தமிழ் அற இலக்கியங்களின் வழி
மானுட விழுமியங்கள்
வாழ்க்கையில் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம்
முதலான உறுதிப்பொருள் பற்றி
எடுத்துரைக்கும் நூல்கள் நீதி நூல்கள் (அ)அற நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், பன்னிரு பாட்டியல் போன்றன அற
நூல்களுக்கான இலக்கணத்தைத் தருகின்றன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக்
கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும்,
அற நூல் என்று இவற்றை கூறிவிட முடியாது.
எனினும். பிற்கால அறநூல்களில், சங்ககால இலக்கியங்களிலுள்ள அறநெறிக் கருத்துக்கள்
பெரிதும் எடுத்தாளப்பட்டுள்ளன. சங்கம்
மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான உள்ள
18 நூல்களுள்
11 நூல்களும்
அற நூல்களாகக் காணப்படுகின்றன. ஒருவகையில், தமிழ் இலக்கியம் முழுவதுமே அற
இலக்கியம்தான். ஜி.
யூ. போப் பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும்விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன என்கிறார். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள்,சதகங்கள்
என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை
அனைத்தின் அடிச்சரடு அறமே.
சங்க காலச் சூழலும் அற இலக்கியத்
தோற்றமும்
சங்க காலப் புறவாழ்வியல் பெரிதும் தனிமனித, சமூக,
அரச அறநெறிகளின் சிதைவையே காட்டுகின்றன. இச் சிதைவைக் சரிசெய்யவே புலவர்கள் அறநெறிக் கோட்பாட்டை வளர்த்தெடுத்துள்ளனர். . போர்கள் மலிந்து கிடந்த
சங்ககாலகட்டத்தில் புலவர்கள் மன்னர்களின் மனதில் நாட்டின் அமைதிக்கான சிந்தனைகளை
தோற்றுவிப்பதில் முனைந்து செயல்பட்டுள்ளனர். எனினும், அக்கால அரசு,
சமூகம்
ஆகியவற்றின்
தன்மையினால்
உறுதியாக
எடுத்துரைக்க
இயலாமை
இருந்ததையும்
காணமுடிகிறது. இந்நிலைகளே அற இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெருக இடமளித்தன எனலாம்.
(‘‘அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும் புனையிழை’’ (அகம்., 155),“தீதும் நன்றும் பிறர்
தர வாரா,“ (புறம்)
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே;“(புறம் 182)
சங்க கால அற இலக்கியங்கள்
எல்லா இலக்கியங்களுமே அறநூல்கள் என்று
கூறப்படும் தன்மை வாய்ந்தவை என்றாலும் சில நூல்களை மட்டும் அற
இலக்கியங்கள் என்று பாகுபடுத்துகிறோம். காரணம், இவை
நேராகவே அறிவுரை கூறும் முறையில் அமைந்துள்ளன.
திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது, திரிகடுகம்,ஆசாரக்கோவை,பழமொழி நானூறு,சிறுபஞ்சமூலம்,ஏலாதி,முதுமொழிக்காஞ்சி போன்ற அற இலக்கியங்களே தமிழில் தொடக்கத்தில்
வெளிவந்த அற இலக்கியங்கள். இவையே அற இலக்கிய தோற்ற முன்னோடிகள். பிற்கால
அறஇலக்கியங்கள் இவற்றின் வடிவ சிறப்பையும், நேர்த்தியான மொழி உத்திகளையும் மிக
அழகுற எடுத்தாண்டு தமிழில் அற இலக்கியங்கள் பெருக வழிவகுத்துள்ளன.
இடைக்கால அறஇலக்கியங்கள்
இடைக்காலத்தில் வெளிவந்த அருங்கலச்
செப்பு, அறநெறிச்சாரம், நறுந்தொகை, நீதிநெறிவிளக்கம், நன்னெறி, உலகநீதி,முதுமொழி
வெண்பா இவற்றோடு, அவ்வையாருடைய ஆத்திசூடி,கொன்றை
வேந்தன், மூதுரை, நல்வழிபோன்றவற்றைக்
குறிப்பிடலாம்.இவற்றைத் தவிர சிறந்த
நீதி ஒழுக்கங்கள் அடங்கிய நூல்கள் இன்னும் பல உள்ளன. சான்றாக,முத்துராமலிங்க
சேதுபதி இயற்றிய நீதிபோத வெண்பா,செழியதரையன் என்பார் இயற்றிய நன்னெறி,திருத்தக்க
தேவர் இயற்றிய நரிவிருத்தம், கபிலர் அகவல், இராசகோபால மாலை போன்றவை.
இருபதாம் நூற்றாண்டு அற இலக்கியங்கள்
புதிய ஆத்திசூடி (பாரதியார், பாரதிதாசன்,உள்ளிட்டோர் படைத்த
45க்கும் மேலான ஆத்திச்சூடி நூல்கள் உள்ளன). மாயூரம் வேதநாயகம்
பிள்ளையின் நீதிநூல், பெண்மதி மாலை,ஆத்திசூடி
வெண்பா, ஆத்திசூடி புராணம்,நெறிசூடி,தமிழ் சூடி,நீதி சூடி,நீதி சிந்தாமணி,பொண்மதிமாலை, நீதிபேதம்,விவேக சிந்தாமணி
அறநெறி கருத்துக்கள் உள்ள பிற இலக்கியங்கள்
தண்டலையார் சதகம்,கோவிந்த சதகம்,சயங்கொண்டார் சதகம்,அறப்பளீசுர சதகம், மணவாள நாராயண சதகம் முதலான சதகங்கள்
கூறும் அறநெறிக் கருத்துக்கள் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதவை. இவைதவிர, சித்தர் பாடல்கள், திருமூலரின்
திருமந்திரம், தாயுமானவர், வள்ளலார், மஸ்தான் சாகிபு போன்ற பல கவிஞர்களின்
பாடல்களையும் நோக்கும் போது அவற்றுள்
அறக்கருத்துகள் நிறைந்து கிடப்பதனைக்
காணலாம். இவற்றில் செவ்வியல் இலக்கியங்களிலுள்ள பல கருத்துக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
சில இலக்கியங்கள் செவ்வியல் கூறும் அறநெறிகளிலிருந்து மாறான கருத்தை முன்
வைக்கின்றன. பிற்காலத்தில்
தோன்றிய அறஇலக்கியங்களில் செவ்வியல் நூல்களில் உள்ள அறக்கருத்துக்களின் தாக்கமும், செல்வாக்கும் மிகுதியாக உள்ள கருத்துக்களையும், மாறுபடும் கருத்துக்களையும் அதற்கான காலச்சூழல், காரணங்களையும் ஆராய வேண்டியது அவசியம்.
திருவள்ளுவர் ‘கற்க கசடற‘ என்கிறார்.பதினாறாம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை என்னும் நூலில், ‘கல்விக்கழகு
கசடற மொழிதல்,அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்‘ என்கிறார். உலகநாத பண்டிதர்
உலகநீதியில், ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்கிறார். ‘சாதி ஈனத்தில்
பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல் வட்டமன்றோ‘ என்கிறது குமரேச சதகப் பாடல்.
நீதிவெண்பா என்ற நூல், “கற்றோர்கள் எங்கே பிறந்தாலும்
என்?” என்று கேள்வி எழுப்புகிறது.
அறநூல்களைப்
பயிலுவதும் பாடமாக வைப்பதும் பயன்படுத்துவதும் இன்று
குறைந்துவிட்டது. வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு நிலையிலும்
தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அற நூல்கள். இவை பழைய
அனுபவங்களின் சாரங்கள். தமிழர்கள் இவற்றை மறக்காமல் பயின்று போற்ற
வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?