‘உயர்ந்த பண்பே’ -மனிதர்களை இணைக்கும் பாலம்
ஓரரசு மற்றொரு அரசுடன் நன்முறையில் தொடர்பு கொள்வது இரு நாட்டிற்கும்
நன்மை பயக்கும் செயலாகும். நட்பு நாட்டிற்குத்
தீங்கு நேரும்போது உடன் ஓடி வந்து, உதவுதலே நட்பிற்குப் பெருமை. அதிலும் ஒவ்வொரு நாட்டிற்கும், அண்டை நாட்டவர்களின் நட்பு மிக அவசியம். ஒரு வகையில் இது ஒரு தற்காப்புமுறையாகும். துன்பம் வந்த காலத்து, நட்பு நாட்டின் உதவி ஒருநாட்டிற்கு எவ்வளவு பாதுகாப்போ, அதைப் போல் நட்பு நாட்டிற்குத்
தீங்கு வந்த காலத்தும் உடன் உதவ ஓடும் அரசே சிறந்த அரசாகும். நட்பு கொண்டோர் நண்பனின் உதவிகோரும் அழைப்பை
எதிர்பார்க்காமல் உதவ முன்வர வேண்டும். தற்காப்பைப் போலப் பிறன் காப்பும் இன்றியமையாதது.
ஒரு நாட்டின் நட்பை எப்படிப் பெறுவது? ஒரு நாட்டிற்கு அல்லது அம்மன்னனுக்குத் துன்பம் வந்த காலத்து அவனுக்கு வந்த துன்பத்தை நீக்குதல், உதவுதல், அறிவுரை கூறல்,தன்
பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவனைக் காத்தல் போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால், தன்னலத்தைக் காட்டிலும் பிறர் நலம் பேணும் பண்பு கண்டு இயல்பாகவே நட்பு உறுதிப்பட்டு
விடும்.
புலவர் ஏணிசேரி முடமோசியார், அந்துவச் சேரனைச் சோழனுக்கு உதவச் செய்து, இருநாடுகளுக்கும் இடையே நல்ல நட்பினை ஏற்படுத்துகின்றார். மன்னர்களிடம் உள்ள ‘உயர்ந்த பண்பே’ அவர்களை இணைக்கும் பாலம் என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது. மக்கள் மட்டுமல்ல மன்னர்களும் கூட உயர்ந்த பண்பையே உயர்வாக மதித்துப் போற்றுவர் என்பதை உணர்ந்ததினால்தான் ஏணிச்சேரி முடமோசியார், அந்துவஞ்சேரலிடம் உள்ள உயர் பண்பினை வெளிக் கொணரச் செய்துள்ளார். இப்படிப்பட்ட உயர்ந்த செயல்கள் நடைபெற காரணமாக இருப்பதாலேதான், மன்னர்கள் புலவர்களை உயர்வாகக் கருதினார்கள். புலவர்களும் அதனை உணர்ந்தே அரசர்களிடம் உரிமையோடு உறவாடியுள்ளனர்.
பக்குவப்பட்ட மனதிலிருந்து
நல்ல எண்ணங்களே வெளிப்படும்; இது நலம் தரக்கூடிய செயல்களாக மாற்றமடையும். மனதைப் பக்குவப்படுத்தலே புலவர்கள் இவ்வுலகிற்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும். அரசுகளுக்கிடையே யார் பெரியவர், யார் வல்லவர் என்ற போட்டி மனப்பான்மையே ‘போர்‘ ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. இதனால்தான், உள்நாட்டுப் பிணக்குகளாலும், வெளிநாட்டு நெருக்கடிகளாலும் அரசர்களுக்கிடையே போர் தோன்றிக்கொண்டே இருக்கிறது. போர் சிறியதோ, பெரியதோ, போரில் தோற்றாலும், வென்றாலும், பகை மட்டும் என்றும் மறைவதில்லை. இதனால் நாடுகளிடையே அமைதி என்பதும் என்றும் இருப்பதே இல்லை. நாடுகளிடையே அமைதி என்பது மிக அரிதாகவே உள்ளது. மிகமிக அரிதாக எப்போதாவது அமைதி தோன்றுமானால், பின்னர் ஏதாவாதொரு பூசல் தோன்றி அமைதியைக் கெடுத்து மீண்டும் போரை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு அரசும் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ளவே விரும்புகிறது. தன் நாடு பெருநாடாக வேண்டும், பேரரசாக வேண்டும் என்பது ஒவ்வொரு அரசின் குறிக்கோளாகவும் இருக்கிறது. ‘ஏகச் சக்கரவர்த்தியாக’ வாழவே ஒவ்வொரு அரசனும் விரும்புகிறான். இந்தப் பேராசையாலேதான் அரசுகளிடையே அமைதி கெடுகிறது. இதனால்தான் போட்டி, பூசல்,பகை,போர் என்றும் முடிவது இல்லை.
போரிடும் அரசுகள் தம் வலிமைக்கு ஏற்பப் போரிடுகின்ன. நாட்டின் செல்வ வலிமை, படை வலிமை, பண்டகங்களின்
வலிமை போன்றவற்றைப் பொறுத்தே போராடும் வலிமை அமைகிறது. ஒரு வகையில் இவற்றைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் போர் நிகழ்த்தப்படுகிறது. எனினும் போர் நிகழ்த்தும்போது தன் வலிமை, மாற்றான் வலிமை, வினை என்னும் போர்வலிமை, பொருள் வலிமை, அளவு வலிமை முதலான வலிமைகளை அறிந்தே போர் தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதற்காக ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தையே
அமைத்துள்ளார்.
""""அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றக் கெடும்""
( 479)
என்ற குறள் தன் அளவினை அறியாது ஒரு மன்னன், மற்ற நாடுகளோடு தொடர்ந்து போரிட்டு வருவதால் சில காலத்தில் அந்த அரசே இல்லாமல் போய்விடும் என்கிறார். வலிமையற்ற நாடுகள் பிற நாடுகளிடமிருந்து ஒதுங்கித்தான் வாழ வேண்டும். அப்படியில்லாமல் ஒரு சில போர்களில் கிடைத்த வெற்றியைக் கொண்டு, தன் வலிமையை மிகுதியாக எண்ணிப் பெரிய அரசுகளோடு போரிட நினைத்தால், உள்ளதும் கெடும் என எச்சரிக்கிறார் வள்ளுவர்.
""""அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்""
(474)
ஆனால் போரிட நினைக்கும் அரசுகள் தன் நிலையறியாமல்
போரிட முனையும் பொழுது, இதைப் புறத்தே நின்று பார்க்கும் புலவர்கள் நிலைமையுணர்ந்து (ஒரு குறிப்பிட்ட அரசனின் வலிமையை நன்கு உணர்ந்தவர்களாதலால்),
போரைக் கைவிடக் கோரி எச்சரிக்கை விடுக்கின்றனர்.
(தொண்டைமானிடம் ஔவையார் அவன் உண்மை நிலையை
எடுத்துரைக்கிறார்.)
ஒருநாட்டின் மீது படையெடுக்க விரும்பும் மன்னன் அந்நாட்டின் அனைத்து உயிர்களையும்
அழிப்பதில்லை; துன்பறுத்துவதில்லை. போர்க் காலத்தே சில வரன்முறைகளை அற வழிகளைக் கையாண்டுள்ளனர். அவற்றை எத்தருணத்திலும் மீறுவதில்லை. அதை மன்னர்கள் மீற முனையும் போது புலவர்கள் தலையிட்டு அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அறநெறிப்படுத்தியுள்ளளனர். புலவர்கள் மீது வைத்திருக்கும் பெரு மதிப்பினால் அரசர்களும் அதை ஏற்றுக்கொண்டு
அறவழிப்பட்டுள்ளனர்.
மன்னர்கள் பசு, படித்தவர்கள், பெண்கள், புதல்வர்களைப் பெறாத ஆடவர்கள் போன்றோரை போர்க்காலத்தில், நாட்டிலிருந்து விலகியிருக்க அறிவிப்பு கொடுப்பார்கள்.
ஆவும் ஆனியல் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடையாரும் பேணித்
. . . . .
அறத்தாரு நவலும் புட்கை (புறம் - 9 : 1 - 6)
என்ற வரிகள் இதற்குச் சான்றாகும். போர்க்காலத்தில் தன் நாட்டு மக்களை மட்டுமல்லாது, பகை நாட்டின் குடிகளையும் காக்கும் மன்னனே பெரிதும் உலகத்தாரால் விரும்பப்பட்டிருக்கிறான்..