நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 11 November 2014

தாய்மொழி வழிக்கல்வி
தாய்மொழி வழிக்கல்வி  மனித இனத்தின் உரிமை

            ஒரு ஆயுதம் பலபேரைக் கொல்லும். ஓர் அணுகுண்டு பல ஆயிரம் பேரைக் கொல்லும். இலட்சக்கணக்கானவரை அழிக்கும். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் ஓர் இனத்தை, அதன் எதிர்காலத்தை அதன் அடையாளத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த இனம் பேசி வரும் மொழியை, அதன் தாய்மொழியை அழித்தால் போதுமானது. இன்று இலத்தீன், கிரேக்கம், சுமேரிய மொழிகளில் பேசக் கூடிய ஒரு மனிதரைக் கூடக் காண முடியவில்லை.  மாயன் நாகரிகம் மாய்ந்த நாகரிகமாகி விட்டது. அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், ஆளுமையிலும், நிலப்பரப்பிலும், சமூக பொருளாதாரத்திலும் மிகச் சிறந்திருந்த இந்த நாகரிக இனத்தைச் சேர்ந்த மக்கள் இன்று இல்லாமலே போய்விட்டார்கள். ஒரு மொழியின் அழிவு அந்த இனத்தின் அழிவுஎன்ற அறிவு இல்லாமையினால் வந்த அழிவு இது.  ஒரு மொழிதான் இனத்தின் அடையாளம். ஒரு மொழி நிலைத்திருக்க வேண்டுமெனில் மக்களின் பயன்பாடு மிக அவசியம்.
                
 இந்திய மொழிகளில் ஒன்றான இந்தி மொழி திணிப்பின்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, கலப்பு மொழிக்கு எதிராக (சமஸ்கிருதம்-தமிழ்) தூய தனித்தமிழ் இயக்கம் தோன்றி, புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி புழக்கத்தில் விட்டது.  இத்தனைக்கும் ஒரே ஒரு பாடம் தான் இந்தி மொழி திணிக்கப்பட்டது. அதற்கு மாபெரும் எதிர்ப்பு தெரிவித்த தமிழர்களின் வாரிசுகள்தான் இன்று அந்நிய மொழியான ஆங்கிலம் தவிர வேறெதுவும் தெரியாமலிருக்கிறார்கள். தமிழ் பேசத் தெரியும். படிக்கத் தெரியாது எனப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். கேரளாவில் 16ம் நுhற்றாண்டில் வந்த பாதிரியார்கள் அம்பலக்காடுஎன்ற ஊரில் அச்சிட்ட முதல் நுhலான தம்பிரான் வணக்கத்தைவெளியிட்டார்கள். அது அங்கு பேசிய மக்களின் மொழியான தமிழில்தான் வெளியிடப்பட்டது. இதிலிருந்து 16ம் நுhற்றாண்டு வரை தமிழ்தான் அங்கு பேசப்பட்டு வந்துள்ளது எனத் தெளியலாம். பின் தமிழும்-சமஸ்கிருதமும் நம்பூதிரியார்களால் கலந்து பேசப்பட்டு அரசியல் செல்வாக்கினால் உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால்மக்கள் மொழி தமிழ்தான்.  ஆங்கில பாதிரியார்கள் நம்பூதிரிகளின் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி, அம்மொழியைக் கொண்டே தம் சமயப் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
இந்த நம்பூதிரிகள் துளுவை எழுத்துமொழியாகவும், தமிழ்-சமஸ்கிருத கலப்பு மணிப் பிரவாளத்தை பேச்சு மொழியாகவும் கொண்டவர்கள். இம்மொழியைப் பின்பற்றிய பாதிரியார்கள் நடத்திய பள்ளிகளிலும், பத்திரிக்கைகளிலும் நம்பூதிரிகளின் மொழிநடையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் 18ம் நுhற்றாண்டு வரை அடித்தட்டு பாமர மக்கள்தூய தமிழையே பேச்சு வழக்கில் கையாண்டுள்ளனர். பள்ளியில் சென்று படித்தவர்கள் எண்ணிக்கை பெருகி, பத்திரிக்கை வாசிப்பும் பெருகியதால் படிப்படியாக தமிழ்மொழி கற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு மலையகத்தமிழ் மலையாளமாக மாறியது.
 இந்தி எதிர்ப்பு, தனித்தமிழ் இயக்கம் போன்றவை தமிழகத்தில் நடத்திய விழிப்புணர்வு கூட்டங்களினாலும், போராட்டங்களினாலும் தமிழ் மொழி தப்பியது. இல்லையெனில் மலையாளம் கேரளாவில் உருவானது போல்தலையாளம்தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும். ஆனால் இன்று மொழிப்போர் தியாகிகள் பற்றியும், மொழி உணர்வு குறித்தும் பேசுபவர் அருகிவிட்டதால் சமஸ்கிருதத்தின் இடத்தை ஆங்கிலம் பிடித்துக் கொண்டுவிட்டது. இப்போதுள்ளதமிழாங்கிலம்இனி தொடர்ந்தால், எதிர்காலத்தில் கேரளாவிற்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திற்கும் என மக்கள் உணர வேண்டும்.
 
          பள்ளிகளும், பத்திரிக்கைகளும் என்ற இருமுனை தாக்குதல் இன்று பள்ளிகளும் ஊடகங்களும்என்ற பல முனைத் தாக்குதலாக பரிமாணம் எடுத்துள்ளது. ஊடகம் என்பது கைபேசி, வானொலி, தொலைக்காட்சி, சினிமா, இணையம் எனப் பரந்து விரிந்துள்ளது.
1970
ல் ஆரம்பித்த ஆங்கிலவழிக்கல்வி மோகம் மக்களை ஆட்டிப் படைத்து, தாய்மொழிவழிக் கல்வியை முற்றிலும் புறக்கணிக்கும் மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. கல்வி என்பது அறிவிற்காகஎன்ற நிலை மாறி வேலைக்காகஎன்ற நிலை ஏற்பட்டது. இந்த ஆங்கில வழிக்கல்வியினால்தான் ஒரு சமுதாயத்தின் மதிப்பையே இப்பள்ளிகள் மாற்றிவிட்டன.

  தாய்மொழியான தமிழ்மொழியில் படிக்கவைத்தால்வேலை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் ஆங்கில வழிக்கல்வியைபெற்றோர் நாடக் காரணமாயுள்ளது. ஆங்கில வழி பள்ளிகளால் சேர்க்கப்படும் குழந்தை பிறந்ததுமுதல் பேசி புரிந்த மொழி தாய்மொழியான தமிழ்மொழி. ஆனால், ஆங்கில வழி பள்ளிகளில் தமிழில் பேசினால் அடி கிடைக்கிறது.

"ஆங்கிலப் பள்ளியில் அடி வாங்கும்
குழந்தை அழுகிறது
. . . .
அம்மா!""
 """"
அம்மாவென்று குரல்
ஆங்கிலக் கல்விக் கூடம்
கன்றுக் குட்டி"" (கவிஞர் கு. கணேசன்)

அன்னையை அழைத்து அழும் அந்த மழலை தாய்மொழியினால் மட்டுமே அல்லவா சிரிக்கும்? தன்னிலை மறந்து தவிப்புடன் துன்பம் சூழ்கையில் வந்து உதவக்கூடியது அம்மாஎன்ற சொல்லான தாய்மொழியல்லவா? மழலையர் பள்ளியில் ஆரம்பிக்கும் புரியாத மொழிக்கல்வியானது குழந்தைகளின் மீது திணிக்கப்படும் ஒரு சமுதாய வன்முறையாகும். இதனால் குழந்தைகளின் உள்ளமும் உணர்வும் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன. அந்நிய மொழி வகுப்பிற்குள் தொடர்ந்து தள்ளப்படும் குழந்தை வாயடைக்கப்பட்டு விடுகிறது.

       மாணவர், தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படும்போதுதான் தம் எண்ணங்களை வெளிப்படுத்தி கேள்வி கேட்பர். பிறமொழி கல்வியில் எதுவும் புரியாதபோது எப்படி கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியாததால் சிந்தனை முடக்கத்திற்கு ஆளாகின்றனர். 

      பெற்றவர்கள் குறிப்பிட்ட வகுப்பு வரை உடனிருந்து புரியவைக்க முடியும். அதுவும் பெற்றோர் கற்றவர்களாக இருந்தால் தான் இது சாத்தியம். ஆனால், பாடத்திட்டப் பெருக்கம், நேரமின்மை, தேர்வு மற்றும் மதிப்பெண் நோக்க அச்சுறுத்தல், விரைவாக முடிக்க வேண்டிய சூழல் போன்றவை ஆங்கில வழிப் பாடங்களை மாணவர்களை விழுங்க வைத்து வாந்தி எடுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாடம் புரியாத குழப்பம், மறந்துவிடும் என்ற தவிப்பு, மனப்பாடம் செய்தே ஆக வேண்டிய கொடுமை, சொந்த மண்ணிலே சொந்த மொழியிருக்கையில் அந்நிய மொழியில் வாழ்க்கையை அப்புறப்படுத்தும் நீர்க்குமிழியான படிப்பு,
அந்நியமொழி படித்து அந்நியமாகிற சூழல் போன்றவை இன்றைய மாணவர்களுக்கு நேர்ந்துள்ளன. சிந்திக்க வைக்காத கல்வியை சமுதாயத்திற்குக் கொடுப்பது கூட ஒருவகையில் மனித உரிமை மீறல்தான். இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.கே. நாராயணன், ‘இந்தியக் கல்வியின் பெரும் சோகம் புரியாமை என்னும் சாபக்கேடுஎன்றார்.
         
ஆங்கில வழியில் படித்த அத்தனைபேரும் விஞ்ஞானியாகி விட்டார்களா? வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்களா? ஆங்கில வழி படித்தவர்கள்தான் இந்தியாவில் மிகப்பெரிய பதவிகளில் உள்ளனரா? ஆங்கிலவழிக்கல்வி படித்தால் உறுதியாக வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதா? பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் எல்லாம் அந்நிய மொழி பயின்றவர்கள் தானா? என்று சிந்தித்துப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். பெற்றோர் ஆங்கில வழிக்கல்வி சிறந்தது என நினைப்பதற்கு ஆங்கிலவழிப் பள்ளிகளின் கட்டட அமைப்பு, பாடத்திட்டம், ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை, தரமான கல்வி போன்றவையாகும்.
    தமிழ்வழிக்கல்வி கொடுக்கும் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இருந்தும் மேற்கூறிய வசதிகளும், தரமும் இருப்பதில்லை. கியூபா என்ற நாடு கல்விக்காக 18ரூ நிதியை ஒதுக்கி இலவச தரமான தாய்மொழிவழிக்கல்வியை வழங்குகிறது. இன்றைக்கு உலகின் மிகச்சிறந்த மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலவழிக்கல்வி திட்டத்தில் பயின்ற ஒரு மருத்துவரோ, பொறியியலாளரோ தங்கள் மக்களிடம் தமது துறை தொடர்பாக தமது மொழியில் தெளிவாக எதையும் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தை நீக்கிவிட்டு பேசுங்கள் என்றால் அவர்களை பேசுவதையே மறந்துவிடுவார்கள். அவர்கள் மீது தவறில்லை. அனைத்து  துறையினரும் இன்றே இவ்வாறே உள்ளனர்.
தாய்மொழிவழிக்கல்வி கொடுக்கும் அரசு நிறுவனங்கள் கட்டிடங்கள், தரமான ஆசிரியர்கள், பாடத்திட்டம், புதுமைக்கல்வி, வகுப்புச் சூழல், 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், ஆங்கிலப் புலமையையும் மேம்படுத்தும் கல்விமுறை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த தமிழ்வழிக்கல்வியைத் தரப்படுத்தாமல், ஆங்கிலவழிக்கல்விக் கூடங்களைப் பெருக காரணமாகியுள்ளது. இதனால் தெருத் தெருவாக ஆட்டுத்தொழுவமும், மாட்டுத்தொழுவமும் கூட ஆங்கிலப் பள்ளிகளாக பெருகிப் போயுள்ளன.


 கல்வியின் மூலம் ஒரு சக்திவாய்ந்த சமுதாயத்தை உருவாக்கிட முடியும். ஓர் அரசானது தாய்மொழி வழிக்கல்வி மூலம் தான் சிறந்த மக்களை உருவாக்கிட முடியும். இதில் பள்ளிகளோ, பெற்றோரோ தலையிடுவதற்கு உரிமையற்றவர்கள். கல்வி என்பது அவரவர் உரிமை என்றால் பெற்றோர்கள் எந்த மொழியில் படிக்க வைக்க விரும்புகிறார்களோ அந்த நாட்டிற்கே தங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கட்டும். அதுபோல் பள்ளிகளும் எந்த மொழியில் பள்ளியை நடத்த வேண்டும் என்றும் கூற உரிமையற்றவை. அவை ஆங்கிலவழிக்கல்விதான் மக்களின் உரிமை, பள்ளிகளின் உரிமை என்று கருதினால் அம்மொழிபேசும் மக்களுக்குச் சென்று பள்ளிகளை நடத்தட்டும். ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ சென்று பள்ளிகளை நடத்தட்டும். ஆங்கிலவழிக்கல்வியை விரும்பும் பெற்றோர் அமெரிக்கா அனுப்பி படிக்க வைக்கட்டும். சுயநலத்தின் அடிப்படையில் மொழி உணர்வு, இன உணர்வும் இல்லாதவர்கள் போடும் வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளிவிட வேண்டும்.

            1994ல் கர்நாடக அரசு தாய்மொழிவழிக்கல்விகற்பிக்கப்படவேண்டும் என்ற சட்டத்தை உச்சநீதிமன்றம் தலையிட்டு இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைக்கும் முரணானது. பிள்ளைகள் எந்த மொழியில் படிக்க வேண்டும் என முடிவெடுப்பது பெற்றோர்களின் உரிமை என தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டிலும் இதே நிலைதான்.

           ஒவ்வொரு மாநில அரசும் இதுபோன்ற தாய்மொழிவழிக்கல்வி குறித்த மாநிலங்களின் சட்டத்தில் மத்திய அரசோ, நீதிமன்றங்களோ தலையிடக்கூடாது என முதலில் சட்டம் இயற்ற வேண்டும். தாய்மொழிவழிக்கல்வி என்பது ஒவ்வொரு மாநில அரசின், மக்களின் அடிப்படை உரிமையாகும். மொழியைப் புறக்கணித்து எந்த இனமும் வாழ்ந்துவிட முடியாது. தாய்மொழிவழிக்கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாமல் இருக்கலாம். கல்வியாளர்களும், மனவியல் நிபுணர்களும் கூறுவதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படும்போது மக்கள் தலையிடக்கூடாது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, சப்பான், கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழிவழிக்கல்வி கற்பிக்கப்படுகிறது என்பதை எத்தனை பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள்?


இலங்கையில் தமிழ்வழிக்கல்வி குறித்து ஆராயச்சென்ற பேராசிரியர் தி.முருகரத்தனம் அவர்கள்(மேனாள்தமிழ்ப்பேராசிரியர்- மதுரைப் பல்கலைக்கழகம்), 1982 ஆம் ஆண்டு இலங்கை சென்றபோது, கட்டாய தாய்மொழிவழிக் கல்வியால் இலங்கையில் கலைச்சொற்பட்டியல்கள் பல துறைகளுக்குஆக்கப்பட்டுள்ளன என்கிறார்.. ((தமிழர் வாழும் அண்ட நாடுகளில் தமிழ்க்கல்வி என்ற நூலை எழுதியுள்ளார்.இது தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது)அங்கு சிங்களமும் தமிழும் பயிற்றுமொழிகளாகும். அவர்களின் மொழிபெயர்ப்பு அனுபவம் தமிழகத்திற்குப் பயன்படும் என்கிறார். THE WONFER THAT WAS INDIA(BYA.L BASHAM), AHISTORY OF SOUTH INDIA (BY. NEELAKANTA SASTRI)போன்றோருடைய நூல்கள் இலங்கையில் சிறப்பாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆங்கில மாயை மக்களைப் பற்றியிருக்கிறது. அதை கல்வி வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


       மக்களின் நோக்கம் வேலைவாய்ப்பு நோக்கில்தான் உள்ளது. கல்வி அறிவிற்காகஎன்ற நோக்கிலான கல்வியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இக்கல்வியே மக்களை சிந்திக்கத் தூண்டுகிறது. எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லையெனில், புதிதாகச் சிந்தித்து புதுப்பாதையில் பயணிக்க அறிவின் தேடலே உகந்தது என்றும் மக்கள் பண்பட்டவர்களாக, ஆக்கப்பூர்வமானவர்களாக, நேர்வழிச் செல்பவர்களாக இருக்க வேண்டும் என விரும்பும் அரசு தரமான தமிழ்வழிக்கல்வியை அதற்கான சூழலை உருவாக்கியும் தரவேண்டும்.

 ""அமெரிக்கா போவதுதான் உச்சமாய்.
அதுதான் இலட்சியமாய்.
அதனால் அடங்கிப் போகிறதா
தாய்மொழிக்கல்வி"" (மன்னை செந்தில்)
 
     ஆங்கில வழிப் பள்ளிகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக, தரமான தமிழ்வழிப் பள்ளிகளையும் நடத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் உரிமம் இரத்து என்ற சட்டத்தை இயற்ற வேண்டும். அரசும் அரசு தமிழ்வழிப் பள்ளிகளை தரப்படுத்த வேண்டும். இந்நிலை நீடித்தால் சிந்தனை முடக்கத்திலிருந்து இச்சமுதாய மழலைகள் விடுபடுவர். +2 வரை தமிழ் மொழியில் 85ரூ பெற்று படித்து உயர்கல்வியின் போது தற்கொலை செய்துகொண்ட விதுஎன்ற மாணவன் ஆங்கில வழிக்கல்வி புரியாத காரணத்தால்தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்திருக்கிறான்.
தமிழ்நாட்டில் உணர்கல்வி வரை தமிழில் பயிற்றுவிக்கப்படாததற்கு யார் காரணம்?

""தாய்மொழி என்பது தாயின் மொழி-அது
 
தாயும் நீயும் பேசும் மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்
ஆன்மா உணர்மொழி அந்த மொழி""
. . . . . .
தேனாய் இனித்திடக் கேட்ட மொழி  உன்
சிந்தையில் விதைகள் போட்ட மொழி
. . . . . .
உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி-உன்
உள்ளமும் உணர்வும் புரிந்த மொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்த மொழி-அது
இறைவன் உனக்கென வரைந்த மொழி""
என்று தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்பினை மறைந்த மலேசியக் கவிஞர் சி.செ. சீனிநைனா முகம்மது பாடிச் சென்றுள்ளார். சிந்தையில் விதைகளை விதைக்கும் மொழி, எண்ணியல் மின்னியல் எதையும் பயின்றிடச் சிறந்த மொழி தாய்மொழியன்றி வேறொன்றில்லை என மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டும்ஔவையாரின் அறிவு தாய்வழிக்கல்வியினால் விளைந்தது அன்றோ? சித்த மருத்துவமே சிறந்த மருத்துவம் என்று உலகம் போற்ற தமிழரை தமிழ்வழிக்கல்வியைப் புறக்கணிப்பதுபோல் அதையும் புறக்கணித்து சர்க்கரை நோயினால் மடிந்து வருகின்றார்கள்.


""அறிவியலை அணைப்பதில்
பொறியியலை புரியவைப்பதில்
அணுவியல் . . . . ஆற்றலியல் மின்னறிவியலில்
தொடர்பு சாதன கல்வியால் . . . தொடர்பில்லாமல்
சிறிது தடுமாறுகிறது எம் தாய்மொழிவழிக்கல்வி""
என்கிறார்  மன்னை செந்தில்.

      தமிழர்களே தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று கேட்கிறார்கள். தமிழ்ச்சோறு போடுமா என்று கேட்கிறார்கள். இவர்களுக்குப் பதிலடி கொடுக்கிறார் மலேசிய கவிஞர் பொன்முடி அவர்கள்.
               
தமிழ்மொழியால் தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும், தமிழனைத் தலையெடுக்க விடாமல் தமிழ்தான் செய்து விட்டதாகவும் கருதுவதால் தான் தாய்மொழிவழிக்கல்வியைப் புறக்கணிக்கின்றனர் எனக் கருதுகின்ற கவிஞர்,
""
எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையல் கறியுடன் ஊட்டுகின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
மொழியில் பழியை ஏற்றுவதில்லை""
எனச் சாடுகிறார்.
          தமிழர் தமிழைப் புறக்கணித்தால் எதிர்காலத்தில் தமிழர்க்கு இருப்பதற்குக் கூட ஒரு நாடு இருக்காது என்பதை புரிந்து செயல்பட வேண்டும். ஒருசில தலைமுறைகள் செய்கின்ற தவறுகள் ஒட்டுமொத்த இனத்தின் உரிமைக்கே சாவுமணியடித்து விடுகின்றன. தமிழினத்தின் எதிர்காலமே தாய்மொழிவழிக்கல்வியால் தான் சிறந்து உள்ளது. தமிழ் என்றைக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததில்லை. தாய்மொழி எனப்படுவது ஐம்புலன்களினாலும் உணரக்கூடிய, உணர்வுகளோடு ஊறிய சிந்திக்கத் தூண்டும் மொழியாகும்.
 
           தாய்மொழியை சிந்தனை மொழி என்றே கூறலாம்.
சிந்திக்கின்ற மொழியால் பயிற்றுவிக்கப்படும் கல்வி, எண்ணங்களை மேம்படுத்தி, நுணுக்கங்களைப் புரிய வைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. இலத்தின் மொழிக்கெதிராகப் போராடிய ஆங்கிலம் 18ம் நுhற்றாண்டிற்குப் பின் அங்கீகரிக்கப்பட்டு, தாய்மொழியாக ஐரோப்பியர்களில் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதுவரை இலத்தின் மொழியில்தான் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஆனால், தாய்மொழியான ஆங்கில வழியாகவே கற்றுக் கொடுக்கப்படலாம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர்தான் ஐரோப்பா பல அறிவியல் அறிஞர்களை, கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தந்தது. இன்றைக்கு அந்த ஆங்கிலத்திற்கு எதிராகத் தமிழினமே போராட வேண்டிய சூழல் உள்ளது. தாய்மொழி உரிமை-தமிழ்மொழி உரிமை தமிழ் இனத்தின் உரிமையாகும். மழலைப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டுமென்பது மனித இனத்தின் முதல் உரிமையாகும்.
மகாகவி பாரதியார் தனது சுய சரிதையில் அன்றைய ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறை பற்றி (மெக்காலே கல்வித் திட்டம்) மனம் நொந்து கூறிய வார்த்தைகள் இவை. “நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன் நேருமாறெனை எந்தை பணித்தனன், புல்லை யுண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம் நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை நாடுவிப்பது போலவும், எந்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை நரியுயிர்ச்சிறு சேவகர், தாதர்கள், நாயெனத்திரி யொற்றர் உணவினைப் பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும் பேடியர், பிறர்க்கிச்சகம் பேசுவோர் கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங் கலை பயில்கென என்னை விடுத்தனன், அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ? கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார், அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார், வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்; வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார் துணியுமாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லுவா ரெட்டுணைப் பயன் கண்டிலார். கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும், உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும், நம்பருந்திறலோடொரு பாணினி ஞால மீதில் இலக்கணங் கண்டதும், இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும், தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும், பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும், பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும், வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்; முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள். என்ன கூறி மற்றெங்ஙனுணர்த்துவேன் இங்கிவர்க் கெனது உள்ளம் எரிவதே. சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்தெனக்கு நலம் செயல் நாடியே ஏதிலார் தரும் கல்விப் படுகுழி ஏறி உய்தற் கரிய கொடும் பிலம் தீதியன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும் வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன். ஐயரென்றும் துரையென்றும் மற்றெனக்கு ஆங்கிலக்கலை என்றொன் றுணர்த்திய பொய்யருக்கிது கூறுவன் கேட்பீரேல்; பொழுதெலாம் உங்கள் பாடத்தில் போக்கிநான் மெய்யயர்ந்து விழி குழிவெய்திட, வீறிழந்தென துள்ளம் நொய்தாகிட ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கியென் அறிவு வாரித் துரும்பென் றலைந்தலால். செலவு தந்தைக்கோர் ஆயிரஞ் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன நலமோர் எட்டுணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்! சில முன்செய் நல்வினைப் பயனாலும், நந்தேவி பாரதத் தன்னை அருளினும் அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாதொருவாறு பிழைத்ததே!

Make Money at : http://bit.ly/copy_win


பாரதியின் கருத்து.............
Image result for பாரதியார்
மகாகவி பாரதியார் தனது சுய சரிதையில் அன்றைய ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறை பற்றி (மெக்காலே கல்வித் திட்டம்) மனம் நொந்து கூறிய வார்த்தைகள் இவை.

அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ?
கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்,
பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்,
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்,
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
 துணியுமாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லுவா ரெட்டுணைப் பயன் கண்டிலார்.

கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளிதாசன் கவிதை புனைந்ததும்,
 உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்பருந்திறலோடொரு பாணினி
ஞால மீதில்இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
 இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
 பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்
 பிழைபடாது புவித்தலம் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்,
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்,
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்,
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்.
என்ன கூறி மற்றெங்ஙனுணர்த்துவேன்
இங்கிவர்க் கெனது உள்ளம் எரிவதே.

பாரதியின் கருத்து இதுதான்............
ஆங்கிலக் கல்வியுள் என்னை வீழ்த்திய பொய்யர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். அந்தப் பாடங்களைப் பொழுதெல்லாம் படித்து, உடல் அயர்ந்து, கண்கள் கருவட்டமிட்டு குழிவிழுந்து, என் சக்தியையெல்லாம் இழந்து, மனம் நொந்துபோய், என் சுதந்திரத்தை இழந்து, மனதில் பயம் மிகுந்து, அறிவு தெளிவற்று உடல் துரும்பாய் மாறி அலைந்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? என் தந்தைக்கு செலவு ரூபாய் ஆயிரம் ஆயிற்று. எனக்கோ தீமைகள் பல்லாயிரம் சேர்ந்தன. நல்ல பலன் என்பது எள்ளளவுகூட கிடைக்கவில்லை. இதை இங்கு மட்டுமல்ல நாற்பதாயிரம் கோயிலில் வந்து சத்தியம் செய்து சொல்லுவேன். .................................
தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்.