நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 19 December 2014

பகை என்னும் பெரு நோய்






பகை என்னும் பெரு நோய்


இரு அரசுகளுக்கிடையே ஏற்படும் பகையைநோய்என்கிறார் (851) வள்ளுவர். அதுவும் எத்தகைய நோய்? ஒருவரது பண்பையே அழிக்கும் பெருநோயாகும். இந்த நோய் பகை கொண்டவரின் பண்பை மட்டுமா அழிக்கும்? மனிதர்களின் உண்மை குணத்தையே அழிக்கும் நோயாகும்.பகைதன்னைக் கொண்டவரை மட்டுமன்றி , அவரது சுற்றத்தைப் பாதித்து , மக்களைப் பாதித்து, இன்னொரு நாட்டு மன்னனையும் மக்களையும் பாதித்து இரு நாட்டிற்கும் பெரும் போரை ஏற்படுத்திவிடும். இதில் ஒருபாவமும் அறியாத விலங்குகளும் சேர்ந்து அழியும்
.

இந்தப் பகை என்னும் நோயானது, மக்களிடம் உள்ள புன்னகையைக்கூட வேரோடு அழித்துவிடும் வல்லமையுடையது. எனவே நாடாள விரும்பும் ஒவ்வொரு மன்னனும், தன் மனதிலுள்ள பகையை முதலில் வேரோடு கிள்ளி எறிந்து, அன்பு என்னும் விதையை விதைக்க வேண்டும். தன்நாட்டு மக்களைப்போல உலக மக்களைக் காணும் பெருநோக்கினைப் பெற வேண்டும். வாள் வலிமையும், தோள் வலிமையும் வலிமையல்ல. அன்பென்னும் வலிமையே அனைத்தினும் வலிமையுடையது என்ற எண்ணம் உறுதிபெற வேண்டும். அத்தகைய எண்ணம் உள்ள மன்னனேஉலகாளும் தகுதி படைத்த மன்னன்ஆக முடியும். ஆம், உலகினை ஆள விரும்பும் மன்னன், முதலில் பகையை கிள்ளி எறியவேண்டும்.பின்பு, உலகை அன்பால் ஆள வேண்டும்.


பிற அரசுகளோடு ஒத்துப்போக முடியாத சூழல், ஒவ்வொரு அரசிற்கும் எப்போதாவது ஏற்படும். இச்சூழலில் பூசல் ஏற்பட்டு, பகை தோன்றும். இப்பகையானது வலிமையைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. இதனால் ஒருவர் வலிமையை மற்றவர்க்குக் காட்டி முனைகின்றனர். போர் என்பது பகையின்முற்றிய நிலை. அதனால் அதனை முற்றவிடாமல், ஒத்துப்போக முடியாத சூழல் ஏற்படும் பொழுதே மாற்றான் தன்னைவிட வலிமையானவனாக இருப்பின், இணங்கியும் வணங்கியும் சென்று போரைத் தடுத்து விடவேண்டும் . தம்மையும் அரசையும் தம் நாட்டு மக்களையும் காக்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவன் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். தன் செருக்கை விடுத்து இவ்வாறு விட்டுக்கொடுத்து பணிந்து போவது இழுக்கல்லஎன்பதை உணரவேண்டும். தன்னைவிட வலிமையுடையாரை இகழ்ந்து சிக்கலை மிகுதிப்படுத்தி, போரை வலிய மக்களின் மீது திணிப்பவன் நல்ல அரசன் அல்ல. எனவே, ‘இளைதாக முள் மரம் களைகஎன்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப பிற அரசுகளோடு ஒத்துப்போக முடியாத சூழலில் தன் வலியறிந்தும், மாற்றான் வலியறிந்தும் ஒருவன் முளையிலேயே தன் மனதிலுள்ள சினத்தை நீக்கி, பகையைத் தவிர்த்துவிட வேண்டும்.

செல்லிடத்துக்காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்என்பார் வள்ளுவர். தன் சினம் செல்லுபடியாகிற இடத்தில் சினத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். செல்லுபடி ஆகாத இடத்தில் சினத்தைக் காட்டி என்ன பயன்? காட்டாவிட்டால் தான் என்ன பயன்?என்று கேட்கும் வள்ளுவர், சினத்தை எங்குமே வெளிக்காட்டக் கூடாது என்கிறார்.
 

தன்னைவிட வலிமையுடையாரோடு ஒருவன் பூசல் கொள்ளாமல், பணிந்து, விலகி, பகைவர் மீதுள்ள மீதுள்ள சினத்தைத் தவிர்த்து,இணங்கியும் வணங்கியும் செல்லக்கூடிய,  தன் மக்களைக் காப்பாற்றக் கூடிய ஒருவனை உலகம் போற்றுமேயன்றி தூற்றாது. பகையைக் கைவிட்ட ஒரு அரசனை எந்த அரசும் தோற்கடிக்க முடியாது. பகையை விடுத்த மன்னனே உலகம் விரும்பும் மன்னன் ஆவான்.

பகை என்னும்பண்பழிக்கும் நோய்பற்றாத நாடே வளநாடாகும். பகை என்னும் நோயை நீக்கிய பண்புடைய மன்னனே புலவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றிருக்கிறான். இந்த உலகம், ஒரு மன்னனிடம் வீரத்தை விடப் பண்பையே பெரிதும் எதிர்பார்க்கிறது. எனவேதான், புறநானூற்றுப்பாடல், ' மன்னர்களைப் பார்த்து,
""
நல்லது செய்தால் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'' (புறம் 195) என்ற வரிகள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவில்லையென்றாலும், தேவையில்லாமல் பிற மன்னரிடம் பகை வளர்த்து, கெடுதலைச் செய்யாமல் இருங்கள் என்கிறது. பகை யாரைப் பற்றும்? பண்பற்றவரையே பற்றும். அப்படி ஒருவேளை போர் மூண்டுவிட்டால், அந்தப்பகையை எப்படி நீக்குவது? போர் மூலம் பல உயிர்கள் அழியும் முன்னரே நட்புக்கரம் நீட்டி அப்பகையை நீக்கி, நாட்டில் அமைதி நிலவச் செய்ய வேண்டும்.

இருப்பினும், புலவர்கள் போரை விரும்பவில்லை என்பதற்காக மன்னர்கள் போர் தொடுக்காமல் இருப்பதில்லை. பண்பை மறந்து போர் தொடுக்கவே செய்கின்றனர். இந்நிலையில் மாற்றரசுகளோடு போர் புரியும் அவர்களின் செயல்களினால் ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்து, மக்கள் நிலையை உணர்த்தி அவனைப் போரைக் கைவிடச் செய்ய புலவர்கள் முயல்கிறார்கள். பகையை நீக்கி பண்பை வளர்க்கும் நல் அறிவுரைகளைத் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கிறார்கள். பண்பின் பெருமைகளை, அறத்தின் வலிமைகளை எதிரும்ப திரும்பகூறுகிறார்கள். அரசனை நல்வழிப்படுத்த பாடுபடுகிறார்கள்.
.

புலவர்,கிள்ளிவளவனிடம் நீயோ போரை விரும்பி, பகைவர் காவல் மரங்களை வெட்டுகிறாய். ஆனால் உன் பகைவனோ காவல் மரங்களின் ஓசையைக் கேட்டும் போரிட வராது, தன் மாளிகையிடத்தில் இருக்கிறான். அவன் உன்னுடன் போரிட அஞ்சியே அவ்வாறு இருக்கிறான். ஒரு வேளை கோட்டைக் கதவுகளை உடைத்து, நீ பகைவன் நாட்டிற்குள் நுழைந்து பகைவனைக் கொல்லலாம். அல்லது கொல்லாமலும் விடலாம். எதுவாயினும் ஒரு கோழையோடு தான் போரிடப் போகிறாய். போர் தொடுக்க வந்துள்ள நீ அவனுடைய, காவல் மரங்களை வெட்டுகிறாய், படைகளை முறைப்படி நிற்க வைக்கிறாய், படைகள் தங்க கூடாரங்களை அமைக்கிறாய். உன் நாடு விட்டு இங்கு வந்து உன் படைகளும், ஒவ்வொரு நாளும் இன்று போரிடுவோம் எனக் காத்துக் கொண்டுள்ளன. அவர்கள் பகைவர்கள் தலையை வெட்ட வேண்டும் என்ற வேகத்தில் உள்ளனர். ஆனால் இங்கு மரங்களின் தலையைத்தான் வெட்டிக் கொண்டுள்ளனர். வலிமை படைத்த அவர்களின் தோள்கள், மாற்றான் நாட்டில் படைக்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளன, கோடாரியால் காவல் மரங்கள் வெட்டப்படும் ஓசை கேட்டும், உன் பகைவன், தன் அரண்மனையில் பாதுகாப்பாக இனிமையாக நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறான். சிறிதும் நாணமில்லாத அவனிடம் பகை கொண்டு போரிடத்துணிந்தாய், உன் வீரர்கள் பொருநையாற்று மணல் மேட்டிலே உள்ள மரங்களை வெட்டிக்கொண்டுள்ளனர். அங்குதான் இந்நாட்டுச் சிறுமிகள் கழற்சிக்காய்களை வீசி விளையாடுவர். தற்போது அவர்கள்விளையாடும் அம்மணற்பரப்புச் சிதையுமாறு நெடிய கைப்பிடியுடைய கோடரியினால் வீரர்கள் மரங்களை வெட்டிக் கொண்டுள்ளனர். தன்நாட்டு மக்களைப் பற்றியும், அவர்கள் அடைந்து கொண்டிருக்கும் துன்பத்தைப் பற்றியும், சிறிதும் நினைக்காத உன் பகைவன் பண்பற்றவன். அத்கைய பண்பற்றவனோடு தான் போரிடப் போகிறாயா? அப்படிப்பட்டவனோடு நீ போரிட்டு பெறுவது என்ன? உலகம் உன் வெற்றியை எப்படிப் பார்க்கும்? எனவே, இந்த முற்றுகையைக் கைவிட்டு உன் நாடு திரும்புவாயாக என்று அறிவுறுத்துகிறார்.

அரசியல் தொடர்பான பெரிய முடிவுகளில் ஒரு எளிய புலவர் தலையிடலாமா? புலவர் கருத்திற்கு போர்க் காலங்களில் மதிப்புண்டா?போர் தொடுக்க முடிவெடுத்துப் படைதிரட்டி போர்க்கோலத்துடன் நிற்கும் சினம் கொண்ட மன்னனின் முன் துணிந்து நின்று ஒரு எளிய புலவரால் எப்படி அறிவுரை கூறி நிற்க முடிந்தது?

சங்க காலத்தில் புலவர்கள் வறுமையில் வாடியுள்ளனர். எனினும் யாரிடமும் சென்று பொருளை யாசித்ததில்லை. யாசித்து நிற்றலை சங்க இலக்கியம்இரவல்என்ற சொல்லால் குறிக்கிறது, யாசிப்பவர் இரவலர். புலவர்கள் இரவலர்களா? தொல்காப்பியம், , தா, கொடு என்று மூன்று சொற்களால் குறிக்கிறது, (நுற்பா 444)
- வறுமையுற்றோர் - செல்வந்தரிடம் சென்று ஒரு பொருளைக் கேட்டுஎன இரங்கி கேட்டு என நிற்பது,
தா - தனக்குச் சமமானவர்களிடம் சென்று ஒருபொருளைதாஎன உரிமையுடன் கேட்டு நிற்பது,
கொடு - உயர்ந்தோர்/தாழ்ந்தோரிடம் ஒரு பொருளைகொடுஎனக் கேட்டுப்பெறுவது
இங்குப் புலவர்களுக்கு உரியது எது?
புலவர்அவர்என்றும் அரசன்அவன்என்றும் அழைக்கப்பட்டுள்ளனர், ‘அவனை அவர் பாடியதுஎன்று மன்னரைவிடப் புலவர் உயர்ந்தவர் என்ற கருத்து நிலவியுள்ளது.

ஔவையார், தனக்குப் பரிசு கொடுக்காமல், காலம் நீட்டித்துத் தாமதப்படுத்திய அதியமானை பார்த்து கோபமுடன்எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறேஎனப் பரிசைப் புறக்கணித்துக் கிளம்ப முயல்கிறார். அதியனும் அவர்மீது கொண்ட பேரன்பினால், அவரைத் தன் நாட்டிலேயே இருக்க வைக்க அவ்வாறு காலம் தாழ்த்தியதாகக் கூறி மன்னிப்பு கேட்டு பரிசு தருகிறான்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?