நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 9 April 2020

மணிவாசகரின் சிறப்பு



மணிவாசகரின் சிறப்பு

                சமயக்குரவர் மூவரின் பாடல்கள் பெரும்பாலும், கோவில்களையே மையமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. இம்மூவரும் பாடியருளிய தலங்கள், இருநூற்றி எழுபத்தைந்தாகும். இப்பாடல்களில் பல்வேறு கோவில்களைப் பற்றியும், அக்கோவில்களுக்குப் பின்னணியாக விளங்கும் இயற்கைக் காட்சிகளைப் பற்றியும், கோவில் கொண்டுள்ள இறைவனைப் பற்றியும் பாடப்பட்டுள்ளன. மணிவாசகர் ஐம்பத்து நான்கு தலங்களை மட்டுமே பாடியுள்ளார். தம் பாடல்களில், உள்ளத்தில் எழும் உணர்ச்சியை உள்ளது உள்ளபடி சிறந்த சொல்லாட்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், தலங்களைப் பற்றிக் குறிப்பிடும் தலவரலாற்று நூலாக மட்டும் அமையாமல் தன்னுணர்ச்சியை அழகுபட வெளிப்படுத்தும் உயிரோவியமாகத் திருவாசகம் திகழ்கிறது.

அழுதடியடையும் தொண்டர்

                இறையனுபவத்தில் திளைத்து இறையருளை வெளிப்படுத்துமிடத்திலும் மணிவாசகர் வேறுபடுகிறார். தான் பெற்ற இன்பத்தை வெளிப்படுத்துமிடத்து, தேவார மூவரிடத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே நெகிழ்வின் காரணமாக அழுகை வெளிப்படுகிறது. மணிவாசகருக்கோ, இறையருளை வெளிப்படுத்துமிடத்து அவரது உணர்ச்சி பெரும்பாலும் அழுகையாகவே வெடிக்கிறது.
                                ‘‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’’ (5-90)
                                ‘‘அழும் அதுவேஅன்றி மற்றுஎன்
                                                செய்கேன் பொன்அம்பலத்து அரைசே’’ (21-4)
                இவர்தம் பாடல்களில் பரவலாகக் கேட்கும் அழுகைக் குரலானது, அழுகை ஒருபேறு, அதைப் பெறுவதற்கும் இறையருள் வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. இப்பாடல் வரிகள் மணிவாசகரின் உள்ள நெகிழ்வினையும், உள்ளம் உருகி அழுதால் இறையருளைப் பெறலாம் என்ற உண்மையினையும் வெளிப்படுத்துகின்றன.

அடியவர் பெருமையில் நால்வரின் மேன்மை

                அடியவர்களாலேயே பெருஞ்சிறப்புப் பெற்ற சான்றோர்கள் பலர்.
மங்கையர்கரசியார், திருஞானசம்பந்தரது வரலாற்றில் திளைத்து அவரது அடியவரானவர். அப்பதியடிகளார், நாவுக்கரசர் என்ற சொல்லையே மந்திரமாகக் கொண்டு உயர்ந்தவர். பரவைநாச்சியார், நம்பியாரூரரைப் புகழ்ந்து, துறந்த முனிவரும் தொழக்கூடிய பேறு பெற்றவர்.
இம்மூவரும், தேவார மூவரைப் போற்றி வழிபட்டதோடு, அவர்கள் பெருமையை உலகறியச் செய்தர்களாவர்.
                மணிவாசகரோ, இறைவனையே அடியவராகப் பெற்று பெருமையுடையவர். அடியவர்கள் பலரும் அரும்பெரும் செயல்கள் புரிந்து இறைவனுக்குத் தொண்டர்களாகப் பணியாற்ற, இறைவனோ மண் சுமந்தும், குதிரைச் சேவகனாகியும் இவருக்குத் தொண்டராகப் பணியாற்றியுள்ளார். இதற்குத் திருவாசகப் பாடலடிகளே சான்றாக அமைகின்றன.
                                ‘‘பிட்டு நேர்பட மண்சுமந்த’’ (30-2)
                                ‘‘மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
                                  புண் சுமந்த பொன்மேனி பாடுவதும் கான் அம்மானாய்’’ (8-8)
                                ‘‘குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்’’ (2-45)
என்ற பாடல் வரிகள் மணிவாசகருக்காக இறைவன் தொண்டு செய்ததைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

பாடல் பயன்

                சைவ சமயக் குரவர்களாகிய நால்வர் தம் பாடல்களை உணர்ந்து ஓதுவார்க்கு உண்டாகும் நன்மைகள் இவையென்று சிவப்பிரகாசசுவாமிகள் நால்வர் நான்மணிமாலையில் பாடியுள்ளார்.
                திருஞானசம்பந்தர் பாடல் பொருளுண்மை விளக்குவதால், தந்தையினும் தாய்க்கு மகிழ்ச்சி (1984-135)
திருநாவுக்கரசர் பாட்டு ஆணவமாகுங்கபாடத்தைத் திறப்பதாதலின் தந்தைக்கு மகிழ்ச்சி (1984-138)
       நம்பியாரூரர் அருட்சக்தியாக நின்று உயிர்களுக்கு விடுதலை அளிப்பதால் இறைவன், 
நம்பிபயாரூரர் இருவருக்கும் மகிழ்ச்சி (1984-144).

       மணிவாசகரின் பாடல் படிப்பவர்க்கு மெய்ப்பயன் தரும் (1984-148). ஆதலால், உலக உயிர்களுக்கு மகிழ்ச்சி என்று நால்வரின் மேன்மைகளை விளக்குகிறார்.
                திருவாசகத்தினை நெஞ்சுருக்கும் தன்மையில் வேதத்திலும் உயர்ந்து நிற்கும் பெருமை வாய்ந்தது என்று சிவப்பிரகாசசுவாமிகள் பாராட்டுகிறார்.
                                  ‘‘வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
                                  நெஞ்சு நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேம்
                                  திருவாசக மிங்(கு) ஒரகால் ஓதில்
                                  சுருங்கல் மனமும் கரைந்துருக’’     (1984-70)
                இதனால் வேதம் மற்றும் மூவர் வேதாரம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குவது திருவாசகமே என்பதை அறியமுடிகிறது.

திருவாசக அமைப்புமுறை

                திருவாசகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல்கள் அமைப்பு முறையைக் கவனிக்கும்பொழுது, அவை அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பிரதிபலிப்பதாகத் தோன்றவில்லை. பாடல்களும் பதிகங்களும் மாறி அமைக்கப்பட்டுள்ளன.
                மணிவாசகர் வாழ்க்கை வரலாற்றினைத் திருவிளையாடற்புராணம் திருவாதலுர்ப்புராணம், திருவாசகப்பாடல்கள் போன்றவற்றிலிருந்து அறிய முடிகிறது. இவைகளின் மூலம் மணிவாசகரின் பிறப்பு, பாண்டிய மன்னனிடம் அரசராக இருந்தது. முதல் இறைவன் வலிய வந்து ஆட்கொண்டதோடு, தானே அடியவனருகி மணிவாசகருக்குத் தொண்டு செய்தது முதலான செய்திகளை அறியமுடிகிறது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னனா மணிவாசகர், பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார். பல பாடல்கள் பாடினார். ஆனால், இன்னின்ன பாடல்கள் இன்னின்ன பகுதியில் பாடப்பட்டன என்பதைப் பற்றித் திட்டவட்டமாக அறிய இயலவில்லை.
                திருவாசகத்தின், முதலில் அமைந்துள்ள சிவபுராணமும், இறுதியாக அமைந்துள்ள அச்சோப்பதிகமும் அவருடைய வாழ்க்கையில் முதலிலும் இறுதியிலும் பாடப்பட்டவையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. திருப்பெருந்துறையில் அருள்பெற்ற பின், முதலில் சிவபுராணம் பாடியிருக்க வேண்டும். எனவே, அது திருவாசகத்தில் முதலில் அமைக்கப்பட்டுள்ள பொருத்தமே.
                ‘‘கோகழியாண்ட குருமனிதன் தாள்வாழ்க’’ (1-3) குருவடிவில் வந்து திருப்பெருந்துறையில் இறைவன் தன்னை ஆட்கொண்டதாக மணிவாசகர் இதில் குறிப்பிடுவதால், சிவபுராணம் திருப்பெருந்துறையில் பாடியருளி இருக்க வேண்டும். திருவாசகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல்கள் திருப்பெருந்துறையிலும், .திருவண்ணாமலையிலும் பின்னர் மீண்டும் தில்லையிலும் பாடப்பட்டவை போல அமைக்கப்பட்டுள்ளன. மணிவாசகர் வாழ்ந்தது மிகக் குறுகிய காலமே. அக்குறுகிய காலத்தில் போக்குவரத்து வசதிகளற்ற சமுதாயச்சூழலில், பல தலங்களுக்கும் சென்ற பின் மீண்டும் தில்லைக்கு வந்திருக்க முடியாது. எனவே, மணிவாசகர் அடுத்தடுத்துச் சென்ற தலங்களாக இவை இருக்கமுடியாது. ஆனால், திருவாசகத்தில் குறிப்பிடப்படும் தலங்களுக்கெல்லாம் சென்று அவர் பாடியிருக்கலாம்.
                திருப்பெருந்துறை மற்றும் தில்லை ஆகிய தலங்களிலேயே அதிகப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் மணிவாசகரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கேற்ப பாடல்கள் அமைக்காமல் கிடைத்த பாடல்களைக் கொண்டு வரையறை படுத்தியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
                தில்லையில் பாடிய பாடல்களும், பிற தலங்களில் பாடிய பாடல்களும் இடம் மாற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே, அவை மணிவாசகர் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தெரிவிக்கவில்லை எனலாம்.
                                தலங்கள்                                 பாடல்கள்
1.             திருப்பெருந்துறை                  -             23

2.             தில்லை                           -             22

3.             திருவண்ணாமலை                 -             2

4.             திருஉத்திரகோசமங்கை             -             1

5.             திருக்கழுக்குன்றம்                 -             1

6.             திருத்தோணிபுரம்                  -             1

7.             திருவாரூர்                        -             1
இவ்வேழுத் திருத்தலங்களில் பாடியருளியவையே திருவாசகப் பதிகங்கள்.
                இறைவன் குருவடிவாகி குருந்தமர நிழலில் அமர்ந்து, மணிவாசகருக்கு அருள் பாலித்த இடம் திருப்பெருந்துறை. மன்னன் குதிரை வாங்க அளித்த பொருள் முழுவதையும் குருவின் காலடிகளுக்கே காணிக்கையாக மணிவாசகர் செலுத்தினார். இறைவன் பேரருளை நினைத்துப் போற்றித் துதித்தார். இறைவனும் மணிவாசகரை வாழ்த்திப் பின்னர் அடியாருடன் மறைந்தார். மணிவாசகரின் குருவின் பிரிவினைத் தாங்காது, தனக்கு அருள்புரிந்த இடமான, திருப்பெருந்துறையிலேயே பலநாள் தங்கி இறைவனைப் பாடி இன்புறுவாராயினர். இந்நிலையில் அவர் பாடிய பாடல்கள் எண்ணிக்கையில் அதிகமாகும். எனவேதான், திருப்பெருந்தறையில் மிக அதிகமான பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த நிலையில் அதிகமான பாடல்கள் பாடப்பட்டுள்ள இடம் தில்லையாகும். தில்லையம்பதியானது ஜந்து பூதங்கள் வானைக் குறிக்கும் திருத்தலமாகும். வான்வெளியிலேயே மற்ற நான்கு பூதங்களும் அடங்கும். எனவே, அனைத்து அடங்கும் வானைக் குறிக்கும் தில்லையயமபதியானது மற்ற தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐம்பூதங்களாவன நிலம், நீர், தீ காற்று, வான் முதலானவையாகும்.
                எனவேதான், இத்தகையச் சிறப்புப் பெற்ற தலத்தில் நெடுநாள் உறைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார் மணிவாசகர்.
                திருவாசகத்தின் அமைப்புமுறையைத் திருக்குறள் அமைப்பாடு ஒப்பிடலாம் என்கிறது செந்தமிழ்ச் செல்வி.
                ‘‘திருவாசகம் திருக்குறளின் பாயிரம் நான்கும் போன்று அகவல்களையும் பாயிரமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நான்கும் முறையே இன்பம், பொருள், அறம், இறைபணி (வீடு) என்பன குறிக்கும் திரக்குறிப்புடையனவாகும் (1968-519) இதன்படி, திருவாசகத்தின் முதல் நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை இவ்வாறு வரையறுக்கலாம்.
                                சிவபுராணம்          -      இன்பம்
                                கீர்த்தித்திருருகவல்   -      பொருள்
                                திருவண்டப்பகுதி     -      அறம்
                                போற்றித்திருஅகவல் -      இறைபணி
நூல் முழுமையையும் இன்பம், பொருள் அறம், இறைபணி என்ற அமைப்பின்படி பகுக்கமுடியும்.
                திருச்சதத்திலிருந்து நீத்தல் விண்ணப்பம் வரை           -      இன்பம்
                திருவெம்பாவையிலிருந்து திருத்தோணோக்கம் வரை     -      பொருள்
                திருப்பொன்னூசலிலிருந்து கண்டபத்து வரை             -      அறம்
                பிரார்த்தனைப்பத்திலிருந்து ஆனந்தமாலை வரை          -      இறைபணி.
                சிவபுராணமும், திருச்சதகம் முதலாக நீத்தல் விண்ணப்பம் வரை உள்ள பகுதிகளும் இன்பத் திளைப்பின் விளைவால் இன்ப அனுபவ  வெளியீடாக வெளிப்பட்டவை. இதன் மையப்பொருளாக இன்பமே விளங்குகிறது.
                கீர்த்தித்திருஅகவலும்,  திருவெம்பாவையிலிருந்து திருத்தோணோக்கம் வரையிலுள்ள பத்துப் பகுதிகளும் உயிர்களுக்கு அருள்புரிந்து உயிர்களைப் பெருமாள் அடிமையாகக் கொள்ளும் தன்மையை விளக்கி நிற்கின்றன. இறைவனுக்குப் புகழ் உயிர்களுக்கு அருள்புரிதலே. இப்புகழ் பொருள்சேர் புகழாகும். இவ்வாறு, இறைவனின் பொருளாகிய புகழினை வியந்து கூறுதலின் அவற்றின் பொருள் இறைவனின் புகழாயிற்று.
                திருவண்டப் பகுதியும், திருப்பொன்னூசலிருந்து கண்டபத்து வரையுள்ள பகுதிகள் இறைவனின் அறச் செயல்களைப் புகழ்ந்துரைக்கின்றன. சிவனே, முத்தொழிற் கிழவோன் என்றும், வீடுபேற்றிற்குரிய முதல்வன் என்றும் அருள் வெள்ளத்தால் அன்புப்பயிர் விளைவிப்பவன் என்றும் இறைவனின் அறச்செயல்கள் கூறப்பட்டுள்ளன. எனவே, இதன் பொருள் இறைவனின் அறமாயிற்று.
                போற்றித் திருவகலும், பிரார்த்தனைப் பத்திலிருந்து ஆனந்தமலை வரை உள்ள பகுதிகள் இறைவனை அடைவதற்கான வழிவகைகளைக் கூறுகின்றன.
                இவற்றுள் அறிவு பெற்ற உயிர்கள் கடவுள் உண்டென்று, உணர்ந்த அளவில் இடையறாது இறைவனை நினைத்து, இறைவனின் இணையடியில் நிழல்போல் பற்றி ஆழ்ந்திருக்கும் என்று இறைநிலையைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
                இவ்வாறு, திருவாசகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல்களின் பொருளடிப்படையில் இவற்றை இன்பம், பொருள், அறம், இறைபனி என்று வரையறைப் படுத்தலாம். இவ்வாறு பொருளடிப்படையில் நோக்கும்பொழுது திருவாசக அமைப்பு முறையானது அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த அனுபவத்தைக் குறிக்கும் முறையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?