நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் கல்வியும் சமூக சேவையும்

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் கல்வியும் சமூக சேவையும்

படித்த பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளுவதோடு சமூகச் சேவையிலும் உடுபடுவார்கள் என்பதைப் பல பெண் பாத்திரங்களின் மூலம் உணர்த்துகிறார். படித்த பெண்கள் மருத்துவராக, வக்கீலாக, அமைச்சராக, ஆளுநராக, வெளிநாட்டுத்தூதுவராக வர முடியும். ஆனால் விரிந்தமலர் புதினத்தில் வரும் கமலத்திற்கு அவற்றிலெல்லாம் விருப்பம் இல்லை. 
 அவற்றிற்கெல்லாம் மேலான மனித குலம் முழுமைக்கும் சேவை செய்வதற்கான உலக சமாதானப் பணியில்
ஈடுபாடு கொள்ள விரும்புகிறாள். பழங்களை நேராக எடுத்துக் கொண்டு போய்ச் சேரியிலுள்ள குழந்தைகளுக்குத் தந்துவிட்டு காற்றில் பறப்பது போன்று களிப்போடு நடையிட்டு வருகின்ற சமயத்தில் - அவள் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கின்ற தன் உணர்வுகளை எண்ணிப் பார்த்தாள். (ப-213) பாலாமணியும் செஞ்சிலுவைச் சங்கத்தினரோடு சேர்ந்து கிராமப் பகுதி மக்களுக்குச் சேவை செய்கிறாள். தன் ஊர் இளைஞர்களையும் அதில் ஈடுபடுத்துகிறாள். (விரிந்தமலர்.:106)
மீனாட்சி தன் சொல்வன்மையால் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறாள். அவளுடைய பிரசங்க வன்மையை அந்தப் பட்டிக்காட்டுப் பிராந்தியம் அதற்கு முன் கேட்டுப் பூரித்ததில்லை. தங்கள் ஊர்க்காரி என்பதைத் தெரிந்தவுடன் அவர்களுடைய உற்சாகம் கரை புரண்டுவிட்டது. பாட்டிமார்களே தங்கள் ஓட்டுக்களை நிச்சயம் சின்ன மணியக்காரருக்கே போடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.” (இ.நே. : 197) அவள் பிரசங்கம் செய்த கட்சியே வெற்றி பெறுகிறது.

சாவித்ரியின் மாமா பஞ்சாயத்துத் தலைவர். அவர் மூலமாகப் பல செய்திகளை நன்றாக அறிந்து கொள்கிறாள். நீங்க மின்சாரத்திற்கு ஏற்பாடு பண்ணாதவரை நம்ம ஊர் கீழுக்குத்தான் போய்க் கொண்டிருக்கும்.” (மூன்று அழைப்பு.:213) என்று ஆலோசனை கூறுகிறாள் தங்கள் தோட்டத்துக் கிணறுகளில் என்ஜின் வைத்துத் தண்ணீர் இறைக்க வேண்டும் என்பது அவளுடைய ஆசை. வெள்ளாமையைப் பெருக்க வேண்டுமென்ற ஆர்வம் மட்டுமின்றி ஊர் முன்னேறும் என்ற அவளது கனவும் நிறைவேறும் என நம்புகிறாள்.
 அவளது பேச்சாற்றலை வியக்கும் முத்து அவளை அரசியலில் உடுபடச் சொல்கிறான். அவளுக்கு அரசியல் மகிழ்ச்சி தரும் என்று நம்பிக்கையூட்டுகிறான். (ப-216) அவளது உறவினரான செல்ல முதலியார்,  சாவித்ரி படித்திருக்கிறாள். அவள் எம்.எல்.ஏ. ஆவாள். அப்படியே அமைச்சர் ஆகிவிடுவாள்.” (மூன்று அழைப்பு :197) என்று நம்புகிறார்.
 பெண் சமூகத்தைப் பாதிக்க முடியும், அதே போன்று சமூகம் பெண்ணைப்    பாதிக்கும் .... ஒர் ஆணைப் போன்று பெண்ணும் தனக்குரிய சொர்க்கம் அல்லது நரகத்தைத் தேர்ந்தெடுக்கவோ படைத்துக்கொள்ளவோ வலிமையுடையவள்என்று பிரைடன் என்பவர் கூறுகிறார் (சரோஜா. கோ, 2000:38) கல்வி கற்ற பெண்கள் சமூக சேவை, அரசியல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு சமூக மாற்றத்திற்கு வித்திடுகின்றனர். இங்குப் பழைய மரபுகளில் மூழ்கித் திளைத்த ஆண்களே, பெண்களுக்கு வழிகாட்டி அவர்களை அரசியல் போன்ற சமுதாய இயக்கத்தில் பங்கு பெறச் செய்கின்றனர். வீட்டையும், நாட்டையும் காக்கும் பொறுப்பு ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதென்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் கல்வியறிவு மறுக்கப்பட்ட பெண், கல்வி கற்க அனுமதிக்கப்பட்டவுடன், ஆண்களைப் போலவே எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல என்ற உண்மையை வெளிப்படுத்துவது போல பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு வெற்றி பெற்றனர்.
பாரதி கண்ட கனவை நனவாக்கிக் கொண்டு முன்னேறும் பெண்கள் காலத்திற்கேற்ப தன் இளுமையிலும் பல மாற்றங்களைப் பெற்று வளருகின்றனர். அரசியலிலும், அறிவுத் துறையிலும் பெண்கள் முத்திரை பதித்து வருவதற்கான பல சான்றுகளை ஆர்.சண்முகசுந்தரம்நாவலில் தெளிவாக்கியுள்ளார். பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்கு, மேன்மைக்கு, மரபுகளைத் தகர்த்து முன்னேறுவதற்குப் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும். கல்வி பெறாத பெண்கள் பழைய மரபுக்குள்ளாகவே அழுந்தி சிக்கித் தவிப்பதை இரம்பப் புதினங்களில் காட்டுகிறார்.
 பெண்ணுக்குக் கொடுக்கப்படும் கல்வியினால் அவர்கள் வாழ்வில் மட்டுமின்றி சமூகத்திலும் குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய பாரதத்தை உருவாக்கிக் காட்டுவர் என்ற ஆசிரியரின் நோக்கம் புலப்படுகிறது. பெண் ஆணைவிட எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என்பதை அவள் கல்வி கற்றாலோழிய நிரூபிக்க இயலாது. அக்கல்வி இன்றேல் ஆண்களும் அவளை ஆணையாக மதிக்கப்பட மாட்டார்கள்.” (தூரன் பெ,1978:251) என்ற பாரதியின் கருத்துக்களுக்கு உருவம் கொடுக்கக்கூடிய வகையில் கமலமும் மீனாட்சியும் உருவாக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?