நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 4 May 2013

ஆய்வு அனுபவங்கள் -1

  1. ஆய்வு செய்வது எப்படி?


                தமிழில் தற்போது இலக்கிய ஆய்வுகள் பெருகி 
வருகின்றன.முதுகலை, ஆய்வியல் நிறைஞர், மற்றும் முனைவர் 
பட்டங்களுக்காகத் தமிழ் இலக்கியத்தில் பெருகி வரும் ஆய்வுகள்  பட்டங்களுக்காகவும் பணிகளுக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், சரியான நெறிமுறைகளோடு மேற்கொள்ளப்பட்டால், அவை ஆய்வாளருக்குப் பல வகைகளில் பயனளிக்கும்.

                 முதலில் மேற்கொள்ளப்படும் முதுநிலை ஆய்வு, பயிற்சி பெறுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.அது ஒரு குழந்தை தவழ்வதற்காக செய்யும் முயற்சி போன்றது. ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு அப்பயிற்சியைச்  சற்றே மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. இது நடை பயில முயலும் குழந்தையின் நிலையை ஒக்கும்.ஆனால், முனைவர் பட்ட ஆய்வானது அப்பயிற்சியின் விளைவாகக் கிடைத்த பட்டறிவைக் கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்று.  தன்னம்பிக்கையுடன்  நன்றாகக் கால் ஊன்றி நடக்கின்ற ஒரு மனிதனின் நடையோடு இதனை ஒப்பிடலாம்.

           ஆய்வாளர் பெற்ற பயிற்சியின் பலனை,முனைவர் பட்ட ஆய்வே காட்டும். ஒருவர் தன் வாழ்நாளில் பெறக்கூடிய இறுதியான உயர்வான பட்டமும் அதுவேயாகும் அதற்கு மேல் டி.லிட்., பட்டம் என்ற ஒரு பட்டம் இருந்தாலும், அதை மேற்கொள்பவர்கள் மிக அரிதாகவே உள்ளனர். எனவே, முனைவர் பட்ட ஆய்வே, ஒருவரது வாழ்வின் மிக உயர்வான பட்டமாக மதிக்கப்படுகிறது.முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு முடித்த நிலையில் தான், ஆய்வாளர் ஆய்வு  பற்றி மட்டுமின்றி வாழ்க்கையையும் தெரிந்து கொள்கிறார்.ஒவ்வொரு ஆய்வாளரும், முனைவர் பட்டஆய்வு முடிந்த நிலையில், முனைவர் பட்டஆய்வுதான்  முடிந்துள்ளது ஆனால்,ஆய்வில்  போக வேண்டிய தூரம்,படிக்கவேண்டிய நூல்கள் ,மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பொருள்கள் ஏராளம் என்பதை உணரமுடியும். எனவே,முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளுமுன் ஆய்வாளர் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதற்குரிய பயிற்சியைப் பெறவேண்டும்.அதற்கான சில அனுபவப் பகிர்வுகள் இதோ!

 மொழியின் மூன்று நிலைகள்


மொழியை நாம் மூன்று நிலைகளில் கையாள்கிறோம்.

அ.பேசும் மொழி,
ஆ.படிக்கும் மொழி,
இ.எழுதும் மொழி
  என்பவையே அவை.

  அ.பேசும் மொழி

       அன்றாடம் நாம் இயல்பாக நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உரையாடல்களை நிகழ்த்தியபடியே இருக்கிறோம். நம் கருத்தைக் கூறவும், பிறர் கருத்தை அறியவும் பயன்படுகின்ற மொழி பேசும் மொழியாகும்.இதை வழக்கு மொழி என்றும் கூறலாம்.வட்டாரத்திற்கு வட்டாரம் ஒரே மொழி பலவிதங்களில் பேசப்படும். இப்பேச்சு மொழி, இடத்திற்கு இடம் மாறுபட்டாலும், ஒரு கடிதம் அல்லது கட்டுரை எழுதும் போது, படித்தவர்கள் பேச்சுவழக்கு மொழியை எழுத்தில் அப்படியே கையாள்வதில்லை.

           பேசுவது போலவே எழுதுவதென்பது ஒருவரது மதிப்பைக் குறைத்து விடும் என்பதை ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். சரி. பேசுவது போலவே எழுதாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? அல்லது எழுதுவதற்கரிய மொழியை எப்படி கைவசப்படுத்துவது? இதற்கு விடை ஒன்றுதான். நிறைய  படிக்க வேண்டும்.

ஆ.படிக்கும் மொழி 

 

             படிக்கும் மொழி என்பது படிப்பவர்களுக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். எதைப் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? ஏன் படிக்கிறோம்? என்ற கேள்விகளுக்கானப் பதில்கள் நபர்களுக்கேற்ப மாறுபடும். ஒரு ஆய்வை மேற்கொள்ள விரும்பும் ஒருவர், இக்கேள்விகளைத் தனக்குள் எழுப்பிக்கொண்டு ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது அவர் படிக்க வேண்டிய நூல்கள் பற்றிய தெளிவு கிடைக்கும்.

           ஆய்வு தொடர்பாக ஆய்வாளர் பல நூல்களைப் படிக்கும் பொழுது,சொற்களில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.அப்போது தான்,பேசும் பொழுது கையாளும் சில சொற்களை நாம் எழுதும்பொழுது கையாள்வதில்லை என்பதை  உணரமுடியும்..ஆய்விற்காகப் படிப்பவற்றில் சில சொற்கள் புதியதாகத் தோன்றும். சிலவற்றின் பொருள் புரியாது. சில புதுமையாக இருக்கும். சில சொற்களை கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். சில தெரிந்தவையாக இருக்கும் . ஆனால் வேறொரு பொருளில் கையாளப்பட்டிருக்கும். இவற்றைக் கண்டு மிரண்டு விடாமல்,தொடர்ந்து படிக்க வேண்டும்.தொடர்ந்து படிக்கும் போதே. நூலாசிரியர் சொல்ல வந்த கருத்தைப்  புரிந்து கொள்ள முடியும். புரியாத சொற்களைக் கண்டு மிரளாமல் தொடர்ந்து படிப்பதால் புதிய புதிய சொற்களை அவற்றின் பொருளோடு அறிய வாய்ப்பு கிடைக்கும். அச்சொற்களைத் தொடர்ந்து படிப்பதால் அவை ஆய்வாளரின் நடையிலும் இயல்பாகக் கலந்து    விடும்.                                   தன்னையறியாமலேயே ஆய்வில் கையாளத் தொடங்கி விடுவர்.

          நிறைய நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் எழுதுவதற்குரிய சொற்களை அறிய முடியும்.அதைச் சரியாகப் பயன்படுத்தவும் முடியும்.ஆய்வில் ஆய்வாளர் சொல்ல வந்த கருத்தைப் பிறர் நன்கு உணருமாறு குழப்பமில்லாமல் எடுத்துரைக்க வேண்டுமெனில், சொற்களின் பொருண்மை பற்றிய அறிவும், அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றிய விழிப்புணர்வும்  தேவை.

                படிக்கும் மொழி அல்லது கற்கும் மொழி என்பது ஆய்வைப் பொருத்தளவில் முதுகெலும்பாகும். முதுகெலும்பு உறுதியாக இருந்தால்தான் ஒரு மனிதனால் உறுதியாக நிற்க முடியும்.அதுபோல் ஓர் ஆய்வு கற்றறிந்தவர் அவையில் நிற்க வேண்டுமெனில்,ஆய்வாளர் நிறைய கற்றிருக்க வேண்டும். ஆய்வுப் பொருள் குறித்த முதிர்ந்த அறிவைப் பெற்றிருக்கவேண்டும். இல்லையெனில் என்பிலதனை வெயில் போலக் காயுமே என்ற குறளுக்கு ஏற்ப ஆய்வாளரின் நிலை ஆகிவிடும். எலும்பில்லாத உயிர்கள் வெயிலில் துன்புறுவதுபோல, எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் குறித்த பயிற்சியில்லாதவர்கள் ஆன்றோர் அவையில் துன்புற நேரிடும். ஒரு ஆய்வாளர் ஆறு வகையான நூல்களைப்  படிக்க வேண்டும்.

  •  ஆய்வியல் நெறிமுறைகள் குறித்த நூல்கள்
  •  மூல நூல்
  •  துணை நூல்கள்
  •  ஆய்வேடுகள் அல்லது நூலாக்கம் செய்யப்பட்ட ஆய்வேடுகள்.
  •  அகராதிகள்.
  •  ஆய்விற்கு ஏற்ற தகவல் தருபவை   

  •        1. ஆய்வியல் நெறிமுறைகள் குறித்த நூல்கள்

 ஒரு ஆய்வினை நிகழ்த்த விரும்பும் ஒருவர் முதலில் படிக்க வேண்டியவை   ஆய்வு செய்வதற்கான நெறிமுறைகள் தொடர்பான நூல்களைத்தான். தமிழில் ஆய்வியல நெறிமுறைகள் குறித்த ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஒரு பத்திரிகையைப் போலவோ,ஒரு இலக்கிய நூலை வாசிப்பது போலவோ,கடிதம் படிப்பது போலவோ இவற்றை வாசிக்கக் கூடாது. விதிமுறைகளை நெறிமுறைகளோடு கூறுகின்ற இந்நூல்களை இலக்கண நூல்களைப் படிப்பது போலப் படிக்கவேண்டும். இலக்கண விதிகளை நாம் உதாரணங்களில் பொருத்திப் பார்த்து தெரிந்து கொள்வோம். அதைப் போல விதிகள் கூறுகின்ற உதாரணங்களை உன்னிப்பாக ஆழ்ந்து கவனித்துப் படிக்கவெண்டும். மேற்கோள் எடுக்கும் முறை, அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தும் முறை, ஆய்வுப் பொருள் தேர்வு குறித்த தகவல்கள், ஆய்வு நடை, ஆய்வு தலைப்பு அமையவேண்டிய முறை,இயல்பிரிப்பு உத்திகள், அக கட்டமைப்பு, புறகட்டமைப்பு,ஆய்வு அறம் போன்ற செய்திகள இந்நூல்களில் இடம் பெற்றிருக்கும். ஆய்வினைத் தொடங்குவதற்கு முன் ஆய்விற்குரிய விதிமுறைகளை ஒருவர்  கண்டிப்பாக படிக்க வேண்டும்.
  • 2.மூலநூல் 

 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நூல்களில் மூலநூல்தான்  மிகமிக இன்றியமையாதது.அதைத்தான் ஆய்விற்கு உட்படுத்தப்போகிறோம் என்பதால்,ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த பின் எழுதுவதற்கு முன்  மூல நூலை குறைந்தது மூன்று முறையாவது படிக்க வேண்டும்.
முதல் முறை படிப்பதென்பது பொதுவாகப் படிப்பது. நூலில் கூறப்பட்டுள்ள கருத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் படிப்பதாகும். 
இரண்டாம் முறை படிப்பதென்பது ஆய்வுத் தலைப்பை கருத்தில் கொண்டு, தரவுகளைக் கண்டுபிடிப்பதற்காகப் படிப்பதாகும்.கையில்  பென்சிலுடன் தான் படிக்கத்தொடங்க வேண்டும். தரவுகள் ஆய்வுத் தலைப்பை ஒட்டி தென்படும்போது அதைக் குறித்துக் கொள்ளவேண்டும். சொந்தநூலாக இருந்தால் நல்லது. இல்லையெனில் தனித்தனித் தாளில் தரவுகளைப் பக்க எண் அல்லது பாடல் எண், என்ன பொருள் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.உதாரணமாக தொடரியல் தொடர்பான தலைப்பாக இருப்பின் தரவுகள் உருபன், ஒலியன்,தொடரமைப்பு, பொருளமைதி என்ற வகையில் இருக்கலாம். இவற்றை முறையாகக் குறித்துக் கொள்ளவேண்டும்.
மூன்றாம் முறை படிக்கும்போது முன்பெடுத்த குறிப்புகளினடிப்படையில்,  கவனத்திலிருந்து எதுவும் தப்பிவிடாதபடி, மீண்டும் ஒரு முறை முழுமையாகப் படித்துப்பார்த்து, மேற்கோள் அட்டைகளில் எழுதி முறையாக தரவுகளைத் திரட்ட வேண்டும்.

  • 3.துணை நூல்கள்  


இவ்வாறு மூலநூலில் தரவுகளைத் திரட்டிய பின்னர்,இரண்டாம் நிலைத்தரவுகளுக்காக மூலநூலில் சேகரித்த தரவுகளுக்கேற்ப, துணைநூல்களைத் தேடிப்படிக்கவேண்டும். உதாரணமாக,
தலைப்பு பெண்ணியம் சார்ந்ததெனின் பெண்ணியம் தொடர்பான கோட்பாடு,அதன் வளர்ச்சிநிலை,வகைகள்,அதைப் பற்றிய புரிதலைப் பெற உதவும் நூல்கள் இவற்றோடு பெண்பிறப்பு-                             வளர்ப்பு,பெண்கல்வி,பெண்உரிமை,திருமணம்,வரதட்சணை,குடும்பம்,சாதிச்சிக்கல்,பெண் தொடர்பான சமூக சிக்கல்களை வெளிப்படுத்தும் நூல்களையும்தேடிப்படிக்கவேண்டும். பலஅறிஞர்களின் கருத்துகளையும்,தற்போதைய சூழலையும் அறிய வேண்டும். துணை நூல்களைத் தேடிப் படிக்கும் போதே மூல தரவுகளுக்கு ஏற்றதாகவோ, மாற்றாகவோ கிடைக்கும் செய்திகளை மேற்கோள் அட்டையில் பதிவு செய்து கொண்டே வரவேண்டும்.

  •   4.ஆய்வேடுகள்  


       பிறகு ஆய்வாளரின் ஆய்வுத் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வேடுகளையோ, நூலாக்கம் செய்யப்பட்ட ஆய்வேடுகளையோ தேடிப் படிக்க வேண்டும். ஆய்வாளரின் ஆய்வுத் தலைப்பில் ஆய்வேடுகள்இல்லாமலிருந்தால், வேறு தலைப்பில் வெளிவந்துள்ள ஆய்வேடுகளையும் படித்துப் பார்ப்பது நலம். அப்பொழுதுதான் ஆய்வு எழுதும் முறை பற்றிநன்கறிய முடியம்.உதாரணமாக சிலப்பதிகாரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் ஒருவர், காப்பியம் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகளைத்தான் படிக்க வேண்டுமென்பதில்லை.சங்க இலக்கிய ஆய்வுகளையோ, தற்கால இலக்கிய ஆய்வகளையோ கூட படிக்கலாம். ஒரு ஆய்வுப் பொருளில் ஆய்வு எவ்வாறு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கு இது உதவும்.சேகரிக்கும் தரவுகளைக் கொண்டு உட்தலைப்புகள் எவ்வாறு இடப்பட்டுள்ளன, ஆய்வு நடை எவ்வாறு அமைந்துள்ளது, ஒரு செய்தியைத் தொடங்கி அதை எவ்வாறு முடிப்பது என்பன போன்ற பல அரிய செய்திகளை இதனால் அறிந்து கொள்ள முடியும்.

         ஆய்வேடுகளைப் படிப்பதென்பதே ஒரு பயிற்சிக்காகத்தான் என்பதால் பிற தலைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வேடுகளை ஆய்வாளர் ஒருமுறையாவது படிப்பது நல்லது.

  • 5.அகராதிகள்  


ஆய்வு என்று தொடங்கும் பொழுதே அங்கே ஐயம் என்பதும் தோன்றத் தொடங்கிவிட வேண்டும். காலத்திற்கேற்ப சொற்களில் பொருண்மை மாறிக் கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் நாற்றம் எனப்பட்டது மணம் என்ற பொருளில் வழங்கப்பட்டு, பூவினில் நாற்றம் நீ என்று கடவுளை நாற்றமுடையவன் என வழங்கும்  முறை இருந்தது.ஆனால் இன்று? அது போல் சான்றோர் மெய்ம்மறை என்று போர்க்களத்தில் வீரத்துடன் போரிட்ட ஒரு மன்னனை ஒரு  புலவர் பாடியுள்ளார். பதிற்றுப்பத்து காலத்தி்ல் சான்றோர் என்றால்  வீரர்கள் எனப்பொருள். தனக்காகப் போரிடும் வீரர்களை எதிரிகள் தாக்க வரும்பொழுது, தன் வீரர்களுக்கு  முன்பாக  நின்று அவர்களுக்குத் தானே கவசமாகி அம்மன்னன் தன் உயிரையும்  பொருட்படுத்தாது போரிட்டு அவர்களைக் காப்பான் என்னும் பொருளில்தான் சான்றோர் மெய்ம்மறை என்ற தொடர் கையாளப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் சான்றோர் என்னும் சொல் வீரர்களைக் குறிப்பதில்லை.கற்றவர்களையே குறிக்கிறது.        சங்ககாலத்தில் நகர் என்னும் சொல் அரண்மனையையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்கால இலக்கியத்தில் புதிய புதிய சொற்கள் பெருகி வருகின்றன. சிறாரியம்,பெண்ணியம்,தலித்தியம்,அரவாணியம்,புலம் பெயர்ந்தோர், விளிம்பு நிலை மனிதர்,கதைசொல்லி போன்றவை சில. இவற்றிற்கான சரியான பொருளை அறிந்தபின்னர் தான் ஆய்வினை நாட வேண்டும்.இல்லையெனில் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பதுபோல் ஆய்வாளன் ஆய்வைக் கெடுத்தான் என்ற புதுமொழி உருவாகிவிடும்.


  • 6.ஆய்விற்கு ஏற்ற தகவல் தருபவை 


 ஆய்வின் தலைப்பிற்கும் கருதுகோளுக்கும் ஏற்ப இவை மாறுபடும். ஆய்வாளரின் நுண்ணறிவைப் பொறுத்தும்,கடின உழைப்பைப் பொறுத்தும் இவை அமையும்.  ஆங்கில நூல்கள், கல்வெட்டுகள்,நாளிதழ்கள், இதழ்கள், இணையம், ஆவணங்கள், தகவலாளர்கள் முதலானவை இப்பிரிவிற்குள் அடங்கும்.

எனவே, ஒரு பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர் ஆய்வு தொடங்கிய நாளிலிருந்தே இடைவிடாது தேவையான நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.நூலறிவே ஆகுமாம் நூலாம்பல் என்பது ஆய்விற்கும் பொருந்தும். இவ்வாறு தொடர்ச்சியாகப் படிப்பதன் மூலம், ஆய்வாளரின் பேச்சு மொழியிலும் முன்னேற்றம் நிகழ்ந்துவிடும். . ஆய்வைத் தொடங்கி பல நூற்களைப் படித்தபின் அவர் பேசும் பேச்சுமொழிக்கும், முன்பு அவர் பேசிய பேச்சுமொழிக்கும் இடையிலான மாற்றத்தை ஆய்வாளர் உணர முயும். உறுதியாக தெளிவாக தன் ஆய்வுப்பொருள் குறித்த சொற்களைக் கையாளத் தொடங்கியிருப்பார். இவ்வாறு தான் மேற்கொள்ள உள்ள ஆய்வுத் தொடர்பானத் தகவல்களை ஒருவர் பேசத் தொடங்கி,  ஒரு தெளிவிற்கு வந்த நிலையில்தான்  எழுதுவதற்குத் தகுதி பெற்றவராகிறார்.ஆய்வுப் பொருள் குறித்து கற்றும்,நெறியாளரிடம் எடுத்துரைத்தும் எழுதுவதற்குரிய தகுதியைப் பெற்ற பின்னர்தான் எழுதத்தொடங்க வேண்டும்.

இ.எழுதும் மொழி



          எழுதுவது என்ன? எதற்காக? யார் படிப்பதற்காக? என்ற மூன்று கேள்விகளுக்கான பதில்களை ஆய்வாளர் சிந்தித்த பிறகே அதற்கேற்ப எழுத வேண்டும். உதாரணமாக கதை எழுதுவது, கடிதம் எழுதுவது,பத்திரிகைகளுக்கு எழுதுவது என்று எடுத்துக்கொண்டால் அவற்றிற்கேற்ப வடிவம், நடை, பயன்படுத்தும் சொற்கள் போன்றவை மாறுபடும். ஆய்விற்காக எழுதும் பொழுது  அதற்குரிய விதிமுறைகள் அனைத்தும் அறிந்து எழுத வேண்டும்.. வாக்கியப்பிழை, கருத்துப் பிழை, எழுத்துப் பிழை, ஒருமை - பன்மை மயக்கம், குழப்ப நடை,வெற்றுச் சொற்கள்  உள்ளிட்ட பிழைகளின்றி இலக்கிய இலக்கண விதிகளுக்குட்பட்டு எழுத வேண்டும்.

          பிழையற எழுதுவதே எழுத்து எனப்படும்.ஆய்வு எழுதுவது என்பது விளையாட்டு  அல்ல. தேர்வு நோக்கில் மட்டுமே எழுதிப் பழகியவர்கள் எழுத்துப்பிழை,கருத்துப்பிழை,இலக்கணப்பிழை, ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருப்பார்கள். கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே இருக்கும். ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், பொருள் மயக்கம் பற்றி அக்கறையின்றி எழுதியிருப்பார்கள். ஆனால்,ஆய்வில் இவையெல்லாம் அறவே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். ஆய்வாளராக ஆவதற்கு அடிப்படைத் தகுதிகள் சில உண்டு. அவற்றை அறிந்து  அவற்றை நீக்க பயிற்சி பெற வேண்டும். அவை,

1.எழுத்துப்பிழை அறவே வரக் கூடாது 

ஒரு மொழியின் இயல்பான முறைக்கு மாறாக எழுதும்பொழுது ஏற்படும் பிழைகளை பிழை என்கிறோம். எழுத்துப்பிழை,சந்திப்பிழை,மரபுப் பிழை,
( ழ,ல,ள,ர,ற,ன,ண போன்றவை மாறினால் பொருள் மாறுபடும் என்கிற அறிவு தேவை.(உம்.கலி-துன்பம்,களி- உணவு,கழி-நீக்கு,கோல், இலை-தாவர இலை,இளை-மெலிதல்,இழை-நூல் இழை)

2.ஒற்றுப்பிழை அறவே வரக் கூடாது.

(ஒற்று வந்தால் என்ன பொருள்,வராவிட்டால் என்ன பொருள் என்பதில் தெளிவு தேவை.(கடை பிடி-பின்பற்று, கடைப்பிடி- கடையைப்பிடி,தமிழ்ப்பள்ளி-தமிழைக் கற்பிக்கும் பள்ளி, தமிழ் பள்ளி-தமிழ் என்பவர் நடத்தும் பள்ளி)சொல்லப்படும் பொருளில் மாற்றங்கள் ஏற்படாமலிருக்க ஒற்று மிகுதல்,ஒற்று மிகாதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. தமிழில் உள்ள தரமான நூல்களைப் படித்தல்,அடிக்கடி எதையாவது எழுதிப் பார்த்தல்,எழுதியதில் பிழைகள் உள்ளனவா என படித்துப் பார்த்தல் ஆகிய முறைகளைப் பின் பற்றினால் எழுதும்போது பிழைகள் ஏற்படாது.

  3.வாக்கியப்பிழை   அறவே வரக் கூடாது.


திணை-பால்-எண்-இடம்,  ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றில் பிழைகள் ஏற்படாமல் வாக்கியங்களை அமைக்க வேண்டும்.கருத்துப்பிழை வரவே கூடாது.என்னசொல்லப்போகிறோம் என்பதில் தெளிவில்லையெனில் கருத்துப்பிழை ஏற்படும்.அப்படியுமிருக்கலாம்,இப்படியுமிருக்கலாம் என்பது போன்ற குழப்ப நடைஆய்வேட்டில் இடம்பெறக்கூடாது.


திணை-பால்-எண்-இடம்: 


பெயர்ச்சொற்கள் எந்தவிதமான திணை-பால்-எண்-இடம் முதலியவற்றைக் கொண்டு வருகின்றனவோ, அவற்றிற்கு ஏற்றவாறே வினைச்சொற்களும் திணை-பால்-எண்- இடம் ஆகியவற்றைக் கொண்டு முடிய வேண்டும். இல்லையெனில் தொடர் பிழையானதாகவே அமையும்.


ஒருமை-பன்மை மயக்கம் :


 ஒரு தொடர் ஒருமையில் ஆரம்பிக்கப்பட்டால், ஒருமையில்தான் முடிக்கப்படவேண்டும். அது போல ஒரு தொடர் பன்மையில் ஆரம்பிக்கப்பட்டால்,  பன்மையில்தான் முடிக்கப்படவேண்டும்.

கணினி தொழில்நுட்ப வளர்ச்சியின்(எழுவாய்-ஒருமை) காரணமாகப் பெண்கள், வீட்டில் இருந்தவாறே வருவாய் ஈட்ட இயலும் என்னும் நிலை உருவாகியுள்ளது.(ஒருமை) -சரி. ஒருமையில் ஆரம்பித்து ஒருமையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது

அமெரிக்கா,இரஷ்யா முதலான நாடுகள்,(எழுவாய்-பன்மை) விண்ணியல் துறையில் பெருமளவில் கவனம் செலுத்தி வருகின்றன.(பன்மை)-சரி. பன்மையில் ஆரம்பித்து பன்மையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது.

மகளிர் இதழ்கள்,(எழுவாய்-பன்மை)பெண்கள் கல்வி கற்று இதழியல் துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்ததன் விளைவாக,  வளர்ச்சி பெற்றது.(ஒருமை) -தவறு பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது.

தினபூமி இதழ்,(எழுவாய்-ஒருமை)வணிக நுட்பங்களையும் பணம் ஈட்டும் வழிமுறைகளையும் அக்கறையுடன் எடுத்துக் கூறுகின்றன.-தவறு  ஒருமையில் ஆரம்பித்து பன்மையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது.

4.நிறுத்தற்குறிகளை இடுவதில் குழப்பம் கூடாது

(,)காற்புள்ளி(comma)

 சொற்களைத் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் பொழுது மற்றும் தொடர்கள் இணைக்கப்படும் போதும், இக்குறியினை இட வேண்டும்.மேலும், எனவே,எனினும்,ஆகையால்,ஆகவே,என்றாலும்,அதனால்,இதனால்,
இருப்பினும்,ஆகையினால்,போன்றவற்றிற்குப் பின்னர் காற்புள்ளி இடவேண்டும்.மேற்கோள் குறிக்கு முன்னரும், விளிச்சொற்களுக்குப் பின்னரும் இக்குறிஇடுதல் வேண்டும்.பொருளில் குழப்பம் ஏற்படாமலிருக்க, உரிய இடங்களில் இக்குறியை இட வேண்டியது இன்றியமையாததாகும்.

;அரைப்புள்ளி,(semicolan)  


ஒரு தொடரில் சிறு வாக்கியங்கள் ஒவ்வொன்றும், முழுமையானக் கருத்தைத் தனித்தனியாகக் கொண்டிருந்தால் அவ்வாக்கியங்களுக்கிடையில் அரைப்புள்ளி இடவேண்டும். உம். அவர் பல்கலை வித்தகர்;கல்விக் களஞ்சியம்;குணக் குன்று.இதைப்போல் ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளைக் கொண்டு தனித் தனித் தொடர்கள் தொடர்ந்துவரின் அவற்றிற்கிடையிலும் இப்புள்ளியை இடவேண்டும். உம்.அவன் புரிந்து கொள்வான்; செய்யமாட்டான்.

(:) முக்காற்புள்ளி (colan) 


ஒரு தொடரில் கூறிய ஒரு செய்தியினை மேலும் விரிவாக கூறும் போது முக்காற்புள்ளி இடவேண்டும்.உம்., இராமன் பதாகையைப் பரதனிடம் கொடுத்தான். பதாகை: பதாகை என்பது காலில் அணியப்படும் தோலிலான செருப்பு ஆகும்.மேலும், ஒரு தொடரில் ஒரு கருத்தினை விளக்குவதற்காக மட்டுமின்றி,அதனை ஆதரிக்கும் விதமாக,வேறு ஒரு கருத்தினை கூறும்போதும், ஒரு கருத்து முடியுமிடத்தில் இப்புள்ளியை இடவேண்டும். மனிதர்கள் இரண்டுவகை. ஒருசாரார் நல்லவர் : மறுசாரார் வல்லவர்.

(.)முற்றுப்புள்ளி(full stop) 

 

ஒரு தொடர் முடியும் பொழுது, செல்ல வந்த கருத்து முடிந்து விட்டது என்பதை தெரிவிக்கும் விதமாக முற்றுப்புள்ளி இடவேண்டும்.சொற்களைச் சுருக்கி எழுதும் போது, சுருக்கம் என்பதைப் படிப்பவர் அறியம் வண்ணம் சுருக்கிய சொல் ஒவ்வொன்றிற்கும்   பின்னர் முற்றுப் புள்ளி இடவேண்டும். இறுதி சுருக்க எழுத்திற்குப் பின்னர் சுருக்கம் முடிந்து விட்டது என்பதைக் குறிக்க காற்புள்ளி இடவேண்டும்.உம்., திரு.வி.க., மு.வ., கி.வா.ஜ., கி.மு.,

(!)உணர்ச்சிக்குறி,(exclamatory mark) 


வாழ்த்து, வரவேற்பு, மகிழ்ச்சி, இழப்பு முதலான உணர்ச்சிகளை வெளிப்படுத்துமிடங்களில் இக்குறி பயன்படுத்தப் படவேண்டும்.
 ஆஹா! எத்தனைப் பெரியவர் அவர்!     என்னே! உலக இயல்பு!
ஆய்வாளர் ஆய்வு நடையில் உணர்ச்சி நடையைப் பயன்படுத்தக்கூடாது. எனினும், மேற்கோள்களில் இவை இருப்பின் அப்படியே எடுத்தாள வேண்டும்.

( ` )ஒற்றைமேற்கோள்(single quatation)  

 

ஆய்வுப் போக்கில் பழமொழிகளைக் கையாளும் பொழுதும்,மேற்கோளுக்குள்  மேற்கோள்கள் வரும் போதும், ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்பட வேண்டும்.

(" ")இரட்டை மேற்காள்(double quatation)  


ஒரு நூலிலுள்ள செய்திகளை அப்படியே எடுத்து பயன்படுத்தும் பொழுது, இரட்டை மேற்கோளை இடவேண்டும். அது மற்றொருவருடைய கருத்து என்பதை அறிந்து கொள்ள இரட்டை மேற்கோள் உதவுகிறது.ஆய்வில் நிறைய பயன்படுத்தக்கூடிய ஒன்று இரட்டை மேற்கோள் ஆகும். இரட்டை மேற்கோளில் இரண்டு விதமான குறிகள் உள்ளன. ஒன்று தொடங்கும் குறி;மற்றொன்று முடிக்கும் குறி. இரண்டையும் ஏற்ற இடங்களில் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

- -இணைப்புக்கோடு,(hypen)  


ஒரு வாக்கியத்தினை மற்றொரு வாக்கியத்தோடு இணைப்பதற்கு உதவுவது இணைப்புக் கோடு ஆகும்.

( )பிறைக்குறி,(round bracket) 


 ஒரு சொல்லினை தெளிவாக விளக்குவதற்கு அதன் அருகில் அடைப்புக்குறிக்குள் அதைப் பற்றி விளக்கும் வேறொரு விளக்கச்சொல்லை கொடுக்கிறோம். அப்போது இடப்படும் அடைப்புக்குறியே பிறைக்குறி ஆகும்

[ ]பகர அடைப்புக்குறி,(squre bracket)  


பிறைக்குறியினை ஒரு அடைப்புக்குறிக்குள்  இடும்போது பகர அடைப்புக்குறியை பயன்படுத்த வேண்டும்.

..........தொடர் விடுபாட்டுக்குறி,(dots mark)  


ஒரு செய்யுளிலோ, ஒரு மேற்கோள் வாக்கியத்திலோ, தேவையில்லாதவற்றை வி்ட்டுவிடும்போது, அதைக் குறிக்க தொடர் விடுபாட்டுக்குறியினை இடவேண்டும்.

_...._  இடைப்பிறவரல்குறி (dash)  


ஒவ்வொரு சொல்லும் ஒரு வகையில் இன்றிமையாதவை;  ஏதோ ஒரு கருத்தினை விளங்கிக் கொள்ள உதவுபவை என்ற நிலையில், அத்தொடர்பற்ற சொற்களை இணைப்பதற்கு இக்குறி இடப்பட வேண்டும். கல்லூரி-முதல்வர்கள்-மாநாடு

*நட்சத்திரக்குறி(star mark)  


ஒரு புதிய சொல் குறித்தோ,ஒரு புதிய நிகழ்வைக் குறிப்பிடும்  நிலையிலோ அந்த இடத்திலேயே அது பற்றிய விவரத்தைக் குறிப்பிடமுடியாத நிலையில், அதன் அருகில் ஒரு நட்சத்திரக்குறியை இட வேண்டும். பின்னர், அப்பக்கத்தின் இறுதியில் நட்சத்திரக்குறியை இட்டு அதற்கான விளக்கத்தைத் தரவேண்டும்.அடிக்குறிப்பினைக் காட்டும் குறி என்றும் இதனைக் கூறலாம்.ஒரு ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர், நிறுத்தற் குறிகள் இடுவதில் தெளிவுடன் இருக்க வேண்டும்.

மேற்கூறிய பயிற்சிகளைப் பெறவதற்கு ஆய்வாளர் ஏதாவது ஒரு ஆய்வுப் பொருளில் சிறு சிறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.  சில கருத்தரங்குகளில் கட்டுரை எழுதி,  பங்கு பெறலாம்;தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கட்டுரைகளை எழுதி அனுப்பலாம். ஏதாவது ஒரு சிறு ஆய்வுப் பொருள் குறித்து கற்றும்,எடுத்துரைத்தும், எழுதியும்  பயிற்சி பெற்ற பின்னரே  பட்டத்திற்குரிய ஆய்வினைத் தொடங்க வேண்டும்.

தொடரும்.......