நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 13 April 2020

பெண்ணியத் திறனாய்வு

 பெண்ணியத் திறனாய்வு                          penniyam images க்கான பட முடிவு


மானுட வரலாற்றில் பெண்கள் தங்கள்அடையாளங்களை மெல்ல இழந்து சுயமற்ற நிலையில் காணப்படுகின்றனர். வரலாற்றில் பெண்களின் முக்கியமான, ஆற்றல் மிக்க பங்களிப்புகளின் சில குறிப்புகள் இருந்தாலும், அவர்கள் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு, உதைக்கப்பட்ட குறிப்புகள்தாம் பரவலாக உள்ளன. பல நூற்றாண்டுகளாகப்  பெண்கள் அவ்வாறு துன்புறுத்தப்பட்டதுமில்லாமல் பிறப்பு, முன்னோர் கருத்து, கடவுள் கொள்கை என்று அவை நியாயப்படுத்தப்பட்டு பண்பாடு என்ற பெயரால் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.

பெண், ஆண் இடையே இன்று நாம் காணும் வேறுபாடுகள் இயல்பானவையல்ல. அவை ஒரு காலத்தில் ஒருவராலோ, அல்லது சிலராலோ, வர்க்க, இன, சமய, பால், மத அடிப்படையில் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஆண் உயர்ந்தவன் என்பதும் பெண் தாழ்ந்தவள் என்பதும் இயற்கையும், கடவுளும் உருவாக்கியவை அல்ல.


1.1. வாழ்க்கைப் போராட்டம்
ஆரம்பத்தில் வாழ்வு சார்ந்த பேராட்டம் என்பது இயற்கையோடும் பிற உயிரினத்துடனும் உயிர் வாழ்வதற்கான பெண்ணின் தலைமையிலான போராட்டம் என்ற நிலையே இருந்தது. மனிதன் இயற்கையைத் தனது உழைப்பைக் கொண்டு மாற்றத் தொடங்கிய காலத்தில் உற்பத்தியின் வேறுபட்ட தன்மையுடன்கூடிய வேலைப்பிரிவினை ஏற்பட்டது. குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு கருதி பெண் பாதுகாப்பில் நிற்க, ஆண் வேட்டையாடலில் உரிமை பெற்று உணவின் மீது நிபந்தனையை மீறி உரிமை செலுத்தத் தொடங்கினான்.

பொருளாதார அடிப்படையே சமூகத்தின் எல்லாக் கூறுகளையும் தீர்மானிப்பதாகக் காரல் மார்க்ஸ் கருதுகிறார். பெண் குழந்தைக்காகவும், உணவிற்காகவும் ஆணைச் சார்ந்து வாழ வேண்டியிருந்தது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட ஆண், உபரியை தன் இரத்த வழி வாரிசுகளுக்குக் கொடுக்க ஒருதார  மணத்திற்கு வித்திட்டான்.
ஆணின் வழியாகவே பரம்பரைத் தொடர்வதாக ஆண் தொடர்ந்து நம்பியதால் பெண்ணை வீட்டிற்குள் அடைத்து பல தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தான். அவளுக்கென்று தனிக் கொள்கை, விருப்பம், தேவை இருக்கக்கூடாது. அவள் தனித்தியங்கக் கூடாது. இதை மீறி பெண் தனித்தியங்க முயன்ற போது கடுமையாக ஒடுக்கப்பட்டாள். கற்பு என்னும் இரும்புச் சங்கிலியால் பிணிக்கப்பட்டு வீட்டிற்குள் முடக்கப்பட்டாள். ஆனால், ஆண் இக்கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு மிகச் சுதந்திரமாக இயங்கினான். ஒருதாரமணம் என்பது பெண்ணுக்கு மட்டுமே திணிக்கப்பட்டது. அவன் பல பெண்களை மணக்கவும், விரும்பியபடி பல பெண்களோடு தொடர்பு கொள்ளவும் ஏற்ற சமுதாய நியதிகளை உருவாக்கினான். சட்டம், அரசியல், நீதி, அரசு அனைத்தும் அவனுடைய உருவாக்கங்களே ஆகும். சமூகப் பிரிவுகளை இவை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்துகின்றன. ஆண் உருவாக்கிய சமூகப் பிரிவில் பெண்களின் நிலை முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளது.

1.2.0. பெண் - ஆண் கருத்தியல்கள்
அதிகாரப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள்தான் பண்பாட்டை உருவாக்குகிறார்கள். பெண்ணைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஆண்-பெண் கருத்தியல்கள் உருவாக்கப்பட்டன. ஆண் எனில் வீரம், பெண் எனில் அச்சம், பலவீனம், தூய்மையற்றவள், காமத்தின் வடிவம், சார்பு எனக் கோட்பாடுகளை ஆண் சமுதாயம் உருவாக்கியது. பெண்ணைக் கொண்டே பெண்ணை ஒடுக்கி வைக்கும் கலையையும், அறிவியலையும் பண்பாடு என்ற பெயரால் உருவாக்கிப் பரப்பியது.. பொருளாதார ஆதிக்கத்தைக் கொண்ட பிரிவுக்கு நலிவுற்ற பிரிவு சேவை செய்வது போல் பெண்ணின் சேவை ஆணுக்கு நிபந்தனையாகியது. அடிமைகள் அடிமையுடையாளனுக்கு உழைப்பைக் கொடுத்த போது அங்குச் சுதந்திரம் மறுக்கப்பட்டது. ஆனால், உழைப்பைச் சுதந்திரமாக விற்றபோது அவன் நவீன அடிமையாகி, அதே சொத்துடைய வர்க்கத்துக்கே இன்று வரை சேவை செய்கிறான். இதுபோல் பெண் ஆரம்பத்தில் நேரடியாக ஆணின் அடிமையாக இருந்தது மாறி, இன்று சுதந்திரம் பெற்ற நவீன அடிமையாக இருக்கிறாள்” (இராயகரன், 2001:36) இதனால் ஆண் பெற்ற இலாபங்கள் மிக அதிகம். பெண் இனத்தின் மீது முழு அதிகாரம் செலுத்த, அவர்களின் உழைப்பைச் சுரண்ட, தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள உடைமையின் மீது உரிமை கொண்டாட என்று அனைத்து நிலைகளிலும் தன் ஆதிக்கத்தைக் காலமுழுவதும் ஆண் நிலை நிறுத்திக் கொண்டான்.

இன்றைய ஆணாதிக்கச் சமுதாயம் அரசியல், பொருளாதார, தலைமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் ஆண்களிடமே குவித்து வருவது  இதை உறுதி செய்கிறது. இதற்குப் பெண்ணை அவள் இயல்பு நிலைமையிலிருந்து மாற்றி, தனக்குச் சாதகமான அனைத்துச் செயல்களுக்கும் அற்றவளாக உருவாக்கிட கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புனைந்துரைகளே சான்று பகரும்.

1.2.1. புனைந்துரையும் உண்மையும்
பெண்ணைப் பலவீனமானவள் என்று ஆணாதிக்கச் சமுதாயம் கற்பித்திருந்தாலும், உண்மையில் ஆணைவிடப் பல கடினமான பணிகளை பெண் மேற்கொள்கிறாள். ஆணை விடக் கூடுதலாக உழைக்கிறாள். சராசரியாக ஒரு பெண் நாளொன்றுக்குப் பதினாறு மணி நேரம் முதல் பததொன்பது மணி நேரம் வரையிலும் அதே நேரத்தில் ஒரு ஆண் நாளொன்றுக்குப் பத்து மணி வரையிலும் வேலை செய்கின்றார்கள். (மார்கிரெட் கலைச்செல்வி, 1999:90) ஆனால், இல்லறத்திற்கு வெளியே பெண்கள் செய்யும் வேலைகளுக்கு மிகக் குறைந்த எதியமே வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் பெண் திறனற்றவள், பலவீனமானவள் என்ற கருத்தியலே ஆகும்.
 பெண்கள் இல்லறத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் ஆக்கப்பூர்வமான அடிப்படைப் பணிகளாகும். வீட்டு வேலைகள், நீர் எடுத்தல், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பெண்கள் செய்யும் பணிகளை, பணிகளாக இச்சமூகம் கருதுவதில்லை. அவளுடைய முக்கியமான, கடுமையான இல்லறப் பணிகளின் பெருமையைக் குறைக்க இல்லறப் பணியை ஒரு பொருட்டாகவே கருதாத வகையில் அவளை எப்போதும் இல்லறத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவளாகவே காட்டியது. இல்லறப் பணிகளுக்கு ஊதியம் கொடுக்கப்படாமல், ஏமாற்றப்பட்டதோடு அவள் எப்போதும் வருவாய் இல்லாதவளாகவே நடத்தப்பட்டாள்.

பெண்ணின் மிக முக்கியமான பணி மக்கட்பேறாகும். மக்கட் பேற்றில் ஆணின் பங்கு மிகக் குறைவு. மானிட வாழ்வு தொடர்வதென்பது இம்மக்கட்பேற்றுத் திறனால்தான். இம்மக்கட்பேற்றுத் திறனிற்காகப் பெண் தன் உயிரைப் பணயம் வைக்கிறாள். இதனால் அவள் அனுபவிக்கும் துன்பங்களும் அதிகம்.  மக்கட்பேறு பணி என்பது தனிவாழ்வின் நிறைவாகவும், குடும்ப நலனுக்காகவும் எனக் கருதப்பட்டாலும், சமுதாயப் பொதுச் செயலாகவும் உள்ளது. இது ஓர் அரசியல் செயலாகவும் உள்ளது. மக்கட்பேறு என்பது சமூகத்தின் எல்லா நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் தாய்மை என்று போலிப் பெருமை கூறி அம்மக்கட்பேற்றுத் திறனையும் ஆணாதிக்கச் சமுதாயம் ஏமாற்றி பயனடைந்து வருகிறது. அதிலும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால் மட்டுமே அவளுக்குச் சிறிதளவு மதிப்பு கிடைக்கிறது.

பெண்களின் ஊதியமற்ற பணிகளையும், மக்கட் பேற்றுத் திறனையும் சார்ந்தே இச்சமுதாயம் முன்னேறி வருகிறது. பெண்ணின் ஊதியமற்ற உழைப்பைச் சுரண்டியே ஆணாதிக்கச் சமுதாயம் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளது. இன்று உலகளவில் உள்ள உடைமைகளில் தொண்ணூறொன்பது (99) விழுக்காடு ஆண்களின் உடைமையாக உள்ளது. இதைப் பெண் உணராத வகையில் அவளுக்குப் பல தடைகள் இடப்பட்டன. கல்வி மறுக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. அவளுடைய திறமைகள் எக்குவிக்கப்படுவதில்லை. அவள் விரும்பியபடி வாழ்க்கையை வாழக் குடும்பமும் சமுதாயமும் அனுமதி மறுத்தது. சத்தான உணவும், உரிய மருத்துவமும் கூடத் தவிர்க்கப்பட்டது.

ஆணுக்கு இணையான வகையில் வலிமை பெற்றவளாக அவள் உருவாகாமல் இருப்பதற்காக, மொழி, சமயம், இனம், சாதி, மதம் என அனைத்து நிலைகளிலும் ஆணாதிக்கக் கருத்தியல்கள் புகுத்தப்பட்டன. உலக மக்கள் தொகையில் சரிபாதி அளவு ஆணுக்கு இணையாகப் பெண் இருந்தாலும் ஆணாதிக்கக் கருத்தியல்களினால் பெண்கள் கடுமையான வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்றனர். பெண்கள் பல இனங்களாகப் பிளவுபட்டிருப்பினும் அனைத்துவகைப் பெண்களும் ஏதோவொரு வகையில் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டே வந்துள்ளனர். இதையும் மீறிப்  பெண்கள் பல சாதனைகளைப் புரிந்திருந்தாலும் அவற்றையெல்லாம் ஆணாதிக்க வரலாறு சிறப்பிப்பதில்லை. பெரும்பாலும் பெண்கள் பெயரற்று, சிறப்பற்று, ஆண்களுக்கு இணையாக மதிக்கப்படாமல் உள்ளனர். எனவேதான், நாம் குறிப்பிடத்தக்க புதிய வரலாற்றை எழுத வேண்டும். எல்லாவகைப் பெண்களின் சிக்கலான அனுபவ வரலாற்றினையும் தனித்தனியாக கேட்டறிந்து அவற்றை முழுமையாகத் தொகுத்து வெளியிட வேண்டும்” (லெர்னர், 1979:158) எனப் பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.

1.3.0. பெண்ணின் எழுச்சி
பெண்களின் இரண்டாம் நிலைக்கு எதிராக, ஆண்களின் ஆதிக்கம் தொடங்கிய நாளிலிருந்து பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். வரலாற்றில் மிக நீண்ட விடுதலைப் போராட்டம் பெண்களின் விடுதலைப் போராட்டமேயாகும். பெண்களுக்கு ஆதரவாகப் பல ஆண்களும் உலகம் முழுவதும் குரலெழுப்பியுள்ளனர். ஆணாதிக்கத்திற்கு எதிரான கருத்துகள், அமெரிக்காவில் தான் முதலில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தோன்றியது. வால்ட்விட்மன் (1819) பெண்விடுதலை, சமத்துவம் என்பவற்றை மையமாகக் கொண்டு எழுதிய எழுத்துக்கள் புரட்சியைத் தோற்றுவித்தன. செனகா பால்ஸில் (1848) நடந்த பெண்கள் மாநாட்டில் பெண்களின் உரிமை பற்றிய தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. ஐரோப்பாவிலும் பெண்ணிய கருத்துகள் பதினெட்டாம் நூற்றாண்டில் மேரி உல்ஸ்டோன் கிராப்ட், ஜான் ஸ்டூவர்ட்  மில் போன்றோரால் வெளியிடப்பட்டன. பார்பரா ஸ்மித் 1965இல் பெண்களின் சொத்துரிமைக்குப் போராடியதோடு, பத்திரிகையும் நடத்தினர். இப்பெண்ணிய எழுச்சிகளாலும் போராட்டங்களாலும் பெண் உரிமை தொடர்பான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் ஐரோப்பாவில் பெண்கள் பல உரிமைகளைப் பெற்றனர்.

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய இப்பெண்ணியச்  சிந்தனை எழுச்சி பெற்று வாக்குரிமை, தொழிலக வேலை நேரம் குறைப்பு போன்றவற்றிற்காகப் போராடி வெற்றி பெற்றது. மேலும், புதிய வரலாற்றினையும் படைத்து வருகின்றது. இப்போராட்டம் பெண்ணிய இயக்கமாக மலர்ந்துள்ளது.

1.4.0. பெண்ணியம் - வரையறை
பெண்ணியம் என்ற சொல் பதினேழாம் நூற்றாண்டில் பெண்களுக்குரிய இயல்புகளை உடையவள்என்ற பெயரில் கையாளப்பட்டது. 1890-இல் இருந்துதான் பாலின சமத்துவத்தையும், பெண்ணுரிமையையும் மையப்பொருளாகக் கொண்டது. காலம், சமூகம், பண்பாடு இனம் எனப் பல பிரிவுகளாகப் பிரிந்துகிடக்கும் பெண்களின் உரிமை குறித்த முழுமையான வரையறையைக் கூறுவது இயலாது எனினும், சிலரது விளக்கங்கள் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

கார்டன், பெண்களின் தாழ்நிலையை ஆராய்ந்து அதை மாற்ற மேற்கொள்ளப்படும் வழிமுறைகளே பெண்ணியம் என்கிறார். ஜெயின், பெண்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஓர் ஆற்றலை உருவாக்கி, பெண்மை அதன் தன்மையில் ஆண்களோடு மாறுபட்டிருப்பினும் அது ஆண்மைக்கு நிகரானது என்பதை ஏற்றுக் கொள்ள வைப்பது என்கிறார். புட்சர், பெண்ணியம் என்பது, பெண்கள் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதாரத் துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கம் என்கிறார். (முத்துச் சிதம்பரம், 1999:10-11)
சமூகத்திலும் வேலைத்தளத்திலும், குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும், இந்நிலையை மாற்றுவதற்குப் பெண்களும், ஆண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகள்என்கிறார் தேவதத்தா. (சண்முகசுந்தரம்.சு, 1994:10)

உலகளவில் அரசியல், பண்பாடு, பொருளாதார ஆண்மீகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என சார்லட் பன்ச் அவர்களும் அனைத்துப் பெண்களையும் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என பார்பரா ஸ்மித் அவர்களும், பெண்ணியம் உலகையே மாற்றியமைக்கும் இயக்கம் என்று தெரசா பிளிங்டன் அவர்களும் பெண்ணிய இயக்கத்தின் நோக்கங்களைத் தெளிவுபடுத்துகின்றனர். (பிரேமா.இரா,2001-13-14)
மேற்குறிப்பிட்ட கருத்துக்களிலிருந்து பெண்ணியத்தை இவ்வாறு பட்டியலிடலாம்.

1. அனைத்து வகைப் பெண்களுக்கும் உரிமைப் பெற போராடுதல்.
2. ஆணாதிக்கத்தை இனங்கண்டு எதிர்த்தல்.
3. ஆணும், பெண்ணும் நிகர் என ஒத்துக்கொள்ள வைத்தல்.
4. பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டல்.
5. பெண்களின் மீதான அனைத்து வகை ஒடுக்கு முறைகளையும் நீக்குதல்.
6. பெண்மைத் திணிப்புகளை இனங்கண்டு பெண்ணின் உண்மைக் குணங்களைக் கண்டறிதல்.
7. மொழி உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப்  பிரிவுகளிலும் உள்ள ஆணாதிக்கத்தைத்  திறனாய்ந்து மாற்ற முயல்தல்.

பெண்ணியம் என்பது ஆதிக்கத்தை எதிர்ப்பதே ஆகும். ஆண்களை எதிர்ப்பதன்று. இருபாலருக்கும் சம உரிமை, சமநீதி, சமமதிப்பு கிடைக்கும்படிச் செய்வதே இதன் நோக்கமாகும்.  பிறப்பு முதல் இறப்பு வரை, ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை, இழக்க விரும்பாத ஆண்களே பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது எனக் கருதுவர். ஆணும், பெண்ணும் சமஉரிமை பெற்று வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கையாகும். பெண் தாழ்ந்து ஆண் உயர்ந்துள்ள உறவு நிலைகளோ, ஆண் தாழ்ந்து பெண் உயர்ந்துள்ள உறவு நிலைகளோ ஊனமுற்ற சமுதாயத்தையே உருவாக்க முடியும். இருபாலாருக்கும் சமஉரிமை வேண்டுவதே மானுடத்தின் நோக்கமாகும். பெண்ணியத்தின் அடிப்படை மானுடமே.

1.5.0. பெண்ணிய வகைகள்
பெண்ணியத்தை முப்பெரும் பிரிவாக தத்துவம், இயக்கம், கோட்பாடு எனப் பிரிப்பர். பெண்ணியத் தத்துவம் என்பது, பெண்கள் காலங்காலமாய்ப் பண்பாட்டின் அடிப்படையில் தனித்துவமிழந்துக் காமப் பொருளாய் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்து வருவதைக் குறிக்கிறது. பெண்ணிய இயக்கம், போராட்டத்தின் மூலம் பெண்களுக்கிடையே எழுச்சியை ஏற்படுத்தி புதிய சமுதாயத்தை  உருவாக்குவதைக் குறிக்கிறது. பெண்ணியக் கோட்பாடு, ஆண்களைப் போலப் பெண்களும் சமஉரிமை பெறுவதற்கான வழிவகைகளை எடுத்துரைக்கிறது. இவற்றுள் பெண்ணிய இயக்கங்கள் சிலவற்றைக் குறித்துக் காண்போம்.

1.5.1. மிதவாதம் (அ) தாராளவாதப் பெண்ணியம் (கண்க்ஷங்ழ்ஹப் எங்ம்ண்ய்ண்ள்ம்)
மிதவாதப் பெண்ணியம் தான் முதலில் தோன்றிய பெண்ணுரிமை இயக்கமாகும். உடல் ரீதியாக, மனரீதியாகப் பெண் என்பவள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டதை எதிர்த்து இவ்வியக்கம் குரல் கொடுத்தது. ஆணைப் போல் பெண்ணும் பகுத்தறியும் திறன் பெற்றவள். ஆண் - பெண் என்ற பாகுபாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு விதமாக விளக்கப்படுகிறது. எனவே, ஆண்மை-பெண்மை என்ற கருத்தியல் ஆண், பெண் மீது கட்டமைப்பட்டவையே ஆகும். ஆணைப் போல் கல்வி, நிர்வாகம், அரசியல், நீதி, பொருளியல் தளங்களில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும். திருமண ஒப்பந்தங்கள் மாற்றப்படவேண்டும். சமூக, குடும்ப அமைப்பில் சிலமாற்றங்களை ஏற்படுத்திப் பெண்களுக்கு மதிப்பை வழங்க வேண்டும். என்பதே மிதவாதப் பெண்ணியவாதிகளின் கருத்துக்களாகும்.

1.5.2. தீவிரவாதப் பெண்ணியம்
குழந்தைப் பேறுதான் பெண் அடிமைத்தனத்திற்குக் காரணம், தந்தை வழிச் சமூகத்தை உடைக்க வேண்டும், ஆணின்றிப் பெண் தனித்து வாழ வேண்டும். என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு இவ்வியக்கம் தோன்றியது. பெண்ணின் மீது ஆணின் அதிகாரம் திருமணத்தின் மூலமே நிரந்தரமாக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலின வேறுபாடு, பொருளாதாரக் கீழ்நிலை போன்றவை தொடர்வதற்குக் குடும்ப அமைப்பே காரணமாகிறது. ஆண்களால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும், சமூக மதிப்புகளையும் உடைத்தெறிவதே இவர்களின் நோக்கமாகும்.

1.5.3. சமதர்மப் பெண்ணியம்
மார்ச்சிய, தீவிரவாதப் பெண்ணியத் தத்துவங்களை இணைத்து, பெண்கள் பால் பாகுபாட்டாலும், வர்க்கப்பாகுபாட்டாலும் ஒடுக்கப்படுவதை இப்பெண்ணியம் எதிர்க்கின்றது. ஆண்கள் தங்கள் கருத்தியலை மாற்றிக் கொண்டு, இல்லறப்பணியில் பங்கு கொள்ள வேண்டும் என்று சமதர்மப் பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். பால், வர்க்கப் பொருளாதார, ஆதிக்க நிலைகளில் பெண் சமத்துவம் பெற முயலவேண்டும். இனத்தால் வேறுபட்டுள்ள பெண்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே சமதர்மப் பெண்ணியமாகும்.

1.5.4. மார்க்சியப் பெண்ணியம்
இவர்கள் பெண்ணின் விடுதலையை வர்க்க பேத அடிப்படையில் ஆராய்ந்தனர். குடும்பத்தைத் தொழிற்சாலையாகக் கருதி ஆண் இனத்தை முதலாளியாகவும், பெண் இனத்தைத் தொழிலாளியாகவும் இனங்காட்டினார். குடும்பத்தில் ஆணின் தனிச் சொத்துரிமையினால் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்வதை முதல் வர்க்க ஒடுக்கு முறையாக இப்பெண்ணியம் கருதுகிறது. வீட்டில் எதியம் பெறாது மகளிர் பணிபுரிவதைச் சார்ந்தே முதலாளித்துவம் உள்ளது. பெண்களின் உழைப்பைச் சுரண்டியே முதலாளித்துவம் உயிர் வாழ்கிறது. பெண்ணின் மக்கட்பேறு சக்தியை, அதன் மேன்மையை உலகம் உணர வேண்டும். பால் அடிப்படையிலான வேலைபாகுபாட்டை நிராகரிக்க வேண்டும் என்பதே மார்க்சியப் பெண்ணியமாகும்.

1.5.5. உளப்பகுப்பாய்வுப் பெண்ணியம்
பிராய்டின் உளப் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இப்பெண்ணியம் குழந்தை வளர்ப்பு தொடர்பான சிக்கலை ஆராய்கிறது. பெண் மட்டும் வளர்க்கும் குழந்தை திறமைபெற்றதாக வளராது என்ற கருத்தை இதுமுன் வைத்து வாதாடுகிறது. தாய், தந்தை இருவரும் சேர்ந்து வளர்க்கும் பொழுதே சரியான குழந்தைகள் உருவாவர் என்று இக்கோட்பாடு கூறுகிறது.

1.5.6. ஆன்மிகப் பெண்ணியம்
சமயம் தொடர்பான கருத்துக்களையும், கதைகளையும் ஆராய்ந்த இப்பெண்ணியவாதிகள் மதம், சமயம் போன்றவற்றின் பேரால் பெண் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தினர்.

1.5.7. கிறித்துவப் பெண்ணியம்
கிறித்துவ வேத நூலாகிய பைபிளில் உள்ள கருத்துக்களுக்கும் அதன் நடைமுறை செயல்பாட்டிற்கும் குறிப்பாக பெண்களின் மீதான செயல்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டி கிறித்துவப் பெண்ணியவாதிகள் மடாலயங்களில் குரல் கொடுத்தனர். மடாலயப் பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். மதத்தில் பெண்ணடிமை கூடாது என்றும் கிறித்துவ ஆலயங்களிலுள்ள கத்தோலிக்க இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் இவர்கள் போராடினர் .

1.5.8. இந்தியப் பெண்ணியம்
சமூகச் சீர்திருத்த நோக்கில் இந்தியப் பெண்ணியம் தோன்றியது. விடுதலைப் போராட்டக் காலத்தில் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள நேரிட்டது. காந்தி, இராஜாராம் மோகன்ராய், பாரதி போன்ற தனிமனிதர் செயல்பாடுகளால் பெண்களுக்குக் கேடு தரும் பழைய மரபுகள் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டன. விடுதலை பெற்ற பின்பு உலகப் பெண்ணியச் சிந்தனைகளைப் பெற்று இந்தியாவில் பெண்ணியம் வளர்ந்து வருகிறது.

1.6.0. பெண்ணிய இலக்கியத் திறனாய்வு
இலக்கியம் என்பது ஆண்களின் ஆதிக்கக் கருத்துகளைச் சுமந்து வரும் கருவியாகவே உலகம் முழுவதும் வழங்கிவருகிறது. இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் மொழியும் ஆணாதிக்க மொழியே. ஆண்களின் படைப்புகளில் பெண்கள், அடங்கிச் செல்பவர்களாக, உருவமற்றவர்களாக, மன உளைச்சலுக்கு ஆட்பட்டவர்களாக, கடமையுணர்வு, பகுத்தறிவற்ற அடங்காப்பிடாரிகளாக, குறை கூறுபவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளதாக எல்மான் வரையறுக்கிறார் (பிரேமா.இரா, 2001:139)

இலக்கியத்தில் பெண்ணை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் ஆய்வு குறித்து, மேரிவுல் ஸ்டன் கிராப்ட், சைமான்டி பெவாயர் கேட்மில்லட் பெட்டி பிரைடன் ஜீலியட் மிச்செல்  எலைன் ஷோ வால்டர் போன்றோர் திறனாய்வு செய்துள்ளனர். பெண்ணிய இலக்கியத் திறனாய்வு என்பது, இலக்கியங்களிலுள்ள ஆணாதிக்கக் கருத்தியல்களைத் தற்காலத்திற்கு ஏற்ப நோக்குவது, பெண்ணியத்திற்குப் பொருந்தாதவற்றை நீக்குவது, பெண் பற்றிய போலியானக் கருத்தியல்களை உடைத்தெறிவது, இலக்கியம் மற்றும் மொழிகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள அடக்குமுறைக் கூறுகளை இனங்கண்டு மறுபார்வைக்கு உட்படுத்துவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்ணியம் என்பது நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளது. நாட்டிற்குள்ளும் பல பிரிவுகள் கருத்துகள், போக்குகள் உள்ளன. பெண்ணியம் பிற அறிவியல் போல எளிய சுருக்கமான கோட்பாடு அன்று. பெண்ணியக் கோட்பாடுகள் அந்தந்த நிலமக்களின் அறிவு, இயல்பு, பண்பாடு, சமூக அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றோடு தொடர்புடையதாக உள்ளது. மேலும் அமெரிக்கரும், ஒரோப்பியரும் உருவாக்கிய கோட்பாடுகளைக் கொண்டு தமிழில் உள்ள ஒரு குறிப்பிட்ட வட்டார இலக்கியத்தை ஆராய்வது ஏற்புடையது அல்ல. எனினும் மரபு வழி  வந்த இலக்கியங்களிலுள்ள ஆண் கருத்தியல்களைக் கண்டறிந்து திறனாய பத்து வகையான அணுகுமுறைகள் உள்ளதாக பொ.நா,கமலா (1999:79-80) பட்டியலிடுகிறார்.

இரா. பிரேமா வரையறுத்துள்ள பன்னிரெண்டு வகை இலக்கியத் திறனாய்வில் ஒன்று பெண்ணியத் திறனாய்வு(2001:9) என்பது ஆண், பெண் வேறுபாடின்றி இருசாரரின் படைப்புகளையும் பெண்ணிய நோக்கில் ஆராய்வதாகும். ஆர்.சண்முகசுந்தரத்தின் நாவல்களில் மேற்கூறிய பெண்ணியத் திறனாய்வு அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியருடைய பெண் பற்றிய கருத்தியல்களைப் பற்றி ஆராய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.

1.6.1. பெண்ணியத் திறனாய்வு - தொகுப்புரை
1. ஆண், பெண் இடையே இன்று நாம் காணும் வேறுபாடுகள் இயற்கையால் உருவாக்கப்பட்டவை அல்ல.
2. அதிகாரப் போட்டியில் வெற்றிபெற்ற ஆணினம் உருவாக்கிய ஆண் - பெண் கருத்தியல்கள் காரணமாகவே பெண் நிலை தாழ்ந்த நிலையடைந்தது.
3. பெண்ணடிமைத்தனத்தின் மூலம் ஆண் பல சலுகைகளைப் பெற்றதால், பண்பாட்டின் பெயரால் பெண்ணைத் தலைமுறை தலைமுறையாக அடக்கி வைக்கப் பல புனைந்துரைகளை ஆண் உருவாக்கினான்.
4. உலகின் மிக நீண்ட விடுதலைப் போராட்டம் பெண் விடுதலைப் போராட்டமே ஆகும்.
5. அமெரிக்காவிலும் ஒரோப்பாவிலும் தோன்றிய பெண் உரிமை எழுச்சி, உலகம் முழுவதும்பெண்ணிய இயக்கங்களுக்கு வித்திட்டன.
6. பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது அன்று. ஆதிக்கத்திற்கு எதிரானதே.
7. மிதவாதப் பெண்ணிய இயக்கம் தொடங்கி பல பெண்ணிய இயக்கங்கள் தோன்றி பெண்களின் உரிமைக்காகப் போராடி வருகின்றன.
8. பெண்ணிய இலக்கியத் திறனாய்வு என்பது இலக்கியங்களில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆணாதிக்கக் கருத்தியலைக் கண்டறிந்து பெண் பற்றிய போலியான கருத்தியல்களை இனங்காட்டுவதாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?