நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 8 October 2021

my programs

 https://youtu.be/vy3yrg1xKTI









கருணைக்கடல் இராமாநுசர் காவியம்

கருணைக்கடல் இராமாநுசர் காவியம்

இருபதாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியங்கள் இந்திய மற்றும் தமிழ்த் தேசிய, அரசியல் தலைவர்களின் வரலாற்றினைப் படைக்கும் காப்பியங்களாகவே எழுந்துள்ளன. அவ் வரிசையில் மணிமகுடமாக சமயாச்சார்யா ஒருவரின் வாழ்க்கையைப் படைக்கும் காப்பியமாக இராமானுச காப்பியம் மலர்ந்துள்ளது.
சமயம் சார்ந்த பொதுவுடைமைக் கருத்துக்கள், பகுத்தறிவு கருத்துக்கள் சாதி சமயச் சிக்கல்கள், சமுதாய ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றை அக்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு இக்காப்பியம் இயற்றப்பட்டுள்ளது.
இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றுக் காப்பியங்களாக பண்டிதை அசலாம்பிகை அம்மையின் காந்தி புராணம், மாலிறையன் இயற்றிய அம்பேத்கர் காவியம், ம. இராமனின் ஸ்ரீ இராகவேந்திர மகாகாவியம், கண்ணதாசனின் இயேசு காவியம் வரிசையில் சிற்பியின் கருணைக்கடல் இராமானுச காவியமும் இணைந்து தமிழன்னைக்கு மேலும் ஒரு புதிய அணிகலனாகத் திகழ்கின்றது. 20ம் நூற்றாண்டின் முதல் காவியமான பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதியார், எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினுடைய காவியமென்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருடத்து நூற்று பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவித்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்தல் வேண்டும் என்று பாஞ்சாலி சபத முகவுரையில் குறிப்பிட்டிருப்பார். பாரதியில் தோய்ந்த கவிஞர் சிற்பி அவர்களும் பாரதியின் வாக்கினை உள்வாங்கி சற்றும் பிசகாமல் அற்புதமான காவியத்தை காலமறிந்து சிறப்பாக வெளியிட்டுள்ளார்.
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களையும், பிற்போக்கு எண்ணங்களைப் போக்குவதற்கும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கும் இராமானுசரின் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் பல வடிவில் எழுத வேண்டியது காலத்தின் தேவையேயாகும். இதைக் கருத்தில் கொண்டே இக் காப்பியம் மலர்ந்துள்ளது. தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்த, ஆத்திகர்களும் நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியான இராமானுசர் சாதி வெறி, மத வெறி, இனவெறி தலைதூக்கி நின்ற காலத்தில் இருளை நீக்க வந்த சூரியனாகத் தோன்றுகிறார். ஒவ்வொரு உயிரிலும் இறைமையைக் காணும் மனித நேயமே ஆன்மீகம் என்பதை தன் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் வழி உலகிற்கு உணர்த்தியவர்.
சமூகத்தின் இருபெரும் சக்திகளான சாதி அரசியலும், சமயமும் தம் முன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவை இரண்டையும் சமரசமாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்ட ஆச்சார்களின் வரலாற்றையும், இவை குடும்ப, சமூக உறவுகளுக்கிடையே நிகழ்த்துகின்ற பலவித போராட்டங்களையும் அதனால் சிலருடைய வாழ்வில் ஏற்படுகின்ற திருப்புமுனைகளையும் தனக்கேயுரிய தனித்தன்மையுடன் கவிஞர் சிற்பி நடுநிலையோடு இக்காப்பியத்தில் எடுத்துரைக்கச் செல்கிறார்.
வைணவத்தின் ஏற்றம் என்ற ஒரு கருத்தின் அடிப்படையில், அவ்வேற்றத்திற்குக் காரணமாக இருந்த இராமானுசரின் துணிச்சல் மிக்க, சமரச நோக்குடன் கூடிய தெய்வத்தன்மை பொருந்திய செயல்களினூடான பயணத்தை மனிதம் என்ற பெருநோக்கை இலக்காகக் கொண்ட அவருடைய குறிக்கோளை இக்காப்பியம் விரிவாகவே எடுத்துரைக்கிறது. மனிதத்தை நோக்கிய அவருடைய பயணத்தில் அவரைச் சார்ந்த குடும்ப நபர்கள், தொண்டர்கள் முரண்பட்டும் இணைந்தும் செல்கின்ற போக்கில் ஒரு பேராறு தன் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தடைகளைத் தகர்த்தும், தடைகளை தடுக்க இயலாவிடத்தில் அதை விட்டு விலகியும் தன் நோக்கத்தை விடாது பயணிப்பது போல இராமானுசர் பயணிக்கும் வரலாற்றை அனுபவங்களின் தொகுப்பை இக்காப்பியம் எடுத்துரைக்கிறது.
சந்தித்த சவால்கள், சாகசங்கள் என தன்னேரில்லாத் தலைவனின் விவேகம், கருணை, கொடை, அறம், மறம், மனி நேயம் என்பவற்றோடு இணைத்து அவதார புருஷனாக இராமானுசர் இக்காப்பியத்தில் மலர்ந்துள்ளார்.
சாதி
தமிழகத்தில் காலந்தோறும் நிலவி வந்துள்ள சாதியமைப்பு முறை, தமிழ் இலக்கியத்தைப் பாதித்த மிக முக்கியமான கூறு ஆகும். சாதிய முறைக்கு அடித்தளமாக நிலவுவது பார்ப்பனியம். அப்பார்ப்பனிய சாதியருள்ளும் சாதி மறுப்புக் கொள்கையாளர்கள் தோன்றி மனிதத்தை முன்னெடுத்துச் செல்லும்போது பல சிக்கல்களைச் சந்தித்துள்ளனர். அவருள் இராமானுசரே முக்கியத்துவமானவர். தாழ்த்தப்பட்டோர் உயர் சாதி மக்களின் கோவில்களுக்குள்ளும், தெருவிற்குள்ளும் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த சூழலில் இராமானுசரே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்புரட்சியினைத் தம் தொண்டர் துணையோடு செய்திருக்கின்றார்.  அவர்தம் தொண்டர் கள்வர் பலர் தாக்க முயல அவர்களைத் தாழ்குலத்தார் காப்பாற்றுகின்றார். அவர்களின் அக் கருணைச் செயலைப் பாராட்டுகின்ற இராமானுசர்,
தாழ்குல மென் றுமை யழைத்தல் தகுமோ? ஏங்கள்
தனியடியார் தொண்டர்களின் உயிரைக் காத்து
வாழ்குலமாய் ஆக்கி விட்டீர் இன்று தொட்டு
வாழ்த்துகின்றேன் நீங்கள் தாம் திருக்குலத்தார்’ (ப-330)
என்று பெயரிட்டு அழைக்கின்றார். தனது வாழ்நாளில் 74 மடங்களை அமைத்து அதில் சேரும் அனைவருக்கும் தாசர் என்ற நாமம் அளித்து சமத்துவத்தை ஏற்படுத்தினார்.
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் கோவிலுக்குக் கணக்கெழுத ஒரு வேளாளரை நியமித்து அவருக்கு சடகோபதாசன் என்ற பெயரிட்டார்.
சாதி வேறுபாட்டின் அடிப்படையை அசைப்பதாகவே இவருடைய அனைத்து செயல்களும் இருந்தன. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட பல சமதர்ம சமூக மாற்றங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்த்திக் காட்டியவர்.
கர்நாடகா-தொண்டனூரில் பொது மக்களுக்காக ஏரி அமைத்தார். அத்வைத சமயவாதிகளை வைணவராக்கினார். மேல் கோட்டையில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த காலகட்டத்தில் தாழ்ந்த குல மக்களை திருக்குலத்தார்என்றழைத்து உபநயனம் எனும் பூணூல் அணிவித்து வைணவராக்கினார். தனது அடியார் கூட்டத்தில் சாதி வேறுபாடு இன்றி அனைவரையும் சேர்த்துக் கொண்டார்.
இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளும் ஒன்றான வைணவ சமயத்தில், உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இராமானுசர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தில் ஆதிக் கடவுள் திருமாலே. உலகிலுள்ள பிற உயிர்கள் அனைத்தும் இறை என்னும் உயிர் குடியிருக்கும் உடல்களே. ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று இயங்காது என்ற அடிப்படையில் ஜீவாத்மா-பரமாத்மா உறவை இங்கு இணைத்துக் காணுகின்றார்.
மேலும் திருநாராயணபுரத்தின் ஆலயத்தில் ஒரு வருட காலத்தில் மூன்று நாட்கள் வேடர் குலம் திருமாலை தரிசிக்க உரிமையும் தருகின்றார்.
இருளுடைய வாழ்விலோர் ஒளிவி ளக்கை
இதுவரைக்கும் ஏற்றியவர் முன்னர் இல்லை
சரித்திரத்தின் சரித்திரத்தை மாற்றி எம்மான்
சாற்றியதை வியக்கஎம்பால் வார்த்தை இல்லை’ (ப-339)
என்று பாராட்டுகின்ற கவிஞர் சிற்பி மேலும் சிறப்பிக்கும் வகையில்
தருமத்தின் குரல்கேட்டுச் சிலிர்த்துக் கொள்ள
தாயனையார் காலத்தில் இருந்தோம் இல்லை
பெருமானார் கருணைக்கிங் குவமை சொல்லப்
பெரியவை என் றெவையுமி ந்த உலகில் இல்லை"" (ப-339)
என்று வியந்து போற்றுகின்றார். இராமானுசர் காலத்தில் தாம் இல்லாத குறையை எடுத்துரைக்கும் கவிஞர், இராமானுசர் கருணைக்கு உவகை சொல்ல பெரியவை எவையும் இந்த உலகில் இல்லை என்கிறார்.
சமத்துவம்-சமதர்மம்-சகோதரத்துவம்
இம்மூன்றையும் உள்ளடக்கியதே இராமானுசரின் தத்துவம்.
சங்கரருடைய அத்வைதம்-பிரம்மம் ஒன்றே. இரண்டு தன்மை என்பதே இல்லை என்பது. உலகத்திலுள்ள மற்றவை அனைத்தும் அதாவது உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தும் பிரம்மத்தின் தோற்றமே. ஆவை வெறும் பிம்பங்களே. வெறும் மாயைகளே. இவற்றை வைத்துப் பார்க்கும்பொழுது, இறை ஒன்றையே முதன்மைப்படுத்தும் இத்தத்துவம், மன்னனே இறை எனக் கொள்ளப்பட்டால் மன்னனைத் தவிர மற்ற அனைத்தும், முக்கியத்துவமற்றவை என்று பொருளாகிறது. இது எளிய மக்களை முக்கியத்துவமற்றவர்கள் வெறும் மாயைகள் என்ற நோக்கிலானது.
ஆனால் இராமானுசரின் விசிட்டாத்வைதம், இருவரையும் சமமாகப் பாவிக்கிறது. விசிட்டம்+த்வைதம் என்பது பிரம்மத்தை பரமாத்மாவாகக் கொண்டு, உலக உயிர்களை ஜீவாத்மாவாகக் கொண்டது. இவை இரண்டும் ஒரே குணமும் அளவும் கொண்டவை என்கிறது. மரம், விலங்கு, மனிதன், பிரம்மம் அனைத்தும் ஒன்றே. உலக உயிர்கள் மாயைகள் அல்ல. அனைத்துமே ஜீவன்கள். அதாவது, ஒரு தேரையின் ஆன்மாவும், மனிதனின் உள்ளே இருக்கும் ஆன்மாவும் ஒன்றே. அவை அவற்றின் பூர்வ பலன்களுக்கேற்ப பல தோற்றங்களைக் கொண்டுள்ளன அவ்வளவே. ஆன்மா அளவில் அனைத்தும் ஒன்றே. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று வேறுபாடு பார்க்கும் மக்களிடையே இவ்வுயரிய கருத்து பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாதி சமய வேறுபாடுகளால் மக்களை பிளவுபடுத்தி அதனால் பிழைத்துக் கொண்டிருந்த சமுதாயம் வெகுண்டெழுந்தது. சமூகத்தின் அதிகாரத்தை உடைத்தெறியும் வகையிலான இச்சமதர்மநோக்கு எளிய மக்களிடம் பெரும் சிந்தனை எழுச்சியைக் கொண்டு வந்தது. சாதியால் விலக்கி வைக்கப்பட்டிருந்த பெருவாரியான மக்களைச் சூழ்ந்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்தெறியும் நோக்கிலான இராமானுசரின் புதிய கருத்து, வைதீக சமயம் சார்ந்த புரட்சியான சித்தாந்தமாகும். இராமானுசர் நம்முடைய உடல் உயிரின் வீடு. பரமாத்மாவின் வீடு நம் உயிரே. எனவே நம் ஆன்மாவாகிய உயிருக்குள் இறைவனே இருக்கிறான் என்று கூறியதை எளிய மக்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றியதை சாதி சமய சழக்குகளில் பிணைக்கப்பட்டிருந்த அரசர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இராமானுசரின் வசித்டாத்வைதத்தில் சேர  உயர் வகுப்பினனாக இருக்க வேண்டாம். நாளும் மறை ஓத வேண்டாம். மந்திரச் சடங்குகள் தெரிந்திருக்க வேண்டாம். ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை. குல அடையாளம் தேவையில்லை, அனைவரும் வைணவர்களே என்ற இந்த புதிய சாதியொழிப்பு சிந்தனை ஏற்றத்தாழ்வு ஒழிப்புமுறை அக்கால உயர் வகுப்பினரையும், மன்னர்களையும் தாக்கியது. மன்னனும், மண்பாண்டத் தொழிலாளியும் ஒன்றாகி விட முடியுமா? இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆணவம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமானுசரைக் கொல்லப் பார்த்தது. பானை செய்பவரும், வேதம் ஓதுபவர்களும், வேடர்களும், மல்லர் குலத்தைச் சேர்ந்தவர்களும், நாவிதர்களும் ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், கோயில் நிர்வாகத்தையும் சிறப்பாக நிர்வகித்த இராமானுசர் பானை செய்யும் குலத்தைச் சார்ந்த பாணாழ்வார், வேளாளர் குலத்தைச் சார்ந்த நம்மாழ்வார், கள்ள மரபினர், திருமங்கை ஆழ்வார் போன்றோரை அந்தணர் குலத்தைச் சார்ந்த மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் முதலான அந்தணர்குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த பாஞ்சராத்ரம் என்ற வழிமுறையைக் கொண்டு வந்தார்.
பக்தி ஒன்றைத் தவிர இறைவனை அடைய வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. மன்னன், கூலித் தொழிலாளி யாவராயினும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்ற சமத்துவக் கொள்கையே இராமானுசரின் கொள்கை. சமூக அளவிலும், தத்துவ அளவிலும் மக்களை ஒன்றாக நோக்குகின்ற உயரிய கருத்தை இராமானுசர் எடுத்துரைத்ததாலே தான் எளிய மக்களிடம் சிறந்த வரவேற்பை இராமானுசரின் தத்துவம் பெற்றது எனலாம்.
திருவரங்கக் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று முற்றிலும் சீர்ப்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்குமுறைகளை உண்டாக்கியபொழுது, அவருக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டு அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன என்பது வரலாறு. பழைய முறை வைகாஸம் என்பது. இது கட்டுப்பாடு மிகுந்தது. பாஞ்சராத்ரம் என்பது இராமானுசர் வடிவமைத்த முறை. இதில் சாதீய முறைகள் தளர்த்தப்பட்டன. ஆழ்வார்கள், சமயப் பெரியவர்கள் முதலியோருக்கு கோவிலில் சந்நிதி வைக்கலாம் என்பது போன்ற சமத்துவக் குறிப்புகள் இதில் உண்டு. இவ்வடிப்படையிலேயே ஆழ்வார்களுடன், பின்வந்த இராமானுசர், மணவாளமாமுனி, வேதாந்த தேசிகர் போன்ற ஆசாரியார்களுக்கு சந்நிதிகள் ஏற்பட்டன. இதையனைத்தையும் கருத்தில் கொண்டே சிற்பி இக்காப்பியத்தை இராதானுசருக்கு சன்னதி அமைக்கப்ட்டதை எடுத்துரைச் செல்கிறார்.
குறுக்கீடுகள்
இந்திய சமுதாயத்தில் பிறப்பினடிப்படையில் புரையோடிப் போயிருக்கும் சாதி என்னும் ஆணி வேரை அசைத்துப் பார்த்து சமத்துவத்தை நிலைநாட்ட பிறந்த மகான்களில் இராமானுசருக்கு தனியிடம் உண்டு. இதனால் இவர் குறுக்குறுக்கீடு, புறக் குறுக்கீடு, உணர்வுக் குறுக்கீடு என்ற மூவகையான குறுக்கீடுகளைச் சந்திப்பதை கவிஞர் காவியம் முழுக்க பல நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கிறார். வைதீக சமயத்தைச் சார்ந்த அவருடைய தொண்டர்களில் பலரே சாதியமைப்பிற்கு எதிரான இராமானுசரின் கருத்திற்கு முரண்பட்டு நிற்கிறார்கள். இதனால் அவரைக் கொல்லவும் துணிகிறார்கள்.
குலக்குறுக்கீடு
குலக்குறுக்கீடு என்ற முறையில் குலதர்மத்தை மீற இயலாத அவருடைய தொண்டர்கள் மறைமுகமாகத் தன் எதிர்ப்பைக் காட்டுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய வெறுப்பையெல்லாம் தன் மன உறுதியானாலும், தம் குருவான பெரிய நம்பி மற்றும் ஆளவந்தாரின் வாழ்க்கைப் பாதையைப் பின்பற்றுவதானாலும் இராமானுசர் தகர்க்கின்றார். ஆளவந்தாரும், பெரிய நம்பியும் வேளாளரான மாறன் நேர் நம்பியை ஏற்றுக் கொண்டு அதில் உறுதியாக இறுதி வரை கொள்கைப் பிடிப்போடு இருக்கின்றனர். மாறனேரி நம்பி சீடராவதற்கு முறையாக ‘‘மண்ணை எடுத்து வாயில் விழுங்குவதைக் கண்டளவில் அவருடைய மாண்பறிந்து ஆளவந்தார் சீடராக்கிக் கொள்கின்றார்.
யருகும் நீர் உண்ணும் சோறெல்லாம் கண்ணன்என்ற திருப் பிரானை அவர் வடிவில் கண்டே மாறன் நேர் நம்பிஎனப் பெயரிடுகின்றார்.
மடத்திற்கு உள்ளே வர இயலாமல், மட வாசலிலே நின்று ஆளவந்தார் கூறும் மந்திரங்களை கேட்டு ஞானம் பெறுகின்ற மாறன் நேர்நம்பிக்காக குரலுயர்த்தி பாசுரங்களை ஓதும் அருளாளராக ஆளவந்தார் படைக்கப்பட்டுள்ளார்.
விரிவானம் போன்றது நம் குருவின் உள்ளம்’ (ப-120) என்று ஆளவந்தார் சீடர்களால் போற்றப்படுகிறார்.
ஆளவந்தாரின் திருவுருவை களிமண்ணால் சிற்பம் செய்து வணங்குகின்ற மாறன்நேர்நம்பி, குரு பெற்ற பிளவு நோயைத் தான் வேண்டிப் பெறுகின்றார். ஆளவந்தார் காட்டிய வழியில் பெரிய நம்பி, சாதி, மதம், வயது பாராமல் மாறன் நேர் நம்பிக்குத் தொண்டு செய்கிறார். இங்கு மனிதமே முன்னிற்பதைக் கவிஞர் அழகுற காட்டுகின்றார். மாறன் நேர் நம்பியை அவருடைய வைதீக சீடர்கள் எவரும் வேண்டிப் பெறவில்லை. இதை உணர்ந்த ஆளவந்தார் பெரிய நம்பியிடம் மாறன் நேர் நம்பியை ஒப்படைக்கின்றார். பெரிய நம்பியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை கவிஞர் இரு சொற்களில் நச்என எடுத்துரைக்கிறார். ‘‘வற்றாத கருணை"" (ப-205) வைதீகத்தார் தன்னைத் தள்ளி வைத்த போதும் ஆளவந்தார் நடுநிலைப் பாதையேதான் நான் கொண்ட பாதை’ (ப-280) இம்மூன்று மாந்தர்களே இராமானுசரின் வாழ்க்கைப் பாதையை மேன்மைப் படுத்தியவர்கள். எனவே தான் திருவரங்கப் பொறுப்பேற்றவுடன் பல சாதி மக்களை பணிக்கு அமர்த்துகின்றார்.
நெல்லளிப்பார் திருக்கோயில் கணக்கன் மார்கள்
நெசவாளர் தச்சர் அருள் சிற்ப வாணர்
எல்லாரை யும் சாதிபேத மின்றி
இராமா னுசப் பெரியார் நியமம் செய்தார் (ப-203)
இதைப் புரட்சி (ப-203) என்றும் புதுமை (ப-203) என்றும் சிற்பி வருணிக்கின்றார். தான் சீடராக ஏற்ற உறங்கா வில்லியையும் பொன்னாச்சியையும் வைதீகத்தார் தாழ்வாகக் கருதுவதை அறிந்து ஒரு  அழகான நாடகம் நடத்தி உண்மையைப் புரிய வைக்கின்றார். உறங்கா வில்லி  பொன்னாச்சி தம்பதியினரின் இறுதிக் காரியத்தை கூரத்தாழ்வாரின் மகனை வைத்தே செய்து முடிக்கின்றார். கொண்ட கொள்கையில் திண்ணியராக விளங்குகின்ற தன்மை பெற்றவராதலாலே இறுதிவரை உறுதியாக இருக்கிறார். குலக் குறுக்கீடுகளையும் தகர்க்கின்றார்.
புறக்குறிக்கீடு
இராமானுசரின் சாதி, மத, இன வேறுபாடற்ற செயல்பாடுகளைப் பொறாதவர்கள் வைணவ குலத்திற்கு எதிராக செயல்பட்ட சோழனைத் தூண்டி விடுகிறார்கள். இதனால் தமிழகத்தை விடுத்து மைசூருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மீண்டும் அம்மன்னன் இறந்த பின்னரே தமிழகம் திருப்புகின்றார். தான் மானுட தொண்டிற்குப் பல எதிர்ப்புகள் வந்த நிலையில் இதுபோன்ற புறக் குறிக்கீடுகளை எதிர்க்க அப்போது உறையூர் அரசனாக இருந்த அகலிங்கனை ஆழ்வானாக்கி பொறுப்புகளை ஒப்படைக்கின்றார். இங்கு இராமானுசரின் நிர்வாகத்திறன் வெளிப்படுகிறது. ‘‘திரண்டு வரும் எதிர்ப்புகளைப் புறங் காணற்குத் திறமுடையார் வேண்டுமெனக் கருதி னாராய் அரண் காக்கும் வலிமையுள்ள உறையூர் மன்னன் அகலிங்கன் என்பானை ஆழ்வானாக்கி"" (ப-204)
திருவரங்கம் பொலிவு பெறும் வகையில் முறையாக, ஆண்டுவிழா, திங்கள் விழா, பருவ விழா ஏற்படுத்தி, விசிஷ்டாத்வைதக் கொடியைப் பறக்க விடுகிறார். இங்கு இராமானுசரின் நிர்வாகத்திறனை, உலகை ஆளும் மேலாண்மையை ஒரு வரியில் கவிஞர் சூரியனை சிறு பனித்துளி அடக்குவதைப் போல் அடக்கிக் காட்டுகின்றார்.
‘‘நெடுஞ் செங்கோல் உடையவரோ ஏந்த லானார்"" (ப-204)
நீண்ட தரைவழிப் பயணத்தில் அவர் சந்தித்த சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்குகின்றார்.
நிர்வாகத் திறமை
வைணவத்தைத் தழைக்கப் பிறந்தவர் இராமானுசர் என்று தொண்டர்கள் இராமானுசரின் நிர்வாகத் திறமையைக் கொண்டே அறிகிறார்கள். எனவே அவரை பின்பற்றுகிறார்கள்.
உலகநடை அறிந்ததனை மாற்றுதற்கே
உதித்தபிரான் என்னும் அன்னப் பறவை தன்னை
மலருமொரு தாமரையின் இதழ்களென்ன
மாமுனியின் சீடர் குழாம் காத்துச் செல்ல"" (ப-318)
நிர்வாகத் திறமையினால் புறக் குறிக்கீடுகளையெல்லாம் இராமானுசர் உடைத்தெறிகிறார். மேலும் தடைக் கற்களை படிக்கற்களாகவும் மாற்றி வைணவக் கொடி ஏறுநடை போடக் காரணமாகின்றார். இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவம் இராமானுசரை தமிழகத்தை விட்டு விரட்டுகின்றது. ஆனால் புறச் சமயமான சமணத்தைப் பின்பற்றுகின்ற விட்டலதேவன் என்னும் மன்னன் ஆளுகின்ற மைசூருக்குச் செல்கிறார் என்னும் போது அங்கு இராமானுசர் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை புறச்சிக்கல்களாக கவி காட்டுகின்றார். ஆனால் அகலிங்களின் அங்கத்தில் பட்ட வானம் சமணர்கள் அவனைப் புறக்கணிக்கக் காரணமாகிறது. விட்டலதேவன் இராமானுசரின் பெருமையறிந்து தன் அரண்மனைக்கு அழைப்பதும, அவர் மகளின் மன நோய் இராமானுசரைக் கண்டளவில் நீங்குவதும் மன்னன் இராமானுசரின் தாளில் விழுவதும் எதிர்பாராத திருப்பங்கள். தம் கருணை யெனும் பேராற்றலினால் புறக்குறிக்கீடுகளையெல்லாம் தவிடுபொடியாக்கி விடுகிறார்.
உணர்வுக் குறிக்கீடு
இராமானுசர் தம் வாழ்வில் அடைந்த உணர்வுக் குறிக்கீடு அவர் மனைவியின் சாதிப் பற்றினாலே விளைகின்றது. கச்சி நம்பியைத் தன் குருவாக ஏற்க விரும்பி பல முறை முயற்சித்தும் முடியாத நிலையில் அவரைத் தன் இல்லத்திற்கு அழைத்து விருந்துண்ணச் செய்து, மீதியைத் தான் உண்டு தன் நிலைமையை உணர்த்த திட்டமிடுகின்றார். ஆனால் இராமானுசர் வருவதற்கு முன்பே நம்பி வந்து உண்டு விட்டுச் சென்று விடுகிறார். தர்மாம்பாள் அவரை திண்ணையிலேயே அமர வைத்து உணவிட்ட பின், தீட்டுப் பட்டுவிட்டதாக அதைத் தூய்மை செய்யும் நிலையிலே இராமானுசர் வீடு திரும்புகின்றார். அவள் நம்பியை தாழ்ந்தவராக நடத்தியதை எண்ணி கோபம் கொண்டு
வரவழைத்து விட்டாயே பழிபாவங்கள்
கொடியவளே பெருங் குற்றம் இழைத்து விட்டாய்-நம்பி
கோயிலன்றோ? நடமாடும் கோயிலன்றோ. . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .அய்யோ
உத்தமர்பால் பெருங்குற்றம் இழைத்துவிட்டாய்"" (ப-161)
என அவள் தவறைச் சுட்டிக் காட்டுகின்றார்.
இனி இந்தத் தவறுகளைச் செய்தால் மன்னிக்க மாட்டேன் என எச்சரிக்கவும் செய்கின்றார். ‘‘என் கொள்கை எல்லையற்ற மனித நேயம்"" (ப-161) என்று உறுதியோடு உரைக்கின்றார். ஆனால் தர்மாம்பாள் அதைப் பொருட்படுத்தாமல், தாழ்ந்த சாதியினர் வந்த உணவு கேட்ட போது மறுத்து விடுகிறாள். இதையறிந்த இராமானுசர் நிலையை கவி இவ்வாறு விளக்குகின்றர்.
‘‘ஐயனின் உள்ளம் வேரும்
அனல்படு மெழுகாய் ஆகும்"" (ப-184)
இந் நிகழ்வு அவர் மனதில் கசப்பை ஏற்படுத்துகிறது. மூன்றாம் முறை கச்சி நம்பியின் மனைவியைத் தாழ்ந்த சாதியென்று இழிவாகத் திட்டி அவர்களை ஊரை விட்டுத் துரத்தி விடுகின்ற தஞ்சமாம்பாளின் ஆணவம் அவரை துடிதுடிக்க வைக்கிறது. அன்றே அவளுடனான உறவை முறித்து விடுகின்றார். சாதி என்னும் ஆணவப் பேய் தஞ்சமாம்பாளின் வடிவத்தில் தன் வாழ்க்கையில் நுழைந்து விட்டதாகக் கருதுகின்ற இராமானுசர் பத்தினியைப் பிரிந்து மற்றோர் புதிய வாழ்க்கை’ (ப-186) தேர்ந்தெடுக்கின்றார். இல்லற நிலையிலான உணர்வுப் போராட்டத்தில் எல்லையற்ற மனிதநேயப் பாதையை தேர்ந்தெடுத்து அதில் நிலையாக நின்று விடுகின்றார் இராமானுசர். உணர்வுக் குறிக்கீட்டையும் மனித நேயம் என்ற ஒப்பற்ற ஒரு பொருளைக் கொண்டே கடக்கின்றார் இராமானுசர் என்பதைச் சிற்பி அழகுறக் காட்டியுள்ளார்.
இராமானுசரின் முதல் குருவான யாதவப் பிரகாசர் தவறுதலாக வேதாந்தத்திற்குப் பொருள் உரைக்கும் பொழுது அதை இராமானுசர் திருத்துகின்றார். ஆனால் யாதவப் பிரகாசர் மிக வன்மையாக கண்டிக்கின்றார். ஆனால் தொடர்ந்து யாதவர் தவறாகப் பொருள் உரைக்க இராமானுசர் தவறுகளைப் பொறுக்க இயலாமல் திருத்த முயல நயத்தகு கருத்தென்றாலும் நமை இவன் மிஞ்சலாமோ?’ (ப-140) என வஞ்சினம் கொண்டு இராமானுசரைக் கொல்ல திட்டமிடுகிறார். இதை சிற்பி,
அறிவுக்கும் குருவாய் வந்தார்
அழிவுக்குப் பாடம் சொன்னார் (141) இந்த உண்மையை அறிந்த இராமானுசர் நெஞ்சம் நொந்தது. கடும் காட்டுப் பாதையில் தப்பித்துச் செல்கின்றார்.
சொல்லில் நெஞ்சில் பெருமாள் இருக்கத்
துணிவுடன் நடக்கின்றார்-மிகத்
துணிவுடன் நடக்கின்றார்.
மேடுகள் பள்ளம் ஏறி இறங்கி
விரைந்து நடக்கின்றார்-உள்ளம்
கரைந்து நடக்கின்றார் (ப-145)
என்று இராமானுசர் கொடிய காட்டு வழியில் கல்லில், முள்ளில் பாதங்கள் நோக நடந்து நொந்ததை உரைக்கின்றார். மனம் கலங்கி நின்றாலும் பரமனின் பாதம் நினைந்தே அக் கொடுமைகயைக் கடக்கிறார்.
‘‘ஊஞ்சலைப் போல அங்கும் இங்கும்
ஓடிக் களைப்புற்றேன்-பாதை
தேடிக் களைப்புற்றேன்"" (ப-147)
என்று இராமானுசர் குருவான யாதவப் பிரகாசரின் கொடுஞ் செயலால் அல்லல் பட்டதைக் கவிஞர் சிற்பி எடுத்துரைக்கிறார். துணிவெளுக்கும் தொழிலாளி தன் பிள்ளைகளுக்கு, காரிமாறா, குருகூர் நம்பி, பராங்குசா, சடகோபா எனப் பெயரிட்டு அழைத்ததைக் கேட்டளவில், ‘‘ஆகா இங்கிவனைப் போல் இல்லறத்தில் ஈடுபட்டுப் பிள்ளை பெற்று நாவார அழைக்கின்ற பேற்றை நான் பெற்றிலனே"" எனநைகின்றார்.
உலகியல் உண்மை
சமய வாழ்வில் சாதிக்கும் மதத்திற்கும் இடமில்லை என்ற உலகியல் உண்மையை அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருத்தைத் தம் படைப்பு மூலமாக சிற்பி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆழ்வார்கள் காலத்தில் இல்லாத சாதி உணர்வு இராமானுசர் காலத்தில் வேரூன்றியிருந்த நிலையில், அக்காலத்தின் பண்பாட்டுச் சிதைவு அல்லது மாற்றத்தை இராமானுசர் எதிர்கொண்டு இறுதிவரை இலட்சியத்திலிருந்து வழுவாமல் கண்டும் ஆழ்வார்களின் காலச் சூழலைக் கொண்டு வர முயற்சித்து எதிர்ப்புகளுக்கிடையே, உயிரையும் பணயம் வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைச் சிற்பி அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் காலத்திலேயே இராமானுசருக்கு சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டதே இதை நிரூபிக்கிறது. இராமானுசரின் கொள்கையை சிற்பி பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.
வான்மழை அனைவருக்கும் பொதுவே யன்றோ?
வைகறையில் எழும் கதிரும் பொதுவே யன்றோ?
ஞானமழை மட்டுமென்ன சிலர்க்குச் சொந்தம்?
நதிநீர்போல் எல்லார்க்கும் உரிய தன்றோ?
போனதெல்லாம் போகட்டும் இனிமேல் இந்தப்
பொல்லாங்கே இல்லாத உலகம் வேண்டும்
என்று சமத்துவ முற்போக்குக் கொள்கைகள் ஒவ்வொரு காலத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற தன் கருத்தையும் வெளியிடுகின்றார்.
சாதி மறுப்பு
குளித்து முடித்த பின் உறங்காவில்லியைப் பற்றி கரையேறுவதை அந்தணர்கள் வினவுமிடத்து,
‘‘எனக்குள்ளே பேதாபேதம்
இழிந்தவர் உயர்ந்தவர் என்றே
இனத்தினால் சாதி தன்னால்
எழுந்திடக் கூடாதென்று"" (ப-240)
மனத்தினால் மட்டுமன்று, வாக்கினிலும், செய்கையினிலும் தினம் தினம் உணர்த்துகின்ற வில்லி என் ஸ்பரிசவேதிஎன்றுரைத்து மனம், சொல், செய்கை என அனைத்திலும் சாதி மறுப்பை, இராமானுசர் பின்பற்றியதையும் அதே சமயம் இச்செயல் கூட தனக்கு ஆணவத்தைத் தந்துவிடக் கூடாதென்று மனதை தூய்மைப்படுத்திக் கொண்டு புது மனிதரானதையும் சிற்பி நயமாக வெளிப்படுத்துகின்றார்.
பெண் நிலை
விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது என்பர். இதனை ஸ்ரீ வைஷ்ணவம் என்றே அழைப்பார். திருமாலின் மார்பில் எப்போதும் ஸ்ரீ என்கிற லட்சுமி குடிகொண்டிருப்பதாகவே இராமானுசர் கருதினார். இதனால்தான் இராமானுசரைப் பின்பற்றுபவர்கள் தாயார் திருமகளைத் தொழுத பின்னரே திருமாலைத் தொழும் வழக்கமுள்ளது. இராமானுசர் வரலாற்றில் தன் மனைவி தஞ்சமாம்பாளை பிறந்த வீடு அனுப்பி துறவு மேற்கொண்டதற்கான காரணங்கள் வலுவாகச் சுட்டப்பட்டுள்ளன. தாம் பெரிதும் குருவாக மதித்த நம்பியையும் அவருடைய மனைவியையும் தாழ்ந்த குலத்தவராகக் கருதி இழிவு செய்ததால் அதனைப் பொறாமல் மனைவியை விலகியதாக வரலாறு கூறுகிறது. நவபாரதி கூறுவது போல தஞ்சமாம்பாளை வரலாறு பின் தொடர்ந்து செல்லாததால் அவருடைய நிலை பற்றி அறிய இயலவில்லை.  எனினு பெண்ணிய நோக்கில் இராமானுசரின் வாழ்க்கையில் இந்தப் பகுதி சிக்கலுக்குரியதுதான். உலகை உய்விக்க வந்த இராமானுசர் தம் மனைவியின் மன நிலையை மாற்ற முயற்சித்தாரா இல்லையா என்பது உலகறியா செய்தி. எனினும் காவிய நாயகனான இராமானுசரின் தரப்பு நியாயத்தை கவிஞர் சிற்பி வலுவாகவே எடுத்துரைத்துள்ளார். இராமானுசரின் உடனிருந்து உறையும் தஞ்சமாம்பாள் அவருடைய மனப் போக்கை அறியாமலிருக்க மாட்டாள். எனினும் வைதிக மரபுப் படியான வளர்ப்பு, மனதில் ஆழப் புதைந்து விட்ட சாதியின் வேர்கள் இராமானுசரின் உள்ளம் அறிந்தும் அதை மதிக்காத போக்கை வளர்த்துவிட்டிருக்கிறது. உலகின் போக்கு வேறாகவும், உடையவரின் போக்கு வேறாகவும் இருக்கும் நிலையில் இருவேறு உலகத்து இயற்கை வேறு. திருவேறு தெள்ளியராதலும் வேறு என்ற தெளிவில்லாதவளாக தான் அறிந்த மரபார்ந்த வாழ்க்கைப் போக்கையே தேர்ந்தெடுக்கிறாள். முதல் முறை தவறும் போதே இராமானுசரின் மனநிலையை அறிந்திருந்தால் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டிருப்பாள். இராமானுசரும் ஒவ்வொரு முறையும் அவளுடைய தவறைச் சுட்டிக் காட்டியபடிதான் இருக்கிறார். ஆனால் மூன்று முறை சாய்ப்பு கொடுக்கப்பட்டும் தஞ்சாம்பாள் தன்னை மாற்றிக் கொள்ளாத நிலையிலேயே இருக்கிறாள். இதனை கவிஞர் பெரிய நம்பியின் மனைவியை இழிவுபடுத்தியதைக் கூறுமிடத்து கவிஞரின் கூர்மையான சொற்கள் தஞ்சமாம்பாளின் மனைவி வெளிப்படுத்துகிறது.
‘‘அரவிருக்கும் வாய் திறந்தாள் நஞ்ச பெய்தாள்
அவர்கள் குலம் நம் குலத்தில் தாழ்ச்சி தானே""
(ப-185)
இராமானுசர் பெண்களுக்கு எதிரானவர் அல்ல.
தப்பித்து காட்டு வழியில் அலைந்து திரியும் போது, வேடர் தம்பதிகளைக் கண்ணுறுகிறார். அதில் வேட்டுவச்சி படுக்கப் போகுமுன் தண்ணீர்கேட்கிறாள். இரவு என்பதால் விடிந்ததும் தண்ணீர் காண்டு வந்து தருவதாக வேடன் சொல்ல அதை செவிமடுத்தபடி இராமானுசர் உறங்கி விடுகிறார். காலை முதல் வேலையாக அவ்வேடுவப் பெண்ணுக்கு, அருகிலுள்ள கிணற்றிலிருந்து நீர் கொணர்ந்து வருகிறார். சாதி, சமயம் பாராமல் மனித நேயம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும் இராமானுசரின் இச் செயல் அவருடைய உள்ளத்து உயர்வை காட்டுகின்றது.
தன் குரு பத்தினி அறியாமல் செய்த சிறு தவறை சாதியினடிப்படையில் தாழ்த்தி அவளை இழிவாகப் பேசிய காரணத்திற்காகவே தஞ்சமாம்பாளை அவர் விலக்கி வைக்கிறார். சக மனிதர்களை சாதி அடிப்படையில் வேறுபடுத்தி இழிவுபடுத்தும் தஞ்சமாம்பாளின் இச்செயலே, இராமானுசரின் கோபத்திற்குக் காரணமாகிறது. ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அதை சரியென்று சாதிக்கும் தன் மனைவியின் மனநிலை இனி மாறாது என்ற எண்ணமே இராமானுசரின் மனதில் மேலோங்கியிருந்தது என்பதை,
வெய்யதாம் சாதியென்னும்
வேரினைப் பொசுக்க வந்த
ஐயனின் உள்ளம் வேகும்
அனல் படு மெழுகாய் ஆகும்’ (ப-184) இந்நிலை தொடர்ந்து நீடித்தால் ‘‘மனக் கசப்பேறும் ஏறும்"" (ப-184) என மனைவியின் மேல் இராமானுசருக்கு வெறுப்பு பெருகியதைக் கவிஞர் காட்டுகிறார். ஆச்சாரியார்கள் மனைவியுடன் வாழ்வது இயல்பான செயலாக இருக்கும் சூழலில் தன் மனைவியின் சாதி பற்றிய அழுத்தமான சிந்தனையை மாற்றவே முடியாது என்ற எண்ணத்தின் விளைவே அவளை விலகியதற்குக் காரணம் எனலாம். மேலும் உலகமுழுவதும் சாதி மதம் பாராமல் ஆண், பெண் கருதாமல் வைணவத்தை வளர்க்கச் செய்யும் தம் இலக்கியத்திற்கு தன் மனைவி இடையூறாகவே இருப்பாள் என்ற எதிர்கால நோக்கும் இங்கு மறைந்திருக்கிறது என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார்.
இதுவரை நாம் காணாத விசுவரூபம்
இராமானுசன் எடுத்தார் கெடுத்தாய்பாவி
கதை முடிந்து விட்டதினி உன்னைக் கண்ணால்
காண்பதும் பெரும் பாவம் சேமிப்பான
விதை நெல்லை அழித்து விட்டாய், இல்லறத்தின்
வேரறுத்துத் தொலைத்துவிட்டாய் பாவி பாவி (ப-186)
என்று கசப்பை வெளிப்படுத்துகிறார். இதைக் கேட்டும் மன்னிப்பு கேட்கத் துணியவில்லை தஞ்சமாம்பாள். மாறாக தான் செய்தது சரியே என்ற ஆணவத்தோடே திகழ்கிறாள்.
‘‘சித்தமொரு கல்லாக உறைந்த வாறு
சிறிதேனும் கலங்காத நெஞ்சத் தோடு
மெத்த மன அழுத்தத்துடன் தஞ்சமாம்பாள்
விலகினாள் அண்ணல்திரு வாழ்வை விட்டே"" (ப-186)
விதை நெல்லையே அழித்து விட்டாய்என்ற சொல் இராமானுசரின் எதிர்கால நோக்கான வைணவப் பயிர் வளர தஞ்சமாம்பாள் தடையாக இருக்கிறாள் என்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தில்லி நகர்ச் சக்ரவர்த்தியின் மகள் மேல் கோட்டையிலிருந்த செல்லப்பிள்ளைஎனப்படும் திருமால் திருமேனியை எடுத்துக் கொண்டு சென்ற நிலையில் இராமானுசர் அதை மன்னனின் அனுமதியோடு திரும்பப் பெறுகின்றார். ஆனால் மன்னனின் மகளோ செல்லப் பிள்ளையைப் பிரிய மனமில்லாமல் பின்னால் வர அவளுடைய உணர்வுகளையும் மதித்து அவளையும் துருக்க நாச்சியாராக ஏற்றுக் கொண்டு ஆதரித்துக் காக்கின்றார். ஒரு இசுலாமியச் சமயத்துப் பெண்ணை வைணவராக ஏற்கும் பெருந்தன்மையும், துணிவும் இராமானுசரக்கன்றி வேறு யாருக்கும் இருக்காது. மதம் கடந்து பெண்ணின் மன உணர்வுகளை மதிக்கும் பெரும் மகானாக இராமானுசர் இங்கு தென்படுகின்றார். அரங்கனுக்குள் அவளு மோர் ஆண்டாள் ஆனாள்’(ப-336) என்று சிற்பி மிக நயமாக இதை உரைக்கின்றார். அக்காலத்திய சூழல் சாதிப்பற்று, மதப்பற்று, இனப்பற்று போன்றவை நச்சுப் பாம்புகளாய் மக்களைச் சுற்றிக் கொண்டிருந்த சூழலில் இப்படி ஒரு துணிச்சலை நிகழ்த்திய இராமானுசரை வியக்காமல் இருக்க முடியவில்லை. இக்காலத்திற்கேற்ற காவியத்தை தேர்ந்தெடுத்துப் படைத்திருக்கும் கவிஞர் சிற்பியையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஆழ்வார்களின் பக்திப் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை. இல்லறம் வெறுக்கப்படவும் இல்லை. யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டுள்ளது. இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு உலக இன்பங்களை நுகர்ந்தவாறே தூய பக்தி மூலம், இறைவனை அடைய முடியும் என்ற உண்மையை படைப்புகள் உணர்த்துகின்றன. இராமானுசரும் இதையே பின்பற்றுகிறார்.
தஞ்சமாம்பாள் இராமானுசரின் உய்த்துணர்ந்து அறியும் தன்மை இல்லாதவராக இருப்பதாலேதான் கணவனின் பண்பறிந்து வாழும் தன்மையற்றவராக இருக்கிறார்.
மாறாக கொங்குப் பிராட்டி துணிவுள்ள பெண்மையாக இருக்கிறார். துணிவுள்ள பெண்களால்தான் வியத்தகு காரியம் ஆற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் மற்றொரு பாத்திரம் பொன்னிச்சி.
திருடர்கள் வந்து காது கம்மலைக் கழட்டும்போது சாதாரண பெண்களாக இருந்தால் கத்தி கூச்சலிட்டு பெரிய ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். ஆனால் பொன்னாச்சி கனிவும் துணிவும் ஒருங்கே கொண்டவராக விளங்குகிறார்.
ஆனால் தர்மாம்பாளிடம் கனிவும் துணிவும் இல்லை. இராமானுசர் மனைவி தன் செயலக்கு எதிராகச் செயல்படும்போத முதலிரண்டு முறை மன்னித்து விடுகிறார். மூன்றாம் முறையே அவளை விலக்கி வைக்கிறார்.
உறங்காவில்லியின் மனைவி பொன்னாச்சி கணவனின் குணமறிந்து நடப்பவள். ஆவர் கொள்கையே அவளின் வேதம் இருவருடைய மனப்பொருத்தத்தை நன்கறிந்திருந்ததினால் தான் தான் நடத்திய நாடகத்தினால் அவர்களுக்குள் சிறு விரிசல் ஏற்பட்ட நிலையில், அதை தானே முன்னிருந்து தீர்த்து வைக்கிறார். சாதி வேறுபாடு காட்டி வேடன் வில்லியையும் அவர் மனைவியையும் வெறுக்கும் வைதீகர்களுக்கு அவர்களுடைய உள்ளத்துயர்வைக் காட்டும் வகையில், பொன்னாச்சி உறங்கும்போது அவள் நகைகளைக் கழட்டி வருமாறு பணிக்கின்றார். சீடர்கள் பொன்னாச்சி உறங்கும்போது வலப்பக்க நகைகளை கழற்றிக் கொள்ள, இடப்பக்க நகைகளை எடுக்கட்டும் என புரண்டு படுக்க பொன்னாச்சி விழித்தாள் என்று பதறி விலகினர். இதையறிந்த வில்லி மனைவி சீடர்களின் செயலுக்கு தடை விதித்ததாகக் கருதி அவளை விலக்கி வைக்கின்றார்.
‘‘படுபாவி கண்விழித்துக் கெடுத்து விட்டாய்
பக்கம் இனி வராதே போபோ தாலிக்
கொடுப்பினையும் உனக்கில்லை தறம் இல்லை
குடும்பமில்லை எனக்கென்று கொதித்துச் சொன்னர்""
(ப-247)
எனப் பொன்னாச்சியை வில்லி கடிந்து கொண்டதை கவிஞர் கூறுகின்றார். எனினும் பொன்னாச்சி அவரை விட்டு விலகவில்லை. மாறாக அவர் பின்னே இராமானுசரைத் தரிசிக்கவே வருகிறாள். இராமானுசர் பொன்னாச்சி மீது தவறில்லை என உணர்த்தி அவளை அனைவரும் போற்றுமாறு செய்கின்றார். அதுமட்டுமின்றி வில்லியிடம் பொன்னாச்சியோடு எப்போதும் வாழ்ந்திருக்க ஆசியுரைக்கின்றார். இங்கு பொன்னாச்சியின் உயர்குணத்தை இராமானுசர் மதிக்கின்றார். அவளுக்குற்ற துயரத்தைத் தானே தீர்த்தி மீண்டும் கணவனோடு வாழ வழி செய்கின்றார்.
‘‘புகழ்வில்லி பொன்னாச்சி மீண்டும் ஒன்றாய்
அருள்நெறியில் திளைத்திருக்க உடைய வர்தம்
அறம் காட்டி நெறிகாட்டி அன்பு காட்டி"" (ப-249)
நின்ற திறத்தை கவிஞர் உரைக்கின்றார்,
‘‘ஒரு மனதாய் வாழ்ந்திருக்க ஆசிதந்தார்""
உயர்குணம் பெற்ற உத்தமப் பெண்களை, கணவனின் உயர் குணம் அறிந்து அதன்படி நடக்கும் பெண்களை இராமானுசர் வாழ்த்தி அவர் சிறப்பாக வாழ ஆவன செய்துள்ளதை இக்கதை வழி சிற்பி சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். இல்லறத் தர்மத்திற்க இராமானுசர் ஆதரவானவரே என்பதை சிற்பி அழுத்தந் திருத்தமாக கூறுகிறார். ஆழ்வார்கள் பன்னிருவரில் ஆண்டாள் பாசுரங்களே இராமானுசரைக் கவர்ந்து ஆண்டாளையே வழிபடுதெய்வமாக அவள் நினைந்து உருகியிருக்கிறார்.
‘‘தம் நாவில் சுடர்க்கொடி நம் ஆண்டாள் தந்த
தமிழ்ப் பாவை குழந்தையைப் போல் கொஞ்சிக் காஞ்சி"" (ப-256)
இசைத்தவாறே இருக்கும் இராமானுசர் காணும் பெண்களையெல்லாம் ஆண்டாளாகவே காணுகின்றார். எனவே தாம் அத்துழாயினைக் கண்டவுடன் தன்னையறியாமல் அவர் காலில் விழுந்து வணங்குகின்றார். பெரிய நம்பி இராமானுசரின் நிலையை உணர்ந்து கொள்கிறார்.
‘‘ஏடுகளில் பார்த்ததுண்டு கண்ட தில்லை
இப்படியோர் அருள்நிலையில் ஆழும்பேறு
கூடுமோ எளியவருக்கென"" (ப-260)
கவிஞர் சிற்பியும் வியக்கின்றார். இராமானுசர் திருப்பாவை ஜீயர் என அழைக்கப்பட்ட காரணத்தை இதனூடே கவினுற எடுத்துரைக்கவும் செய்கிறார்.
பெண்களுக்கு இந்து மதத்தில் துறவு இல்லை என்னும் கோட்பாட்டையும் கொங்குப் பாராட்டி வழி உடைத்தெறிகிறார். புத்தரிடம் அவருடைய குடும்பப் பெண்கள் தங்களையும் துறவியாக்கி ஞானம் அளிக்குமாறு வேண்டியதை உலகினர் அறிவர். இராமானுசரிடம் அதுபோல கொங்குப் பிராட்டியும் விண்ணப்பிக்கின்றார்.
அனைவருக்கும் சமத்துவத்தைப் பேணும் பெருந்தகை இராமானுசரும் கொங்குப் பிராட்டியின் விண்ணப்பத்திற்கு இசைவு தருகின்றார்.
கொங்கு நாட்டு சிகர மலையிலிருந்து பக்கம் வாட்டத் தஞ்சமடைந்த கொங்குப் பிராட்டிக்கு ஒப்பில்லாத்  திருவரங்கன் அருளும் ஞான அறிவும் கிடைக்க, இராமானுசர் முந்தை நெறிமுறை காட்டி வைணவத்தின் முதுபொருளை உபதேசமாகத் தந்தார்மேலும் அப்பெண்ணுக்கு அவரே தாச நாமத்தையும் ஸ்ரீ வைணவ நெறிகளுக்கேற்ப கொங்கு பிராட்டிஎனச் சூட்டுகின்றார். இது இந்து சமய நெறியில் மிகப் பெரிய புரட்சியாகும்.
பெண்களுக்கும் ஞானமுண்டு என்றுணர்ந்து அவர்களும் திருநெறியில் நின்று வாழ அருளிச் செய்த இராமானுசர் பாணர் குலப் பெண்ணொருத்திக்கும் அருளுகின்றார். தமிழ்நாட்டை விட்டகல தன் தொண்டரோடும் நாடு கடக்கையில் திருவாலி நிருநகரியில் இளவயது பெண்ணொருத்தியைக் கண்டு ஒற்றையடிப் பாதையில் வழிவிடச் சொல்ல கூறுகின்றார். இக்காட்சியினை கவிஞர் கண்முன்னே நிகழ்வது போலக் காட்டியிருக்கின்றார்.
‘‘பெண்ணே நீ விலகென்று
பெரியவரின் உடன் வந்தார்
செப்ப ஞானம்
நண்ணியவள் முன்னாலே
தேவரீர் நிற்கின்றீர்
என் பின்னாலோ
கண்ண புரத் திருக்கோயில்
வலருபுறம் திருமங்கை
யாழ்வார் கோயில்
நண்ணு திரு வாலிப் பெருமாள்
இடப்புறத்தில் எங்கே நான்
விலக? என்றாள்"" (ப-291)
அப்பெண்ணின் ஞானத்தை மெச்சி அவளையும் வைணவத்திற்குரியவளாக்குகின்றார். பெண்களிடத்தில் கருணையும் அன்பும் கொண்டு அவர்களை மதித்து அவர்களையும் வைணவராக ஏற்று கருணை புரிகிறார் இராமானுசர். தென்குருகூர் நெருங்கும் போதில், ஒரு பெண்ணிடம் தென்குருகூர் எவ்வளவு தொலைவிருக்கும் என்று கேட்டபோது அப்பெண்கள் ஒரு பாடலைப் பாடிக் குறிப்பாகப் பதிலுரைக்கின்றனர்.
‘‘குருகூரின் தவப்பிளைப்
பாசுரத்திலே கூவல்
வருதல் என்ற
வரியவறிய மாட்டீரோ"" (ப-295)
என்று கூவும் அளவிலேதான் திருகுருகூர் உள்ளது என்று உணர்த்திய சிறப்பை ஞானத்தை வியந்து மகிழ்கின்றார்.
திருக்கோவிலூரில் பெண்ணொருத்தியிடம் விளையாட்டாய் பாசுரத்தின் வழி விழியை வினவுகின்றார். அப்பெண்ணோ சிறிதும் தயங்காமல் எண்பத்தோடு இரகசியங்களை எடுத்துரைத்து வழி சொல்கின்றாள்.
‘‘அகமழித்து விட்டேனோ விதுரரைப் போலே
அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே
ஆயனை வளர்த்தேனோ அசோதையைப் போலே
அவல் பொரியை ஈந்தேனோ குசேலனைப் போலே"" (ப-308)
அவள் அவள் பதிலுரைக்கும் பகுதியை கவி மழையாகச் சிந்தச் செய்துள்ளார் கவிஞர் அவர்கள். அவளின் பதில் கண்டு வியந்த இராமானுசர், ‘கைப்பிடியில் வைணவத்தைக் காக்கின்றனர். தமிழர் குலப் பெண்களென்று மெய்ப்படியாய்ப் பேருவகை பூண்டந்த மங்கையினை வாழ்த்திச் சென்றார்’ (ப-301)  என்கிறார் கவிஞர்.
திருப்பங்கள்
இராமானுசர் காவியத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் காவியச் சுவைக்காக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இராமானுசர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக இருந்தபோதும், கவிஞர் சிற்பி அதை எடுத்துரைக்கும் முறை காப்பியத்தை மேலும் சுவையுடையதாக்குகின்றது. வேதாந்தப் போர் நிகழ்த்துவதற்கு அகங்காரமுடைய யக்ஞமூர்த்தி இராமானுசரை வாதுக்கு அழைத்து தர்க்கமுரைப்பதற்கு பதினெட்டு நாள் உபிதப் போரைக் குறிக்கின்றார். யக்ஞ மூர்த்தி எடுத்துரைக்கும் வேதாந்த தத்துவங்கள் எல்லாம் முதல் 17 நாட்களில் இடிபட்ட பனைமரம் போல் சரிந்து விழுந்தன. எனினும் இறுதி நாள் போரில் ஆணவம் கொண்ட யக்ஞ மூர்த்தி தர்க்கமென்னும் கத்தி விளையாட்டைத் தொடர்ந்திட்டார். அந்நாளும் வந்தது. இராமானுசரும் வந்தார். யக்ஞ மூர்த்தியும் வந்தார்.
மதுரமிகு வெற்றி எந்தப் பக்கமென்று
மனமேங்கி அரங்க நகர் காத்தி ருக்கும்
புதுமலர் போல் ஒளிதுலங்கு முகத்தினோடு
பொன்னோவி யம்போல அண்ணல் வந்தார்
இவ்வாறு எவ்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்க,
இணையடியே சரணமென்றார் யக்ஞமூர்த்தி
‘‘கதிநீரே எனப் பாதக் கமலப் பூவில்
கரம்பூட்டிக் கண்ணீரால் கழுவி நின்றார்"" (ப-228)
என்று யாரும் எதிர்பாராத தருணத்தில் இராமானுசரின் திருவடிகளை யக்ஞ மூர்த்தி விழுந்து விட்டதை எடுத்துரைக்கின்றார் கவிஞர்.
பதினெட்டு என்ற எண் மற்றொரு இடத்திலும் இராமானுசரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. திருக்கோட்டியூர் நம்பி தன்னைச் சீடராக ஏற்க வேண்டுமென இராமானுசர் பதினேழு முறை முயற்சித்து தோல்வியுறுகின்றார். அவருடைய முயற்சிகள் எப்பலனையும் தரவில்லை. திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டுத் திண்ணையிலே தவங் கிடக்கிறார். நாடி வந்தவருக்கான நல்ல சொல்லோ திருக்கோட்டியூராரின் வாயிலிருந்து தோன்றவில்லை. எனினும் இராமானுசரின் மன உறுதி குலையவில்லை. இதைக் கவிஞர், ‘சாகரம் பெரியதென்று சலித்திடாப் பறவை போலஇராமானுசரும் மேலும் மேலும் எள் முனை வருத்தமுமின்றி, திருமனம் நோவதுமின்றிமுயற்சித்துக் கொண்டேயிருந்ததாகக் கூறுகிறார். இராமானுசரின் உள்ளத்து உயர்வை மன உறுதியை இவ்வரிகளில் இங்கு காட்டுகின்றார்.
 இராமானுசரின் உடன் வந்தவர்கள் எல்லாம் இது என்ன கொடுமைஎன்று திருக்கோட்டியாரை இகழத் தொடங்கினார்கள். ஆனால் இராமானுசரோ என் தவக் குறைவே’ (ப-207) என்று எண்ணியதாகக் கூறும் பொழுது இராமானுசரின் உள்த்து உயர்வு புலப்படுகிறது. பதினெட்டாம் முறையாகவும் முயற்சிக்கின்றார். இம்முயற்சியைக் கவிஞர் பதினெட்டுத் திங்களில் முடிந்த இராகவன் போரோடும், பதினெட்டு நாள் நடந்த பாரதப் போரும் ஒப்பிடுகின்றார். இராமானுசருக்கு இம்முறையும் சோதனையாகவே இருக்கிறது. திருக்கோட்டியூர் நம்பி ஒரு நிபந்தனை விதிக்கின்றார். உண்ணா நோன்போர் திங்கள் நீர் இயற்று மென்றுகூற இராமானுசரும் துளி நீரும் பருகாமல் நோன்பிருக்கின்றார்.
இழைத்ததோர் தவத்தில் மேனி
இளைத்தது நாட்கள் செல்ல
பிழைப்பரோ என்று மக்கள்
பேதுற மயக்க முற்றார் (ப-209)
இவ்வாறு தன் நோன்பை முடித்து விட்டு, நம்பியை அணுகுகின்றார். நம்பியோ மற்றொரு நிபந்தனை விதிக்கின்றார். தண்டு, பவித்திரத்தோடு வருக எனக் கூற முதலியாண்பினோடும், கூரத்தாழ்வானோடும் சென்று நிற்கின்றார். கோட்டியூர் நம்பிக்கோ சினம் துளிர்க்கின்றது. தணித்து வரச் சொன்னால் உடன் இருவரை அழைத்து வருவதா எனக் கேட்க,
முதலியாண்டார் எனக்கு
முக்கோலாம் திரிதண்டு ஆவான்
இதமுறு கூரத்தாழ்வான்
‘‘எனக்குறு பவித்ரமாவார்"" (ப-209)
எனத் துணிச்சலோடு பதில் வருகின்றது. இங்கு இராமானுசரின் உள்ளத்து உயர்வையும், உறுதியையும் கவிஞர் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றார். பதினேழு முறை மறுதளித்த குருவே பதினெட்டாம் முறையாக வாய்ப்பளிக்க முன்வரும் பொழுது அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் இராமானுசர் தன் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் துணிவுடன் செயலாற்றுகின்றார். திருக்கோட்டியூர் நம்பி,
‘‘இனி உமக் குரைக்க வுள்ள
இரகசிய மந்திரம் தான்
தனித்துவம் மிக்க தாகும்"" (ப-210) என்றுரைத்து யாருக்கும் இதை நீ இனமறியாது சொன்னால் நரகம் புகுவாய் என்று எச்சரிக்கையும் விடுக்கின்றார். எனினும் குருவின் சொல்லை மீறி ஆலயத்தின் மீது ஏறி நின்று அனைவருக்கும் உபதேசிக்கின்றார்.
‘‘பூமியின் சொர்க்கமென்னும்
புதையலை உணர வைத்தார்"" என்கிறார்.
கோட்டியூரார் இதைக் கேட்டளவில் கோபமுற்று இராமானுசரைக் கேட்க அங்கு இராமானுசரின் கருணைக் கடலன்ன உள்ளம் வெளிப்படுகின்றது. மனிதத்தை மட்டுமே உயர்வாகக் கருதும் இராமானுசரே ஒரு புதையலாகத் திருக்கோட்டியூர் நம்பிகளுக்குத் தென்படுவதை மிக அழகான வரிகளால் சிற்பி வடித்திருக்கிறார்.
தமிழ்ப் பற்று
5-ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைப் பொதுவாக ஆழ்வார்கள் வாழ்ந்த காலமாக அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் வைணவ பக்திப் புரட்சி ஏற்படுவதற்கு உந்து சக்தியாக செயல்பட்டவர்கள் ஆழ்வார்கள். அவர்களின் அடியொற்றியே இராமானுசரும் அவர்கள் கொள்கையை செயல்படுத்தி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துகின்றனர்.  ஆழ்வாருடைய பாசுரங்கள் 9ம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீ நாத முனிவரால் தொகுக்கப்பட்டது. ஸ்ரீ இராமானுசர் வாழ்ந்த காலத்தில் அமுதன் என்னும் அவருடைய சீடன் ஒருவன் தமிழில் இராமானுச நூற்றைந்தாதிஎன்ற நூலை எழுதினார். இந்நூலும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது மிகப் பொருத்தமுடையதேயாகும். வைணவத்திற்கான வலுவான அடித்தளத்தை கொடுத்தவர்களின் பாடல்களும், அவற்றைச் செயல்படுத்தியவரின் நூலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. சிற்பியின் இராமானுசக் காவியமும் இதைக் கருத்தில் கொண்டே ஆழ்வார் பாடல்களின் சேகரிப்பில் தொடங்கி, இராமானுச நூற்றைந்தாதி இயற்றப்பட்டது வரையிலான செய்திகளைக் கொண்டு இயற்றப்பட்டிருக்கிறது. பன்னிரு ஆழ்வார்களும் தமிழர்களே. அவர்களின் பாசுரங்களை நன்கு கற்றதினால்தான் இராமானுசர், சாதி, மத வேறுபாடற்ற வைணவத்தை வளர்த்தெடுக்கின்றார். அவர்களின் மீதுள்ள பற்றினாலே தமிழுக்கு இராமானுசர் முன்னுரிமை கொடுக்கின்றார். இதை கவிஞர் சிற்பி தம் காப்பியத்தில் சிறப்பாக குறிப்பிட்டிருக்கின்றார். உறங்காவில்லிக்கு திருமாலின் கண்களைக் காட்ட இராமானுசர் அழைத்துச் செல்கின்றார். அந்நிலையில் திருமாலைக் காண்பித்தார் என்பதை தமிழ்ப் பற்றோடு வெளிப்படுத்துகின்றார்.
‘‘ஈரத்தமிழுக்கும் வீடண னுக்குமாய்த்
தென்திசை பார்த்திருக்கும் - அரங்கன்
முன்னர் நிறுத்தி வைத்தார்"" (ப-225)
திருவரங்கக் கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது உற்சவரின் உலா நிகழும் போது முதலில் தமிழ்ப் பாடல்களை ஒலிக்கச் செய்து புரட்சி செய்கின்றார். நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் முதலில் பாடப்பட்ட பின்னரே பிற மொழி பாடல்கள் பாடப்படும் புதுமையைச் செய்த சிறப்பை,
பேர் படைத்த பைந்தமிழே முன்னர் செல்லப்
பின்னர் மறை வரும்படியாய்ச் சித்தம் செய்தார்
(ப-203)
இதை எதிர்ப்புகளுக்கிடையே திடமாக நிறைவேற்றியதை,
திரண்டு வரும் எதிர்ப்புகளைப் புறங் காணற்குத்
திறமுடையார் வேண்டுமெனக் கருதி னாராய்
(ப-204)
உறையூர் மன்னன் அகலிங்கனை ஆழ்வாராக்கி பொறுப்புகளை வழங்கிய திட சித்தத்தைச் சிற்பி காட்டுகின்றார்.


கருணைக்கடல்  - பெயர்ப்பொருத்தம்
கருணையே கடவுள் தன்மை என்பதை உலகிற்கு உணர்த்தியவர் இராமானுசர். கருணைக் கண்களோடு எங்கும் எதிலும் இறைமையைக் கண்டு, சகல உயிர்கள் மீதும் அன்பு கொண்டு, பிறருக்கும் அதைப் புரிய வைத்து வாழ்ந்த இராமானுசருக்கு கருணைக்கடல்என்ற அடைமொழி பொருத்தமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான அன்பே கருணைக்கு அடிப்படை தன் முனைப்பு தகர்ந்து போகிற போதுதான் கருணை சாத்தியமாகும். கருணை இருக்கும் இடத்தில் கடவுள் தன்மையும் குடி கொண்டுள்ளதை காவியம் முழுக்க சிற்பி பல பாத்திரங்கள் வழி உணர்த்தியபடியே செல்கிறார்.

பாத்திரப்படைப்பு
இராமானுசர் காவியத்தில்  பாத்திரங்கள் வரினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலும் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இதில் வரும் பாத்திரங்கள் ஒரு நல்லறத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் படைக்கப்பட்டுள்ளன. ஆளவந்தார், பெரிய நம்பி, திருமலை நம்பி போன்றவர்கள் மனிதன் எப்படி இருக்க வேண்டும். மனித வாழ்வின் இலட்சியம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்துள்ளனர். காப்பியங்கள் மனிதனை மனிதனாகவும், மனிதத்துவத்தின் ஒரு பிரதிநிதியாகவும் வாழக் கற்றுக் கொடுக்கின்றன. அவ்வகையில் இராமானுசர் பாத்திரம் மட்டுமல்லாமல் இராமானுசருக்கு இணையாக பல பாத்திரங்கள் மனிதத்துவத்தின் பிரதிநிதிகளாக இக்கட்டாயத்தில் நடமாடுகின்றனர். ஓர் ஆசிரியன், ஓர் அரசன் எவ்வாறிருக்கக் கூடாதென்பதற்கான ஓர் உதாரணங்களும் இதில் உண்டு. ஒரு தலைமையின் கீழ் அடக்கியாளப்பட்ட நாகரிக வளர்ச்சி பெற்ற சமுதாயத்திலிருந்து சமயம் சார்ந்த முரண்பாடுகளை விளக்கும் இக்காப்பியம், சமுதாயச் சூழலை நேரடியாக விளக்காமல், எடுத்துக் கொண்ட பாத்திரங்களின் வாயிலாக-அவர்தம் வாழ்வியலின் பல நிகழ்ச்சிகளின் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
பாத்திரத் தோற்றம்
ஆளவந்தாரின் தோற்றத்தைக் கண் முன்னே நிறுத்துகின்றார்.
‘‘திரிதண்டம் தாங்கி நின்ற சுந்தரத் தோள்
திருமண்ணால் பொலிவுற்றுச் சுடரும் நெற்றி
அருள் வதனம்"" (ப-119)
வடுக நம்பி
இராமானுசருக்குப் பணிவிடைகள் செய்யும் வடுக நம்பி முரட்டு பக்தர். இராமானுசரையே கடவுளாக நினைத்து வாழ்ந்தவர். பெருமாளை விட பெரிய பெருமாளாக இராமானுசரையே கருதி வாழ்ந்ததை மிக அழகாகச் சிற்பி வெளிப்படுத்துகின்றார்.
வீதி உலா வரும் பெருமாளைத் தரிசிக்க மறுத்து இராமானுசருக்கு பால் காய்ச்சுவதையே சிறந்த பணியாகக் கருதியதையும், இராமானுசரைக் கண்ட கண்களால் திருவரங்கக் கண்ணனைக் கூட காண மறுப்பதையும், கூடையில் பெருமாளின் சிலையையும், இராமானுசரின் பாதுகைகளையும் ஒன்றாக வைத்திருக்கும் மேன்மையையும் வெளிப்படுத்தும் சிற்பியின் கவித்துவத்தைப் பாராட்ட வார்த்தைகளில்லை.
இராமானுசர் தன் பாதுகையையும், திருமால் இலையையும் ஒன்றாக வைத்தற்குக் காரணம் கேட்க, வடுக நம்பி சற்றும் தளராமல்,
‘‘உம்பெருமாள் உமக்கு மிகப் பெரிய ரென்றால்
எம்பெருமாள் என்றனுக்குப் பெரிதே ஆகும்"" (ப-288)
என்று துணிச்சலாக பதில் தருகிறார்.
திருமலை நம்பி
இராமானுசர் இராமகாதை கற்று திருமலைக்குச் சென்ற போது அவரை அழைத்திட அவர் மாமனான திருமலை நம்பியே எதிர்கொண்டு வருவதைக் கண்டு, சிறியார் யாரும் இல்லையோ எனக் கேட்க,
‘‘எனை விடவும் சிறியவரைத் தேடிப் பார்த்தேன்
எவருமில்லாக் காரணத்தான் நானே வந்தேன்""
(ப-230)
என்கிறார் திருமலைநம்பி. திருமலை நம்பியின் எளிமையை, உள்ளத்து உயர்வை, மாண்பை சிற்பி இருவரிகளில் நயமாகக் காட்டுகின்றார்.
கூரத்தாழ்வார்
சமுதாயக் கோளாறுகள் அதிகார வர்க்கத்தின் மனித இயல்புகளோடு பொருந்தித் தாக்கும்போது அல்லற்பட்டு ஆற்றாது அழுது துடிதுடிப்பவர்கள் அருளாளர்களே. கூரத்தாழ்வான் தன் கண்களின் இழப்பிற்குக் காரணமான நாலூரானும் வைகுந்தப் பதவி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும்போது வள்ளுவரின் சால்பிற்கு ஓர் உருவத்தைச் சிற்பி கொடுத்து விடுகிறார்.

காலம் பற்றிய பதிவு
காலம் ஒரு காட்டாறு கடுகி ஓடும்
கால்வைத்த சுவடறியோம் எண்பாருண்டு
காலம் ஒரு காற்றாடி மேல் கீழாக்கிக்
களித்தாடிச் சென்று விடும் என்பாருண்டு
(ப-379)
காலம் ஒரு கூரிய வாள் எல்லாம் வெட்டிக்
களத் தெறியும் பெருங் கொடுமை என்பார் உண்டு
என்று தொடரும் காலம் பற்றிய பதிவுகள் காலம் பற்றிய புதிரை விடுவிக்க முயன்றுள்ளது.
கதை அமைப்பு
கதை அமைப்பானது தொடக்கம் முதல் இறுதிவரை முழுமையான வளர்ச்சி நிலையைக் கொண்டே அமைந்திருப்பதோடு, அதன் கிளைக் கதைகளும் காப்பியக் கதையோடு பின்னிப் பிணைந்தவைகளாக விளங்குகின்றன. இராமானுசரின் மைசூர் பயணத்திற்கான காரணத்தோடு தொடங்கும் கதை அவருடைய இறுதிப் பயணம் வரையிலான வாழ்வை எடுத்துக் கூறுகிறது.
வைணவத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்தவர்களே கதைக்கு ஆதாரமாகிறார்கள். இராமானுசரின் கொள்கைக்கு உரம் போட்ட ஆள வந்தார் விவசாயி ஒருவரை மாறன்நேர் நம்பியாக்கி வைணவ மடத்தில் சேர்த்துக் கொள்கிறார். அவர் வழியைப் பின்பற்றும் பெரிய நம்பியும் மாறன்நேர் நம்பிக்குத் தக்க மருத்துவராகத் திகழ்ந்து அவர் நோயை நீக்கப் பாடுகிறார். வைதிகர்களால் ஊரை விட்டு தள்ளி வைக்கப்படும் பொழுது, அதைக் குறித்துப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் தன் முடிவில் இறுதிவரை உறுதியாக இருக்கிறார்.
‘‘மண்ணுக்கும் மற்றதற்கும் வேறுபாட்டை
மனமாற நானறியேன்""  (ப-119) என்ற மாறன் நேர் நம்பியின் திருவாசகமே ஆளவந்தாரை அவர்பால் ஈர்த்தது. மாறன் நேர் நம்பிக்கும் ஆளவந்தாருக்குமான உறவு சாதிமதம் கடந்த உறவு. சித்திரக் கூடம் திறப்பு விழாவிற்கு முதல் நாள் புனித வேள்வி முடிந்த பின்பு தாழ்ந்த சாதியானைதலால் உள்நுழையும் தகுதி தனக்கில்லை என உணர்ந்த மாறன் நேர் நம்பி மண்டபத்தின் தரை வணங்கி தன்னுடலில் அப்புனிதம் இடம்படுமாறு விழுந்து புரளுகின்றார். இதையறிந்த வைதீகர்கள் தீட்டுப்பட்டு விட்டதாக வெகுண்டு ஆளவந்தாரிடம் உரைக்க, அவர் உரைத்த பதிலை சிற்பி பாங்குற வடிக்கின்றார்.

‘‘செய்வதினித் தேவையில்லை மண்டபத்தை
திருவுடலால் மெழுகினார் மாறன்நம்பி
தெய்வமகன் வியர்வையுடல் பட்டதாலே
தீர்த்தங்கள் தேவையில்லை என்றார் அண்ணல்""
(ப-122)
ஆளவந்தாருக்கு பிளவு நோய் என்பதை அறிந்தளவில் மாறன் நம்பி இறைவனிடம் அந்நோயை தனக்கருளும்படி வேண்டுகிறார். அவர் இறைஞ்சுகின்ற பாங்கை கவிச் சொல்லில் சொன்னால் மாறன் நம்பியின் தூய உள்ளம் புரியும்.
‘‘இறைவா எம் பெருமானே குருநாதன் நோய்
எனக்கருள் எனக்கருள்க காவிரிப்பூந்
துறைவா நீ எனக்கருள் ஆயர்குலச்
செல்வா நீ எனக்கருள்க அருள்க என்றே""
(ப-123)
அத்தூயவரின் உண்மையான பக்திக்குப் பரமன் செவி சாய்க்கப் பற்றுகின்றது பிளவு நோய் மாறன் நம்பியை. அவருடைய ஒப்பற்ற தியாகத்தை உணர்ந்த பெரிய நம்பி மாறன் நம்பிக்கு வயது, சாதி மரபு மீறி உதவுகின்றார். பாத்திரப்படைப்பில் சிற்பியை விஞ்சுவார் யாருமில்லை எனுமளவிற்கு சாதிமறுப்புக் கொள்கையுடைய பாத்திரங்களைத் தீட்டியிருக்கிறார்.
பெரிய நம்பி அந்தணர்கள் தன்னை தள்ளிவைத்த போதும் தளராமல்,
‘‘ஏவிய ஆளவந்தார்
நடுநிலைப் பாதையேதான்
நான் கொண்ட பாதை"" (ப-280) என்று உறுதியாக நிற்கிறார்.காப்பியத்தின் பாதையாகவும் இதுவே அமைந்துள்ளது.
காப்பிய நடை
ஒரு காப்பியத்தைப் படைக்கும் கவிஞன் கையாளுகின்ற நடையும் காப்பியத்திற்கு மேன்மையளிக்கும். ஒவ்வொரு  கலைஞனுக்கும் தன் காப்பியத்திற்கு ஏற்ற நடையைப் பொருண்மைக் கேற்பவே தேர்ந்தெடுக்கும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஒவ்வொரு காப்பியமும் ஒவ்வொரு நடையைக் கொண்டுள்ளது. கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட காப்பியங்களில் அகவற்பாவும் பின் வந்த காப்பியங்களில் பாவினங்களும் பயின்று வந்துள்ளன. எனவே காப்பிய நடை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் இருந்ததில்லை.
மெய்ப்பாடுகள்
பெருமித உணர்வு
திருக்கோட்டியூர் நம்பியிடம் மந்திர உபதேசம் கேட்க பதினேழு முறை தோற்று, பின் பதினெட்டாவது முறை அவருடைய நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு பின் தன் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் மந்திர உபதேசம் பெறுகின்றார். அந்நிலையில் இராமானுசர் மந்திரத்தைக் கேட்கும் நிலையில் பெருமிதம் கொள்கின்றார். இதை,
உரிய நுண் பொருளி னோடும்
உரைத்தனர் கோட்டியூரார்
பெருகிடும் கண்கள் மல்கும்
பெருமிதம் கொண்டார் அண்ணல்’ (ப-210)
என்கிறார் கவிஞர். இவ்வாறு பல துன்பங்களுக்கும் நிபந்தனைகளுக்குமிடையில் பெற்ற அம்மந்திரத்தை கோயிலின் உச்சி மீது நின்று உபதேசித்ததை அறிந்த குரு கோபிக்கின்றார். அந்நிலையில்,
‘‘அளப்பரும் நன்மைக்காக
புல்லிய உயிர் போனாலும்
போகட்டும்"" (ப-215) என்ற இராமானுசரின் பதிலைக் கேட்ட கோட்டி,
தம்மையே அழித்துக் கொண்டு
தாரணிக் குதவி செய்யும்
அம் முகில் நீவிர் தாமோ?
அரங்கத்தின் தெய்வம் நீரோ
எம்பெரு மானார் நீரே
என்னையும் ஆள வந்தீர்’ (ப-216) என்று நெஞ்சம் விம்மி அணைத்துக் கொள்கிறார். இங்கு மகத்தா ஒரு சீடனைப் பெற்ற பெருமித உணர்வை கவி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
உவகை
தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வருகின்ற இராமானுசர் அன்னை திருக்காவிரியைக் கண்டதும் உவகை கொள்கின்றார். பல ஆண்டுக்ள தாயைப் பிரிந்திருந்த சேயைப் போல மாறுகின்றார். இருபது ஆண்டுகளாகப் பிரிந்திருந்த நிலையில் காவிரியைப் பார்த்தளவில் அவருடைய திருமனமும் பொன்னுடலும்பரபரத்ததாகக் கவிஞர் அந்நிலையைச் சுட்டுகின்றார்.
‘‘களிக்கின்றார் துளையமிட்டுக் குளிக்கின்றாரே"" (ப-363)
இக்காட்சியை கவிஞர் இவ்வாறு வருணிக்கின்றார்.
‘‘ஐயனுக்கன் றொரு நூறு வயதிருக்கும்
ஆனாலும் மனம் குழந்தை போலிருக்கும்"" (ப-363)
இராமானுசரின் உவகையை கவிஞர் இவ்வாறு படம் பிடிக்கிறார்.
பல்லாண்டுகள் பிரிந்திருந்த இராமானுசரைக் காண இந்திராசாலம் போல திரண்ட மக்கள் எந்தை தாய் செய்த தவம் பலித்ததென்றுஉவகை பூண்டு மகிழ்ந்ததாகக் கவிஞர் குறிப்பிடுகின்றார்.
அழுகை
இராமானுசரின் காப்பியத்தில் சாதிக்கெதிரான போராட்டத்தில் அவரும், அவருடைய தொண்டர்களும் பலவித துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இளிவு, இழவு, அசைவு, வறுமை என நான்கு வழிகளில் அழுகை பிறக்குமென்கிறது தொல்காப்பிய நூற்பா.
இராமானுசர் காவியத்தில் ஆளவந்தார், பெரிய நம்பி, கூரத்தாழ்வார், திருமலை நம்பி, உறங்காவில்லி, பொன்னாச்சி போன்றோரின் இறப்பு மிகப்பெரிய அவலத்தைக் கூட்டி அழுகைச் சுவைக்குக் காரணமாகின்றது.
பெரிய நம்பியோடு இராமானுசர் ஆளவந்தாரைத் தரிசிக்க செல்லுகின்றார். காஞ்சியை விடுத்து காவிரி பாயும் திருவரங்கத்தை அடைகின்றார். தாய்ப்பசுவைக் காணுகின்ற ஆர்வத்தோடு சிறு கன்று போல் இராமானுசரின் மனம் ஆளவந்தாரைக் காண ஏக்கமுற்றிருக்கிறது. ஆளவந்தார் திருநாடுற்ற செய்தியைக் கேட்டளவில், பெரியநம்பியின் நிலை எப்படியிருந்தது என்பதை கவி இவ்வாறு வருணிக்கின்றார்.
‘‘கடிமணத்தில் இடும் தாலி நாகப் பாம்பாய்க்
கடித்தது போல் நடுக்குற்றார் பெரியநம்பி"" (ப-169)
ஆளவந்தாரை சூழ்ந்து நின்றவர்கள் கண்களிலெல்லாம் மழை பொழியக் காட்சி தந்தார்என்று கவி அச்சூழலை வருணிக்கின்றார். ஆளவந்தாரின் சீடர் மாறனேர் நம்பி அந்தணரல்லாதார் என்றாலும் பெரிய நம்பி அவருக்குற்ற நோய் நீங்க மருந்திட்டுக் காப்பாற்றுகின்றார். இதனால் வைதீகத்தார் அவரைத் தள்ளி வைத்துவிடுகிறார்கள். இதனை இராமானுசர் பெரிய நம்பியிடம் உரைக்கும்பொழுது தொடல் தீட்டு என்பதெல்லாம் தொண்டர்தம் மிடையே உண்டோ?’ (ப-282) என்று நடுநிலையோடு வாழ்கின்ற இப்பெரியாருக்கு நேர்ந்த துன்பம் எண்ணி இராமானுசரின் கண்கள் கசிந்தன என்கிறார் கவிஞர். தன்னைக் காக்க கூரத்தாழ்வானும், பெரிய நம்பியும் இரு கண்களையும் பறி கொடுத்தனர் என்ற செய்தியறிந்த நிலையில் தமிழகத்திற்கு வர இயலா சூழலை எண்ணி மனங் கொதித்திருந்த இராமானுசர், இருபதாண்டுகள் கழித்து தமிழகம் வந்த நிலையில் திருவரங்கக் கோயிலுக்குச் செல்லாமல் கூரத்தாழ்வான் இல்லத்திற்கம் பெரிய நம்பியின் இல்லத்திற்கும் சென்று தனக்காக அவர்கள் பட்ட துன்பத்தை நினைந்து கண்ணீர் விட்டழுகின்றார்.
தாய்மனக் கூரத் தாழ்வான்
தன்மனை வானில் போய்த்
தூயவர் நின்றார் கண்ணீர்
துதைந்த பொன் மேனியோடு (ப-365)
பெரிய நம்பி இல்லத்தில் பெரிய நம்பியின் மகள் துழாய் இராமானுசரைக் கண்டளவில் ஓடிவந்து பெரிய நம்பியின் இறப்பைக் கூறி அரற்றுகின்றாள். (ப-369) கூரத்தாழ்வான், பெரிய நம்பி இருவர் செய்த தியாகத்தின் விளைவால் ஏற்பட்ட பெருந் துன்பத்தையெண்ணி இராமானுசர் மனம் கலங்கி நிற்கின்ற நிலையை கவிஞர் அழுகைச் சுவை நிலையில் நின்று வெளிப்படுத்துகின்றார்.
காப்பியச் சுவை
அடுக்குத் தொடர்
‘‘வந்தார் பெருமானார் வந்தார் வந்தார்
வாழியதி ராசரினி உய்ந்தோம் உய்ந்தோம்""
தமிழ்நாட்டிற்கு இராமானுசர் திரும்பி வந்த நிகழ்வை மக்கள் கொண்டாடிய நிலையை அவர்களின் மகிழ்ச்சியை கவிஞர் அடுக்குத் தொடரில் வெளிப்படுத்துகின்றார்.
இருபதாண்டுகள் பிரிந்திருந்த இராமானுசர் அரங்கனை முதலில் சேவிக்காமல், தனக்காக இரு கண்ணும் இழந்த கூரத்தாழ்வானைச் சென்று சந்திக்க அவர் வீட்டின் முன் நிற்கின்றார். பாய்ந்து வந்த கூரத்தாழ்வார், இராமானுசன் பாதபங் கயங்களைப் பற்றி அழகின்றார்.
இக்காட்சியை,
பாதபங்கயங்கள் பற்றிச்
சேயென விம்மி விம்மித்
தீராமல் தேம்புகின்றார். (366)
என உண்மையான அன்பின் நெகிழ்வை அடுக்குத் தொடரில் எடுத்துரைக்கிறார். இதுபோல அடுக்குத் தொடர்கள் வருகடங்களெல்லாம்  காவியத்தை மேலும் சிறப்பாக்கி கவிஞர் சொல்ல வந்த கருத்தையும் முற்றுவிக்கிறது.
இசை நயம்
காப்பியச் சுவைக்கு மேலும் அழகூட்டும் வகையில் இசைநயமிகுந்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பெரும் புதூரில்
பிங்கள ஆண்டில்
பிறந்தார் எங்கள் பிரான்-வந்து
பிறந்தார் எங்கள் பிரான்
இராமானுசர் வருகையைக் கேட்டளவில் திருவரங்கம் திருவிழாக்கோலம் கண்டது.
வாழை மரம் மனை முன்பு நாட்டு வாரும்
மாவிலையின் தோரணங்கள் நீட்ட வாரும்
பாளைகமு குடன்பந்தல் கூட்டு வாரும்
பச்சை இள நீர்க்குலைகள் மாட்டு வாரும்
(ப-200)
என்று இசைநயத்தோடு கூடிய இப்பாடல்கள் திருவரங்க வாழாவைக் கண்முன் நிறுத்துகின்றன.
எங்கோ இடி இடித்து
எங்கோ மழைபொழிய
இங்கு வரும் காவிரியின்
இதயம் கலங்கி வரும்
நாலூரானின் கொடும் செயலை உணராத மன்னன் இராமானசரை பழிவாங்கத் துடித்ததை இவ்வாறு உரைக்கிறார்.

வினா அமைப்பு
திருமாலின் கோலத்தை உரைக்குமிடத்தை
வழிவழியாய் வந்த குல தனம் காணீரோ? (ப-117)
மணக்கால் நம்பி ஆளவந்தாரிடம் அரசதனத்தை விட  மேலான குல தனம் திருமாலே என்றுரைக்கும் பொழுது வினா வழி உண்மையை உணர்த்துகின்றார்.
கொண்டனூர் மன்னன் சமண சமயம் சார்ந்தவன். அவன் இராமானுசரால் வைணவ மதத்தைப் பின்பற்றுகின்றான். அம்மாற்றம் நேர்ந்த காரணத்தை,
காலத்தின் லீலை தன்னைக்
கண்டறிந்தவர்கள் யாரோ? (323)
என்று காலக் கனிந்த நிலையை உணர்த்துகின்றார்.
தென் திருவாய் மொழிக்கு
ஐயன்மீர் மேலாம் வேதம்
யாதேனும் கண்ட துண்டோ?  திருவாய்மொழிக்கு நிகரான வேதம் இல்லையென்பதை வினா வடிவில் வெளிப்படுத்துகின்றார். சாதி வெறியால் மாறன் நேர் நம்பிக்குச் செய்த பணியை புறக்கணிக்கும்.
‘‘சடகோபர் சொன்னதெல்லாம்
வெறும் கடல் ஓசை தானோ?"" (ப-281)
அந்தணர்களின் நிலையை பெரிய நம்பி இவ்வாறு வினவுகின்றார்.

பெரியநம்பி தன் உறுதியை இராமானுசருக்கு உணர்த்த கேள்விகளையே முன் வைக்கிறார்.
அடல்மிகு தோளன் இராமன்
அவனிலும் பெரியனோ நான்?
சடாயுவை விடவும் மாறன்
நேர் நம்பி சிறியார் தானோ?"" (ப-281)
சடாயு இறந்த போது மனிதனாகிய இராமன் அதைப் பறவை எனக் கருதாமல் அதற்கும் புனித பல கிரியை செய்து நன்றி பாராட்டுகின்றான். இவையெல்லாம் தெரிந்த பின்னும் சாதியென்னும் கொடிய நஞ்சை மனதில் கொண்டு அந்தணர்கள் தன்னைப் புறக்கணித்ததை தான் பொருட்படுத்தவில்லை என்பதை எதிர்வினா எழுப்பி புரிய வைக்கிறார்.
மேலும்,
தொடல் தீட்டு என்பதெல்லாம்
தொண்டர் தம் மிடையே உண்டோ?
மடல் தாழை முள்ளில் பூக்கும்
மலர் மணம் தாழ்ந்த தாமோ? (ப-282)
அடுத்தடுத்து சிற்பி எழுப்பும் வினாக்கள் கற்போரைச் சிந்திக்கத் தூண்டும்படி உள்ளன. கருத்துப் புலப்பாட்டு நெறிக்கு வினா அமைப்பு முறை கவிஞர் சிற்பிக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்திருக்கிறது.

இயற்கை வருணனை
தரையெல்லாம் மணல்விரிப்பு
தண்ணீரின் மேள தாளம்
கரையெல்லாம் தென்னந்தோப்பு
காவிரித்தாயின் காப்பு
எனத் திருவரங்க காவிரியின் காட்சியைக் கவிஞர் தீட்டுகின்றார்.
வைகலை உணர்த்த விரும்பிய கவிஞர்,
வைகறை ஒளிப்பிள்ளைக்கு
வாயமு தூட்டுதற்கு
பையவே இருட்சேலைக்குள்
பரிதியை விலக்கிக் காட்டும்
செய்ய நற்காலைப் பொழுது (ப-236)
பாலூட்டும் அன்னையோடு விண்ணை ஒப்பிட்டுக் காட்டும் நயம் பாராட்டுக்குரியது.
இராமானுசரின் விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை ஆழ்வார் பாசுரங்களே. நான்கு வேதங்களையும் கற்றறிந்த அந்தணர்கள், சாதியை மனதில் கொண்டு, மற்ற பக்தர்களைப் பழித்தால், அந்த நொடியிலேயே அவ்வந்தணர்கள் புலவர்போல் கருதப்படுவார்கள் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் (திருமலை-பாடல் 43) கூறுகிறார். பன்னிரு ஆழ்வார்களில் சிலர், தாழ்ந்த சாதியினராகவும், மற்றும் சிலர் உயர் சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். மதுரகவியாழ்வார் போன்ற அந்தணர் ஒருவர், நம்மாழ்வார் போன்ற வேளாள சாதியினரை, தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்டது, ஆழ்வார்கள் காலத்தில் அடியார்களுக்குள் சாதி வேறுபாடு இல்லாமல் இருந்தது என்பதை நிரூபிக்கின்றது.
பழுதலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதி மஞ்சள்
இழிகுலத் தவர் களேலும் எம்மடியார்களாகில்
தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போம் மதின் திருவரங்கத்தானே
(திருமலை-பாடல்-42)
என்ற பாடல் சிறந்த கருத்துக்களை யார் கூறினாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு, அவர்களையும் சமமாகக் கருதுங்கள் என்கிறது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, உயர்சாதி, தாழ்ந்த சாதி முதலிய பாகுபாடுகள் சமய வாழ்வில் இடம்பெறக் கூடாதென்று கருதினர். உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்துமே இறைவனின் அம்சங்களே. விசிஷ்டாத்வைதமும் இதையே எடுத்துரைக்கிறது.

அணிநயம்
சொற்பொருள் பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணியில் பல பாடல்கள் பயின்று வருகின்றன. உருகும் என்ற சொல்லைக் கொண்டு நயமான பல பாடல்களைப் படைத்துள்ளார்.
பண்ணுக்கும் அரையர் தமிழ் அமுதம் கேட்டுப்
பனியுருகும் இளங்காலை உருகும் நெஞ்சம்
மண்ணுருகும் மால் உருகும் மால் கரத்தின்
மதுர இசைச் சங்குருகும் உருகும் ஆழி
விண்ணுருகி மழையாகி பொழிவதே போல்
விதியுருக வந்த யுதிராஜ னார்தம்
கண்ணிருகும் உயிருருகும் மேனி யெல்லாம்
கரைந்துருகும் உருகாதார் எவருமில்லை
பண்ணுருகும், பனியுருகும், மண்ணுருகும், சங்குருகும் விண்ணுருகும், விதியுருகும், கண்ணுருகும், உயிருருகும் கரைந்துருகும் முடியான சொற்கள் கற்பார் நெஞ்சையும் இசையால் உருவ வைக்கின்றன.
உவமையணி
இராமானுசரின் உதயத்தைப் பற்றியுரைக்குமிடத்து
மாறுகொண்ட தத்துவங்கள் கீழடங்க
மாமேரு பருவதம் போல் தோற்றம் கொண்டார்
உளருபடும் நம்சமய வரலாற் றில்ஓர்
ஒளிமிகுந்த பொற்கதவம் திறக்கும் போலும்
(181)
என பர்வதமலையோடும், பொற்கதவத்தோடும் இராமானசரை உவமிக்கின்றார்.
 ஆளவந்தாரின் இறப்பைக் கேள்வியுற்ற பெரிய நம்பியின் நிலை தாலி நாகப்பாம்பாய் மாறி கடித்தது போல்இருந்ததாக கூறுகின்றார். (ப-169)
ஆளவந்தாரின் பிளவு நோயைக் கேள்விப்பட்ட மாறன் நேர் நம்பி காதில் உளி போன்ற கொடுஞ் செய்தியை (123) கேட்டதாகவும், மணக்கால் நம்பி ஆளவந்தாரை திருமாலை தரிசிக்கக் காட்டிய நிலையில் நதியொன்று கருங்கடலில் கரைந்தாற் போல்திருமாலோடு கலந்து விட்ட நிலையை மிக எளிய உவமைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆழ்வார்களின் வைபவம் அகன்ற வான் போன்றது’(ப-103)
திருக்கோட்டியூர் நம்பியிடம் தொடர்ந்து தன்னைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் இராமானுசரின் நிலையை சாகரம் பெரியதென்று சலித்திடப் பறவை போல’ (ப-206) என்கிறார்.
கூரத்தாழ்வானின் விழியிழப்பும், பெரிய நம்பியின் உயிரிழப்பும் கேள்விப்பட்ட இராமானுசரின் நிலையை அழகிய உவமைகளால் எளிதில் விளக்கி விடுகிறார்.
‘‘மின்னலால் தாக்கப்பட்டு வீழ்கின்ற கோபுரம் போல்,
தன் மகவிழந்த தாய்போல், பனி விழும் வனத்தில்
செந்தீப் பற்றினாற் போல்"" (ப-356)
இம்மூன்று உவமைகளும் அடுத்தடுத்து பயின்று வந்து இராமானுசரின் உள்ள நிலையைத் தெற்றென புலப்படுத்தி விடுகின்றன. இருககண்ட சோழன் இறந்ததை அறிந்து, இராமானுசர் திருநாராயணபுரத்திலிருந்து திருவரங்கம் செல்ல முடிவெடுத்ததை அறிந்த தொண்டர்கள் எரிதழலில் பட்ட பட்டுப் பூச்சி போல’ (ப-359) துடிதுடித்துப் போனதை எளிய உவமைகளில் சிறப்பாக விளக்கி விடுகின்றார்.
இதுபோல், பாலை நில உவமைகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
‘‘தீமையே உருக் கொண்ட நாலூரான் போல்
நெருப்புமிழும் வெங்கொடுமைப் பாலை"" (ப-363)
நாலூரானின் குண இழிவும் இதனால் வெளிப்படுகிறது.
தமிழ் மண் அவரை வரவேற்ற விதத்தை விதத்தை
‘‘நடைவாசல் பெருந் துதிக்கை உபானைகள் போல்
நாற்புறமும்  குலைவாழை அசைந்திருக்கும்"" (ப-363)
குலைவாழை பெருந் துதிக்கையாக உவமிக்கப் பட்டிருப்பது மிகச் சிறப்பு.
குhவிரியை இருபதாண்டகளுக்குப் பின் காணும் இராமானுசர் ஒரு குழந்தையாகவே மாறி விடுகிறார். (363) எனும் பொழுதும், கூரத்தாழ்வான் இராமானுசரைக் கண்டளவில் வெண்ணெய் மாமலையில் செந்தீ விழுந்ததைப் போல உருகி நிற்பதையும் (365) வெளிப்படுத்துமிடத்து கவிஞரின் கருத்துப் புலப்பாட்டிற்கு உவமைகள் பெரிதும் துணை நின்று காவியத்தை சிறக்கச் செய்துள்ளன.
தற்குறிப்பேற்ற அணி
தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராமானுசர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். திருநாராயணபுரத்தில் இந்நிகழ்வை நடத்த முயலும்போது, ஆயுதமற்ற வைணவத் தொண்டர்களை பொல்லாத கொள்ளையர்கள் வில்லம்பு, வேல் கொண்ட தாக்குகின்றனர். அப்போது இடசாரி வலசாரியாக எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் இராமானுசரையும், தொண்டர்களையும் காக்கின்றது. அவர் யார் என்று யாரும் அறியாத சூழலில் இரவு விடிகிறது. இளம் பரிதியாக சூரியன் தோன்றும் அந்த இயற்கை நிகழ்வை அவர் யார் என்று பதில் சொல்லும் முகமாக பரிதி தோன்றியது என்று தன் குறிப்பைக் கவிஞர் ஏற்றிக் கூறுகின்றார்.
‘‘எழுந்த இந்தக் கேள்விக்கு விடைசொல் வான் போல்
இளம்பரிதி கிழக்குமலை முற்றம் வந்தான்"" (ப-337) என்கின்றார்.
தன்மை அணி
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும், அதன்கண் அமைந்த உண்மையான இயல்பை உள்ளபடி விளக்குவது தன்மை அணி  மலைவளம், நாட்டு வளம், காட்டு வளம், மருத நில வயல் வளம், நீர் வளம் ஆகியவற்றை தன்மை அணியில் பாடியுள்ளார்.
பாவிக அணி
ஒவ்வொரு இலக்கியத்திற்கும் அடித்தளமாக விளங்கும் கருத்தை பாவிகமென்பார். யாரும் சகோதரரே-குல பேதங்கள் தீதறவே-எல்லையற்ற மனிதநேயம் (ப-226) என்ற கருத்தே இராமானுச காவியத்தின் பாவிகமாக காப்பியம் முழுவதும் ஒரு நூலாக இருந்து பல நிகழ்ச்சி முத்துக்களை இணைத்து இருக்கிறது. சாதி ஆதிக்கத்தை நீக்கி மனித இனம் உயர்வு பெற முயன்ற இராமானுசரின் கொள்கையே பாவிகமாகியுள்ளது.
முடிவரை
துறவற நெறியில் நின்றாலும் உலக தருமத்திற்குட்பட்டே உலக உயிர்களை அதனதன் இயல்புகளுடனே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை இராமானுசர் பெற்றிருப்பதை கவிஞர் காவியம் நெடுக உணர்த்தியபடியே செல்கிறார்.