மா. இப்பத்திப் பிள்ளங்களே நாம என்னானுச் சொல்றது’’ என்றார். ‘‘போலீசா.....’’ அதிர்ந்து போனாள். ‘‘ஆமாமா ஆனா நீ தனி பொம்பள எப்படி போலீசு ஸ்டேசன் போவே.... காலம் கெட்டுக் கடக்குதே. சரி சரி என் மருமவ மாவு கேட்டா, லேட்டா போனா அவ்வளவு தான்’’ என்றபடி நழுவி விட்டார். அமராவதி தொடர்ந்து நடந்தாள். அங்கு ஆட்டோ ஸ்டேண்ட் தென்பட்டது. யாரும் அவளுக்குப் பரிச்சயமில்லை. என்றாலும் ஆட்டோக்களை நோக்கிப் போனாள். அங்கு வயதானவர் போலத் தோன்றிய ஒருவரை நாடினாள். ‘‘அய்யா, என் பிள்ள அபிராமி காலேஜ்க்கு போயிட்டு வரல, மதியம் ஏதாவது இந்தப் பக்கம் வந்ததுங்களா’’ ‘‘உன் புள்ளயா. தெரியலயே. எத்தனையோ புள்ளைக இதைத் தாண்டி போகுதங்க. ஏலே முருகேசா இங்க கொஞ்சம் வாடா’’ என்றார். கருத்த பெரிய உருவத்தோடு முருகேசன் வந்தான். ‘‘என்னா வாத்தியாரே. சவாரியா’’ என்று அவளை மேலும் கீழும் பார்த்தான். அமராவதிக்கு அருவருப்பாக இருந்தது. அவசர அவசரமாக, ‘சரிங்கய்யா நானே பார்த்துக்கிறேன்’’ என்றபடி நழுவினாள். அவள்காதின் பின்னால, ‘‘அந்தம்மா புள்ளைய காணோமாம். எவங்கூட ஓடிப் போச்சோ, இல்ல எந்தப் புதர்ல கிடக்குதோ’’ என்ற குரல் கேட்டது. அமராவதி துவண்டு போனாள். ‘சின்னது வேற வீட்ல தனியா இருக்குது’ என்ற பயம் அவளைச் செயலிழக்க வைத்துக் கொண்டிருந்தது. அங்கு பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த பாட்டியைச் சுற்றி பல பேர் நின்று கொண்டிருந்தார்கள் ‘அபிராமிக்குப் பணியாரம்னா ரொம்ப பிடிக்குமே’ எனத் தோன்றியது. ‘‘அடியே அபி எங்கடி போன? ஏண்டி இப்படிச் சோதிக்கிற. நான் என்னடி பண்ணுவேன்’’ என்று மனது குமைந்தது. பாட்டியைத் தான் கேட்டுப் பார்ப்பமே. எப்பயாவது இந்த பாட்டியிடம் தான் பணியாரம் வாங்கி இருக்கமே என நினைத்தபடி அருகே போனாள். பாட்டிக்கு பக்கத்தில் ஒரு பெண் அபிராமி வயதிருக்கும், பொட்டலம் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இருவமே வேலை மும்முரத்தில் இருந்தார்கள். விறகு அடுப்பு தணலை வாரி இறைத்துக் கொண்டு இருந்தது. பாட்டி ஒரு பக்கமாகச் சாய்ந்த படி பணியாரத்தைத் திருப்பிப் போடுவதில் கவனமாக இருந்தாள். அவளுக்கு ஒரு கால் ஊனம். விந்தி விந்தி தான் நடப்பாள். திருமணமே செய்து கொள்ளவில்லை. அல்லது யாருமே திருமணம் செய்து கொள்ளவில்லை. அவளைப் போல ஒரு அபலைப் பெண்ணை உதவியாளாகச் சேர்த்துக் கொண்டு தினமும் மாலை பணியாரக் கடை நடத்தி வந்தாள். அதைக் கடை என்று சொல்ல முடியாது காலையில் அந்த இடம் வெறிச்சோடியிருக்கும். எப்போதும் மாலைக் கடை தான். எதற்கும் அந்தப் பாட்டியைக் கேட்போம் என்று நினைத்த போது, தொலைபேசி ஒலித்தது. மோனிகா தான். பயந்திருப்பாள். ‘‘மோனிகா. நான் இங்க தாம்மா, இருக்கேன். அபி ஏதாவது போன் செய்தாளா? ‘‘இல்லம்மா. எனக்கு பயமாயிருக்குமா. சீக்கிரம் வாம்மா. மேல மொட்டை மாடியில நாலஞ்சு பசங்க சுத்தமா சிரிச்சிப் பேசிட்டிருக்காங்க’’ என்றாள். கீழ் வீட்டு சக்திவேலுவும் அவனுடைய நண்பர்களுமாயிருக்கும். இப்படித் தான் அடிக்கடி மொட்டை மாடியில் மீட்டிங் போடுவார்கள். அமராவதி வீட்டுக் கதவையே அப்போதெல்லாம் திறப்பதில்லை. அமராவதிக்கு மயக்கமே வரும் போலிருந்தது. எந்தப் பக்கம் திரும்புவது? யாரைக் கேட்பது, அபியின் மீது பயங்கரமாகக் கோவம் வந்தது. தூரத்தில் அபி போலவே யாரோ வருவது போல இருந்தது. வேகமாக எட்டிப் போட்டாள். இரண்டு அறை கொடுக்க வேண்டும்’ என நினைத்தபடி. ஆனால் அது யாரோ வேறு ஒரு பெண். மறுபடி செல்பேசி சிணுங்கியது. அபியாக இருக்குமா? இல்லை. அவள் தம்பி சிங்காரம் தான். உடனே தொடர்பு கொண்டாள். எதிர்ப்பக்கம் சற்று அமைதி .அவள் தானே முதலில் தொடர்பு கொண்டாள். அவளே பேசட்டும் என நினைக்கிறானோ என்னவோ. ‘‘சிங்காரம்.....’’ கிட்டத்தட்ட அழுதே விட்டாள். எதிர்த்தரப்பில் சிறிது தடுமாற்றம். பதட்டம். ‘‘என்னக்கா என்ன ஆச்சு’’ ‘‘அபியக் காணலை’’ விசித்து விசித்து அழுதாள். ‘‘என்னது. எப்பருந்து? நீ இப்ப எங்க இருக்கிற?’’ என்றான். ‘‘இங்க தான் கவுண்டம்பாளையத்துல யாரைக் கேட்கறது. எங்கத் தேடறது. ஓண்ணும் புரியல. ஓரே பயமாயிருக்குடா’’ என்றாள் அழுகையினூடே. ‘‘சரி சரி நீ வீட்டுக்குப் போ, நா உடனே வரேன்’’ என்றபடி தொலைபேசியை அணைத்தான். வேறு வழியின்றி அமராவதி வீடு வந்தாள். கதவைத் தட்டினாள். ‘‘யாரு? யாரு? யாரு கதவைத் தட்டறது’’ மோனிகாவின் பயங்கலந்த குரல். ‘‘நான் தான். கதவைத் திற’’ மோனிகா கதவைத் திறந்ததும், ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ‘‘அம்மா என்னம்மா ஆச்சு. அக்கா எங்கம்மா’’ என்றாள். ‘‘அவள எங்கணு தேடறது’’ அதற்கு மேல் குரல் வரவில்லை. கதவிற்குப் பக்கத்தில் வீட்டிலிருந்த ஒரே ஒரு மேசை இடை மறித்துக் கொண்டிருந்தது. ‘‘இது எங்க இங்க வந்தது’’ ‘‘அம்மா. நீ போன கொஞ்ச நேரத்துல நான் கதவை பூட்டிட்டேன். ஆனால் யாரோ தட்டிட்டே இருந்தாங்கம்மா. கதவை நானு தொறக்கலேன்ன உடனே பலமா தட்ட ஆரம்பிச்சிட்டாங்க. யாரு யாருன்னு கேட்டாலும், பதிலே இல்ல. அதான் மேசையைத் தடுப்பாக வைச்சிட்டேன் என்றாள். வெளிறிப் போயிருந்தாள் பயத்தில், ‘‘ஐயோ, கடவுளே. அபிராமி உனக்கு என்னடி ஆச்சி. எல்லோரையும் இப்படிப் படுத்தறியே’’ எனப் புலம்பினாள். கொஞ்ச நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார் ‘யாரு’ ‘‘நான்தான் சிங்காரம். கதவை திறக்கா’’ கதவைத் திறந்தாள். நான்கைந்து வருடமாகப் பார்க்காத சிங்காரத்தை இப்போது தான் பார்க்கிறாள். உடல் ஊதிப் பருத்திருந்தான். பின்னால அவன் மனைவி பர்வதம். ‘‘பர்வதமும் வந்திருக்கா’’ அமராவதி பரபரப்பானாள். ’’ வா பர்வதம். வா சிங்காரம்’’ என்றாள். உள்ளே வந்தார்கள். ஒரே ஒரு நாற்காலி தான் இருந்தது. பர்வதம் கட்டிலின் ஓரத்தின் உட்கார்ந்து கொண்டாள். மோனிகா இருவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தாள். எப்போதோ கடை வீதியில் அம்மா, தூரத்தில் இருந்து சிங்காரத்தைக் காட்டியிருக்கிறாள். இப்போது தான் இவ்வளவு பக்கத்தில் பார்க்கிறாள். ‘‘மோனிகா போ தண்ணி எடுத்திட்டு வா’’ அமராவதி சொல்ல மோனிகா நகர்ந்தாள். அப்படியே சுவரில் சாய்ந்து அமராவதி அமர்ந்து விட்டாள். கண்ணீர் பெருக்கெடுத்தது. முந்தானையில் துடைத்துக் கொண்டாள். சிங்காரம் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. பருவதமும் என்ன பேசுவது எனத் தெரியாமல் அமைதி காத்தாள். சிங்காரம் மெதுவாக செல்லத் தொடங்கினான். ‘‘அக்கா நீ என்ன நினைச்சாலும் சரி. உன்ன மாதிரி தான் அபிராமியும்’’ என்றான். அமராவதி விழித்தாள். என்ன சொல்ல வருகிறான்? ‘‘நம்ம கதிரேசன் மாமா மவன் வெங்கடேசன் ஞாபகம் இருக்குதா’’ என்றான். ‘‘யாரு கதிரேசன் மாமா?’’ என இழுத்தாள். ‘‘சரியாப் போச்சு போ. நம்ம அம்மாவோட ஒன்னுவிட்ட பெரியப்பா மவன் கதிரேசன் மாமா. பெரிசா மீச வெச்சிட்டு வெங்கல குரல்ல பேசுவாரே. கணீர் கணீருன்னு. பள்ளிக்கூட வாத்தியாரா கூட இருந்தாரே. அட இன்னமா உனக்கு ஞாபகத்துக்கு வரல’’ ‘‘அட ஞாபகம் இருக்குது, சொல்லு சொல்லு. அவருக்கு இப்ப என்ன?’’ ‘‘அவருக்கு ரெண்டு மவனுங்க ரெண்டாவது புள்ள தான் வெங்கடேசன். அந்த வெங்கடேசன் கூட தான் நான் அபிராமிய சினிமா தியேட்டர்ல பார்த்தேன்’’ ‘‘என்னது’’ அமராவதி நம்ப முடியாமல் பார்த்தாள். ‘‘நீ நம்ப மாட்டேனு தான், உங்கிட்டச் சொல்லல.’’ என்றான்’’ அமராவதிக்கு உள்ளுக்குள் கோபம் குமைந்தது. சினிமா தியேட்டர்ல பாத்துட்டு நமக்கு ஒரு எச்சரிக்கை கூட இவன் பண்ணலயே’’ என உள்ளுக்குள் ஓடிய நினைவைத் தவிர்க்கப் பார்த்தாள். கதிரேசன் மாமா அந்தக் காலத்திலயே கூட வேல பார்த்த ஒரு வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவரைக் குடும்பத்தை விட்டு விலக்கி வைச்சிட்டாங்க... அவரு வேறு ஊருக்கு மாற்றலாகி சென்று விட்டார். அவர் குடும்பத்திற்கும் சொந்த பந்தங்களுக்கும் எந்த ஒட்டும் உறவுமில்லாமல் போய் விட்டது. பெரியப்பா, பெரியம்மா இறப்பிற்குக் கூட அவருக்குத் தகவல் தரப்படவில்லை. அமராவதியின் தாயார் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அவர்களின் மனம் மாறவில்லை. கதிரேசன் மாமாவும் ஒதுக்கப்படுவதை உணர்ந்து ஒதுங்கி விட்டார். கிட்டத்தட்ட அவரை அவர் குடும்பம் மறந்தே போய்விட்டது. அவர் தன் பங்கு குறித்து எதுவும் கேட்கவில்லையாதலால், அவரது தம்பியும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது அமராவதி எட்டாவது படிக்கும் போது நடந்தது. இப்போது அவளுடைய மகளே கல்லூரி படிக்கிறாள். ‘‘சரி உனக்கு எப்படி கதிரேசன் மாமாவையும் அவர் மகனையும் தெரியும்?’’ ஆச்சரியத்தோடு கேட்டாள். ‘‘அத பர்வதம் கிட்டதான் கேக்கணும்’’ என்றான் . ‘‘மேரி டீச்சர் எங்க அம்மாவோட கூட படிச்சவங்க. அவங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவ வந்தப்ப, என்னை எந்த ஊர்ல கட்டிக் குடுத்திருக்குன்னு கேட்டாங்க. அப்ப இவரும் அங்கிருந்தாங்க. இவரு ஊரு, சொன்னவுடன் அவங்க துருவி துருவி கேட்டாங்க அப்பதான் தெரிஞ்சது உங்க கதிரேசன் மாமாவைப் பத்தி’’ என்றாள் பர்வதம். அமராவதி கனவா நனவா என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. பர்வதம் தொடர்ந்தாள். ‘‘மேரி டீச்சருக்கு ரொம்ப நாள் கழிச்சி தான் புள்ளங்க பொறந்ததுங்க. இந்த வெங்கடேசனை நான் ஒரு தடைவ மேரி டீச்சரைக் கூப்பிட வரும் போது பாத்திருக்கேன் என்றாள். ‘‘சரி அபி என்ன ஆனா’’ அமராவதி குறுக்கிட்டாள். ‘‘அந்த வெங்கடேசன் கூட தான் அவ ஓடிப் போயிருக்கணும்’’ என்றான். ‘‘என்னது’’ ‘‘ஆமா நம்ப குடும்பத்துக்கும் கதிரேசன் மாமா குடும்பத்துக்கும் ஆகாதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதான் அப்படி முடிவெடுத்திருக்காங்க’’ என்றாள் பர்வதம். அப்போது யாரோ வாசலில் இருந்து அழைப்பது கேட்டது. ‘‘யாரு உள்ள வாங்க’’ என்றாள் அமராவதி. மோனிகா ஓரமாக நின்றிருந்தாள் யாரும் வராததால், ‘‘மோனிகா யாருன்னு பாரு’’ என்றவுடன் மோனிகா எட்டிப் பார்த்தாள். எதுவும் சொல்லாமல் மிரண்டு நின்ற மோனிகவைப் பார்த்து அமராவதி, ’’ மோனிகா யாரு அங்க’’ என்றாள். இரண்டு இளைஞர்கள் முன்னால் வந்தார்கள். அவர்களை அமராவதி பார்த்திருக்கிறாள். கீழ் வீட்டு சக்திவேலுவோடு சேர்ந்து அரட்டை அடிக்கும் தோழர்கள். இவங்க இங்க எங்க’’ என்றபடி அமராவதி எழுந்தாள். அந்த சிறிய அறை மேலும் சிறியதாகி விட்டதைப் போல இருந்தது. ‘‘என்னப்பா என்ன வேணும், உங்களுக்கு’’ என்ற படி அமராவதி முன்னே வர மோனிகா பின்னே சென்று விட்டாள். இருவரும் ஏதோ கம்யூட்டர் தொடர்பான வேலை பார்க்கிறவர்கள் போல தென்பட்டார்கள். நல்ல நேர்த்தியாக உடை உடுத்தியிருந்தார்கள். நீலக்கலரில் ஒருவன் முழுகை சட்டை போட்டிருந்தான் மற்றொருவன் கட்டம் போட்ட வெளிர் மஞ்சள் சட்டை. ஒருவன் முஸ்லீம் போல இருந்தான். ‘‘சொல்லுங்கப்பா யாரு வேணும் உங்களுக்கு எதிர் வீட்ல சாபிரானு ஒருத்தர் இருக்காங்க அவங்கல பாக்க வந்தீங்கலா’’ என்றாள். ஒருவன் வாய் திறந்தான். ‘‘இல்ல ஆண்டடி அபிராமியைப் பத்தி தான்’’ தன் மகளின் பெயரை உரிமையோட உச்சரிப்பதை அதிர்ச்சியோடு பார்த்தாள். எதையும் காட்டிக் கொள்ளாமல், உங்களுக்கு அவள எப்படித் தெரியும்’’ என்றாள். ஒருவன் மென்று விழுங்கினான். ‘‘இரண்டு வருசமா கதிர்வேலு கூடத்தான் நாங்க அவங்கள பார்த்திருக்கோம். அப்பயிருந்து தெரியும்’’ என்றான் ஒருவன் ‘‘கதிர்வேலுவா?’’ சிங்காரம் நாற்காலியிலிருந்து எழுந்து விட்டான். இது என்ன புது கரடி என்பதைப் போல. ‘‘ஆமா ஆன்ட்டி. உங்க பொண்ணு அபிராமியும், கதிர்வேலுவும் ஒருத்தர ஒருத்தர் விரும்பறாங்க. ஆனா நீங்க வேற சாதி அவங்க சாதி. கதிர்வேலு அப்பா அவங்க சாதி சங்க தலைவருவேற. நிச்சயமா சம்மதிக்க மாட்டருன்னு தான்....’’ என இழுத்தான். சிங்காரம் ‘‘என்னப்பா என்ன சொல்றீங்க, நான் எங்க மாமன் மவன் வெங்கடேசனோடல்ல ......’’ என்று தொடங்கியவன் அப்படியே நிறுத்தி விட்டான். ‘‘வெங்கடேசன எங்களுக்கு நல்லாத் தெரியுங்க. அவரு தான் அபிராமி கிட்ட தன் அப்பா அம்மா பத்தி சொல்லி, உங்களுக்கு உறவுன்னு சொல்லியிருக்கார்’’ அமராவதி இதை நம்புவதா வேண்டாமா என்பதைப் போலப் பார்த்தாள். தலை சுற்றுவது போல இருந்தது. அபிராமி கதிர்வேலுவுடனா... அவளால் நம்ப முடியவில்லை. ‘‘வெங்கடேசனுக்கு எப்படித் தெரியும் அபிராமி பத்தி’’ என்றான் சிங்காரம். ‘‘நீங்க தான் அவங்க வேணாம்னு ஒதுக்கிட்டீங்க ஆனா அவங்க உங்க எல்லார் பத்தியும் தெரிஞ்சு தான் வைச்சிருக்காரு’’ ‘‘வெங்கடேசன உங்களுக்கு எப்படி பழக்கம்’’ ‘‘அவரு தான் கம்யூட்டர் சென்டர் சொந்தமா வைச்சிருக்காரு. அவங்க சென்டர்ல தான் நாங்க பழக்கமானோம்’’ அமராவதி அபி முதல் ஆண்டில் கம்யூட்டர் சென்டர் சென்று வந்தது நினைவிற்கு வந்தது. ‘‘அடப்பாவி. இத்தன வருசமா உள்ளுக்குள்ள வைச்சிட்டு எப்படி நடிச்சிருக்கா’’ என்றாள் தன்னை அறியாமல், ‘‘இதைச்சொல்லத்தான் முதல்ல கதவைத் தட்டினோம் ஆனா யாரும் திறக்கல’’ என்றான் முதலாமவன். மோனிகா மலங்க மலங்க விழித்தாள். கதவைத் திறந்திருந்தால் மூன்று மணி நேரத்துக்கு முன்னரே உண்மை தெரிந்திருக்கும். யாருக்குத் தெரியும் என்னவெல்லாம் நடக்குமென்று? அமராவதி உள்ளுக்குள் கதிர்வேலு முகம் வந்து போனது. நல்ல பையன் தான் பொறுப்பானவன் தான். வீட்டிற்கு ஒரே பையன். அப்பா அம்மா இருவரும் வேலை பார்க்கிறார்கள். அபிராமிக்கு ஏற்றவன் தான். ஆனால் அவன் அப்பா இவர்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? அப்போது வாசலில், ‘‘அமராவதி அமராவதி’ என்ற குரல். எட்டிப் பார்த்தாள். சாபிராவின் தாய் சல்மா. சுவரைப் பிடித்தப்படி நின்றிருந்தாள். பாவம் சரியாக காது கேக்காது. சாபிரா இன்னும் வரவில்லை என போன் செய்யச் சொல்ல வந்திருக்கிறாளா? சைகையில் என்ன வேணும்னு கேட்டாள். அவள் கையில் வைத்திருந்த ஒரு தாளை நீட்டினாள். தொடர்ந்து அவளே பேசத் தொடங்கினாள். ‘‘அமராவதி இது அபிராமி காலையில எங்கிட்ட கொடுத்திட்டுப் போனா. உங்கிட்ட கொடுக்கச் சொல்லி. ஆனா வந்ததில இருந்து நான் உன்னப் பாக்கல. உன் கதவை பல தடைவ தட்டினேன். நீ திறக்கல. அதனால என்னமோ ஏதோன்னு, இதப் படிச்சிப் பார்த்தேன். உன்மவ கீழ் வீட்டு சக்திவேலு கூடத்தான் மதுரைக்குப் போயி கல்யாணம் செய்துக்கப் போறதா கடிதம் எழுதியிருக்கா’’ அமராவதி கடிதம் முழுதும் படிக்க விடாமல், சல்மா பாட்டி தொடர்ந்தாள். ‘‘பாரு எனக்குத் தெரிஞ்சி சக்திவேலு நல்ல புள்ள தான். நல்லா படிச்சிருக்கான். உத்தியோகமும் பரவாயில்லை. அபிராமிக்கு ஏத்தவன் தான். எப்படியும் நீ உம்மவள யாருக்காவது கட்டிக் குடுக்கத்தானே போற. தெரியதவங்களுக்குக் கட்டிக் குடுக்கறத விட, தெரிஞ்சவனுக்குக் கட்டிக் குடுக்கறது எவ்வளவோ பரவாயில்ல. ‘பெண்ணென்று பிறந்த போதே புருசன் பிறந்திருப்பான்னு சொல்லுவாங்க’ அபிக்குச் சக்திவேலு தான் பிறந்திருக்கானாட்டம் இருக்குது. சமைஞ்ச ரெண்டு குமரியை வச்சிட்டு புருசனில்லாமல் நீதான் என்ன பண்ணுவ? எப்பயிருந்தாலும் கட்டிக்கு குடுக்கத் தானே போற, வீட்டிலயா புள்ளய வைச்சிக்கப் போற, பொட்டப்புள்ள பொறப்பே அப்படித்தான். அவளா தேடினாத் தான் என்ன? நீயா தேடினாத்தான் என்ன? எப்படியும் வேற வீடு தான் போயி உம்மவ பொழைக்கப் போறா. அதனால சரி சரின்னு போயிரு. அதான் உனக்கு நல்லது. அவளுக்கும் நல்லது. கதிர்வேலு அப்பந்தான் கொஞ்சம் குதிப்பான். ரொம்ப சீக்கிரமே அபியோட குணத்தைக் கண்டு சமாதானமாயிடுவான். அவனோட அம்மாவும் ஒண்ணும் பிரச்சனையில்ல. இனுக்கு புனுக்குனு ஒரு வார்த்தை கூட பேசமாட்டா. நீ தான் மனச சமாதானப்படுத்திக்கணும். புள்ளங்க நால புன்ன வந்தா, கதிர்வேலு அப்பன் உள்ள விடலைனு குதிப்பான். ஆனாநீ அப்படிச் செய்யாத. பாரு சாபியும் நைட்டூட்டி போயிடறா. நான் ஒண்டிக் கட்டை. அவங்கள உங்க வீட்ல தங்க வச்சிட்டு, நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு வந்திடுங்க. அப்புறம் வேற வீடு பாத்துக்கலாம். என்ன நான் சொல்றது..... சுல்மா பாட்டி அமராதியைப் பற்றி எதையும் யோசிக்காமல் படபடவென்று பேசிக் கொண்டே போனாள். ‘‘பாரு. சாபிரா படிக்கும் போது இப்படித் தான் ஒரு பையன விரும்பினா. ஆனா அவங்கப்பா சம்மதிக்கல, கட்டாயப்படுத்தி ஒருத்தன சொந்தத்தில் கட்டி வைச்சோம். ஒரு மாசம் கூட இல்ல காதலிச்சவன மறக்கமுடியாம திரும்ப வந்திட்டா. அவள காதலிச்ச பையனும் இன்னும் கல்யாணம் செஞ்சிக்கல. அவன் இவள கல்யாணத்துக்கு முன்னால ஓடி வந்திட சொல்லி இருக்கான். இவ அவங்கப்பாவுக்குப் பயந்திட்டு ஒத்துக்கல. சொன்னத கேக்காமல் வேற ஒருத்தன் கண்ணாலம் கட்டிக்கிட்டானு அவனுக்குக் கோவம். வாப்பாவை மீற முடியாம கழுத்தை நீட்டினாலும் வாழ முடியாத சோகம் இவளோடது. இவளுக்கு இப்ப நாப்பது வயசாகுது. இரண்டு பேரும் தனித்தனியா தான் வாழ்றாங்க. எல்லாம் என் தலையெழுத்து. தப்பு செஞ்சிட்டமுன்னு அவ வாப்பா மனசொடஞ்சி செத்துப் போயிட்டாரு. சாபிரா அன்னக்கு ஓடிப் போயிருந்தான்னா இன்னைக்கு மோனிகா மாதிரி ஒரு புள்ள இருந்திருக்கும். சந்தோசமா இருந்திருப்பா. நாந்தான் பாக்கக் கொடுத்து வக்கல. அபிராமி, தான் விரும்பின ஒருத்தனோட தான் வாழப் போறா. அது வரைக்கும் அவ எடுத்த முடிவு என்னயப் பொருத்த வரைக்கும் சரிதான்’’ என்றாள். கலித்தொகை பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே; சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே; ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்? சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே! (கலித்தொகை -9 : 12-20) ----------------------------------------------------------------