தமிழ்ப் பண்பாட்டு நோக்கில்
காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.
உலகப் பொதுமறையான திருக்குறள், மனிதப்
பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்கிறது. அந்த இலக்கணத்துக்கு ஏற்ப அமைந்திருப்பதே
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் கம்பரின் இராமாயணமும். வள்ளுவர் வகுத்த லட்சியக்
கனவின் இலக்கிய வடிவமே இவ்விருநூல்களும்.
இந்த காப்பியங்கள் தமிழர்கள் தங்களின் வாழ்வியல், பண்பாடு குறித்து அறிந்து கொள்ள ஆதாரமாக
விளங்குகின்றன.
மன்னர்களின் இடையறாத பூசல்கள், சமயங்களுக்கு
இடையிலான மோதல்கள் நிகழ்ந்த காலத்தில், தமிழ்ச்
சமுதாயத்திலும், இந்தியச்
சமுதாயத்திலும் ஒற்றுமை, ஒருமைப்பாடு
தேவை என்பதை வலியுறுத்தவே இவை எழுதப்பட்டன.
பிற்காலத்தில் சமயப் பூசல்கள் அதிகரிக்கக் கூடும் என்ற தொலைநோக்குப்
பார்வையுடன், அவற்றுக்குத்
தீர்வு காணும் விதமாக ஒரு தமிழ்த் தேசிய தெய்வத்தை உருவாக்க வேண்டும் என்ற
நோக்குடன் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளும், இந்தியத்
தேசியத் தெய்வத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன் இராமவதாரத்தை கம்பரும்
இயற்றியுள்ளனர்.
இலக்கு என்பது இயன்றது. இது வாழ்க்கையின் இலக்கை அல்லது கலைகளின் இலக்கைக்
குறிப்பதாக அமையும் இயல்புகளை உணர்த்துவது. காப்பு என்பது பாதுகாப்பு என்ற
பொருளோடு ஒத்தது. அதாவது மொழியின் காப்பு எனப்படுவதும், அதனை இயம்புவதும் காப்பியமாகும். காப்பியம் என்ற சொல், காப்பியங்கள் தோன்றிய அக்காலக்கட்டத்தில்
இல்லாத போதும், காப்பியம்
என்பதன் பொருண்மை புலப்படுத்தப்பட்டிருப்பதை அக்கால இலக்கண இலக்கியங்களே உணர்த்தியுள்ளன. தொல்காப்பியம்
கூறும் வனப்பில், தொல் என்பது காப்பியம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அடியார்க்கு நல்லார்
காப்பியத்தைத் தொடர் நிலை செய்யுள் என்கிறார். தண்டியலங்காரம் காப்பியத்தை பாவிகம்
எனக் குறிக்கிறது. இங்கு பழம்பெரும் இலக்கிய வகைமையைச் சார்ந்த காப்பியம், தொன்மையோடு சேர்த்து தொல்காப்பியம் என்று
பெயர் திரிபடைவதும் கவனிக்கத்தக்கது. இதில்,
தொல் என்பது தொன்மை என்றும்; காப்பு
என்பது காத்தல் என்றும்; இயம்
என்பது சொல்லுதல் என்றும் பொருள்பட
அமைவதால், பழமையான
செய்திகளைக் காத்து வைத்திருந்து சொல்லும் இலக்கியம் காப்பியமாகும்.
காப்பியத் தோற்றம்
தனிநிலை செய்யுளிலிருந்து தொடர்நிலைச் செய்யுளுக்கு மாற்றமடைந்த அல்லது வளர்ச்சியடைந்த
இலக்கியங்கள் காப்பியங்களாகின்றன. இவை அதன் பாடுபொருக்கேற்ப பெருங்காப்பியங்கள்; சிறுங்காப்பியங்கள் என வகைப்படுகின்றன.
திருமா உண்ணி’ யாக நற்றிணை
216-ல் கண்ணகி வருகிறாள். அவ்வகையில் சிலப்பதிகாரக் கதை சங்க இலக்கியத்தில் முன்பே
சொல்லப்பட்டு உள்ளது. அதை இளங்கோவடிகள் கிளைக் கதைகள், மாந்தர் வளர்ச்சி,எண் வகைச் சுவைகள் சேர்த்து
பெருங்காப்பியமாக மாற்றியுள்ளார்.
அதுபோல் இராமன் தொடர்பாக, சங்கப்
புலவர்கள் இருவர் இவ்வாறு கூறுகின்றனர்.
ஒருவர் ஊன்பொதி பசுங்குடையார். அவர்,
""""கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே"" (புறம். 378) என்ற பாடலில் ஒரு
காட்சியைக் கூறுகிறார்.
இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன
சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின் , சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், எந்த
நகையை எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்று தெரியாததால் வெவ்வேறு இடங்களில் தாறு
மாறாக அணிந்து கண்டவர் நகைப்பிற்கு ஆளாயின. அது போல மன்னர் அளித்த அணிகலன்களை
அணியத் தெரியாமல் தன் சுற்றமும் அணிந்து கண்டவர் நகைப்பிற்கு ஆளாயினர் என்கிறார்.
மற்றொருவர், மதுரைத் தமிழ்
கூத்தனார் கடுவன் மள்ளனார்,
""""விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போலஒலி அவிந்தன்று, இவ்
அழுங்கல் ஊரே."""" (அகம் 70)
பாண்டிய மன்னரின் மிகுந்த பழமை உடைய திருவணைக்கரையின் அருகில், ஒலிக்கும் பெரிய கடல் துறையில், பறவைகள் ஆரவாரம் செய்தன. திருவணைக்கரை
தனுஷ்கோடி என்று தற்போது அழைக்கப்படுகிறது. வானரங்களுடன் போர் திட்டத்தை
வகுப்பதற்காக இராமன் அங்கே வந்தான். அப்போது ஆல மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கை
அசைத்து பேசாதே என்று இராமன் சைகை செய்தவுடன் பறவைகள் பேசாமல் இருந்தன. அதே போல
இவ்வூரும் ஆரவாரம் அடங்கி அமைதியாகி விட்டது.
இவ்வாறு சங்க இலக்கியத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருந்த இராமன் கதையை கம்பர் வாழ்த்து, வணக்கம், வரும் பொருள் என்ற மூன்று மங்கலங்களோடு நான்கு வகை
உறுதிப்பொருட்களோடு தனக்கு ஒப்பான தன்னிகரற்ற தலைவனைக் கொண்டு, அவனது மணம் முடிப்பு; மண வாழ்க்கை; துன்பம்; இன்பம்; விளையாட்டு; வினைப்பயன் என எண்வகை சுவையையும்
சேர்த்து நிலைப்பெற்ற காவியக் கதையின்
தொடர்ச்சியும் அதனூடான கிளைக்கதைகள் ஆகியனவும் இணைத்து பெருங்காப்பியமாக
அமைத்துள்ளார். பக்தி இயக்கக் காலத்தில் இயற்றப்பட்ட ஆழ்வார் பாடல்களும் கம்பருக்குக்
கை கொடுத்துள்ளன.
எனினும், சங்க
இலக்கியத்தைப் பொறுத்தளவில் திருமால் கதைகளும் கிருஷ்ணன் கதைகளும் அதிக அளவில்
சொல்லப்பட்டதுபோல் இராமன் கதை சொல்லப்படவில்லை. சிலப்பதிகாரக் கதைக்கும் கண்ணன்
கதைக்கும் தொடர்பிருப்பதாக இராகவையங்கார் கூறியிருப்பதனடிப்படையில் நா.கண்ணன் அவர்கள் """"சிலப்பதிகாரம் இயற்றிய
சேரகுலதிலகர் இளங்கோ அடிகள் கண்ணகியை இலக்குமியின் வடிவமாகப் பிறந்தவள் என்றும், அவள் கணவனுக்குக் கண்ணபிரான் பெயராகிய
கோவலன் என்று சூட்டித் தன் ஒப்பற்ற முத்தமிழ்க் காப்பியத்தைச் செய்து தமிழர்க்கு
வழங்கியுள்ளார். இளங்கோ அடிகளின் ஆதி காப்பியத்தில் ஏனைத் தெய்வங்களைவிட
கண்ணகிக்கும் இலக்குமிக்குமான ஒப்பீடுகளே மிகுதியாக உள்ளன.""என்றும்
கூறுகிறார். (எயடயஎர.உடிஅ நா. கணேசன்) .
கண்ணனைக் கோவலனாகவும், கண்ணகியை இலக்குமியாகவும் கொண்டு, சிலம்பு கதையை மறு உருவாக்கமாகக் காணும்
போக்கு ஆய்விற்குரியது என்றாலும், இவ்விரண்டு
காப்பியங்களும் இயற்றப்பட்ட நோக்கம் ஒற்றுமையுடையதாக உள்ளது.
தமிழின் முதல் முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் இயற்றப்படாமல்
இருந்திருந்தால் தமிழர்களுக்கு இயல், இசை, நாடகம் குறித்து தெரியாமலேயே போயிருக்கக்
கூடும். மேலும், உலகம்
முழுவதிலும் உள்ள மொழிகளில் தோன்றியுள்ள காப்பியங்கள் அனைத்துமே முடி மன்னர்களின்
காப்பியங்களாகவே உள்ளன. ஆனால், முதன்
முதலில் தோன்றிய குடிமக்கள் காப்பியம் இது மட்டுமே.தமிழ் இலக்கிய வாழ்வின்
திருப்புமுனையான இந்த நூல், அனைத்து
மதங்களையும் ஒன்றுபோல் பாவிக்கிறது. இந்த நூலின் கதை மாந்தர்கள் அனைவரும்
பிற்காலத்தில் ஒவ்வொரு மதத்தைச் சரணடைகின்றனர். கதையின் நாயகியான கண்ணகியை கற்பு
தெய்வமாக, தமிழ்த் தேசியத்
தெய்வமாக இளங்கோவடிகள் உருவாக்கியதன் நோக்கம்,
மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே. எனவேதான் சேர, சோழ,
பாண்டியர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடனேயே காப்பியத்தின் 3 காண்டங்களுக்கும்
மூவேந்தர்களின் தலைநகரங்களின் பெயர்களான புகார், மதுரை, வஞ்சி
எனப் பெயரிட்டுள்ளார். தமிழர் ஒற்றுமையின் நோக்கம், அடையாளம்தான் கண்ணகி கதை. இன்றையத் தமிழர்களை
ஒற்றுமைப்படுத்த முயற்சிக்கும் முன்மாதிரி காப்பியமான சிலப்பதிகாரமே எனலாம்.
இது போல் இந்திய மக்களின்
ஒற்றுமையின் நோக்கம், அடையாளம்தான்
இராமன் கதை. இந்து மதச் சிறப்பையும், அதன்
வரலாறையும் விளக்கும் களஞ்சியமாகவும், புரட்சி
மிகுந்த அரசியலையும், பெண்மையின்
புகழைப் பாடும் மேன்மையான நூலாகவும் படைக்கப்பட்டுள்ள இராமாணத்தின் தாக்கம், இந்திய இலக்கிய வாழ்வில் ஆழமான பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளது. எனினும் தமிழ்ப்பண்பாட்டிலிருந்து நழுவாமல், தமிழ் மரபையொட்டி க்காப்பியத்தை
அமைத்துள்ளார். இராமன் சீதை களவு மணம், கைக்கிளைப் படலம் முதலானவை சில
சான்றுகள்.
காவிய முதன்மை மாந்தர்கள் வருணனையில்
இளங்கோவும் கம்பனும்....
கற்புக்கரசியான கண்ணகியை இளங்கோவடிகள் சிறிது சிறிதாக தெய்வ நிலைக்கு
உயர்த்துகிறார். தேவந்தியிடம் ‘பீடன்று‘ என மறுக்கும் நிலையிலும், கோவலனை இகழாமல், அந்தணரோம்பல் முதலான இல்லறக்கடமையை
முதன்மைப்படுத்தும் நிலையிலும் இது வெளிப்படுறது. அதுபோல் மனிதப் பிறவியாக பிறந்த
இராமனும் கம்பரால் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகிறான். இராமனைக் காண வருகிற
பரதனும் சுக்கிரீவனும் நடந்து வந்து இராமனைக் கண்டதாக கம்பர் படைக்கின்றார்.
வால்மீகியில் இருவரும் பல்லக்கில் வந்து இராமனைக் காண்கின்றனர்.
கண்ணகியைப் பார்த்து, ‘கற்புக்கடம்
பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்‘ என்கிறார் கவுந்தியடிகள்(அடைக்கலக்காதை).
கவுந்தியடிகள் ஒரு துறவி. சமணச் சமயத்தில், ஒரு பெண்
ஆணாக பிறந்த பின்புதான் முழுமையடைகிறாள் என்ற வழக்கமிருக்க, சமணத் துறவியான கவுந்தியடிகள் கண்ணகியின்
கற்பைப் புகழ்ந்து பேசுவதாக அமைத்திருப்பது சிறப்பிற்குரியது.
சீதையைப் பற்றி, உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் குறிப்பிடுகிறான். அனுமன் உயர்ந்த
ஒழுக்கசீலமுள்ள பாத்திரம். தான் தெய்வமாக வணங்கும் இராமனின் துணையைக் காணுகையில்
இவ்வாறு குறிப்பிடுகிறான்.
இரு காப்பியங்களிலும் பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல்
என்ற நாகரீக மரபு இடம்பெற்றுள்ளன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சார்ந்தது அல்ல
என்பதை விளக்குவனவாகவும் உள்ளன. சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில்
இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் தமிழ்ப் பண்பாடு மிக்க உயர்
பாத்திரங்களாக படைக்க படைப்பாளர்கள் உறுதி கொண்டுள்ளனர். இதைக் படிக்கும் அனைவர்
உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம்
தெரியவேண்டும் என்றுநோக்கில் காப்பிய
இளங்கோவும் காவிய கம்பனும் எண்ணியுள்ளனர்.
கண்ணகியும்,கம்பன் காட்டும்
சீதையும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகின்றனர்.
குலப்பெருமைக் காத்து நிற்கின்றனர். கணவனோடு உடன் செல்கின்றனர். உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று
சீதைக்குக் கூறுவது கண்ணகிக்கும் பொருந்துகிறது. திருவள்ளுவரின் பிறன் மனை நயத்தல்
தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலகாமல், பெண்ணின் நிறை காக்கும் காப்பே காப்பு எனப் பெண்ணை அவளின்
குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இரு காவியத்திற்குள்ளும்
இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவரின் கோணத்திலிருந்து காணும்போது, அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம்
சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது
மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை எடுத்துக்காட்டுவதாக
உள்ளது.
ஆண்களின் கற்பு
கண்ணகி, ஏழு கற்புடை
மகளிரைப் பற்றி குறிப்பிடுகிறாள். ஆனால், மனைவியின்
பிரிவில், அவளையே நினைந்து
உருகி, அவளுக்காகவே
கரைந்துபோன கற்பார்ந்த ஆண்கள் பட்டியலை இளங்கோ அடிகளால் வெளிப்படுத்த முடியவில்லை.
மாறாக கணிகையிடம் சென்றவனின் நிலை என்னாகும் என்பதை கோவலன் வாயிலாகக் காட்டி
எச்சரிக்கிறார். பெண் மட்டும் கற்போடு இருந்தால் போதாது. இருவர் இணைந்து வாழும்
இல்லற வாழ்வில் ஆண் கற்பு தவறி நடந்தாலும் மாபெரும் இழப்பு வரும் என்பதைக்
கட்டுகிறார். இளங்கோவடிகள் கோவலனிடம் பல நற்பண்புகள் இருந்தாலும் அவையெல்லாம்
அவனைக் காக்கவில்லை என்கிறார். கணிகையின் பொருட்டு அவன் மனைவியைப் பிரிந்ததினால்
கண்ணகி வாழ்வில் ஏற்பட்ட போராட்டத்தைத் துன்பத்தை எடுத்துரைத்துள்ளார். கோவலன் மாதவியுடன்
மட்டுமே உறவு கொண்டிருந்தான். எனினும் அதுவும் கற்பிற்கு இழுக்கே என்பதால் அவன்
வாழ்க்கையை அவலத்தில் முடிக்கிறார். பிறனில் விழைந்தால், வரைவின் மகளிரை நாடினால் இதுதான் கதி
என்பதை இதன் மூலம் இளங்கோவடிகள் வலியுறுத்தியுள்ளார்.
வள்ளுவரின் வழி நின்ற கம்பரும், தன்
நூலில் மருத நிலத்தையும், மக்கள் வாழ்க்கை முறையையும் 14
பாடல்களில் விரிவாக விளக்கும்பொழுது , மறந்தும்
மருதத் தினைக்குரிய பரத்தையர் பற்றி கூறுவதில்லை. ஆண் கற்பை வலியுறுத்தவே, அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்ந்த
தசரதனுக்கு மகனாகப் பிறந்த ராமன், ஒருத்திக்கு
ஒருவனாக வாழ்ந்த சிறப்பை போற்றும் விதமாக அவனைத் தெய்வமாகக் காட்டுகின்றார்.
சீதையோடு அவன் வாழ்ந்த நாட்கள் மிகச் சொற்பமே.
எனினும் அவன் பிறன் மனை நயவாதவனாக, வரைவின்
மகளிரை நாடாதவனாக வாழ்ந்து காட்டுகிறான். எனவேதான் தெய்வமாகப் போற்றப்படுகிறான்
என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கிளைக் கதைகளில் தமிழ்ப் பண்பாடு
காப்பியங்களிலும் சரி, தற்காலப்
படைப்புகளிலும் சரி, அதில்வரும் கதைச்சொல்லி எப்பொழுதும் ஒரு
கதைக் குரலாக மட்டுமின்றி, பல
கதைகளின் குரலாக அமைவது, அல்லது
அமைக்கப்படுவது. இந்த பலகுரல் கதைசொல்லும் நிகழ்வே வாசகனைக் கதையுலகத்துக்குள்
இறக்கிவிட அவசியமானதாகும். இந்த மாற்றுக் குரல் கதையின் மிக முக்கியமான ஒன்று.
ஏனெனில் கதையூடகம் நம்மை நாம் அறியாத நிலைக்கு வெகு விரைவில் இட்டுச் சென்றுவிடும்
ஆற்றலுடையது. அவ்வகையில் அகல்யை
கிளைக்கதை மூலம் கம்பர் காட்டும் தமிழ்ப் பண்பாடு சிந்தித்தற்குரியது.
கண்ணகி கூறும் கிளைக்கதைகளிலும் பெண்ணின் கற்பு எப்படியிக்கவேண்டும் என்பதாக
வலியுறுத்தப்படுகிறது. கணவன் பிரிந்து சென்றதும், தன் முக அழகில் மாற்றான் ஈடுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காக
தன் முகத்தை குரங்கு முகமாக மாற்றிக்கொண்டவளையும், கணவன் வரும் நாள்வரை கல்லுருவில் காத்துக் கிடந்தவளைப்
பற்றியும் பெருமிதமாகப் பேசுகிறாள்.
அகலிகை கதையை வால்மீகியும் கம்பனும் ஒன்றுபோலவே கூறியிருந்தாலும் தீர்ப்பில்
வேறுபடுகின்றனர்.
அகலிகைக்கு தன் அழகின் மீதிருந்த கர்வத்தினால், தன்னை அடைவதற்காக தேவர்களின் தலைவனான இந்திரனே கௌதமரின்
சாபத்தையும், கோபத்தையும்
எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்ற களிப்பு இருந்தது.
வால்மீகி அகலிகையின் அழகு வெளியார்க்குப் புலப்பட்டதுதானே இத்தவறுக்குக்
காரணம் என அவள் யார் கண்ணிற்கும் புலப்படாமல் போகட்டும் என்று கௌதமன் சபிப்பதாகக்
கூறுகிறார்.
கம்பரால் அகலிகைபால் எழுந்த குமுறலை கட்டுப்படுத்த முடியவில்லை. கௌதம முனிவர்
வாயிலாக ‘விலைமகள் அனைய’ என்று பழிக்கச் செய்து, உயிரை விடக் கற்பைச் சிறப்பாக எண்ணாத கல்
நெஞ்சக்காரி என்றெண்ணி அவளை கல்லாகப் போகுமாறு கௌதமர் சபித்ததாகக் காட்டுகிறார்.
சிலப்பதிகாரத்தில் வரும் எழுவகை மகளிர் கற்பு குறித்த கதையில் ஒரு பெண், அயலான் தன் முகத்தைப் பார்த்தான்
என்பதற்காக குரங்கு முகமாக மாற்றிக்கொண்ட நிலையைப் பார்க்கிறோம்.
அதுபோல் இந்திரனின் ஆண்மை அழியட்டும் என்று வால்மீகி கௌதமர் சாபமிட, கம்பரின் கௌதமரோ உடல் முழுதும்
பெண்குறிகள் பரவி நிலைத்திருக்கும்படி சாபமிடுகிறார்.
பிறன்மனை நயத்தல் என்னும் கொடிய குற்றம் செய்தவனுக்கு அவன் செய்த தவற்றின்
விளைவு அனைவர் கண்ணுக்கும் தெரியும் வகையில் தண்டனையளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையடிப்படையில்
கம்பர் இந்திரனுக்குத் தண்டனை கொடுக்கிறார்.
இதனால் பிறன்மனை நோக்குவார்பால் தமிழுக்கு இருக்கும் வெறுப்பு
புலப்படுத்தப்படுகிறது.
மாய மானின் கூக்குரல் கேட்டு சீதை இலக்குவனை இராமனுக்கு உதவ அனுப்ப
முயலும்போது அவன் உண்மையறிந்து மறுக்கும் நிலையில் சீதை இலக்குவனை நோக்கி
கடுஞ்சொல் கூறி அவனை சந்தேகப்படுகிறாள்.
ஆனால் கம்பனின் சீதை கடும் சொல் எறிவதில்லை. சந்தேகப்படுவதுமில்லை. தமையனின்
மனைவி தாய்க்கு நிகர் என்பது தமிழ்ப்பண்பாடு. எனவே சீதை அவ்வாறு எண்ணிப்
பார்க்கக்கூட மாட்டாள் எனக் கருதிய கம்பர்,
‘இலக்குவன் செல்லாவிட்டால் உயிர்துறப்பேன்’
என்று கூறுவதாகவே தெரிவிக்கின்றார்.
கண்ணகியும் தேவந்தி பாசண்டசாத்தன் கோவிலுக்கு வழிபட அழைக்கும் போதும், கோவலன் மதுரைக்கு அழைக்கும் நிலையிலும்
தன் மறுப்பையும், விருப்பையும்
அழுத்தந்திருத்தமாக ஓரிரு சொற்களில் கூறுவதாகவே இளங்கோவடிகள் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு காப்பிய மாந்தர் படைப்பிலும் இராமன் மிதிலைக்குள் நுழையும்போது
காற்றில் படர்ந்திருக்கும் கொடிகள் அசைந்தன. அவை அழகிய கொடிகளால் ஆன கைகளால்
இராமனையும் சீதையையும் விரைந்து வா என அழைப்பது போல இருந்தது என்கிறார் (1.486)
கம்பர். மிதிலை நகரம் செய்த தவத்தின் பயனே தாமரைக் கண்ணனான திருமாலும், செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும்
லக்குமியும் மிதிலைக்கு வந்தனர் என நினைத்தே அவi வரவேற்றன என்கிறார் கம்பர்.
ஆனால் கோவலன், கண்ணகி இருவரும்
பாண்டிய நாட்டிற்கு நுழையு முன்னர் காற்றில் படர்ந்திருந்த கொடிகள் அவர்கள், துயருரப் போகிறார்கள் என உணர்ந்து ‘வராதீர்கள்’ என மறுத்து கைகளை அசைந்ததாக இளங்கோவடிகள்
கூறுகிறார்.
இரண்டும் தற்குறிப்பேற்ற அணியாயினும், இயற்கைப்
பொருட்களுக்கு முன்னுணர் அறிவு உண்டு என்ற கவிகளின் நம்பிக்கையே இங்கு ஒருமித்து
வெளிப்பட்டுள்ளது.
முடிவுரை
தமிழ்ப்பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும் ஒருவரையொருவர்
விஞ்சி நிற்கிறார்கள். தனிநிலை செய்யுளிலிருந்து தொடர்நிலைச் செய்யுளுக்கு
மாற்றமடைந்த அல்லது வளர்ச்சியடைந்த இலக்கியங்களாக இரண்டு காப்பியங்களும்
உள்ளதைப்போல, காப்பிய மாந்தர் வருணனையில் இரு காவியத்
தலைவியர்களின் அழகுகள் சொல்லப்படும் முறை அழகுடையதாக விளங்குகிறது. பெண் பாத்திரப்
படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும்
வாய்ப்பு வந்தபோதும், இரு கவிகளும்
அதனை மறுத்து ஒழுக்க சீலர் ஒருவர் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பது தமிழ்ப்
பண்பாட்டடிப்படையை வலியுறுத்துவதற்காகத்தான் என்று எண்ண வேண்டியுள்ளது.ஆண் கற்பில்
இருவரும் ஒன்றுபடுகின்றனர். கம்பராமாணக் கிளைக்கதைகளில் அகலிகை மூலமும் சிலம்பில்
எழுவகை மகளிர் மூலமும் ஒழுக்கம் குறித்த பதிவுகள் அழுத்மாகப் பதியவைக்கபட்டுள்ளன.
வள்ளுவரின் கைப்பிடித்தே இருவரும் தத்தம் காப்பியத்தை வழி நடத்தியிருக்கின்றனர்.
துணை நின்ற நூல்கள்
அரிசோனா மகாதேவன், கம்பரும்
வால்மீகியும்,தாரிணி பதிப்பகம், சென்னை, ஆண்டு 2014
உ.வே.சீனிவாச ஐயங்கார், வான்மீகி
இராமாணயம், தி லிட்டில்பிளவர்
கம்பெனி, சென்னை,ஆண்டு 1963.
எஸ்.இராஜம், கம்பராமாணம்,சென்னை, பதிப்பகம் தெரியவில்லை.ஆண்டு 1958.
ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம். சென்னை -14, ஆண்டு 2008
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?