நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2019

தமிழ் இலக்கிய ஆய்வின் விரிந்த பரப்பும் எதிர்காலப் போக்கும்


தமிழ் இலக்கிய ஆய்வின் விரிந்த பரப்பும், எதிர்காலப் போக்கும்

      தமிழ் இலக்கிய உலகம் பரந்து பட்டது. தொல்காப்பியம் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அதன் வளமை வகைமை சொல்லில் அடங்காது. அதே சமயம் ஆய்வுகளும் பிற துறைகளை விட மிகுதியாக நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இவ்வளவு விரிந்த பரப்பில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற இலக்கியங்களே மிகக்குறைவு. பல்கலைக்கழகத் தன்னாட்சி தகுதி பெற்ற கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் இதற்கு ஓர் காரணம். நவீனப்படுத்தல் என்பது கட்டிடங்களுக்கு மட்டுமல்ல பாடத்திட்டங்களுக்கும் உரியது. பெரும்பாலும் முனைவர் பட்ட ஆய்வுகள் ஆய்வாளர்கள் தமக்கு முன்பே அறிமுகமான இலக்கியங்களிலிருந்தே தலைப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, பாடத்திட்டங்கள் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைவதால் பாடத்திட்டங்களிலேயே எதிர்கால நோக்குத் தேவைப்படுகிறது
.

பாடத்திட்டங்களில் மாற்றம்

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே இருந்து மாறாத பாடத்திட்டங்கள். உண்மையில் தமிழில் வளர்ந்து வரும் துறைகள் ஏராளம். மொழிபெயர்ப்பு இலக்கியம், ஒப்பிலக்கியம், புலம்பெயர் இலக்கியங்கள் பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டியது காலத்தின் தேவை. மொழிபெயர்ப்புத்துறை சார்ந்து வேலைவாய்ப்புகள் உள்ள சூழலில், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஏதேனும் ஓர் மொழியைக் கற்றுக் கொள்ளும் நிலையைக் கட்டாயமாக்கலாம். கற்பிக்கும் முறைகளிலும் மாற்றம் தேவை. நவீன இலக்கியக் கொள்கைகளோடு இலக்கியத்தை அணுகும் முறையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொல்காப்பியத்தை நூற்பாக்களைக் கூறி அதன் விளக்கத்தைக் கூறும் நிலை முதுகலை வகுப்புகளில் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. உளவியல், கவிதையியல், அழகியல், மார்க்சிய நோக்கில் தொல்காப்பியத்தையும், பிற இலக்கியங்களையும் கற்றுத்தர வேண்டும். நவீன இலக்கியத்தை விரும்பாத ஆசிரியர்கள் பாடம் நடத்த கூட அதைப் படிப்பதில்லை என்பது வேதனையான செய்தி. கலை கலைக்காகவே, கலை வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையைப் போலவே ஆய்வு ஆய்வுக்காகவே, ஆய்வு வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையும். முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று மேற்கொள்பவர்கள் அதை வாழ்க்கையின் பயன்பாட்டடிப்படையில் கொண்டு செல்கின்றார்களா என்பது ஐயமே. இலக்கியங்களிலுள்ள சமூக அவலங்களைத் தன் ஆய்வுகளால் எடுத்துரைக்கும் ஆய்வாளர்கள், தனியார் நிறுவனங்களில் தமிழ்த்துறை விரிவுரையாளர்களுக்குப் பிற துறை விரிவுரையாளர்களை விடக் குறைவான ஊதியமே கொடுக்கப்படுகின்ற அவலத்தை எடுத்துரைக்கவோ, எதிர்க்கவோ துணிவதில்லை 
.
அரைத்த மாவு மனோபாவம்

சில முனைவர் பட்ட தலைப்புகள் முன்பு கேட்டது போலவே தோன்றுகின்ற அளவிற்கு அரைத்த மாவுகளாக உள்ளன. குறுந்தொகையில் உவமை என்பதை மற்றொருவர் நற்றினையில் உவமை என்று ஆராய்ந்திருப்பார். சங்க இலக்கியத்தில் அகத்திணைக் கோட்பாடுகள் என்ற ஓர் ஆய்வும், குறுந்தொகையில் அகத்திணைக் கோட்பாடு, அகநானூற்றில் அகத்திணைக் கோட்பாடு முதலான ஆய்வுகளும் மேலும் சில உதாரணங்கள். செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனம் தருகின்ற ஊக்கத்தொகைக்காகச் செம்மொழி இலக்கியங்கள் 41-க்குள் தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல். உதவித்தொகை கிடைக்காவிடில் அதே தலைப்பிலேயே ஆய்வைத் தொடர வேண்டிய நிலைமை. இவையெல்லாம் அரைத்த மாவு மேலும் அரைபடுவதற்குக் காரணம்.  செம்மொழி நூல்களுக்கு நிலை இப்படி என்றால், நாட்டுப்புற ஆய்வுகளோ இன்னும் ஓர் படி மேல். உதாரணத்திற்குச் சேலம் மேச்சேரி பகுதி வட்டார தாலாட்டுப் பாடல் என்றும், அம்மாப்பேட்டை பகுதி வட்டார தாலாட்டுப் பாடல் என்றும், தெருவுக்குத் தெரு நாட்டுப்புற ஆய்வுகள். இதையே மாற்றி ஒப்பாரி, தொழிற்பாடல் என்று புதிய ஆய்வுகள் தொடர்கின்றன.
கோயில் தொடர்புடைய ஆய்வுகள் வலதுபக்கம் ஐயனார், இடது பக்கம் குதிரை, மேற்கு பக்கம் ஊஞ்சல் என்று திசைகளாகப் பிரித்து ஆராய்ந்திருக்கும் நிலை. ஊர் பெயரையும், தெய்வத்தின் பெயரையும் மாற்றிவிட்டால் புதிய ஆய்வேடு உருவாகி விடும். இதுபோன்ற ஆய்வுகள் உருவாவதற்கு ஆய்வாளர்கள் மட்டுமல்ல நெறியாளர்களும் காரணம். புதிய தேடலும் தொடர்ந்த வாசிப்பும் பல நெறியாளர்களிடையே ஆய்வாளர்களிடையே இல்லை. தனக்குத் தெரிந்த, தான் ஆய்வு செய்த பரப்பிலேயே தொடர்ந்து ஆய்வாளர்களுக்கும் தலைப்பைக் கொடுத்து அவர்களை அத்தலைப்பிலேயே ஆய்வு மேற்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது. மாணவர்கள் மறுத்தால் அதைப் பல நெறியாளர்கள் காதில் வாங்கிக்கொள்வதில்லை. மாறாக, அப்படிப் புதுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அந்த ஆய்விற்கு அவர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டிய சூழலில் நெறியாளரால் மறைமுகமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் ஆய்வாளர்களும் வேறு வழியின்றி நெறியாளர் சொல்கின்ற தலைப்புகளிலேயே ஆய்வை மேற்கொள்கின்றனர்.

எதிர்கால ஆய்வுகள்
 
ஓர் சில கட்டுரைகள் கூட முனைவர் பட்ட ஆய்வாகப் புதிய நூலாக வளர்ச்சி பெறத் தூண்டுகோலாகலாம். உதாரணமாக 1919-ல் எஸ். அனவரத விநாயகம் என்னும் அறிஞர்விவேக போதினிஎன்னும் இதழில் ஓர் கட்டுரையில் தமிழ் இலக்கிய வரலாற்று நூலின் தேவை குறித்து ஆய்வு நோக்கில் கட்டுரை எழுதினார். இதைத் தொடர்ந்து 1970-ல் வ.சுப. மாணிக்கம்தமிழ் இலக்கிய வரலாறும் குறைபாடுகளும்என்ற கட்டுரை எழுத, 1987-ல் கருவை பழனிசாமிதமிழ் இலக்கிய வரலாற்றியல்என்ற மற்றொரு கட்டுரை எழுதினார். இதைத்தொடர்ந்து 1994-இல்தமிழ் இலக்கிய வரலாற்று நிலைஎன்ற ஆய்வை க. சிவகாமி மேற்கொண்டார். இதன் எதிரொலியாகக் கா. சிவத்தம்பி ‘Literary History of Tamil’ என்ற நூலை 1987-ல் வெளியிட்டார். இது 1988-ல் தமிழில் வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து  மு. வரதராசனாரிடம் தொடங்கி இன்று வரை பல நூற்றுக்கணக்கானோர் தமிழ் இலக்கிய வரலாறு நூலை எழுதியுள்ளனர். இவ்வாறு இலக்கிய வரலாற்று நூல்களின் பெருக்கத்தையும் அதன் போக்கையும் கூட ஆய்வாக மேற்கொள்ளலாம். இந்த இலக்கிய வரலாறுகளில் திரும்பத் திரும்பப் பல செய்திகள் ஒரே மாதிரியாக எல்லோராலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நவீன இலக்கியங்களைத் தொகுத்துக் கூறுவதில் தான் வேறுபடுகின்றனர். இலக்கிய வரலாறுகளில்கூட அரைத்த மாவுகள் உள்ளன. இலக்கிய வரலாறுகளைக் கூட வகைமை, பொருண்மை அடிப்படையில் ஆராயலாம். பூவண்ணன் மாறுபட்டு சிந்தித்தமையால்குழந்தை இலக்கிய வரலாறுமலர்ந்தது. தமிழ் ஆராய்ச்சி வரலாறுகள் கூடப் பலரால் எழுதப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கில் இன்னும் பல வரலாற்று நூல்கள் தோன்ற வேண்டியதும் உள்ளது.
ஓர் குறிப்பிட்ட நூலை அடிப்படையாகக் கொண்டு நிறையத் திறனாய்வுப் பார்வைகள் வந்துள்ளன. அவற்றை வரலாற்றுப் பார்வை நோக்கில் ஆராயலாம். உதாரணமாகச் சிலப்பதிகாரம் சார்ந்து வந்துள்ள திறனாய்வு நூல்களை ஆராய்ந்துசிலப்பதிகார திறனாய்வுகளின் வரலாறுஎன்று ஆய்வு மேற்கொள்ளலாம்.
நாட்டுப்புற இலக்கிய வரலாறு திறனாய்வுகள் சார்ந்து, தமிழ் இலக்கிய வடிவ வரலாறு, தமிழ் அறிவியல் இலக்கிய வரலாறு எனப் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம்.
இன்று தமிழ் ஆய்வு சமூகம், பண்பாடு தாண்டி மானிடவியல், எதிர்காலவியல், இனவரைவியல் என்று நடைபோட தொடங்கியுள்ளது.

வெளிவர வேண்டிய ஆய்வுகள்

          ஒப்பிலக்கியம் சார்ந்த ஆய்வுகள் வெகுசிலவே வந்துள்ளன. ஓர்மொழி, இருமொழி, பன்மொழி சார்ந்து ஒப்பிலக்கிய ஆய்வுகள் தமிழில் மேற்கொள்ளலாம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஒப்பிலக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னிந்திய, வட இந்திய, உலக இலக்கியங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமை வேற்றுமைகளை ஏதேனும் ஓர் பொருண்மை அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உலகப் பொதுமை என்பது பெயரளவிலேயே உள்ளது. அதைத் தாண்டி பல தனித்தன்மைகள் ஒவ்வொரு இலக்கியத்திற்கும் உள்ளது. அதை நோக்கி அந்தத் தனித்தன்மைகளை வெளிக் கொணரக் கூடிய வகையில் ஒப்பிலக்கிய ஆய்வுகள் தேவை.
பிற நாட்டார் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமாக வந்துள்ளன.
காப்பியம் தொடங்கித் தற்கால நவீன கவிதைகள் வரை பல அரிய மொழிபெயர்ப்புகள் தமிழில் விரவி கிடக்கின்றன. ஆனால் இதை வாசிப்பவர்கள் குறைவு என்றால் ஆய்வு செய்பவர்களோ மிகக் குறைவு. மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பொறுத்தளவில் ஓர் அந்நியத் தன்மையே தமிழ் இலக்கிய மாணவர்களிடம் நிலவி வருகிறது. புதியவற்றைத் தெரிந்து கொண்டு, அதை ஆய்விற்கு எடுத்துக் கொள்வதென்பது ஓர் அச்சமூட்டும் செய்தியாகவே உள்ளது. அவ்வாறின்றித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பிறமொழி இலக்கியங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். இதனால் புதிய ஆய்வுப் பார்வைகள் தோன்றும். மனதைப் போலவே ஆய்வும் விரிவடையும். சாகித்ய அகாடமியும், நேஷனல் புக் டிரஸ்டும், அல்லயன்ஸூம் தொடர்ந்து மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளது.  இதுபோல் புலம்பெயர் இலக்கியங்கள் தமிழிற்குப் புதிய வரவுகள். புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியங்களைப் பாடநூலாக வெகுசில கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வைத்துள்ளன. புலம்பெயர்ந்தவர்களின் நிலை பற்றிய ஆய்வுகள் காலத்தின் தேவையாகும். நூல்களாகவும், இணைய வாயிலாகவும் இப்படைப்புகள் எளிதில் கிடைக்கின்றன. இதுபோன்ற படைப்புகளில் ஆய்வு மேற்கொள்வதென்பது பல புதிய சொற்களைத் தமிழுக்குத் தரவாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் விரவிக் கிடக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவிமொழிஎன்ற அற்புதத்தைப் புலம்பெயர் இலக்கியங்களை ஆய்வு செய்பவர்கள் உணர்வர். புதிய மனிதர்கள், புதிய பண்பாடு, புதிய வாழ்க்கை, புதிய இடங்கள் எனத் தமிழர்களின் வாழ்க்கை திசைமாறிச் சென்றிருந்தாலும், இருத்தலியலுக்கான அவர்களின் போராட்டத்தைப் பதிவு செய்துள்ள இந்த இலக்கியங்கள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை. தமிழர்களின் உலகளாவிய நிலையை உணருவதற்கான வாய்ப்பையும், தமிழ்நாட்டிலேயே அவனின் இருத்தலியல் சிக்கல் சார்ந்த போராட்டத்திற்கான களங்களையும் புலம் பெயர் இலக்கியங்கள் எடுத்துரைக்க வல்லவை.


     விளிம்பு நிலை மக்களாக இருந்த திருநங்கைகள் தற்போது மையப்படுத்தப்பட்டு உரிமைக்குக் குரல் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. நடுநிலைப்பார்வையோடு, அவர்களைப் பற்றி வந்துள்ள நூல்களையும், அவர்களே அவர்களைப் பற்றி எழுதியுள்ள நூல்களையும் ஆராய வேண்டிய தேவை உள்ளது. தற்காலத்தில் பெருகி வரும் படைப்புகளில் அரவாணியமும் ஒன்று. உளவியல்,உடலியல், மானிடவியல், பண்பாட்டியல்,மொழியியல் நோக்கில் திருநங்கைகளின் வாழ்க்கை ஆராயப்படலாம்.

    தற்காலக் கல்வி முறை, தலைமுறை மாற்றம், உலகமயமாக்கல், நாகரிக வளர்ச்சி, உணவு மாற்றம் போன்ற பல்வேறு சமுதாயச் சிக்கல்களினாலும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. குழந்தை இலக்கியங்களின் பாடுபொருளிலும் மாற்றம் வந்துள்ள இக்காலகட்டத்தில், சிறுகதை, நாவல், கவிதை போன்ற வெகுசன இலக்கியங்களிலும் சிறுவர்களைப் பற்றிய பதிவுகள் மாறியுள்ளன. எனவே, வளர்ந்துவரும் ஆய்வுத் துறையில் சிறாரியம் பற்றிய ஆய்வுகள் எதிர்காலத் தலைமுறையினரைப் பற்றிய அறிவை, தேவைப்படும் மாற்றத்தைத் தரக்கூடும்.
வெளிநாடுகளில் சென்று தங்கிவிடும் பிள்ளைகளால் பல இல்லங்கள் முதியோர் இல்லங்களாக மாறிவிடும் அவலம் ஓர்புறம், சொந்த ஊரில் இருந்தும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடும் புறக்கணிப்பு மறுபுறம். இப்படிக் கைவிடப்படும் முதியோர்களின் நிலையும் நவீன இலக்கியங்களின் வழி ஆராயப்பட வேண்டியவையே.
மேலைநாட்டு கொள்கைகளைத் தமிழ் இலக்கியங்களில் பொருத்திப் பார்க்கும் ஆய்வுகள் பல புரிய புரிதல்களைக் கொடுக்க வாய்ப்புண்டு. பின் நவீனத்துவம் சார்ந்த இலக்கியங்களில் ஆய்வு மேற்கொள்ள வருபவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு. தமிழ் இலக்கியங்களிலேயே பல வகைமைகள் ஆராயப்படாமல் உள்ளன 
.
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. பாட்டியல் நூல்கள் குறிப்பிடுகின்ற எண்ணிக்கை அவை தோன்றிய காலத்திற்கு உரியவை. தற்போது பெருகியுள்ளவற்றில் பல புதிய சிற்றிலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. உதாரணமாகபிள்ளைத்தமிழ்போலமுதுமைத் தமிழ்சிற்றிலக்கியம் புதுவரவாகத் தோன்றியுள்ளது. போற்றிப்பாடல்களும் கூடச் சிற்றிலக்கியங்களே.  வைணவம், சைவம் சார்ந்த ஆய்வுகள் இன்று கௌமாரம், சாக்தம், காணபத்யம், இசுலாமியம், கிருத்துவம், பௌத்தம் என விரிவடைந்து வருகின்றன. இதைப் போலவே பெண்ணியம், தலித்தியம், சூழலியல், கனிணித்தமிழ், இணையத்தமிழ், எதிர்காலவியல் பற்றிய ஆய்வுகளும் பெருகிவருகின்றன. இவற்றில் கோட்பாடுகளைப் பொருத்திப் பார்க்கும் வகையிலான ஆய்வுகள் வர வேண்டும்.

தொகுப்புரை

      தமிழ்மொழி எவ்வளவு விரிந்த பரப்புடையதோ அந்த அளவிற்கு விரிந்த ஆய்வுக்களமுடையது. நெறியாளர்களும், ஆய்வாளர்களும் தங்களின் தேடலைச் சிறாரியம், முதியோரியம், அரவாணியம், புலம்பெயரியம், அறிவுத் தேற்றவியல், மொழிபெயர்ப்பிலக்கியம், பின்நவீனத்துவம் என்று விரிவடையச் செய்ய வேண்டியது தமிழ் ஆய்வுகளுக்கு மதிப்பைத் தரும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?