நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 26 December 2019

கீதாஞ்சலி



  கீதாஞ்சலி

-ஆங்கில மூலம் கவியோகி இரவீந்தரநாத் தாகூர்

-தமிழாக்கம் சி ஜெயபாரதன், கனடா


கீதாஞ்சலி – திறனாய்வு

கீதாஞ்சலி கவிதை மொழிபெயர்ப்பு என்று படித்துமுடித்த பின், மீண்டும் அட்டைப்படத்திற்கு வரும்போதுதான் தெரிகிறது.  ‘உடையும் பாண்டம்‘ என்ற கவிதை, ‘நந்தவனத்திலோர் ஆண்டி‘ என்ற சித்தர் பாடலை நினைவுப்படுத்துகிறது. பிறவிகள் தொடரும் மாய உலகத்தில் இப்பாண்டத்தின் மீதுதான் எத்தனை விருப்பு? இப்பாண்டத்தின் மீதான நிலையாமை ஒருபுறம். முதுமையில் ஆற்றல்குன்றி இறுதியில் வலிமையின் விளிம்பு தொட்டு, எனது பயணம் முடிந்ததுதான் போனதோ? என்ற ஏக்கம் ஒருபுறம். எனினும், வாழ்வதிலுள்ள ஆசை மறுபுறம். ‘புதிய கீதங்கள் பொங்கி எழுந்தன இதயத்தில்‘ என்ற வரிகள் வாழ்வின் மீதான விருப்பத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொருகணமும் வாழ்வதின் மீதான  பிடிப்பை வெளிப்படுத்துகிறது
மனிதன் வாழ்வில்தான் எத்தனை சலனங்கள்? ஏக்கங்கள்? எதிர்பார்ப்புகள்? அச்சங்கள்? நம்பிக்கைகள்? அலை எழுந்து கரையைத் தொடமுயன்று முடியாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து முயல்வதைப் போன்று ஒவ்வொரு மனிதனும்தான் வாழ்வில் எவ்வளவு முறை முயன்று தோற்கிறான். மீண்டும் முயல்கிறான். விடுகிறான். ஆனாலும், வாழ்வின் மீதான ஆசை அவனை விடுவதில்லை.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவத்திலும் மாறாமல் தொடரும் எழுதலும் விழுதலுமான தொடர் நிகழ்வை, ஒரு குழந்தையிலிருந்து தொடங்கி மரணம் வரையிலான பதிவுகளை இந்நூலும் குழந்தையிலிருந்து தொடங்கி முதிர்ச்சி நிலை வரை முடித்திருக்கிறது. இதை ஆழ்ந்து படிப்பவர்கள், ஒவ்வொரு கவிதையிலும் தன்னையே காண்பர். ஒவ்வொரு வரிகளும் வாசகனை அவனுக்கே அடையாளம்காட்டுகிறது.
 
 இசை கலக்க முடியாமல் குழம்பி கூக்குரலிடுவேன் என்ற வரிகளில் வாழ்க்கையின் கீதத்தோடு இணைந்து இசைக்கவியலாத ஒவ்வொரு மனிதனும் ஏக்கவிழிகளோடு தென்படுகிறான். இதயக் கோயிலின் உட்புறச் சன்னிதியில் நீ திருப்பீடம் அமைத்து ஆசனத்தில் இருப்பிடம் கொண்டுள்ளது நினைவில் இருப்பதால் என்ற வரிகள், “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற திருமூலரின் வரிகளை நினைபடுத்தினாலும், அப்படி உணரும் இதயம் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்பதையும் கூறுகிறது. உள்ளத்தைக் களங்கப்படுத்தும் தீவினை எல்லாம் நெஞ்சத்தை நெருங்கவிடாமல் நீக்க முயல்வதுதான் என்று உறுதிபடக் கூறுகிறார்.
நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள். குரங்கு போன்ற பக்தர் நிலையை உடையவர்தான் மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியேஎன்று பாடுவார். சிக்கென இறைவனைப் பற்றியவர்கள் இறைவனை எப்படி எளிதல் அடைவது? மாணிக்கவாசகரின் புலம்பல், தனிமை துயரம், ஏக்கம், விட்டுவிடுதலையாகிட வேணடுமென்ற விருப்பம், ஆட்கொள்ளப்பட்டு வாழவேண்டுமென்ற வேட்கை கீதாஞ்சலியிலும் காண முடிகிறது.
இறைவனிடம் ஒருவர் எப்படி உண்மையானவனாக தன்னை நிரூபிப்பது? பூசைகள் செய்தா? அபிடேகங்கள் செய்தா? பூமாலைகள் புனைந்தா? புண்ணியங்களுக்காக தான தருமங்கள் செய்தா? உடலைத் தூய்மைப்படுத்தியா? இவற்றையெல்லாம் செய்தால் நிரூபித்துவிட முடியுமா? இறைவனிடம் ஒருவன் எப்படி தன்னை நிரூபிப்பது? இதோ மிக எளிய வழியொன்றைக் காட்டுகின்றார்.
“நடத்தையின் மூலம் (ப.35) ஆம். நம் நடத்தையின் மூலம்தான் எவரிடமும் நம்மை நிரூபிக்க முடியும். நடத்தை என்பது ஒருநாள் நிகழ்வல்ல. தொடர் நிகழ்வு. தொடர்ந்து நாம் நம்மை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தால்தான் அது நம் நடத்தையாகும். நடத்தை மூலம். . .  எவ்வளவு அற்புதமான வரிகள்.
பக்தர்களை ஏணி வகை, தோணி வகை என்று இரண்டாகவும் பிரிக்கலாம். ஏணி, தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். தோணி (படகு) வகைப் பக்தர்கள் படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான் என இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று வாளாவிருப்பது. மாணிக்கவாசகர் ஏணிவகை. அப்பர்பெருமான் தோணி வகை. தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரத நாட்டின் பொது அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.
ஏணி வகை,  குரங்கு வகை பக்தி நெறியே கீதாஞ்சலியின் பக்திநிலை. மாலையில் சேராத மலர் என்ற கவிதை பூ சிறியதோ   பெரியதோ உரிய நேரத்தில் அதை பறித்து, கோர்க்காவிட்டால் அம்மலருக்கு ஓரிடம் கிடைக்காமல் போய்விடும் என்று எதையும் தள்ளிப்போடும் குணம் உள்ளவருக்கான கவிதையாக மலர்ந்துள்ளது. இன்றைய பொழுதும் எனக்குத் தெரியாமல் முடிந்து போய்விடும்என்ற ஏக்கம், மலரைப் பறித்துத் திருப்பணிக்கு அளித்திடு பொழுதின்று போவதற்குள் என்ற வேண்டுகோள் ஒவ்வொரு விநாடியையும் ஒரு மலராக்க்கண்டு, அதைச் சிதறாமல் மாலையாக்கிட வேண்டும் என்று எச்சரிக்கிறது.
 இறைவனைத் தரிசித்துவிட வேண்டுமென்ற ஏக்கமும், அவனைக் காண முடியாத தவிப்பும், இறைவன் வந்த நேரத்தில் தூங்கிவிட்டதாகக் கருதி தன் சாபக்கேடான தூக்கத்தை நினைத்தத் துக்கமும், இறைவனின் நினைவுகளினாலே இரவும் பொழுதும் ஏங்கித் தவித்த ஏமாற்றமுமாகத் தன்னுணர்வுக் கவிதைகள் நூல்கள் முழுவதும் விரவிக் கிடைக்கிறது.
விட்டு விடுதலையாகிவிட வேண்டும் இந்தச் சிட்டுக்குருவிபோல என்று பல தளைகளிலிருந்து விடுதலை பெற விரும்பினாலும், தொடர்ந்து சிறைக் கைதியாகவே வாழ்கிற வாழ்க்கை நிலையை “சிறைக்கைதி கவிதை படிமமாக்கிக் காட்டுகிறது. ஆசை என்பது நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் முறியாத கைவிலங்கு. விழிப்பு பெற்ற மனிதன் காண்பது என்ன,?
தான் கட்டிய புதையல் களஞ்சிய மாளிகை என்னும் சிறைச்சாலையிலே தானே சிக்கிக் கொண்டிருப்பதை. (63) இதை ஒவ்வொரு மனிதனும் உணரத் தலைப்பட்டால்தான் விடுதலை சாத்தியமாகும் என்கிறார்.
இறைவனாகக் காதலனைக் கண்டு தன்னைக் காதலியாகக் காணும், மாணிக்கவாசகர் தொடங்கி வைத்த நாயகன் நாயகி பாவம் கீதாஞ்சலி முழுவதும் விரவிக் கிடக்கிறது. காதலியாக இருப்பது அத்தனைச் சுகமா? ஏக்கமும் நம்பிக்கையுமாக காதல் பூரிப்போடு நடை பயில்கிறது. மாணிக்கவாசகர் காதல், ஆண்டாள் காதல், திருமங்கையாழ்வார் காதல் வரிசையில் இந்தக் காதல் எப்படிப்பட்டது தெரியுமா?,
“என்னை நான் அறிந்திடும் தன்னுணர்வு என்னை விட்டு நீங்கி
மீண்டும் அவனைச் சேர்ந்து கொள்ளட்டும் (ப.80)
சரணாகதி தத்துவத்தின் பிழிவு இவ்வரிகளில் பொதிந்துகிடைக்கிறது. ‘மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே‘ என்ற சுந்தரமூர்த்திகளின் தேவாரப் பாடல் இறைவனுக்கு அவர் அடிமையாக சரணடைந்த நிலையைக் காட்டுகிறது. 
கவிதையைக் காதலியாகக் கண்டு அதையே இறைவனுக்குக் காணிக்கையாக்குகிறார். (107).
முற்றும் துறந்த பற்றற்ற நிலைமீது எனக்குச் சற்றும் பிடிப்பில்லை! என்ற கவிதை வரிகள் வாழ்வின் மீதான விருப்பத்தையும்,அந்த விருப்பத்திற்கு மரணத்தின் மீது தடை வந்து விடுமோ என்று மரணத்தின் மீதான அச்சமுமாக பயணிக்கிறது.
இறைவன் எங்கிருக்கிறான்? ‘மெய் வருந்தி இறுகிப் போன வயலை உழவன் எங்கே உழுது கொண்டு இருக்கிறானோ, வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன் எங்கே கல்லுடைத்து வருகிறானோ, அங்கே உள்ளான் இறைவன்!‘ என்ற கவிதை எங்கெங்கே தேடி இறைவனை அடைய முடியாமல் தவிப்பவர்களைப் பார்த்து வழிகாட்டுகிறது.
எவ்விதக் குறிக்கோளுமின்றி வாழும் வாழ்க்கை பயனற்றுப்போகும் என்பதை ‘என் பணி இந்த உலகுக்கு‘ என்ற கவிதை பதிவு செய்கிறது.
வாழ்வின் விடியல் எங்கே இருக்கிறது? எங்கு தேடினால் அது கிடைக்கும்? மிக்க இடர் விளைவிக்கும் அவலம் நிறைந்த வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது? நமக்கான பாதை எது? நமக்கான விடியலைத் தரும் கதவு எது?
மாபெரும் கோட்டையை எழுப்பி பிற மனிதர்களிடமிருந்து மறைந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். மண்ணாலும் மணலாலும் கட்டிமதில்களால் துளைகளை மறைத்திட சுண்ணாம்பு பூசுகிறோம். ஏதாவது ஒரு பெயருக்குள் நுழைந்து கொள்கிறோம். ஆனால் விடுதலை அவர்களில் யாரோ ஒருவர் தர வேண்டுமென எதிர்ப்பார்த்து நம்பியிருக்கிறோம்.
ஜெயபாரதன் நச்சென இதற்கெல்லாம் பதில் கூறுகிறார். ஒளி! எங்கே உள்ளது ஒளி? ஏற்று அந்த ஒளி விளக்கை என்கிறார். ஆம் நமக்கான, பிறருக்கான ஒளியை நாம்தான் ஏற்ற வேண்டும். அதவும் எப்படிப்பட்ட ஒளிவிளக்கு? அன்பெனும் சுடர்விளக்கு! (ப.59).அதை ஏற்றி விட்டால் நன்னெறிகள் நம்மை தானாக வந்தடையும். ஆனால் உண்மை நிலை என்ன? நன்னெறி வேண்டி வரும்போது நடுங்கிடும் என் நெஞ்சு வேண்டுவதை நீ அளித்து விடுவாய் என்று‘ (ப-60) என்று துணிந்து செயல்படாமல் சோம்பலுற்று, நாமே நம் மீது மண் அள்ளிப் போட்டுக்கொண்டு தோல்விக்குள் புதைந்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு மனிதனும் தானே தனக்கு ஒரு சிறைச்சாலையைக் கட்டிக்கொள்கிறான். இதை அழகாக ‘சிறைக்கைதி‘ கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன.
குழந்தைமைப் பற்றிய கவிதைகளில் அழகு கொஞ்சிக் கிடக்கிறது.
குழந்தையின் மலர் விழிகள் மீது
தழுவுப் படியும் தூக்கம்
எங்கிருந்து வந்ததோ, (ப-99)

பாலர்கள் பலர் கூடி
ஞாலத்தின் எல்லையற்ற
கடற்கரையில் துள்ளி
விளையாட வந்துள்ளார் (ப-99)

சுவைத் திண்பண்டங்கள் உன்
ஆசைக் கரங்களில் அளிக்க வரும்போது
பூவின் கும்பாவின் தேனூறுவது
ஏனெனத் தெரிகிறது என் கண்மணி (ப-102)
இப்படி எல்லாவற்றிலும் மகிழ்ந்து உற்சாகம் பெறும் குழந்தைகளுக்குத் தடைகள் எங்கிருந்து வருகின்றன தெரியுமா?
தங்கச் சங்கிலி கழுத்தில் அணிவித்து வெளியில் விளையாடவிடாமல் தடை செய்வர். பட்டாடைக் கிழிந்திடும் என விளையாடத் தயங்கி நிற்பான் சிறுவன். புழுதிக்கறை படியும், அழுக்காகும் என விளையாட மறுத்து ஒதுங்கி செல்வான் (ப.38)
எனக் குழந்தைதையை குழந்தைமையிடமிருந்து பறிக்கும் இச்செயல்களைக் கண்டிக்கிறார். குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்கவிடாத கட்டுப்பாடுகளை நீக்கும் பொழுதே குழந்தைகள் முழுமையான வளாச்சி அடையும் என்கிறார். முற்பகுதி கவிதைகள் குழந்தைமை பற்றியும், இடைப்பகுதி கவிதைகள் வாழ்விலைப் பற்றியும், இறுதிப்பகுதி கவிதைகள் மரணத்தைப் பற்றியும் பேசுகின்றன.
மனிதனின் வாழ்வியல் எப்படியிருக்கிறது? தன் சொந்த வீடு வந்தடைய ஒவ்வோர் அன்னியன் வீட்டுக் கதவையும் ஒருவன் தட்ட வேண்டியுள்ளது (ப-43) கீதாஞ்சலியின் சிறப்பு எந்த மதத்தவரும் அவரவர் மதத்தினை அவரவர் இறைவனை நினைவுபடுத்திக் கொள்ளக்கூடிய வகையில் இறைமைத் தத்துவத்தைப் பொதுமை நிலையில் விளித்து நேரடியாகப் பேசக்கூடிய நிலையில் அமைந்து இருப்பதுதான். இந்த உலக வாழ்வை ஒரு திருவிழாவாகவே காணுகின்றார். திருவிழாவிற்கு இறைவன் அழைப்பிதழ் அனுப்பியதால் வந்ததாகவும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டநிலையில், திருவிழா விருந்தில்இன்னிசை கருவியை மீட்டும் பணி தனக்குக் கொடுக்கப்பட்டதாகவும், அப்பணி முடிவுற்ற நிலையில், புறப்படும் வேளை வந்துவிட்டதாகவும் (ப-47) குறிப்பிடுகிறார்.
ஜெயபாரதன் மூலமாகத் தாகூர் அற்புதமாக தமிழ்நாட்டில் மறுபிறவி எடுத்துள்ளார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

-           முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ்ப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி(த) சேலம் -7

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?