நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களில் சமுதாய மாற்றம்


   

ஆர்.சண்முகசுந்தரம் நாவல்களில் சமுதாய மாற்றம்


   இலக்கியத்துறையில் முதல் வட்டாரப் புதினம் என்ற துறையைத் தோற்றுவித்துள்ள ஆா். . வின் பங்களிப்பை இலக்கிய வரலாற்று உலகம் பறக்கணித்து வருகிறதுஎனினும் இலக்கியவானில் விடிவெள்ளியாக வட்டார எழுத்தாளா்களுக்கு இன்று வரை இருந்து வருகிறார்இவா் பன்முக ஆளுமை உடையவா்பல துறைகளில் முத்திரை பதித்தவா்சிறுகதை, புதினம், நாடகம், மொழிபெயா்ப்பு, திறனாய்வு என்று இவரது படைப்புகள் பல இருந்தாலும் புதினங்களே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனஅவையும் குறிப்பித்தக்க அளவில்தான் உள்ளன.நாவல்களில் மட்டுமல்ல இந்திய நாவல்களில் சண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டுகிராமியச் சூழ்நிலைகளை முழுதும் உபயோகித்துப் பிராந்திய நாவல் என்கிற துறையை முதன் முதலாக இந்தியாவில் உருவாக்கியவா் அவா்தான் என்று சொல்லலாம்” (இராமசாமி.டி.சி., 1994:47) என்று குறிப்பிடுகிறார்.


 

  தொழிற் புரட்சியின் போது ஏற்பட்ட இயந்திரப் பெருக்கம் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றம் போன்றவற்றை அறிவதற்குப் புதினங்களே சிறந்த ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டு வருகின்றன.

எழுத்திலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நாவல் எழுதத் தொடங்கிய ஆர்.சண்முகசுந்தரம் எடுத்துக் கொண்ட கதைக்களம் தமிழகத்தின் நாகரிக வெளிச்சம் சிறிதும் படராத எளிய கொங்குப் பகுதிக் கிராமங்கள். விடுதலைப் போராட்டம் தொடர்பான காலகட்டத்திலும் அக்கிராமங்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுவிடவில்லை. அக்கிராமங்களில் பத்துப் பதினைந்து வீடுகள்தான் இருக்கும். கிராமங்களுக்கு வரும் சாலைகளோ கரடுமுரடானவை. வண்டியில் வந்தாலே இடுப்பு முறிந்து விடும். எனவே, வெளியூர்க்காரர்கள் யாரும் அங்கு வருவதில்லை. உள்ளூர்க்காரர்களுக்கு நகரங்களில் சென்று வரும் அளவிற்கு வேலையில்லை. கீரனூர், வெங்கம்பாளையம், சிவியார்பாளையம், சுள்ளிவலசு, பூமாண்டன் வலசு, தளாபாளையம், வெங்கமேடு, ஒரத்தப்பாளையம் போன்ற கிராமங்களை மையப்படுத்தியே கதை எழுதியுள்ளார்.


இச்சிற்றூரில் வாழ்ந்த மக்கள் அறுபதாம் வருடப் பஞ்சத்தின் போதும் அச்சிற்றூரை விட்டு நீங்கவில்லை. இப்பஞ்சத்தைப்பற்றி, தமிழகத்தில் 1876-78 ஆண்டுகளில் மாபெரும் பஞ்சம் ஒன்று தோன்றி இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தது. இதற்குத்         தாது-ஈசுவர ஆண்டு கருப்பு என்று குறிப்பிடுவார்கள். இக்கருப்பினால் அதிகமான உயிர்ச்சேதம் வட ஆற்காடு மாவட்டத்தில் தான் ஏற்பட்டது என கே.கே.பிள்ளை (1972:481) குறிப்பிடுகிறார்.

அப்பஞ்சத்தின் பாதிப்பு கொங்கு நாட்டிலும் நிலவியதைத், தழை தலைகளைத் தின்று வாழ்ந்தார்கள் கஞ்சித் தொட்டிகள் தூரா தூரத்தில் அமைக்கப்பட்டு இருந்ததாம். நடந்து போய்ச் சேருவதற்குள் பாதிப் பிராணன் போய்விடும்” (ச.சு. :27) என்று குறிப்பிடும் ஆர்.ச., அறுபதாம் வருடத்தில் மட்டுமல்ல அனைத்து வருடங்களிலும் சில மாதம் மட்டுமே அங்குள்ள நொய்யல் இற்றில் நீர் ஒடிக்கொண்டிருக்கும். அதுவும் பாதம் நனையும் அளவே இருக்கும். எனினும் அவ்வூரை விட்டு நீங்காத மக்கள் என்றாவது மழை வரும் என்ற நம்பிக்கையில் மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட வறண்ட பூமி, வெப்பக்காற்று, புன்செய் விவசாயம், சோளம் போன்ற எளிய பயிர்களின் விளைச்சல், அடிக்கடி தாக்கும் பஞ்சம், பட்டினி இந்த அடையாளங்களைக் கொண்ட வட்டாரத்தில் விடாப்பிடியாக வாழும் மனிதர்களையும் அவர்களுடைய எளிய வாழ்க்கையும் இலக்கியத்துக்கு ஒரு பொருளாகக் கொண்டதில்தான் சண்முக சுந்தரத்தின் சிறப்பு அமைந்திருக்கிறது” (சிற்பி, 2000:99)

இரண்டாம் உலக யுத்தம் முடிவிற்கு வந்த பிறகு திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற நகரங்களில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இச்சிற்றூர்களைச் சுற்றி இந்நகரங்கள் இருந்ததால் பல இளைஞர்கள் இத்தொழில் பகுதிகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில்கள், பெரும் இலைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறிமுகப்படுத்தும்போது அப்பகுதியின் பொருளாதார அமைப்பு ஒரு புதிய பாதைக்குத் திரும்புகிறது. வாழ்வின் ஒரு பிரிவில் ஏற்படும் மாற்றம் பின்னர் தொடர்ச்சியாக வேறு பிரிவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.” (பக்வத்சலபாரதி, 1990:579) நகரத்திலிருந்து வளமுடன் திரும்பியவர்கள் சிற்றூர் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தினர்.

நான் இங்கிருந்தா ஆண்ணைக்கு இருக்கிற நெலையிலே இருக்க முடியுமா? கடியாரம், மோதிரம், கையிலே ரண்டு இயிரம், சொந்த எடு - பொண்டாட்டி கழுத்திலே தங்கச் சங்கிலி” (அ.கோ.:72) இதைக் கேள்விப்பட்ட பலரும் சிற்றூரில் இருந்து நகரங்களுக்குக் கிளம்பினர். எனினும், அவர்களால் அங்கு வேலை செய்ய முடியவில்லை. மணியைப் பார்த்து செய்கிற வேலை, சங்கின் ஒலி, ஆட்களுக்கு அடங்கி நடக்கும் நிலை, தொழிற்சாலைக்கு உள்ளே நுழையுமுன்னும் வெளியே வரும்போதும் சோதனையிட்டு அனுப்பும் வழக்கம் போன்றவை அவர்களைக் கிராமத்திற்கே துரத்தின. எனினும், மில்களில் ஆட்கள் குவியாமல் இல்லை. ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் குவியத் தொடங்கினார்கள். இதனால், சிற்றூரில் எளிய மக்களிடம் பணப்பழக்கம் அதிகரித்தது.

சிற்றூரில் பரம்பரைப் பணக்காரர்கள் தம் பெருமை சரியாமலிருக்க ஆடம்பரமாகச் செலவழித்தனர். காளைகளை மாற்றுவது. வண்டிகளை மாற்றுவது, நகைக் கடைக்கும் ஜவுளிக் கடைக்கும்  போவதற்கே நேரம் சரியாக இருந்தது. மற்ற நேரங்களில் தப்புத்தண்டா, அடிதடி, கலகம், கோர்ட் வாசல் ஒட்டல் சோறு!” (அ.கோ:79) இப்படிப் பழம் பெருமையில் சீரழியத் தொடங்கினர். சிற்றூரின் பழைய கட்டுப்பாடு, அதிகாரம் போன்றவை நெக்குவிடத் தொடங்கின.

நகரத்தில் வேலை செய்து வரும் மக்கள் தொகைப் பெருகியதைப் போல சங்கங்களும் பெருகின. தொழிற்சாலை அதிபர்களுக்கே புதியவர்களுக்கு வேலை போட்டுக் கொடுக்கும் அதிகாரம் பறிபோய்விடுகிறது. தொழிற்சாலை முதலாளிகளுக்கு அரசு பின்னணியிருந்தாலும் மக்கள் சக்தியின் முன் அவை மண்டியிட்டன. தொழிற்சாலைகளில் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர். சங்கத்தலைவர்களுக்குப் பெரு மதிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலைகள் ஒழுங்காக நடைபெற்றால் சங்கங்கள் தூங்கி வழியும். பாடுபடாவிட்டால் சந்தாத் தொகை குவியுமா? சந்தாப்பணத்தில் வளர்ந்தவை தானே சங்கக் கட்டிடங்கள், கார்கள், இதர வசதிகள் அவர்கள் அனுபவிப்பது எல்லாம் எல்லாமே தொழிலாளர்களை மையமாக வைத்து விளையாடுகிற விளையாட்டுத்தான் (த.வ. :82)

சங்கப்போராட்டங்களினால் நாலு மாத போனஸ் பணம் கிடைத்தது. மக்கள் தாராளமாய் செலவழிக்கக் கற்றுக் கொண்டார்கள். கடனும் ஐராளமாகக் கிடைத்தது. பணம் புரண்டு கொண்டிருந்தது. பஞ்சமில்லை! கடனுக்குத் தான் எல்லோருக்குமே சுலபமாகக் கடன் கிடைத்தது! பலர் பணத்தை என்ன செய்வதென்று அறியாது நன்றாகச் செலவழித்தார்கள்” (த.வ.:59) குடும்ப உறவைக் காட்டிலும் பண உறவுதான் மக்களை இட்டிப் படைத்து ஒவ்வொரு உறவுக் கண்ணியையும் தெறித்து விழச் செய்தது. புது வாழ்வாக மில் வேலை, போனஸ் (77), வேலை நிறுத்தம் (173), சீட்டுக் குலுக்கி மோதிரப்பரிசு (163) பெறும் தூண்டில் கவர்ச்சி ஆகியவற்றை நகர்வாழ்வு பரப்பியது” (வீராசாமி. த.வே, 1986:134) சுற்றுப்புற நகர வளர்ச்சி, அது சிற்றூர் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம், கிராம மக்களின் பழமை நாட்டம், புதுமையைக் கண்டு அச்சம் போன்றவை ஆர்.சண்முகசுந்தரத்தின் புதினங்களில் பொதுப் பண்பாக உள்ளன.

ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்புகளை அவை செயல்படும் களத்தின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை சிற்றூரை மட்டும் கொண்டு எழுதப் பட்டவையும், கிராமத்தை மட்டும் முதன்மையாகக் கொண்டு நகரத்தில் செயல்படுவதாக எழுதப்பட்டவையும் ஆகும்.” (பெருமாள் முருகன், 2000:18)

நகர வாழ்வின் நாகரிகம், சிற்றூரிலிருந்து சென்று வாழும் பலருக்கு மாய உலகமாகத் தோன்றியது. பகட்டில்லாத எளிய வாழ்க்கை வாழும் சிற்றூர் மக்களின் வாழ்வில் நகர நாகரிகம் நுழைந்து அவர்களை எதிலும் பிடிப்பில்லாதவர்களாக மாற்றியது. பலருக்குத் தவறான வழியைக் காட்டியது. விட்டில் பூச்சிகளாக மாறிய பலர் சிற்றூர் சமூகத்திற்கேற்பவும், நகர நாகரிகத்திற்கு ஏற்பவும் வாழமுடியாமல், இருப்பதையும் பறி கொடுத்து நின்றனர். முதிய தலைமுறையினருக்கு இளைய தலைமுறையினருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. பல தலைமுறைகளாக நிலவி வந்த மண்ணின் மீதான மதிப்பு தளர்ந்து வியாபாரநோக்கம் தலையெடுக்கத் தொடங்கியது. மனிதர்களுக்கு இடையே பணமே பிரதானமாக எழுந்து நின்றது. கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துத் தனிக் குடும்பங்கள் பெருகத் தொடங்கின.

நகர நாகரிகத்தின் விளைவுகள் சிற்றூர் பெண்களின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கின. இதன் விளைவாக நன்மைகளும் ஏற்பட்டன. தீமைகளும் ஏற்பட்டன. கிராம-நகர சமூகத்தின் மாற்றங்களைப்பதிவு செய்துள்ள ஆர்.சண்முகசுந்தரம், இரண்டின் நிறை குறைகளைக் கலந்து நிகழ்ந்தவற்றோடு ஆணைத்து வெளியிட்டுள்ளார். அவற்றூடாக அவரது சமுதாயத் திறனாய்வு வெளியாகி உள்ளது நாவலின் கரு , கதைப் பின்னல் கதை நிகழ்ச்சிகள், பாத்திரப்படைப்பு, நாவலுள் ஆங்காங்கே பொதிந்து வைத்துள்ள வாழ்வியற் கருத்துக்கள் ஆகியவற்றின் வாயிலாக நாவலாசிரியர்கள் சமூக எதிர்ப்பைப் புலப்படுத்துகின்றனர்” (சேதுமணி மணியன், 1979:115)  இலக்கியத்தைப் பொழுது போக்கிற்காகவன்றிச்  சமுதாயத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவும், பெண்கள் வாழ்வில் ஒளி ஏற்படுத்துவதற்காகவும், புதினங்களைக் கருவியாகக் கொண்டு இலக்கிய உணர்வோடு படைத்துள்ள ஆர்.சண்முகசுந்தரம் பெண்களின் வாழ்வினை அவற்றின் அவலங்களோடு வெளியிட்டுள்ளார்.

இலக்கியப்படைப்பு என்பது உணர்வு பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு ஆகும். படைப்பாளரின் பகுத்தாயும் உள்ளம் கூர்நோக்கு, அனுபவங்கள், அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கங்கள் என்பனவும் அவர் படைப்புக்களில் வெளிப்படும். படைப்பாளியால் படைக்கப்படும் பாத்திரங்கள் அவர் வாழ்க்கையில் கண்டு கடந்து வந்த பாத்திரங்கள் அவர் படைப்புக்களில் காணப்பெறும் மகிழ்ச்சி, துக்கம் முதலான உணர்வுகள் அவருடைய உணர்வுத் தேக்கங்கள் ஆகும்.” (ஈசுவரபிள்ளை த.1998:279)  சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராக எண்ணிக்கையில் வாழுகின்ற பெண்கள் குடும்ப வாழ்விற்கும் சமூக வளர்ச்சிக்கும் உதவுபவர்கள் அடிப்படையானவர்கள் ஆனால் சமூகத்தில் அவர்களுக்குச் சமஉரிமை வழங்கப்படுவதில்லை.

சமூக வாழ்வில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்து, பழக்க வழக்கங்களையும், மரபுகளையும், ஏற்படுத்தி அவள் வளரும் போதே அவளது சிறகுகளை உடைத்து அடக்கி விடுகிறார்கள். இதனால் தங்கள் ஆற்றலை, உரிமையை உணராமலேயே பெண்கள் செத்து மடிகின்றனர்.

பெண்ணுக்கு ஆற்றலை மீட்டுத் தருபவை கல்வியும் பொருளாதாரமும். தன் வாழ்நாளில் மண வாழ்வு சார்ந்தே அவள் பல சிக்கல்களைச் சந்திக்கிறாள். இதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் பல இன்னல்களைக் கால முழுவதும் அனுபவிக்க நேரிடுகிறது. இவற்றை எடுத்துக்காட்டி அதன் காரண காரியங்களை ஆராய்வதற்குண்டான வழி வகைகளைத் தன் இயல்பான நடைப்போக்கில் ஆர்.சண்முகசுந்தரம் படைத்துள்ளார். சிற்றூர் கதைகளையே மையமாகக் கொண்டு எழுதியுள்ள ஆர்.சண்முகசுந்தரம் போன்றவர்களை விமர்சிக்கும் க. கைலாசபதி, பழமை நாட்டம் மேற்குறிப்பிட்ட நாவல்களிற் காணாப்படினும், சமுதாய இயக்கமே அவற்றை மறைமுகமாக வழி நடத்துகின்றன” (1981:227) என்று குறிப்பிடுகிறார்.

பொதுவாக வட்டார புதினங்களைப் பற்றிக் குறிப்பிடும் மா. இராமலிங்கம், காலத்தின் வேகமான சுழற்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பழமையிலேயே காலூன்றி நின்று கொண்டு, புதுமையை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாத ஒரு நிலையை பெரும்பாலான வட்டார நாவல்கள் காட்டுகின்றன” (1999:77) என்கிறார்.

எல்லாச் சமூகங்களிலும் பெண்களுக்கான அடிப்படைச் சிக்கல்கள் பொதுவானவையாக இருந்தாலும், குறிப்பிட்ட சமூகத்தைப் சார்ந்த பெண்களின் தனிப்பட்ட சிக்கல்களைச் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கு, அங்கு வாழ்ந்து அவர்களைப் பற்றி எழுதியிருக்கும் படைப்புக்கள் வழி இராயும் பொழுதே சிக்கல்களுக்கான காரணம்  கிடைக்கும். ஆர்.சண்முகசுந்தரம், கொங்குச் சமூகத்தில் சாலை வசதிகளும் மின்சார வசதியும் அறியாத பெரும்பாலான சிற்றூர்களையே கதைக் களங்களாக கொண்டிருக்கிறார். நாடு விடுதலை பெற்றதன் சுவடே அச்சிற்றூர்களில் படரவில்லை. நகரத்திற்குச் சென்று மீளும் மனிதர்கள் மெல்லமெல்ல நகரத்து ஒளியை அதன் மீது பாய்ச்சத் தொடங்கியுள்ளார்கள். அச்சிற்றூர்களில் ஏற்படும் பெண்கள் தொடர்பான படிப்படியான மாற்றங்களில் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?