கவிஞர் கு.கணேசன் கவிதைகளில் கல்விச்
சிந்தனைகள்
கவிஞன் என்பவன் சமகால வாழ்வினை நாடிப் பிடித்துச் சொல்லும் மருத்துவன். கவிஞன் கற்பனையில் மிதந்தாலும், பொய் கலந்து கவிதைகளை உருவாக்கினாலும், நிகழ்கால வாழ்வின் உண்மைகள் ஏதோ ஒரு வகையில் அவன் படைப்புகளில் அடிநாதமாய் ஓடிக் கொண்டிருக்கும். சமூக வாழ்வில் நிகழும் நிகழ்கால அவலங்களே ஒருவனை எழுதத்தூண்டுகின்றன. சமூக அக்கறை கொண்ட மனிதன், வாழ்வின் முரண்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது அவனுள் ஏற்படுகின்ற உந்துதல்களே படைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. படிப்பவர்களுக்கு படைப்புகளினாலும், படைப்புகளின் வழி வெளிப்படுத்தப்படுகின்ற வாழ்க்கைப் போக்குகளினாலும் ஏதோ ஒரு வகையில் தான் உணர்த்த வந்ததை கவிஞன் உணர்த்தி விடுகிறான்.
மேலும் வாசிக்க....
படிக்கும் வாசகர் மனதையும் அப்படைப்புத் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்தனையைத் தூண்டிவிடுகிறது. மக்களைச் சிந்திக்கச் செய்தலே சீர்திருத்தத்தின் முதற்படியாகும். கவிஞன் களமிறங்கி சீர்திருத்த முனைவதை விட, மக்களைச் சிந்திக்க வைக்கும் போதே அது முழுமையான வெற்றியைத் தருகிறது. எனவேதான், பாரதி எழுத்தை ஆயுதமாகவும், தெய்வமாகவும் போற்றினான். ‘எனக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்’ என கம்பீரமாகக் கூறினான். ‘பாட்டுத்திறத்தாலே இவ்வையகத்தை பாவித்திட முடியும்’ என்று திடமாக நம்பினான். பாரதியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்தவர்கள், நடப்பவர்கள் ஏராளம். அதில் ஒருவர் கவிஞர் கு.கணேசன்.
""""நெம்பு கோல்
கவிதை எழுதி
யுகத்தைப்
புரட்டிப் போட்டோர்
பூமியில் இல்லையா"" (ப. 139)
என்ற அவரது கவிதை எழுத்தின் மகத்தான ஆற்றலை, அது மாற்றிக் காட்டிய சமூகப்புரட்சிகளை நினைவிற்குக் கொண்டு வருகிறது.
""""எழுதுகோல் முனையால்
பழைய குப்பைகளைக்
குத்திக் கூறுபோடு"" (ப. 138)
என்ற கு. கணேசனின் வரிகள் மனிதஇனம் எழுதுகோல் முனையால் எதையும் சாதிக்கலாம் ; எதையும் மாற்றிக் காட்டலாம் என்கிற நம்பிக்கையைத் தருகிறது.
""""மனிதப் பயிர்கள்
கருகாமல் காக்க
உரமாய்
கவிதையை விதைப்போம்"" (ப. 140)
என்ற வரிகள் மானுடப் பயிரைக் காக்க, வளர்க்க ‘கவிதைதான் உரம்’ என்கிறது. கவிஞர்களின் சமகால வாழ்க்கையைக் கூர்மையாகப் பார்க்கும் பார்வையும், வாழ்க்கைச் சிக்கல்களைத் தெளிவுறக் காட்டும் ஆற்றலும் கொண்ட கவிதைகள், சமூக மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டு மானிடப் பயிர்கள் கருகாமல் காக்கப் பாடுப்பட்டுள்ளன என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கு. கணேசன் படைப்பாளர், கவிஞர், தமிழாசிரியர், சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற பன்முக ஆளுமை உடையவர். காவ்யா பதிப்பகம் வெளிட்டுள்ள கவிஞர் ‘கு.கணேசனின் கவிதைகள்’ என்ற நூல், கவிஞரின் முன்பே வெளிவந்த எட்டு கவிதை நூலகளின் தொகுப்பு நூலாகும்.
இக்கவிதைகள் பல திறத்தன. எனினும் இவற்றின் அடிநாதம் மனிதநேயமே. மனித நேயத்தின் வெளிப்பாடு சமூக அக்கறையின் வெளிப்பாடேயாகும்.
இக்கவிதைகள் சூழலியல், பெண்ணியம், அரசியல், கல்வி, திரைப்படமோகம் முதலானபல நடப்பியல் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. இதில் கவிஞர் கு. கணேசன் அவர்களின் சமகாலக் கல்வி குறித்த பார்வையை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பது கல்விதான். அறியாமை என்னும் உயிர்ப்பிணியை நீக்கும் மருந்து ‘கல்வி’ என்பதால்தான், கல்வியை ‘மம்மர் அறுக்கும் மருந்து’ என்கிறது ஒரு பழம்பாடல். ‘கல்வி என்பது வெள்ளத்தால் போகாது; வெந்தனலால் வேகாது, வேந்தராலும் கொள்ள முடியாது; கொடுத்தாலும் குறையாது; கள்ளர்களால் திருட முடியாது; காவலுக்கும் மிக எளிது’ என்கிறது கொன்றை வேந்தன். ‘ஒருவன் தன் உள்ளத்தில் சேர்க்கும் அரிய பொருள் கல்வி ஒன்றுதான். அதை சேர்த்துவிட்டால், உலகிலுள்ள மற்ற பொருள்களெல்லாம் தானே கிட்டும்; ஒருவன் கற்ற கல்வி இப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழு பிறவிக்கும் பயன்தரும்’ என்கிறது குறள். ஒரு மனிதன் வாழ்வில் அவனுக்குக் கண்ணாக இருப்பது கல்விதான். எனவேதான், ‘பிச்சை எடுத்தாவது கற்பது நல்லது’ என்கிறது நாலடியார். இப்படி பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து அதை எப்படியாவது பெறவேண்டும் என வலியுறுத்தியது தமிழ்ச்சமூகம். இப்படிக் காலங்காலமாக கல்வியின் பெருமையைக் கூறி வந்ததின் பயன் இன்றைக்குப் படித்தவர்களின் எண்ணிக்கை தமிழத்தில் அதிகரித்துள்ளது. கல்வி பெற்றதினால் கிடைக்கும் பயனை இச்சமூகமும் நாடும், மக்களும் பெற்று முழுப்பயனையும் பெற்றுள்ளார்களா? தன் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கல்வி கற்றவனின் உயிர்ப்பிணி நீங்கியுள்ளதா? எனில் இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. ஏனெனில் நிலைமை தலைகீழாக உள்ளது. ‘சொத்துக்களை விற்றவன் வேலையில்லாதவனாக’, ‘கடனை வாங்கியவன் கடனாளியாக’ விரக்தியிலும் வேதனையிலும் மடிந்து தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நாட்டிற்கும் பெரும் சுமையாகிக் கொண்டிருகிறான்.
இதற்குக் காரணம் வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி மிகப்பெரியதாக இருப்பதுதான். பிஎச்.டி உள்ளிட்ட உயர்ந்த பட்டங்களைப் பெற்ற மாணவர்கள் கூட """"தன்னம்பிக்கை"" இழந்தவர்களாக,
வாழ்வைச் சுமையாகக் கருதுவோராக மாறிப் போயுள்ளனர்.
""""அகத்தியனை ஆராய்ந்தோம்
வள்ளுவரை ஆராய்ந்தோம்
வாங்கிய பட்டமும்
வானத்தைத் தொடும்
அவர்களைப் போலவே
வயதும் போனது"" (ப. 109)
என்று சலிப்புடன் பெற்ற கல்வியை வெறுக்கும் நிலையில் இன்றைய மாணவர்கள் உள்ளனர் எனக் கவிஞர் கூறுகிறார்.
""""வீட்டிலிருந்த வேலைகளை
வாங்கிய பட்டத்தால் மறந்தோம்
ஒட்டியப் பணிகளையும்
ஒதுக்க நேர்ந்தது"" (ப. 109)
கல்வி கற்றால் உயர்நிலையடையலாம் என்ற எண்ணத்தினால் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வந்த குலத்தொழிலையும் கைவிட்டு, கிடைத்த பிற வேலைகளையும் மறுத்துவிட்டு கல்வி ஒன்றையே கருத்தாகக் கற்றுப் பட்டம் பெற்று வரும் இளைஞர்களுக்கு வேலை தேடுவதே வேலையாகிப் போய்விடுகிறது. இதைக் கவிஞர்,
""""வேலை தேடும்
வேலை
பிழைப்பை நாடித்
தொலைதூரப் பயணம்"" (ப. 41)
என்கிறார். ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச் சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப்போய்விட்டது. நாடு விடுதலை பெற்றுப் பல்லாண்டு ஆகியும் வறுமை, அறியாமை, வேலையில்லாத் திட்டம் போன்ற சிக்கல்கள் நீங்காததால், நாட்டின் நிலை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. கல்வியைப் பெற்ற மாணவர்கள் ‘வேலையில்லாப் பட்டதாரி’ என்ற புதிய பட்டத்தைத் தவிர வேறொரு பயனையும் பெறுவதில்லை. இவர்களின் சிக்கலை அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதில்லை. வேலையில்லாதவர்கள் போராடும் போது, வேறுவழியின்றி அறிக்கைகளை வெளியிடும் அரசியல்வாதிகள், பின் காணாமல் போய் விடுகிறார்கள். அறிக்கைகளும் திட்டங்களும் நடைமுறையில் மக்களை நீர்த்துப் போகச் செய்வதற்கே என்பது நடப்பியல் உண்மை. இதை,
""""ஆடிக்காற்றாய்
அரசியல்வாதிகளின்
வேலை வாய்ப்பு
அறிவிப்புகள்"" (ப. 95)
என கவிஞர் ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது, அறிவிப்புகள் பறக்காதா என சிந்திக்கவைக்கிறார். அதையும் மீறி அறிக்கை வெளியிட்ட அரசியல்வாதிகளை இளைஞர்கள் நாடினால், ‘ஆசிரியர் வேலைக்கு ஐந்து லட்சம், பேராசிரியர் பணிக்குப் பத்து’ (ப.110) கொடுத்தால் வேலை உறுதி என்கிறார்கள். படிப்பிற்காக சொத்தைவிற்றும், கடன் வாங்கியும் படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையெனில் படித்தவர்களின் கோபம் சமூகத்தின் மீது திரும்புகிறது.
""""பட்டம் பெற்ற வாலிபர் நெஞ்சில் பையப்பாயுது கோபம்,
திட்டமென்ற பேரில்தானே தேசீயமானது சாபம்"" (ப.185)
என அரசியல்வாதிகள் போடும் திட்டங்கள் தேசத்தின் சாபங்கள் எனச் சாடுகிறார் கவிஞர். இதற்கு அரசியல் மட்டுமல்ல கல்விக்கூடங்களும் முக்கியக் காரணங்களாகும்.
மாணவர்களுக்கு அறிவூட்டி எழுச்சி பெற வைக்க வேண்டிய கல்விக் கூடங்கள், மாணவர்களைப் பொதி சுமக்கும் விலங்குகளாக, பணம் கொடுக்கும் இயந்திரங்களாக நினைக்கின்றன. பெற்றோரின் செல்வத்தை மட்டும் உறிஞ்சுவதை நோக்கமாகக் கொண்டு, கல்வியை வியாபாரமாக்கும் கல்வி வியாபாரிகள், மக்களின் ஆங்கில மோகத்தை, நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால்தான் படிக்கும் கல்விக்கான தொகை ஏறிக்கொண்டே போகிறது. மாறாக, கல்வியின் தரம் ஏறுவதில்லை.
""""அம்மா வென்று குரல்
ஆங்கிலக் கல்விக்கூடம்
கன்றுக் குட்டி"" (ப. 38)
என்ற கவிஞரின் ஹைக்கூ கவிதை பெற்றோர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட கல்வி நிறுவனங்கள், மாணவர்களை ‘அம்மா’ என்று கூட தமிழில் அழைக்கக்கூடாது என ஆணை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆட்டுத்தொழுவமும் கூட மாட்டுத் தொழுவமும் இன்று வகுப்பறைகளாக ஆங்கிலப்பள்ளிக் கூடங்களில் பயன்படுத்தப்படுவதற்கு இந்த ஆங்கில மோகமே காரணம் என்கிறார் கவிஞர். """"ஆங்கில கல்வியின் மோகத்தில் தாய் மொழிப் பாடம் நிர்வாணம்"" (ப. 51) என்ற வரிகள் மானம் காக்க வேண்டிய கல்வி, மாணவர்களை நிர்வாணமாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
கவிஞர் வைரமுத்துவோ, ஆங்கிலப் பாடங்களினால்,
"பள்ளி செல்லும் சிறுவன் ஒவ்வோரு விடியலிலும்
தான் நாடு கடத்தப்படுவதாய் நசிந்து போகிறான்"" (ப.261) என்கிறார். இந்நிலையை""அந்தச் சிறு பறவைகளின் சிறகுகளை-கொள்ளிக் கட்டைகளாலா கோதிவிடுவது?""(ப.262) என்றும்
""அவர்கள் முளையில்/விதையைப் போல்
தூவப்பட வேண்டிய அறிவு/ஆணியைப் போல்
அறையப் படுகிறது""(ப.262)என்றும் சாடுகிறார்.
""இந்தப் பல்கலைக்கழகங்கள்
வேலையில்லாதவர்களை
உற்பத்தி செய்யும்/தொழிற்சாலைகளா?""(ப.264) என்று சாடுகிறார்.
தொலைதூரக்கல்வி நிறுவனங்களுக்கும் இதில் பங்குண்டு என்பதை """"வானுக்கும் பூமிக்கும் தொலைவானப் பாடத்திட்டத்தால் வந்த வீண் விளைவுகள்"" (ப.94) எனக் கு.கணேசன் சாடுகிறார்.இப்படியெல்லாம் உற்பத்தி செய்யப்பட்டப் பட்டதாரிகள், எப்படியாவது வேலை பெற்றுவிட வேண்டுமென்று வேலைக்கானத் தேர்விற்காக மீண்டும் படிக்கிறார்கள்.
எல்லாம் வேலை கிடைக்கும் வரைதான். வேலை கிடைத்துவிட்டால் படிப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.
""""வேலையற்ற பட்டதாரி
உனது பாட்டை
முணுமுணுக்கிறான்
அவனுக்கும் வேலைகிடைத்துவிட்டால்
உன் பாட்டுப் பொட்டலந்தான்"" (ப.95)
எனப் பாரதியை நோக்கிப் பாடுகிறார் கவிஞர்.
வேலைக்காக, வேலை கிடைக்கும் வரைதான் கல்வி என்ற நோக்கத்தினால் வந்த இழிநிலையை இவ்வரிகள் உணர்த்துகின்றன. மெக்காலேயின் கல்வித்திட்டம் இன்றுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. மெக்காலே கல்வித்திட்டப் பாடங்கள், மாணவர்கள் சிந்தித்து உள் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவையல்ல. மாறாக இந்திய மாவணவர்கள் மனனம் செய்து தன்னை ஒரு கருவியாக இயந்திரமாக மாற்றிக் கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்டது. கல்வியின் நோக்கம், கல்வியைக் கற்பவர் தமது வாழ்நாளெல்லாம் தமக்குத் தேவையானக் கல்வியைத் தொடர்ந்து சுயமாகத் தாமே கற்றிடும் திறமையுடையவர்களை உருவாக்குவதாக இருக்கவேண்டும். நல்ல பாடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் வழி மாணவர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் நடப்பியல் கல்வி, வியாபாரமாகிவிட்ட சூழலில், மாணவர்களையும் பெற்றோர்களையும் கடனாளியாக்குகிறதேயன்றி சிந்தித்து உழைப்பால் உயரும் முதலாளியாக்குவதில்லை. ஒருவித குற்ற உணர்வை, தாழ்வுமனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் தற்போதைய கல்வி முறை ஏற்படுத்துகிறது. ‘ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சீர்கேடு அடைகிறது’ என்பது சீனப் பழமொழி.
வேலை அல்லது சமூக மதிப்பை இலக்காய் வைத்துப் பாடப்புத்தங்களில் உள்ள தகவல்களைத் தொகுத்து எழுதித் தேறிக் குறிப்பிட்ட தொழில்களில் அமர்ந்து விடுவதே கல்வியின் நோக்கம் என்று கடந்த ஒரு நூற்றாண்டு நமக்குக் கற்பித்துள்ளது. நாட்டின் பொருளியல் மேம்பாட்டை மையமாகக் கொண்டு, பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனடிப்படையில் வைக்கப்படும் தேர்வுகளில் தேறுவதும் தேற்றுவதுமே தற்போதைய நோக்கமாக மாறிவிட்டது. தேறுபவர்கள் வேலை பெறுகிறார்கள். தேறாதவர்கள் குற்றவாளிகளாகிறார்கள்.
""""வாழ்க்கையை
அப்புறப்படுத்தும்
நீர்க்குமிழியான படிப்பு"" (ப.95)
என்று இதனைக் கவிஞர் சாடுகிறார். யாருக்கும் பயனில்லாத பார்க்க மட்டுமே கவர்ச்சியாகத் தோன்றி கணநேரத்தில் மறைந்துவிடும் நீர்க்குமிழி. தற்கால கல்விமுறைக்குச் சரியான உதாரணம்.
கவிஞர் வைரமுத்துவோ,""இந்தக் கல்வியால் லாபம்
மூக்குக் கண்ணாடியில்மூலதனம் போட்டவனுக்குத்தான் "" (ப.264) என்று நையாண்டி செய்கிறார்.
சரியான முன்னோக்குத் திட்டமிடலும், வேலையைத் தரும் நிறுவனங்களுக்கும் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் முறையான ஒருங்கிணைப்பும் இருப்பதில்லை. இதனால் பட்டதாரிகள் பட்டம் பெற்றபின்பு, ஏதோ ஒரு புதிய நாட்டைக் கண்டுபிடித்துவிட்ட களிப்புக் கூச்சலில், திரும்பி வரும் வழியை மறந்துவிட்ட மாலுமிகளைப் போல, படிப்பை முடித்த பின்னர் பாதை தெரியாதவர்களாகக் காணப்படுகின்றனர். வாழ்க்கைக்குள் முத்து குளிக்கச் சொல்லித் தராத இக்கல்வி முறை முத்துக்களென்று நீர்க்குமிழிகளையே கோர்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கல்வியைப் பொருளாதார முன்னேற்றத்திற்கானக் கருவியாகக் கருதி வரும் சமூகத்தில், அது நிறைவேறாத போது கல்வியைச் சுமையாகக் கருதும் போக்கு ஏற்படுகிறது.""""நாளை மலரும் என்றே நாட்களும் நகர்கின்றது
நலிந்து மடிந்தே உடல்களும் மறைகின்றன"" (ப. 91)
என்ற வரிகளும்,
""""கல்வியென்றும் கலையென்றும்
வாழ்வென்றும் தனித்துத் தனித்து
பொய்யாகி நாளும் போச்சு - இன்று
வாழ்வில் மீதமென்ன ஆச்சு"" (ப. 252)
என்ற வரிகளும் வேலையைத் தேடித்தேடியே இளைஞர்கள் முதுமையடைந்து விடுவதைப் பதிவு செய்கின்றன.
இந்நிலை மாற இரண்டு மாற்றங்கள் தேவை. ஒன்று மேலை நாட்டினரின் பொருள் நெறி சார்ந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டின் அறநெறிசார்ந்த கல்வித்திட்டத்தை கொண்டு வருவது. அடுத்த நூற்றாண்டை மனதில் வைத்து, மனிதத்தை மையமாக வைத்து கல்வித்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்துல் ரகுமான் கூறுவது போல ‘குழந்தைகளைக் கிழித்துவிடாத பாடப்புத்தங்கள் தேவை’. படைப்பு மனதைப் பாழாக்கிச் சொன்னதைச் செய், சொல்லிக் கொடுத்ததைத் திரும்ப எழுது என்று கட்டளைக்கு அடி பணிந்து சேவகம் செய்யும் அடிமை மாணவர்களை உருவாக்கும் இன்றைய கல்வித்திட்டம் கண்டிப்பாக மாற்றப்படவேண்டும். உடல் உழைப்பைக் கேவலமாகக் கருதக் கூடிய கல்வி முறைதான் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு அடிப்படைக் காணரம். எனவே """"வேலைத்தேடி வாழ்விழந்து அலைந்து நிற்கும் வேலையற்ற பட்டதாரி"" (ப. 96) என்ற பெயர் மாற மனிதன் தன் அறிவை முறைப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கும் பாடங்களும், தன் சுய அறிவைக் கொண்டு உலகை ஆராயவும், உலக வளங்களை மனித குலத்துக்குப் பயன்படுமாறு ஆக்க செயல்களை மேற்கொள்ளவும் அவனைத் தூண்டிவிடுகின்ற வகையிலான பாடத்திட்டங்களும் தேவை. கல்வி ஒருவருக்கு மற்றவரை வழி நடத்தும் தகுதியைத் தரவேண்டும். தன் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் ஒருவன், தன் வாழ்வாதாரங்களை மட்டும் தேடுபவனாக இல்லாமல், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமை குறித்தும், சமூகத்தைப் பாதிக்காத நன்மை குறித்தும், அறியும் அறிவையும் விழிப்புணர்வினையும் கொண்டவனாக இருக்கவேண்டும். எனவே தான்,
""""மாறுங்கள் மாற்றமென்பது தேவையென்பது
மானிடத்தில் சரித்திரத்தில் உறுதியானது"" (ப. 131)
என்கிறார்.
மற்றொரு மாற்றம், இளைஞர்களிடம் ஏற்பட வேண்டிய ஒன்று. வேலைக்காகக் கல்வி என்ற நினைவை உதறி உள் ஆற்றலை வளர்க்கவே கல்வி என உணரவேண்டும்.
""""படித்த படிப்பு யாவும் மனதில் வiத்து மேவும்
பண்புநிலை வேண்டும்"" (ப. 250)
எனக் கூறும் கவிஞர் """"பட்டறிவை படிப்பறிவோடு பக்குவமாய் சேர்த்து உலக ஞானத்தை உள்ளங்கையில் நிறுத்தவேண்டும்"" (ப.138) என்கிறார்.
இன்றைய இளைஞர்கள் உடல்உழைப்பைக் கேவலமாகக் கருதுகின்றனர். இந்நிலை மாறவேண்டும். உடல் உழைப்பிற்கு உரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். உடலுழைப்போடு கூடிய வேலைகளே உயர்வுடையது என ஒவ்வொரு இளைஞனும் உணரவேண்டும்.
""""வியர்வையும் உழைப்பும்
சுய முகமும் இல்லாமல்
வெற்றி -
வீதியில் விற்கும்
விற்பனைச் சரக்கல்ல"" (ப. 137)
என வெற்றி பெற உடல் உழைப்பும் மிக அவசியம் என்கிறார். இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் வேளாண் தொழில் புறக்கணிப்பு, கைத்தொழில் புறக்கணிப்பு, எந்திரமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவை வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குகின்றன. காந்தியின் சுதேசி பொருளாதாரமுறை, எந்திரமயமாக்களைத் தவிர்த்தல், வேளாண் சார்ந்த கல்விமுறை போன்றவை வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வாகும்.
""""மாற்றான் உதவி தேவையில்லை உழைக்கலாம்
நாட்டிற்குப் பெருமை தனை ஒன்றாகச் சேர்க்கலாம்
வயல்வெளியைப் பசுமை வண்ணங்கள் ஆக்கலாம்
வாலிப நெஞ்சின் சோம்பலை நாளும் போக்கலாம்"" (ப. 245)
படித்தவர் உடலுழைப்பில் ஈடுபட்டால் அவர் மட்டுமின்றி, அவர் குடும்பமும் நாடும்
உயரமுடியும். உடல் உழைப்பிற்குரிய மதிப்பும் மரியாதையும் கூடும். படிப்பும், உடல் உழைப்பும் இணைந்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும் ; யாருக்கும் வேலை கொடுக்கவும் முடியும் என்ற நிலையை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். இளைஞர்களால்தான் அது முடியும்.
""""புரட்சியென்ற சொல்இனி நம் உழைப்பிலே
வறட்சியென்ற பேச்சிலை இந்த நாட்டிலே
வேதனை யாவும் மறையுமே அந்நாளிலே
சாதனை யாவும் அடைந்திடும் பூமியிலே"" (ப. 245)
என்ற கவிஞரின் வரிகள் உடலுழைப்பின் மேன்மை உணர்ந்து இளைஞர்கள் உழைத்தால், வேதனை யாவும் மறைந்து சாதனை திருநாளாக ஒவ்வொரு நாளும் மாறிவிடும் என்கின்றன.
""வாழ்க்கையை வாசிக்க/நீ
தெருவுக்குத் தானே/திரும்பி வரவேண்டும்""(ப.259)என்கிறார் வைரமுத்துவும். ‘உடலுழைப்பு கேவலம் என்று நினைத்துநம்மை நாமே பிணித்துக் கொண்டுள்ளோம். உடலுழைப்பைக் கேவலமாய்க் கருதி அந்த எண்ணமென்னும் விலங்கை உடைத்தெறிய உழைப்பு என்னும் ஆயுதம் தேவை. அதுவும் நம் கையில் தான் உள்ளது’ என ஒவ்வொரு இளைஞனும் நினைக்க வேண்டும்.
""""அடிமை விலங்குகள்
நம் கைகளில்
அதை உடைத்தெறிய
உழைப்பை ஆயுதமாக்குவோம்"" (ப. 105)
என்ற பாடலின் மூலம் உடல் உழைப்பின் மேன்மையை உணர்ந்துவிட்டால், வேலை தேடுவதை யாரும் வேலையாக்கிக் கொள்ள வேண்டாம். ‘வாழ்க்கையைப் பூஞ்சோலையாக மாற்றுவதற்கு உடல் உழைப்புதான் உரம்’ என்கிறார். இதனால், அரசு வேலை கொடுத்து மக்களைக் காப்பாற்றும் என்ற நிலைமாறி, உடல் உழைப்பின் மேன்மையினால், இளைஞர்கள் இந்தியாவைக் காத்திடும் நிலை உருவாகிவிடும் என்கிறார்.
""""கல்வியென்றும் கலையென்றும்
வாழ்வென்றும் தனித்துத் தனித்து
பொய்யாகி நாளும் போச்சு - இன்று
வாழ்வில் மீதமென்ன ஆச்சு"" (ப. 252)
கல்வி வேறு, உடல் உழைப்பினால் உருவாக்கப்படும் கலைகள் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இரண்டையும் ஒன்று போலவே பாவிக்கும் மனநிலையை இளைஞர்கள் பெற வேண்டும். உடலுழைப்பின் இன்றியமையாமையை உணரந்துவிட்டால், உண்மையான சுதந்திரத்தின் மேன்மையை உணர்ந்திடுவர்.
""""சுதந்திரமே உண்மையாக இங்கே வந்தது; அந்தச்
சோம்பேறிகளைத் துரத்தும்போது உயர்ந்து நிற்குது"" (ப. 245)
என்ற பாடல் வரிகள் மூலம் உண்மையான உழைப்பினால் வாழ்வில் உயர முடியும் என்கின்றன. கவிஞர் கு.கணேசனின் கவிதைகள் தற்காலக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, அதை நீக்குவதற்கான வழிமுறைகளையும் கூறிச் சென்றுள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?