‘ஈதல் யாவர்க்கும் எளிது’
திருமுடிக்காரி என்ற மன்னன் புலவர்களின் தகுதியறியாது பரிசுகளை ஒரே மாதிரியாக வழங்குகிறான். இதைக் கவனித்த கபிலர், வேந்தனே ‘ஈதல் யாவர்க்கும் எளிது’ ஆனாலும் புலவர்களின் திறமையறிந்து, அவர் புலமையறிந்து பரிசு தருவதே அரிது. அதனால் அந்த அரிய செயலை நீ செய்யாமல் எளிய செயலான ஈதலைச் செய்து வருகிறாய். நீ வரிசையறிந்து கொடுப்பதாயின் கொடு என அறிவுரை கூறுகிறார். இவ்வாறு மன்னனைவிட உயர்வான நிலையில் இருந்ததால்தான், புலவர்கள்அவனிடம் பரிசை கொடுக்கும் முறை குறித்துத் துணிந்து கூறுகின்றனர். இங்கு ‘கொடு வென் கூற்று உயர்ந்தோர்மேன’ (447) எனத் தொல்காப்பியம் கூறுகிறது. அவ்வகையில், இங்குப் புலவர்கள் மன்னனைவிட மேலானவர்களாக உள்ளனர். எனவே ‘கொடு’ என மன்னனிடம் கேட்டுப்பெறும் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர் புலவர்கள். தாமும் பெற்ற கல்வியின் பயனை மன்னர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர்.
‘செல்வத்துப் பயனே ஈதல்’. இங்குப் பொருட்செல்வம் உயர்ந்ததா? கல்விச் செல்வம் உயர்ந்ததா எனில் கல்விச் செல்வமே உயர்ந்ததாகும். எப்படியெனில் செல்வத்தை உடையவனுக்குப் பல எதிரிகள் இருப்பர். ஆனால் அறிவுடையவனுக்குப் பல நண்பர்கள் இருப்பர். அறிவு உள்ளத்தில் ஒளி ஏற்றுகிறது. செல்வம் உள்ளத்தைக் குறுகச் செய்துவிடுகிறது. பொருட்செல்வத்திற்கு எல்லை உண்டு. கல்விச்செல்வத்திற்கு எல்லை கிடையாது.
செல்வம்
ஆணவத்தைத் தருகிறது. அறிவு பணிவை, பண்பைத் தருகிறது. எனவே, அனைத்து வகையிலும் பொருட்செல்வத்தை விடமேலானது அறிவுச் செல்வம். அந்தச் செல்வத்தைப் பெற்றதின் பயன் என்ன எனில், அதைப் பிறருக்கு உரிய நேரத்தில் ஈதலாகும். மன்னர்க்கு உரிய காலத்தில், உரிய நேரத்தில் அறிவுச் செல்வத்தைத் தரக்கூடியவர்கள் புலவர்கள். நிலையான
அறிவுச்செல்வத்தைக் கொடுத்துப் நிலையற்ற பொருட்செல்வத்தைப் பெறுபவர்கள் புலவர்கள். நிலையான, ‘உலகம் போற்றும் பண்பை’ அறிவுச்செல்வத்தின் வழி தந்து, நிலையற்ற பொருட்செல்வத்தைக் ‘கொடு’
என்று பெறக்கூடியவர்கள் புலவர்கள். பெற்ற பொருட்செல்வம் நிலையில்லாதது என்பதால்தான் புலவர்கள் தம்மொத்த புலவர்களுக்கு அதை வாரி வழங்கி உள்ளனர். ‘கொடு’ என அனைவரிடமும் உரிமையோடு கேட்டுப் பெறாமல், தாம் கொடுத்த அறிவுச் செல்வத்தின் பயனாய ‘பண்பைப்’ பெற்றுக் கொண்டவர்களிடமே பரிசிலை விரும்பிப் பெற்றுள்ளனர். பண்பைச் பெறாத, பண்பில்லாத மன்னர்கள்
எவ்வளவு பொருளைக் கொடுத்தாலும், புலவர்கள் அப்பொருளைத் துச்சமாகக் கருதி மறுத்துள்ளனர்.
""""மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளோம்
நல்லறிவுடையோர் நல்குரவு"" ( புறம்.197:1 5+8)
பண்பில்லாத மன்னர்களைப் புலவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதை ‘நன்னன்’ வாழ்க்கை முலம் அறியலாம்.
அதேசமயம் பண்புடைய மன்னன் குறுநில மன்னனாக இருந்தாலும், பழுமரம் தேடிப் பறவைகள் செல்வதைப் போல, அம்மன்னனையே நாடிச் சென்றனர், அம்மன்னன் கொடுக்கும் பரிசு எளிதாயினும், அதை உயர்வாகப் போற்றி மகிழ்ந்தனர். (பெரும்பா 20-2) குமணன் நாட்டை விட்டுக் காட்டில் வாழ்கின்ற சூழலில், இளங்குமணன் நாட்டை ஆள்கிறான். இளங்குமணன் பண்பற்றவன். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவன். அரசு பதவியில் வீற்றிருந்த இளங்குமணனை நாடிச்செல்லாமல், காட்டில் வாழ்ந்த குமணனையே (புறம்-164) நாடிச் செல்கிறார். இதிலிருந்து ‘பண்பை’யே மிக உயர்வாகப் புலவர்கள் கருதியுள்ளனர் என்பதை அறியலாம். பண்புடைய மன்னரை புலவர்கள் மட்டுமா நாடிச்செல்வர்?
பகையினை நட்பாகக் கொண்டொழுகும் பண்புடையாளாகிய அரசனது தகைமையில் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவரும். அதாவது பண்புடைய மன்னனின் அனைத்து மக்களும் நாடி விரும்பி சென்று தங்குவர். ஏனெனில் பகையை விட்ட அரசனின் நாட்டில் நன்மையும் வளர்ச்சியும் நிறைந்திருக்கும். இன்பத்திற்குக் குறைவிருக்காது. அந்நாட்டோடு அனைத்து நாடுகளும் நல்லுறவினை ஏற்படுத்திக் கொள்ளும். அந்த நாட்டில் வளம் நிறையும். எனவே, தன்நாட்டு மக்கள் அனைத்து வளங்களும் பெற்று இன்பத்தோடு வாழ வேண்டும் என ஒரு மன்னன் விரும்பினால், அவன் விளையாட்டிற்காகக் கூட யாரோடும் பகை கொள்ளக் கூடாது. இந்த உலகம் அமைதியைத்தான் விரும்புகிறது. வளர்சிசியைத் தான் விரும்புகிறது. நிலையான வாழ்க்கையைத் தான் விரும்புகிறது. அதைக் கொடுக்கக்கூடிய ஒரு மன்னனைத்தான் இந்த உலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இப்படிப்பட்ட மன்னனுக்கு என்ன பரிசு கிடைக்கும் எனக் கேட்கலாம். இதனால் இந்த மன்னன் பெறுவது யாது எனக் கேட்கலாம்.
இந்த உலகமே அவனுக்குக் கிடைக்கும் பரிசாகும். உலகைப் பகையால் போரிட்டு வெல்லத்தேவையில்லை. அண்டை நாடுகளோடு நட்பினை ஏற்படுத்திக் கொண்டு, பண்போடு நடந்து கொண்டாலே உலக ஆட்சி தானே வந்தமைந்து விடும்.இதை,கம்பரும்,
""""யாரோடும் பகை கொள்ளலன் என்ற பின்
போரொடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடுங் கெடல் வேண்டல் உண்டாகுமோ?""
( கம்ப, அயோத், மந்தரை சுழ்ச்சி,21 )
பாடல் வழி கூறுகிறார், ‘பகையை மனதிலிருந்து நீக்கினால், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது’ என்பது, கம்பரின் கருத்தாக உள்ளது.
போரொடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடுங் கெடல் வேண்டல் உண்டாகுமோ?""
( கம்ப, அயோத், மந்தரை சுழ்ச்சி,21 )
பாடல் வழி கூறுகிறார், ‘பகையை மனதிலிருந்து நீக்கினால், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது’ என்பது, கம்பரின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?