இலக்கிய வகைகள்
தொல்காப்பியர் காலத்திலும், சிலப்பதிகார காலத்திலும் பல புது
இலக்கியக் கூறுகள் தோன்றின. அவை பின்னர்த் தனித்த இலக்கிய வகையாகவே வளர்ந்தன.
அவ்வாறு தனித்த இலக்கிய வகைகளாகப் போற்றப்படும் சில கூறுகள் திருவாசகத்தில்
இடம்பெற்றுள்ளன.
சதகம்
சதகமானது, நூறு பாடல்களைக் கொண்டு இறைவனையோ, புலவர் தாம் பாட விரும்பி தலைவர்களையோ
அரசர்ககளையோ பாட்டுடைத் தலைவர்களாக்கி அப்பாடல்கள் அனைத்தும் ஒரே யாப்பில் அமையும்
வண்ணம் பாடப்படுவதாகும். திருவாசகத்தில் அமைந்துள்ள திருச்சதகம் இதற்கு
எடுத்துக்காட்டாகும். ஆனால், திருச்சதகம் சதக இலக்கியத்தின் பெயருடையதன்று. தனி
நூலாக இல்லாமல் திருவாசகத்தின் ஒரு பகுதியாகவும், அந்தாதி அமைப்புடனும் அமைந்திருப்பதால் மணிவாசகர், சதகத்தை இயற்றிய பின்னரே தமிழில்
சதகங்கள் தோன்றியிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.
பதிகம்
பத்துப் பாடல்களைக் கொண்டு அமைவனவற்றை
பதிகம் என்பர். பத்துப் பாடல்களைக் கொண்டு பாடுவதே மரபு. ஆனால், மணிவாசகர் திருவெம்பாவை, திருவம்மானை, கோத்தும்பி, சாழல், தெள்ளேனம் போன்றவற்றில் இருபது பாடல்களைப் பாடியுள்ளார்.
திருப்பொன்னூசிலில் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார். எனவேதான் இதற்குப் ‘பத்துகள்’ என்று கூறாமல் நாட்டுப்புற விளையாட்டினையே பெயராகச்
சூட்டியுள்ளார். பதிகப் பாடல்கள் ஆசிரியத்துறை,
ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம், பஃறொடை வெண்பா போன்றவற்றால் அமையும்.
திருவாசகத்தில் அன்னை. பத்திலிருந்து அச்சோப் பதிகம் ஈறாகவுள்ள பத்துகளில்
அன்னைப்பத்து, உயிருண்ணிப்பத்து, அச்சோப்பத்து போன்றவற்றைக் கலிவிருத்தத்திலும், திருப்பாண்டிப் பதிகத்தைக் கட்டளைக்
கலித்துறையிலும், கண்டபத்து, தருவேசறவு முதலானவற்றைக் கொச்சக்
கலிப்பாவிலும் பாடியுள்ளார்.
திருத்தசாங்கம், திருவெண்பா, பண்டாய
நான்மறை முதலியவை நேரிசை வெண்பாவில் அமைந்துள்ளன. இவற்றில் பண்டடய நான்மறை ஏழு
பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது. அடைக்கலப் பத்துக் கலவைப் பாட்டுக்களாக
அமைந்துள்ளது. இருபது பதிகங்களில் இருநூறு பாடல்கள் ஆசிரிய விருத்தத்தில்
அமைந்தள்ளன. திருவாசகத்தில் அதிகமாகப் பயின்றுவருவன விருத்தப்பாவும் கலிப்பாவுமே என்பது
புலனாகிறது.
அந்தாதி
அந்தம்-ஆதி என்னும் இருசொற்களால் ஆனது.
இது ஒரு சிற்றிலக்கிய வடிவமாகும். அந்தாதியில் ஒரு பாடலின் முடிவில் நிற்கும்
எழுத்து, சொல், அசை இவற்றுள் ஏதேனும் ஒன்று அடுத்த
அடிக்கோ, பாடலுக்கோ முதலான
அமையும். இவ்வகை அமைப்பில் மணிவாசகரின் சதகம் அமைந்துள்ளது. நீத்தல்விண்ணப்பமும்
ஜம்பது பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. நூறு பாடல்களைக் கொண்டு அமைவது ‘நூற்றந்தாதி’ எனவும் பத்துப் பாடல்களைக் கொண்டு அமைவது
‘பதிற்றந்தாதி’ எனவும் அழைக்கப்படும். திருச்சதகம்
நூற்றந்தாதியாகவும், கோயில்
திருப்பதிகம், எண்ணப்பதிகம், கோயில் மூத்த திருப்பதிகம் போன்றவை
பதிற்றந்தாதியாகவும் அமைந்துள்ளன. உதாரணமாகத் திருச்சதகப் பாடலொன்றைக் காண்போம்.
இறுதிஅடி
‘‘உம்பர் நாட்டு
எம்பிரானே’’ (5-66)
முதல்அடி
‘‘எம்பிரான்
பேபற்றி வானத்து’’ (5-67)
ஒரு பாடலின் இறுதிச் சொல்லானது அடுத்தப்
பாடலின் தொடக்கமாக அமைவதையும் காணலாம்.
நாட்டுப்புற வடிவங்கள்
திருவாசகத்தில் வரிப்பாடல் வடிவங்களாக பல
நாட்டுப்புற வடிவங்களைக் காண்கிறோம். படிக்காத மக்களிடம் இறைவனைப் பற்றிக் கூற
வேண்டுமென்றால், அவர்கள் எளிதில்
புரிந்து கொள்ளும் வகையில் புலப்படுத்த வேண்டும். எந்த ஒரு கருத்தும்
மக்களுக்காகவே சொல்லப்படுகின்றன. மக்கள் என்னும் சொல் கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் பொதுவாயினும்
கற்றவர்களை விடுத்து, அது
கல்லாதவர்களையே குறிக்கிறது. எனவே, கல்லாதவர்களுக்குக்
கூறப்படும் கருத்துக்களை அவர்களுடைய வழி அல்லது முறையில் கூறினால்தான் நல்ல பயன்
கிட்டும். அதனால்தான், பொது
மக்களுக்கு எளிதில் செல்லக்கூடிய நாட்டுப்புற வடிவங்களைத் தேர்தெடுத்து அதனை
இலக்கியாமாக்கியுள்ளார் மணிவாசகர்.
விளையாட்டுப் பாடல்கள்
நாட்டுப்புற வடிவங்களில் விளையாட்டினைத்
தேர்தெடுத்துள்ளார். கல்வி கற்பிக்கும் முறையில் முறைகளுள் ஒன்று விளையாட்டின்வழி
கற்பிப்பதாகும். எனவேதான்இ விளையாட்டு வடிவத்தைத் தேர்தெடுத்துள்ளார் என்பதை
அறிகிறோம்.
விளையாட்டுக்களிலும் பெண்கள்
விளையாடுவதாக அமைந்த விளையாடல்களையே விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார்.
மெல்லிய இயல்புடைய பெண்களின் மனதை சமய உணர்வில்
பதியப் செய்துவிட்டால் பின் அவர் சென்று ஆடவர்களும் சமயப் பற்றுடையவர்காளாவார்கள்
என்ற எண்ணத்திலும், பெண்களைச்
சார்ந்த குடும்பத்திற்கு மட்டுமல்லாது, அவர்களது
சந்ததியினர்க்கும் இறைக்கல்வி சென்று சேரும் என்ற நோக்கத்தினாலும், பெண்டிர்க்கே உரிய விளையாடல்களைத்
தேர்ந்தெடுத்துத் தம் பக்தி நெறியை அவ்விளையாட்டுப் பாடல்களில் அமைத்துப்
பாடியுள்ளார்.
இவ்வுலக உயிர்கள் அனைத்தும் பெண்களே.
இறைவன் ஒருவனே ஏக நாயகன். இவ்வுலக உயிர்கள் அனைவரையும் பெண்களாக உருவகித்து
அனைவரும் இறைவனிடம் காதல் கொண்டு இறைவனான சிவபொருமானுடைய காதலை எண்ணி எங்குவதாகப்
பாடல்க.ள அமைத்த்ள்ளார் மணிவாசகர். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவன்
என்னும் நாயகம் முன்னிலையில் பெண்களேயாவார். இதுவே சன்மார்க்க நெறியின் அடிப்படைத்
தத்துவாகும். மணிவாசகர் சன்மார்க்க நெறியினாராதலால் பெண்களை உலக உயிர்களாக உருவகித்து, அனைத்து உயிர்களும் சிவபெருமானை எண்ணிப்
பாடுவதுபோல் பெண்களைத் தேர்ந்தெடுத்துப் பாடியுள்ளார். கூறலாம். இவ்வுலக உயிர்கள்
அனைத்தும் நாயகியாகும்.
இவ்வுலக உயிர்களாகிய பெண்களுளுககு இறைவன்
ஒருவனே ஏக நாயகன். இவ்வாறு அமைந்துள்ள மகளிர் பாடல்கள் உலக உயிர்கள் ஒவ்வொன்றும்
தன்னைப் பெண்ணாக-காதலியாக நினைத்துக் கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளன.
இப்பாடல்கள் அனைத்தும் மகளிர்தம் கற்றாகவே அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
பாவைப்பாடல்
பாவைப் பாடல் சங்க இலக்கியத்திலேயே
வழங்கி வந்திருக்கக் காண்கிறோம். தொல்காப்பியத்தில் பாவைப் பாடலுக்கென்று தனி
வரையறை கூறப்படவில்லை. பேராசிரியர் தொல்காப்பிய உரையில் ‘‘சிறுபான்மை
பாவைப் பாட்டும் அம்மானைப் பாட்டும் முதலாயின நான்கு அடியின் இகந்து வருவன’’ (1980. நூ. 149)
என்றும், ‘‘சிற்றெல்லையாகிய
ப.தடியளவும் பாவைப் பாடலும் அம்மானைப் பாடலும் போலும் தரவு கொச்சகம் வரும்’’ (1980. நூ. 155)
என்றும் பாவைப் பாடலுக்கும் அம்மானைப் பாடலுக்கும் இலக்கணம் கூறுகிறார்.
திருவெம்பாவைப் பாடல்கள் எட்டடிகளால்
இயன்ற கொச்சக்களிப்பாக்களாகும். அடிதோறும் நான்கு சீர்கள் அஅமய இறுதிச் சீரானது ‘எம்பாவாய்’ என்று முடியும் வண்ணம் இருபது பாடல்கள் அமைந்துள்ளன. பாவை
நோன்பின் நோக்கங்கள், நாடு செழிக்க மழை
பெய்ய வேண்டும். நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்பனவாகும். இப்பாட்டுக்கென
பாவரையறை எதுவும், மணிவாசகர் நாட்டு
மக்களிடையே வழிவழியாக வழங்கி வந்த பாவைப் பாடல்களையும், அவற்றின் இசை வடிவத்தையும் அறிந்து ஒரு
கட்டுக்கோப்பான வடிவத்தை இதற்கென வரையறுத்துக் கொண்டு இப்பாடல்களைப் பாடியிருக்க
வேண்டும். இவ்வாறு இயற்றப்பட்ட பாடலுக்குப் பின்னரே பல பாடல்கள் தோன்றிருக்க
வேண்டும். அதன்பின்னரே இப்பாடலுக்கெனத் தனி வரையறை தோன்றிருக்கிறது என எண்ணத்
தோன்றுகிறது.
திருஅம்மானை
‘‘அம்மானை என்றும் விளையாட்டில் மகளிர்
மூமூர் உடனமர்ந்த விளையாடுவர். அம்மூவருள் ஒருத்தி பாட்டுடைத் தலைவன் புகழ்ச்
செயலைக் குறித்து வினா நிகழ்த்த, இரண்டாமவள்
அவ்வினாவிற்கு விடை கூற மூன்றாமவள் அப்புகழ்ச் செயலைத் தொடர்ந்து கூறிப்
பாராட்டும் முறையிலும், அம்மூவருள்
ஒருங்கு சேர்ந்து பாட்டுடைத் தலைவன் புகழைப் பாடிப் போற்றும் முறையிலும் அம்மானைப்
பாடல்கள் அமைதல் இயல்பு’’ என்கிறார்.
வெள்ளைவாரணார் (1980-186). திருஅம்மானை
ஆறடித் தரவு கொச்சக் கலிப்பாவால் இயற்றப்பட்டு இறுதியடியின் இறுதிச் சீரானது ‘அம்மானாய்’ என்று முடியும் வண்ணம் அனைத்துப் பாடல்களிலும்
அமைக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் இளமகளிர் மூவர் இணைந்து சிவபெருமானுடைய நகரம், தார்,
கொடி, தேர், மலை,
வீரம், பிரிவுத்துயரம்
ஆகியவற்றைப் போற்றிப் பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆறடிகளால் இயன்ற இவ்வம்மானைப் பாடல்களில்
முதலிரண்டிகளில் ஒருத்தி, ‘செங்கண்
மாலும் பன்றி உருவெடுத்து நிலத்தைத் தோண்டி நெடுந் தொலைவு சென்ற பின்னரும் காண
முடியாத தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பாடுவோம்’ என்று கூற அடுத்த இரண்டடிகளில் இரண்டாமவள், ‘இப்பூமியின் அவதரித்து, எங்களுடைய பிறவியை வேரோடு வெட்டி அருள்
புரிந்து எங்களை அடிமை கொண்டவனைப் பாடுவோம் என்று கூற, இறுதியடிகளில் மூன்றாமவள், இத்தகையச் சிறப்புகள் வாய்ந்த இறைவனைப்
போற்றி அம்மானைப் பாடுவோம்’ என்று
முடிக்கிறாள். இவ்வாறு மூன்று பெண்கள் அமர்ந்து போடுவதுபோல் நாட்டுப்புற மரபு
பிறழாமல் அனைத்துப் பாடல்களையும் அமைத்துள்ளார் ஆசிரியர்.
திருப்பொற்சுண்ணம்
திருக்கோயிலில்களில் இறைவனது மேனிக்குப்
பூசுவதற்குரிய நறுமணப் பொடியை இடிக்கும்பொழுது,
களைப்பு தோன்றாமலிருக்கும் பொருட்டு இசையுடன் பாடிக்கொண்டே இடிப்பர்.
அப்பொழுது பாடும் பாடலே ‘சுண்ணப்பாட்டு’ ஆகும் இறைவனைப் புகழ்ந்துப் பாடுவதால் ‘திரு’
என்ற அடை சேர்த்து ‘திருபொற்
சுண்ணப்பாட்டு’ என
அழைக்கப்படுகிறது.
‘‘திருப்பொற்சுண்ணப் பாட்டு வள்ளைப்
பாட்டைச் சேர்ந்தது. வள்ளைப் பாட்டவாது, மகளிர்
நெற்குத்தும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு’’ (1967-710) என்பார் மெய்கண்டார்.
‘‘இப்பனுவல் சிலப்பதிகாரத்தில் வரும்
வள்ளைப் பாட்டினையும், அடியார்க்குநல்லார்
உரையில் மேற்கோளாகக் குறிக்கப்பட்ட அவலிடி என்னும் வரிப்பாடலையும் ஒத்த
அமைப்புடையதாதல் உய்த்துணரத் தக்கதாகும்’’ என்கிறார்
வெள்ளைவாரணார் (1980-192-. எனவே, இப்பாடல் நாட்டுப்புற மக்களிடம்
வழிவழியாக வழங்கி வந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. இவற்றிற்கென்று பாவரையறை
சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படவில்லை. திருவாசகத்தில் அமைந்துள்ள
திருப்பொற்சுண்ணப் பாடல்கள் இருபதும் அறுசீர் விருத்தத்தினால் அமைந்துள்ளன.
இப்பாடல்களில் சுண்ணமிடிக்கும் இடத்தைத் தூய்மை செய்தல், உரல் உலக்கைகளைப் பொன் வடம், பட்டு முதலியவற்றால் அழகுபடுத்துதல்
போன்ற செய்திகள் இடம் பெறுகின்றன.
திருக்கோத்தும்பி
திருக்கோத்தும்பியானது இளமகளிர்
மகிழ்ச்சி மிகுதியால ஒருவர்க்கொருவர் கைக்கோர்த்துக் கொண்டு, சுற்றி விளையாடும்பொழுது தும்பியை
முன்னிலைப்படுத்தி தலைவனுடைய பெருமைகளை உரைத்து, அவன் புகழினை இடைவிடாது இசைக்குமாறு வேண்டிப் பாடுவதாகும்.
திருவாசகத்தில், இளமகளிர்
அரசவண்டினை அழைத்துச் சிவபெருமானுடைய பெருமையுரைத்து, இறைவனுடைய திருவடிக் கமலங்களில் சென்று
ஒலித்து இன்பத்தேன் அருந்துமாறு வேண்டுகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள இருபது
பாடல்களும் ‘கோத்தும்பீ’ என்னும் ஈற்றினைக் கொண்டு முடிவடைகின்றன.
பாடல்கள் நாலடிகளால் இயன்ற கொச்சக் கலிப்பாவால் இயற்றப்பட்டுள்ளன. உயிரினை நோக்கி
அறிவுறுத்துவது போல அரச வண்டினை நோக்கி மணிவாசகர் அறிவுறுத்துகிறார்.
திருத்தெள்ளேணம்
மகளிர் பறை கொட்டியும், கைகொட்டியும் விளையாடுகின்ற கும்மி
விளையாட்டைப் போன்றது தெள்ளேணம். திருவாசகப் பாடல்களில், மகளிர் இறைவனுடைய புகழைப் புகழ்ந்து, கைகொட்டி ஆடி விளையாடுகின்றனர்.
இப்பாடல்களில் இறைவனுடைய திருநாமத்தையும், ஊரையும், இறைவன் அடியவரை ஆட்கொள்ளும் முறையையும்
புகழ்ந்து மகளிர் ஆடி விளையாடுவதாக அமைந்துள்ளது.
‘‘ஒருநாம் ஓர்
உருவம்
ஓன்றும்
இல்லாற்கு ஆயிரம்
திரு நாமம் பாடி நாம்
தெள்ளேணம்
கொட்டாமோ’’ (1)
இவ்வாறு இறைவனுடைய உருவ நிலையையும், அவரு நிலையையும் கருணைத்திறத்தையும் போற்றிப்
பரவுகின்றனர் மகளிர்.
திருச்சாழல்
சாழல் என்பதும் மகளிர் விளையாட்டுக்களில்
ஒன்றாகும். ஒரு கதையின் செயலைப் பற்றி ஒருத்தி வினா நிகழ்த்த, மற்றொருத்தி அக்கதையிலுள்ள முரண்பாட்டினை
நீக்கி அதன் உட்பொருளை விளக்கி விடை கூற, இவ்வாறு
மகளிர் ஒரு கதையினைப் பற்றி வினாவும் விடையுமாக விளையாடும் முறையில் அமைந்தே
இச்சாழல் விளையாட்டு.
மணிவாசகர் தில்லையில் தங்கியிருந்தபொழுது, ஈழநநாட்டிலிருந்து பௌத்த சமயத்தை
நிலைநாட்ட பௌத்தக்குரவனும்,, அரசனும்
தில்லை வந்தனர். அவர்களோடு வாதம் நிகழ்த்தினார் மணிவாசகர்ர் வாதத்தில் வென்று, புத்தர்களை ஊமைகளாக்கினார். அப்போழுது
பௌத்த அரசன், மணிவாசகரை வணங்கி, ஊமையாய் இருக்கும் தன்மகளைப் பேச
வைத்தால் தான் சைவ சமயத்தில் சேர்வதாகக் கூறு மணிவாசகர் ஊமைப்பெண்ணைப் பேச
வைத்தார். அப்பொழுது மணிவாசகர் அப்பெண்ணிடம் சிலவினாக்களைக் கேட்க, அப்பெண்ணும் கற்றுணர்ந்தவள் போலப்
பதிலளித்தாள். இவ்வாறு நிகழ்த்த இவ்வினா விடைப் பகுதிகளைத் தொகுத்து சாழல்
விளையாட்டுப் பாடல்களாக அமைத்துள்ளார் மணிவாசகர். இப்பகுதி நாலடித்தரவு கொச்சக்
கலிப்பாவால் இயற்றப்பட்டுள்ளது.
திருப்பூவல்லி
பெண்கள் இறைவன் திருவடியில்
சூட்டுவதற்கென்று நல்ல மணமுள்ள மலர்களைப் பறிக்கும்பொழுது, இறைவனது கருணையை வியந்து போற்றும்வண்ணம்
இப்பகுதி அமைந்துள்ளது. ‘‘சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார்
குறித்த பல்வரிக்கூத்தினுள் ஒன்றாகிய கொய்யுமுள்ளிப்பூ என்பது இப்பூவல்லியாகிய
விளையாட்டுனைக் குறிக்குமெனக் கருதுதல் பொருந்தும்’’ என விளக்குகிறார் வெள்ளைவாரணார் (1928. 201-202). சிலப்பதிகார ஆசிரியர் இதற்கான
யாப்பினை வரையறை செய்யவில்லை. மணிவாசகர் இப்பகுதியை நாலடித்தரவு கொச்சக்
கலிப்பாவில் பாடியுள்ளார் என்பது நோக்கத்தக்கது.
திருஉந்தியார்
இளமகளிர், பாட்டுடைத் தலைவனுடைய வெற்றியைப் புகழ்ந்த வண்ணம் உயர
எழுந்து குதிக்கும்பொழுது பாடும்
பாடலாகும். மகளிர் இருவர் சிவபெருமானுடைய பெருமையைப் புகழ்ந்த வண்ணம் ஆடுவதாக
இப்பகுதியை அமைந்துள்ளார் மணிவாசகர். ஈரடியினால் முடியக்கூடிய தாழிசைக் கொச்சகப்
பாடலை, ஓரடி மிக்கு
வரும் வண்ணம் மூன்று அடிகளில் அமைத்துப் பாடி புதுமை செய்துள்ளார்.
‘‘வளைந்தது வில்லு
விளைந்தது பூச
லுளைந்தன முப்புர முந்தீபற
வொருங்குடன் வெந்தவா றுந்தீபற’’ (14-1 )
இப்பாடலில் இறுதியடி மிக்கு வருகிறது.
இப்பாடல் அமைப்பினை அடியொற்றியே பின்னர் வந்த படைப்பாளர்களும் ‘உந்திபறத்தலை’ மூன்று அடிகளில் அமைத்தனர் என அறிய
முடிகிறது.
திருத்தோணோக்கம்
திருத்தோள் - நோக்கம் மகிழ்ச்சிப்
பெருக்கினால் இளமகளிர் தோள்கள் பூரிக்க, தோள்களை
நோக்கிக் கைவீசி விளையாடுவர். அப்போது பாடும் பாடலே தோள்நோக்கப் பாடலாகும்.
மணிவாசகர், இறைவனது
அடியாருள் தானும் அடியாராகியதை நினைத்துத் தோள்கள் பூரிக்கப் பாடி ஆடுகின்றார்.
தன் மகிழ்ச்சியை இளமகளிர் விளையாடும் விளையாடலான தோள்நோக்கத்தின்மூலம்
வெளிப்படுத்துகிறார். இப்பாடல் நாலடித்தரவு கொச்சக் கலிப்பாவால்
இயற்றப்பட்டுள்ளது.
நாட்டுப்புற பாடல்களில் மணிவாசகர்
பெரும்பாலும் பயன்படுத்தியுள்ள யாப்பானது தரவு கொச்சக் கலிப்பா என்பதுபுலனாகிறது.
நாட்டுப்புறப்பாடல்களுக்கென்று பா வரையறை அதிகம் வரையறை செய்யாத நிலையில், நாட்டுப்புறப் பாடல்கள் செல்வாக்குப்
பெறாத காலகட்டத்தில் நாட்டுப்புற வடிவங்களைத்தேர்ந்தெடுத்து அவற்றிற்கென்று வடிவம்
அமைத்து இலக்கிய மதிப்பைக் கொடுத்தவர் இளங்கோவடிகளுக்குப் பின்னர் மணிவாசகரே
ஆவார். இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தை உலக மக்கள் அனைவருக்கும் பரப்ப வேண்டும்
என்னும் நோக்கோடு, அனைத்துத்
தரப்பினருக்கும் செல்லும் வகையில் நாட்டுப்புற வடிவங்களைத் தேர்ந்தெடுத்துப்
பயன்படுத்தியுள்ளார். இன்றுங்கூட, நம்
தமிழக அரசினரால் நடத்தப்படும் அறிவொளி இயக்கத்தில் மக்களைக் கவர்வதற்காக
நாட்டுப்புறக் கலைகள், பாடல்கள்
போன்றவற்றைக் கையாள்வதை அறியலாம். இன்றைய மக்கட்கல்வியில் கூட நாட்டுப்புற இலக்கிய
அமைப்புகள் கலைககள போன்றவை எடுத்தாளப்படுகின்றன. ஆனால், அன்றே இவ்எளிய ஆற்றல் மிக்க வழியைக்
கண்டு செயல்படுத்தியவர் மணிவாசகர் என்பது உற்றுநோக்குதற்குரியது.
நாட்டுப்புற வடிவங்களில் தனக்கென ஒரு
பொதுவரையறையை வகுத்து அதன்படி பாடல்களை அமைத்தவர் மணிவாசகர் எனலாம்.
1. பொதுவான
இறுதித்தொடர்
2. இயற்கை வர்ணனை
கூறல்
3. பாட்டுடைத்
தலைவனின் பெருமை கூறல்
4. அருள் புரிய
வேண்டுதல்
5. ஆடலுக்குத் தகுந்த
இசையமைப்பு
6. பனுவல் முழுவதும்
ஒரே யாப்பில் அமைதல்.
வாய்மொழிப் பாடல்களில் திரும்பத் திரும்ப
பயின்று வந்தனவே மீண்டும் பயின்று வரும் ‘‘ஏட்டிலக்கியத்தில்
ஏதேனும், ஒரு வரி
திரும்பத் திரும்பவரின், அது
கூறியது கூறல் என்னும் குற்றத்தின்பாற்படும் என்றும் குறிப்பிடுவர். ஆனால், நாட்டுப்புறப் பாடல்களில் சில அடிகள்
திரும்பத் திரும்ப வருதல் இயல்பாகும். ஏனென்றால் நாட்டுப்புறப் பாடல்கள் நினைவில்
வைத்துப் பாடுவதாலும், பாடியது
மறவாமல் இருக்கவும் சில அடிகள் திரும்பத் திரும்பப் பாடப்படுகின்றன’’ என விளக்குகிறார் சக்திவேல் (1983-201 ) மணிவாசகர் நாட்டுப்புறப் பாடல்களை
ஏட்டில் இயற்றி அவற்றிற்கு இலக்கிய மதிப்பை அளித்திருந்தாலும், நாட்டுப்புற இலக்கிய மரபு மாறாமல் ஒருவித
வாய்ப்பாட்டிற்குள் அடக்கியிருப்பது தெற்கென விளங்கும். இவற்றிற்கு தலைப்புக்
கொடுத்தலிலும் ஒரு புதுமை செய்துள்ளார் மணிவாசகர்.
தலைப்புக் கொடுத்தல்
நாட்டுப்புறப் பாடல் வடிவங்களிலும், சில உட்பிரிவுகளிலும் அவற்றில்
இடம்பெற்றுள்ள பொருள் பொதிந்த ஒரு சொல்லைக் கொண்டு அப்பனுவலிற்கு பெயரிட்டுள்ளார்.
நாட்டுப்புற வடிவங்கள் அனைத்திலும், சில
பத்துக்களுக்கும் பாடலின் இறுதியில் வரும் சொல்லால் அப்பகுதிக்குப்
பெயரிட்டுள்ளார்.
உதாரணமாக நாட்டுப்புற வடிவங்களில்
அம்மானாய், எம்பாவாய், சாழல்
போன்றவை இத்திறத்தன.
பாடலின் இறுதியில் வரும் சொற்களைக்
கொண்டு பெயர் பெற்றள்ள பத்துக்கள் திருப்படையாட்சி, செத்திலாப்பந்து முதலியனவாகும்.
இதுகாறும்
அறிந்தவற்றால் மணிவாசகர் தன் ஆழ்ந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்த
இணக்கமுடைய பாவினங்களையே அதிகம் கையாண்டுள்ளதை அறியமுடிகிறது. பாக்களில் இவர்
கையாண்டுள்ள மொழிநடையே விட பாவினங்களில் இவர் கையாண்டுள்ள மொழிநடையே
உருக்கத்துடனும் நெகிழ்வுடனும் உள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?